• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -20

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
141
தொட்டுத் தொடரும்- 20

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ

வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ

ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை

நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே

(*பெற்ற மகனைச் சீராட்டி வளர்க்க முடியவில்லையே என்று தாய் ஏங்குதல்)



பாக்கெட்டிலிருந்து அலைபேசி அழைத்ததில் திடுக்கிட்டு விழித்த ஸ்ரீவத்ஸன், சுற்றிலும் பார்வையை ஓட்டினான். அந்தோ பரிதாபம்! தூங்க வேண்டும் என்று நினைத்து ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கியவனை மீண்டும் கடந்த கால நினைவுகள் ஆட்கொண்டு விட்டன என்பது புரிய, தலையில் தட்டிக் கொண்டவன், அழைப்பு அபிமன்யுவிடம் இருந்து என்பதை அறிந்து அதனை ஏற்றான்.



“மச்சான்! என்ன தான்டா பண்ற? தூங்கிட்டியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? ஃபிராங்க்ஃபர்ட் வந்துட்டு போன் பண்றேன்னு சொன்னியா? இல்லையா? இங்க ஒருத்தி என்னைத் தூங்க விடாமல் உயிர வாங்குறா” என்றான்.



அவனது பேச்சை சரியாகக் கவனிக்காதவன், “ஸாரிடா அபி! ஏதேதோ பழைய ஞாபகங்கள் விடாமல் துரத்துதுடா. நானும் தூங்கிடணும்னு நினைச்சு தான் கண்ணை மூடுறேன். ஆனால், ஏதோ படம் ஓடற மாதிரி வரிசையா வருதே. நான் என்ன செய்ய? ஃப்ராங்க்ஃபர்ட்ல இருந்து கிளம்பவே போறேன்டா” என்ற பதிலில், கண்ணில் நீர் வரச் சிரித்த அபிமன்யு,



“டேய்! நீ இன்னும் இந்த கொசுவர்த்தி சுருள சுத்துறத நிறுத்தலையாடா? இப்போ யார் என்னத்த ஆரம்பிச்சு வச்சாங்க? மகனே! இந்தியா வந்து இறங்கும் போது முடிச்சு இருக்கணும் பாத்துக்கோ. என்னால இப்போ இருக்கிற நிலைமையில இரண்டு கொசுவர்த்திய ஹேண்டில் பண்ண முடியாது. இங்க ஏற்கனவே ஹை ப்ரியாரிட்டில ஒன்று வெயிட்டிங். ஸோ, நீ கட் பண்ணித் தான் ஆகணும்” என்றான்.



தாயைப் பற்றிய தகவல்கள் அபிமன்யுவிற்கும் தெரியும் என்பதை அறியாத ஸ்ரீவத்ஸன், ‘வெயிட்டிங் இன் ஹை ப்ரியாரிட்டி என்னவாக இருக்கும்? நிதியா? அவளுக்கு எதுவும் பிரச்சனையா?’ என்று யோசித்துக் கொண்டு இருக்க, அடுத்த விமானத்திற்கான அழைப்பு வந்தது. டெல்லி செல்ல இன்னும் எட்டு மணி நேரத்துக்கு மேலே ஆகுமே? எதை யோசிக்கப் போகிறானோ?



அபிமன்யுவிடம் பேசிவிட்டு டெல்லி நோக்கிய விமானப் பயணத்திற்கான இமிக்ரேஷன் வரிசைக்குப் போன, ஸ்ரீவத்ஸன் அங்கே வரிசையில் இருந்தவர்களைப் பார்த்து அப்படியே யு-டர்ன் அடித்து அவர்களின் பார்வையில் படாத வண்ணம் ஒதுங்கி நின்றான். அவர்களது பேச்சை ஒட்டுக் கேட்டதில், ஒரு விஷயம் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.



அவர்களும், இவன் கிளம்பிய அதே டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து அவன் பயணம் செய்த அதே விமானத்தில், தான் பயணம் செய்து இருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை அதிகம் என்பதால் சாதாரண வகுப்பில் வந்திருக்கக்கூடும். இவன் தான் கவனிக்கவில்லை, அவர்கள் கவனித்தார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.



அவனது அம்மா வழித் தாத்தா, பாட்டியில் இருந்து மாமா மற்றும் சித்தி குடும்பத்தில் நேற்று பிறந்த குழந்தை வரை அனைவரும் அங்கே இருந்தனர். உலகம் சுற்றுவது, அவர்களது வருடாந்திர வாடிக்கை என்பது அவனுக்கும் தெரியும். ஆனால் தான் இருந்த இடத்திற்கு வந்தவர்கள், தன்னை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவே இல்லை என்பது, அவன் நெஞ்சில் முள்ளால் கீறியது போல் இருந்தது.



அவர்களது ஒற்றுமையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவன், அதே நேரத்தில் அவர்களில் சிலர், தங்களை இந்தக் குடும்பத்தில் என்றுமே இணைத்துப் பார்த்தது இல்லை என்பதில் மிகுந்த வேதனை அடைந்தான். இதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தது என்னவோ தானும் தன் தங்கையும் தானே என்ற நினைப்பே, அவர்களிடம் இருந்து தள்ளி நிறுத்தியது.



குடும்பத்தின் மூத்தவரான பாட்டிக்கே முதல் பேரக் குழந்தைகளிடம் பந்தமோ பாசமோ இல்லாத போது வேறு யாரைக் குற்றம் சொல்ல முடியும் என்று நினைத்த போது விரக்திப் புன்முறுவல் ஒன்று ஓடியது. அந்தக் கூட்டத்தில் பந்தம் பாசம் இதுபோன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்தவர் வெகு சிலரே.



நூலிழையில் ஒட்டிக்கொண்டு இருந்த சொந்தம் மொத்தமாக அறுந்து போனதும், அவர்களது இது போன்ற ஒரு பயணத்தால் தானே என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. அவன் ப்ளஸ் டூ முடித்த போது நடந்த நிகழ்வுகள் அவனது ஞாபக அடுக்குகளில் வலம் வரத் தொடங்கின. மறக்கக் கூடிய நாட்களாக அவை…



அவனது வாழ்வின் இருண்ட நாட்களை நண்பர்களின் உதவியுடன் கடந்து, ஓரளவு தெளிவான மனதுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருந்தான் அவன். தாத்தாவும் பாட்டியும் வீட்டோடு வந்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தான் என்றே சொல்லலாம், காரணம் அவர்களின் செல்லப் பேரன் அவன். தங்கையோடு போட்டி போட்டு உரிமையை நிலைநாட்ட முயலுவான். அவனது வயதுக்கேற்ற விஷயங்களை ஸ்ரீதரின் பெற்றோர் தான் அவனறியாமல் அவனுள் விதைத்தவர்கள். அந்த வகையில் அவர்கள் எப்போதுமே அவனுக்குப் ப்ரியமானவர்கள். அவர்களோடு இப்போது நண்பர்களும் இணைந்து மனம் சமனப்பட்டது போல இருந்தது.



ப்ளஸ் டூ முடிவுகள் வெளியான நிலையில் ஒரு நாள், தாயின் குடும்பத்தில் அனைவரும் அவனைக் காண வந்தனர். பூகம்பம் போல வந்த அனைவரும், குறிப்பாக அவனது பாட்டியும் சித்தியும், பேசு பேசு என்று பேசித் தீர்த்ததும், எதுவும் செய்ய இயலாமல் மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததும் பசுமை மாறாமல் இன்றளவும் அவனது நினைவில் இருக்கிறது. மறக்க நினைத்தாலும் முடியாமலே போனது.



“நீ தான் உருப்படாம போயிட்டேன்னா? உன் பசங்களும் அப்படித்தான் இருப்பாங்க போல. நான் கூட அவங்க அப்பா மாதிரி இருப்பாங்களோன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன். சாகத் தான் விருப்பம்னா மொத்தமா போக வேண்டியது தானே? இப்படி டிராமா போட வேண்டிய அவசியம் என்ன? நாங்க வருஷா வருஷம் வெளியூர் போவோம்னு தெரியாதா? நீங்க எதையும் அனுபவிக்கலேன்னா மத்தவங்களும் அப்படியே இருக்கணுமா? விடாமல் தொந்தரவு பண்றதுக்குன்னே அலையறாங்க.



அதென்ன அத்தனை தடவை விடாமல் ஃபோன் பண்ணி இருக்காரு உன் வீட்டுக்காரர்? அடுத்தவங்களை விட்டு வேற கூப்பிட்டு இருக்கீங்க? எங்கெல்லாம் போறோம்னு உளவு பாக்கறீங்களா என்ன?“எங்க இருக்காங்களோ? ஏன் எடுக்கலன்னு யோசனை வேண்டாம்?அவ்வளவு அக்கறை இருக்கிறதா இருந்தா அவரு கூடவே இருக்க வேண்டியது தானே?” என்ற பேச்சுகள் உறவுச் சங்கிலியை மொத்தமாக வெட்டி எறிந்தன.



அழைத்தது என்னவோ, அவசரத் தேவைக்காக மருத்துவர் என்ற முறையில் ஸ்ரீவத்ஸனின் மாமாவை மட்டுமே. அவரும் கூட, இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதரனிடம் பேசி நிலைமையை தெரிந்து கொண்டு, தங்களது பயணத்தைப் பற்றியும் கூறி, ஆபத்துக் காலத்தில் அருகில் இல்லாமல் போனதற்கு ஆயிரம் முறை மனமார வருந்தி இருந்தார். அவரது மனைவி மற்றும் தந்தையும் கூட ஸ்ரீதரனிடம் பேசி இருந்தார்கள். இன்றைய நிகழ்வுகளை அவர்களுமே சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது முகபாவனைகளில் தெரிந்தது.



ப்ளஸ் டூ முடிவுகள் வந்து விட்டதால் பிள்ளைகளை அடுத்து என்ன செய்வது என்று ஆலோசிப்பதற்காக வந்திருந்த, அபிமன்யு மற்றும் சரண் இவர்களின் பெற்றோர் முன்னிலையில் இவ்வளவும் நடந்ததில், கௌசல்யாவின் குணம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டனர். கௌசல்யா எவ்வளவோ பரவாயில்லை என்பது போல் இருந்தது அவர்களது பேச்சு.



மாமாவும் தாத்தாவும் அடுத்தடுத்து சொல்ல வந்த சமாதானங்களை எல்லாம் பாட்டி மற்றும் சித்தியின் வார்த்தைகள் கொன்று விட்டன. மரணவாயில் வரை சென்று விட்டு வந்த பிள்ளையை, வீட்டின் முதல் பேரனைப் பற்றி அவர்கள் காட்டிய அக்கறையை நினைத்து, அத்தோடு அந்த உறவுகளுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டார் ஸ்ரீதரன். மாமா வீட்டில் நடக்கும் விழாக்களில் விருந்தினராகக் கலந்து கொள்வதோடு சரி. சித்தி வீட்டுத் தொடர்பு இல்லாமலேயே போய் விட்டது.



புயலடித்து ஓய்ந்தது போல காட்சியளித்த வீட்டில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவர்கள் திணறினார்கள். வழக்கம் போல சிறியவர்கள் கை கொடுத்தனர்.



நண்பனுக்காக, சரணும் ராகவியும் தங்கள் வாழ்வின் முக்கியமான லட்சியத்தை மாற்றிக் கொண்டனர். இதைப் பற்றிக் குடும்பத்துடன் ஏற்கனவே பேசி முடிவு செய்திருப்பார்கள் என்று அவர்களது பேச்சின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் எல்லோருடைய மதிப்பெண்களுக்கும் சென்னையின் தலைசிறந்த கல்லூரிகளிலேயே இடம் கிடைக்கும் எனும் நிலை தான் இருந்தது. அதனால், மருத்துவம் படிக்க நினைத்த மூவரும் சென்னையிலேயே படிப்பது என்ற பிள்ளைகளின் முடிவைப் பெற்றோர் அங்கீகரித்தனர். அத்தனையிலும், கௌசல்யா ஒரு பார்வையாளராகவே இருக்க முடிந்தது. இந்த முறை, மகனுக்காக முடிவை ஸ்ரீதரன் தெளிவாகவே எடுத்தார்.



மேற்படிப்பை பற்றிப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்றாலும், ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீவத்ஸனுக்கு கார்டியோ பிரிவிலும் மற்ற இருவரும் நரம்பியல் பிரிவிலும் தான் ஆர்வம் இருந்தது.



காலம் அதிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அவ்வப்போது கௌசல்யா பேசிய பேச்சுக்களும், அவரது நடவடிக்கைகளும், உறவினர்களின் செய்கையால் நிகழ்ந்த மாற்றங்களும், ஸ்ரீவத்ஸனது குறிக்கோளை மனநலம் சார்ந்த துறைகளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர வைத்தது.


பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த ஸ்ரீவத்ஸன், ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்த போது, சித்தியின் ஒரே பெண், அவனது குட்டித் தங்கை கையில் குழந்தையுடன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ‘சற்றே மாமாவின் சாயலில் இருக்கும் தன்னை, எங்கோ பார்த்த ஞாபகமாய் இருக்கும், அவங்க அம்மாவுக்கே இப்போ என்னை அடையாளம் தெரியாது’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான். அவளது திருமணத்திற்குக் கூட தங்களுக்கு அழைப்பு இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது.

சற்று முன் அபிமன்யு சொன்னது நினைவுக்கு வர, உடனே அவனை அழைத்தவன் “எனக்கு ஒரு டவுட்டு அபி! நீ தான் கிளியர் பண்ணனும்… என்னைக் கொசுவர்த்திய ஆஃப் பண்ணி வைக்கச் சொன்னேல்ல, .நான் ஐஸ் தண்ணிய ஊத்தி அணைச்சாலும் அதை எரிய வச்சே தீருவோம்னு நிறைய பேர் வரிசை கட்டி கண்ணு முன்னாடி வந்து நின்னா என்னடா பண்றது?” என்றான் மொட்டையாக.



“என்னடா உளர்ற? யாரைப் பார்த்த இப்போ? உனக்குன்னு கிளம்பி வருவாங்களே?” என்று கேலியாக அலுத்துக் கொண்டவன், “ஹேய்! இது ஏப்ரல் மன்ந்த் இல்ல? மாமாவா, வத்ஸ்? எல்லோரும் இருக்காங்களா? அந்த ஜில் ஜில் ரமாமணி? அவளும் இருக்காளா?” என்று சீரியஸாக ஆரம்பித்துக் கேலியாகத் தனது பதில் கேள்வியை வைத்ததும் அவன் முதுகில் இடி போல இறங்கிய அடியில் அலறினான்.



“ஓ மை காட்! பிசாசு! என்னடி இப்படி அடிக்கிற? கேள்வி கேட்க ஆளில்லைனு நினைச்சியா? என் மச்சான் இருக்கான். இங்க பாருடா, உன் எருமை சே அருமைத் தங்கச்சிய என் முதுகை உடைச்சிட்டா” என்று புகார் செய்தான்.



“அபி இப்போ நீ எங்கே இருக்கே?” என்ற கேள்வி வந்த பிறகே, இதுவரை அவனிடம் பேசவேண்டும் என்று நினைத்த நிறைய விஷயங்களைப் பற்றிய குறிப்பு கூட கொடுக்க வில்லை என்பது ஞாபகம் வந்தது.



“நான், என் வைஃப் வீட்டுல இருக்கேன்டா. தாத்தாவும் பாட்டியும் ஊருக்குப் போனாங்களா, கிடைச்சது சான்ஸூன்னு வந்துட்டேன்” என்றான் நிதியைப் பார்த்து கண்சிமிட்டியபடி. தொடர்ந்து “திரும்பவும் சொல்றேன், நீ கொசுவர்த்தி சுத்தறதுல எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. ஆனா, இங்க வரும் போது முடிச்சு இருக்கணும். அது தான் எனக்கு வேணும்” என்று கேலியாகப் பேசித் தனது பதிலை நம்ப வைத்து விட்டான்.



“சேஃபா வாடா. இப்போ என்னைக் கொஞ்சம் ஃப்ரீயா விடு. நானே ரொம்ப நாள் கழிச்சு என் பொண்டாட்டியக் கொஞ்சரேன். சும்மா சும்மா டிஸ்டுர்ப் பண்ணிட்டு இருக்கான்” என்று செல்லமாக அலுத்துக் கொண்டவன், “வத்ஸ் ! யார் கிட்டயும் நீ போய் பேசாத. அவங்க பேசினால் பதில் பேசு, தப்பில்லை. இதெல்லாமாடா சொல்லணும். வைடா ஃபோனை” என்று அழைப்பைத் துண்டித்தான். சில விஷயங்களை நேரில் தான் பேச வேண்டும் என்பது அவனது எண்ணம்.



ஸ்ரீவத்ஸன் நினைத்தது போல அவனது தங்கை அவனைப் பார்த்து எதையும் யோசிக்கவில்லை. அருகில் இருந்த அவளது ஜர்னலிஸ்ட் கணவன் “அதோ அங்கே இருக்காரே, அவர் கிரேட் நியூரோசைக்கியாட்ரிஸ்ட் தெரியுமா? ஜான் ஹாப்கின்ஸ்ல ரிசர்ச் பண்ணிட்டே வொர்க் பண்றார். நாம வந்த ஃப்ளைட்ல தான் வந்தார் போல. மிஸ் பண்ணிட்டேனே. அவர் கிட்ட ஒரேயொரு இன்டர்வியூ செஞ்சா போதும் எனக்கு. என் ப்ரோகிராம் கிராண்ட் சக்சஸ் ஆகிடும். அவர் ஸ்கெட்யூல் என்னன்னு தெரியலையே?” என்று ஓயாமல் பேசி அவள் காதை ஓட்டை போட்டுக் கொண்டு இருந்தான்.



இவ்வளவும் சொன்னவன் அந்த டாக்டர் பெயரையும் சொல்லி இருந்தால் மனைவி மட்டும் அல்லாமல் மாமியாரின் ருத்ர தாண்டவத்தையும் சேர்த்துப் பார்த்து இருப்பான். மிஸ் பண்ணிட்டான், பாவம்!?



இப்படியாக, சொந்தங்களின் கண் பார்வையில் படாமலேயே வத்ஸனது டெல்லி பயணம் தொடங்கியது. பயணம் தொடங்கி சிறிது நேரத்திலேயே, விமானப் பணிப்பெண் வந்து எகனாமி கிளாஸில் ஒரு குழந்தைக்கு நரம்பியல் மருத்துவரின் உடனடி உதவி தேவை என்று அவனை அழைத்தாள். தனது பெட்டியை எடுத்துக் கொண்டு விரைந்தவன், குழந்தை வலிப்பு வந்து துடிப்பதைக் கண்டு அவசரமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தான். அதன் பின்னரே சுற்றுப்புரத்தைக் கவனித்தவன், தான் உதவி செய்தது தனது தங்கையின் குழந்தைக்கு என்று புரிந்ததும், தனது பெட்டியை வாங்கிக் கொண்டு திரும்பினான்.



அதுவரையில் தனது குழந்தையில் கவனமாக இருந்த ஜர்னலிஸ்ட் மூளை விழித்துக்கொண்டு, “தாங்க் யூ சோ மச் டாக்டர். ரெகுலர் மெடிசின்ஸ் தீர்ந்து போச்சு. ஊருக்குத் தானே போறோம்னு இன்னைக்கு டிராவலை நாங்க கணக்குலயே சேர்த்துக்கலை. இத்தனை டாக்டர் ஃபேமிலில இருந்தும், குழந்தைய பார்க்க முடியலை”



“நீங்க இல்லேன்னா என்ன ஆகியிருக்கும்னு நினைச்சுக் கூட பார்க்க முடியலை. உங்களைப் பத்தி கேள்வி பட்டு இருக்கேன். நேர்லயும் பாத்துட்டேன். இன் எ வே ஐயாம் வெரி லக்கி. தாங்க்ஸ் ஒன்ஸ் அகைன்” என்று சிறு குழந்தையின் தகப்பனாக, நீண்ட நன்றி நவிலல் படலத்தை நடத்தினான்.



ஆரம்பத்தில் “இட்ஸ் ஓகே! என் ட்யூட்டி தானே இது. டேக் கேர். ஷி வில் பி ஆல்ரைட்” என்று பட்டுக்கொள்ளாமல் பதில் சொன்னவன், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல, “வாட்! ரெகுலர் மெடிசின்ஸ்ஆ? குட்டிக்கு என்ன ப்ராப்ளம்?” என்று படபடத்தான். கேட்ட பின்பே, தனது கேள்வியை அதிகப்படியாக உணர்ந்தவன், அமைதியாகத் திரும்பியவனைத் தாத்தாவின் குரல் தடுத்தது.



“குழந்தைக்கு மாமான்னு உரிமை இருக்கு. இல்லேன்னா குட்டின்னு செல்லமா சொல்ல வருமா? கண்டிப்பா கேள்வி கேட்கலாம். பதில் தெரிஞ்சுக்காமல் போனால் எப்படி?” என்று அவனுக்கு ஒரு கொட்டு வைத்தவர், “கண்ணா! எப்படி இருக்கேப்பா? தாத்தாவைக் கூட தெரியலையா?” என்று பாசத்தைப் பொழிந்து அவனுக்கும் அந்த குழந்தைக்கும் உள்ள உறவைக் கோடிட்டு காட்டினார் தாத்தா.



‘மாமாவா? தாத்தாவா? என்னடா நடக்குது இங்க?’ என்று புரியாமல் பார்த்தது அந்த ஜர்னலிஸ்ட் மாப்பிள்ளையின் பார்வை.



தாத்தாவின் கேள்விக்கு ஒரு சிரிப்பைப் பதிலளித்த வத்ஸனைப் பார்த்த அவனது மாமா எழுந்து அவனை ஆரத் தழுவி, “ஹேய் வத்ஸன்! நீதானா இது! வெரி ஹேப்பி டு சீ யூ மை பாய்! காட் இஸ் கிரேட்! இப்போதாவது மனுஷங்கள எல்லாரும் புரிஞ்சுக்கட்டும்” என்றார். அவரது கண்களோ தாயையும் தங்கையையும் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டு இருந்தன.



கூடவே “மாப்பிள்ளை, இவன் ஸ்ரீவத்ஸன், எங்க அக்காவோட பையன். இந்த குடும்பத்தோட முதல் வாரிசு. உங்களுக்கு மச்சான்” என்று அவனது உறவு முறையை விளக்கியதில் அந்த மாப்பிள்ளை பெரிதும் குஷியானான் என்றால், ஸ்ரீவத்ஸன் மிகுந்த சங்கடம் அடைந்தான். ஸ்ரீவத்ஸன், இயல்பிலேயே மிகவும் கலகலப்பாகப் பேசுபவன் அல்ல. அவனைக் கலகலப்பாக்கியது எல்லாம் அவனது நண்பர்கள் தான். அவனது கலகலப்பும் அவர்களிடம் மட்டுமே வெளிப்படும்.. மற்றவர்களை எல்லாம் ஒரு புன்னகையுடன் கடந்து விடுவான்.



இன்று கூட, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்றே புரியவில்லை. விரிசல் விட்ட உறவுகளை ஒட்ட வைக்கும் அளவு அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அந்த இடத்தில் தன்னை அந்நியனாகவே நினைக்கத் தோன்றியது. முயன்று உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தியவன், ஒரு சங்கடமான சிரிப்பை உதிர்த்து “இட்ஸ் ஓகே மாமா. குட்டிக்கு இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன். சரியாகிடும். நான் இங்க தான் இருக்கேன். எதுவானாலும் கூப்பிடுங்க” என்று சொல்லி குழந்தையின் தலையைத் தடவி விட்டு தனது இடம் நோக்கி நகர்ந்து விட்டான். வேறு யாரிடமும் பேச, ஏன் பார்க்கக் கூடத் தோன்றவில்லை, அபி சொன்ன ஜில்ஜில் ரமாமணி உட்பட....
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
175
ஜில் ஜில் ரமாமணி யாரு அவனோட மாமா பொண்ணா 🤔🤔🤔🤔🤔🤔
 
Top Bottom