• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 8

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 8



சியாமளா இறந்து ஐந்து வருடங்கள் வரையில் அவளுக்கு முறையாக திதி என்று எதுவும் கொடுக்கவே இல்லை. நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவள் திடீரென இறந்து விட்டதாகச் சொன்னதை ஊருக்குள் சிலர் நம்பவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சந்தேகம் எழுப்பிய போது சுந்தரத்தின் தம்பிகள், "அவங்களுக்கு ஏற்கனவே உடம்பு பூராவும் வியாதி இருந்ததுங்க. இல்லேன்னா அவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணை இங்கே கொடுப்பாங்களா?" என்று காரணம் சொல்லி அவர்களது வாயை மூடி வைத்தனர்.



சுந்தரம் தம்பிகள் பேசிய எதற்கும் மறுத்துப் பேசவில்லை. மனைவியை வழியனுப்பிய கையோடு வழக்கம் போல கிளம்பி விட்டார். பெற்ற பிள்ளைகளைப் பற்றிய நினைவு அவருக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. சுந்தரத்தின் தாய் செயலுடன் இருந்ததால் தாயில்லாப் பிள்ளைகள் வளர்ந்தார்கள். துறுதுறுப்பான ரகுவரனைத் தாயின் இழப்பு முடக்கியது. கைக்குழந்தையாக இருந்த தம்பி பாலுக்காகக் கதறிய போதெல்லாம் தாயாய் தாங்கினான் அவன்.



பள்ளியில் அவனது ஆசிரியர்கள் அவனை நன்கு வழிநடத்த, நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று வெறியுடன் படித்தான். அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சுந்தரம் கடைசிப் பிள்ளையை மட்டும் தூக்கிக் கொஞ்சுவார். மற்ற இருவரும் சியாமளாவின் சாயலில் இருந்தது தான் காரணம். நாட்கள் வேகமாக நகர, வீட்டில் ஒரு புதிய வரவாகக் கடைசி சித்தியின் ஒன்று விட்ட தங்கை, வள்ளி வந்து சேர்ந்தாள்.



சியாமளா இருக்கும் போதும் அவள் வருவாள், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சுந்தரம் ஊருக்கு வரும் நாட்களில் எல்லாம் வருவாள். அவளது கண்கள் சுந்தரத்தையே வட்டமிடும். தனது பெயருக்கு ஏற்றாற்போல் சுந்தரமாகவே இருந்த சுந்தரம் அவளது பார்வைக்கு பதில் பார்வை கொடுத்ததில்லை என்றாலும் அவளது பார்வையில் அவருக்கு ஒரு மயக்கம் வந்தது நிஜம்.



சியாமளாவின் மறைவுக்குப் பின் அவளது அக்கறை கைக்குழந்தையிடம்

வெளிப்பட்டது. அவளிடம் தாய்மையை உணர ஆரம்பித்த குழந்தையும் அவளைத் தேட ஆரம்பித்தது. ரகுவரனின் முதல் தம்பி, அந்த நாலு வயதுக் குழந்தையும் அவளிடம் ஒட்டிக் கொண்டது. ரகுவரன் தான் தாயை மறக்க முடியாது திணறிப் போனான். நினைத்தது பலித்தது என்று சுந்தரத்தின் தம்பிகள் அண்ணனிடம் தூது செல்ல ஆரம்பித்தார்கள்.



முப்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த சுந்தரமும் தனக்கொரு துணை தேவை என்று முடிவு செய்திருந்தார். வயது வந்த மகனிடம் பேச வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. இதனூடே யார் செய்த பாவமோ சுந்தரத்தின் தம்பிகளுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் ஒன்று உடல் ஊனமாக இருந்தன, இல்லை மனம் ஊனமுற்றவராக இருந்தன.



என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்து சியாமளாவின் ஆத்மா தான் காரணம் என்று முடிவு செய்து அவளுக்கு திதி கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.



உயிருடன் இருக்கும் போதே அவள் சுந்தரத்துக்கு வேண்டாத மனைவி, வீட்டுக்கு வேண்டாத மருமகள்.. சம்பளம் இல்லாமல் ஒரு வேலைக்காரி. அதுவும் மற்றவருக்கு தனது சொத்தையும் கொடுத்து உழைப்பையும் கொடுத்து ஓடாய்த் தேய்ந்தவள். அவளைப் பற்றிய அக்கறை கட்டிய கணவனுக்கே இல்லை எனும் போது மற்றவருக்கு என்ன?



இதோ இப்போது திதி கொடுத்த கையோடு மகனிடம் பேசிக் கொண்டிருந்தார் சுந்தரம்.



"ராகவா! நான் சொன்னதை யோசிச்சு பாத்தியா? எதுவுமே சொல்லாமல் இருந்தால் எப்படி?"



"என் கிட்ட எதுக்கு கேட்கிறீங்கப்பா. உங்களுக்கு ஒரு மனைவி தேவைன்னு நீங்க நினைச்சா தப்பில்லை தான். ஆனால் நேத்து வரைக்கும் நான் அக்கான்னு கூப்பிட்டு இருந்தவங்களை அம்மான்னு கூப்பிட முடியாது. எனக்கு வேறு யாரும் எங்க அம்மா ஆகிட முடியாது. நான் நிறைய படிக்கணும், என்னை விடுதியில் சேர்த்துடுங்க. திருச்சி கல்லூரில இடம் வாங்கித் தர முடியும்னு எங்க ஹெட் மாஸ்டர் சொல்லி இருக்காங்க. பியூசி முடிச்சிட்டு, மேலே படிக்கிறேன். நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க" என்று தனது நிலைப்பாட்டை தெளிவாக உரைத்த மூத்த மகனை ஆச்சரியமாக பார்த்தார் சுந்தரம்.



பதினாறு வயதில் இத்தனை முதிர்ச்சியை அவரது மகனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை. அது மகனது தவறில்லையே.. மகன் மனதளவில் வெகு தூரம் சென்று விட்டான் என்பது அவருக்குத் தெரியாமல் இல்லை. இனிமேலாவது அவனிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்க, மகன் தள்ளிப் போகவே விரும்பினான்.



"ஹூம்.. சரிப்பா.. உன் இஷ்டப்படியே படி. என்னால சில விஷயங்களை இப்போ உன் கிட்ட சொல்ல முடியாது. பின்னாடி என்னைக்காவது சொல்ல முயற்சி செய்யறேன்." மகனுடன் புதிதாகப் பேசிய சுந்தரத்துக்கு பேச்சை வளர்க்கத் தெரியவில்லை. அதன் பிறகு சுந்தரத்தின் இரண்டாம் திருமணம் வள்ளியோடு நடந்தது. ரகுவரனின் கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.



வள்ளியுடன் நடந்த திருமணத்தில் குழந்தைகள் ஏதும் இல்லை. அதன் காரணம் அவருக்கு மெதுவாகவே தெரிந்தது. மனம் வெறுத்த நிலையில் தம்பிகளிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். வள்ளிக்கு பிறவியிலேயே கருப்பை இல்லை என்ற விஷயம் தன்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் தெரியும் என்றறிந்த போது சுந்தரத்தின் மனம் அடைந்த வேதனையை வார்த்தைகளில் சொல்ல முடியாது.



தனது கவனத்தை பிள்ளைகளின் மேல் திருப்பினார். முன் போல இல்லாமல் சுந்தரம் அடிக்கடி ரகுவரனை வந்து பார்த்தார். தந்தை மகன் உறவில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது. வயதின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் வேறு சில பழக்கங்களைப் பழக ஆரம்பித்தார் சுந்தரம்.



காலம் யாருக்கும் காத்திராமல் ஓட, பி.ஈ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த ரகுவரன் வேலை தேடி மெட்ராஸ் வந்து சேர்ந்தான். ஒரு கம்பெனியில் தற்காலிகமாக வேலை பார்த்துக் கொண்டே வேலைக்காக பல நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்க ஆரம்பித்தான்.



கடினமான உழைப்பு கை மேல் பலன் கொடுக்க, அடுத்து என்ன செய்வது என்று தந்தையின் ஆலோசனை வேண்டி நின்றான்.



"அப்பா! இங்கே பாருங்க. எனக்கு இந்த இரண்டு இடத்திலயும் வேலை கிடைச்சிருக்கு. எங்க சேரலாம்னு சொல்லுங்க"



"வெரி குட் ராகவா!" என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சுந்தரம் எந்த ஊரில் வேலை கிடைக்கும் என்று விசாரித்தார்.



"இது இரண்டுக்குமே மெட்ராஸ்லயே இடம் கிடைக்கும். கேட்டு பார்க்கலாம் பா" என்ற ரகுவரன் வேலை செய்ய தேர்ந்தெடுத்தது அசோக் லேலண்ட் நிறுவனம்.



வேலைக்குச் சேர்ந்து முதல் மாதம் சம்பளம் வாங்கிய பின் சொந்த ஊருக்குப் பயணமானான். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு சென்றவன் வீடிருந்த நிலை கண்டு நொந்து போனான்.



********

"குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

குறையொன்றுமில்லை கண்ணா!"



அந்த அதிகாலை நேரத்தில் அந்த குரலில் இருந்த தெய்வீகம் இசையை ரசிக்கத் தெரிந்த யாரையும் ஈர்க்கும். ஆனால் அந்த வீட்டில் இசையை ரசிக்கும் மனிதர்கள் இருந்தாலும் இந்த குரலை ரசிப்பதற்குத் தான் ஒரு ஜீவனும் இல்லை. ஆனால் அந்த குரலின் சொந்தக்காரிக்கு அதைப் பற்றி எல்லாம் என்றுமே அக்கறை இருந்ததே இல்லை. விழித்திருக்கும் நேரம் எல்லாம் அவளுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். எந்த வேலையானாலும் இஷ்டப்பட்டு செய்பவள் ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது என்பதை அறிந்தவள் போல அவளின் வேலையின் ஊடே பாட்டும் வரும்.



இதோ இப்போது கூட வீட்டில் சுற்று வேலை செய்யும் வேலையால் வரவில்லை என்பதால் அவனது வேலை இவள் தலையில் விடிந்திருக்கிறது. வீட்டாரின் தேவைக்கென நல்ல ஜாதி பசுமாடுகள் இரண்டு இருந்தது. வழக்கமாகப் பால் கறக்கும் குமரனைத் தவிர மற்ற யாரும் அவற்றின் அருகே நெருங்கி விட கூட முடியாது. எதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு என்பது போல அங்கே ஜானகி எல்லாவற்றிற்கும் விதிவிலக்காக இருந்தாள்.



வழக்கம்போல அன்றும் காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்தவள், பத்து நிமிடத்தில் காலைக்கடன்களை முடித்து விட்டு நேராக முற்றத்தில் இருந்த மாடுகளிடம் வந்தாள். அங்கே இருந்த சாணியை பெரிய வாளி நிறைய இருந்த தண்ணீரில் கரைத்து, தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வாசலுக்குச் சென்றாள்.



அந்த பெரிய வாசலை ஒரு நூலிழை அளவு கூட விட்டு விடாமல் கவனமாகத் தெளித்தாள். தெருவிளக்குகள் மின்மினிப் பூச்சி போல விட்டு விட்டு எரிந்து கொண்டிருக்க அந்த இருட்டில் மிகவும் கஷ்டமான வேலை தான். ஆனால் என்ன செய்வது? ராஜம்மாள், அந்த வீட்டின் எஜமானி, அதாவது அவளது பாட்டி வந்து பார்க்கும் போது தரையில் எங்காவது ஒரு துளி வித்தியாசம் தெரிந்தால் அன்று முழுவதும் அவளுக்கு லட்சார்ச்சனை அல்ல கோடி அர்ச்சனையே நடக்கும்.

அதற்காகக் கவலைப் படுபவள் அல்ல என்றாலும் பாட்டியின் வாய் வலிக்குமே என்ற அக்கறையில் (!?) ஜானகி நின்று நிதானமாகவே வாசலைத் தெளிப்பாள்.



தெளிப்பது மட்டுமல்லாமல் கோலம் போடுவதும் அவளது வேலைதான். நம் வீடுதானே என்று அவளாக ஒரு கோலத்தை முடிவு செய்துவிட முடியாது அதையும் ராஜம்மாள் தான் முடிவு செய்வார். கெட்டதிலும் ஒரு நல்லதாக முந்தைய தினமே அவர் கோலத்தை சொல்லி விடுவதால் காலையில் ஜானகிக்கு அந்த நேரம் மிச்சமாகிவிடும். செவ்வாய் வெள்ளி மற்றும் பண்டிகை நாட்களில் கோலம் மட்டுமல்லாது கூடுதல் வேலையாக அதைச் சுற்றி செம்மண் வேறு இட வேண்டும். அதுவும் முழு நேரமும் குனிந்து நிமிர்ந்து தான் கோலம் போட வேண்டும். இடுப்பு வலிக்கிறதே என்று குத்துக்காலிட்டு அமர்ந்து விடமுடியாது.



"அதென்ன இந்த வயசில பொம்பளை பிள்ளைக்கு உடம்பு வணங்க மாட்டேங்குது. இத்துனூன்டு கோலம் போடவே இடுப்பு நோகுதுன்னா அப்புறம் பிள்ளைப்பேறெல்லாம் எப்படித் தாங்கறது?" அதிகார குரலில் அதட்டலாகச் சொன்னாலும் பாட்டியின் குரலில் வெளிப்படும் அக்கறை அவளை மறுவார்த்தை இல்லாமல் செய்துவிடும்.



இன்று வெள்ளிக்கிழமை, ஒரு வழியாகக் கோலம் போட்டு செம்மண் இட்டு எழுந்து நின்ற போது இடுப்பு கழண்டுவிடும் போல இருந்தது. இன்று கட்டாயம் வெந்நீரில் தான் குளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவள் வீட்டினுள் நுழைந்த போது அவளது தாய் கையைப் பிசைந்து கொண்டு மாமியாரின் முன் நின்று கொண்டிருந்தார். பாட்டியின் முகத்தைப் பார்த்தால் இன்றைய மொத்த சமையலுக்கான கடுகைத் தாளித்து விடலாம் போல இருந்தது. இந்நேரம் பாட்டி ரசித்து ருசித்து காப்பி குடிக்கும் நேரம் ஆயிற்றே, கோபமெல்லாம் வரக்கூடாதே என்று யோசனையுடன் அருகில் சென்றாள் ஜானகி.



"இந்தா ஆடி அசைஞ்சு கோலம் போட்டு வர்றா பாரு உன் சீமந்த புத்திரி. வீட்டுக்கு மூத்தவளா லட்சணமா வீட்டுல என்ன நடக்குதுன்னு பொறுப்பா ஒரு கண்ணு வச்சிருந்தா பரவாயில்லை. இதுக்குத் தான் மூத்தது பையனா இருக்கணும்னு சொல்றது, இவளுக்கு ஒவ்வொண்ணையும் சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள அடுத்த வீட்டுக்குப் போயிடுவா. நாம தான் அல்லாடணும்."



சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்த பாட்டியை வழக்கம் போல ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தாள் ஜானகி. இதே வாய், "சமர்த்தி என்ன பெத்தா? தலைச்சன் பொண்ணு பெத்தா" என்று மருமகளைப் பாராட்டிய தருணங்கள் பல உண்டு. அதை நினைத்துச் சிரித்தவள், "எதுக்கு அம்மாவைத் திட்டுறீங்க பாட்டி? எனக்கு பொறுப்பில்லைன்னு உங்களுக்குத் தான் தெரியுமே. தினம் ஒரு தடவையாவது சொல்லலேன்னா என்ன? இப்போ என்ன வேலை என் தலைல விழப்போகுது, அதை மட்டும் சொல்லுங்க" என்றாள் சற்றே அழுத்தமாக.



"இந்த குமரேசனுக்கு திடீர்னு வெளியூர் போற வேலை வந்துடுச்சாம். நேர்ல கூட வர முடியாம ஆள் அனுப்பி இருக்கான். என்ன வேலையோ, அவன் திரும்பி வர எத்தனை நாள் ஆகுமோ? அது வரைக்கும் யார் பால் கறக்கறது? யார் தண்ணி இறைக்கிறது? போனவன் வேற ஆள் ஏற்பாடு பண்ணிட்டு போயிருந்தால் தேவலாம். இப்போ எங்க போய் யாரைக் கேட்கிறது? இதெல்லாம் உங்க அப்பனுக்கு தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் தையா தக்கான்னு குதிப்பான்."



"ஆமா… இது இல்லேன்னா உங்க மகனுக்கு குதிக்கவே தெரியாது.. இன்னைக்கு அல்வா மாதிரி ஒரு சாக்கு கிடைச்சிருக்கு அவருக்கு… விட்டுருவாரா" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு நின்ற பேத்தியைக் கண்டிப்புடன் பார்த்தார் ராஜம்மாள்.



"எது இருக்கோ இல்லையோ நல்லா வாய் பேச கத்து வச்சிருக்க. என் மகன் வெளியே போய் மாடா உழைச்சுக் கொண்டு வர்ற காசுல தானே நீங்க இந்த ஆட்டம் ஆடுறீங்க? அலுப்புல அவன் கொஞ்சம் பேசிட்டா உங்களுக்கு ஆகாதே"



ஏதோ ஜானகியும் அவளது தாயும் மட்டுமே அந்த வீட்டில் இருப்பது போலவும், ராஜம்மாளின் மகனுக்கும் இவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போலவும் பேசி வைத்தார் அவர். ஜானகியைப் பெற்றவள் வழக்கம் போல வாய்க்குப் பூட்டு போட்டிருக்க, பேச வந்த மகளையும் கைபிடித்து தடுத்து விட்டார்.



"சரி.. சரி… கேசவன் எழுந்திருக்க நேரம் ஆச்சு. மசமசன்னு நிக்காம சீக்கிரம் போய் பாலைக் கறந்து வை. அந்த மாடு இரண்டும் உனக்கு தான் அடங்கும்.. போ.. போ.. நீ என்ன வேடிக்கை பார்க்கிற? டிகாஷனைப் போட்டு வை" என்று பேத்திக்கும் மருமகளுக்கும் ஒரே நேரத்தில் உத்தரவுகளைப் பிறப்பித்தவர் தண்ணீர் இறைக்க என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.



அந்த வீட்டில் கேசவனும் அவரது நான்கு தம்பிகளும் குடும்பத்துடன் வசிக்கின்றனர். ஆளாளுக்கு வஞ்சனை இல்லாமல் பிள்ளைகளைப் பெற்று வைத்திருந்தனர். ஆக மொத்தம் அந்த வீட்டின் நிரந்தர பிரஜைகளின் எண்ணிக்கை நாற்பதைத் தொட்டது. இதில் நல்ல நாள் கிழமை என்று கேசவனின் இரண்டு சகோதரிகளின் குடும்பங்கள் வந்து விட்டால் அந்த எண்ணிக்கை எளிதாக ஐம்பதைத் தாண்டும்.



எழுபது வயது ராஜம்மாளில் ஆரம்பித்து ஆறு மாதக் குழந்தை வரை அதில் அடக்கம். கேசவன் அந்த காலத்து பியூசி படித்தவர். ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளராக இருக்கிறார். அரைக்காசு சம்பளம் ஆனாலும் கவர்மென்ட் சம்பளம் வாங்குபவர். அவரது தம்பிகள் எல்லாம் பள்ளிப் படிப்பை கஷ்டப்பட்டு முடித்துவிட்டு ஏதோவொரு கம்பெனியில் குமாஸ்தா வேலையில் இருந்தார்கள்.



அவர்கள் குடியிருந்த வீடு கேசவனின் சுய சம்பாத்தியம். சென்னையில் இரண்டு மனை அளவில் பெரிய வீடு, அவரது சம்பளத்தில் எப்படி சாத்தியம் என்று ஜானகி பலமுறை யோசித்ததுண்டு. ஆனால் கேசவனின் முரட்டு முன்கோபம் அதற்கு மேல் அவளை ஆராய விடவில்லை. அதுவும் இல்லாமல் கேசவன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும்

பொறுப்பான குடும்பத் தலைவர். ஏதோ ஒரு ஜோசியர் சொன்னதை நம்பி ஜானகியைத் தள்ளி வைத்திருந்தார். மற்றவர்களுக்கு பிரியமான தந்தை தான்.



கேசவன் தம்பதியருக்கு ஐந்து பெண்களும் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்தனர். ஜானகி தான் அனைவருக்கும் மூத்தவள். படிப்பு, பாட்டு கைவேலை என்று அனைத்திலும் சிறந்து விளங்கியவள். ஆனால், அந்த கால உலக வழக்கப்படி வயதுக்கு வந்த பிறகு வீட்டோடு அடைக்கப்பட்டவள். அப்போதும் படிக்கத் தான் வழியில்லையே தவிர பாட்டையும் மற்ற கலைகளையும் அவள் விட்டுவிடவில்லை.



மற்ற பெண்மக்கள் வளர்ந்த போது காலம் சற்றே மாறிப் போக அவர்களது படிப்புக்கு தடையேதும் இருக்கவில்லை. இருபத்திரெண்டு வயதை நெருங்கும் ஜானகியின் அழகு யாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். அவள் செய்யும் வேலைகளில் ஒரு நேர்த்தி இருக்கும். இப்படிப்பட்ட பெண்ணை மருமகளாக்க நினைத்தவர் பலர். ஆனால் கேசவன் அதற்குப் பெரும் தடையாக இருந்தார். அவளைப் பார்த்தாலே எரிந்து விழுவார், அவளுக்கு நினைவு தெரிந்த நாளாய் அவளது பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. சனியனே, மூதேவி, தரித்திரம் என்று பல பெயர்களில் அழைப்பார்.



இன்றும் அப்படி ஒரு அழைப்பை எதிர்பார்த்து, தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி. அவளது தம்பி தங்கைகள் அனைவருக்கும் அவள் தான் இறைக்க வேண்டும்.



"நான் ஒரு விளையாட்டு பொம்மையா.. ஜெகன் நாயகியே.. உமையே.. உந்தனுக்கு… " என்று உமையவளைக் கேள்வி கேட்டபடியே கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி.



அந்தப் பாடல் முடிந்த போது, "குறையொன்றுமில்லை… " என்று வாய் தன்னால் பாட ஆரம்பித்தது. ஏனோ அந்தப் பாடல் அவளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.



'ஓ.. உனக்கு ஒரு குறையும் இல்லையா! எல்லாமே குறையா இருக்கும் போதே இப்படி பாடுற, இதுல குறையே இல்லேன்னா என்னவெல்லாம் பண்ணுவியோ?' என்று கேலி செய்தது. தலைவிதியை நொந்தபடி அவள் தண்ணீர் தொட்டியைப் பார்க்க, அது பாதி கூட நிறையவில்லை.



கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இறைத்ததில் தோளில் இருந்து வலி எடுத்தது. உள்ளங்கைகள் சிவந்து எரிய ஆரம்பித்தது. சற்று இடைவெளி விடலாம் என்று நினைத்த போது, கேசவன் அங்கே வந்தார். சிரித்த முகத்துடன் மகனுடன் பேசிக்கொண்டு வந்தவரது முகம் இவளைப் பார்த்துதும் கோபத்தில் ஜொலித்தது.



"சே… எத்தனை சொன்னாலும் புத்தி இருக்கிறதில்லை.. சனியன்.. தரித்திரம்.. தரித்திரம்.. இன்னைக்கு நாள் விளங்கினாப்புல தான்.." இன்னும் வரிசையாக ஏதேதோ நல்வாழ்த்துகள் வந்து விழுந்தது. அவற்றை கேட்க ஜானகி அங்கே நிற்கவில்லை. பொங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று ஒரு மூலையில் யாரும் பார்க்காத வண்ணம் அமர்ந்து கொண்டாள்.



அந்த வீட்டைப் பொருத்தவரை கெட்ட விஷயம் என்று யாருக்கு எது நடந்தாலும் அதற்கு ஜானகியின் ஜாதகமே காரணம். அந்த ஜாதகம் அவளது புகுந்த வீட்டையும் தாக்கி விடும் என்ற காரணத்தால் சொந்தத்தில் பெண் கேட்டு வரும் வரன்களை எல்லாம் தட்டி விடும் வேலையை செவ்வனே செய்து வைத்தார் ஜானகியை பெற்றவர். இவ கெட்ட கேடுக்கு ஒரு ராஜகுமாரன் வருவான் என்று அவர் கோபப்பட்டதற்கு கேட்டது போல ஜானகியை தேடி ஒரு ராஜகுமாரன் வந்து சேர்ந்தான்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

eswari

Member
Joined
Jun 19, 2024
Messages
45
Kadantha kaalam romba kodumai 2 perukkum..athaan mudichchi pottuttaar kadavul. Arumaiyana pathivu sis 👍👍👍
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
இருவருக்குமே கடந்த காலம் கஷ்ட காலம் தான் அதான் பகவான் இருவருக்கும் முடிச்சு போட்டிருக்கார்
 
Top Bottom