• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தேடி சோறு நிதம் தின்று…

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
தேடி சோறு நிதம் தின்று…


தீபாவளித் திருநாளின் பரபரப்பில் இன்னொரு முக்கிய நாளும் வந்து போனது. அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம்.

'நவம்பர் 14- உலகக் குழந்தைகள் தினம்'. இந்த லாக்டௌன் காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழலில் நம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?

காட்சி 1

"ஐயோ! இந்தப் பள்ளிக்கூடம் எல்லாம் எப்பத் திறப்பாங்க தெரியலையே? பத்து மணி ஆனாலும் எந்திரிக்கிறது இல்ல. ஆன்லைன் கிளாஸை ஆன் பண்ணி வச்சுட்டு விளையாடிட்டு இருக்கான். போதாக்குறைக்கு அவங்க தாத்தா கையில ஃபோனைக் குடுத்து "என் பேரைக் கூப்பிட்டா ஆன் பண்ணி 'பிரசன்ட் சார்'னு சொல்லிடுங்க" அப்படின்னு வேற சொல்லிட்டான். நைட்டு கேம் விளையாடிட்டுத் தூங்கவே ஒரு மணி ஆகுது. ஸ்னாக்ஸ் வாங்கிக் குடுத்து முடியல. அது போகவும் அதை செஞ்சு குடு, இத செஞ்சு குடுன்னு தினசரி ஸ்பெஷல் சாப்பாடு கேக்குறாங்க. வீடுவீடாவே இல்ல. எங்க பார்த்தாலும் குப்பை" இப்படிப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஒரு தாய்.

காட்சி 2

"பள்ளிக்கூடம் போறேன், பள்ளிக்கூடம் போறேன்னு இவ்வளவு நாளும் சும்மா உக்காந்து சாப்ட்டாச்சு. இப்பவாவது திங்கிற சோத்துக்கு எதையாவது சம்பாதிச்சுப் போடலாம்ல? மார்க்கெட்டுல காளியண்ணன் கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு.. வேலைக்கு உன் மகனை அனுப்புறியான்னு. அங்கேயாவது போய் நில்லு.. பேப்பராவது ஒழுங்கா போடுறியா இல்லையா? இந்த மாசம் பேப்பர் போட்ட சம்பளத்தை வாங்கி என் கையில குடுக்கணும்" பிராய்லர் கோழிக் கடை வைத்திருக்கும் மாரியப்பன் தன் மகனைத் திட்டி முடிக்க, அவனது மனைவி, "ஏங்க! இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே? கடைய முடிச்சுட்டு வரும்போது ஒரு கிலோ கறி எடுத்துட்டு வரீங்களா? பிள்ளைகளுக்கு கோழிக் குழம்பு வச்சு ரொம்ப நாள் ஆச்சு" என்கிறாள்.

"இவன் என்னத்த சம்பாதிச்சுக் கிழிக்கிறான்? கோழிக் குழம்பு வச்சுக் குடுக்குற அளவுக்கு? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்" என்கிறார் மாரியப்பன்.

காட்சி 3

16 வயது சிறுவன் ஒருவன். மருத்துவமனையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான். சாயம் பூசப்பட்டு, முள்ளம் பன்றி போல் வெட்டப்பட்ட தலை. ஒட்டிப்போன கன்னங்களும் வயிறும்.

"ஸ்கூல் படிக்கிற பையனாம்மா இது? ஏன் இப்படி இருக்கான்?" மருத்துவர் கேட்க,

"அது.. பள்ளிக்கூடம் இல்லல்ல.. மத்த பையங்க கூடச் சேர்ந்து கூலி வேலைக்குப் போறான். வேல பாக்குற இடத்துல சரக்கு வாங்கிக் குடுத்து பழக்கி இருப்பாங்க போல. இப்போ மூணு மாசமா தினசரி தண்ணி அடிக்கிறான். ஒரே வயிறு வலி, வாந்தி, கை நடுக்கம்னு சொல்றான். என்ன செய்ய? சொன்னாக் கேக்க மாட்டேங்குறான். நீங்களாவது சொல்லுங்க"

"ஏம்மா! நீங்க என்ன வேலை பாக்குறீங்க?"

"ஒரு நாலு வீட்டுல வேலை செய்றேன். மாசம் ஆறாயிரம் வரும்"

"உங்க வீட்டுக்காரரு?"

"கொத்தனார் வேலைக்குப் போறாரு"

"அதுல தினசரி 600, 700 ரூபாய் கிடைக்குமேம்மா? எப்படிப் பாத்தாலும் கணவனும் மனைவியும் மாசம் இருபதாயிரத்துக்குக் குறையாம சம்பாதிப்பீங்களே? ரெண்டு பேருமாச் சேர்ந்து ரெண்டு பிள்ளைகளுக்கு சோறு போட முடியாதா? படிக்க வேண்டிய வயசுல வேலைக்கு அனுப்பி கைல காசு பாத்துட்டா, இப்படித்தான் சொல்பேச்சு கேட்க மாட்டாங்க. உடம்பு வம்பாப் போயிடும். அடுத்து படிக்கவும் நினைப்பு ஓடாது"

**
நம்புங்கள் நண்பர்களே! இந்த மூன்று காட்சிகளும் ஒரே ஊரில் தான் நடக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் இதுதான் இப்போது நடக்கிறது. ஒரு மாதம், மிஞ்சிப்போனால் மூன்று மாதம் வரை விடுமுறை இனிக்கலாம். அளவுக்கு மிஞ்சிப் போனால், அதுவே கசக்க ஆரம்பித்து விடும். உலகம் முழுவதும் அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்கு கொண்டுவர பகீரதப் பிரயத்தனம் தேவைப்பட்டது. பல தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், சட்டங்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையின் உதவி இதற்குத் தேவைப்பட்டது. எதிர்பாராது வந்த இந்தப் பெருந்தொற்று அனைத்தையும் ஒரு புரட்டு புரட்டிப் போட்டு விட்டது. வறுமைக் கோட்டுக்குச் சற்று மேலேயும், அதற்குக் கீழேயும் உள்ள பல குடும்பங்களில் குழந்தைகள் உழைக்க ஆரம்பித்து விட்டார்கள். தெருத்தெருவாக மல்லிகைப் பூ விற்கிறார்கள். தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்கான விளம்பர நோட்டீசை விநியோகிக்கிறார்கள். கடைக்குப் போய் வரவும் வீடுகளில் தண்ணீர்த் தொட்டிகளைக் கழுவவும் சிறுவர்களே விரும்பி அழைக்கப்படுகின்றனர். காரணம், பெரியவர் ஒருவர் 500 ரூபாய்க் கூலிக்குச் செய்யும் வேலையை ஒரு சிறுவனிடம் 100 ரூபாயிலோ, 200 ரூபாயிலோ வாங்கி விடலாம். சிறுவர்கள் மட்டுமல்ல, சிறுமிகளும் குடும்ப வருமானத்தை ஈட்டித்தரும் சூழலுக்குள் ஆங்காங்கே நுழைந்து விட்டார்கள். அம்மாக்களுடன் சேர்ந்து பீடி சுற்றுகிறார்கள், மாவரைத்து விற்கிறார்கள். ஹோட்டல்களுக்குக் காயை நறுக்கிக் கொடுக்கிறார்கள். வேலை செய்யும் பெண் விரும்பிக் கேட்டால் செல்ஃபோன் வாங்கித் தர வேண்டியதாகி விடுகிறது. அதன்பின் 'எப்பவும் செல்போன் பார்க்கிறாள், யாருடனோ பேசுகிறாள்' என்ற குறை வந்துவிடுகிறது.

அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் சீராக இயங்கத் துவங்கும் வேளையில் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றே வல்லுனர்கள் கூறுகிறார்கள்.1960, 70களில் நிலவிய கடுமையான வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் இப்போது ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன. உழைக்கத் துணிந்தால் எதிலும் முன்னேறலாம் என்ற நிலைதான். வட மாநிலத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் வந்து இறங்கினாலும் வேலை கொடுக்கத் தமிழக நிறுவனங்கள் தயாராக இருக்கையில், தமிழ்நாட்டில் பெரியவர்களுக்கு வேலை இல்லை என்று சிலர் சொல்வது முரண்பாடாகத் தோன்றுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சொகுசு மோகம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. ஒரு வாரம் உழைத்ததற்கு சனிக்கிழமை மது போதையுடன் கொண்டாடவேண்டும் என்ற பொதுப்புத்தி கிராமங்களிலும் ஏற்பட்டுவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

மதுவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் ஒரு ஆணின் தாயிடம் "என்னம்மா ஆரம்பத்திலேயே கண்டிச்சு இருக்கலாம்ல?" என்று கேட்டால்,

"பாவம் உழைக்கிறவன் ஆசைக்குக் குடிச்சிட்டு போறான்னு விட்டுட்டேன்" என்கிறார். அது குறித்து அவருக்குக் குற்றவுணர்ச்சியும் குறைவாகவே இருக்கிறது.

"குடித்துவிட்டுப் போகட்டுமே! அதில் என்ன தவறு? அதற்கு வைத்தியம் பார்க்கத் தானே நீங்கள் இருக்கிறீர்கள்" என்று கூறுபவர்களும் அநேகம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா? முதலில் கூறிய மூன்று காட்சிகளுள் இரண்டாவது மற்றும் மூன்றாவது காட்சிகளில் சமூகத்தில் பின்னாளில் ஏற்படக்கூடிய பாதிப்பை முன்கூட்டியே உணர முடிகிறது. இது இப்படியெனில் முதல் காட்சியில் தனிமனிதனுக்கு ஏற்படப்போகும் மோசமான விளைவு தெரிவதாக எனக்குத் தோன்றுகிறது.

'Charity begins at home' என்பார்கள். வீட்டில் பெரியவர்கள் ஆறு மணிக்கு எழுந்து, காலைக் கடன்களை ஒழுங்காக முடித்து, ஒன்பது மணிக்குள் உணவை உண்டு முடித்து விட வேண்டும். அதற்குப் பின் அனைத்துப் பாத்திரங்களும் கழுவி வைக்கப்படும். தாமதமாக வருபவருக்கு உணவு கிடையாது என்ற விதியைக் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் இப்படிப் புலம்ப நேரிடாது. தீவிர லாக் டௌனுக்குப் பின் மருத்துவமனைகள் சீராக இயங்கத் துவங்கிய நேரம் மலச்சிக்கல் பிரச்சனைகளும், உடற்பருமனால் பெண்குழந்தைகளுக்கு மாதவிடாய் தாமதமாக வரும் நிகழ்வுகளும், பெரியவர் சிறியவர் அனைவருக்குமே அதிகரித்திருக்கும் அல்சர் பிரச்சனைகளும், எதேச்சையாக நடந்ததாகத் தெரியவில்லை. விடுமுறைக் கால சோம்பல் உருவாக்கிய வியாதிகளாகவே இவை தெரிகின்றன.

எப்போதோ படித்த சிந்தனை வரி ஒன்று: பெற்றோர் சாக்லேட்டைச் சாப்பிட்டபின் உரையைக் கசக்கிக் குப்பைக் கூடையில் சென்று போட்டால், குழந்தையும் அதே போல் குப்பைக் கூடைக்கு சென்று போடும். பெரியவர்கள் நாற்காலிக்கு அடியிலேயே வீசி எறிந்தால் குழந்தையும் அதையே தான் பார்த்துப் பழகும்.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்? 'கொரோனா தொற்றுத் தந்த மன உளைச்சல் நீங்கக் கொண்டாடித் தீர்க்கிறேன்' என்று கெட்ட பழக்கங்களைப் பழகாமல், பள்ளிக்கூடம் இருந்தால் மட்டுமே அட்டவணை போட்டு வாழ்வேன், இல்லையென்றால் இஷ்டத்துக்கு இருப்பேன் என்ற எண்ணத்தை கைவிட்டு என்றென்றைக்குமான நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தால் என்றுமே தொல்லை இல்லை.

மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!!
 
Top Bottom