• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -4

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -4


ரகுவரனும் என்ன தான் செய்வார் பாவம், அன்று விடிந்தது முதலே அவருக்கு டென்ஷன் தான். மதியம் கொஞ்சம் காணாமல் போன டென்ஷன் பன்மடங்காக சாயங்காலம் திருப்பி தரப்பட்டு விட்டதே. இப்போது பேரன் வேறு அவனது பங்காக தாத்தாவின் டென்ஷனை ஏற்றிக் கொண்டிருந்தான்.

திக் திக் நிமிடங்கள்… பேரன் என்ன செய்யக் காத்திருக்கிறானோ? ஒன் மினிட் என்று போனவன் பத்து ஒன் மினிட்டுக்கு மேலாகியும் தரிசனம் தரவில்லை. ரகுவரன் பேரனைப் புரிந்து வைத்திருப்பது சரி என்றால், இந்நேரம் சென்னைக்கு டிக்கெட் போட்டு, பாக்கிங் வேலையைக் கூட முடித்திருப்பான். இனி வரும் பேச்செல்லாம் காரில் இருந்து தான் இருக்கும்.

ஏர்போர்ட்டில் ரிப்போர்ட்டிங் டைம்/ இம்மிகிரேஷன் செக் போன்றவை இல்லாவிட்டால், அவனது வேகத்திற்கு ஃப்ளைட் ஏறிவிட்டுப் பேசினாலும் ரகுவரன் ஆச்சர்யப்படமாட்டார். எப்படி இருந்தாலும் அவன் வருவதற்கு குறைந்தது இருபத்து நான்கு மணி நேரம் ஆகிவிடும், அதற்குள் சற்றேனும் ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார். ஜானகிக்கு தேவையான டெஸ்ட்டுகளை அதிகாலையிலேயே முதல் வேலையாகச் செய்து முடிவுகளைக் கூட வாங்கி விடலாம், வயதுக்கே உண்டான கோளாறுகள் தான் பயப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டால் பேரனின் டென்ஷனும் குறைந்து விடும் என்று கணித மேதை ராமானுஜமாக மாறி ஏகப்பட்ட கணக்குகளைப் போட்டார்.

ஆனால் அவை அனைத்தையும் பொய்க்கணக்காகப் போய்விடும் என்று அவருக்கு அப்போது புரிந்திருக்க நியாயமில்லை. குறிப்பாக நீரஜ் அவர் கணக்கிட்ட இருபத்து நான்கு மணி நேரத்தில் பாதியை நான்கு நாட்களுக்கு முன்பே கடந்து விட்டான் என்பது அவருக்குத் தெரிய நியாயமில்லை.

இப்படியாக பலவற்றை யோசிச்சித் கொண்டிருக்கும் போதே ரகுவரனுக்கு இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. அது நீரஜ் சொன்ன எண்பதாவது கல்யாணம். மார்கழி பிறந்திருக்கிறது, அவரது பிறந்த நாள் ஆவணியில் வரும். மாசியில் என்ன என்று யோசித்த போது, 'எண்பதாவது கல்யாணம், என்பது ஆயிரம் பிறை கண்டபின், எண்பது வயது எட்டு மாதங்கள் ஆன பிறகு செய்வது நல்லது' என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது. கூடவே, இது பற்றிப் பெரியவர்கள் பேசாமல் நீரஜாக சொல்லியிருக்க வாய்ப்பு குறைவு என்பதும் புரிந்தது.

அதுவும் இல்லாமல் சென்ற ஆவணியில், இவரது பிறந்த நாளன்று தான் அவருக்கு கொள்ளுப் பேரன் பிறந்திருந்தான். அவரது சஷ்டியப்தபூர்த்தி நடந்த போதே மூத்த மகனின் மகனுக்கு ஆறு வயதாகி இருந்தது. அப்போதே, கொள்ளுப் பேரன் கையால் கனகாபிஷேகம் செய்து கொள்ளும் ஆசை அவருக்கு வந்துவிட்டது. அவ்வப்போது வீட்டில் தனது ஆசையை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார். ஆனால் இன்று அதை நினைக்கையில் சந்தோஷத்தை விட கவலையே மேலோங்கி நிற்கிறது.

அப்படி ஒரு விழா நடந்து குடும்பத்தில் அனைவரும் ஒன்றாகக் கூடினால் ரகுவரனுக்கு சந்தோஷம் தான். கொள்ளுப் பேரனிடம் கூட அவனுக்கு இணையாகப் பேசி விளையாடுபவர் அவர். ஜானகியைப் பற்றி கேட்கவே வேண்டாம், இன்று புதிதாய் பிறந்தேன் என்று குஷியாகி தனது கைவண்ணத்தைக் காட்டி அமர்க்களப் படுத்தி விடுவார்.

இதை நினைக்கும் போதே, ரகுவரனால் அவரது சஷ்டி அப்த பூர்த்தி விழாவையும் அப்போது நடந்த வாக்குவாதங்களையும் அதனால் ஏற்பட்ட மனஸ்தாபங்களையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அப்போது நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் மையப் புள்ளியாக விளங்கியது அவரது மகள் தான் என்றாலும் அன்றைக்கு ரகுவரனால் அவளை விட்டுக் கொடுக்க முடியவில்லை. மகள் கொலையே செய்தாலும் அவள் செய்தது சரிதான் என்று சொல்லும் அளவுக்கு அவள் மேல் கண்மூடித்தனமான பாசம் கொண்டிருந்தவர்.

வயதாகி விட்டதால் அவள் திருந்தியிருப்பாள் என்றெல்லாம் நினைத்துவிட முடியாது. இன்றும் அதே பிடிவாதம் தான், அதே சுயநலம் தான். உள்ளூரிலேயே இருந்தாலும் பெற்றோரைப் பார்க்க வருவதற்குக் கூட ட்ராவல் அலவன்ஸ் கேட்கும் அற்புதப் பிறவி அவள். உட்கார்ந்த இடத்தில் எல்லாம் வரவேண்டும். அமெரிக்காவில் இருந்து மருமகள்கள் கூட வாரம் இருமுறை அழைத்து விடுவார்கள். உள்ளூரில் இருக்கும் மகளுக்கு இவர்கள் தான் அழைக்க வேண்டும். ஆரம்பத்தில் மகளுக்கு வழங்கப் பட்ட பல சலுகைகள் இப்போது பூமராங்காக மாறிப் பெற்றவர்களைத் தாக்குகிறது.

ஜானகி அதை மிக எளிதாகக் கடந்து விடுவார், மகளைத் தவிர அவருக்குப் பேசுவதற்கு பலர் இருந்தனர். ரகுவரன் தான் திணறிப் போவார். இன்னமும் தாய் வீட்டுக்கு வரும்போது ஒரு டம்ளரைக் கூட நகட்டிவிட மாட்டாள். இரண்டு வயதானவர்கள் என்ன செய்வார்கள் என்ற யோசனையே இல்லாமல் வேலை வாங்குவாள். அதனாலேயே ஜானகி மறந்தும் மகளை வீட்டுக்கு வா என்று அழைப்பதே இல்லை. ரகுவரன் தம்பதியர் இந்த ரிட்டையர்மென்ட் கம்யூனிட்டிக்கு வருவதற்கு முதல் காரணம் அவர்களது மகள் தான்.

ஆனால், இத்தனை வருடத்தில் மகளைப் பற்றிய ரகுவரனின் நிலை சற்றே மாறியிருக்கிறது. "ஐயாம் எய்ட்டி இயர்ஸ் யங்" என்று வாய் சொன்னாலும், வயதின் தாக்கம், மகன்களை நோக்கி ரகுவரனைத் திருப்பி இருக்கிறது. கொஞ்சமாக அவர்களிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்து இருக்கிறார். இந்த வேளையில் மகளால் ஏதேனும் பிரச்சினை வந்தால் மகன்களும் மருமகள்களும் கண்டு கொள்ளாமல் போனாலும் அவர்களின் வளர்ந்த குழந்தைகள் அப்படி விட மாட்டார்கள். நீரஜ் ஒருவனே போதும், அத்தையை அசால்ட்டாக சமாளிப்பான்.

ஆனால் அவரைக் காரணம் காட்டி குடும்பத்தில் மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்படுவதை அவர் விரும்பவில்லை.

கூடவே, சமீப காலமாக ஜானகியின் உடல் நிலை பல்வேறு அச்சங்களை அவருக்குள் விதைத்திருந்தது. அதனாலேயே கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று நினைக்கத் தோன்றியது. அதிக சந்தோஷம் ஆபத்தில் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று அவரது வழக்கமான கற்பனை தறிகெட்டு பறந்தது.

ரகுவரனின் மனநிலை இப்படி இருக்க, ஜானகியின் நிலை அப்போதைக்கு பேரனை எப்படி சமாளிப்பது என்பதில் இருந்தது. முதன் முதலாகத் தனது உடல் நிலை குறித்து ஒரு கலக்கமும் வந்து சேர்ந்தது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று ஜானகி சின்சியராவே, நிறைந்த மனதோடு எல்லாம் செய்தாலும் நாளாக நாளாக உடல் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறதே.. என்ன செய்வது?

ஜானகிக்கு ஒரு தலைவலி வந்தாலும் ரகுவரனுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும். சோர்ந்து கிடக்கும் மனைவி பழையபடி உற்சாகமாக நடமாடும் வரை ரகுவரனின் உலகமே இயங்காது. திருமணம் ஆன இத்தனை வருடங்களில் வெகு சில நாட்கள் தவிர மனைவியைப் பிரிந்து இருந்ததே இல்லை எனலாம். அலுவலக நிமித்தமாக செல்ல வேண்டி இருந்தால் கூட மனைவியும் சேர்த்து அழைத்துக் சென்று விடுவார்.

இவ்வளவு ஏன் உள்ளூரிலேயே இருந்த ஜானகியின் தாய் வீட்டுக்கு கூட தனியே அனுப்பியதில்லை. பிரசவங்களிலும் கூட மனைவியுடன் சேர்ந்து மாமியார் வீடு சென்று பலரது கேலிக்கு ஆளான மாப்பிள்ளை அவர்.

ஆரம்பத்தில் அதைப் பற்றி பெருமிதம் கொண்டிருந்தவள் தான். ஆனால், அதுவே பிள்ளைகள் பெரிதான பின்னும் தொடர்ந்த போது, உடன் பிறந்தவர்கள் கூட கேலி செய்ய ஆரம்பித்ததில் ஜானகிக்குக் கஷ்டமாகவே இருந்தது. ஆனாலும்,

கணவனிடம் தன் பிடித்தமின்மையை வெளிப்படுத்த முடியாமல் திணறினாள்.

அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஜானகிக்கு ஒரு பயம் வர ஆரம்பித்திருந்தது, தனக்குப் பின் என்று ஒரு நிலை வந்தால் கணவன் என்ன ஆவான் என்று? முயன்று அதனை ஒதுக்கிவிட நினைத்தாலும் வயது பயத்தை அதிகரித்தது. அதனாலேயே தனது உடல் உபாதைகளை மறைக்க ஆரம்பித்திருந்தார்.

இப்படி இருவரும் அவரவர் பாணியில் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று திரையில் தோன்றிய நீரஜ், "ஓகே ஜானு டார்லிங், குட் நைட் ரகுத்தாத்தா. நாளைக்குப் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு அவர்களது பதிலை எதிர்பார்க்காமல் வீடியோ காலை முடித்து விட்டிருந்தான். அவன் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள ரகுவரன் முயன்று கொண்டிருந்த வேளையில் ஜானகி படபடத்தார்.

"என்னங்க! இவன் இப்போ என்ன சொன்னான்? நாளைக்குப் பார்க்கலாம்னா சொன்னான்? நிஜமாவே கிளம்பிட்டானா? வந்து என்ன சொல்லப் போறான்னு தெரியலையே?" ஜானகியின் கேள்வியில் சந்தோஷம் பாதி, பயம் மீதி.

"ஹூம்… நான் தான் சொன்னேனே" என்று பெருமூச்சு விட்டார் ரகுவரன்.

"அவன் வரட்டும், இன்னைக்கு இருக்கற நிலைமைல நமக்கு நல்லது தான். மாத்திரை போட்டது உனக்குத் தூக்கம் வரலையா? போய் தூங்கு, காலைல டெஸ்டுக்கு போகணும். எதுவும் சாக்கு போக்கு சொல்ல நினைக்காத. இடது கையை ரொம்ப அசைக்காமல் கவனமா படுத்துக்கோ" என்று மனைவியைப் படுக்க வைத்த ரகுவரன் அடுத்த நிமிடமே நிம்மதியாக உறங்கிவிட, தூக்கத்திற்கு மாத்திரை போட்டிருந்த ஜானகி தான் விடிய விடிய விழித்திருந்தார்.

ஏதேதோ சிந்தனைகள் ஆக்கிரமித்துக் கொண்டு தூக்கம் வராமல் தவித்தவர் அதிகாலையில் தான் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தார். இப்படியாக முதல் நாளைக்கு முற்றிலும் மாறாக ஆரம்பித்த மார்கழி இரண்டாம் நாள், அவர்களுக்கு இன்னும் பல புதுத் திருப்பங்களைத் தரக் காத்திருந்தது.

முதல் நாள் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வழக்கமாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காஃபி குடிக்கும் ரகுவரனும் அன்று அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். எங்கோ மொபைல் ஒலிப்பது போலிருக்க, கஷ்டப்பட்டுக் கண்ணைத் திறந்து சைட் டேபிளில் இருந்த தனது மொபைலை எட்டி எடுத்தவர் அதன் டிஸ்பிளேயில் ஆறு என்று மணியைப் பார்த்து அவசரமாக எழுந்து உட்கார்ந்தார்.

இப்போது மணி ஓசை மீண்டும் கேட்க அது மொபைல் அழைப்பல்ல, வீட்டின் அழைப்பு மணி என்று உணர்ந்தார். பால்காரனாகத் தான் இருக்கும் என்று முடிவு செய்து, "ஆண்டவனே! சீக்கிரம் வந்துட்டான் போலிருக்கே! இன்னைக்கும் காலங்காத்தால இவன் கிட்ட அட்வைஸ் கேட்கணுமா? நேத்து ஒரு நாள் கேட்டதே ஜென்மத்துக்கும் போதும்" என்று சத்தமாக முணுமுணுத்துக் கொண்டு கதவைத் திறந்தார். அதற்குள் இன்னொரு தடவை அழைப்பு மணி ஒலித்து விட்டது.

"டெய்லி அஞ்சு மணிக்கு முன்னால எழுந்துக்கறவன் ஒரு நாள் கொஞ்சம் அசந்து தூங்கிட்டா இத்தனை தடவை பெல் அடிப்பியா? கொஞ்சம் சீக்கிரம் வான்னு சொன்னா என்னைக்காவது வந்திருக்கியா? ஃப்ரஷ்ஷா டிகாஷன் போட்டு பழைய பால்ல காப்பி குடிச்சுப் பாரு, அப்போ தான் என் கஷ்டம் தெரியும்."

வாசலில் நின்ற ஆளையே பார்க்காமல் நீளமாகப் பேசி பாலுக்காகக் கை நீட்டிய ரகுவரன், நீட்டிய கைகளில் பாலுக்குப் பதில் லேப்டாப் பேக் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தார். நீட்டிய கைகள் நீட்டியபடி இருக்க, "பார்த்தவிழி பார்த்தபடி பூத்துக் கிடக்க.. காத்திருந்த காட்சி இன்று காணக் கிடைக்க.." என்று ராகம் போட்டு சத்தமாகப் பாடியவன், "ஹோய் ரகுத்தாத்தா! நான் ஒத்துக்கறேன்.. நீ காதல்மன்னன் கமல்ஹாசன் தான்.. ஆனால் உன் அபிராமி நானில்லை.. வழியில நின்னு பயமுறுத்தாம நகர்ந்து நில்லு. எவ்வளவு நேரம் தான் வாசல்ல நிக்கறது" என்று சொல்லியும் ரகுவரனின் நிலையில் மாற்றம் இல்லை.

"அது சரி.. நீ இங்கேயே நின்னு பால் வாங்கிட்டு உள்ள வா. எனக்கு ஃப்ரஷ் மில்க்ல தான் காஃபி வேணும். நான் இப்போ என் ஜானு டார்லிங்க பார்க்கப் போறேன். இன்னும் என்ன தான் செய்யறாங்க? என் சத்தம் கேட்டும் வரக்காணோமே" என்று அவரை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன், "ஓ.. மை.. ஜானு டார்லிங்! Where are youuuu? தேடும் கண் பார்வை தவிக்க.. துடிக்க.." என்று பாடிக்கொண்டும் தேடுவது போல கண்களுக்கு மேலே கையை வைத்து ஆக்ஷன் செய்து கொண்டும் போனான்.

'இவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தான்? கடவுளே! எனக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு ரூபத்தில பிரச்சினை வருதே! வயசான காலத்துலயாவது பொண்டாட்டியோட நிம்மதியா இருக்க முடியுதா? சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி' என்று பாடாத குறையாக வேதனையில் மூழ்கி இருந்த ரகுவரனின் முன்னால் பால் பாட்டிலை நீட்டியது முந்தைய நாளின் பிரச்சினை.. சே..‌ பால்கார பாபு.

"சார்! அம்மாவுக்கு நேத்து ராத்திரி உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன், இப்போ எப்படி இருக்காங்க?" என்று அவன் கேட்ட கேள்வி ரகுவரனைச் சென்று சேரவே இல்லை. அதே வெறித்த பார்வையுடன் நின்றார். அவரை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன் ரகுவரனின் கண்களில் தெரிந்த சோகத்தில் பயந்து போனான். "என்ன ஆச்சு சார், எதுக்கு இப்படி வாசல்ல நின்னு வெறிச்சுப்பாத்துட்டு இருக்கீங்க? அம்மா நல்லா தானே இருக்காங்க?" என்று அவரைத் தொட்டு உலுக்கினான்.

இதற்கிடையில், உள்ளே சென்ற நீரஜ் ஹாலில் தனது லக்கேஜ் எல்லாம் வைத்துவிட்டுப் படுக்கை அறைக்குள் நுழைந்தான். அசையாமல் படுத்திருந்த ஜானகியைக் கண்டு புருவம் உயர்த்தியவன், "ஜானு! ஜானு டார்லிங்!" என்று அழைத்துக் கொண்டே அருகில் சென்றவனுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் அவரது முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது.

"ஹேய் ஜானு! இந்த ரகுத்தாத்தாவோட சேர்ந்து நீயும் அப்பப்போ ட்ரீம்வோர்ல்டுக்குப் போயிடறியா? ஆனால் இது ட்ரீம் இல்லை, நிஜமாவே நான் வந்துட்டேன், கண்ணை நல்லா முழிச்சுப் பாரு. நைட் நல்லா தூங்குனியா இல்லையா? எங்களை எல்லாம் ஒரு நாளாவது அஞ்சு மணிக்கு மேல தூங்க விட்டிருக்காரா இந்த ரகுத்தாத்தா. நீ மட்டும் இப்படி ஏழு மணி வரைக்கும் தூங்கிட்டு இருக்க. டூ பேட்.. கமான் கெட் அப் பாட்டி" என்று ஜானகியைத் தொடர்ந்து எழுப்பினான். ஆனாலும் ஜானகி கண்விழிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

'நேத்து தூக்க மாத்திரை எதுவும் கொடுத்திருக்காங்களோ? ஆனாலும் இவ்வளவு நேரம் எழுப்பியும் எந்த ரியாக்ஷனும் இல்லையே? ஒரு வேளை மாத்திரை ஓவர் டோஸா போயிடுச்சோ'? ' என்று நீரஜ் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் ஜானகி கண்விழித்தார்.

ஜன்னல் திரைகளும் மார்கழி மாதமும் அறையை இருட்டாகவே வைத்திருக்க, அருகில் இருந்த பேரனைப் பார்த்துப் புன்னகை புரிந்த ஜானகிக்கு ஒன்றும் புரியவில்லை.

"வந்துட்டியா ராஜூ! கை கால் அலம்பிட்டு வா, டிஃபன் பண்றேன்" என்றவாறு எழுந்தவர் நிற்க முடியாமல் தடுமாற அருகில் நின்ற நீரஜ் தாங்கிப் பிடித்தான். அப்போது தான் அவனது வருகை ஜானகியின் மூளையில் தெளிவாகப் பதிந்தது. ஒரு நாள் முழுவதுமா உறக்கத்தில் இருந்தேன் என்று நினைத்தவர் அவன் மேல் மயங்கிச் சரிந்தார்.

தன் மேல் பாரம் ஏறிக்கொண்டே போனதில் பயந்து போனான் நீரஜ்.

"ரகுத்தாத்தாஆஆஆ..‌ கம் ஃபாஸ்ட்.. ஜானு.. ஜானு டார்லிங்! இங்க பாரு!" என்ற நீரஜின் அலறல் கேட்டது.

பால்காரனுக்கு பதிலடி கொடுக்க நினைத்த ரகுவரன் வாயைத் திறக்கும் முன் பேரனின் அலறல் கேட்டது.

அவசரமாக உள்ளே ஓடிய ரகுவரனை பின்தொடர்ந்த பாபு கண்டதெல்லாம் அங்கே மயக்கத்தில் இருந்த ஜானகியைத் தான். அது தூக்கம் அல்ல மயக்கம் தான் என்று உறுதி செய்த பின்னரே நீரஜ் பதட்டத்துடன் தாத்தாவை அழைத்திருந்தான்.

மனைவியின் கன்னம் தட்டி அவரை எழுப்ப முனைந்த ரகுவரன் தனது முயற்சி தோற்றதில் இடிந்து போய் அமர்ந்தார்.

நீரஜிற்கு அங்கே இருக்கும் உதவி ஆட்களைத் தெரியும் என்பதால் அவசரமாக அவர்களை அழைத்து ஆம்புலன்ஸூடன் வரச் செய்தான். உடன் வந்திருந்த மருத்துவர் ஜானகியைப் பரிசோதித்துப் பின்னர் ஹாஸ்பிடல் சென்றுவிடுவது தான் நல்லது என்று வலியுறுத்த, நேற்று மாலையில் விழித்திருக்கும் நிலையில் ஆம்புலன்ஸில் ஏற மாட்டேன் என்று அடம் பிடித்த ஜானகியை இன்று ஸ்ட்ரச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினர். ஆக்ஸிஜன் மாஸ்கை அணிவித்து, ட்ரிப்ஸ் ஏற்ற வகை செய்துவிட்டு ஆம்புலன்ஸ் அருகில் இருந்த பெரிய மருத்துவமனை நோக்கிச் சென்றது.

நீரஜூடன் ஆம்புலன்ஸில் ஏறிய ரகுவரன் அமைதியாக மனைவியின் கைபிடித்து அமர்ந்து கொண்டார்.

இருவரையும் பார்த்த நீரஜ் செய்வதறியாது திகைத்துப் போனான். பத்து நாள் வேலையாக சிங்கப்பூருக்கு வந்தவன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி காலையில் வந்து நிற்க, அதுவே பெரியவர்களின் பதட்டத்தை அதிகரித்து விட்டது என்று புரிந்து போனது. ஏற்கனவே இருந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வந்து, புதிதாக ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட்டோமோ என்று குற்ற உணர்ச்சியில் நொந்து போனான்.

ஜானகியை மருத்துவமனையில் சேர்த்து முதல் கட்ட பரிசோதனைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் ரகுவரன் மௌனமாகிப் போனார். பார்வை மனைவியிடம் நிலைத்திருக்க மனமோ காரணம் தெரியாமல் தாயை நினைத்தது.

தனது பத்தாவது வயதில் மறைந்த தாயைப் பற்றி நிழல் போல சில நிகழ்வுகளே ரகுவரனின் ஞாபகத்தில் இருந்தது. மற்ற விவரங்கள் அனைத்தும் அவரது இரண்டாம் கட்ட உறவினர்களின் வாய்மொழியாகக் கேட்டு அறிந்தவை. சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு தாய்க்காக நியாயம் கேட்டு தந்தையின் முன் நின்றிருக்கிறார். நல்ல வேளையாக அவருக்குப் பல முக்கியமான விஷயங்கள் தெரிந்த போது ரகுவரனின் தந்தை உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவரை என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்.

மனைவியின் விஷயத்தில் ரகுவரனின் தந்தை தான் அவருக்கு ரோல் மாடலாக இருந்தார். அதாவது, ஒரு கணவன் தனது மனைவியை எப்படி எல்லாம் நடத்தக் கூடாது என்பதை அவரது தந்தையைப் பார்த்து தான் அறிந்து கொண்டார். மனைவியிடம் தனது தாயைக் கண்டவருக்கு இப்போது ஏனோ தாயின் நினைவுகள் வந்து அலைமோதின.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

eswari

Member
Joined
Jun 19, 2024
Messages
45
Janu ma ku onnum aagakkoodaathu....nallabadiya veettukku anuppirunga.....neeraj pudhu entry......
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
ஜானகிக்கு ஒண்ணும் ஆகக் கூடாது. பேரன் வந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல் என்ன இது?
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
பேரன் நீரஜ் அசகாயசூரன் வந்தாச்சு.
ரகுவரன் & ஜானு தம்பதியர் சதாபிஷேகத்தை அமோகமாக நடத்தி வைத்து விடுவான்.
கமான் ஜானு - கெட் வெல் சூன்👍
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
ஜானகி சீக்கிரம் குணமாகி வர வேண்டும்.
 
Top Bottom