• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு - 10

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
215
பகலிரவு பல கனவு -10

“நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே!” என்று டிவியில் சரத்குமாரும் தேவயானியும் பாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டு முடியும்போது படிப்பு, பணம் என்று எல்லாவிதத்திலும் பல மடங்கு உயர்ந்திருந்தது. பிரபாகரனின் அன்னை காமாட்சியும் அவனது அப்பத்தாவும் திரைப்படத்தில் ஆழ்ந்திருந்தனர்.

“அங்க பாத்தியா காமாட்சி? நல்லவங்க ஒரு முயற்சின்னு ஒரு அடி எடுத்து வச்சா போதும். அந்த ஆண்டவன் தானே உயர உயர ஏத்தி விட்டுடுவான்” என்று சிலாகித்துக் கொண்டார் அப்பத்தா.

“அட நீங்க வேற அத்த, எல்லாத்துக்கும் காலம் நேரம் கூடி வரணும். அப்பத்தான் தொட்டதெல்லாம் துலங்கும்” என்று பதில் சொன்னார் காமாட்சி.

“நீ சொல்றதும் சரி தான். எம்பேரனும் தான் மாடா உழைக்கிறான். கடவுள் கருணை வச்சு அவனை மேல ஏத்தி விடணும்” என்று மேல் நோக்கி கைகூப்பினார் அப்பத்தா.

இருவரது பேச்சையும் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் பிரபாகரன். இன்று காலையில் இருந்து மூன்றாவது முறையாக இந்தப் பாடலைக் கேட்கிறான்.

காலையில் இவன் கடையைத் திறக்கும் போதே பக்கத்தில் நின்று இருந்த‌ பஸ்ஸில் இருந்து இந்த பாடல் ஒலித்தது. அதென்னவோ காலையில் மக்களுக்கு இது போன்ற பாடலைக் கேட்டு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது நிஜமும் கூட என்று பல நேரங்களில் பிரபாகரனும் உணர்ந்திருக்கிறான்.

அன்றைய தினம் அவனுக்கும் நன்றாகவே அமைந்தது. வெகு நாட்கள் கழித்து சம்யுக்தா வை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவளோ ருத்ர தாண்டவம் ஆடும் நிலையில் இருந்தாள்.

சரண்யா தான் அவளை அணைத்து அமைதிப்படுத்தி தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டாள். அப்போதும் சம்யுக்தா பிரபாகரனை முறைத்துக் கொண்டே தான் இருந்தாள். அவனோ புன்னகை மன்னனாகக் காட்சி அளித்தான். சரண்யா தான் அனுமாராக மாறி எதிரெதிரே அமர்ந்திருந்த இருவருக்கும் இடையே தூது சென்றாள்.

“சம்யூ! கொஞ்சம் கோபத்தைக் குறை. நீ கோபப்படறதால எதுவும் மாறிடாது. உங்க ரிலேஷன்ல நீங்க ஸ்ட்ராங்கா இருந்தாலும் இப்போ உன்னால் உங்க வீட்டுல சொல்ல முடியுமா? அப்புறம் உன் படிப்பு, லட்சியம் எல்லாம் என்ன ஆகுது?” என்று கேட்க சம்யுக்தாவிடம் பதிலில்லை.

“பதினெட்டு வயசுல கல்யாணம் பண்றது நம்ம ஊரு பழக்கமா இருக்கலாம், ஆனா உங்க வீட்டுக்கு அது பழக்கம் கிடையாது. ஃப்ரண்டுனு என்னை சகஜமா ஏத்துக்கிட்ட உங்க அம்மா அப்பா இதைப் பத்தி நான் பேசினா, வீட்டுக்குள்ள விடுவாங்களா? இல்ல.. அண்ணா வந்து இப்போ பொண்ணு கேட்டா.. வாங்க மாப்பிள்ளைன்னு உபசரிச்சு கல்யாணத்துக்கு நாள் குறிச்சுடுவாங்களா?? கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணு.”

நேரடியாக அல்லாமல் மறைமுகமாக உங்கள் கல்யாணத்திற்கு தற்போது அனுமதி கிடைப்பது அரிது என்று புரிய வைக்க முயன்றாள். ஆனால் சம்யுக்தா இன்று ஒரு முடிவுக்கு வந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருந்தாள் போலும்.

“அப்போ, நான் எங்க அம்மா அப்பா பணத்துல படிச்சு டாக்டராகி இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சரியா இருக்கும்னு சொல்றியா?” இந்தக் கேள்வியில் பிரபாகரனின் முகம் இறுகியது. சரண்யா தோழியின் வாயை மூடி அவளைத் தொடர்ந்து பேசவிடாமல் தடுத்தாள்.

“ஏய் லூசு! நான் என்ன சொன்னேன், நீ என்ன புரிஞ்சிருக்க? அண்ணா உன்னைய படிக்க வைக்க மாட்டேன்னு சொன்னாரா, இல்ல.. அவரால முடியாதுன்னு நீயா முடிவு பண்ணிட்டியா?”

“....” சம்யுக்தா பிரபாகரனின் முகம் இறுகியதில் அதிர்ந்து போயிருந்தாள். வார்த்தை வருவேனா என்றது.

“இது சினிமா கிடையாது சம்யூ. நிஜமான வாழ்க்கை. நட்சத்திர ஜன்னலில்னு ஒரே ஒரு பாட்டு பாடி ஸ்டேட்டஸ்ல எங்கேயோ போறதெல்லாம் இங்கே நடக்காது. படிப்படியாத் தான் முன்னேற முடியும். அண்ணா அதுக்காக கஷ்டப்படும் போது நீ புரிஞ்சுக்காம பேசறது நல்லா இருக்கா சொல்லு.

“உங்க நொண்ணா பண்ற முயற்சி எல்லாம் நல்லாவே புரியுது. நீ வேற ரொம்ப விம் போட்டு விளக்க வேண்டாம். என்ன செய்யறேன்னு என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டா குறைஞ்சா போயிடுவாரு” என்று நொடித்துக் கொண்டாள்.

இத்தனை நேரமும் தோழிகளின் பேச்சில் குறுக்கே வராத பிரபாகரன் இப்போது வாய் விட்டுச் சிரித்தான்.

“ஆக, மேடத்துக்கு என்னைப் பார்க்காமல் இருக்கிறது பிரச்சினை இல்லை. நான் என்ன செய்யறேன்னு அவங்க கிட்ட சொல்லாதது தான் பிரச்சினை போல. இப்போவே இப்படின்னா, ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று சத்தமாகப் பாடினான்.

“ஷ்ஷு.. சும்மா இருங்க.” என்று நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“எனக்கு ரொம்ப நாள் உங்களைப் பார்க்கலேன்னா கஷ்டமா இருக்கே..‌உங்களுக்கு அப்படி இல்லை போல இருக்கு. அதான் கூலா பேசறீங்க”

“அது அப்படி இல்ல சம்யூ, நேர்ல பார்த்து பேசினா எங்க ஓவரா லவ்வுல இறங்கி மத்த விஷயத்தை மறந்து போயிடுவோமோன்னு சாருக்கு பயம். அதுக்காக உன்னை மாதிரி பார்க்காமல் ஏங்கிப் போயிருக்காருன்னு நினைக்காத. அதான் உனக்கு தெரியாம அப்பப்போ சைட் அடிக்கிறாரே. அதெல்லாம் போதாதுன்னு உங்க காலேஜுக்குள்ளயே பிரபா வைன் ஷாப் சே… பிரபா ஜுஸ் கடை ரெடி ஆகுதாம், உனக்குத்தான் தெரியவே இல்லை.” என்று பிரபாகரனின் திருட்டுத்தனத்தைப் புட்டு புட்டு வைத்தாள் சரண்யா.

“ஓ… “ என்று ஒற்றை வார்த்தையில் அதைக் கேட்டுக் கொண்ட சம்யுக்தா அங்கே இருந்து எழுந்து கொண்டாள். நீயும் எழுந்தாகணும் என்பது போல சரண்யாவைப் பார்த்து வைத்தாள். அவளும் வேறு வழியின்றி எழுந்தாள்.

அவர்களைத் தடுத்து நிறுத்த பிரபாகரன் எந்த முயற்சியும் செய்யவில்லை. போகும் போது அவனைப் பார்த்த சம்யுக்தாவின் பார்வையில், ‘மகனே! உன்னைக் கதற விடறேன் பாரு!’ என்ற சவால் இருந்தது.

“எது வந்தாலும் சமாளிப்பான் இந்த பிரபாகரன். ஈஸியா காதலிச்சாச்சு.. ஈஸியா கல்யாணமும் பண்ணிக்கிட்டா லைஃப்ல என்ன த்ரில் இருக்கு.. நீ என்ஜாய் பண்ணுடா பிரபாகரா!” என்று சத்தமாகவே சொல்லிக் கொண்டான்.

கடையில் நடந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தால், விடாது கருப்பு மாதிரி இங்கேயும் நட்சத்திர ஜன்னலில்னு பாட்டு வந்தா அவன் என்ன தான் செய்வான்.

“அப்பத்தா! வர வர ரொம்ப சினிமா பார்த்து கெட்டுப் போயிட்ட. நீ வேணும்னா அந்த பாட்டைப் பாடேன், உம்மகன் அப்படியாவது முன்னேறி வராரான்னு பார்ப்போம்” என்று பல்லைக் கடித்தான்.

“நான் ஏன்டா அவனுக்காகப் பாடினேன், அவங்கிடக்கிறான் கூறு கெட்டவன். பாடினா உனக்குத்தான் பாடணும். நாங்க பாடறத விட எம்பேத்தி வந்து அவளோட சேர்ந்து நீயும் பாடினா இன்னும் நல்லா இருக்கும்”

“பேத்தியா!! மலரும் நானும் பாடினா.. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு தான் பாடணும்”

“உங்கப்பனோட சேர்ந்து உனக்கும் மூளை மழுங்கிப் போச்சு போ. நான் பேத்தின்னு சொன்னது உன் பொண்டாட்டிய. சீக்கிரமே அவ வந்து இந்த வீட்டுக்கு விளக்கேத்தணும்”

“அது சரி.. எம்பொண்டாட்டி வாரதுக்கு முன்னாடி தங்கச்சி கல்யாணத்தை முடிக்கணும். அப்புறம் தான் என் கல்யாணத்துக்கு தயாராக முடியும்”

சரியாக அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த மலர்விழி, “எம்மேல அம்பூட்டு பாசமா? நம்பற மாதிரி இல்லையே!” என்றாள்.

“உன்னைய நான் நம்புன்னு எப்போ சொன்னேன்? உன்னைய துரத்தி விட்டா தான் எம்பொண்டாட்டி இந்த வீட்டுல ஃப்ரீயா இருக்க முடியும். இல்லேன்னா நீ நாத்தனார் வேலையைப் பாத்துட்டே இருப்ப, அவ பாவம்” என்றான். ‘அவளாடா பாவம், அவகிட்ட மாட்டினா உன் தங்கச்சி தான் பாவம் ‘ என்றது அவனது மனசாட்சி.

“என்னாது.. அவ பாவமா? நீ சொல்றதை பார்த்தா ஆள் பார்த்து வச்சிட்டு பேசற மாதிரி இருக்கே. அப்பத்தா! உம்பேரனை என்னான்னு கேளு” என்று போட்டுக் கொடுத்தாள்.

“மலரு! நீ கொஞ்சம் பேசாமல் இருக்கியா. அவன் களைச்சுப் போய் வந்திருக்கான். முதல்ல சாப்பிடட்டும்” என்று மகனுக்கு தோசையுடன் வந்தார் காமாட்சி.

“என்கிட்ட நீ மாட்டாமலா போயிடுவ!” என்று முணுமுணுத்துவிட்டு உள்ளே சென்றாள் மலர்விழி.

‘ஹப்பாடா! ஜஸ்ட் எஸ்கேப்!’ என்று நிம்மதிப் பெருமூச்சுடன் சாப்பாட்டில் கவனமானான் பிரபாகரன். அந்த நிம்மதியின் ஆயுள் வெகு சில நிமிடங்கள் கூட இல்லை.

“யாஹூ… யுரேகாஆஆஆஆ… “ என்று கத்திக் கொண்டே வந்தாள் மலர்விழி. “டேய் அண்ணா! எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு. நீ புதுசா ஆரம்பிக்கிற கடை வேற மெடிக்கல் காலேஜுக்குள்ள இருக்கு. ஒரு வேளை அங்கே தான் பொண்ணு படிக்குதோ? இல்லை வேலை பார்க்குதா? அப்பத்தா!! இதை என்னான்னு கேட்கலேன்னா நான் உன் கூட பேசவே மாட்டேன்” என்று அண்ணனையும் அப்பத்தாவையும் மிரட்டினாள்.


அவசரமாக தோசையை வாயில் அடைத்துக் கொண்டதில் பிரபாகரனுக்கு விக்கல் எடுத்தது.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு - 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom