• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 6

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
தனித்த வனத்தில் 6

ஹோண்டா சிட்டியின் முழுதாக மேலேற்றப்பட்டிருந்த கண்ணாடிகளை மீறி உடலைத் துளைக்கும் டிஸம்பர் மாதக் குளிர், அருகில் அமர்ந்து வண்டி ஓட்டுபவன் கேட்கும் கேள்வி, காரில் மெலிதாக வழிந்த ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை என எதற்குமே அசையாமல், விரிந்த கண்களும், மகிழ்ச்சியில் திளைத்த முகமுமாய், பரவச நிலையில் (awestruck) இருந்த சாம்பவியைப் பார்த்த மன்மத ராவ் புன்னகையுடன் காரைச் செலுத்தினான்.

சாம்பவியைப் பற்றிய தனிப்பட்ட விஷயம் எதுவும் அவனுக்குத் தெரியாதெனினும், அவளது முகத்தில் எதிலிருந்தோ தன்னை விலக்கி நிறுத்திக்கொள்ள, ஏதோ ஒரு முகமூடியை அணிந்தது போன்ற இறுக்கமும், அதிலிருந்து அவ்வப்போது வெளிப்படும் அவளது இயல்பான முகத்தின் இளக்கமும் பிரதிபலிப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆனால், சாம்பவி வேலைக்கு சேர்ந்த இந்த நான்கு வாரங்களில் அவள் ஒரு சிறந்த, புத்திசாலியான, தன் படிப்பை, பணியை நேசிக்கும் இன்ஜினீயர் என்பதை அவர்களது பிரிவில் இருக்கும் ஒன்பது பேருமே அறிந்து கொண்டனர்.

சாம்பவி மாலை வேளையில் வெளியில் வாக்கிங் என்ற பெயரில் நடையாய் நடப்பதைப் பார்த்திருந்தான்.

இந்த முறை கிறிஸ்துமஸ் பண்டிகை வெள்ளியன்று வரவும், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததில், வியாழனன்று மாலையே “நாளைக்கு அவுட்டிங் போறோம். காலைல ஆறு மணிக்கு ரெடியா இரு” என்றிருந்தான்.

ஜீன்ஸ், டீஷர்ட், ஜெர்கினில் தயாராகி நின்றிருந்தவள், பத்து நிமிடங்கள் முன்னதாகவே அவனது கார் சத்தம் கேட்கவும், குளிரில் வந்தவனை உள்ளே அழைத்து சூடாகக் காஃபி கொடுத்தாள்.

“வாவ், மை குட்னஸ்” என்றான் காஃபியை ருசித்தபடி.

ஒரு சிறு டோட் பேகுடன் ஏறியவளுக்கு, சற்று நேரத்தில், கார் திப்ருகரை நோக்கிச் செல்வது தெரிந்தது. குளிரில் ஒடுக்கியபடி அமர்ந்திருந்தவள் கேள்வியாகப் பார்க்க, “வெய்ட் அண்ட் வாட்ச்” என்றான்.

வழக்கமாக கிழக்கு என்பதால் வெகுசீக்கிரம் வந்துவிடும் ஆதவன் கூட, கிறிஸ்துமஸ் விடுமுறையில் சோம்பி இருக்க, இன்னும் இருள் பிரியாத காலை வேளையில், ஓரிரண்டு ட்ரக்குகளைத் தவிர வெறிச்சோடிய சாலைகளில் காரைப் பறத்தினான்.

அஸ்ஸாமின் குளிர்காலம், நல்ல குளிரும், மிதமான பனிப்புகையும், இதமான, குறுகிய பகல் பொழுதுகளையும் கொண்டது. தேயிலையின் ஆரோக்கியத்திற்கு இந்தக் குளிரும் வெப்பமும், மழையும் மிக அவசியமானவை.

பனிப்புகையின் ஊடே விரைந்த கார், திப்ருகர் நகருக்கும் தெமாஜிக்கும் (Demaji) இடையே, பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட சாலையும் இருப்புப்பாதையும் இணைந்த ஐந்து கிலோமீட்டர் நீளம் கொண்ட போகிபீல் பாலத்திற்கு (Bogibeel bridge) அழைத்துச் சென்றான்.

சாம்பவி கடல்போன்ற ஏரிகள், பெருநதிகள் என்ற வர்ணனைகளைக் கேட்டிருந்தாலும், தாமிரபரணி முதல் நர்மதா நதிவரை பார்த்திருந்தாலும், கடல் போன்ற கரை தெரியா பிரம்மபுத்ரா பிரம்மாண்டம் என்ற பதத்தின் பொருளைக் கண்முன்னே காட்டியது.

பாலத்தின் வழியே கார் ஓடத் துவங்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாலத்தின் இரண்டு பக்கமும், எதிரேயும் நதிமேல் சூழ்ந்த பனிப்புகையும், அதைக் கலைத்து விரட்டும் சூர்ய ஒளியும், அமைதியாய் சலசலக்கும் நதியும்…

இருவருமே இயற்கையின் ஆகர்ஷண சக்தியை பிரமிப்புடன் உள்வாங்கி, ரசித்தபடி சென்றனர். இத்தனை தூரம் வந்த வேகத்தை விடுத்துப் பாலத்தின் வழியே கார் மிதமான வேகத்தில் சென்றது. இடையில் இரண்டு ரயில்கள் கடந்தன.

பாலம் தாண்டிப் போய் இடதுபுறம் திரும்பி, ஓரிரு கிலோமீட்டர் சென்று நதிக்கரையில் காரை நிறுத்தினான்.

மணி ஒன்பதரை ஆகி இருக்க, குளிரை விரட்டும் முயற்சியில் தோற்றாலும், சூரியன் வெளிச்சத்தை வாரி வழங்கினான்.

இறங்கி நின்ற மன்மதராவ், சாம்பவியிடம் “ரா” என்று கதவைத் திறந்துவிட்டு அமைதியாக நின்றான். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என்று பேசினாலும் அடிப்படை வார்த்தைகள் அனைத்தும் அவனுக்குத் தானாகவே தெலுங்கில்தான் வந்ததை சாம்பவி கவனித்தாள். அதோடு, அவனறியாமலே தன்னை ஒருமையிலும் பன்மையிலுமாக மாற்றி மாற்றி அழைப்பதும் புரிந்தது.

இருவரும் அமைதியாக நதியை வேடிக்கை பார்த்தனர்.

சாம்பவி “கடல் மாதிரி Massive, ஆனா அமைதியா இருக்கு இல்ல?”

“பெருசுதான். ஆனா, கடலாவது எப்போதாவதுதான் சீறி உள்ள வரும். பிரம்மபுத்ரால வருஷம் தவறாம மழைக்காலத்துல வெள்ளம் வர்றதும், அது தன்னோட பாதையை மாத்திக்கறதும், அதனால பல கிராமங்கள், விளைநிலங்கள், இயற்கை வளங்கள் அழிஞ்சும், தடயமில்லாமப் போறதுமா, கணிக்கவே முடியாத நதி இது”

மன்மத ராவின் வார்த்தைகளைக் கற்பனித்தவளுக்கு உடல் உதறியது.

“கூல், கூல். இந்த மக்களும் அரசாங்கமும் இதுக்குப் பழகி இருக்காங்க. மழைக்காலத்துல வயலுக்கு நடுவுல இருக்கற குடிசைகள்ல, சின்னச்சின்ன வீடுகள் இருக்கற கிராமங்கள்ல கூட வீடுகள்லயே சின்னதா படகு ஒண்ணு இருக்கும். வெள்ளம் வந்தா மக்கள் அவசியமான சாமான்களோட பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுவாங்க”

“ம்…”

சிலர் புதிதாகப் பிடித்த ரோஹு(Rohu) மீன்களை விற்றனர். ஆர்வமாய்ப் பார்த்தவள்
“எவ்வளவு பெருசு?”

“இது இங்க ரொம்ப ஃபேமஸ். கங்கா, பிரம்மபுத்ரால கிடைக்கும். வேணுமா?”

“ம்ஹும், நான் எப்போதும் ஏதாவது ஈஸியா சமைச்சுப்பேன். நீங்க…?”

“நான் வெஜிடேரியன்” என்றவனை சட்டெனத் திரும்பிப் பார்த்தவளின் பார்வையில்,

“எனி ப்ராப்ளம் சாம்பவி?”

“நத்திங்”


“கிளம்பலாமா, பசிக்குது. இது சின்ன ஊர். என்ன கிடைக்கும்னு தெரியாது, வா, பார்ப்போம்”

“இல்ல ஸார், நானே பிரேக் ஃபாஸ்ட் கொண்டு வந்திருக்கேன்”

“வாவ்”

டோட் பேகில் இருந்து உருளைக்கிழங்கு மசாலா ஸ்டஃப் செய்யப்பட்ட சாண்ட்விட்ச்களையும், மிளகாய்ப் பொடி தடவப்பட்ட இட்லிகளையும் பார்த்த மன்மத ராவ் “ஈயல்லா நாகே செல்லா” (இதெல்லாம் எனக்கே செல்லம் - ப்ரியம்)

சாம்பவி புரியாமல் விழிக்க “மாயாபஜார் கல்யாண சமையல் சாதம் பாட்டோட ஒரிஜினல். தெலுங்கு வெர்ஷன்”

“ஓ!”

காரினுள் அமர்ந்து சாப்பிட்டனர். ஃப்ளாஸ்க்கில் இருந்து டீயை ஊற்றிக்கொடுத்தாள்.

“சாம்பவி, இதை சொல்லலாமான்னு தெரியல, ஆனா யூ ஆர் அன் ஏன்ஜல். தேங்ஸ் ஃபார் குட் ஃபுட்”

“...”

“போகலாமா?”

சற்றே அதிகரித்திருந்த போக்குவரத்திலும், பனியினூடே பாய்ந்த சூரியக் கதிரொளியில் வெள்ளிப்பாளமாய் மின்னியது பிரம்மபுத்ரா நதி.

பாலம் தாண்டி திப்ருகர் நகருக்குத் திரும்பியதும் “உனக்கு ஏதாவது வாங்கணுமா சாம்பவி?”

“நத்திங் மச். ஃப்ரூட்ஸ், காய்கறி மாதிரிதான்”

“தீன்சுக்கியால வாங்கலாம், பெட்டரா இருக்கும்”

சிறிது தொலைவு சென்றதும், மன்மத ராவின் மொபைல் அழைக்க, ப்ளூ டூத்தில் பேசினான்.

“நேனு செயலேனுமா”
(என்னால முடியாதும்மா)

“...”

“நாக்கு இஷ்டம் லேகபோதே வடிலேயண்டி”

(எனக்கு இஷ்டம் இல்லைன்னா விடேம்மா)

“...”

“ஏதைனா உன்ட்டே, நேனே செப்துன்னானு மா”

(ஏதாவது இருந்தா நானே சொல்றேன் மா)

“ஒகே மா, பை” என்று காலை கட் செய்தான்.

சாம்பவியிடம் “ஸாரி, அம்மாவோட கால்”

“காட் இட். அதுக்கேன் ஸாரி, எனி ப்ராப்ளம்?” என்றவளின் குரலில் முதல் முறையாக மன்மத ராவின் குரலில் ஏதோ ஒரு விலகல் தன்மையும் எரிச்சலும் வெளிப்பட்டதில் தயக்கம்.

“ப்ச், ப்ச்… நத்திங்”

“...”

சற்று அமைதிக்குப் பின், அவனே “காலைல நீ கேட்ட, இப்ப அம்மா கேக்கறாங்க. வேற ஒண்ணுமில்ல”

சாம்பவிக்குக் காலையில் நடந்த உரையாடல் உள்ளே ஓடியது.

மன்மத ராவை ஒரு முறை தன் வீட்டிலும், மற்றபடி அலுவலகத்திலுமே பார்த்தவளுக்கு, அவனைப் பற்றி மட்டுமல்ல, அவளது பிரிவில் இருந்த யாரைப் பற்றியுமே அதிகம் தெரியாது.

கல்பகோஷும், அதிதி தாம்னே என்ற மராட்டியப் பெண்ணும் மட்டுமே திருமணம் ஆகாதவர்களாக இருந்தனர். இன்னும் இரண்டு நடுத்தர வயதுப்பெண்கள் உயரதிகாரிகளுக்குக் காரியதரிசிகளாக வேலை செய்தனர்.

அந்தப் பிரிவின் தலைவனான மன்மத ராவின் பதவியையும், அதற்கான வயதையும் தானே சமன் செய்து, அவனுக்கு ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் என விளம்பரத்தில் வருவதுபோல், அழகான குடும்பத்தை வாரி வழங்கி இருந்தவள், இன்று காலையில் அவன் கார் வந்து நின்றதும், சுற்றுமுற்றும் தேடிய பிறகுதான் அவனை உள்ளே அழைத்தாள்.

காஃபியை நீட்டியவளிடம், மன்மத ராவ் “என்ன தேடற?”

“உங்க வைஃப், பசங்க..”

“ஆ…ஸ்…”

இவளது பதிலில் மன்மத ராவ் வாயைச் சுட்டுக்கொண்டான்.

“நிஜமாவே உனக்குத் தெரியாதா சாம்பவி, நீ யார் கூடவுமே பேசி அறிமுகப் படுத்திக்கலையா?”

“ஸார்”

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைமா, ஐ’ம் எ பேச்சலர். அதனால என் கூட அவுட்டிங் வர்றதுல உனக்கொண்ணும் பிரச்சனை இல்லையே?”

அவனது பதிலோ, அல்லது கேள்வியோ, சாம்பவிக்குப் புன்னகையை வரவழைக்க “உங்க காஃபி முடிஞ்சதும் போகலாம்”

மன்மதராவின் “சாம்பவி” என்ற அழைப்பில் கலைந்தாள்.

“ஸாரி ஸார்”

“இந்த ஸாரை விடலாமே சாம்பவி?”

“...”

“என்ன, மன்மதனை எப்படிக் கூப்பிடன்னு தெரியலையா?”

அவளது சிந்தனையைக் கேள்வி ஆக்கியவனைப் பார்த்து முகம் சிவந்தவளின் மனதிலும் அதே கேள்விதான்.

*******************

சாம்பவி மன்மத ராவுடன் அதிகாலையில் வெளியில் சென்று, மதியம்போல் திரும்பியதை எப்படியோ அறிந்துகொண்டு, மறுநாள் அழைத்த கல்பகோஷ் “நாம சன்டே அன்னைக்கு கண்ட்டி பாபா மந்திருக்குப் போகலாமா?” என்று கேட்டான்.

சாம்பவி அப்போது பிஸியாக யூட்யூபில் பெஸரெட் ரெஸிபீ வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். செஃப் சஞ்சய் தும்மா, ராக்ஸ் கிச்சன் என ஒரு ரவுண்ட் வந்தவள், வெங்கடேஷ் பட்டின் ரெஸிபியில் செட்டில் ஆனாள்.

மாலையில் முதல் நாள் எடுத்த சில படங்களையும் “டின்னர் அனுப்புகிறேன்” என்ற தகவலையும் மன்மத ராவிற்கு வாட்ஸ்ஆப்பிவிட்டு, பெஸரெட், கார சட்னி, தேங்காய் சட்னி, தனியாக உப்புமா என தயார் செய்து, ஷோபாவிடம் கொடுத்து விட்டாள்.

“ஏன்ஜல் செஃப்” என்று ஸ்மைலியுடன் பதில் வந்தது. இரவு ஒன்பது மணிக்குக் கால் செய்தவன் “பெஸரட்டு சால பாகுந்தி, தேங்க் யூ” என்றதில் ஏனோ வெகு குஷியாய் உணர்ந்தாள்.

“ஸார்… கல்பகோஷ் நாளைக்கு கண்ட்டி பாபா கோவிலாமே, அங்க போகலாம்னு கூப்பிட்டிருக்கார்”

“இதை ஏன் எங்கிட்ட சொல்ற?”


“....”

“ஓகே, குட்நைட்”

“ஸாரி ஸார், குட்நைட்”

******************

சாம்பவி விடிவிளக்கின் நீல நிற வெளிச்சத்தில் ரஜாய்க்குள் சுருண்டு நடுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். நேரம் இரவு ஒரு மணி. பொட்டுத் தூக்கம் இல்லை.

மன்மத ராவின் “இதை ஏன் எங்கிட்ட சொல்ற?” என்ற கேள்வியில், இரண்டு நாளாக மனதில் இருந்த உற்சாகம் முழுவதும் வடிந்த உணர்வு.

‘நான் ஏன் அப்டி லூஸு மாதிரி இதை அவர்கிட்ட போய் சொன்னேன்?’

‘எதை எதிர்பார்த்து, அப்படி புகார் சொல்ற, அனுமதி கேக்கற தொனில அவர் கிட்ட சொன்னேன்?’

‘என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பார்? ஏதோ தனியா இருக்கேன்னு, ஸ்கூட்டரையும் கொடுத்து, வெளிலயும் கூட்டிட்டுப் போனார். நான் அவர் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கறதா நினைச்சு, அப்படி பதில் சொல்லிட்டாரோ?’

‘நான் அவர் சொன்னதைக் கேட்டு, அவர் கிட்ட வண்டியை வாங்கிக்கிட்டது, அவரோட வெளிய போனது, டின்னர் அனுப்பினது எல்லாமே அவருக்குத் தப்பா பட்டிருக்குமோ?’

‘சேச்சே, இருக்காது. அவரேதான் வெஸ்பாவை கொண்டு வந்து கொடுத்தார். அவுட்டிங் போகலாம்னார். பெஸரெட் செய்யத் தெரியுமான்னு கேட்டார். செஞ்சு கொடுத்தேன்’

‘ஒருவேளை நான் என்னை ரொம்ப வெளிப்படுத்திட்டேனோ, அவர் எதுவும் தப்பா நினைச்சுருப்பாரோ?’

‘ஒருக்கால் கல்பகோஷைப் பத்தி நான் புகார் சொல்றேன்னு நினைச்சுட்டாரோ?’

சாம்பவி தன்னிரக்கத்தில் விளைந்த கேள்விகளுடன் குழம்பித் தவித்தாள்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின், தன்னை எடைபோடாது, பரிதாபப்படாது, அனுதாபமாகப் பேசாது, பொறாமை என்று குற்றம் சொல்லாது, சுமையாக நினைக்காது, இயல்பான தோழமையுடன், பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு, பேசிச் சிரித்த மன்மத ராவின் சட்டென்ற விட்டேத்தியான, சற்றே அலட்சியமான பாவனையில் வெளிப்பட்ட கேள்வியை சாம்பவியால் இயல்பாகக் கடக்க முடியவில்லை.

தவறு செய்துவிட்ட குழந்தை அம்மாவின் மன்னிப்புக்கு ஏங்குவதைப்போல், மீண்டும் அவனுடன் இயல்பான பேச்சுக்கு ஆசைப்பட்ட தன் மனதைக் கண்டு சாம்பவி பயந்தாள்.

*******************

அதே நேரம், சாம்பவியிடம் தான் சொன்ன பதிலுக்கும், அதைச் சொன்ன விதத்துக்கும் வருந்தியபடி படுத்திருந்த மன்மத ராவுக்கு, உண்மையில் சாம்பவி கல்பகோஷுடன் வெளியில் செல்வது உவப்பாக இல்லாது, உவர்ப்பாக இருந்தது. அதைச் சொல்ல முடியாத நிலையில் இருந்தவன், வேறு விதத்தில் வெளிப்படுத்தி விட்டான்.

‘பாவம், சாம்பவியின் முகமே வாடிப் போச்சு’

‘என்னதான்டா உன் பிரச்சனை. பேரு பெத்த பேரு, தாக நீரு லேதுன்ற மாதிரி, ஒரு சின்னப் பொண்ணுகிட்ட ஒழுங்கா பேசத்தெரியாம பேசி, சொதப்பி வெச்சிருக்க. இதுல நீ சீனியர் வேற ’

இதை எப்படி சரி செய்வதென்ற யோசனையுடன், நூறாவது முறையாக சாம்பவி அனுப்பிய ஃபோட்டோக்களைப் பார்த்தான்.

‘ஐ ஷுட் ஃபிக்ஸ் திஸ்’

******************

கல்பகோஷ் ஒரு படித்த, மேல் நடுத்தர வர்க்கப் பெற்றோரின் மகன். திருமணமான ஒரு கைனகாலஜிஸ்ட் அக்கா இருக்கிறாள். அவளது கணவரும் மருத்துவர்தான்.

சீரான நல்லொழுக்கங்களுடன், தேவையான வசதிகளுடன் வளர்க்கப்பட்ட கல்பகோஷ், படிப்பிலும், வேலையிலும் பெற்றோரின் ஆசையைத் தட்டாது நிறைவேற்றினான்.

ரபீந்திர சங்கீத், பெங்காலி கவிதைகள் என ஆழ்ந்த மொழிப்பற்றும் இலக்கிய ரசனையும் கொண்ட அவனது வீட்டில், அவனது தாய் ஒரு கவிதாயினி. வாழ்வியல் கதைகளை எழுதும் எழுத்தாளி.

வாழ்வில் பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்காத, அதனாலேயே அதிகம் தோல்வியை, ஏமாற்றத்தை சந்தித்திராத கல்பகோஷ், சாம்பவியைக் கண்ட கணத்தில் அவள்மேல் காதல் கொண்டான்.

அவளுக்கு சாரதியாய், நண்பனாய், எல்லாமாகவுமாய் இருக்க அவன் ஆசைப்பட, அதில் இந்த சீனியர் மேனேஜர் வந்து குறுக்குசால் ஓட்டினால்?

முதலில் லிஃப்ட் கொடுத்தார், பின் வண்டியே கொடுத்தார். பார்த்தால், இருவரும் எங்கேயோ போய்விட்டுக் குஷியாக வருகின்றனர். சின்னப் பெண்ணுடன் இவருக்கென்ன வேலை?

பெயர் வேறு மன்மத ராவ். எதற்கு ரிஸ்க்?

வடகிழக்குப் பருவமழையின் புயல் போல் மையம் கொண்ட காதல், கரையைக் கடக்கும் முன் சாம்பவியிடம் சொல்லத் தீர்மானித்தவன், சாம்பவியின் வீட்டு வேலையாள் ஷோபா உணவுப் பாத்திரங்களுடன் மன்மதராவின் வீட்டுக்குச் செல்வதைக் கண்டவன், விடிவதற்குக் காத்திருந்தான்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom