• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 5

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
27
தனித்த வனத்தில் 5


தா
லி கட்டியதும் முடியாத திருமணச் சடங்குகளும் விலகாத உறவுகளும் கலாச்சார அடையாளமாகவோ, காலில் இட்ட விலங்காகவோ இருப்பது அவரவர் சூழலையும் மனிதர்களையும் பொறுத்ததே.

இங்கு திருமணமான ஜோடிகள் ஒரு பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த உணர்வு சிறிதுமின்றி மறுவீடு, குலதெய்வம், மாவிளக்கு, பொங்கல், வேளைக்கொரு விருந்து என மகிழ்ச்சியில் திளைத்திருக்க, சாம்பவிக்குதான் சங்கடமாக இருந்தது.

நாகரிகம் என்ற போர்வையில் புறம்பேசி, அக்கறை என்ற பெயரால் வம்பு விசாரித்த
சுற்றத்தை விட, அவசரப்பட்டு கர்ப்பமான மகளின் வாழ்வு சீர்பட அமைதிகாத்த பெற்றோரை விட, நீண்ட வருடங்களாக வீட்டுவேலை செய்யும் கோவிந்தம்மா விஷயம் அறிந்ததில் , நேரடியாக மனோஜிடம்"கொஞ்சங்கூட பெரிய பாப்பாவை நினைச்சுப் பாக்கலையா மாப்பிள்ளை?" என்று கேட்டது மிகுந்த ஆறுதலைத் தந்தது.

'இப்பதான் கல்யாணமான மாதிரி இருக்கு, அதுக்குள்ள நாலு மாசம் ஓடிப்போச்சு' என்பது போன்ற சந்தோஷ அங்கலாய்ப்புகளுக்கிடையே, தன் இன்ஜினீயரிங் படிப்பை முடித்த தேவசேனாவுக்கு, வேலைக்குச் செல்வதில் சிறிதும் விருப்பமில்லை. கர்ப்பமும், பிரசவ நேரம் நெருங்குவதும், தேவாவுக்கு சாதகமாயிற்று.

"அவர்கிட்ட முதல்ல எனக்குப் பிடிச்சதே, அக்காவை வேலையை விடச் சொன்னதுதான். அவ வேலையை விடுவான்னு நான் நம்பவேயில்ல. இதை மாமா (அவருக்கு நான் அப்படிக் கூப்பிட்டாதான் புடிச்சிருக்காம்) கிட்டக்கூட சொன்னேன்'' என்றவளைப் பார்த்து சாம்பவி அயர்ந்துதான் போனாள்.

'எத்தனை முன்னெச்சரிக்கை, திட்டம், சுயநலம்? வெளி மனிதர்களிடமோ, அலுவலக ரீதியாகவோ கூட இத்தனை கறாரான சுயநலத்துடன் நடக்க முடியுமா என்ன?'

தன்னை வைத்துத் தங்கை காய் நகர்த்தி இருக்க, சாம்பவி தான் வேலையை விட்டதை எண்ணி இன்னும் வருந்தினாள்.

பெண்கள் அதிகம் படிக்க முன்வராத பெட்ரோகெமிகல் பொறியியல் படிப்பைப் படித்து, கேட் (GATE - Graduate Aptitude Test in Engineering)) எழுதி, ஓஎன்ஜிசியில் கேம்பஸில் செலக்ட் ஆகி, இரண்டரை வருடப் பணி அனுபவம் இருந்தும், உள்ளூரில் சட்டென்று அவளுக்கு அதுபோன்ற வேலை கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும், அதற்கான காத்திருப்பு நாட்கள் மிக அதிகம்.

அவளது பெற்றோர், எப்படியாவது ஒரு மாப்பிள்ளையைப் பிடித்து சட்டுபுட்டென கல்யாணத்தை முடிக்கத் துடித்தனர்.

சிறந்த வரனென்று தேர்வு செய்யப்பட்டவனின் லட்சணமே இப்படி இருக்க, இன்ஸ்டன்ட் மாப்பிள்ளையை எப்படி நம்புவது?

இதில் மற்றொரு கேலிக்கூத்தாக, செய்த தப்புக்குப் பிராயச்சித்தம் செய்வதாக நினைத்து, மனோஜே சில வரன்களைக் கொண்டு வந்ததோடு, தந்தையின் வற்புறுத்தலில் ஒரு குடும்பம் பெண் பார்க்க வேறு வர, வீட்டின் மருமகனாக அவனையும் அழைத்ததும், அன்று தேவசேனா செய்த அலப்பறையும்…

கல்வியாண்டு முடியும் தருவாயில் இருக்க, சாம்பவியால், சின்னச் சின்ன பள்ளிகளில் கூட வேலைக்கு முயற்சிக்க முடியவில்லை.

கேலி, வம்பு, கிண்டலை சுலபமாகக் கடக்கக் கற்றவளால், அனுதாபச் சொற்களையும் பரிதாபப் பார்வைகளையும் சகிக்க முடியவில்லை.

'எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, என் மனசு, உடம்பு எல்லாம் முழு ஆரோக்கியத்தோட, பர்ஃபெக்ட் கண்டிஷன்லதான் இருக்குன்னு ஓங்கிக் கத்தணும் போல இருக்கு'

நடுவில் ஒரு முறை ஆன்லைனிலும், ஒருமுறை கொல்கத்தாவிலும் இரண்டு கட்டமாக அஸ்ஸாமில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்போரேஷனின் நேர்முகத் தேர்வு நடந்தது.

வீட்டினரின் மறுப்பை மீறி, பிடிவாதமாகக் கொல்கத்தா சென்றவளிடம், முந்தைய வேலையை விட்டதற்குக் காரணம் கேட்க 'பர்ஸனல் ப்ராப்ளம்' என்றாள். அது முடிந்து மூன்று மாதமாகியும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சாம்பவி தனக்காக வகுத்துக்கொண்ட வீட்டு வேலைகள், படிப்பு, டீவி, அண்ணன் மகன் ஆதி, பேச்சு, சிரிப்பு என இயல்பாக இருந்தால் "இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் நின்னு போன கவலையோ பயமோ கொஞ்சமாவது இருக்கா பாருங்க" என்றனர்.

வேலை இல்லாததும், கடந்து போனவையும் மனதை அழுத்த, அவள் அமைதியாக இருக்கும் நாட்களில்

"வயசுப் பொண்ணு இப்படியே முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டு, கொஞ்சம் கூட சிரிப்போ கலகலப்போ இல்லாம இருந்தா எப்படி?" என்றனர்.

இதே கருத்துகளை வேறு வார்த்தைகளில் புலம்பும் அம்மா சகுந்தலா ஒரு முறை இதை தேவசேனாவிடம் சொல்லிவிட "இவர் கூட உங்கக்கா உன்னை மாதிரி ஃப்ரீயா பேசமாட்டா,
ரொம்ப போர்னு சொல்வார் மா" எனவும், அன்று சூர்யா போட்ட சத்தத்தில்தான் தேவசேனா அடங்கினாள்.

மனோஜ் வீட்டில் ஏழாம் மாதம் வளைகாப்பு செய்வதுதான் ராசி எனவும், சிறப்பாக ஏற்பாடு செய்து, விழா முடிந்ததும் தேவாவை இங்கே அழைத்து வந்துவிட, மனோஜும் அநேகமாக இங்கேயே இருந்ததில், சாம்பவி மீண்டும் ஹாலுக்குக் குடியேறினாள்.

இந்நிலையில், மீண்டும் கருத்தரித்த மீராவை மசக்கை சுழற்றியடிக்க, பெரும்பாலான வீட்டுவேலைகளும், ஆதியும் சாம்பவியின் வசம் வந்தது.

கர்ப்பகாலத்தில் கிடைக்கும் தனக்கான முக்கியத்துவத்தை, ஏதோ வரலாற்று நிகழ்வாக, செயற்கரிய சாதனையாகக் கருதிய தேவசேனாவின் அதிகாரம் வானளாவியது.

ஜுஸைப் பிழிந்து, பழங்களை நறுக்கி, வீங்கிய காலுக்கு வெந்நீர் வைத்தே சாம்பவியும் சகுந்தலாவும் களைத்தனர்.

இடையில் மருமகளைப் பார்க்க வந்த மனோஜின் அம்மா, பொதுவாக "சாம்பவிக்கு இன்னும் வரன் எதுவும் அமையலையா?" என்றவர், சும்மா இருந்த மீராவிடம் "வரவர சாம்பவியோட பார்வையே சரியில்ல. எதுக்கும் உங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போடச் சொல்லும்மா" என்று குழப்பிவிட்டுச் சென்றார்.

மனோஜும் தேவசேனாவும் சுதந்திரமாகப் புழங்கியதில், சங்கடப்பட்ட சாம்பவியின் ஒதுக்கமும் மௌனமும் பொறாமை என்ற பெயர் பெற்றது.

தேவாவிற்கு ஆண் குழந்தை பிறந்து ஒன்றரை மாதமான நிலையில் ஒருநாள் மதியம் சகுந்தலா கிச்சனில் பிஸியாக இருந்தார். சூர்யாவும், மீராவும் ஆதியுடன் வெளியில் சென்றிருந்தனர்.

ஈரம் செய்துவிட்ட குழந்தைக்கு உடைமாற்ற வந்த சாம்பவி குழந்தையின் மென்மையில் மயங்கி 'என் பட்டுக்குட்டி' என்று ஆழ்ந்து வாசனை பிடித்து, முத்தமிட்டுத் தொட்டிலில் போட்டபோது சரியாக மனோஜ் உள்ளே வரவும், பார்த்துக்கொண்டிருந்த தேவசேனா முகம் மாறினாள்.

தேவா "இனிமே குழந்தை வேலையை அக்காகிட்ட கொடுக்காதம்மா. எனக்கு அவ குழந்தையைக் கொஞ்சறதும், மாமாவை (மனோஜ்) பாக்கறதும் சரியாப் படலை" என்றதைக் கேட்ட சகுந்தலா வாயடைத்துப் போனாரெனில், கேட்டிருந்த சாம்பவிக்கு அதுவே, கடைசி இறகாயிற்று.

விடுதலை வேண்டி நின்றவளுக்கு வரமாய், அஸ்ஸாமின் டிக்பாய் (Digboi) என்ற இடத்தில் அமைந்த இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷனில் இருந்து , மூன்று வாரங்களில் வேலையில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது.

பெற்றோருக்கு சிறிதும் விருப்பமில்லாத நிலையில், வேலையில் சேர பிடிவாதமாக இருந்தவளுக்கு சூர்யா மட்டுமே ஆதரவளித்தான்.

"இப்ப கல்யாணம் நிச்சயமானா என்னக்கா செய்வ?" - தேவசேனா.

"எனக்கா தோணினா தவிர,, இனி யாருக்காகவும் என் வேலையை விடமாட்டேன்"

விமானத்தின் மைக் கரகரக்க, இடது புறம் தெரியும் எவரெஸ்ட் சிகரத்தைப் பார்க்கச் சொன்ன பைலட்டின் குரலில், கலைந்து சாம்பவி, வெளியே பார்த்தாள்.

காலை ஒன்பது மணி வெயிலில், குளிர்காலமாதலால் புதிதாகப் பனிப்பொழிவு உருக்கி ஊற்றிய வெள்ளியாக மின்னிய எவரெஸ்ட்டைக் காண மனம் நிர்மலமாக, நிச்சிந்தையாக ஆனதுபோல் உணர்ந்தாள். இயற்கை தரும் மனோபலமும் ஆத்மசக்தியும் தனிதான்!

********************

திப்ருகரின் மோஹன்பாரி விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து தன் பயணப் பொதிகளைச் சேகரித்துக்கொண்டு வெளிப்பட்டு, அலுவலக வண்டிக்காகக் காத்திருந்த சாம்பவியின் மொபைலுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. ஏற்றாள்.

'மிஸ். சாம்பவி?'

'யெஸ்'

'கொஞ்சம் முன்னால வந்து லெஃப்ட்ல பாருங்க, ஒரு ப்ளூ கலர் ஹோண்டா சிட்டி கார் இருக்கும், பக்கத்துலயே நான் நிக்கறேன்… பாத்துட்டீங்களா, இதோ வரேன்" என்றவன், அருகில் வந்து, அவள் கையிலிருந்த ட்ராலியைக் கைப்பற்றித் தள்ளத் தொடங்கியபடி சரளமான ஆங்கிலத்தில் பேசினான்.

"ஹாய், ஐ'ம் மன்மத ராவ். சீனியர் மேனேஜர், குவாலிடி அஷ்யூரன்ஸ். Welcome to our team" என்றதில், மன்மத ராவ் என்ற பெயரில் சற்றே ஜெர்க் ஆனவள், வந்த சிரிப்பைப் புன்னகையாக்கிக் கை குலுக்கினாள். அவனே கார் டிக்கியில் பொருட்களை ஏற்றினான்.

புதிதாக வேலையில் சேர வந்திருக்கும், ஆரம்பநிலை பொறியாளரான தன்னை, தான் ரிப்போர்ட் செய்ய வேண்டிய பதவியில் இருக்கும் ஒருவர் அழைக்க வந்ததில் சற்றே வித்தியாசமாகவும் சங்கடமாகவும் உணர்ந்த சாம்பவி,

"ஆஃபீஸ் வண்டி…" என்று கேள்வியாக இழுத்தாள்.

"மழையா இருக்கு. எனக்கும் இங்க ஒரு பர்ஸனல் வேலை இருந்தது. இங்க டிஸ்டன்ஸும் அதிகம். ஸோ…" என்று தோள்களைக் குலுக்கினான். சாம்பவிக்குக் கார் கதவைத் திறந்து "ஹாப் இன்" என்றபடி தன் ஸீட்டை நோக்கிச் சென்றான்.

கார் கிளம்புவதற்குள் தந்தையிடமிருந்து அழைப்புவர, "வந்து சேர்ந்துட்டேம்ப்பா, ஹான், கூப்பிட்டுப்போக வந்திருக்காங்க, அங்க போய்ட்டு பேசறேன்" என்று கட் செய்தாள்.

ஹோண்டா சிட்டி அந்தச் சிறிய விமானநிலையத்தில் இருந்து வெளியேறி, தீன்சுக்கியா வழியாக டிக்பாய் போகும் சாலையில் ஓடத்தொடங்கிய இரண்டாவது நிமிடமே சாம்பவி பிரமித்தாள்.

அவளும் ஊட்டி, இடுக்கி, மூணாறு, வால்பாறை எனத் தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து இருக்கிறாள்தான். ஆனால், இடையில் தென்பட்ட சின்னச் சின்ன கிராமங்களின் மளிகை மற்றும் பெட்டிக் கடைகள், சில பிரம்பு ஃபர்னிச்சர் செய்து விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இப்படி சாலையின் இரு மருங்கிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் தேயிலைச் செடிகள்தான் தென்பட்டது .

இதில் சாலையின் ஒருபுறமாக இருப்புப் பாதைகள் செல்ல, சற்று நேரத்தில் ஒரு ரயிலும் எதிரே கடந்தது. பத்தரை மணிக்கும் விலகாத பனி, சாரலான குளிர்கால மழை, பசுமையைத் தவிர வேறெதுவும் கண்ணுக்குத் தெரியாத இயற்கை, நடுவே ரயிலோடும் பாதை என, ஏதோ தீம் பார்க்கினுள் வந்த உணர்வில் சாம்பவி வாயைப்பிளக்காத குறையாக வெளிக்காட்சிகளை கண்களில் நிரப்பிக்கொண்டாள்.

சிறிது தூரம் அமைதியாக வந்த மன்மத ராவ் "என்ன, மனசுல மேரே சப்னோ கீ ராணி கபி ஆயகி தூ' பாட்டு ஓடுதா?" என்று தமிழில் மாட்லாடவும், முதலில் அவன் தமிழ் பேசியதில் திடுக்கிட்டாலும், சிறிது ஆறுதலாகவும் உணர்ந்தாள்.

"ம்… கொஞ்சம் அப்டிதான் தோணுது. எப்படி தமிழ்…"

"எங்க தாத்தா, பாட்டிக்கு திருச்சி. மாமா இன்னும் அங்கதான் இருக்காரு. சின்ன வயசுல எவ்ரி இயர் லீவுக்குப் போவோம். நிறைய தமிழ் சினிமா பார்ப்பேன்"

"ஓ!"

மீண்டும் சிறிது அமைதிக்குப் பின் “ம்யூஸிக்?" என்றான்.

"ஓகே" என்ற சாம்பவி, சித் ஸ்ரீராமையோ, எஸ்பிபியையோ எதிர்பார்த்திருக்க, இதமான ஒலி அளவுகளில் கதிரி கோபால்நாத்தின் சாக்ஸஃபோன் இசை வழிந்தது.

"ஐ ப்ரிஃபர் இன்ஸ்ட்ருமென்ட்டல், அதுலதான் வார்த்தையை மறந்து இசையை அனுபவிக்க முடியும். தெரியாத பாட்டுன்னா இன்னும் பெஸ்ட்"
என்றவனைத் திரும்பிப் பார்த்தாள்.

நன்கு சிவந்த நிறத்தில், இடது காதில் ஒற்றைக் கல் (வைரம்!) தோடும், தலை, மீசை, தாடி எல்லாம் ஒன்று போல் முள் முள்ளாக வளர்ந்திருந்தது (சமீபத்தில் மொட்டை அடித்திருக்க வேண்டும்!).

ஆறடிக்குக் கீழான உயரத்தில், ஒல்லியாக, ஆனால் திடகாத்திரனாக இருந்தான். பழுப்பும் பச்சையும் கலந்த பூனைக் கண்கள். அவனது நிறத்திற்குக் குளிரில், காது, மூக்கு நுனி எல்லாம் சிவந்திருந்தது. இத்தனைக்கும் நல்ல உல்லன் ஜாக்கெட் அணிந்திருந்தான். டைட்டானியம் ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தான்.

மன்மத ராவ் கியர் மாற்றக் கையை நகர்த்தவும், சாம்பவி தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

அவன் வகிக்கும் பதவிக்கு மிக இளமையாகத் தெரிந்தான். மன்மத ராவ் என்ற பெயர்தான் கொஞ்சம் இடித்தது.

அந்த பெயருக்கான உடையில் அவனைக் கற்பனை செய்தவள், தலையை உலுக்கிக்கொண்டு வெளியே பார்த்தாள்.

"என்ன சாம்பவி, கரும்பு வில் கிடைக்கலையா, இல்ல வேஷமே நல்லா இல்லையா?"

"ஹாங்… ஸ.. ஸார்"

"கூல், கூல். என் பேரைக் கேட்டதும் எனக்கு ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டுப் பாக்காதவங்க ரொம்பக் கம்மி"

"ஸாரி"

"கமான்"

முழுதாக இரண்டு மணி நேரப்பயணம். அங்குள்ள சீதோஷணம், உணவு வகைகள், மக்கள், அலுவலகம் என அவ்வப்போது பேசிக்கொண்டே வந்தவன், சாம்பவியை நேரே அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட கம்பெனி குவார்ட்டர்ஸில் கொண்டு போய் விட்டு,

"பின்னாலதான் என் வீடு. எனிதிங் யூ வான்ட், சேவ் மை நம்பர். ஸீ யூ" என்று சென்றுவிட்டான்.

*****************

வீடு திறந்திருக்க, ஒரு ஆணும், பெண்ணும், தம்பதியாக இருக்க வேண்டும், நின்றிருந்தனர்.

"நான் ஷோபா, இது தாஸ், என் கணவன், தோட்டவேலை செய்வான்" என்ற ஷோபாவின் ஹிந்தியில் அஸாமீஸும் நேபாள மொழியும் கலந்து ஒலித்தது.

காலை வேளையில் லிப்ஸ்டிக்குடன், பளிச் அழகியாக நின்றிருந்தாள். தம்பதிகளிடம் ஏதோ அழுகிய, வினோத வாசனை அடித்தது.

இருவரும் சாமான்களை உள்ளே எடுத்துச் சென்றனர், வீட்டின் உள்ளும் வெளியிலும் சுற்றிப் பார்த்தாள். இதுவும் அலுவலகக் குடியிருப்புதான் எனினும், வீடுகள் இருந்த இடமும் சூழலும், புகைப்படங்களில், ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் சிறு பங்களாக்களைப் போல் காட்டேஜ்களைப் போல் இருந்தது.

ஓவ்வொரு வீட்டைச் சுற்றியும் செடி, கொடிகளும், வானளாவிய மரங்களுமாய், பசுமையும், குளுமையும் விரவி இருந்தது. சாலைகளும் கூட மேடும் பள்ளமுமாக, சற்றே மலைப்பாங்காக இருந்தது. குளிர்காலமாதலால், வீடு சில்லிட்டது.

வாசலில் கதவு தட்டும் சத்தம் கேட்க, ஷோபாவின் “சாப் ஆகயா" என்று அறிவிப்புடன் உள்ளே வந்த அந்த இளைஞன் மிக வசீகரமாக இருந்தான்.

"மே ஐ கம் இன், ஐ'ம் கல்பகோஷ் , ஃபோன்ல உங்க கூட பேசினேனே, அதோட நான் உங்க படோசனும் கூட (அக்கம் பக்கத்தில் வசிப்பவர்) எதிர்பக்கம் மூணாவது வீடுதான்" என்று கையை நீட்டினான்.

"யா, நைஸ் மீட்டிங் யூ"

"சென்னைல இருந்து நீங்க அனுப்பின சாமானும் இப்பதான் வந்தது. இன்னிக்கும் நாளைக்கும் சாப்பாடு அனுப்பச் சொல்லி இருக்கேன், இந்தாங்க டீ" என்று ஒரு ஃப்ளாஸ்க்கைக் கொடுத்தான்.

"ஓ, தேங்ஸ்"

"நீங்க வீடு செட் ஆகற வரை கெஸ்ட்ஹவுஸ்ல இருந்திருக்கலாமே"

"இட்'ஸ் ஓகே"

சற்று நேரம் பேசியதில், வீட்டில் ஏதாவது சரி செய்ய வேண்டுமென்றால், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும், என்ன சாமான் எங்கே கிடைக்கும்? வெளியே கிடைக்கும் உணவு வகைகள் என, லோக்கல் கைடு போல் நிறைய தகவல்கள் தந்தவனின் புன்னகை தொற்று நோய் போல் சாம்பவியிடம் ஒட்டிக்கொண்டது.

"நாளைக்கு சன்டே. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நான் உங்களை தீன்சுக்கியா வரைக்கும் கூட்டிட்டுப் போறேன்"

"ஓகே, இன்னைக்கு செட் பண்ணிடுவேன். நான் வரேன்" என்றாள்.

"டென் தர்ட்டி ஷார்ப்"

மறுநாள் சொன்னபடி வந்து வெளியே அழைத்துச் சென்றவன், சாம்பவியின் , ஷாப்பிங் முடியும் வரை பொறுமையாக உடன் வந்தான். டிக்பாய் மார்க்கெட்டையும், டவுன்ஷிப்பின் உள்ளேயே இருந்த கடைகளையும் காட்டினான்.

மாலையில் அவளை வீட்டில் விட்டுக் கிளம்புகையில் கல்பகோஷ் வங்க மொழியில் "சாம்பவி, ஆப்னி ஏக்தி ஆகர்ஷனியோ சௌந்தர்ஜோ" என்றதன் முழு அர்த்தம் புரியாவிட்டாலும், அவனது ரசனையான முகபாவனையில் திகைத்தாள்.
(நீ ஒரு சுவாரஸ்யமான அழகி)


***********************

அஸ்ஸாமின் தீன்சுக்கியா (Tinsukia) மாவட்டத்தில் உள்ள டிக்பாய் (Digboi) தான் இந்தியாவின்/ஆசியாவின் முதல் இயற்கை எண்ணெய்க் கிணறுகளின் பிறப்பிடம்.

இருப்புப்பாதை அமைக்கவும், டைல்ஸ் தயாரிக்கவும், மூலப்பொருட்களின் போக்குவரத்துக்கு உபயோகப் படுத்தப்பட்ட யானைகளின் கால் தடங்களில் இருந்த எண்ணெய்ப் பசையைப் பார்த்து அங்கே எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து ட்ரில்லிங்கைத் தொடங்கினர்.

ஆங்கிலேயர்கள் “Dig boy, dig” என தொழிலாளிகளை விரட்டி எண்ணெக் கிணறைத் தோண்டச் சொன்னதால் , இன்றளவும் அந்த இடம் டிக்பாய் (Digboi) என்றே அழைக்கப்படுகிறது.

இது மட்டுமின்றி, அஸ்ஸாமின் வேறு சில இடங்களிலும் இதுபோல் எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் கிடைக்கிறது. தீன்சுக்கியா, சிறிய நகரம்தான் எனினும் IOCLன் காரணமாக, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயின் வழியே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.

இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய்க் கிணறாக விளங்கும் இடத்தில், இந்திய எரிஎண்ணெய் சரித்திரத்தின் மிகப்பெரிய அருங்காட்சியம் இருக்கிறது.

டீ எஸ்டேட்டுகளுக்காகவும், இயற்கை எழிலுக்காகவும் பிரிட்டிஷர்கள் ஆக்கிரமித்ததின் விளைவாக மிக அழகான பங்களாக்கள் இங்கு இருக்கின்றன.

சாம்பவி வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. அன்று சனிக்கிழமை. அலுவலகம் கிடையாது, ஆனாலும், இவளுக்கான வேலைகளைப் சற்று நிதானித்துப் படித்து அறிந்துகொள்ள வேண்டி கிளம்பி இருந்தாள்.

கருப்பும் வெந்தயக்கலரும் சேர்ந்த சந்தேரி சுடிதாரை அணிந்து, அதன்மேல் ஒரு வெந்தயக்கலர் கார்டிகனை அணிந்து, தயாராகி வெளியில் வந்த சாம்பவி “ஷோபா, எலக்ட்ரிக் குக்கர்ல ரைஸ் மட்டும் வைங்க. மதியம் அப்பளமும் சாலடும் செஞ்சுக்கலாம், பூட்டிக்கோங்க” என்று படியிறங்கி நடக்கத் தொடங்கினாள்.

பத்தடி சென்றதுமே, பின்னால் கேட்ட பைக் சத்தத்தில் திரும்பாமலே சாம்பவிக்கு அது யாரென்று தெரிந்ததில் ‘இன்னைக்குமா?’ என நினைத்தாள்.

குஜராத்தில் அவள் வைத்திருந்த ஸ்கூட்டரை அங்கேயே விற்று விட்டதில் இப்போது, அலுவலகம் செல்வதற்கு வண்டி இல்லாததில், முதல் நாள் இவளாகவே கல்பகோஷிடம், தன்னை அழைத்துச் செல்லக் கேட்டாள். பிறகு அதுவே வாடிக்கையாக, சங்கடமாக உணர்ந்த சாம்பவி, இரண்டு, மூன்று நாட்களாக, வெவ்வேறு நேரங்களில் சிறிது முன்னமே கிளம்பினாலும், சரியாக அதேநேரத்திற்கு வந்து, பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றான்.

‘நான் எப்ப வெளில வருவேன்னு பார்த்துக்கிட்டே இருப்பானோ?’

வீட்டிலிருந்து அலுவலகம் நடக்கும் தூரத்திலும் இல்லை. ‘சீக்கிரமாக ஒரு வண்டி வாங்கிவிட வேண்டும்’

சாம்பவி இருந்த செக்ஷனில் ஷிஃப்ட் சிஸ்டம் இல்லாததாலேயே, சரியாக இவள் புறப்பட்டதும் வரும் கல்பகோஷுடன் போக நேர்கிறது. தினமுமா தற்செயல்?

கல்பகோஷ் சிரித்த முகத்துடன், இயல்பாக, நகைச்சுவையாகப் பேசுகிறான்தான். ஆனால், நட்பைத் தாண்டிய ஆர்வமான பார்வையும், சில வார்த்தைகளும் சாம்பவிக்கு உவப்பானதாக இல்லை.

சாம்பவி எச்சரிக்கையானவளே தவிர, ஒரே இடத்தில், ஒரே இலாகாவில் வேலை பார்க்கும், நட்புக் கரம் நீட்டும் இளைஞனைத் தவறானவன் எண்ணி ஒதுக்கும் அளவுக்குப் பழைய பஞ்சாங்கம் இல்லை.

அதோடு ஆஃபீஸைத் தவிர வேறெதுவுமில்லாத அந்த வனாந்தரத்தில், கையில் வாகனமோ, காலனிக்குள் என்பதால் வாடகை வண்டிகளோ இல்லாது போக, அவனிடம் வேண்டாமென மறுக்கும் திடமும் இல்லை.

இத்தனைக்கும் திரும்பி வருகையில், வேறு யாருடனாவது தொற்றிக்கொள்ள முயற்சித்தாள். எனக்கு வேலை இருக்கிறதெனத் தவிர்த்தாள். மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடும் தொலைவில் வீடும், நேரமும் இருந்தும், மதிய உணவைக் கையோடு எடுத்துச் சென்றாள்.

இருந்தும் முதல் வாரத்திலேயே சில சக அதிகாரிகளின் விஷமமான பார்வையும், நடக்கத் தொடங்கினாலோ, அழைத்துச் செல்கிறேன் என்றவருக்காகக் காத்திருந்தாலோ “இன்னிக்கு கல்பகோஷ் வரலையா?” என்று வெளிப்படையாகவே கேட்டனர்.

எப்போதுமே அளந்து பேசும் பெண்ணிற்குத் தன் அனுபவம் தந்த கைப்பில், வீட்டில் இருக்க மனமின்றித் தொலைதூரம் விலகி வந்தவளுக்கு, புதிதாக எந்தப் பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ளவோ, பேசுபொருளாகவோ சிறிதும் விருப்பமில்லை.

யோசனையுடன் நடையை எட்டிப்போட்டவளின் மிக அருகே பைக் நின்ற பைக்கில், வெளியில் செல்லும் தோரணையில் ஸ்டைலாக உடையணிந்து ஆரோகணித்திருந்த கல்பகோஷ் “சாட்டர் டே கூட ஆஃபீஸ் போய் என்ன செய்யப் போறீங்க?”

“ஓஎன்ஜிசில ப்ரொடக்ஷன் கன்ட்ரோல்ல இருந்தேன். தரக்கட்டுப்பாடு (Quality assurance) புதுசு. அதான் ஷிஃப்ட் தொடங்கறதுக்கு முன்னால கொஞ்சம் வேலையை ஸ்டெபிலைஸ் பண்ணிக்கலாம்னு”

“அதி பாலோ (வெகு சிறப்பு), சரி ஏறுங்க, போகலாம்”

“வேணாம், உங்களுக்கு லீவு. நீங்க எங்கேயோ வெளிய போற மாதிரி இருக்கு. நானே போயிடுவேன். கிளைமேட்டும் கூலாதானே இருக்கு”

“நான் உங்களையும் கூட்டிட்டு வெளில போகலாம்னு பார்த்தேன். சரி, ஆஃபீஸ்ல ட்ராப் பண்றேன், வாங்க”

‘என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான், இவன் கூப்பிட்டா உடனே நான் வந்துடுவேனா?’ என்ற கேள்வியும் கோபமும் தலைதூக்கினாலும், காலனிக்கு நடுவே நின்று இதற்குமேல் மறுப்பது நாகரிகமல்ல, என்பதால் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

அலுவலகத்தில் இவளுக்கு முன்பே இரண்டொரு கார்களும், சீனியர் மேனேஜரின் அலுவலக வண்டியும் நின்றிருந்தது.

வேலையில் சேர்ந்த தினத்தன்று மன்மத ராவைப் பார்த்து, ரிப்போர்ட் செய்ததோடு சரி. வருட இறுதி என்பதால், பத்துநாள் விடுமுறை சென்றிருப்பதாகப் பேசிக்கொண்டனர்.

சாம்பவி எதிர்பார்த்தபடியே மன்மதராவ், தன் அறையில் இரண்டு அடுத்தநிலை அதிகாரிகளோடு எதையோ விவாதிப்பதாக அவனது காரியதரிசி தெரிவித்தான்.

தன்னிடத்திற்குச் சென்று, கணினியை ஆன் செய்து, கொடுக்கப்பட்ட வழி காட்டுதல்களைக் குறிப்பெடுத்துக் கொள்வது ,. சில டெக்னிகல் புத்தகங்களை அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்ல டிக்கட் போட்டு வாங்கிக்கொள்வது, பழைய குவாலிடி இஷ்யூவில் எழுந்த பிரச்சனைகள், தரம் குறித்த கேள்விகள், அதனை சரி செய்த விதம், அதற்கான வழிமுறைகள் என படித்தாள்

பசிப்பது போலிருக்கவே, நேரம் பார்க்க, மணி மதியம் இரண்டை நெருங்கவும், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிட்டு எழுந்து வெளியே வந்த சாம்பவி, அதிர்ந்தாள்.

தன்னை டிராப் செய்துவிட்டுச் செல்வதாகச் சொன்ன கல்பகோஷ், வாயிலுக்கு நேர் எதிரே சற்றுத் தொலைவில் இருந்த பார்க்கிங்கில் அவனது பைக்கில் அமர்ந்து மொபைலைப் பார்ப்பது தெரிந்தது.

‘போய்ட்டு வந்தானா, இல்ல இங்கேயேதான் லிவிங்ஸ்டனா? சேச்சே, எப்ப கிளம்புவேன்னு தெரியாம ஒருத்தன் இங்கேயேவா நிப்பான்? இது என்னடா புது இம்சை?’

சாம்பவி அவனைப் பாராததுபோல் கடந்து செல்வதா, அல்லது தானே போய்ப் பேசுவதா என்ற குழப்பத்தில் ஆஃபீஸ் கட்டிடத்திற்கு உள்ளேயே நிற்க, தன் அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த மன்மத ராவ் “ஹாய் சாம்பவி, சாட்டர் டேல நீங்க இங்க என்ன செய்யற?” என்றான்.

அவனது இயல்பான பாவனையில் இறுக்கம் தளர்ந்து “சும்மாதான் சார், கொஞ்சம் கைட்லைன்ஸ் பார்க்கலாம்னு”

“குட் குட். எங்க, வீட்டுக்குதானே, டு யூ ஹாவ் வெஹிகிள்?”

“இ.. இல்ல சார்”

“கம், லெட் மீ ட்ராப் யூ” என்றவனைத் தவிர்க்க முடியாது, கூடவே, ஒரு தற்காலிக நிம்மதிப் பெருமூச்சுடன் அவனுக்காகக் காத்திருந்த அலுவலக வண்டியில் ஏறியவள், கல்பகோஷைக் கவனிக்காததுபோல் இருந்தாலும், அவனது பார்வை தன் முதுகைத் துளைப்பதை உணர்ந்தே இருந்தாள்.

*****************

மறுநாள் ஞாயிறன்று மாலை ஏழுமணியளவில், ரஜாய்க்குள் சுருண்டபடி, லேப்டாப்பில் ஏதோ ஒரு ஸ்டாண்ட்அப் காமெடி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சாம்பவி, வாயில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தவள், நிச்சயம் மன்மத ராவை அங்கு எதிர்பார்க்கவில்லை.

“வா..கம் இன் ஸார்”

“ஹேய், ரிலாக்ஸ். செட்டில்டு?”

“யெஸ் ஸார், வீடுதான் பெருசா இருக்கு”

“இங்க நிறைய பிரிட்டிஷ் காலத்து பங்களா. கிடைக்கற வரைக்கும் என்ஜாய் பண்ணிக்க வேண்டியதுதான்”

“ஸார் டீ, காஃபி?”

“அஸ்ஸாம்ல காஃபியா?”

“ஃபில்டர் காஃபி ஸார்”

“ஓ, யெஸ்!”

அவள் உள்ளே செல்லவும் சற்று நேரத்தில், “மே ஐ ?” என்று சமையலறை வாயிலில் நின்று “வாவ், கிரைண்டர்லாம் இருக்கு, உங்களுக்கு பெஸரட்டு செய்யத் தெரியுமா?”

“ஸா..ர்”

“ஓகே, லீவ் இட்”

“...”

“நைஸ் காஃபி, தேங்க் யூ, இந்தாங்க” என்றவனின் கையில் ஏதோ ஒரு வண்டி சாவி.

“என்ன ஸார்?”

“எங்கிட்ட ஒரு வெஸ்பா ஸ்கூட்டர் சும்மாதான் இருக்கு. நீங்க யூஸ் பண்ணிக்கோங்க”

“ஸா..”

“ரிலாக்ஸ், நீங்க வண்டி வாங்கற வரைக்கும் யூஸ் பண்ணிக்கோங்க, ஓகே? டூ வீலர் ஓட்டுவீங்கதானே?”

“ஸா…ர்” என்றவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது. சாவியை வாங்கிக்கொண்டாள்.

“ஸீ யூ” என்றவனுடன் வாசல் வரை சென்றாள்.

சாவியைக் கேட்டவன், அவனே வாசலில் நின்றிருந்த வெஸ்பாவை வீட்டின் வலப்புறம் இருந்த கராஜில் நிறுத்தி மீண்டும் சாவியைக் கொடுத்தான்.

“சாம்பவி”

“ஸார்”

“உங்களுக்குப் பிடிக்காத, சங்கடமான விஷயத்தை, ஆஃபீஸ் கொலீக்ங்கறதால முகதாட்சண்யம் பார்த்து செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, புரியுதா?”

முதல்நாள் கல்பகோஷை அவன் கவனித்திருப்பதும் அதற்காகவே இந்த வெஸ்பா என்றும் புரிய “ஷ்யூர் ஸார், தேங்க் யூ ஸார்”

“பை, குட்நைட்”

இருவருமே மற்றவரைப் பற்றி எதையும் விசாரிக்கவில்லை.
 

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom