• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14



தந்தையின் முப்பதாம் நாள் காரியத்துக்கென ரகுவரன் ஊருக்கு வந்த போது போருக்குச் செல்லும் வீரனைப் போலத் தயாராகி வந்தான்.



அவன் இல்லாத நாட்களில், பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல், துக்கம் நடந்த வீட்டில் வாய் விட்டு பாடவும் முடியாமல், கணவனுக்கு ஒரு கடிதம் கூட எழுத முடியாத நிலையில் வாடிப் போன ஜானகியின் முகத்தில் அவனைப் பார்த்ததும் வந்த நிம்மதியை ரகுவரனால் புரிந்து கொள்ள முடிந்தது.



கணவனைக் கண்டதும் இது நாள் வரை போதுமடா சாமி இந்தக் கல்யாண வாழ்க்கை என்று சலித்துக் கொண்ட மனது, இப்போது வாழ நினைத்தால் வாழலாம் என்று பாட ஆரம்பித்தது.



சுற்றி இருந்த அனைவரையும் மறந்து, என் வீடு என் கணவன் என்ற முடிவுக்கு வந்தவளாக இயங்கினாள். அவளது செயல்பாடுகள் ரகுவரனுக்கே ஆச்சரியம் கொடுத்தது.



அறிந்த முதல், பெற்ற தந்தையாலேயே அத்தனை துன்பங்களை அனுபவித்திருந்தவள். இங்கே ரகுவரனின் சொந்தங்கள் செய்வதெல்லாம் அவளுக்கு சாதாரணமாகவே இருந்தது. சில நேரங்களில் எத்தனை நன்றி கெட்ட மனிதர்கள் இவர்கள் என்று கூடத் தோன்றியது. அவர்களின் பேச்சுக்கள் எல்லாமே சொத்துக்களை குறி வைத்தே இருந்தது. சியாமளாவிடம் ஒரு நாள் ஒரு பொழுதாவது பாசமாக நடந்து கொள்ளாதவர்கள் அவரது சொத்துக்களில் உரிமை கோருவதை நினைக்கையில் வெறுப்பாக இருந்தது.



ஒரு நாள் இவளை நோக்கி வந்த ஒரு கேள்வியில் நெற்றிக் கண்ணைத் திறந்து விட்டாள் ஜானகி. அதிலிருந்து கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள்.



“ஏம்மா ஜானகி, உங்க அப்பா பெரிய பாங்குல மேனேஜரா இருக்காராமே? சம்பளத்தை விட மத்த வருமானம் எல்லாம் ஜாஸ்தி வருமாமே? அதை வச்சுத்தான் உங்கப்பா ஏகப்பட்ட சொத்து வாங்கிப் போட்டிருக்காராமே?

உன் கூட பிறந்த அத்தனை பேருக்கும் நகை நட்டு எல்லாம் செய்து வச்சாச்சாமே?”



இப்படி, மே.. மே.. என்று அவர்கள் கேட்ட போது பல்லைக் கடித்த ஜானகியின் முகத்தில் வந்து போன ரௌத்திரத்தில், “ஊர் உலகத்தில் பேசிக்கிட்டதைக் கேட்டா.. உனக்கேன் இம்புட்டு கோபம் வருது!” என்று வள்ளி நொடித்துக் கொள்ள, அவரது ஓரகத்திகள் “அங்கே அவ்வளவு சொத்து இருக்கும் போது இங்கே இருக்கிறதை எங்களுக்கு விட்டுக் கொடுத்தால் என்ன?” என்று தங்கள் மனதில் இருந்ததை வெளிப்படுத்தி விட்டார்கள்.



சுடச்சுட பதில் கொடுக்க மலையளவு ஆசை இருந்தாலும், எதையும் வெளிக்காட்டாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கிக் கொண்டாள். சமையல் இல்லை வீட்டு வேலைகளிலோ தன்னால் முயன்றதை செய்பவள் அங்கே நடந்த எந்த பேச்சுவார்த்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடந்து கொண்டாள். ஆனாலும் மனதின் ஒரு மூலையில், ஊருக்குச் செல்லும் முன் ஒரு பிரளயத்தைச் சந்திக்க வேண்டும் என்பது நன்றாக புரிந்து போனது.



அதற்கேற்ப, தந்தைக்கான கடமையைத் தம்பிகளுடன் செய்து முடித்த ரகுவரன், பிரச்சினையைத் தானே ஆரம்பித்து வைத்தான்.



“தாத்தா! சித்தப்பா இரண்டு பேரையும் இன்னைக்கு வீட்டுல இருக்கச் சொல்லுங்க. எனக்கு கொஞ்சம் பேசணும்.” சாதாரணமாகவே அந்தப் பேச்சைத் தொடங்கினான் ரகுவரன்..



தாத்தா தனது பிள்ளைகளைப் பார்க்க, அவர்களோ எடுத்தவுடனே அடாவடியாகத் தான் ஆரம்பித்தனர்.

“இவன் சொன்னா நாங்க கேட்கணுமா? என்ன பெருசா பேசிடப் போறான். சொத்து விவகாரம் தானே! இங்க இருக்கிறதெல்லாம் என்னோடது, நீங்க கிளம்புங்கன்னு சொல்ல போறான், அதானே! நாங்க முடியாதுன்னு சொன்னா என்ன செய்யறதா இருக்கானாம்? கோர்ட்டுக்கு போவானா? போகட்டும்.. பார்த்துக்கலாம். ஊருக்குள்ள எங்களை மீறி எவன் இவனுக்காக சாட்சி சொல்ல வருவான். இவனும் இவன் அப்பனும் நோகாமல் மூணு வேளை திங்கறதுக்கு நாங்க தான் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கோம். அதை விட்டுக் கொடுக்க நாங்க என்ன முட்டாளா?”



பேச்சு வளர்ந்து கொண்டே போனது. எவ்வளவு தூரம் தான் செல்கிறார்கள் பார்க்கலாம் என்று ரகுவரன் கைகட்டி வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தான் என்றால், ஜானகிக்கு ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என்று இருந்தது. இடையில் ராமச்சந்திரனையும் ரங்கநாதனையும் தங்கள் தரப்புக்கு இழுக்க அவர்களின் சித்தப்பா முயல, அவர்களோ அண்ணனின் முகம் பார்த்து நின்றனர்.



வள்ளி கூட அவர்களிடம் இருந்து அப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை. “உங்களை என் சொந்த பசங்க மாதிரி தானே வளர்த்தேன். இப்போ இப்படி நிக்கறீங்களே?” என்று அவள் கண்ணீர் வழிய கேட்க, அதிலிருந்த பொய்மை சகோதரர்களை அவளிடம் இருந்து தள்ளி வைத்தது.



பருவ வயதில் இருந்தவர்கள் , சில காலமாகவே சுற்றிலும் நடப்பதைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். தங்களுக்கும் அந்த வீட்டின் மற்ற பிள்ளைகளுக்கும் இடையே காட்டப்படும் வேறுபாடுகள் நன்றாகவே தெரிந்தது. அவர்களின் மனதில் தங்கள் சொத்தை எதற்கு அடுத்தவர் அனுபவிப்பது என்று தோன்ற ஆரம்பித்தது. தந்தையின் சொல்லுக்காக பொறுத்தவர்களை இப்போது சுயநலம் ஆட்சி செய்ய ஆரம்பித்திருந்தது. இதையறியாத ரகுவரன், உடன்பிறப்புகளைப் பெருமையாகப் பார்க்க, அவர்களின் உண்மைநிலை உணர்ந்த ஜானகி கணவனைக் கவலையுடன் பார்த்தாள்.



“இங்கே இருந்து போகச் சொன்னா, நான் எங்க போவேன், என்ன செய்வேன், என் புருஷனுக்குச் சொந்தமான சொத்துல எனக்கு உரிமை இல்லையா?” என்று வராத கண்ணீரைத் துடைத்தபடி வள்ளி கேட்ட கேள்விகள் அங்கே இருந்த பலரையும் பலவிதமாக நினைக்க வைத்தது.



“உங்க புருஷன் சொத்தா? எப்படி? அவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதா.. இல்லை.. அவருக்கு பரம்பரையா வந்ததா? எனக்குக் கொஞ்சம் விவரமா சொல்றீங்களா? நானும் தெளிவா தெரிஞ்சுக்கறேன்.” அங்கே நடந்த நாடகங்களைப் பார்க்கப் பிடிக்காத ரகுவரன் நேரடியாகவே கேட்டு விட்டான். சற்று நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது.



“இந்த சொத்தெல்லாம் எங்க அப்பாவி அம்மா சியாமளாவுக்கு அவங்க அம்மா வழில கொடுத்தது. வாக்கப் பட்டு வந்த வீடு அவங்களைக் கொண்டாடலை. ஆனால் அல்பாயுசுல அவங்களை அனுப்பி வச்சிட்ட, இத்தனை வருஷமா அவங்க சொத்தை அனுபவிசாசதோட இல்லாமல் அந்த சொத்துக்கு சொந்தம் கொண்டாடிட்டு வர்றதை நினைச்சா சிரிப்பு தான் வருது.” ரகுவரனின் உள்ளக் குமுறல் வார்த்தைகளில் வெளிவந்தது.



அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஜானகிக்கு அல்பாயுசு என்ற வார்த்தை அவள் இத்தனை நாட்களில் தெரிந்து கொண்ட ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்தியது. இத்தனை பேர் இருக்கும் போது அதனை எப்படிச் சொல்வது, திருமணம் ஆகி குறுகிய காலத்தில் குடும்பத்தினரின் மத்தியில் தனது வார்த்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் என்று யோசித்து வாய் மூடி நின்றாலும் பயத்தில் அவள் முகம் வெளுத்தது.



அந்த பயத்திற்கு வேறு அர்த்தம் செய்து கொண்ட ரகுவரன் தனது கோபத்தைக் குறைத்துக் கொண்டான்.

தன் முகத்தை பார்த்த நொடியில் அவனது முகத்தில் வந்து குடியேறிய மென்மையைக் கண்டு மனம் குளிர்ந்து போனாலும், ஜானகியால் அங்கே நடந்து கொண்டிருந்த அநியாயமான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு உண்மையை உரக்கச் சொல்ல முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது.



ஆனால், எது ரகுவரனுக்குத் தெரிந்தால் அவன் நொந்து போவான் என்று அவள் மறைத்தாளோ அதை அவன் தெரிந்து கொண்டு வந்திருந்தான். அதுவும் சுந்தரத்தின் வாயிலாக, அவர் வாக்குமூலம் போல எழுதி வைத்திருந்த விஷயங்கள் அவனை நிலைகுலையச் செய்திருந்தது.‌



“யாரும் பேசற மாதிரி இல்லை. இந்த சொத்துக்களோட உண்மையான பட்டா எல்லாம் என் கிட்ட தான் இருக்கு.‌ நல்லா கவனிங்க, உண்மையான பட்டா என் கிட்ட இருக்கு. நாங்க மூணு பேரும் எப்படிப் பிரிக்கறதுன்னு பேசி முடிவு செஞ்சுக்கறோம். அவங்க இரண்டு பேரையும் நான் கூட்டிட்டு போயிடுவேன். தாத்தாவும் பாட்டியும் எங்களோட வந்து இருக்கணும்னு எனக்கு ஆசை, ஆனால் அது அவங்க விருப்பம். இனிமேலாவது நாங்க, எங்க குடும்பம்னு வாழ விடுங்க. எங்க அப்பா ரொம்ப ஆசைப்பட்டாங்க. அதுவே அவருக்கு கடைசி ஆசையாகிப் போச்சு.” இது தான் என் முடிவு என்பது போலப் பேசிவிட்டு எழுந்தான். யாருக்கும் பேச இடம் கொடுக்கவே இல்லை.



“நிலத்தைப் பொறுத்தவரை எங்களால பார்த்துக்க முடியாது. எப்படியும் யாருக்காவது கைமாத்தி விடணும். நீங்களே வாங்கிக்கிறதா இருந்தாலும் சொல்லுங்க, ஏற்பாடு பண்றேன். வீட்டைக் கொஞ்சம் மாத்திக் கட்டணும். பழைய கட்டடம், எப்போ வேணும்னாலும் விழுந்துடுவேன்னு நிக்குது. என்னத்த சொல்ல? அடுத்தவங்க சொத்தை அனுபவிக்க தெரிஞ்சவங்க அதைப் பராமரிக்கணும்னு நினைக்கவே இல்லை.”



சுருக்கமாக, இடத்தைக் காலி செய் என்று சொல்லாமல் சொன்னவனை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தார் அவனது முதல் சித்தப்பா. அவரது கிரிமினல் மூளை தற்காலிக வேலை நிறுத்தம் செய்ததில் பதில் கொடுக்க முடியாமல் நின்றார். அவரின் பதிலை எதிர்பார்க்காமல் ரகுவரன் தொடர்ந்தான்.



“அப்புறம் எங்க அம்மாவோட நகை, மத்த சாமான்கள் எல்லாம் எங்கே இருக்குன்னு சொன்னா பிரிச்சுக்க எங்களுக்கு வசதியா இருக்கும். எங்கே எதுல இருந்ததுன்னு எனக்கு தெரியும். ஆனால் இப்போ என்ன கதியானதுன்னு தெரிஞ்சுக்கணும்” என்று அவன் கடைசியாக சொன்ன விஷயம் அங்கே இருந்தவர்களைப் பொங்கி எழ வைத்தது.



“என்ன? சின்னப் பையன், ஏதோ விஷயம் தெரியாமல் பேசறான்னு விட்டா இஷ்டத்துக்கு பேசற. நாங்க இங்க தான் இருப்போம். நிலத்தையும் கொடுக்க முடியாது. உன்னால என்ன செய்ய முடியும்?” சவால் விட்டார் சித்தப்பா. ரகுவரன் அவரைப் பார்த்த பார்வை உள்ளே ஊடுருவி, ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது.



“தாத்தா! இப்போ கூட அமைதியா தான் இருக்கப் போறீங்களா? நீங்க எத்தனை வருஷம் தான் இப்படி வாயைத் திறக்காமல் இருப்பீங்க. உங்க பசங்களுக்கு சொத்து வேணும்னா நீங்க சேர்த்து வச்சிருக்கணும் இல்லேன்னா அவங்களுக்கு அதுக்கான சரியான வழியைச் சொல்லிக் கொடுத்திருக்கணும். இரண்டும் இல்லாமல் ஒரு அப்பாவிப் பொண்ணோட இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவங்க வாழ்க்கையைப் பலியாக்கி, எங்களையும் அறியாத வயதில் அனாதையாக்கி நிக்க வச்சிட்டீங்களே. உங்க மூத்த பையனோட வாழ்க்கைய பணயம் வைக்க உங்களுக்கு உரிமை இருந்திருக்கலாம். ஆனால் எங்க அம்மாவை எந்த உரிமைல அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. இவங்க எல்லாரும் சேர்ந்து அவங்க உயிரை எடுக்கவா?” படபடவென்று பேசியவன் பேசிய வார்த்தைகளின் கணம் தாங்காமல் தடுமாறினான்.



“ராகவா!!!” என்ற ஒற்றை வார்த்தையில் அவர்களின் அதிர்ச்சியை தாத்தா பாட்டி இருவரும் வெளிப்படுத்த, மற்றவர்கள் ரகுவரனுக்கு எவ்வளவு தெரியும், எப்படித் தெரியும் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.



பேரனின் அருகில் வந்து அவனது தோள் தொட்ட செண்பகம், “ராகவா! நீ உயிரை என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசற? மாமியார்னு அவளை கடுமையா வேலை வாங்கி இருக்கேன். என் மகன் அழகுக்கு ஏத்தவ இல்லைன்னு குத்திக் காட்டி இருக்கேன். ஆனால் நீ சொல்றது ரொம்ப பெரிய விஷயம் பா.. உங்க அம்மாவுக்கு நிறைய நோக்காடு இருந்தது, அதனால தான் சட்டுன்னு போயிட்டான்னு சின்னவன் சொன்னானே” என்று பேரனின் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் தனது நிலைப்பாட்டை உரைத்தார்



“ஓ.. எங்க அம்மா எத்தனை நாள் நோக்காடு வந்து படுத்தாங்க பாட்டி? அப்படி படுத்தபோது இவங்க எல்லாரும் தான் அவங்களுக்கு சேவகம் செஞ்சாங்களா?”



அவனது குத்தல் கேள்விக்கு அங்கே யாரிடமும் பதில் இல்லை. சியாமளாவைப் பொறுத்தவரை ஒரு நாளின் இருபது மணி நேரத்தை வேலை செய்தே கழித்தவள். கூட்டுக் குடும்பத்தில் வேலை இருந்து கொண்டே இருக்கும் என்றாலும் அந்த வேலையும் சிலர் தலையில் தான் விடியும். அங்கேயும் அடுத்தவரை வேலை ஏவிக் கொண்டு ராஜபோகத்தில் வாழ்பவர்கள் உண்டு.



இங்கே, சியாமளா வேலை செய்வதற்கென்றே பிறப்பெடுத்தவள் போல மற்றவர்கள் நினைத்து விட்டார்கள். ரகுவரனைப் பள்ளியில் சேர்த்த பிறகு, தான் அவனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் அழைத்து வருவதும் தான் அவளுக்காக என்று அவள் ஒதுக்கிய வெகு சில நிமிடங்கள்.



“அவ பகல்ல படுத்து ஒரு போதும் நான் பார்த்ததில்லையே.. இரண்டு பிரசவத்தில் பிள்ளைங்க இறந்த சோகத்தைக் கூட அனுபவிக்க விடாமல் வேலை வாங்கிட்டேனே! அதனால எல்லாம் உயிர் போய்விடுமா?” காலம் கடந்த ஞானோதயம் செண்பகத்திற்கு.



“நான் உங்களைக் குத்தம் சொல்லவே இல்லையே பாட்டி. நீங்க செஞ்சதெல்லாம் உலகத்தில் எல்லா மாமியாரும் செயாயறது தான். ஆனால், உயிர் போகிற அளவுக்கு என்ன செஞ்சோம்னு செஞ்சவங்களுக்கும் அதுக்கான திட்டம் போட்டவங்களுக்கும் தெரியும். இதுக்கு மேல நான் எதையும் பேச விரும்பலை பாட்டி.” அத்தனை வருத்தம் அவனது வார்த்தைகளில்.



“நீ.. நீ.. என்ன சொல்ற? திட்டம் போட்டாங்களா?? சியாமளா நோயால செத்துப் போகலையா? இவங்களா காரணம் உனக்கு எப்படித் தெரியும்?”



“எனக்கு எப்போ எப்படித் தெரிஞ்சா என்ன பாட்டி? தெரிஞ்ச விஷயம் கசப்பா இருந்தாலும், மறுக்க முடியாத உண்மை. ஏன், எதுக்கு, எப்படி செஞ்சாங்கன்னு எனக்குத் தெரியணும். பதில் சொல்லிட்டு எங்க அம்மா வீட்டுல இருந்து கிளம்பச் சொல்லுங்க. போதும், இவங்களுக்கு பாவம் பார்த்து நான் ஏமாந்ததெல்லாம் போதும்.”



இரண்டு சித்தப்பாக்களும் மனநிலை குன்றிய வளர்ந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதைக் கண்டு மனதார வருந்தியவன் அவன். அவர்களின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்பதற்காக தனது குணத்தை மாற்றிக் கொள்ள அவன் விரும்பவில்லை.



வேலைக்குச் சேர்ந்த நாள் முதலாய் சித்தப்பா குடும்பத்திற்கு பாவம் பார்த்து தன்னால் இயன்ற அளவு பண உதவி செய்து வந்திருக்கிறான். அவர்களை மெட்ராஸ் அழைத்து வந்து கைதேர்ந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற வைத்திருக்கிறான். இதையெல்லாம் இப்போது நினைக்கும் போது, மனம் வேதனையில் துடித்தது.



