அத்தியாயம் – 7
இரவு உணவிற்காக மேசையில் கூடியிருந்தனர், அபிமன்யு ராகவி மற்றும் அவர்களது தாய் தந்தை. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்பா. இப்போ பேசலாமா?" என்று கேட்டாள் ராகவி. "சாப்பிடும் போது வேறு எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாதுனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கவி உனக்கு, இப்போ தட்ட பார்த்து சாப்பிடு. அப்புறம் பேசலாம்" என்றார் ராதா.
"நீங்க சொல்றதும் கரெக்ட்டு தாம்மா. பேசிக்கிட்டே சாப்பிட்டா என்ன சாப்பிடுறோம்னு தெரியாமலே போயிடுது. அதனால இனிமே சாப்பிடும்போது பேசுறதே இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" என்று பதில் சொன்ன உடன்பிறப்புக்கு,
"இந்தப் பஞ்ச் டயலாகுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. நீ, என்னைக்காவது எதையாவது ஞாபகம் வச்சதா சரித்திரம் இருக்கா இன்னைக்கு சொன்னதை அப்படியே காத்துல விட்டுட்டு நாளைக்கே அதைச் செய்யப் போற. அப்புறம் எதுக்கு பெரிசா பில்டப் கொடுத்துகிட்டு" என்று தனது நக்கலைப் பதிவு செய்தான் அபிமன்யு.
"விடுறா! விடுறா! வீரர்கள் வாழ்க்கையில இந்த மாதிரி சில பல அடிகள் எல்லாம் சாதாரணமப்பா. இதையெல்லாம் கண்டுக்காம போகணும் கவி" என்று தனக்குத் தானே அறிவுரை கூறிக்கொண்டே சாப்பிடத் தொடங்கினாள்.
ராதாவும் கிருஷ்ணனும் இவர்களின் வாய்ஜாலத்தில் வியந்து போய் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தனர். "என்னப்பா, என்ன ஆச்சு?" என்ற ராகவியின் கேள்விக்கு "ம்ம் உன் பேச்சில மயங்கி இப்படி ஆகிட்டாங்க" என்ற அபிமன்யு "இவ இப்படி வாய் பேசிப் பாத்து இருக்கீங்களா பா. எல்லாம் நம்ம ஸ்ரீயோட ஸ்பெஷல் ட்ரைனிங். பேச்சுல என்னை எப்படி பீட் பண்றதுன்னு தனி கோர்ஸ் போயிட்டு இருக்கு. இதெல்லாம் தானே வரணும் கவி. அதுக்கெல்லாம் இங்கே ஏதாவது இருக்கணும்" என்று நெற்றிப்பொட்டில் தொட்டுக்காட்டினான்.
ஸ்ரீநிதி பற்றிய பேச்சு வரவும் கிருஷ்ணன் திடீரென்று சிரித்தார். "பாத்தீங்களா பா, அவ பேரைச் சொன்னதுக்கே சிரிப்பு வருது. அவளை அடிச்சுக்க ஆளே கிடையாது. இவனெல்லாம் அவ கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. ஆமா, நீங்க எதுக்கு இப்போ சிரிச்சீங்க" என்று தனது தோழிக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த கையோடு ஒரு கேள்வியும் வைத்தாள்.
அதுவரை அவர்களின் பேச்சில் தலையிடாத ராதா "அதைப் பத்தி சாப்பிட்ட பிறகு பேசலாம். சாப்பாடு ஆறிப்போகுது. கொஞ்ச நேரத்துக்கு எல்லாரும் சாப்பிடறதுக்கு மட்டும் வாயைத் திறந்தால் போதும்" என்று கணவருக்கும் சேர்த்து ஒரு கொட்டு வைத்தார். அதன் பின் அங்கு எவரும் பேச முயற்சிக்கவே இல்லை.
சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் வரவேற்பு அறையில் அமர்ந்தனர். இது அவர்களின் தினசரி வாடிக்கை. அன்றைய தினம் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக ஒரு அரைமணி நேரம் பேசி விட்டு அவரவர் அறைக்குச் செல்வது வழக்கம்.
இன்று நுழைவுத் தேர்வுகளைப்பற்றிய அவர்களது நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். "இப்போ சொல்லு கவி, ஏதோ பேசணும்னு சொன்னியே?" என்று ஆரம்பித்து வைத்தார் ராதா. தாய் தந்தை இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் "எல்லாம் எங்க என்ட்ரன்ஸ் பிரிபரேஷன்ஸ் பத்தி தான் மா. ஏற்கனவே ஸ்கூல்ல போர்ஷன்ஸ் எல்லாம் நல்லாவே கவர் பண்ணிட்டாங்க. இப்போ நான், சரண், வத்ஸன் மூணு பேரும் சேர்ந்து ரிவைஸ் பண்ணலாம்னு நினைக்கிறோம் பா. ஒரு டாபிக் படிச்சுட்டு யார் வீட்டிலயாவது மீட் பண்ணி டவுட்ஸ கிளியர் பண்ணிக்கலாம்னு பிளான். டைம் டேபிள் போட்டு வச்சுருக்கோம். நீங்க என்ன சொல்றீங்க?" என்றாள்.
"ஐடியா நல்லா தான் இருக்கு. எங்களுக்கு இப்போ சம்மர் ஹாலிடே வரும். சோ நானும் ஹெல்ப் பண்றேன். ராகவன் என்ன சொன்னார்னு தெரியுமா?" என்று தனது ஒப்புதலைப் சொன்னவர், சரணின் பெற்றோர் கருத்தினைக் கேட்டார். "அங்கிளும் ஓகே சொல்லிவிட்டார் பா. கிரிஜா ஆன்ட்டி கூட பயாலஜிக்கு கைடன்ஸ் கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காங்க. ஆனா" என்று இடைவெளி விட்டவள் "வத்ஸனோட அம்மா தான் என்ன சொன்னாங்கன்னு தெரியலை பா. அவன் இரண்டு நாளா பேசவே இல்லை. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. நிதியைக் கூப்பிட்டா பேசற மூட் இல்லை, அப்புறம் பேசலாம்னு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கா. என்னன்னு தெரியலை" என்றாள்.
ஒரு தீவிரத்துடன் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த கிருஷ்ணன், அவள் ஸ்ரீநிதி பற்றி சொன்ன விஷயத்தில் வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். ராதாவின் முகமும் சிரிப்பில் மலர்ந்தது "சரியான வாலு அது. பேச மூடு இல்லையாம்" என்ற மனைவியின் கூற்றை ஆமோதித்த கிருஷ்ணன் "என்னை எப்படி எல்லாம் கேலி செய்றா தெரியுமா. சான்ஸ் லெஸ். நாட்டி கேர்ள்! அவளைப் போல ஒரு பொண்ணு ஒவ்வொரு வீட்டுக்கும் வேணும்" என்று சிரிப்பினூடே சொன்னார்.
"அப்பா! அம்மா! இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன். உங்களுக்குன்னு ஒரு பொண்ணு இருக்கா. ஸோ, உங்க பொண்ணைத் தான் நீங்க கொஞ்சணும். பெரிய பில்டப் கொடுக்கிறீங்களே? அப்படி என்ன தான் சொன்னா உங்க செல்லம்" என்று பொறுமினாள் ராகவி.
"பொறாமையில பொங்கறியா கவி? இதைச் சரண் கேட்கணும் இப்போ. நீயெல்லாம் வாயைத் திறக்கவே கூடாது. கிரிஜா ஆன்ட்டி உனக்குப் பண்றதப் பார்த்து அவன் தான் சந்தேகத்தில் இருக்கான். நிஜமாவே அவங்க பையன் தானான்னு? நீ ஸ்ரீயச் சொல்றியா?" என்று இடையிட்டான் அபி.
"அவங்களுக்கு பொண்ணு இல்லைன்னு என்னைக் கொஞ்சுறாங்க. இங்கே தான் நான் இருக்கேனே" என்று அவர்களது வாதம் நீண்டு கொண்டே போனது. "இப்போ நான் சொல்லணுமா வேண்டாமா?" என்று கிருஷ்ணன் பார்த்த பார்வையில், இருவரும் வாய் மூடி மௌனம் ஆனார்கள்.
அன்று வீடியோ அழைப்பில் ஸ்ரீநிதி, கிருஷ்ணன் மற்றும் ராதாவுடன் பேசிக் கொண்டு இருந்தாள். இதுவரை அவர்களின் பேச்சு மட்டுமே பரிச்சயமாக இருக்க, நேரில் பார்க்கும் வாய்ப்பு தான் இப்போது இல்லை, வீடியோவிலாவது பார்க்கலாம் என்று முடிவு செய்து அழைத்திருந்தாள்.
மற்ற நால்வரும் பன்னிரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த நேரம், அவர்களுக்கு தொடர் வகுப்புகள் இருக்க, ஸ்ரீநிதி சில சனிக்கிழமை விடுமுறையில் இருந்தாள். அப்படி ஒரு சனிக்கிழமை, என்ன தான் செய்து பொழுது போக்குவது என்று யோசனையில் இருந்தவள், கிருஷ்ணனுக்கு வீடியோ அழைப்பு விடுத்தாள். அவரைப் பார்த்ததும் "அங்கிள்! நீங்க நிஜமாவே ஃபிஸிக்ஸ் புரோஃபசரா?" என்ற கேள்வியோடு ஆரம்பித்த அழைப்பு அரைமணி நேரம் நீண்டது.
"உங்களைப் பார்த்தா அப்படித் தெரியவே இல்லையே? எங்க சயன்ஸ் மிஸ் எல்லாம் எப்படி ஸ்ட்ரிக்டா இருப்பாங்க தெரியுமா? நீங்க என்ன ரொம்ப ஜாலியா பேசறீங்க?" என்று பல சந்தேகங்கள் அவளுக்கு வந்தது.
"அப்பா! எவ்வளவு டவுட் வருது உனக்கு!" என்று வியந்தவர் "வீட்டுல நான் புரோஃபசர் இல்லையே? நீ கூட அங்கிள்னு தானே பேசின? காலேஜ்ல வந்து பாரு, நான் எவ்வளவு ஸ்ட்ரிக்டுனு. என்ன, எங்க காலேஜ்ல சேர்ந்துடறியா?"
"அச்சோ! எனக்கு இன்ஜினியரிங் வேணாம். நான் ஆன்ட்டியோட காலேஜுக்குப் போயிக்கிறேன்" என்றவள் தொடர்ந்து "ஆனா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள். உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு." என்றாள்.
அவளது குரலில் இழையோடிய ஏக்கத்தை உணர்ந்தவர், பக்கத்தில் அமர்ந்திருந்த ராதாவைப் பார்த்து கண் சிமிட்டியபடி"அதுக்கென்ன டா, ஒரு அஞ்சாறு வருஷம் வெயிட் பண்ணு. பெர்மனட்டா என் கூடவே இருக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடுவோம்" என்றார்.
அதன் முழு அர்த்தம் புரியாத போதும் "நான் இப்போ இருக்கணும்னு சொன்னேன் அங்கிள். நீங்க ஃப்யூச்சர சொல்றீங்க. ஒன்னுமே புரியலை." என்று புலம்பியவள் "என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்க நிதி. சாப்பிட வா" என்ற தாயின் குரல் ஒலித்ததில் "இது பத்தி டீடெயிலா இன்னொரு நாள் பேசுவோம். இப்போ கட் பண்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தாள்.
தந்தையின் பேச்சை ஆர்வமாகக் கேட்ட இருவரும் அதில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயன்றார்கள். அதே நேரம் கிருஷ்ணனின் கைபேசி அழைத்தது. அழைப்பு ஸ்ரீநிதியிடம் இருந்து என்று தெரிந்ததும் ஒரு புன்னகையோடு கைபேசியை எடுத்தார். அதே நேரம் இரவு பத்து மணிக்கு ஏன் அழைக்கிறாள் என்ற எண்ணமும் வந்தது. அதற்குள் அழைப்பு நின்றது.
"என்ன ஆச்சுங்க? யார் இந்த நேரத்தில் கூப்பிடறாங்க? பேசாம ஃபோனையே பார்த்துட்டு இருக்கீங்க?" என்ற மனைவியின் கேள்வியில் "நம்ம ஸ்ரீநிதி தான் மா. இந்த நேரத்தில என்னனு தெரியலையே? தெரியாம கால் பண்ணிட்டாளோ?" என்று சொன்னபோதே மீண்டும் வந்த அழைப்பை உடனே ஏற்று "ஆயுசு நூறுடா உனக்கு. உன்னைப் பற்றி தான் பேசிட்டு இருந்தோம்" என்றார்.
அந்தப் பக்கம் வந்த அழுகை ஒலியில் கைபேசியைக் காதில் இருந்து எடுத்து ஸ்ரீநிதியின் அழைப்பு தானா என்று உறுதி செய்ய விழைந்தார். அவள் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு "என்னம்மா இந்த நேரத்தில கூப்பிட்டு இருக்க? என்ன விஷயம்? எதுக்கு அழற? எதுன்னாலும் அங்கிள் பாத்துக்கிறேன். அழுகையை நிறுத்து" என்று நிதானமாக விசாரித்தார்.
அவரது குரலில் சிறிது தெளிந்தவள், அடுத்து பேசிய விஷயத்தில், அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்களது இன்னோவா கார் மொத்த குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு ஸ்ரீநிதி வீட்டுக்குச் செல்லும் பாதையில் விரைந்தது.
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.