• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வான பிரஸ்தம் -1

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
140
வான பிரஸ்தம் -1
சென்னையின் புறநகர்ப் பகுதி. புத்தம் புதிய அடுக்கு மாடிக் குடியிருப்பு‌. பிரபலமான கன்ஸ்டிரெக்ஷன் கம்பெனியால் மிகவும் பிரம்மாண்டமான அளவில் விளம்பரப் படுத்தப் பட்ட ப்ராஜெக்ட். நிறைய இளம் தம்பதிகள் அந்தக் கம்பெனிக் காரர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டு பாங்க் லோன் ஏகமாக வாங்கிக் குடியேறிய கனவு வீடுகள்.



கீழே குழந்தைகளுக்கான பார்க், ஸ்விம்மிங் பூல், க்ளப் ஹவுஸ் மற்றும் அழகான புல்வெளிகள் நடப்பதற்கு என்று இளம் தம்பதிகளைக் கவரும் அத்தனை விஷயங்களையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டு பெருமிதத்துடன் சிரிக்கின்ற குடியிருப்புகள்.

சென்னையின் பிரபல பள்ளியும் அருகிலேயே புதிய கிளை தொடங்கி விட சினிமா நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் சிபாரிசு செய்ய வங்கிகளும் மகிழ்ச்சியுடன் ஹோம் லோன் மேளா நடத்த எல்லா வீடுகளும் மளமளவென்று விற்றுத் தீர்ந்தன.

சென்னையில் ஓ.எம்.ஆர் சாலையில் புற்றீசல் போலப் பெருகி நிற்கும் அடுக்கு மாடிக் குயிருப்புகளில் இதுவும் ஒன்று.

கீழே இருந்த சிறுவர்களுக்கான விளையாட்டு ஏரியாவில் சிறுவன் அத்வைத்

ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தான். அருகில் வேறு யாரும் குழந்தைகள் அந்தப் பகுதியில் தென்படவில்லை.

அத்வைதின் தந்தை அவினாஷ், தனது மகனைத் தேடிக் கொண்டு பூங்காவிற்கு வந்தான்.

" அத்வைத் விளையாடியது போதும். வா வீட்டிற்குப் போய்ப் படிக்கலாம்."

" அப்பா ப்ளீஸ்பா. இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வந்துடறேன்பா."

" சரி சரி. சீக்கிரமாக வந்துடு. அம்மாவந்தாச்சா ஆஃபிஸிலிருந்து?"

" வந்தாச்சுப்பா. நீங்க மேலே போய் அம்மா கூட ரொமான்ஸ் பண்ணுங்க. நான் இதோ வந்திடறேன்."

" அடி போடுறா வாயில. சின்னப் பையன் பேசற பேச்சா இது?"


சிரித்துக் கொண்டே தனது சுட்டிப் பையனின் டயலாக்கை மனதில் அசை போட்டுக் கொண்டே நடந்த அவினாஷ் தனது மகனிடம் கேட்க நினைத்ததைக் கேட்க மறந்து சென்று விட்டான்.


அவன் வரும் போது அருகில் இருக்கும் யாருடனோ பேசுவது போல அத்வைத் அடிக்கடி திரும்பிப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான். குழந்தைகள் விளையாடும் போது அப்படித் தனக்குத் தானே பேசிக் கொள்வது இயல்பான விஷயம் என்றாலும் அப்படி என்ன தான் பேசிக் கொண்டிருந்தான் என்று கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வந்தான். ஆனால் மகனின் வயதுக்கு மீறிய பேச்சை ரசித்துக் கொண்டே கேட்க வந்ததைக் கேட்காமலே சென்று விட்டான்.

இன்னும் சரியாக அவன் நின்று பார்த்திருந்தால் அவனுடைய ஊஞ்சல் கூட அருகில் யாரோ நின்று ஆட்டுவது போல ஆடிக் கொண்டிருந்ததை கவனித்திருக்கலாம். ஆஃபிஸில் இருந்து வந்த களைப்பில் அவன் அதையும் சரியாக கவனிக்கவில்லை.

இந்தக் காலப் பசங்களுக்கு டி.வி., ஸ்மார்ட் ஃபோன், இண்டர்நெட் என்று எல்லா எக்ஸ்போஷர்களும் இருப்பதால் குழந்தைகளுக்கான அப்பாவித் தனமே இல்லாமல் பிஞ்சிலே பழுத்து முத்தின கத்தரிக்காய்களாகத் தான் இருக்கிறார்கள். இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடப் போகிறதோ தெரியவில்லை. நல்லதா கெட்டதா என்றும் தெரியவில்லை.

பதினோராம் மாடியில் இருந்த தன்னுடைய ஃப்ளாட்டிற்குச் சென்று சத்தம் போடாமல் தன்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியால் கதவைத் திறந்தான். கையில் இருந்த ஆஃபிஸ் பேகை ஸோஃபா மேல் வைத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்து ஆசை மனைவியைப் பின்னாலிருந்து கட்டியணைத்து ஸர்ப்ரைஸ் தரும் எண்ணத்துடன் நெருங்கினான்.

" வெளியே இருந்து வீட்டிற்குள் வரும் போது கைகால்களை நன்றாகக் கழுவி விட்டுத் தான் சமையலறைக்குள் வரணும். ஆஃபிஸ் பேக்கை ஸோஃபா மேல் போடாமல் நம்முடைய ரூமில் இருக்கும் டேபிளில் வைக்க வேண்டும்."

முகத்தைத் திருப்பாமலே தன்யா பேசத் தலையில் அடித்துக் கொண்டான் அவினாஷ்.

"அடி என் செல்ல ராக்ஷஸியே! கிராதகியே!

எப்படிடி கண்டுபிடிச்சே? நான் வந்ததைத்

திரும்பிப் பாக்காமலேயே எப்படி தெரிஞ்சுகிட்டயோ! பேக்கை ஸோஃபாவில் வைச்சது உனக்கு எப்படித் தெரிஞ்சது? நெற்றிக் கண் மாதிரி முதுகில் கண் ஏதாவது இருக்கோ? ஏதாவது டேமேஜ் பீஸை என் தலையில் கட்டிட்டாங்களா? ஆண்டவா என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா? ஒரு குட்டிச் சாத்தானும் அரைக் கிழவியும் என்னை ஆட்டி வைக்குதுங்களே!"

" அடப் பாவி, கல்யாண புதுசில கண்ணே மணியே, மானே, தேனே ன்னு எத்தனை டயலாக்? இப்ப ஒரு குழந்தை பிறந்ததும் நான் உனக்கு அரைக் கிழவியா? நீ இனிமே பக்கத்தில வா. அப்ப பேசிக்கறேன். நம்ம கண்ணாண கண்ணு உனக்குக் குட்டிச் சாத்தானா? வரட்டும் அந்தக் குட்டிச் சாத்தானை விட்டே உன்னை இன்னைக்கு செமத்தியா மொத்த வைக்கறேன் வா."

நீ வந்ததை எப்படிக் கண்டுபிடிச்சேன்னு கேட்டியே? அது பெரிய வித்தை இல்லையே? ஊரில உலகத்தில எவனுமே சீந்தாத ஒரு நாத்த பெர்ஃப்யூம் யாரோ உன்னோட உறவுக்காரங்க வெளிநாட்டில இருந்து கிஃப்டாக் கொடுத்ததுன்னு தினம் போடறயே அதோட நாத்தம் தான் நீ நுழைஞ்ச உடனே வீட்டுக்குள்ளே வந்துடுச்சே! ஆஃபிஸ் பேக்கை ஸோஃபா மேல வைக்கற வழக்கம் உனக்கு இன்னைக்கா நேத்தைக்கா? கல்யாணம் ஆன நாளில இருந்து நானும் பாத்துட்டுத் தானே இருக்கேன்? "

" ஆஹா, என்ன அறிவு! என்ன அறிவு!

கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கற போதே அடக்க ஒடுக்கமான வாய் பேசாத ஒரு கிராமத்துப் பொண்ணாப் பாக்கச் சொல்லி இருக்கணும். தப்புப் பண்ணிட்டயே அவினாசா நீ பெரிய தப்புப் பண்ணிட்டயே!"

" தப்பு தான் போ. இந்த ஜன்மம் பூரா இந்தத் தப்பு கூடத் தான் ஒனக்கு வாழ்க்கை. கிராமத்துப் பொண்ணெல்லாம் நீ நெனக்கற மாதிரி இல்லை இப்பல்லாம். நானாவது வாயால திட்டறேன். அவங்கள்ளாம் கையும் கையும் வாயும் வாயும் தான். இவ்வளவு நேரம் வன்முறையில் அடிதடியில் இறங்கியிருப்பா. சரி .மசமசன்னு நிக்காமப் போய்க் குளிச்சுட்டு வந்து இந்த உருளைக் கிழங்கை உரிச்சுக் குடு. அப்படியே வெங்காயமும் கட் பண்ணனும். சீக்கிரம் வா."

"இன்னைக்கு என்ன பூரி மசாலா டிஃபன். ஞாயித்துக் கிழமை தானே செய்வ சாதாரணமா."

" அதெல்லாம் நம்ப அத்வைத் ஆர்டர். நீ ஒண்ணு கவனிச்சயா? இப்பல்லாம் அவனுக்குப் பசி கூடிடுச்சி. விதவிதமா சாப்பாடு கேக்கறான். நம்ப பாரம்பரிய ஐட்டம்லாம் கூடக் கேக்கறான். ஆச்சர்யமா இருக்கு."

ஏதோ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றான் அவினாஷ்.

அவினாஷ், தன்யா தம்பதிகளுக்கு அத்வைத் என்ற குட்டிச்சாத்தான் ஒரே வாரிசு. அவினாஷ் ஐ.டி.செக்டரிலும் தன்யா வங்கியிலும் வேலை பார்க்கிறார்கள். அத்வைதிற்கு ஆறு வயசு. பயங்கரச் சுட்டி. ஐ பேட், டேப்லட், வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட் ஃபோன், கம்ப்யூட்டர் எல்லாம் கையாளத் தெரிந்த படு சுட்டியான குட்டிப் பிசாசு. பயங்கரத் துணிச்சல்.

வீட்டிற்கு வரும் போதே நல்ல பசியுடன் வந்தான். தட்டில் பூரிகளை அடுக்கிக் கொண்டு மசாலாவைக் கிண்ணத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு தன்னுடைய ரூமிற்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டான்.

ஆமாம் , அவனுக்குத் தனி ரூம். தனியாகத் தான் இரவில் தூங்குவான். ஸ்கூலில் இருந்து வந்து அம்மா வரும் வரை வீட்டில் தனியாகத் தான் இருப்பான். சாவியைக் கீழ் வீட்டில் கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்தக் கீழ் வீட்டு ஆண்ட்டி அவனுடன் மேலே வந்து கதவைத் திறந்து விட்டுப் போவார்கள். தன்யா முதலில் வங்கியிலிருந்து வருவாள். தன்யா வந்ததும் அத்வைத் பாலைக் குடித்து விட்டுக் கீழே விளையாட ஓடி விடுவான். அவினாஷ் ஆஃபிஸில் இருந்து வரும் போது தான் மேலே வருவான்.

அன்று அத்வைத் ரூமுக்குள் நுழைந்து கதவைச் சாத்தியதும் உள்ளே போய்,

" பாட்டி, நான் சாப்பாடு கொண்டு வந்துட்டேன்."
என்று கூப்பிட மேலே ஸீலிங் ஃபோனில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பாட்டிப் பேய் ஜிங்கென்று குதித்துக் கீழே வந்தது.

புகை போன்று மங்கலாகத் தெரிந்த உருவம் மடமடவென்று முழு உருவமாக அத்வைதின் கண்ணிற்குத் தெரியும்படியாக வளர்ந்தது.

"ஐய்யா இன்னைக்குப் பூரியா? ஜாலி ஜாலி"

என்று குதித்துக் கொண்டே தட்டில் கை வைக்க,

" அத்வைத், அத்வைத்"

என்று கூப்பிட்டுக் கொண்டே தன்யா கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

உடனே பயந்து போன அந்தப் பாட்டி அருவமாகத் திரும்ப மாறி ஜிவ்வென்று குதித்து அறையின் மூலையில் இருந்த ஒரு ஸ்டீல் பீரோவின் மேல் ஒடுங்கிக் கொண்டு உட்கார்ந்தது. முகத்தில் பயம் தெரிந்தது.
 

Author: Puvana
Article Title: வான பிரஸ்தம் -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom