• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 7

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
84
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 7

மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான் நீரஜ். ஜானகியின் நலத்தை விட ரகுவரனின் கவலையை விடத் தனது நிலை இப்போது கவலைக்கிடமாகத் தோன்றியது நீரஜூக்கு. முதல் நாள் இரவு ஆரம்பித்த டென்ஷன் காலையில் பாட்டியைப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்தொடங்கி இப்போது உச்சத்தை அடைந்திருந்தது. இடையில் ஜானகியின் நிலை பற்றி டாக்டர் கூறியதைக் கேட்டு கொஞ்சம் கீழே இறங்கிய அவனது டென்ஷன் பெற்றோரிடம் பேசிய பிறகு மீண்டும் ஏறத் தொடங்கி விட்டது.

ஒரு கான்பரன்ஸ்காக சிங்கப்பூர் வரை வந்தவனது டிராவல் பிளானில் தாத்தா பாட்டியை பார்ப்பதும் இருந்தது. வேலையை முடித்துவிட்டு சிங்கப்பூரை சுற்றி பார்த்துவிட்டு இந்தியா செல்லலாம் என்று நினைத்திருந்தான். அதன்படியே ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்து வைத்திருந்தான். டிசம்பர் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட ஒரு வாரம் நடைபெற்ற மருத்துவ கான்ஃபரன்ஸ் அது. பல்கி வரும் புதுப் புது வியாதிகளையும் அவற்றின் பின்விளைவுகளையும் கண்டறிய உதவுவது தான் அதன் முக்கிய நோக்கம்.

உலகெங்கிலும் இருந்து பல ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் கலந்து கொண்டு நுணுக்கமான விஷயங்களை பற்றிய அவர்களது ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமர்ப்பிக்க இருந்தார்கள். தனது ருமடாலஜி (rheumatology) துறையில் சில குறிப்பிட்ட பக்க விளைவுகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நீரஜூக்கு இந்த கான்ஃபரன்ஸ் மிகவும் பயனுள்ளதாக மாறிப் போக, கான்ஃபரன்ஸ் முடிந்ததும் அங்கேயே தங்கி தனது ஆய்வைத் தொடர்ந்தான்.

ஊர் சுற்றுவதையும் தனது இந்திய பயணத்தையும் ஒத்தி வைத்தவன் அது பற்றி பெற்றோருக்கு தகவல் கொடுக்கவும் மறக்கவில்லை. லண்டனில் இருந்து கிளம்பும் போதே தாயிடம் சொல்லி இருந்தான்.

இவனது ட்ராவல் ப்ளான் தெரிந்ததுமே மொபைலைக் கையில் எடுத்த ராஜராஜேஸ்வரியிடம் மொபைலைக் கைப்பற்றி முறைத்தான். இது விஷயமாக தாய்க்கும் மகனுக்கும் நீயா நானா என்று கோபிநாத்தை கூப்பிடும் அளவுக்கு விவாதம் நடந்தது இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ மகன்தான்.

"உடனே உங்க மாமியாருக்கு ஃபோன் பண்ணி உங்க பேரன் ஊருக்கு வரான்னு தண்டோரா போடணும் போல இருக்குமே. தேவையே இல்லை. நான் தான் உத்தம மருமகள்னு ப்ரூவ் பண்ணனும்னு உங்களுக்கு ஆசையாய் இருந்தால் வேற வழில ட்ரை பண்ணுங்க. என் விஷயத்தில வேண்டாம்."

"ம்ச்.. சொன்னா புரிஞ்சிக்கோ ராஜூ! வயசானவங்க இந்த மாதிரி சர்ப்ரைஸ் எல்லாம் தாங்க மாட்டாங்க‌. அவங்க ஹெல்த்துக்கும் நல்லதில்லை. இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க நான் அலோவ் பண்ண மாட்டேன்"

"மா.. ரகுத்தாத்தாவோட பவர அன்டர் எஸ்டிமேட் பண்ணாதீங்க. தப்பித் தவறி இதை அவர் கிட்ட சொல்லிடாதீங்க. ரிஸ்க் எடுக்கறதெல்லாம் அவருக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி.. ஹா.. ஹா.."

"Enough Neeraj.. சின்ன பையன் மாதிரி பிஹேவ் பண்ணாத. கொஞ்சமாவது பொறுப்பான டாக்டரா நடந்துக்கோ. நான் டென்டேடிவா ஒரு டேட் சொல்லி வைக்கிறேன். நான் சொல்ல கூடாதுன்னா நீயே அவங்க கிட்ட பேசு. அதுதான் எல்லாருக்கும் நல்லது. நீ பாட்டுக்கு சர்ப்ரைஸ் பண்றேன்னு போய் ஏதாவது பிரச்சனையாச்சுன்னா எல்லாருக்கும் கஷ்டம். எல்லாரும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு உனக்கே தெரியும் அதுக்கப்புறம் உன் இஷ்டம்"

"ஐ நோ மா! ஆனால் நான் வரேன்னு சொல்லி வச்சா அவங்க ஒரு எக்ஸ்பெக்டேஷனோடவே இருப்பாங்க. அதுவும் நல்லதில்லை தானே.. அது போக, நான் திடீர்னு போனால் தான் அங்க என்ன நடக்குதுன்னு தெரியும். நாம கூட இல்லேன்னா அந்த ஓல்டீஸ் இரண்டு பேரும் எந்த ரொட்டீனும் ஃபாலோ பண்ணாமல் இஷ்டத்துக்கு இருப்பாங்க. அதுவும் இந்த ஜானுவுக்கு கொஞ்சம் கூட தன் ஹெல்த் மேல அக்கறையே கிடையாது. அந்த சம்பிரதாயம், இந்த சாஸ்திரம்னு எதையாவது செஞ்சு உடம்பை விதம் விதமா கெடுத்துக்கறதுன்னு இருப்பாங்க. இதெல்லாம் செக் பண்ணனும்னா அப்பப்போ இந்த மாதிரி சர்ப்ரைஸ் விஸிட் கொடுக்கணும்"

"ஹூம்.. ஏதோ நீ சொல்ற பாயிண்ட் எல்லாம் சரியா இருக்கிறதால் அக்சப்ட் பண்ணிக்கிறேன். இப்பவும் என்னைக் கேட்டால், இந்த விஷயத்தில் நீ கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுன்னு தான் சொல்லுவேன். அட் லீஸ்ட் சிங்கப்பூர் போனதுக்கு அப்புறமாவது அவங்க கிட்ட அடுத்த வாரம் வருவேன்ற மாதிரி சொல்லிடு" என்று அந்தப் பேச்சை முடித்தார் ராஜராஜேஸ்வரி.

"That sounds good ma. Will do it" என்று அவனும் சிங்கப்பூர் சென்ற உடன் தாத்தாவுக்கு தன் வருகை பற்றிச் சொல்வதாக ஒத்துக் கொண்டான். ஆனால் சிங்கப்பூர் வந்ததும் கான்ஃபரன்ஸ் வேலைகள் இழுத்துக்கொள்ள, அது முடிந்ததும் சொல்லலாம் என்று நினைத்தவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பே கிடைக்கவில்லை.

கான்ஃபரன்ஸ் முடிந்ததும் சில டாக்டர்களின் அப்பாயின்மென்ட் கிடைக்க அதில் குஷியாகி மற்றதை மறந்து போனான். இத்தனைக்கும், அவன் எங்கே இருக்கிறான் என்று சொல்லாமலே தினமும் தாத்தா பாட்டியிடம் பேசிக்கொண்டு தான் இருந்தான். வழக்கமாக அவன் பேசும் நேரத்தில் கூப்பிடுவதால் அவர்களுக்கு இவனது பயணம் பற்றி எதுவும் தெரியாமல் போனது.

அன்றும் வழக்கமான விசாரணையாக ஆரம்பித்தது தான், வீடியோவில் பார்த்த ஜானகியின் முகமும் ரகுவரனின் வழக்கத்திற்கு மாறான நீண்ட பேச்சும் ஏதோ சரியில்லை என்று உணர்த்த, அவனை உடனே கிளம்ப வைத்திருந்தது. சீக்கிரம் அவர்களைப் பார்த்து விடவேண்டும் என்ற அவனது அவசரத்தில், அவர்களிடம் தனது பயணத்தைப் பற்றி சொல்லவே இல்லை என்று அவனுக்கு மறந்து போனது.

இருவரும் தனது வருகையை ஊகித்திருப்பார்கள் என்றாலும் அத்தனை சீக்கிரம் வருவான் என்று தெரிய வாய்ப்பில்லாமலே போனது. அதன் பிறகு அவன் யோசித்து முடிவெடுப்பதற்கான சூழ்நிலை இல்லை. அந்த நிலையில் அவன் செய்ததே சரி என்றாலும் ஜானகியின் விஷயத்தில் நீயாக எப்படி இப்படி ஒரு முடிவெடுக்கலாம் என்ற கேள்வி கட்டாயம் அவனை நோக்கி வரும். கூடவே இவன் சொல்லாமல் கொள்ளாமல் வந்த விஷயம் தெரிந்தால்…. என்ன நடக்கும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

"நான் சொல்லியும் கேட்காமல் சர்ப்ரைஸ் பண்ண நினைச்ச.. இப்போ என்ன ஆச்சு பாரு?" என்று அவனது தாயே கேட்கும் போது மற்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

யார் கேட்காவிட்டாலும் ஒரு நபரிடம் இருந்து அந்த கேள்வியை அவன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அதற்கான பதிலையும் தயாராகவே வைத்திருந்தான்.

அவனது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ஆறு கிலோமீட்டர் தூரத்தை நிதானமாக நாலு மணி நேரத்தில் கடந்து சாயங்காலம் ஆறு மணிவாக்கில் வந்து சேர்ந்த பைரவி, அதாவது.. ரகுவரனின் செல்ல புத்திரி, அவனது ப்ரியமான (???) அத்தை செய்த அலப்பறையைத் தாங்க முடியாமல் "வில் யூ ப்ளீஸ் ஷப் அப்?" என்று கத்தினான் நீரஜ்.

மருத்துவமனையில் இருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் கோபத்தில் கத்தியவனை ஒரு செவிலி வந்து கண்டிக்க, "ஸாரி சிஸ்டர்" என்று மன்னிப்பு கேட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான். ஆனால்

"ஏய்.. என்னடா ரொம்ப கத்தற? நான் உன் கூட பேசல, எங்க அப்பா கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ யாரு தேவையில்லாமல் எங்க பேச்சுல மூக்கை நுழைக்க? எல்லாம் எங்க அம்மா கொடுக்கிற இடம், அதான் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில படுக்க வச்சிருக்க."

பைரவி பேசப் பேச ரகுவரனின் முகத்தில் வந்த மாற்றங்களைக் கவனித்த நீரஜிற்கு வருத்தமாக இருந்தது. அத்தைக்கு பதில் கொடுக்க நினைத்தாலும் இருக்கும் இடம் கருதி மௌனம் காத்தான். ஆனால் அதற்கும் அவனது அத்தை பேசினாள்.

"என்ன தைரியம் உனக்கு? எங்க அப்பா கிட்ட பேச முடியாமல் அவர் மொபைலை நீ வாங்கி வச்சிருக்க. ஃபோன் பண்ணினாலும் பேச மாட்டேங்குற. அம்மா மொபைல ஆஃப் பண்ணி வச்சிருக்க. உள்ளூர்ல இருக்கிற எனக்கு லண்டன்ல இருந்து விஷயம் சொல்றாங்க. சாதாரண மயக்கமா இருக்கும்னு நினைச்சு இங்கே வந்தா, எங்க அம்மாவ வென்டிலேட்டர்ல வச்சிருக்காங்க. இது வரைக்கும் ஒரு காய்ச்சல்னு கூட அவங்க படுத்ததில்லை. அவங்களுக்கு ஏதாவது ஆகட்டும், அப்புறம் உன்னை என்ன செய்யறேன்னு பாரு."

'நீங்க பேசியே அவரைக் கொன்னுடுவீங்கன்னு தான் மொபைலை வாங்கி வச்சிருக்கேன். அட சாதாரண மயக்கத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரியில அட்மிஷனா, அதுவும் ஐசியுவில்? லண்டன்ல இருந்து விஷயம் சொன்னவங்க டீடெயில்ஸ் கொடுக்கலேன்னு நீங்க சொன்னா நம்பிட வேண்டியது தான். எதே.. ஜானுவுக்கு காய்ச்சல் கூட வந்ததில்லையா.. உங்க அம்மாவ என்னைக்காவது மனுஷியாக ட்ரீட் பண்ணி இருந்தா தெரியும்.. அது சரி.. எல்லாம் உங்க அப்பா கொடுத்த செல்லம்.. இப்போ அனுபவிக்கிறாரு'

அத்தனை பேச்சுக்கும் மனதுக்குள் கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்த நீரஜ், "லண்டன்ல இருக்கிற உங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல முடியுது. இங்கே இருக்கிற என் ஹஸ்பன்ட் கிட்ட சொல்ல முடியலை. விஷயம் சொல்லாமல் அவர் எப்படி இங்க வருவார்?" என்ற பைரவியின் வார்த்தைகளில் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு வாய்க்குள்ளே நிறுத்தினான்.

"ஓ.. அவர் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?" என்று கேட்க அவனது உதடுகள் துடித்தன. ஆனால் ரகுவரனின் மனநிலையை அறிந்தவனாக அமைதி காத்தான். வீட்டில் என்ன நடந்தாலும் மாப்பிள்ளைக்கு முறையாக செய்தியைச் சொல்லி நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று வீட்டில் அனைவரும் கெஞ்ச வேண்டும். அப்போது தான் அவர் சில நிமிடங்களேனும் அங்கே காட்சி தருவார். எல்லாம் ரகுவரன் மகளின் மேலிருந்த அலாதி பிரியத்தால் செய்து வைத்த கொடுமைகள். இப்போது அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது.

அவனைப் பொறுத்தவரை மிஸ்டர்.பைரவி ஒரு டம்மி பீஸ், ஆரம்ப காலத்தில் மாமனார் ரகுவரனால் அப்பாடக்கராக ஆக்கப்பட்டவர். இப்போது ரகுவரனே ஆசைப்பட்டாலும் அவரது மாப்பிள்ளை தனது கெத்தை விட்டு விடத் தயாராக இல்லை. ஒவ்வொரு முறையும் பைரவி ஆரம்பித்து வைப்பாள், பிறகு அவளது சித்திகள், சித்தப்பாக்கள், மாமாக்கள், மாமிகள் என்று வரிசையில் வந்து முறை என்று ஒன்று இருக்கிறது என்று அறிவுரை சொல்வார்கள். வீட்டில் பிறந்த பெண் கண்ணீர் விட்டால் வீடு விளங்காது என்று ஒருமித்த தீர்ப்பு ஒன்றை வழங்கிவிடுவார்கள்.

தனது கையால் தன் கண்களை குத்திக் கொண்டு, காலம் கடந்து ஞானோதயம் வந்து என்ன செய்வது? ரகுவரனின் நிலை இப்போது அப்படித்தான் இருந்தது. தனது அன்னையே மகளாக வந்துவிட்டாள் என்று அவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த பாசத்திற்கான தகுதியை மகள் இழந்து விட்டாள் என்று தெரிந்தும் அவரால் மகளை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

ஆனால் இப்போது மனைவியா மகளா என்ற கேள்வி அவரை மகளிடம் இருந்து தள்ளியே வைத்தது. அதுவும், இப்போது அவள் வந்ததில் இருந்து ஜானகியைப் பார்க்கவோ அவரது நிலை பற்றி அறியவோ ஆர்வம் காட்டவே இல்லை. மகளைப் பார்த்ததும், "இப்படி வென்டிலேட்டர்ல வைக்கிற அளவுக்கு அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு எனக்குத் தெரியவே இல்லையேம்மா.. நான் என்ன செய்வேன்" என்று தனது துக்கத்தை பகிர்ந்து கொண்ட ரகுவரனிடம் பேசினாளே ஒரு பேச்சு.

"அப்பா! ஒரு வேளை அம்மாவுக்கு ஏதாவது ஆகிட்டா அவங்களோட நகை எல்லாம் எனக்குத் தான் தரணும். வேற யாருக்கும் அதுல ரைட்ஸ் கிடையாது சொல்லிட்டேன்"

அந்தப் பேச்சு ஒன்றே ரகுவரனிடம் இருந்து அவளை வெகு தூரத்தில் தள்ளி வைத்தது. சாதாரணமாகவே அத்தையின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லாத நீரஜ், இப்போது 'நீயெல்லாம்.. என்ன மனுஷி?' என்று வெறுத்துப் போனான்.

அதற்கு மேல் அவள் பேசிய எதற்கும் அவர்கள் இருவரிடமும் எந்த எதிரொலியும் இல்லாமல் போக, மனம் போன போக்கில் கத்திவிட்டு வந்த காரியத்தை கூட செய்யாமல் கிளம்பி விட்டாள் பைரவி.

மகளது பேச்சு தந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார் ரகுவரன். அதைக் கண்ட நீரஜ் அவரது மனநிலையை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட்டான்.

"தாத்தா! வாங்க, நாம போய் ஜானு கிட்ட பேசிட்டு வருவோம். எவ்வளவு நேரம் தான் தூங்குவாங்க. நீங்களே வந்து உங்க பொண்டாட்டிய எழுப்பி விடுங்க.. சீக்கிரம் வாங்க.. நாளைக்கு அவங்க செல்லப் புத்திரனும் ஆசை மருமகளும் வரும் போது இவங்க தூங்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?" என்று அவரை அழைத்துச் சென்றவன் பேச்சினூடே தனது பெற்றோரின் வருகையைச் சொல்லி விட்டான்.

"சந்துரு வரானா? இது தெரிஞ்சாலே ஜானு சீக்கிரம் எழுந்துடுவா" என்று சந்தோஷமாக கேட்டவர் மனைவி கண் விழிக்கக் காத்திருக்கலானார். இரவு உணவிற்கு பின் மீண்டும் ஒரு முறை ஜானகியைப் பார்த்து வந்தனர். லேட்டஸ்ட் மருத்துவ பரிசோதனைகள் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னாலும் ஜானகி இன்னும் கண்விழிக்கவில்லை. அன்றிரவு ரகுவரனின் மனதில் பழைய நினைவுகள் வந்து அலைமோதின.

அவற்றை அசைபோட்டபடி விடிய விடிய விழித்திருந்தார் ரகுவரன்.

*********

காவிரியின் கரையோரம், நல்ல வளமான பகுதியில் அமைந்த பசுமை கிராமம் அது. அந்த வருடம் வருண பகவான் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கியதில் மாசி மாதத்தில் கூட காவிரி கரைபுரண்டு ஓடியது. கரையோரத்தில் யாருக்கோ திதி கொடுப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.

கூடியிருந்த பெரியவர்கள் எல்லோரும் யாருக்கு வந்த விருந்தோ என்று ஆளுக்கொரு திசையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு சிறுவர்கள், பெரியவனுக்குப் பத்து வயதிருக்கலாம், சிறியவனுக்கு நான்கு இருக்கலாம், இருவரும் தனியாக நின்று கொண்டிருந்தனர். முகத்தில் எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பது போன்ற ஒரு பாவம். மொத்தக் கூட்டத்திலும் ஒட்டாமல், ஆற்றங்கரை ஓரமாக ஒருவன் நின்றிருந்தான். சிறுவனா இளைஞனா என்று சொல்ல முடியாத வயது. அவனது முகத்தில் வேதனை, கோபம், வெறுப்பு என்பது போன்ற உணர்வுகள் மாறி மாறி வந்து போயின.

திதிக்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த புரோகிதர் அங்கே இருந்தவர்களைப் பார்த்தார்.

அவரது பார்வை அங்கே இருந்த ஆண்களை அலட்சியமாகப் பார்த்தது. 'ஹூம். இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது என்ன' என்று நினைத்தவருக்கு, 'மனுஷாளுக்கு எவ்வளவு சுயநலம்? வினை விதைச்சவன் வினையைத் தான் அறுப்பான்னு சும்மாவா சொல்லி வச்சிருக்கா? எப்படியோ காரியத்தை ஒழுங்கா செஞ்சா சரி' என்று உள்ளுக்குள் அலுத்துக் கொண்டாலும் வார்த்தைகள் வெளியே வரவில்லை.

குடும்பத்தினருக்கு இல்லாத அக்கறை அவருக்கு எதற்கு, மேலும், இன்றைய தினத்தை பொருத்தவரை அவருக்கு வருமானம் அளிக்கும் வேலை அது, அதைத் திருப்தியாக செய்துவிட்டுப் போவோம் என்று முடிவுக்கு வந்தவராய் சுந்தரத்தை அழைத்தார்.

"என்ன சுந்தரம் காரியம் எல்லாம் யார் செய்யப் போறீங்க? நீங்களா இல்ல உங்க மூத்த பிள்ளையா?" என்று கேட்டவரின் பார்வை சுந்தரத்தின் மூத்த மகனான ரகுவரனின் மேலிருந்தது. ஐந்தரை அடி உயரத்தில் வெடவெடவென்று குச்சி போல் இருந்தான். பதினாறு அல்லது பதினேழு வயது இருக்கலாம், அதற்கேற்ற முதிர்ச்சி. சுற்றி நடப்பது எதையும் அறியாமல் சுழித்து ஓடும் காவிரியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ராகவா அங்கே என்னத்த வேடிக்கை பார்த்துட்டு இருக்க இங்க வந்து உட்காரு. நீ தான் உங்க அம்மாக்கு திதி கொடுக்கணும்" என்று சுந்தரத்தின் முதல் தம்பி அண்ணன் மகனை அழைத்தார். அவரது குரல் கட்டளையாகவே ஒலித்தது. தாயின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவன் அமைதியாக வந்து அமர்ந்தான்.

ரகுவரனைப் பார்த்த‌ புரோகிதர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்.

ரகுவரனது கவனம் மந்திரத்தில் இல்லாமல் வேறெங்கோ இருக்க, சுந்தரம் மகனை முறைத்தார். "ராகவா! உன் கவனம் எங்க இருக்கு? சின்னப் பசங்க எவ்வளவு நேரம் பசி தாங்குவாங்க. சட்டுபுட்டுனு முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பணும்."

"இங்க பாருடா அம்பி! பித்ரு காரியம் எல்லாம் கடனேன்னு பண்ணக் கூடாது. சிரத்தையோட பண்ணினால் தான் நமக்கும் நல்லது, நம்ம சந்ததிக்கும் நல்லது. உங்க அம்மா வேற அல்பாயுசுல போயிருக்கா, அகால மரணம் வேற. பால்குடி மறக்காத பிள்ளைய விட்டுப் போகும் போது என்னென்ன நினைச்சாளோ? அந்த ஆத்மா என்ன பாடுபட்டதோ? நாம பண்ற கர்மாவால அதுக்கு கொஞ்சம் அமைதி கிடைச்சா அதைவிட வேறென்ன வேணும். அதனால, இதெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கேன்னு வருத்தப் படாமல், இதனால என்ன பிரயோஜனம்னு யோசிக்காமல், அம்மாவுக்கு நல்லதுன்னு நினைச்சு ஒரு பிள்ளையா உன் கடமையைச் சரியா செய். மத்ததை அந்த பகவான் பார்த்துப்பான்" என்று அவனுக்குப் புரியும் வகையில் அந்த புரோகிதர் விளக்கினார்.

அதன் பிறகு, மிகவும் சிரத்தையுடன் புரோகிதர் சொன்னவற்றைச் செய்ய ஆரம்பித்தான் ரகுவரன். காரியங்களை முடித்துக் கொண்டு தட்சிணையை வாங்கிக் கொண்டு புரோகிதர் சென்றுவிட, இவன் அங்கிருந்து செல்ல மனமின்றி அமர்ந்திருந்தான். கண்கள் சுழித்து ஓடும் ஆற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ராகவா! வெயில் ஏற ஆரம்பிச்சிடுச்சு, என்னத்த வேடிக்கை பார்க்கிற. எழுந்து ஆத்துல போய் முங்கிட்டு வா, கிளம்பலாம். தம்பிங்க முகத்தில பசி தெரியுது பாரு" தந்தையின் குரலில் எப்போதும் இல்லாத நிதானம். காரணம், இன்றைய தினமும் அதன் பின்னணியில் இருந்த அவரது குற்ற உணர்வும்.

அவனைப் பெற்ற அன்னையைக் பற்றிய நினைவுகள் கலங்கலாக ஞாபகத்தில் இருந்ததே தவிர, எப்படி யோசித்தாலும் அவரது முகம் கூடத் தெளிவாக நினைவுக்கு வரவில்லை. அன்னையைப் பற்றிய ஓரிரு சம்பவங்கள் மட்டுமே இன்னும் ஈரம் காயாமல் இருந்தது. அதுவே அவனைத் தந்தையிடம் இருந்து தள்ளி வைத்தது.

மனைவி இறந்து ஐந்தாறு வருடங்கள் கழித்து வளர்ந்த மகனை வைத்துக்கொண்டு மறுமணம் செய்ய அவனிடமே அனுமதி கேட்பவரை நினைக்க நினைக்க மனம் ஆத்திரத்தில் கொந்தளித்தது. அதுவும், அவர் சுட்டிக் காட்டிய சித்தியானவள் ராகவனை விட நான்கைந்து வயது மட்டுமே மூத்தவள்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom