• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வான பிரஸ்தம் -10

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
143
வான பிரஸ்தம் -10
பள்ளிக்கரணையில் வசித்த அந்தப் பெண் மந்திரவாதி பேய்களை விரட்டுவதில் நல்ல பேரும் புகழும் பெற்றவள் என்று கேள்விப் பட்டதால் தான் அவளிடம் செல்ல முடிவு செய்தார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள்.



ஆகாஷும் அஷ்வினும் அந்த ப்யூனை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் மந்திரவாதியின் இருப்பிடத்திற்குச் சென்றார்கள்.



குடிசையும் இல்லாமல் வீடும் இல்லாமல் ஒரு மாதிரி அமைப்பு. உள்ளே முனிவர்கள் மாதிரியான கோலத்தில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தாள் ஜில்ஜில் ரமாமணி தேவி. ஆமாம் அது தான் அந்தப் பெண் மந்திரவாதியின் பெயர்.( தில்லானா மோகனாம்பாள் திரைப்படமும் நடிகை மனோரமாவின் முகமும் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.) யோக நிஷ்டையில் ஒரு சின்ன தண்டத்தின் மேல் கைகளை அழுத்தமாக ஊன்றி வைத்துக் கொண்டு கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தாள் ரமாமணி. எதிரே ஒரு தேவியின் சிலை. சிவப்பு நிறப் பூக்களால் கட்டப் பட்ட மாலை அணிவிக்கப் பட்டிருந்தது.



சிலைக்கு எதிரே சிறிய கோலங்கள் இடப்பட்டுக் கோலங்களின் நடுவில் பித்தளைத் தாம்பாளங்களில் மஞ்சள் பொடியும் குங்குமமும் பரத்தப் பட்டு நடுவில் பூக்கள் வைக்கப் பட்டிருந்தன. நடுவில் ஒரு பெரிய செந்தாமரை மலர். அதன் அருகே எலுமிச்சம் பழங்கள் குங்குமம் தூவப்பட்டு இன்னொரு பித்தளைக் கிண்ணத்தில் வைக்கப் பட்டிருந்தது.



ஊதுபத்தி மணமும் சாம்பிராணி மணமும் கலந்து அந்த இடத்தில் ஒரு தெய்வீகமணம் காற்றில் கலந்திருந்தது.



தேவியின் சிலைக்கருகில் கைகளைக் கட்டிக் கொண்டு அந்தப் பெண் மந்திரவாதியின் சிஷ்யன். வாயைத் திறக்காமல் அவர்களை உட்காரச் சொல்லி சைகைகள் காட்டினான்.



அந்தப் பெண் மஞ்சள் புடவையும் சிவப்பு ரவிக்கையும் அணிந்திருந்தாள். கழுத்தில் பல வண்ணக் கற்களால் கோர்க்கப் பட்ட ஒரு மாலை. நெற்றியில் ஒரு பெரிய வட்டவடிவத்தில் குங்குமப் பொட்டு. அவளுடைய தோற்றத்தைப் பார்த்து ஒன்று பேய்கள் பயந்து ஓடலாம். இல்லை வாய் விட்டு சிரிக்கலாம்.



அவளுடைய சிஷ்யன் குண்டாகக் குட்டையாகக் கத்திரிக்காய்க்குக் கைகால் முளைத்தது போன்ற தோற்றத்துடன் இருந்தான். இடுப்பில் சிவப்பு நிற வேட்டி. அதைச் சுற்றி மஞ்சள் நிறத் துண்டு இறுக்கக் கட்டப் பட்டிருந்தது. தலைமுடி தான் கொஞ்சம் வேடிக்கையாக நூடுல்ஸ் நூடுல்ஸாகத் தொங்கிக் கொண்டிருந்தது.



இந்த வினோதமான ஜோடியைக் கண்டால்

வேடிக்கையாகத் தானே இருக்கும்! அந்த சிஷ்யன் வாயைத் திறக்காமல் கைகளால் சைகைகள் காட்டி அவர்களை உட்காரச் சொன்னான்.



மூன்று பேரும் அங்கே போடப் பட்டிருந்த

பாயில் அமர்ந்தார்கள். சடாரென்று சுவிட்சைப் போட்டது போலப் பட்டென்று கண்களைத் திறந்தாள் ரமாமணி.



கைகளில் அந்தச் சிவப்பு நிறப் பூக்களை வாரி தேவியின் மீது தூவி விட்டு வந்திருந்த மூவரை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள்.



"யார் இவர்கள்? என்ன பிரச்சினை என்று தெரியுமா ஜித்தா?"



பக்கோடா காதரையும் யோகி பாபுவையும் கலந்து கட்டி ஆவரேஜ் எடுத்த மாதிரி இருந்த அந்த சிஷ்யனின் பெயர் ஜித்தன்.

குடுகுடுவென்று ஓடி வந்து இல்லை இல்லை உருண்டு வந்து மந்திரவாதிப் பெண்ணின் முன்னால் நின்று பவ்யமாக பதில் சொன்னான்.



"ஏதோ பெரிய பிரச்சினை என்று உங்களுடைய உதவி கேட்டு வந்திருக்கிறார்கள் தாயே!"



மேலே அவனைப் பேச விடாமல் கையை நீட்டி நிறுத்தினாள் தேவி.



" எனக்குத் தெரியும். நானே சொல்கிறேன். இவர்களுடைய குழந்தைச் செல்வங்களைப் பற்றி ஏதோ கவலை இவர்களுக்கு.ஏதோ சக்தி குழந்தைகளைப் பிடித்து ஆட்டி வைக்கிறதோ என்ற பயம்."



அந்த நிமிஷம் உடனே அவள் பேரில் அசைக்க முடியாத நம்பிக்கை வந்து சபக்கென்று ஃபெவிக்காலாக மனதில் ஒட்டிக் கொண்டு விட்டது ஆகாஷுக்கும் அஷ்வினுக்கும். பிரமிப்புடன் ரமாமணி தேவியைப் பார்த்தார்கள். இவளிடம் வந்தது மிகவும் சரி தான் என்று நினைத்துக் கொண்டு அவளை பயபக்தியுடன் பார்த்தார்கள்.



சோடா பாட்டிலைத் தட்டித் திறந்ததும் புஸுபுஸுவென்று நுரை பொங்கி வருவது போல பக்தி குபுகுபுவென்று அவர்கள் மனதில் உடனடியாகப் பொங்கி வழிந்தது. மலையுச்சியில் இருந்து துள்ளிக் குதித்து அருவி போல அவள் காலடிகளில் தங்களுடைய பிரச்சினைகளைக் கொட்டி சரணாகதி அடையத் தயாராகி விட்டார்கள்.



இந்த விஷயங்கள் எல்லாம் இவர்களைக் கூட்டி வந்த ப்யூன் மூலமாக ஏற்கனவே கறந்து விட்டார்கள் ரமாமணியும் ஜித்தனும் என்று இந்தப் படித்த முட்டாள்களுக்குத் தெரியவில்லை. இல்லையென்றால் குழந்தைப் பாசம் அவர்களுடைய அறிவைத் திரை போட்டு மறைத்தது. அந்த ப்யூனுக்கும் இந்த மாதிரி ஆட்களைக் கூட்டி வருவதற்குக் கமிஷன் உண்டு. உலக மகா ஃப்ராடு இந்த ஜில் ஜில் ரமாமணியும் அவளுடைய சிஷ்யனாக வலம் வரும் ஜித்தனும். ஊரை உலகை ஏமாற்றிப் பேய் விரட்டுவதாக பிஸினஸ் செய்யும் எத்தர்கள். அதுவும் இந்த மாதிரி தங்கள் மனைவிக்கோ இல்லை குழந்தைக்கோ பரிகாரம் என்று வரும் கொஞ்சம் வசதியான பார்ட்டிகள் உணர்ச்சி வசப்பட்டுப் பணத்தை அள்ளி இறைக்கத் தயாராகும் போது இவர்களுடைய பிஸினஸும் சீரும் சிறப்புமாக வெற்றி நடை போடுகிறது.



அந்த மாதிரி பலிகிடாக்களாக மாட்டிக் கொண்ட ஆகாஷும் அஷ்வினும் தங்களுடைய குழந்தைகளைப் பற்றிய பிரச்சினைகளைப் புலம்பித் தீர்க்க

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட ரமாமணி கண்களை மூடி சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்து விட்டுப் பட்டென்று கண்களைத் திறந்தாள்.



"நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டால் இந்தக் குழந்தைகள் மோசமான ஆத்மாக்களின் கட்டுப்பாட்டில் மாட்டித் தவிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நிலைமை இன்னும் மோசமாவதற்குள் பேய்களை அடித்துத் துரத்தி ஓட்ட வேண்டும். வரும் ஞாயிற்றுக் கிழமை தேய்பிறை அஷ்டமி. பைரவருக்கு உகந்த நாள். நான் சில பூர்வாங்க பூஜைகள் செய்து விட்டு பைரவரை வேண்டிக் கொண்டு ஞாயிறு நண்பகல் பனிரெண்டு மணிக்கு சரியாக முதல் வீட்டிற்கு வருகிறேன். ஒவ்வொரு அறையாக ஆறு குழந்தைகளின் அறைகளையும் பார்த்து விட்டு ஏதாவது ஒரே இடத்தில் ஆறு குழந்தைகளையும் சேர்த்தே உட்கார வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பேய்களை விரட்டி விடுவேன்."



வீராவேசத்துடன் ஜில்ஜில் ரமாமணி‌ பேசி முடிக்க, அஷ்வினும் ஆகாஷும் அவளுக்குக் காணிக்கையாகக் கலர் கலராகப் பல நோட்டுக்களை அர்ப்பணித்து விட்டு மனம் நிறைய நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.



அங்கே ரமாமணியும் ஜித்தனும் பிரியாணிப் பொட்டலங்களும் சரக்கும் வாங்கி வந்து தங்களுடைய பிஸினஸின் புதிய லாபத்தைக் கொண்டாடினார்கள்.



ஞாயிற்றுக் கிழமை நண்பகல் சரியாக 12 மணி. முதலில் அத்வைத் வீட்டுக்குள் நுழைந்தார்கள் ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும்.



ரமாமணி தன் தோளில் மாட்டியிருந்த துணிப் பையில் இருந்து எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து இரண்டாக வகிர்ந்து அதில் குங்குமத்தை அப்பிக் கையில் எடுத்துக் கொண்டு அத்வைதின் ரூமுக்குள் நுழைந்தாள். வாயில் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டே தான் உள்ளே நுழைந்தாள்.



அத்வைதையும் அஷ்வின்,தன்யாவையும் வெளியிலேயே நிறுத்தி விட்டுத் தன்னுடைய சிஷ்யனை மட்டும் தன்னுடன் கூட்டிக் கொண்டு அவள் உள்ளே நுழைந்ததும் கதவுகள் தானாகப் படாரென்று மூடிக் கொண்டன.



மூடிய அறைக்குள்ளிருந்து சிறிது நேரத்தில் கூச்சல் சத்தம், அழுகைச் சத்தம், சிரிப்புச் சத்தம், யாரோ தடதடவென்று ஓடும் சத்தம், அலறல்கள் மற்றும் சாமான்கள் இழுக்கப் படும் சத்தம் என்று விதவிதமான சத்தங்கள் வரத் தொடங்கின.



திகைப்புடன் கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றார்கள் அத்வைதும் அவனுடைய பெற்றோர்களும்.
 

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom