• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -5

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
245
பகலிரவு பல கனவு - 5

பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை தொடங்க இருப்பதால் நீட் கோச்சிங்கை சற்றே ஒத்தி வைத்திருந்தார்கள். மனதின் ஒரு ஓரத்தில் பிரபாகரனின் முகம் வந்து போனாலும் ப்ளஸ் டூ தேர்வுகள் அதைவிட முக்கியமான விஷயமாகப்பட்டது. இன்னும் யார் என்றே தெரியாத ஒருவனுக்காக இத்தனை வருட கடினமான உழைப்பு வீணாகிப் போவதை சம்யுக்தா நிச்சயமாக விரும்பவில்லை.

காதல் வாழ்க்கை வேறு தனது லட்சியம் வேறு என்பதைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் அப்போதே அவளுக்கு இருந்ததோ என்னவோ. ஒருவேளை பிரபாகரனிடம் நெருங்கிப் பழகியிருந்தால் இது போன்ற தத்துவங்களுக்கு இடமிருந்திருக்குமா என்று தெரியவில்லை.

ஆனால் இப்போதைக்கு படிப்பு முக்கியம் என்று சம்யுக்தா நினைப்பது நல்லது தானே. டாக்டராகியே தீருவது என்று படித்துக் கொண்டிருந்த சரண்யாவுக்கும் தோழியின் நிலை மிகுந்த திருப்தியை அளித்தது. கோச்சிங் சென்டருக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஜூஸ் கடை பற்றிய எண்ணங்கள் மறந்தும் சம்யுக்தா வின் நினைவில் வந்து விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இப்படியே கடக்க, ப்ளஸ் டூ பரீட்சை ஒருவழியாக முடிவடைந்தது.
சரண்யா, சம்யுக்தா இருவருமே நன்றாகவே எழுதி இருந்தனர். அடுத்தது நீட் தேர்வில் ஜெயிக்க வேண்டும். மறுபடியும் கடினமான பயிற்சி ஆரம்பம் ஆனது. தினமும் காலை முதல் இரவு வரை பயிற்சி. இடையிடையே சில மணித்துளிகள் ஓய்வு என்று பயிற்சி தொடர்ந்தது.

இதுவரை மனதின் ஆழத்தில் பந்து போலப் புதைந்திருந்த பிரபாகரன் கோச்சிங் சென்டரின் அருகில் இருந்த ஜுஸ் கடையைப் பார்த்ததும் மேலெழுந்து வந்தான்.

பிரபாகரனின் குடும்பத்தில் அவனது அத்தை மகள் சங்கீதாவின் திருமணம் நடந்து முடிந்திருந்தது. வீட்டில் பெரியவர்கள் மட்டுமே வேறு வழியின்றி முறை செய்ய என்று சென்று விட்டு வந்தனர்.

இப்போதெல்லாம் சங்கீதா தனது கணவனுடன் அடிக்கடி பிரபாகரனின் கண்களில் தென்படுகிறாள். டாக்டர் கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப் சகிதமாக ஓர் ஆராய்ச்சி பார்வையுடன் ஸ்டைலாக அவள் ஜுஸ் கடைக்குள் வருவதை நினைத்து இவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.

அவளது கணவனுக்கு இதில் பிடித்தமில்லை என்பதை முதல் முறையே மனைவியிடம் வாய்மொழியாகவே வெளிப்படுத்தியிருந்தான். அவளோ கேட்பதாக இல்லை. அதுவும் அவள் முதல் முறை வந்த போது இது எங்க மாமா கடை தான் என்று சொல்லி, ஜுஸ் விலையெல்லாம் விசாரணை செய்து எவ்வளவு லாபம் வரும் என்பது போன்ற விசாரணை செய்ய அங்கே வேலை செய்பவர்கள் திருதிருவென விழிக்க அந்த நேரத்தில் பிரபாகரன் சரியாக என்ட்ரி கொடுக்க, “வேலை நேரத்தில கடையில் இருக்குறதே இல்லை போலிருக்கே மச்சான். மாமா கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுக்க வந்திருந்த போது, ரொம்ப வெசனப் பட்டாங்க. ஏதோ இப்போ தான் தடுமாறி எழுந்து நிக்குறீங்க. இதுவும் போச்சுன்னா உங்க படிப்புக்கு நீங்க என்ன வேலை பார்த்து சம்பாதிச்சு….” என்று ஏளனத்துடன் பேசிக் கொண்டே போனாள். இடையிடையே அவளது கணவன் தடுக்க நினைத்த முயற்சிகள் யாவும் வீணாகிப் போனது.

பிரபாகரனின் முகத்தில் ஒரு எரிமலை எந்நேரமும் வெடிக்கும் அபாயம் காத்திருந்தது. கை முஷ்டிகளை இறுக்கி அருகில் இருந்த டேபிளில் ஓங்கி ஒரு அடி வைத்தான். அந்த விலையுயர்ந்த கண்ணாடி டேபிள் சில்லுச் சில்லாக நொறுங்கிப் போனது. குத்தியவனின் கையில் இருந்து இரத்தம் கொட்டியது. சங்கீதா அப்போதும் தெனாவெட்டாக நிற்க அவள் கணவன் ஒரு டாக்டராக மிகவும் பதறிப்போய் முதலுதவி செய்தான்.

“எதுக்கும் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போய் ஒரு இன்ஜக்ஷன் போட்டுடுங்க” என்று உடனிருந்தவர்களிடம் சொன்னவன் பார்வையால் பிரபாகரனிடம் மன்னிப்பை யாசித்து மனைவியை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

வேலை செய்யும் இளைஞர்கள் கண்ணாடித் துண்டுகளை க்ளீன் செய்து கொண்டிருக்க, பிரபாகரன் மாதாந்திர கணக்கைப் பார்க்க ஆரம்பித்தான். இது வேறயா என்று நொந்து கொண்டே வேலை செய்தனர் பணியாளர்கள்.

இவர்களது நல்ல நேரமா போதாத நேரமா தெரியவில்லை, கோச்சிங் கிளாஸ் முடிந்து வெளியே வந்தனர் சம்யுக்தாவும் சரண்யாவும். அந்தக் கடையைப் பார்த்ததும் சம்யுக்தாவின் கண்களில் வந்து போன ஒரு மின்னல் சரண்யாவிற்கு உவப்பானதாக இல்லை. எப்படியாவது அங்கிருந்து அவளை நகர்த்தி விடவேண்டும் என்று பிரம்மப்பிரயத்தனம் செய்தாள்.

“சம்யூ! கொஞ்ச நாளா இந்த கடைல ஜுஸ் எதுவும் நல்லா இருக்கிறதில்லைன்னு கம்ப்ளைன்ட் இருக்கு. ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் யூஸ் பண்றதில்லைன்னு வேற சொல்றாங்க
நாம வேற கடைக்குப் போவோம், வா” என்று அழைத்துப் பார்த்தாள். அவள் பேசியது அட்சரம் பிசகாமல் உள்ளே இருந்தவன் காதுகளைச் சென்றடைந்தது.

சுற்றி இருந்தவர்கள், இது வேறயா என்று தலையைப் பிடித்துக் கொண்டனர். இந்தக் கடைக்காகவே இயற்கை முறையில் தோட்டம் வளர்த்து அதில் விளைந்து வரும் பழங்களையே எண்பது சதவீதம் கடையில் பயன்படுத்துபவன் அவன். இந்த நிலப்பகுதியில் விளையாத பழங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட கடைக்கு இப்படி ஒரு பாராட்டு வந்தால்???

ஏற்கனவே எரிகின்ற தீயில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தாள் சரண்யா. சம்யுக்தாவோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடையை நோக்கி நடந்தாள்.

இன்று கடை விடுமுறை என்று மாட்டியிருந்த போர்டை அவள் கவனிக்கவே இல்லை. கடையோ திறந்திருந்திருக்கிறது. ஆட்களும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி விடுமுறை என்று தெரியும்.

சரண்யாவையும் இழுத்துக்கொண்டு வேகமாகக் கடைக்குள் நுழைந்து விட்டாள் சம்யுக்தா. “அண்ணா! வழக்கம் போல ஒரு ஸ்ட்ரா பெர்ரி மில்க்ஷேக் அன்ட் ட்ரை ஃப்ரூட் ஃபலூடா” என்று சொல்லி விட்டு வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டாள். சரண்யாவிற்கு சுற்றுப்புறம் வித்தியாசமாகப் பட்டது.

“டேய்! லாஸ்ட் ஒன் மன்ந்த் அக்கவுண்ட்ஸ் தான் பார்த்தேன். அதுவே கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் இடிக்குது. யாருக்கு டா பிரபாகரன் கிட்ட கை வைக்கிற அளவுக்கு தைரியம் வந்துச்சு. எல்லா நேரமும் நான் கடைல தான டா இருக்கேன். கூடப் பொறந்தவங்க மாதிரி நம்பி சில நேரம் விட்டுப் போனது தப்பா? எதுல டா கொறை வச்சேன்?” அங்கிருந்த அறைக்குள் இருந்து சத்தம் பலமாக வந்து கொண்டிருந்தது.

“இனிமேல் யாரும் வேண்டாம். நான் மட்டும் பாத்துக்கறேன். எல்லாரும் வெளியே போங்க டா.” கத்திக் கொண்டே வெளியே வந்தவன் அங்கு நின்ற பெண்களைக் கண்டு திகைத்தான். சட்டென்று சம்யுக்தாவை அடையாளம் தெரியவில்லை. ஆனால் பெண்கள் இருவருமே அவனை அடையாளம் கண்டு கொண்டனர்.‌ அவனது கலர் கலரான முடி ராசி அப்படி.

“அதான் கடை லீவுன்னு போட்டிருக்கே, உங்களுக்கு கண்ணு என்ன புடதிலயா இருக்கு?” என்று அவர்களிடமும் கத்தினான். சரண்யா இது தான் சாக்கு என்று கிளம்பி விடலாமா என்று யோசிக்க, சம்யுக்தா என்ன செய்து விடுவாய் என்பது போல உட்கார்ந்திருந்தாள்.

“அண்ணே! பக்கத்துல படிக்குற பிள்ளைங்கண்ணே. கவனிக்காம வந்துட்டாங்க போல, கடை தொறக்குற நேரம் தானே. நாங்க பாத்துக்குறோம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று சமாதானம் செய்தான் அவனது வலது கை இடது கை என எல்லாமுமாக இருக்கும் ராஜேந்திரன்.

“ம்ம்… என்ன ஜூஸ் போடப் போற? எனக்கும் சேர்த்து ஒன்னு போடு” என்று நகர்ந்தவனுக்கு அப்போது தான் சற்று முன்னர் கேட்ட பேச்சு ஞாபகம் வந்தது.

“ஹேய்! நீங்க தானே இங்கே ஜுஸ் நல்லாவே இல்லேன்னு பேசினது. இதுல ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் யூஸ் பண்றதில்லைன்னு வேற எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒரு பேச்சு” என்று எகிறினான். அவன் டேபிளில் ஓங்கி தட்டியதில் சரண்யா நிஜமாகவே பயந்து போய் நடுங்கி விட்டாள். பிரபாகரனுக்கோ பட்ட கையிலே படும் என்ற நிலை, மீண்டும் ரத்தம் வர ஆரம்பித்தது.

“இப்பவே கூட ஃபுட் செக் பண்றவங்களை வரச் சொல்லுங்க. என் கடைல குறைன்னு சொல்லட்டும். அதுக்கப்புறம் நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்” என்று சவால் எல்லாம் விட்டான்.

‘டேய்! நீ உன்னைப் பார்த்து ஜொள்ளு விடற ஆளு கிட்ட என்ன வேணும்னாலும் செய்றேன்னு சவால் விட்டாலும் அர்த்தம் இருக்கு. மீ பாவம். நீ கோபமா பார்க்கிறதே தீயில பொசுங்கிற மாதிரியே இருக்கு. அடியே சம்யூ.. என் செல்லம் இல்ல.. உனக்கு ஃப்ரண்டா இருக்கிற பாவத்துக்கு என்னைக் காப்பாத்தித் தொலைடி..’ என்று மானசீகமாகப் பேசிக் கொண்டிருந்தாள் சரண்யா.

இப்போது சம்யுக்தா நன்றாகத் திரும்பி பிரபாகரனைப் பார்த்தாள். அவனும் அவளது முகத்தை நல்ல வெளிச்சத்தில் பார்த்தான். அவளோ உனக்கெல்லாம் இவ்வளவு கோபம் வருமா, சரியில்லையே என்பது போல பார்த்துக்கொண்டு இருந்தாள். பார்வையில் துளியும் பயம் இல்லை.

பிரபாகரனோ அவளை எங்கே பார்த்தோம் என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு இருந்தான். இரு கைகளாலும் தலைமுடியைக் கோதியவனுக்குச் சட்டென்று ஞாபகம் வந்து விட்டது. சம்யுக்தாவை ஆர்வத்துடன் பார்த்து வைத்தான்.

அவளோ, தன் முன்னே வைக்கப்பட்ட ட்ரை‌ ஃப்ரூட் ஃபலூடாவை ரசித்து ருசித்து உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சரண்யா தோழியின் நடவடிக்கைகளை வித்தியாசமாகப் பார்த்தாள்.

இருவரையும் பார்க்கும் போது ஏற்கெனவே அறிமுகம் ஆனது போலத் தெரிகிறதே, எங்கே, எப்போது நடந்திருந்திருக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள்.

மற்ற இருவரும் மீண்டும் தம்நன என்று பாடும் முயற்சியில் இறங்கினர். பிரபாகரனுக்கு விழிகள் சொக்கியது. கையிலிருந்து ரத்தம் சொட்டத் தொடங்கியது.

சம்யுக்தாஅவன் கைகளில் இருந்த கட்டில் இருந்து இரத்தம் வருவதைக் கண்டு “அச்சோ ரத்தம்!” என்று அலறி விட்டாள். பிரபாகரனுக்கோ மயக்கமாக வந்தது.

“டேய்! நம்ம டாக்டர வரச்சொல்லுடா. ஒரு டிடி போட்டா சரியாகிடும். நான் உள்ள இருக்கேன்” என்று எழுந்து நின்றவன் தடுமாறி கீழே விழுந்தான்.

“அண்ணே!” என்று ஓடி வந்தவர்கள் அவனைக் கைத்தாங்கலாக தூக்கி அங்கே அறைக்குள் இருந்த‌ சிறிய சோஃபாவில் படுக்க வைத்தனர்.

சற்று நேரத்தில் அவர்களது குடும்ப டாக்டர் வந்த போது அவனது உடல் நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தது. டாக்டரிடம் பணியாளர் சொன்ன விவரம் கேட்ட சம்யுக்தா, இவ்வளவு ஸ்ட்ராங்கான கண்ணாடி உடையணும்னா எவ்வளவு கோபம் வந்திருக்கணும். இவனது இயல்பே இது தானா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டாள்.

இன்றைய சந்திப்பின் முடிவில் அவனது பெயர் பிரபாகரன் என்று அவளுக்குத் தெரிந்து போனது. அவனது பின்புலம் பற்றியும் ஓரளவு தெரிந்து போனது. அவன் தான் இன்னும்
அவள் யார் என்ன என்று எதுவும் அறியாமல் மயக்கத்தில் இருக்கிறான்.

 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom