• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 6

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 6.

கருணா தொடர்ந்து பேசினாள்.

"இந்த க்ரூப்பில் பாடிய, வாசித்த அனைவருக்கும் எனது பாராட்டுகள். அதுவும் கீபோர்ட் வாசித்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் எனக்கு என்னவோ என்னுடைய இளமைப் பருவம் நினைவுக்கு வந்தது" என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, கல்லூரி முதல்வர், பவித்ராவை மேடைக்கு வரச்சொல்லி சைகை செய்தார்.

பவித்ரா, மேடைக்கு வந்து கருணாவின் எதிரே நின்றதும் கருணாவின் முகம் மலர்ந்தது.

" உன் பேர் என்னம்மா? " என்று கேட்க, " பவித்ரா " என்று அவள் சொன்னதும், கருணாவின் முகம் மாறியது. தலையைப் பிடித்தபடி ஒரு நிமிடம் நின்றாள். அதன் பிறகு அதிகம் பேசவில்லை. கல்லூரி நிர்வாகத்தினரிடம், " எனக்கு உடல்நலம் அவ்வளவாக சரியில்லை. நாளை நான் சென்னையிலிருந்து கிளம்பறேன். இப்பவே கிளம்பிப் போய் ரெஸ்ட் எடுத்தால் தான் சரியாக இருக்கும் " என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

பவித்ராவிற்கு ஏனோ மனம் ஏமாற்றம் அடைந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் கருணா மேடத்தைத் தனியாகச் சந்தித்து நீண்ட நேரம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள். அது நடக்கப் போவதில்லை. " எனக்கு எதிலயும் அதிர்ஷ்டமே இல்லை" என்று அதிதியிடம் புலம்பினாள்.

அப்போது தான் ஆடியன்ஸ் பக்கத்தில் இருந்து ஏதோ சலசலப்பு கேட்க, எல்லோருடைய கவனமும் அங்கே திசை திரும்பியது. அடுத்தடுத்து நடந்த விஷயங்களால் பவித்ராவின் மனம் கருணாவை மறக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

சிறிது நேரத்திற்கு முன்பு பவித்ரா மேடைக்கு வந்து கருணாவின் அருகே நின்றதைப் பார்த்த நாதனால் அந்தக் காட்சியைத் தொடர்ந்து ரசிக்க முடியவில்லை. நெஞ்சைப் பிடித்தபடி அப்படியே சரிந்து விழுந்த நாதனுக்கு வேர்த்து வேர்த்துக் கொட்டியது .

பதறிப்போன மாதவன், நண்பனைப் தாங்கிப் பிடித்து அருகில் இருந்த சேரில் சாய்ந்து உட்கார வைத்தார். அதிதியை மொபைலில் அழைத்துத் தகவலைச் சொல்லி விட்டு, அருகிலிருக்கும் மருத்துவமனைக்குத் தாமதிக்காமல் செய்தி அனுப்பி உதவி கேட்டார். ஆம்புலன்ஸ் உடனடியாக வந்துவிட்டது.

ஆம்புலன்ஸுடன் பவித்ரா, அதிதி, அநிகேத் மூன்று பேருமே கிளம்பினார்கள். கண்ணீரை உதிர்த்தபடி பவித்ரா, வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தாள். மற்ற மூவரும் அவளைத் தேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

" என்னால தான். எல்லாமே என்னால தான். நான் என்னோட ஆசையை எப்படியாவது நிறைவேத்திக்கணும்னு தன்னலமா முடிவு எடுத்துட்டேன். அதைத் தான் அப்பாவால தாங்கிக்க முடியலை. அவருக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துட்டேன். இப்போ அவரோட உயிருக்கே ஆபத்தாயிடுச்சு. அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னா என்னை யாருமே மன்னிக்க மாட்டாங்க, மத்தவங்க என்ன, என்னாலயே என்னை மன்னிக்க முடியாது? " என்று புலம்பினாள்.

" நான் தாம்மா தப்பு பண்ணிட்டேன். உங்களுக்கு ஸர்ப்ரைஸ் தரதா நெனைச்சு அசட்டுத்தனமா எதையோ செஞ்சு வச்சிருக்கேன்! நீ தான் என்னை மன்னிக்கணும்" என்று மாதவன், தன் பங்குக்குப் புலம்பினார்.

அதிதியோ, தோழிக்கு மியூசிக் கற்றுக் கொள்ளத் தூண்டியதற்கு வருந்தினாள்.
அநிகேத் மட்டும் தான் கொஞ்சம் ஓரளவு தெளிவாக இருந்தான்.

" கொஞ்சம் அமைதியா இருங்க எல்லாரும். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைப் பேச வேணாம். அங்கிளுக்கு மெடிக்கல் அட்டன்ஷன் இப்போ இந்த நிமிஷம் ரொம்ப அவசியம். அதில கவனம் செலுத்துவோம். அங்கிள் வலியில் துடிச்சிருக்காரு. அவருக்கு நினைவு இருக்கு. நீங்க பேசறது எல்லாமே அவருக்குக் காதில் விழுகுது. அதுனால அவர் இன்னும் கொஞ்சம் உணர்ச்சி வசப்படலாம். அது இன்னும் ஆபத்தாக முடியும். தயவு செஞ்சு புலம்பாம அமைதியா வாங்க. ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யுங்க" என்று அதட்டியதும் தான் எல்லோருமே புலம்பல்களை நிறுத்தி அடங்கிப் போனார்கள். பவித்ரா மட்டும் விசும்பியபடியே வந்தாள்.

ஒருவழியாக மருத்துவமனையை அடைந்து விட்டார்கள். மாதவனும், அநிகேத்தும் ஓடியாடித் தேவையான ஃபார்மாலிட்டிகளை முடித்ததால் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்திருந்தார்கள்.

சிகிச்சையை ஆரம்பித்த டாக்டர் வந்து அவர்களிடம் பேசினார். " அவருக்கு வந்தது மைல்டான ஹார்ட் அட்டாக்னு தோணுது. நல்லவேளையாக உடனடியாக மெடிக்கல் அட்டன்ஷன் கொடுத்து விட்டோம். இப்போதைக்கு இரண்டு, மூன்று நாட்கள் அப்ஸர்வேஷனில் வச்சுப் பாத்துக்கணும். ஆஞ்சியோகிராஃபி கூட செய்து பார்க்க வேண்டியிருக்கலாம். இதயத்தில் அடைப்பு இருந்தால் அதற்கான ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும். லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட். வீ ஆர் கிவ்விங் அவர் பெஸ்ட். ஆண்டவனிடம் பிரார்த்தனை பண்ணிக்கோங்க" என்று சொல்லி விட்டுப் போனார்.

" இன்னைக்கு ஒரு நாள் ஐசியூல வச்சுப் பாத்துக்குவாங்க. நாளை எல்லாம் சரியா இருந்தால் ரூமுக்கு மாத்துவாங்களாம்" என்று அநிகேத் விசாரித்துக் கொண்டு வந்து சொன்னான்.

" பவித்ரா, நீயும் அதிதியும் வீட்டுக்குக் கிளம்பிப் போங்க. இன்னைக்கு நைட் நான் இங்கேயே தங்கிப் பாத்துக்கறேன். அநிகேத், நீ கூடக் கிளம்பிப் போகலாம். முடிஞ்சா இவங்களை வீட்டில் விட்டுட்டுப் போ. நாளைக்குக் காலையில் வாங்க போதும். எல்லோருமாக இங்கே நின்னு கூட்டம் போட வேணாம்" என்று மாதவன் சொல்லி விட்டார்.
முதலில் பவித்ரா தயங்கினாலும், மாதவன் பேச்சிலிருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

கொஞ்சம் தள்ளியிருந்து கண்ணாடிக் கதவு மூலமாக அப்பாவைப் பார்த்து விட்டுக் கிளம்பினாள். ஹாஸ்பிடல் பெட்டில் நினைவில்லாமல் கிடந்த அப்பாவைப் பார்த்து அவளுடைய மனதில் துக்கம் பொங்கி வழிந்தது.

அடுத்த நாள் காலையில் பவித்ரா, அதிதி, அநிகேத் மூன்று பேருமே வந்து விட்டார்கள்.
மாதவனுடன் சேர்ந்து நாதனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரைச் சென்று பார்த்தார்கள்.

" நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு இப்போ. ஹி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நௌ. அவரை ரூமுக்குக் கொஞ்ச நேரத்தில் மாத்திடுவோம். அவரைப் பாத்து நீங்க பேசலாம். ஆனால் கவனமா நடந்துக்கோங்க. ரொம்ப இமோஷனலாக்கற மாதிரி எந்த டாபிக்கையும் பேசவேண்டாம். அதே மாதிரி அதிர்ச்சி தரக்கூடிய எந்தத் தகவலையும் அவருக்கு சொல்லவேண்டாம்" என்று எச்சரிக்கை செய்தார்.

சிறிது நேரம் கழித்து ரூமுக்கு நாதனை மாற்றியதும் எல்லோரும் போய்ப் பார்த்தார்கள். பவித்ரா கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு அப்பாவிடம் பேசினாள்.

" எப்படிப்பா இருக்கீங்க இப்போ? நேத்து எங்க எல்லாரையும் ரொம்பவே நீங்க பயமுறுத்திட்டீங்களே இப்படி? " என்று அக்கறையுடன் கேட்டாள்.

நாதன், பவித்ராவைத் தன்னருகில் உட்காரச் சொல்லி சைகை செய்தார். பவித்ராவும் அவர் பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

" மாதவா, நான் என் பொண்ணோட கொஞ்சம் தனியாப் பேசணும். தப்பா நினைச்சுக்காதே ப்ளீஸ் " என்று கை கூப்பினார் நாதன்.

" நாதா, நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளு. எதுவா இருந்தாலும் அப்புறமா நிதானமா வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம். இமோஷனலா ஆக வேண்டாம். நீ இப்போ ரெஸ்ட் எடு. அது தான் முக்கியம் இப்ப" என்றதும்,

" இல்லை மாதவா, பவித்ரா கிட்ட சில விஷயங்களை எனக்கு சொல்லியே ஆகணும். தயவு செஞ்சு என்னைப் பேசவிடு. என் கிட்ட பவித்ராவோட பேச இன்னும் எவ்வளவு நேரம் பாக்கி இருக்குன்னு எனக்கே தெரியாது. பேசவிடு ப்ளீஸ். அப்புறம் பேச முடியாமல் போயிடும்" என்று சிக்கித் திணறிப் பேசி முடித்தார்.

மாதவனும் நண்பனின் விருப்பத்தைத் தட்ட முடியாமல் அதிதி, அநிகேத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார். நாதன், பவித்ராவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

" அம்மாடி, எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா வருத்தப்படாதே. உங்க அம்மா கிட்ட நீ போயிடு" என்றார்.

திடுக்கிட்டுப் போனாள் பவித்ரா. " என்னப்பா பேசறீங்க? உங்களுக்கு ஒண்ணும் ஆகாது" என்றாள். குரலில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

" அம்மாவா? அம்மா எங்கேப்பா இருக்காங்க? எனக்குத் தான் அம்மாவே இல்லையே? எனக்கு இருக்கற ஒரே உறவு நீங்க மட்டும் தானே? " என்றாள் அழுதுகொண்டே.

" பவித்ரா, அழாதே! தைரியமா இரு. என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுடு. உனக்கு அம்மா இருக்காங்க. அதுவும் உயிரோடு இந்த உலகத்தில் இருக்காங்க. அம்மாவிடம் இருந்து குழந்தையைப் பிரிச்ச பாவி நான் " என்றார்.

" எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் அப்பா. நீங்க முதலில் உடம்பு ரெகவராகி வர்றது தான் எனக்கு முக்கியம் "

" என் உடம்பு சரியாயிடுச்சுன்னா நானே உன்னை உங்கம்மா கூட சேத்து வைக்கறேன். அப்படி இல்லைன்னா நீயாவே உங்கம்மா கிட்டப் போயிடு" என்றான்.

புரியாமல் விழித்தாள் பவித்ரா.

" அம்மா யாரு? எங்கே இருக்காங்கன்னு ஒண்ணுமே சொல்லாமல் அம்மாட்டப் போகச் சொல்லறாரேன்னு பாக்கறயா? சொல்லறேன். நேத்து உங்க காலேஜ் ஃபங்ஷனில வந்திருந்தாங்களே ஒரு ஸெலிபிரடி ஸிங்கர் கருணா, அவ தான் உன்னைப் பெத்த அம்மா" என்று நாதன் சொன்னதும், அதிர்ச்சியில் உறைந்து போனாள் பவித்ரா.

' இந்த விஷயத்தைக் கேட்டு நான் சந்தோஷப்படணுமா இல்லைன்னா வருத்தப்படணுமான்னு கூட எனக்குப் புரியலையே! அப்பா இவ்வளவு பெரிய குண்டைத் தூக்கித் தலையில் போடறாரே?
புகழ்பெற்ற பாடகி கருணா என்னோட அம்மாவா, எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விஷயம்! ஆனா அப்படின்னா அவங்க ஏன் என்னை விட்டுட்டுப் பிரிஞ்சு போனாங்க? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவில் அப்படி என்ன பிரச்சனை வந்திருக்கும்? உயிரோடு அம்மா இருக்கும் போது அவங்க இறந்து போனதா எல்லாரும் என் கிட்ட ஏன் சொன்னாங்க? யார் என்னோட சந்தேகங்களைத் தீத்து வைக்கப் போறாங்க?' ஆயிரத்தெட்டுக் கேள்விகள் பவித்ராவின் மனதைத் துளைத்தெடுத்தன. தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடலாம் போல இருந்தது அவளுக்கு.

" அப்பா, உங்க கிட்ட சொல்லாம நான் கீபோர்ட் கத்துக்கிட்டதுக்குக் கோபமாப்பா? " என்றாள் பவித்ரா.

" இல்லைம்மா. கோபமெல்லாம் இல்லைம்மா. ஆனா நான் தடுத்துருவேனோங்கற பயத்தில் தானே நீ அந்த மாதிரி செஞ்சிருக்கே? இல்லையா? அதை உணர்ந்த போது எனக்கு வருத்தம் தான்மா. இந்த மியூசிக்னால தான் நானும் உங்கம்மாவும் பிரிஞ்சோம். அதனால் தான் மியூசிக்கையே வெறுத்தேன் நான். நீயும் மியூசிக் கத்துக்கிட்டேன்னா எங்கேயாவது என்னை விட்டுப் பிரிஞ்சு போயிடுவயோன்னு பயந்தேன். மன்னிக்க முடிஞ்சா என்னை மன்னிச்சுரும்மா. உனக்குப் பிடிச்சதை நான் இத்தனை வருஷமா உன்னை செய்ய விடலை " என்று நாதன் பேசிக் கொண்டிருந்த போது டாக்டர் உள்ளே நுழைந்தார். பின்னாலேயே வெளியே காத்துக் கொண்டிருந்த மற்றவர்களும் நுழைந்தார்கள்.

" என்ன நாதன்? கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட்னு நினைச்சேன். இந்த சமயத்தில் அதிகமாப் பேசி ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. இப்போ நீங்க நல்லாத் தூங்கணும். ஸிஸ்டர் வந்து மருந்து தருவாங்க. சாப்பிட்டுட்டு நல்லாத் தூங்குங்க. நீங்க சரியா ரெஸ்ட் எடுத்தால் தான் சீக்கிரம் டிஸ்சார்ஜ் கிடைக்கும் " என்று சொல்லி விட்டுப் போனார்.

அதற்கு மேல் அப்பாவும் மகளும் சேர்ந்து தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பவித்ராவால் தனது குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. மாதவனுக்கும் இந்த விஷயங்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

'மாதவன் அங்கிளும் அப்பாவும் நட்புடன் பழகுவது நாம் இந்த வேளச்சேரி வீட்டுக்கு வந்த பிறகு தான் என்று அப்பா சொல்லியிருக்காரு. அம்மா இறந்து போனதாத் தான் அவர் கிட்டயும் அப்பா சொல்லியிருக்கணும். இப்போ யார் கிட்ட இந்த விஷயத்தில் உதவி கேட்பது? பரவாயில்லை, அங்கிளுக்குத் தெரிந்தால் தெரியட்டும், அதிதி, அநிகேத் எதிரில் அங்கிளிடமே பேசி விடலாம்' என்று முடிவு செய்தாள் பவித்ரா.

நாதன் தூங்கிப் போனதும், எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். காரிடாரில் இருந்த சேர்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பவித்ரா, அவர்கள் அனைவருக்கும் உண்மையைச் சொல்லி விட்டாள்.

" அடப்பாவி, இத்தனை வருஷகாலமாய் மனசுக்குள் இத்தனை விஷயங்களைப் பூட்டி வச்சிருந்திருக்கானே? இன்னைக்கு ஸ்டேஜில் கருணா மேடத்தையும் உன்னையும் சேர்ந்து பாத்ததில் தான் அதிர்ச்சி ஆகி, உடம்புக்கு இழுத்து விட்டுக் கொண்டிருக்கான். பவித்ரா, உங்க பெரியப்பா எங்கயோ வெளியூரில் இருக்கார் இல்லையா? அவருக்கு எப்படியும் நாதனுடைய உடல்நலம் பத்தி சொல்லணும். அப்படியே அவருக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டுப் பாரு" என்றார் மாதவன்.

" இல்லை அங்கிள், அவர் கிட்டக் கேக்க முடியாது. பாட்டி இறந்து போறதுக்கு முன்னால இருந்தே அப்பாவுக்கும் அவருக்கும் ஏதோ மனஸ்தாபம். அதிகம் பேச்சுவார்த்தை இல்லை. இருந்தாலும் நான் ஃபோன் பண்ணிப் பேசறேன்" என்றாள்.

" நாம டைரக்டா கருணா மேடம் கிட்டயே பேசினால் என்ன? " என்றான் அநிகேத்.

" அவங்க இன்னைக்கு ஊருக்குத் திரும்பறதாச் சொன்னாங்களே? இவ்வளவு நேரம் கிளம்பி ஏர்போர்ட் போயிருப்பாங்க" என்றாள் அதிதி.

" சரி, நான் காலேஜ் போயி அவங்க காண்டாக்ட் நம்பர் ஏதாவது கிடைக்குமான்னு பாக்கறேன்" என்று சொல்லி விட்டு அநிகேத் கிளம்பினான். பவித்ராவும், அதிதியும் ஹாஸ்பிடலில் தங்க, மாதவன் அன்று வீட்டுக்குத் திரும்பினார்.

" வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு ஈவினிங்குக்கு மேல வாங்க அங்கிள். நான் பாத்துக்கறேன். நேத்து நைட்டும் நீங்க தூங்கலை. கொஞ்சமாவது ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க" என்று பவித்ரா சொல்லி விட்டாள்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடீ!

என் கண்ணில் பாவையன்றோ?
கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ?
என்னுயிர் நின்னதன்றோ?



தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
அடடா..கருணாவின் கருணை பவித்ராவுக்கு கிடைக்குமா
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் சூப்பர் அம்மா 🩵🩵🩵🩵🩵🩵பவி அம்மா கருணா தான்னு கான்போர்ம் ஆகிடுச்சு
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
எல்லோருக்குமே அதிர்ச்சி தான்
 
Top Bottom