• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

லாலிபாப் கொண்டாட்டம்

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
லாலிபாப் கொண்டாட்டம்

தென்றல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். நல்லவேளை யாரும் இல்லை. மாமனாரும் மாமியாரும் டி.வி.முன்னால் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.

தென்றலின் கணவன் இளவேனில் அவர்களுடைய அறையில் உட்கார்ந்து கொண்டு அலுவலக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் மடிக் கணினியில். உலகமே இடிந்து விழுந்தாலும் காதில் விழப் போவதில்லை.

ஆண்களே இப்படித் தான். அலுவலகமே ஏதோ அவர்களால் தான் இயங்குவது போல வீட்டுப் பெண்களிடம் காட்டிக் கொள்வதில் என்னவோ குறைச்சலேயில்லை. அதுவே பெண்கள் மட்டும் வேலை பார்த்தாலும் வீட்டுக்கு வந்தால் அப்படியே அலுவலகத்தை மறந்து குடும்பத்துக் குத்துவிளக்காக வேலை செய்ய வேண்டும். என்னடா நியாயம் இது! புரியாத புதிர் தான்.

தென்றல் மெதுவாகச் சத்தம் போடாமல் தோட்டத்திற்கு வந்தாள். தோட்டத்தில் இரண்டு வீடுகளுக்கும் நடுவில் இருந்த சுவரை நெருங்கி மனதில் தைரியத்தைக் கூட்டிக் கொண்டு

"அண்ணா, அண்ணா"

என்று மென்மையாகக் கூப்பிட்டாள். அடுத்து நிற்பவருக்கே கேட்காத அந்த மென்மையான குரல் தனது அறையில் நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த நிலவன் காதில் மட்டும் துல்லியமாக விழுந்தது.

"குட்டிம்மா. வந்துட்டயாடி செல்லம்."

"எங்கே மறந்துட்டயோன்னு நெனச்சேன்."

"அது எப்படிம்மா மறப்பேன்? அண்ணனைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டடா கண்ணு?"

உருகி வழிந்தான் அந்தப் பாசமலர் அண்ணன்.

பக்கத்து வீடே புகுந்த வீடாக அமைவது நல்லதா கெட்டதா என்று கேட்டால் கெட்டது என்று முழுமனதாக வாக்களிப்பாள் தென்றல். அம்மாவோட கண்டிப்பு இன்னும் தொடருதே! மாமியார், மாமனார் ரெண்டு பேருமே பயங்கர ஜாலி டைப். அம்மா நேரெதிர். பயங்கர டிஸிப்ளின் திலகம்.

"அதைப் பண்ணாதே! இதைப் பண்ணாதே! புகுந்த வீட்டில் பிறந்த வீட்டுப் பெயரைக் கெடுத்து விடாதே!"

என்று தினமும் உபதேச மழை.இத்தனைக்கும் அம்மாவும் மாமியாரும் கல்லூரித் தோழிகள்.
அம்மாவின் நட்பிற்காகத் தான் ஓய்வு பெற்றதும் இந்த வீட்டை வாங்கிக் குடி வந்தார் தென்றலின் அப்பா. தென்றலுக்கு ஒரே அண்ணன் நிலவன். அம்மாவின் தோழிக்கு ஒரே மகன் இளவேனில். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு எதற்கு அலைய வேண்டும் என்று இரண்டு தோழிகளும் சம்பந்திகளாகி விட்டார்கள்.

இனிய இல்லறம்.இதோ தென்றலின் வயிற்றில் மூன்று மாதக் கருவும் வளரத் தொடங்கி விட்டது.

"அண்ணா, சீக்கிரம் அண்ணா, யாராவது வந்துடப் போறாங்க! சீக்கிரம். அவர் பாத்தா ரொம்பக் கோவிச்சுக்குவார்."

" இந்தாம்மா கண்ணு இந்தா."

தன்னுடைய பையில் இருந்து எடுத்துக் கொடுத்ததை வாயில் வைத்து மெய்மறந்து சுவைக்கத் தொடங்கினாள் தென்றல். முகமெல்லாம் பரவசம்!

"என்ன நடக்குது இங்கே?"

கணவனின் குரல் கேட்டுத் துள்ளிக் குதித்துத் திரும்பிய தென்றலின் கையில் இருந்த லாலிபாப் கீழே விழுந்து விட அவளுடைய முகம் வாடிப் போய் விட்டது.

"என்ன நிலவா? நீயும் புரிஞ்சுக்காம இப்படி செய்யலாமா? அவளுக்கு ஷுகர் லெவல் பார்டரில் இருக்கு. அதிகம் இனிப்பு சாப்பிட வேண்டாம்னு டாக்டர் சொல்லி இருக்கார். நீயே உன்னுடைய தங்கைக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கலாமா? வீட்டில செஞ்ச இனிப்பு கூடப் பரவாயில்லை. இப்படிக் கடையில் இருந்து வாங்கித் தந்து அதுவும் திருட்டுத் தனமா! என்ன கெமிக்கல் எல்லாம் போடறானோ! குழந்தைக்காகவாவது கட்டுப்பாடா இருக்க வேண்டாமா? எத்தனை நாளா நடக்குது இது?"

"இல்லை மாப்பிள்ளை. இன்னைக்குத் தான் முதல் தடவையா வாங்கிட்டு வந்தேன். புள்ளைத் தாய்ச்சிப் பொண்ணு ஆசைப் படுதேன்னு.அம்மாக்குத் தெரிஞ்சா அம்மாவும் கோவிச்சுக்குவாங்க. அதனால் தான் அம்மாக்குத் தெரியாம வாங்கிட்டு வந்தேன். பாவம் சாப்பிடக் கூட இல்லை. உங்களைப் பாத்துக் கீழேயே போட்டுட்டா பாருங்க."

கண்களில் ததும்பும் கண்ணீருடன் உள்ளே திரும்பிச் சென்றாள் தென்றல் குனிந்த தலை நிமிராமல்.

நிலவனிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு உள்ளே சென்றான் இளவேனில். தென்றல் பயங்கரக் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

"கண்ணம்மா! கோபமா? இங்கே பாரு என்னை. ஒன்னோட நல்லதுக்குத் தானே சொன்னேன்."

ம்ஹூம். கண்களை இறுக்க மூடிக் கொண்டு திறக்கவே இல்லை தென்றல்.

"கண்ணம்மா. கண்ணைத் திறந்து என்னோட கையில என்ன இருக்குன்னு பாரு கொஞ்சம். நீ தூங்கலைன்னு‌ எனக்கு நல்லாவே தெரியுது."

லேசாக் கண்ணைத் திறந்து பார்த்தாள் தென்றல். இளவேனிலின் கையில் ஒரு லாலிபாப். துள்ளிக் குதித்து எழுந்தாள் தென்றல்.
"
இன்னைக்கு ஒரு நாளைக்கு நீ ஆசைப் பட்டதுக்காக இதைச்
சாப்பிடுக்கோ. ஆனால் ஒடம்புக்கு இது நல்லதில்லை. அடிக்கடி கேக்கக் கூடாது.சரியா?"

கணவனின் கையில் இருந்து பிடுங்கி ஆசையுடன் அதை ருசிக்க ஆரம்பித்தத் தனது காதல் மனைவியை அன்புடன் பார்த்தான் இளவேனில்.

சின்னக் குழந்தையாகத் தான் தெரிந்தாள் இளவேனிலின் கண்களுக்குத் தென்றல்.


புவனா சந்திரசேகரன்.
 
Last edited:

Author: Puvana
Article Title: லாலிபாப் கொண்டாட்டம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
லாலிபாப் மாதிரியே ஸ்வீட்டா இருக்கு🍭🍭🍭🍭🍭
 
Top Bottom