“இவங்ஙளுக்கு, எங்க அம்மா சொத்தைக் கொடுத்து உயிரையும் சேர்த்துக் கொடுத்திருக்காங்க. இது தெரியாமல் நானும் சேர்ந்து பாம்புக்குப் பால் வார்த்திருக்கேன்”



வேதனையுடன் சொன்னவன், தனது பையில் இருந்து கத்தையாக சில காகிதங்களைக் கொண்டு வந்து காட்டினான். “இதெல்லாம், உங்க மூத்த மகன், அதாவது மனைவியை உயிரோட கொன்று போட்ட எங்க அப்பாவோட வாக்குமூலம். இவங்க ஏதோ செஞ்சதால தான் எங்க அம்மா இறந்துட்டதா சொல்லி இருக்கார். அவர் மனைவியைச் சரியா நடத்தி இருந்தா இவங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்குமா? பிடிக்கலேன்னா கல்யாணம் செஞ்சிருக்கக் கூடாது. இவருக்கு ஏத்த ரதியா இல்லாதவங்க கூட குடும்பம் நடத்தி இருக்கக் கூடாது. இப்படி எல்லாத்தையும் அவர் செஞ்சு வச்சுட்டு இப்போ இவங்களைக் குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம்? இதைப் படிச்ச பின்னாடி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் கூட வந்தது. எங்க அப்பாவுடைய சாவு இயற்கையானதா.. இல்லை.. எங்க அம்மா மாதிரியே.. இவரையும்…” முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதான்.



அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில் அங்கே நின்று கொண்டிருந்த தம்பிகள் இருவரும் அண்ணனின் பேச்சை முழுவதும் கேட்டு ஆடிப்போனார்கள். ஓடி வந்து அண்ணனை அணைத்துக் கொண்டு தம்பிகள் இருவரும் அவனுடன் அழுதனர்.



வள்ளிக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் நிறைய பேசியாகிவிட்டது. இனிமேல் தனது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற கவலை அவளுக்கு.



அதற்கு மேல் அங்கே அவன் பேசுவதற்கு எதுவும் இல்லை. சித்தப்பா இருவரும் வெகு சொற்பமாக சில வெள்ளி சாமான்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, “உங்க மூணு பேரையும் வளர்க்கத் தான் எல்லாத்தையும் விக்க வேண்டியதா போயிடுச்சு. நகை எல்லாம் எங்க கிட்ட கிடையாது.‌ உங்க அம்மாவோட அறையில தான் இருக்கும். நாங்க அதைக் கண்ணால கூட பார்த்ததில்லை. எங்க அண்ணனை நாங்க எதுவும் செய்யலை. இப்போ என்ன? நாங்க இந்த வீட்டை விட்டுப் போயிடணும், அவ்வளவு தானே, நாளைக்கே போயிடறோம்” என்று பேச்சை முடித்துக் கொள்ள முயன்றார்.



“ஹ்ம்ம்.. இங்கே விவசாயம், வாடகைன்னு வரும் வருமானத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க அப்பா வேற ஊதாரியா ஊரைச் சுத்திட்டு இருந்தார். அதனால பாவம், எங்க மூணு பேரையும் நீங்க தான் கஷ்டப்பட்டு வளர்த்தீங்க. அதுக்காக வெள்ளி சாமானை எல்லாம் வித்துச் சமாளிச்சிருக்கீங்க. எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் புரியுது” ரகுவரனின் குரலில் நக்கல் மட்டுமே.



“நான் சொல்ல விரும்புவது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். உங்களுக்கு தெரியாத எதையும் சொல்லப் போறதில்லை. வினை விதைச்சவன் தினை அறுக்க வாய்ப்பே இல்லை, வினையைத் தான் அறுப்பான்னு நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க”

என்று திட்டவட்டமாகச் சொன்னவன், தனது தாயின் மரணத்தை ஏன், எதற்காக, எப்படி நடத்தினார்கள் என்பது தனக்குத் தெரிய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான்.



“போறதுக்கு முன்னாடி எனக்கு நடந்த விவரம் தெரியணும். இல்லேன்னா முறையா கோர்ட்டில் பார்க்கலாம்” என்றான். தந்தையின் விஷயத்தில் அது இயற்கையான சாவு தான் என்பதில் அவனுக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்றாலும் அதைச் சொல்லித் தான் தாயின் விவரங்களை வாங்க முடியும் என்று நம்பினான். வேறு வழியின்றி அவர்களும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.



“எங்க வீட்லயும் சொத்து சுகம்னு நிறைய இருந்தாலும் அதுக்கு அங்காளி பங்காளிகள் ஜாஸ்தி. எங்க பங்குக்கு இரண்டு வீடு மட்டும் தான் வந்தது. எங்க மூணு பேருல அண்ணன் நிறைய படிச்சு வேலைக்குப் போயிட்டான். ஆளும் பார்க்க ராஜா மாதிரி இருப்பான்” என்று ஆரம்பித்தவர் பேசியதன் சாராம்சம் இதுதான்.



பெயருக்கேற்ப சுந்தரமாக இருந்தவருக்குப் பெண் கொடுக்க சுற்று வட்டாரத்தில் நான் நீ என்று பலரும் போட்டி போட்டார்கள். அவர்களின் பலரும் அதிரூப சுந்தரி தான். ஆனால் சுந்தரத்தின் தந்தை தேர்ந்தெடுத்ததோ கண்ணனின் கருமை நிறத்தில் சுமாரான தோற்றத்தில் இருந்த சியாமளாவை. காரணம் சியாமளாவின் பெயரில் இருந்த கணக்கில் அடங்கா சொத்து.



பிறந்தவுடன் அன்னையை பறிகொடுத்தவளின் தந்தை அடுத்த மாதமே மறுமணம் செய்து கொள்ள, சியாமளா அவளது தாய் மாமன் வீட்டில் தான் வளர்ந்தாள். பிள்ளை இல்லாத மாமனும் மாமியும் அவளை சீராட்டிப் பாராட்டித் தான் வளர்த்தார்கள். திருமண வயது வந்த பிறகே அவளைப் பற்றி அவர்களின் கவலைகள் அதிகமாகியது. அவளது தோற்றம் திருமண சந்தையில் அவளை தள்ளியே நிறுத்தியது. சொத்துக்காக சிலர் வந்தாலும் அவர்களின் குடும்ப பின்னணி சரியில்லை.



இந்த வேளையில், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க‌ முடிவு செய்த சுந்தரத்தின் தந்தை சியாமளாவை மகனுக்காகப் பெண் கேட்டார். குடும்பத்தில் மற்ற யாரும் ஏற்றுக் கொள்ள மறுத்த போதும் சுந்தரத்தின் மனதை மாற்றி திருமணத்தை நடத்தி விட்டார். இதில் பின்னணியில் இருந்து தந்தையை இயக்கியது தம்பிகள் தான் என்று தெரிந்த சுந்தரம் குடும்பத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.



அனைவரும் சியாமளாவின் வீட்டில் குடியேற, அங்கே இருந்த செல்வச் செழிப்பு மனிதர்களின் சுயரூபத்தை வெளிக் கொண்டு வந்தது. மெட்ராஸில் வேலை பார்த்த சுந்தரம் மாதம் இருமுறை மட்டுமே வீடு வந்து செல்ல, அந்த நாட்களில் மஹாராணியாக நடத்தப் பட்ட சியாமளா அவர் கிளம்பியதும் வேலைக்காரி ஆனாள். காலப் போக்கில் சியாமளாவின் மீது சுந்தரம் காட்டும் அதிருப்தியைக் குடும்பத்தில் அனைவரும் கண்டு கொண்டனர்.



சியாமளாவின் மைத்துனர் இருவரும் அண்ணனின் மனைவி என்று என்றும் மரியாதை கொடுத்ததில்லை என்றாலும் அலட்சியம் செய்ததில்லை. ஆனால் சுந்தரத்தின் மனம் தெரிந்த பிறகு ராட்சதர்கள் ஆகிப் போனார்கள். அதுவும் சியாமளாவின் சொத்து விஷயத்தில் அவர்களால் எதையும் விற்க முடியவில்லை. அத்தனையும் தகுந்த முறையில் பாதுகாக்கப் பட்டு வந்தது. வாயைத் திறக்காமலே தனது உரிமையை நிலைநாட்டிய சியாமளாவை அவர்கள் விரோதியாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.



அந்த குறிப்பிட்ட நாளில், வழக்கம் போல சியாமளா ரகுவரனைப் பள்ளியில் விட்டுத் திரும்பி வந்தாள். இவர்களது வழக்கம் போல நகைகளைக் கேட்க, அங்கே இருந்த சுந்தரத்தைப் பார்த்து வைத்தாள் சியாமளா. அவரோ, இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல வெளியே சென்று விட, அவரது தம்பிகள் விடுவதாக இல்லை.



ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேற

சியாமளாவை ஓங்கி அறைந்து விட்டான் ஒருவன். கையில் குழந்தையுடன் நிலைகுலைந்து போனவள், தடுமாறி விழுந்தாள். குழந்தையைக் காப்பாற்ற எண்ணியவளின் தலை நிலைப் பட்டியில் மோதியது. அடுத்த நொடியே அவளது உயிர் பிரிந்தது. இதை அறிந்த மைத்துனன் இருவரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர். சில நொடிகளிலேயே தெளிந்தவர்கள் ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டி அண்ணியின் சாவுக்கு அனுதாபம் தேடிக் கொண்டனர்.



சுந்தரம் தம்பிகளைச் சந்தேகத்துடன் பார்த்தாலும் வாய் திறந்து எதையும் கேட்கவில்லை. இப்படியாவது விட்டது தொல்லை என்று நினைத்தாரோ தெரியவில்லை.



அத்தனையும் கேட்டுக் கொண்டு பயத்தில் வேர்த்துக் கொட்ட

நின்றிருந்த ஜானகி, இறுதியில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தாள்.



“ஜானு!” என்று மற்றவரை மறந்து ஓடினான் ரகுவரன். மனைவியைப் அறைக்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்து அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.‌ அவள் சற்று தெளிந்ததும், “நீ இங்கேயே இரு, வெளியே வராத” என்ற கட்டளையுடன் வெளியே சென்றான்.



அவன் சொல்வதைக் கேட்பதைத் தவிர அங்கே இருந்தவர்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை. எல்லாவற்றையும் முறைப்படி செய்தான். தாத்தாவும் பாட்டியும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள்.



“எனக்கு இந்த கொலைகாரன் கையால கொள்ளி போட வேண்டாம். அதையும் நீயே செஞ்சிடு ராகவா!” என்று மகன்களை மொத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டார் செண்பகம். அவரை அப்படியே பின்பற்றினார் அவரது கணவர்.



வள்ளியைத் தற்காலிகமாக அவளது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மாதச் செலவுக்கு பணம் அனுப்புவதாக ரகுவரன் சொன்னதும் மகளை இரு கரம் நீட்டி வரவேற்றார்கள் அவளது பெற்றோர்.



இப்படியாக, ரகுவரன் குடும்பத்துடன் மதராஸ பட்டணம் வந்து சேர்ந்தான். இதற்கு ஆசைப்பட்ட சுந்தரம் இல்லை என்ற நினைவே அங்கே ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது.



சில நாட்கள் கழித்து மு
றையாக மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைக்க வந்தார் கேசவன். அங்கே, மாமா, மாப்பிள்ளை அக்கப்போர் ஆரம்பம் ஆனது.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

eswari

Member
Joined
Jun 19, 2024
Messages
45
Panam yennraal pinamum vaayai thirakkum nu sollvaanga...aanaa ethunga panniyathu romba aniyaayam 😡😡😡😡
 

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
Panam yennraal pinamum vaayai thirakkum nu sollvaanga...aanaa ethunga panniyathu romba aniyaayam 😡😡😡😡
என்ன செய்வது.. இப்படியும் மனுஷங்க இருக்காங்க...
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
அடப்பாவிகளா, சொத்துக்காக அப்பாவிய அநியாயமா கொன்னுட்டாங்களே🥲🥲🥲🥲
 
Top Bottom