• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வான பிரஸ்தம் -13

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
வான பிரஸ்தம் -13
ஆட்டமும் பாட்டமுமாகக் கொஞ்ச நேரம் கழிந்த பிறகு மதன் தாத்தா ஆரம்பித்தார்.



" இங்கு என்ன நடக்கிறதோ என்னவோ என்ற டென்ஷனில் குழந்தைகளின் பெற்றோர்கள் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள்."



" பாவம் அவர்கள்! குழந்தைகளைப் பற்றிய கவலைகளில் ஏதோ விஷயம் தெரிந்தவர்களென்று நம்பி நமது ஜில் ரமாமணியையும் ஜித்தனையும் நம்மை விரட்ட அனுப்பி இருக்கிறார்கள். அவர்களை அதிகம் காக்க வைக்காமல் நாம் ஏதாவது செய்து அவர்களைத் திருப்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் புதிதாக வேறு யாரையாவது கூட்டி வந்து விட்டால் நமக்குத் தான் கஷ்டம்."



" இப்போதைக்குப் பெற்றோர்களுக்கு நம்முடைய இரகசியங்கள் தெரிய வேண்டாம். ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் சேர்ந்து பேய்களைக் கண்டு பிடித்து ஒருவழியாக அந்தப் பேய்களை வெற்றிகரமாக விரட்டி விட்டதாகவே காட்டிக் கொள்ளட்டும். குழந்தைகளும் நம்மைப் பற்றிய விஷயங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமும் நம்முடைய கதையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் நாம் வந்த வேலை முடிந்ததும் நாம் இங்கிருந்து சென்று விடலாம்."



" ஐயோ, அப்படின்னா நீங்கள் எல்லோரும் எங்களை விட்டுப் போகப் போறீங்களா? நாங்கள் உங்களைப் போக விட மாட்டோம்."



குழந்தைகள் அழ ஆரம்பித்தார்கள்.



" இல்லை குழந்தைகளா! எங்களால் அதிக நாட்கள் இங்கே இருக்க முடியாது. கவலைப் பட வேண்டாம். நாங்கள் எப்படியாவது உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்வோம். நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பெரிய உதவி செய்ய வேண்டும். உங்களுடைய அப்பா அம்மா வந்ததும் இங்கு நடந்த எதையும் வெளியே சொல்லக் கூடாது. நாங்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் உங்களுடன் தான் இருக்கப் போகிறோம். நாங்கள் உங்களுடன் வந்து தங்க ஆரம்பிப்பதற்கு முன்பு நீங்கள் இருந்த மாதிரியே இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுடைய பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள். பாவம் இல்லையா அவர்கள்? அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. சரியா? எங்களைப் பற்றிய விஷயங்களை இன்று இரவே உங்களிடம் சொல்கிறோம். அது வரை பொறுமையாக இருக்க வேண்டும்"



என்று சொல்லி முடிக்கக் குழந்தைகளும் தலையை ஆட்டி விட்டுத் தங்களுக்குள் சிரித்துப் பேசிக் கொண்டே விளையாட ஆரம்பித்தார்கள்.



மதன் தாத்தாவும் மற்ற தாத்தா பாட்டிகளும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு முனியம்மா, ஏழுமலையிடம் அவர்கள் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியல் போட்டுக் கொடுத்தார்கள்.



" இங்கே பாரு முனியம்மா. கொஞ்சம் ஜாக்கிரதையாக இதையெல்லாம் செஞ்சு முடிக்கணும். எங்களாலே இந்த இடத்தை விட்டு இப்போதைக்கு அதிக தூரம் நகர முடியாது. எங்களுடைய சக்திகள் எல்லாம் இந்த இடத்தில் மட்டும் தான்.ஃநீ மொதல்ல

விஷாகா எங்கே இருக்கான்னு கண்டு பிடிக்கணும். எங்களையெல்லாரையும் நயவஞ்சகமாக் கொன்னது யாரு? முதியோர் இல்லத்தையே நிர்மூலமாக்கியது யாருன்னு கண்டு பிடிக்கணும். கண்டுபிடிச்சாத் தான் மேலே என்ன செய்யணும்னு திட்டம் போட முடியும்."



"விஷாகாம்மாவை நான் எங்கே போய்த் தேடுவேன்? எனக்கு ஒங்களையெல்லாம் மாதிரி படிப்பறிவு கெடையாதே! எப்படித் தேடறதுன்னு தெரியலையே! பணமும் இல்லையே எங்க கிட்டே? வேற யாராவது படிச்சவங்க கிட்டே இந்த வேலையைக் கொடுத்து செய்யச் சொன்னா நல்லா இருக்குமே!"



முனியம்மா சொன்னதும் சரியாகப் பட்டது தாத்தா, பாட்டிகளுக்கு.முனியம்மா ,ஏழுமலை இரண்டு பேரும் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள்.ஃபணவசதியும் கொஞ்சம் கூடக் கிடையாது.அவர்கள் இந்த வேலையை ஏற்று நடத்துவது குருவி தலையில் பனங்காயை வைக்கற மாதிரித்

தான்.



சீதாப் பாட்டி உடனே மதனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.



" நாம் ஏன் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி அவர்களை உதவி செய்யச்

சொல்லிக் கேட்கக் கூடாது? அவர்கள்

எல்லோருமே படித்தவர்கள். நல்லவர்கள்.

ஓரளவு வசதியும் உடையவர்கள்."



மற்ற எல்லோருக்கும் சீதாப் பாட்டி சொன்னது நல்ல யோசனையாகத் தான் பட்டது.



கமலாகர் தாத்தா கொஞ்ச நேரம் யோசித்த பின்னர் சொன்னார்.



" இப்போதைக்கு வேண்டாம்.ஃகொஞ்ச நாட்கள் இவர்களை வைத்து முயற்சி ‌செய்து விட்டுத் தேவையென்றால் சொல்லி உதவி கேட்கலாம். முடிந்த வரை இந்த விஷயத்தில் அதிக ஆட்களைச் சேர்க்காமல் முடிப்பதே நல்லது."



என்று சொல்லி விட்டு முனியம்மாவைப் பார்த்துச் சொன்னார்.



" பணத்திற்குக் கவலைப் பட வேண்டாம். நாங்கள் உயிரோடு இருந்த போது முதியோர் இல்லத்தில் எங்களுடன் உண்மையான நட்புடன் பழகிய சிலருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டோம். அதற்காக உங்கள் பேரில் பாங்கில் அக்கவுண்ட் ஆரம்பித்துக் கொஞ்சம் பணமும் போட்டு வைத்திருக்கிறோம். உங்களிடம் பேச்சு வாக்கில் கையெழுத்தும் தேவையான ஆவணங்களும் வாங்கி நாங்களாகவே ஆரம்பித்து வைத்திருந்தோம்."



"அய்யே! அதுக்குத் தான் ஆதார் காப்பி ஃபோட்டோல்லாம் வாங்கினீங்களா! ஒரு நாளைக்கு ஏதோ சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு பாங்குக்குக் கூட்டிப் போனதும் அதுக்குத் தானா."



" ஏய்யா, முன்னாலேயே எங்க கிட்டே சொல்லி இருந்தா இப்படி ஏமாத்து வேலையெல்லாம் செஞ்சிருக்க மாட்டமே? போங்கய்யா போங்க!"



" இல்லை முனியம்மா. இதை உங்க கிட்ட சொல்லறதுக்கு முன்னாலே தான் நாங்க உயிரை விட்டுட்டமே? அதுக்கப்புறம் இப்பத் தானே ஒங்களைப் பாக்கறோம்!"



" ஆமாம், சரி. இப்ப சொல்லுங்க. என்ன செய்யணும் நாங்க."



"நீங்க மொதல்ல நாளைக்கே பாங்குக்குப் போயி உங்களுக்கு வேணுங்கற பணத்தை எடுத்துக்கிட்டு அப்படியே அந்த பாங்கிலேயே விஷாகா பத்தி விசாரியுங்க. விஷாகாவுக்கும் அங்கேயே அக்கவுண்ட் இருந்தது. விஷாகாவைக் கண்டுபிடிச்சா அவளோட உதவியால் மத்த உண்மைகளைக் கண்டு பிடிக்கலாம். எங்களைக் கொன்னவங்க யாரு? எதுக்காகக் கொன்னாங்க? எல்லா விஷயமும் கண்டு பிடிக்கணும் எங்களுக்கு.

குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனை வாங்கித் தரணும்."



" சரி. நாளைக்கே போய் வேலையை ஆரம்பிக்கிறோம்."



" ஒழுங்கா செஞ்சு முடிக்கணும். வழக்கமான விளையாட்டுத் தனத்தையும் வேடிக்கைத் தனத்தையும் கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டி வச்சுட்டு வேலையைச் செய்யணும். சரியா?"



சரியென்று அவர்கள் தலையாட்டக் குழந்தைகளிடமும் விடைபெற்றுக் கொண்டு ஜில் ரமாமணியும் ஜித்தனும் அங்கிருந்து கிளம்பினார்கள்.



குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் வெளியே காத்துக் கொண்டிருந்தார்கள்.



" கவலைப் பட வேண்டாம். உங்கள் குழந்தைகளைச் சுற்றியிருந்த தீய சக்திகளை நாங்கள் விரட்டி விட்டோம். அவர்கள் இனி மேல் பழையபடி இயல்பாகவே இருப்பார்கள். இருந்தாலும் கொஞ்ச நாட்களுக்குத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதனால் நாங்கள் அடுத்த வாரமும் இதே போல் வந்து குழந்தைகளை இதே நேரத்தில் தனிமையில் சந்திப்போம்."



என்று வெற்றிப் பெருமிதத்துடன் பேசக் குழந்தைகள் தலையைக் குனிந்து கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.



பெற்றோர்கள் மனம் மகிழ்ந்து போய் அவர்களுக்குக் கொஞ்சம் பணமும் தக்ஷிணையாகக் கொடுக்க மகிழ்ச்சியுடன் ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் தங்களுடைய அன்றைய நாடகத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து நிம்மதியாகக் கிளம்பினார்கள்.



அடுத்த நாள் ஜில்ஜில் ரமாமணியும்

ஜித்தனும் பாங்கிற்கு சென்று கொஞ்சம் பணத்தைத் தங்கள் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். முதல் தடவையாக அவர்கள் அக்கவுண்ட்டை ஆப்பரேட் செய்ததால் தங்களுடைய அடையாள ஆவணங்களை பேங்கில் காட்ட வேண்டியிருந்தது. ஆனாலும் அக்கவுண்டில் அவர்களுடைய ஃபோட்டோவும் இருந்ததால்

பிரச்சனை எதுவும் இல்லாமல் முடிந்தது.



அவர்கள் பேங்கில் முதியோர் இல்லம் நடத்திவந்த விஷாகாவைப் பற்றி விசாரிக்க

ஒரு விஷயமும் தெரிய வரவில்லை. அந்த பேங்கில் இருந்த அலுவலர்கள் பெரும்பான்மையோர் புதியவர்களாக இருந்ததால் முதியோர் இல்லம் பற்றிய எந்தத் தகவலும் அவர்களுக்குத் தெரியவில்லை.



அங்கிருந்து கிளம்பிய முனியம்மாவும் ஏழுமலையும் முதியோர் இல்லம் இருந்த அட்ரசுக்குச் சென்றார்கள்.



அங்கே அந்த அட்ரஸில் அவர்கள் கண்முன்னே விரிந்த காட்சி அவர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.



முதியோர் இல்லம் இருந்த கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டுப் புதியதாக அங்கு ஏதோ கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது.



இரண்டுபேரும் திகைத்துப்போய் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்ற போது அந்த இடத்தில் புத்தம் புதிய கார் ஒன்று வந்து நின்றது. அந்தக் காரில் இருந்து இறங்கிய பெண்ணையும் அவளுடைய நவநாகரீகத் தோற்றத்தையும் பார்த்து ஆவென்று வாயைப் பிளந்து நின்றார்கள் முனியம்மாவும் ஏழுமலையும்.
 

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom