• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 9

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 9



ரகுவரன் பிறந்து வளர்ந்த வீடு, அவனது தாயின் தாய் வீட்டு சீதனம், பராமரிப்பு இன்றிப் பாழடைந்த நிலையில் இருந்தது. இத்தனைக்கும் ரகுவரனின் சித்தப்பா இருவரும் அங்கே தான் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இருவரும் என்ன தான் செய்கிறார்கள் என்று புரியவில்லை.



தாத்தா பாட்டி இருவரும் வயதுக்கு உண்டான உபாதையையும் அனுபவித்துக் கொண்டு இருந்தனர். பாட்டிக்கு பார்வையில் கோளாறு ஏற்பட்டிருக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லி இருந்தார்கள். யார் செலவழிப்பது என்ற கேள்வியே அந்த சிகிச்சையை ஒத்தி போட்டுக் கொண்டு வந்தது.



விசாரித்த போது, "அவங்க இரண்டு பேரோட வருமானம் எல்லாம் வைத்தியருக்கே போகுது தம்பி. நாலு பிள்ளைங்க, அதுலயும் இரண்டு பொம்பளை பிள்ளைங்க. மனசு சரியில்லாத பிள்ளைகளை அம்போன்னு விட முடியாதே.. உங்க அப்பா செலவுக்கு பணம் கொடுக்கிறார் தான். ஆனாலும் அது பத்தாம போகுது. தம்பிங்க படிப்பு வேற இருக்கு. நிலத்துலயும் முன்ன மாதிரி மூணு போகம் எல்லாம் விளைவிக்க முடியல. எல்லாம் ஒரு அப்பாவி ஜீவனுக்கு செஞ்ச பாவம் தம்பி. தெய்வம் நின்னு கொல்லும்னு சும்மாவா சொன்னாங்க?" என்று நிலைமையைப் புட்டு வைத்தார் ஊர்க்காரர் ஒருவர்.



"உங்க அம்மாவோட சீரா வந்த நகை, வெள்ளி பாத்திரம் எல்லாம் என்ன ஆச்சுன்னு தெரியலை.. உங்க அப்பா கிட்ட இருக்கா, இல்லை இவங்களே வித்து சாப்பிட்டாங்களான்னு கடவுளுக்கே வெளிச்சம்" என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனார் அவர்.



ரகுவரனை பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் அவன் செய்வதற்கென்று எதுவும் இல்லை. இப்போது தான் முதல் சம்பளம் வாங்கி இருக்கிறான். தற்காலிகமாக ஒரு மேன்சனில் தங்கி வேலைக்கு சென்று வருகிறான். பெரிய தம்பி இந்த வருடம் பள்ளி படிப்பை முடித்து விடுவான், இளையவன் ஏழாம் வகுப்பில் இருக்கிறான். இருவரையும் தன்னுடன் அழைத்துக் கொள்ளலாம் என்றால் அவர்களுடன் அவனது சிற்றன்னையும் வருவாள், தந்தை ஏற்கனவே மெட்ராஸில் தான் வேலை செய்கிறார்.



இனிமேலாவது இவர்கள் அனைவரும் குடும்பமாக வாழலாம் என்றால் அவனது அன்னையின் வீட்டை யாருக்கோ விட்டுக் கொடுப்பதா என்று மூளை அடம் பிடித்தது. ஒரு பக்கம் அன்னையை வாழ வைக்காத வீடு நமக்குத் தேவையில்லை என்றும் தோன்றியது. பல வருடங்களாகத் தள்ளியே இருந்து விட்டதால் அவனது தம்பிகளிடம் கூட ரகுவரனால் நெருங்க முடியவில்லை. அதனால் ஊரிலிருந்த ஒரு வாரமும் உண்டு உறங்கி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு, தானாக யாரிடமும் அவனாக எதுவும் பேசாமல் திரும்பி வந்து விட்டான்.



ஆனால் அவனது வேலை மற்றும் அதில் வர இருக்கும் சம்பளம் பற்றி அறிந்தவர்கள் சும்மா இருப்பார்களா? வழக்கம் போல தாயைத் தூண்டிவிடும் வேலையைச் செய்ய, அவர் கிளம்பி மெட்ராஸ் வந்து விட்டார். சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் கண் பார்வை போய்விடும் என்ற பயம் அவருக்கு. சுந்தரம், லைன் வீடு என்று சொல்லும்படியான வீட்டில் இருக்க அவரது தாயும் அங்கே தங்கிக் கொண்டார். வழக்கம் போல வார இறுதியில் தந்தையைப் பார்க்க வந்த ரகுவரன் பாட்டியை அங்கே கண்டு திகைத்தான்.



அவரது நிலை உணர்ந்தவன், சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்தான். சியாமளாவின் மகன், இப்படி இல்லை என்றால் தான் ஆச்சர்யப்பட வேண்டும். சிகிச்சையின் முடிவில் பாட்டியும் பேரனும் கொஞ்சம் நெருங்கி இருந்தார்கள்.



ஓய்வு முடிந்து ஊருக்குச் செல்லும் முன் சொந்தக்காரர்களைப் பார்க்க வேண்டும் என்று பேரனை அழைத்துச் சென்றார்.



"யார் வீட்டுக்கு போகணும் பாட்டி?"



"நம்ம கேசவன் வீட்டுக்கு தான், அவங்க அம்மா எனக்கு மாமா பொண்ணு. கேசவனுக்கும் சுந்தரத்துக்கும் சொந்தத்தை மீறி ரொம்ப நாள் சிநேகம் உண்டு. நம்ம வீட்டுக்கு வந்திருக்கானே. உனக்கு ஞாபகம் இல்லையோ?"



"ஹான்… அவரா.. நல்லாவே ஞாபகம் இருக்கு. இப்போ கூட அடிக்கடி பார்க்கறேனே. வீட்டுக்கு போனதில்லை"



"அது சரி.. சொந்தம்னு சொல்லிட்டு உங்க அப்பன் வீட்டுக்கு கூட்டிட்டு போகாமல் என்ன செஞ்சான்? இப்போ என் கூட வா.. நான் இவ்வளவு தூரம் வந்துட்டு அங்கே போகலேன்னா நல்லா இருக்காது"



"நீங்க போங்க பாட்டி. நான் எதுக்கு? அங்கே யாரெல்லாம் இருப்பாங்களோ?" என்று அலுத்துக் கொண்டு சென்றவன், அங்கே சென்றதுமே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டான். சில நிமிடங்களில் தனது எதிர்காலத்தை முடிவு செய்து விட்டுப் பாட்டியிடம் உதவியை நாடினான்.



இவர்கள் இருவரும் சென்ற போது கேசவன் வீட்டில் தான் இருந்தார். வாசலுக்கே வந்து இருவரையும் வரவேற்றார்.



"அட! அத்தை நீங்களா? பார்த்து பல வருஷம் ஆச்சே! என்ன அதிசயம். வாங்க..‌வாங்க.. " என்று வரவேற்ற கையோடு ரகுவரனைப் பார்த்த பார்வையில் என்ன இருந்ததோ, நிச்சயம் ஸ்நேகம் இல்லை. "நீங்களும் வாங்க தம்பி! உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொல்லி சுந்தரத்துக்கு அடிக்கடி சொல்றேன். அவன் தான் மறந்து போயிட்டேன், இந்த வாரம் பையனுக்கு வேலை, ஊருக்கு போயிட்டான்னு ஒவ்வொரு தடவையும் ஏதோ சாக்கு சொல்லிட்டு இருந்தான். ஒரு வழியா மெட்ராஸ் வந்து ஆறேழு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்கீங்க" என்று நீளமாக வரவேற்றார் கேசவன்.



"அம்மா! இங்கே வாங்க. யார் வந்திருக்காங்கன்னு பாருங்க" என்று குரல் கொடுத்துக்கொண்டே இவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.



"இவன் யாரைப் பார்த்து இப்படிக் கத்தறான்? என்னையும் சேர்த்து ஏலம் விடறான்.." என்று அலுத்துக் கொண்டு வந்த ராஜம்மாள் அங்கே சுந்தரத்தின் அன்னையைப் பார்த்ததும் யாரென்று அடையாளம் தெரியாமல் சற்றே விழித்தார்.



"என்ன மதினி? இப்படி முழிக்கிறீங்க, நான் என்ன அப்படி அடையாளம் தெரியாதபடியா மாறிப்போய் இருக்கேன்?"



"அட, நம்ம செண்பகம். எனக்கும் வயசாகுதா இல்லையா? கொஞ்சம் பார்வைல கோளாறு வந்தாச்சு.. நீ என்னை விட நாலு வயசுக்கு இளமை தான். ஆனால் உனக்கு கண்ணு புரையோடிப் போச்சாம்.. ஆப்பரேசனே பண்ணனும்னு சொல்லி இருக்காங்களாமே" முதியவர் இருவரும் வார்த்தை விளையாட்டை ஆரம்பித்து வைத்தார்கள். இடையில் அனைவருக்கும் காப்பி வந்தது. குடித்துக் கொண்டே பேச்சை வளர்த்தார்கள்.



"அதான் உங்களுக்கே தெரிஞ்சிருக்கே. எனக்கு தான் இங்கே நடக்கிறது எதுவும் தெரியறதில்ல.



"சுந்தரம் தான் சொன்னான், வாரா வாரம் இங்கே வந்து போறானே. அதுக்கு தான் மெட்ராஸ் வந்திருக்கியா? துணைக்கு ஆள் வேண்டாமா? சுந்தரம் ஒரு சின்ன அக்கணத்தில தானே தங்கி இருக்கானாம். நீ எப்படி அங்க இருக்க முடியும்? நம்ம வீடு தான் இவ்வளவு பெருசா இருக்கே.. இங்கேயே தங்கிக்கலாம். என்ன கேசவா?"



வழக்கம் போல அவரே முடிவு சொல்லி விட்டு மகனைக் கேள்வி கேட்டால் அவர் என்ன செய்வார்.



"நீங்க சொன்னா சரி தாம்மா" என்று ஒத்து ஊதினார். தாய், மகன் இருவருமே செண்பகம் அப்போது தான் ஊரிலிருந்து வந்ததாக நினைத்துப் பேசிக்கொண்டிருக்க, வந்த வேலை முடிந்து ஊருக்குத் திரும்புகிறேன் என்பதை எப்படிச் சொல்வது என்று செண்பகம் கையைப் பிசைந்தார்.



"என்ன ஆச்சு செண்பகம்? இங்கே தங்கறதுல உனக்கு ஏதாவது பிரச்சனையா?"



"அதெல்லாம் ஒன்னும் இல்லை மதினி. நான் சொல்ல வந்ததே வேற. எப்படிச் சொல்றதுன்னு தான் தயக்கமா இருக்கு‌ நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க கூடாது ‌.."



"வாயால தான் சொல்லணும்.. எதுவானாலும் சொல்லு.. நான் தப்பா நினைக்க மாட்டேன்.."



"அது வந்து… நான் இங்கே வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. ஆப்பரேசன் கூட முடிஞ்சது. இரண்டு நாள்ல ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களை ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு.. " வாக்கியத்தை முடிக்க முடியாமல் செண்பகம் திணற, ரகுவரன் பாட்டியின் இந்த பரிமாணத்தை சுவாரசியமாக வேடிக்கை பார்த்தான்.



'அட.. நம்ம செம்பாவா இது.. இவங்களுக்கு இப்படி பணிவா பேசக் கூடத் தெரியுமா?' என்று மனதுக்குள் வியந்து போனான்.



ராஜம்மாள், கேசவனைப் பார்க்க அவரும் தனக்கு எதுவும் தெரியாது என்பது போலத் தலையசைத்தார்.

"ஹூம்.. போனதைப் பேசி என்ன ஆகப் போகுது. எப்படியோ சொந்தம் இங்கே இருக்கோம்னு ஞாபகத்தில வச்சு பார்க்க வந்தியே.. இன்னைக்கு இங்க சாப்பிட்டு தான் போகணும்" என்றவர் அப்போது தான் பார்ப்பது போல ரகுவரனைப் பார்த்தார்.



செண்பகத்துடன் பார்த்த போதே அவன் யாரென்று யூகித்திருந்தார், ஆனாலும் ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தார். இவரது பார்வையை உணர்ந்த செண்பகம் பேச ஆரம்பிக்கும் முன்பே கேசவன் அவனைத் தாய்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.



"என்னம்மா! என்ன இப்படி பாக்குறீங்க? தம்பி தான் ரகுவரன், நம்ம சுந்தரத்தோட மூத்த மகன். இன்ஜினியருக்கு படிச்சிட்டு இங்கே தான் பெரிய வேலைல இருக்கான். நல்ல பொறுப்பான பையன். எல்லாரையும் அரவணைச்சுப் போற குணம்."



நல்ல அறிமுகம் தான். எந்த ஒரு இளைஞனுக்கும் பெண்ணைப் பெற்றவரின் வாயில் இருந்து நல்ல வார்த்தைகள் வருவது என்பது பெரிய சர்டிபிகேட் வாங்கியது போலத் தான். இங்கே ரகுவரனுக்கு இன்னும் பெண்ணைப் பற்றித் தெரியாது என்றாலும் கேசவனைப் பெற்றவருக்கு மகனின் வாய்மொழி கேட்டு மயக்கம் வந்தது. அவ்வளவு எளிதாக யாரும் கேசவனிடம் நல்ல பெயர் வாங்கிவிட முடியாது.



தங்கள் வீட்டில் திருமண வயதில் ஒரு பெண் இருக்க, ராஜம்மாளின் பார்வை இப்போது ரகுவரனை நன்றாகவே ஆராய்ச்சி செய்தது. மாநிறமாக இருந்தாலும் படிப்பும் பதவியும் தந்த கம்பீரம் அவனை வசீகரனாகவே காட்டியது. நண்பனின் மகன் என்று ரகுவரனை ஒரேயடியாக பாராட்டி விட்ட கேசவன், மகளின் விஷயத்தில் வேறு மாதிரி என்று அவரைப் பெற்ற அன்னைக்கே புரியவில்லை என்றால் வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்.



ராஜம்மாளின் மருமகளும் கேசவனின் தர்மபத்தினியுமான ருக்மணி, விருந்தினருக்கு காஃபி கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றவர், கணவரின் பேச்சைக் கேட்டு ஒரு நொடி நின்று நிதானமாக ரகுவரனைப் பார்த்தார். இந்த மாதிரி ஆராய்ச்சி பார்வைகளை எல்லாம் அவன இன்னும் பழகவில்லை என்பதால் ரகுவரனுக்கு முள் மேல் அமர்ந்திருப்பது போன்ற அவஸ்தையாக இருந்தது. கையில் இருந்த காஃபியைக் குடிக்க முடியாமல் திணறினான்.



அவனைப் பார்த்து திருப்தி அடைந்தவராக ராஜம்மாள் சில மனக்கணக்குகளைப் போட்டார். பிறகு ரகுவரனை கேள்வி கேட்க ஆரம்பித்தார்.



"என்ன தம்பி? நீயும் மெட்ராஸ்ல தான் இருக்கியா? அப்போ தனியா வீடு பார்த்து இருக்க வேண்டியது தானே. எதுக்கு இப்படி நீ ஒரு பக்கம், உங்க அப்பா ஒரு பக்கம், தம்பிங்க ஒரு பக்கம்னு இருக்கணும்? இத்தனை நாள் போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது சேர்ந்து இருக்கலாமே. நாளைப் பின்ன கல்யாணம் காட்சின்னு வரும் போது, இப்படி தனித்தனியா இருந்தா நல்லா இருக்குமா?"



“யாருக்கு மாப்பிள்ளை யாரோ..

அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ?”



அந்த நேரத்தில் ஜானகி கையில் சிற்றுண்டியுடன், அவளது வழக்கம் போல பாடிக் கொண்டே வந்தாள். பாடிய பாடல் சூழ்நிலைக்குப் பொருந்திப் போக, அங்கே இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கேசவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. செண்பகத்தின் பார்வையில் ஓர் ஆராய்ச்சி இருந்தது. ரகுவரனோ ஏதோ ஒரு ஏகாந்த லோகத்திற்குச் சென்றுவிட்டான். இங்கே ஏற்பட்ட பார்வை மாற்றங்களை உணராமல், தலையைக் குனிந்து கொண்டே வந்த ஜானகி முதலில் செண்பகத்திடம் தட்டை நீட்டினாள். அடுத்து அமர்ந்திருந்தவர் யாரென்று அறியாமலே திரும்பியவளின் காதுகளில் "வாவ் வாட் எ பியூட்டி?" என்று வார்த்தைகள் கேட்டு அவளைத் திடுக்கிட்டு நிமிர வைத்தது.



ரகுவரனைப் போன்ற இளைஞனை அங்கே அந்த நேரத்தில் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. "சுந்தரம் அண்ணனோட அம்மா வந்திருக்காங்க. நான் காஃபியைக் கொண்டு போய் கொடுக்கிறேன், நீ இந்த போண்டாவ எடுத்துட்டு வா" என்று அவளுக்கு உத்தரவிட்டுச் சென்ற ருக்மணிக்கும் ரகுவரனின் வரவு தெரியாது. ஜானகியும் சுந்தரம் தான் தாயுடன் வந்திருக்கிறார் என்று தைரியமாக வெளியே வந்து விட்டாள். இப்போது அந்த இடத்தில் ரகுவரனைக் கண்டதும் அவளது பார்வை பயத்துடன் தந்தையைப் பார்த்தது. அதில் தெரிந்த கோபம் அவளை அங்கிருந்து உடனே நகர வைத்தது.



பாட்டியின் அருகில் அமர்ந்திருந்த ரகுவரனின் வாய் காஃபியைக் குடித்துக் கொண்டே ராஜம்மாளிடம் பேசிக்கொண்டிருக்க, பார்வையோ ஜானகியைத் தொடர்ந்தது.



"போச்சு.. போச்சு.. இன்னைக்கு எனக்கு சரியான மண்டகப்படி காத்திருக்கு. உனக்கு நல்லா வேணும்டி ஜானூ" என்று அடுப்படியில் நின்று தனக்குள் புலம்பியவளின் மனதில் ரகுவரனின் பிம்பம் தோன்றி ஏதோ செய்தது. 'யார் அவன், ஒற்றைப் பார்வையில் என் உள்ளம் புகுந்தவன்?' என்று தனது எண்ணம் போன போக்கை அறிந்து பதறினாள்.



ஆனாலும் முதல் முறையாக ஜானகியின் மனம் தனக்கு அவன் வேண்டும் என்று ஆசைப்பட்டது.

அவள் ஆசைப்பட்ட எதுவும் கிடைக்காது என்பது தெரிந்த நாள் முதல் ஆசைப்படுவதையே நிறுத்தி இருந்தாள். இன்று.. அந்த உறுதியை ஆசை வென்றது.



எந்த முன்னேற்பாடும் செய்யாமலே அங்கே ஒரு பெண் பார்க்கும் படலம் நடந்தேறியது. இவள் தான் தனக்கானவள் என்று நொடியில் தீர்மானம் செய்து விட்ட ரகுவரன், தனது விருப்பத்தை உடனே செயல்படுத்த விரும்பிப் பாட்டியிடம் பகிர்ந்து கொண்டான்.



"டேய்! ராகவா! வந்த இடத்தில் என்னதிது? கொஞ்சம் வாயை மூடறியா? இதெல்லாம் பெரியவங்க பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்" என்று பல்லைக் கடித்த பாட்டியைக் கண்டுகொள்ளாமல் தான் பேச நினைத்ததைச் சத்தமாகவே பேசினான் ரகுவரன்.



அவன் பேசப் பேச ஜானகியின் தந்தை கேசவனின் முகத்தில் கோபம் ஏறிக்கொண்டே போனது. ரகுவரனின் இடத்தில் வேறு யார் பேசி இருந்தாலும் கேசவனின் வாய்க்கு முன்னால் கை பதில் பேசியிருக்கும். எதிரில் இருப்பவன் எதிரி அல்ல, நண்பனின் மகன் என்று தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார் அவர்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom