• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வான பிரஸ்தம் -17

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168

வான பிரஸ்தம் -17


முதியோர் இல்லமான வானப்ரஸ்தத்தைப் பற்றித் தவறான தகவல்களைத் தனக்குத் தெரிந்த சில மீடியா ஆட்கள் மூலம் பரப்ப ஆரம்பித்தனர். அதனால் அங்கு வந்து தங்க விரும்பிய முதியோரின் எண்ணிக்கை கொஞ்சம் குறையத் தான் ஆரம்பித்தது.

ஆனால் கொஞ்சம் வசதி குறைந்த ‌எளியவர்கள் குறைந்த கட்டணத்துடன் அங்கு வந்து சேருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.



பணத்தைப் பற்றியோ தாத்தா பாட்டிகளுக்குக் கொஞ்சம் கூடக்

கவலையில்லை. கையில் கணிசமாகப் பணம் வைத்திருந்ததால் தான்,



" என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!"



என்று அந்தப் பேராசைக்காரப் பணக்கார முதலையுடன் மோதவே தயாரானார்கள். அதுவும் மதன் தாத்தா ஆர்மியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால் தற்காப்பு ஆயுதமும் லைஸென்ஸுடன் வைத்திருந்தார்.



அஞ்சாநெஞ்சத்துடன் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்துடன் தான் அவர் இருந்தார். முத்தரசு தாத்தாவும் எதற்கும் துணிஞ்ச கட்டை தான்.வேட்டியை மடித்துக் கொண்டு சிலம்பத்தைச் சுற்றத் தயாராக நின்றார்.



எவ்வளவு தூரம் சிரித்துப் பேசுவாரோ அதே அளவு துணிச்சலுடன் வந்த பகையை எதிர்த்து நிற்கும் மனிதர். ஓரளவு அவர்கள் எல்லோருமே தைரியமாகத் தான் இருந்தார்கள்.



இருந்தாலும் விஷாகாவிற்கு ஏனோ கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. பத்திரங்களின் ஒரிஜினல்களை எல்லாம் கொண்டு போய் வக்கீல் சிவலிங்கத்தின் பொறுப்பில் கொடுத்து விட்டு வந்தாள் விஷாகா.



பத்திரங்களின் ஃபோட்டோ காப்பியைத் தான் முதியோர் இல்லத்தில் வைத்திருந்தாள். வழக்கறிஞரிடம் ஒரிஜினல் பத்திரம் இருக்கும் விஷயம் ரகசியமாக வைக்கப் பட்டது. விஷாகாவிற்கும் தாத்தா பாட்டிகளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் அது.



அது மட்டுமல்லாமல் ஸெக்யூரிட்டியும் ஏற்பாடு செய்து விட்டாள். முதியோர் இல்லத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் ஆரம்பிக்கப் பட்டதால் எப்போதும் குடியும் ரகளையுமாகி அந்த இடத்தின் புனிதமும் சுற்றுப்புற அமைதியும் சீர்குலைய ஆரம்பித்தன.



அடுத்த தாக்குதல் அந்த முதியோர் இல்லத்தில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருத்தராக வேலையை விட்டு நிற்க ஆரம்பித்தார்கள். இதற்கும் நமது இரும்பு மனிதர்கள் அஞ்சவில்லை.



நிர்வாகிகளான தாத்தா பாட்டிகளும் கொஞ்சம் நல்ல உடல் நலத்துடன் இருந்த சில முதியோர்களும் சமையல் முதற்கொண்டு எல்லா வேலைகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு சமாளித்து விட்டார்கள். எல்லோரும் வயதானவர்கள் என்பதால் எளிமையான ஆனால் ருசியான உணவு. சீதம்மாவும், மதன் தாத்தாவும், முத்தரசு தாத்தாவும் சமையல் வேலையில் முழு மனதாக இறங்கி விட்டார்கள். சமையல் வேலைக்கு இனி ஆட்கள் தேவையேயில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.



முனியம்மாவும் ஏழுமலையும் மட்டும் பணத்திற்கு விலை போகவில்லை. என்ன ஆனாலும் சரி தாத்தா பாட்டிகளை விட்டுப் பிரிய மாட்டோம் என்று அவர்களுடன் ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.



முனியம்மா தனியொரு ஆளாக மொத்த இல்லத்தின் துப்புரவு வேலையைத் தானே சமாளித்து விட்டாள். ஏழுமலை மட்டும் அவ்வப்போது அக்காவிற்கு உதவி செய்தான். அதே போல் ஏழுமலை இரவு பகல் தூங்காமல் கேட்டின் அருகே ஒரு தூணாக நின்று கொண்டான். ஒரு காவல் தெய்வமாகவே அந்த முதியவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்தான்.



வழக்கறிஞர் சிவலிங்கம் அந்த சமயத்தில்

திடீரென்று கிளம்பித் தனது மகனைச்

சந்திக்க ஆஸ்திரேலியா செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. போவதற்கு முன்னால்,



" நான் என் மகனைப் பார்க்க வெளிநாடு

போய்க் கொண்டிருக்கிறேன்.திரும்பி வர

இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம். நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். நான் திரும்ப வந்தவுடன்

போலீஸ் கமிஷனர் என்னுடைய நண்பர்

ஒருத்தர் இருக்கிறார். அவரிடம் பேசித் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கச் சொல்கிறேன். பத்திரங்கள் என்னுடைய பாங்க் லாக்கரில் பத்திரமாக வைத்திருக்கிறேன்"



என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார் வழக்கறிஞர் சிவலிங்கம்.



சில நாட்கள் புதிய செக்யூரிட்டி ஆட்களுடன் அமைதியாகக் கழிந்தன. அந்த சமயத்தில்

முனியம்மா மற்றும் ஏழுமலையின் தாய் கிராமத்தில் இறந்து போனதாக செய்தி வந்ததால் அவர்கள் இரண்டு பேரும்

கிராமத்திற்குக் கிளம்பிப் போனார்கள்.



இன்னும் கொஞ்சம் புதிய தொல்லைகள் ஆரம்பித்தன. முதியோர் இல்லத்தைச் சுற்றி அடிக்கடி விஷப் பாம்புகள் கண்களில் தென்பட ஆரம்பித்தன. சில சமயம் அறைகளுக்கும் நுழைய ஆரம்பித்தன.

புதிதாகச் சேர்ந்த செக்யூரிட்டி ஆட்களும் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விட்டார்கள்.



என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போனார்கள் தாத்தா பாட்டிகள். பாம்புகளை அடுத்து வெறிநாய்கள் அந்த முதியோர் இல்லம் இருந்த தெருவில் திடீரென நிறையப் பெருகின. அதனால் தெருவில் நடமாடவே பயமாக இருக்கும் நிலை உருவாகியது. அங்கு முதியோர் இல்லத்தில் இருந்தவர்களாலும் அவ்வளவு ஈஸியாக வெளியே போய் வர முடியவில்லை.



தினசரி வாழ்க்கையில் தேவையான பால் காய்கறிகள், பழங்கள் போன்றவை சப்ளை செய்ய வரும் கடைக் காரர்களும் அங்கு வர மறுத்து விட அவர்களாலும் வெளியே எளிதாகச் செல்ல முடியவில்லை.



குடிக்கும் தண்ணீர் சப்ளை நின்று போகத் தண்ணீர் கூட விலைக்கு வாங்கும் நிலை வந்தது. அந்தக் குடி தண்ணீர் விலைக்கு வாங்கவாவது வெளியே போய்த் தானே ஆக வேண்டும். அது கூட முடியவில்லை.



அப்போது தான் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்கள். சீதம்மா, மதன், காவ்யா,

நல்லசிவம், முத்தரசு மற்றும் கமலாகர் தவிர மீதி இருந்த முதியவர்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்குத் தங்களுடைய சொந்த செலவில் அனுப்பி விட்டார்கள்.



" இங்கு நிலைமை சரியானவுடன் உங்களைத் திரும்பக் கூட்டிக் கொள்கிறோம். இந்தப் போராட்டத்தில் உங்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதைத்

தவிர்ப்பதற்காகத் தான் உங்களை அனுப்புகிறோம். உணவு, தண்ணீர், மின்சாரம் எல்லாமே இங்கு இப்போது பிரச்சனைகளாக இருப்பதால் உங்களுக்கு வசதிக் குறைவுகள் அதிகமாகலாம். அதனால் உங்கள் உடல்நலம் பாதிக்கப் பட்டு விடக் கூடாது. அதற்காகத் தான் உங்களை இங்கிருந்து அனுப்புகிறோம். எங்களைத் தவறாக எண்ண வேண்டாம்."



என்று சொல்லி அனுப்ப, அவர்களும் அங்கிருந்து நகரவே இஷ்டமில்லாமல் மனக் கஷ்டத்துடன் சென்றார்கள்.



"அந்தப் பேராசைக் காரன் வருவதற்கு முன்னால் எவ்வளவு இனிமையாக நாட்களைக் கழித்தோம்!"



என்று மனதில் அசை போட்டுக் கொண்டே விரைவில் தாத்தா பாட்டிகளின் போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்தி விட்டுச் சென்றார்கள் நல்ல உள்ளம் கொண்ட அந்த முதியவர்கள்.



விஷாகா அப்போது ஒரு முடிவெடுத்தாள்.



" நாம் இந்த பிரச்சனையை இன்னும் பெரிதாக வளராமல் தடுக்க வேண்டும்.

நான் இன்றே கிளம்பிப் போய்ச் சென்னை தலைமைக் காவல்துறை கமிஷனரின் ஆஃபிஸிற்கு நேரில் சென்று கம்ப்ளைண்ட் செய்து விட்டு உடனடியாக நமக்குப் பாதுகாப்பும் கேட்டு வருகிறேன். அதற்குப் பிறகு என்னுடைய ஜர்னலிஸ்ட் (journalist)

நண்பர் ஒருத்தரை இங்கு கூட்டி வருகிறேன். அவர் இங்கு வந்து நம்மைப் பேட்டி எடுத்துப் புகைப்படங்களுடன் செய்தித் தாள்களிலும் மற்றும் பிரபலமான பத்திரிகைகளிலும் அச்சிட முடியுமா என்று விசாரித்து விட்டு வருகிறேன். நல்ல காரியம் ஒன்று செய்யும் போது அதைத் தடுத்து இந்த இடத்தை அபகரிக்க நினைக்கும் அந்தப் பணக்காரனுக்குச் சட்டப்படி நாம் தண்டனைகள் வாங்கித் தரவேண்டும்"

என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் அன்று காலையில். உடனே மதன் தாத்தா அவளுடன் வரக் கிளம்பினாள்.



" நீ தனியாகப் போக வேண்டாம். நானும் உன் கூட வருகிறேன்."



" இல்லை மதன் அங்கிள். நீங்கள் இங்கே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த இடத்திற்கும் மற்றவர்களுக்கும் இப்போது பாதுகாப்பு நீங்களும் முத்தரசு அங்கிளும் தான். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் ஜாக்கிரதையாகப் போய் விட்டு வருவேன். என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்."



" இல்லைம்மா .உன்னை என்ன தான் இருந்தாலும் தனியாக அனுப்ப எங்களுக்கு இஷ்டமில்லை. நீ கமலாகரை மட்டுமாவது கூட அழைத்துப் போ."



என்று சொல்ல, விஷாகாவும் அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டாள். காலை உணவை எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். வரகரிசியில் செய்யப்பட்ட பொங்கலும் அதனுடன் தக்காளியும் சின்ன வெங்காயமும் சேர்த்த கொத்ஸுவும் நிறைவாகச் சாப்பிட்டார்கள்.



வழக்கம் போல சிரித்துப் பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு.அது தான் அவர்கள் சிரித்துப் பேசி ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திய கடைசித் தருணம் என்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.



கமலாகரும் விஷாகாவும் ஒரு கால் டாக்ஸியை வரவழைத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.



மாலை நேரமாகி விட்டது. சென்றவர்களிடம் இருந்து ஒரு செய்தியும் இல்லை. திரும்பி வரவுமில்லை. ஸெல்ஃபோனிற்கு முயற்சி செய்தால்,



"தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது. சிறிது நேரம் கழித்துத் திரும்ப முயற்சிக்கவும்"



என்று ரெகார்ட் ஆன செய்தியே மீண்டும் மீண்டும் கேட்டது. கவலையில் ஆழ்ந்தனர்.



அப்போது தான் ஒரு புதிய நம்பரில் இருந்து ஒரு ஃபோன் கால் வந்தது. அதிர்ச்சியான தகவலைச் சுமந்து கொண்டு.
 

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom