• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 4

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
னித்த வனத்தில் 4

ஹா
லில் சதஸ் கூடி இருக்க, சாம்பவி டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனோஜும் அவனது பெற்றோரும், அண்ணனும் வந்திருந்தனர்.

ஆயிற்று, மனோஜை சந்திக்கச் சென்று மூன்று நாட்கள் முழுதாக முடிந்து விட்டது.

முதல் கட்ட அதிர்ச்சி, அழுகை, கோபம், தாபம், சாபம் எல்லாம் கடந்து, ஒரு நாள் ஹோட்டல் சாப்பாடு, மறு நாள் தயிர் சாதம், அடுத்த நாள் ரசமும் அப்பளமும் என அழுது வடிந்த வீடு இன்று பூரி மசால், பொங்கல் சாம்பார், மதியத்திற்கு அசைவம் என்று இயல்புக்கு வந்துவிட்டது.

சாம்பவிதான் இன்னும் மீள முடியாமல் அங்கேயே நிற்கிறாள். அழுகை இல்லை, ஆர்ப்பாட்டமில்லை, கேள்விகளில்லை, கேவல்களில்லை. நல்ல வேளையாக அவள் வாயால் எதையும் விளக்கும் அவசியமும் நேரவில்லை.

அன்று அந்தக் கேஃபில் தேவசேனா நகர்ந்து இடமளித்தத் தன் அருகே அமராது, மனோஜுடன் உட்கார்ந்ததில் முகம் மாறிய சாம்பவி, உடனேயே தன்னை சுதாரித்துக் கொண்டாள்.

ஆனால், அவளுக்கும் மனோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த பின், இப்போது திருமணத்திற்கான மூன்றரை- நாலு மாத இடைவெளியில்,
தேவாவும் தானும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கியதாகவும், அவர்களது நேசமும் நெருக்கமும் வளர்ந்ததோடு சேர்ந்து வாரிசும் வளர்வதாகவும் சொன்னபோது, சாம்பவியால் தன் அருவெறுப்பை, அதிர்ச்சியை, ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை. அதற்கு அவள் முயலவும் இல்லை.

"உன்னைப் பிடிச்சுதான் சம்மதம் சொன்னேன். தப்புன்னு தெரிஞ்சும் ஏனோ, எங்களால இதைத் தவிர்க்க முடியலை. இன்னும் பன்னெண்டு நாள்ல நம்ம கல்யாணம். ரெண்டு பேர் வீட்லயும் இதை எப்படி சொல்றதுன்னு எங்களுக்குத் தெரியலை. அதான் முதல்ல உங்கிட்டயே சொல்லலாம்னு நீ வர்றதுக்காக வெயிட் செஞ்சோம். தேவா ரொம்ப பயந்து போயிருக்கா பவி…"

தன் இடத்திலிருந்து முழு உயரத்திற்கும் எழுந்து நின்று "சாம்பவி" என்றவள், தன் பர்ஸையும் தான் வாங்கி வந்த பரிசையும் எடுத்துக்கொண்டு வெளியேறினாள். கால் போன போக்கில் நடந்ததில், கோவிலுக்குச் செல்லும் வழியைக் காட்டிய பலகையைப் பார்த்து, உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள்.

சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வலிகள் வேறு. பெரிய அடி வேறு. வாழ்வின் முக்கியமான கட்டத்தில் நம்பிக்கை துரோகத்தின் நேரடி தரிசனத்ததில், மயக்க ஊசி போட்டது போல் மனமும் மூளையும் மரத்துப்போய் செயல்பட மறந்ததைப் போல் உணர்ந்தாள்.

ஒரே கேள்விதான் விஸ்வரூபமெடுத்து வியாபித்து நின்றது.

'எப்படி முடிந்தது அவர்களால்?'

'திருமணத்திற்கென ஒரு பெண்ணைப் பார்த்து, சம்மதித்து, ஊர்கூடி நிச்சயித்த பிறகு, அவளது தங்கையுடன் காதல், கசமுசா, கர்ப்பம் என்றால்… '

சாம்பவிக்கு உடலில் ஏதோ ஊறுவது போல் தோன்ற, உதறிக்கொண்டாள்.

'இந்தத் தேவா! அக்காவின் கணவனாகப் போகிறவன், மாமா என்ற மரியாதையான அழைப்புக்கு உரியவன், வீட்டின் மாப்பிள்ளையாகப் போகிறவனிடம் மரியாதை வருமா, ஈர்ப்பு வருமா?

எதிலும் பெஸ்ட் வேண்டும் என்பவள். எனது நல்ல உடைகளை, பேனாக்களை, புதிய நோட்டுப்புத்தகத்தை, ஹேர்க்ளிப்பை, கைப்பையை, கர்ச்சீஃபை, கால் செருப்பை 'உன் செலக்ஷன் சூப்பர் கா' என்று ஸ்வாதீனமாக எடுத்து உபயோகிப்பது போல், மனோஜையும் நினைத்து விட்டாளோ?'

அதுசரி, அவனென்ன ஜடப்பொருளா, உபயோகிக்க? உடலும் உயிரும் மூளையும் மனமும் உள்ள மனுஷன்தானே? ஆனா,
மனுஷனா இருந்தா இப்படி செய்வானா என்ன?'

'அவனுக்கென்ன பால்யத் திருமணமா, விடலைப் பருவமா? இருபத்தியெட்டு வயதில், நிச்சயித்த பெண்ணின் தங்கையுடன் காதல் என்றால்? சூழலை மீறி அவ்வளவு சீக்கிரம் ஒருவரிடம் ஈர்ப்பு வந்துவிடுமா என்ன? '

‘சரி, அப்படியே மனித மனம், அலைபாய்வதாகவே வைத்துக் கொண்டாலும், கமிட்மென்ட் என்பதற்கு என்ன அர்த்தம்? இதே ஈர்ப்பும் நேசமும் எனக்கு வந்திருந்தால்?’

'விரும்பினதுதான் விரும்பினார்களே, அவசரப்படாது வீட்டில் சொல்லி இருக்கலாமே? அவளைக் காதலித்துக்கொண்டு, என்னுடன் கல்யாணத்தைப் பற்றிப் பேசி, நானும் அவனது அனர்த்தங்களை அர்த்தமுள்ளதாய் எண்ணிச் சிரித்து, சிவந்து…'

'ஆனா சமீபமா அவனா எங்க பேசினான், நான்தான் கால் செஞ்சேன். பேச முடியலையேன்ற ஆதங்கத்துலயும் குற்றவுணர்ச்சிலயும் பேக்கு மாதிரி நான் மன்னிப்புக் கேட்க, கேட்க வேண்டியவன் என் தங்கையோடயே…'

'ஐம்பது நாளாமே? அப்படியே லவ் வந்தாலும் இத்தனை வேகமாவா? எங்க, எப்போ, எப்டி…?'

'லூஸாடீ சாம்பவி நீ, அது எங்க, எப்போ நடந்தா விசேஷம்? அதான் இது நடக்கலைன்னா அவங்க தெய்வீகக் காதலைப் பிரிச்சு, நிச்சயம் பண்ணின என்னோடயே கல்யாணத்தை நடத்திடுவாங்கன்னு இப்படி பண்ணிட்டதா தெளிவா சொன்னான்ல?'

'அவன் திட்டம் போட்டுத் துரோகம் பண்ணினதுக்கு பரிசு வாங்கிட்டு வந்து நீட்டின பாரு, அங்க நிக்கறடீ நீ'

இத்தனைக்கும் கேஃபின் உள்ளே வரும்போது சற்று டென்ஷனுடன் வந்த தேவசேனா, மனோஜின் அண்மை தந்த தைரியமோ, அவன் மீதான நம்பிக்கையோ, காதலோ என்ன கருமமோ, சிறிதும் கலங்கவில்லை.

அவளிடம் சொந்த அக்காவின் வாழ்வில் விளையாடிவிட்ட குற்றவுணர்வு மருந்துக்குக் கூட இல்லை. மாறாக, ஏதோ இவள்தான் அவளது காதலுக்கு எதிரி போன்ற பாவனையைக் காட்டினாள்.

'உண்மைல, மனோஜிடம் வெளிப்பட்ட தடுமாற்றமோ, தப்பு செய்துவிட்ட பாவமோ கூட தேவா கிட்ட இல்லையே!'

கோவில் நடை சாத்தும் நேரம் நெருங்கியதை உணர்ந்து, வீட்டிற்கு வந்த சாம்பவிக்கு, தன்னைப் பெற்றோர் காய்ந்ததையும், அவர்களது விசாரணையையும் கேட்டுக்கொண்டு அறைக்குள் இருந்த தேவசேனா, எங்கே, சாம்பவி முந்திக்கொண்டு தன்னைப்பற்றிச் சொல்லி விடுவாளோ என்ற எண்ணத்தில், அவளை சாப்பிட அழைக்க நிச்சயமாக யாரேனும் வருவார்கள் என்ற எண்ணத்தில், தற்காப்பு நடவடிக்கையாக, பரிதாபத்தை சம்பாதிப்பதற்காகத் தூக்கு மாட்டிக்கொள்ளும் நாடகத்தை நடத்தியதாகத்தான் சாம்பவிக்குத் தோன்றியது.

தேவாவின் அதிர்ஷ்டம், அணைக்கப்படாத அலைபேசி இணைப்பில் மனோஜ், சரியான நேரத்தில், உடனடியாக அங்கு வந்தது.

'தேன்குட்டி, என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா?'

'நான், எங்க வீடு, உங்க அம்மா, அப்பா உன்மேல வெச்சதுக்குப் பேர் என்னடான்னு ஓங்கிக் கத்தணும் போல இருந்தாலும், என் கோவத்தைக் காட்டக்கூட அவங்களுக்கு அருகதை இல்லை'

இத்தனை களேபரத்துலயும் தேவா கண்ணில் ஒரு துளி கண்ணீர் வரவில்லை.

முதலில் சுதாரித்த சூர்யா "என்னதிது தேவா, ஏன் இந்த தற்கொலை முயற்சி? என்ன மனோஜ், தேவா கிட்டப்போய்… இப்டி…என்ன பேசறீங்க மனோஜ்?"

சாம்பவிக்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டதாலோ என்னவோ, இப்போது மனோஜ் தைரியமாக "நாங்க ரெண்டு பேரும் விரும்பறோம்…" என்றான்.

நீலகண்டன் "என்ன சொல்றீங்க மாப்பிள்ளை, உங்களுக்கும் சாம்பவிக்கும் கல்யாணம்னு ஊரையே அழைச்சிருக்கோம். இப்ப வந்து இப்டி சொன்னா என்ன அர்த்தம்??"

தேவசேனாவின் அருகில் சென்ற சகுந்தலா "என்னடீ தேவா, இதெல்லாம் உண்மையா, அவர் உங்கக்காவுக்கு நிச்சயம் செஞ்ச மாப்பிள்ளைடீ" என்றவர், மகளின் அசையாத் தன்மையில் வெகுண்டு, ஆத்திரம் தாளாமல், இரண்டு கைகளாலும் தேவசேனாவை அடிக்கவும், விரைந்து தடுத்தான் மனோஜ்.

"அத்தை, தேவா மேல எந்தத் தப்பும் இல்லை. அவளோட கலகலப்பான சுபாவம், அழகுன்னு எல்லாமே எனக்குப் பிடிச்சிருந்தது. நான்தான்… "

'அப்புறம் என்ன ***** இதுக்குடா என்னைப் பார்த்து கல்யாணத்துக்கு சம்மதிச்ச?'

மீரா சட்டெனத் திரும்பி சாம்பவியைப் பார்க்க, அவள் தன்னைச் சமன் செய்துகொள்ளப் போராடுவது தெரிந்தது.

'இதைச் சொல்லத்தான் அவளை வெளியே அழைத்தானா?' எத்தனை வெட்கமும் ஆசையும் அதை வெளிப்படுத்தத் தயக்கமுமாகப் பரிசோடு புறப்பட்டுச் சென்றாள்?'

மீராவுக்கு ஆறுதலாகக் கூட சாம்பவியை நெருங்க பயமாக இருந்தது.

நீலகண்டன் "இப்ப வந்து சொன்னா எப்படி மனோஜ்? தேவா சின்னப்பொண்ணு. இன்னும் படிப்பு கூட முடியல. அதெல்லாம் சரியா வராது. இன்னும் பத்து நாள்ல கல்யாணம் வேற. பத்திரிகை அடிச்சு ஊரெல்லாம் அழைச்சாச்சு. எம்பொண்ணு சாம்பவியோட வாழ்க்கை என்னாறது?"

'உறவு இலக்கண புணர்ச்சி விதிகளின் படி மாப்பிள்ளை மனோஜ் ஆனது விகாரம்' என்று ஏடாகூடமாக யோசித்த சாம்பவி,தேவசேனா கண்ணைக் கசக்கவும் கவனித்தாள்.

"தேன்குட்டி, அழாத" என்ற மனோஜ், சில நொடிகள் தயங்கியவன் "இல்ல மாமா, தேவா இப்ப… கர்ப்… ப்ரெக்னென்ட்டா இருக்கா" என்று அநாயாசமாக ஆர்டிஎக்ஸைத் தூக்கிப்போட்டான்.

காலை முதல் யார் கர்ப்பம் எனபதில் இருந்த குழப்பம் தீர்ந்ததில் நிம்மதிக்குப் பதில் கலவரமடைந்த சகுந்தலா, பீதியுடன் கணவரைப் பார்க்க, கேட்ட செய்தியில் நீலகண்டனே உறைந்த நிலையில்தான் நின்றார்.

முதலில் சுதாரித்த சூர்யா "இது உண்மையா தேவா, அதான் தற்கொலை செஞ்சுக்க முயற்சி செஞ்சியா? மனோஜ் உன் மாமான்னு உனக்குக் கொஞ்சங்கூட உறுத்தலையா?"

சகுந்தலா "உண்மைதான்டா தம்பி. அதுக்கான ஆதாரத்தை காலைலயே மீரா கண்டு புடிச்சுட்டா. யாருன்னு தெரியாம, சாம்பவியைப் போய் சந்தேகப்பட்டு…" என்று அவர் தலையில் அடித்துக்கொள்ள,

சூர்யா "அம்மா…" என்று கத்தியதில் திடுக்கிட்ட மனோஜ், அனிச்சையாக சாம்பவியைத் திரும்பிப் பார்த்தான்.

முகமும் உடலும் இறுக நின்ற மகளைப் பார்த்த நீலகண்டன் "வாயை மூடுடீ, படிக்கற பொண்ணு எங்க போறா, என்ன செய்யறான்னு கூட கவனிக்காம, இவனுக்காக லட்சரூபா சம்பளம் கிடைக்கற வேலையை உதறிட்டு வந்தவளை சந்தேகப்படுவியா? இதை நான் சும்மா விடமாட்டேன் மனோஜ். சாம்பவிக்கு நீங்க பதில் சொல்லிதான் ஆகணும். முதல்ல உங்கப்பா கிட்ட பேசறேன்"

'ஓ' வென்று அழுத தேவசேனா "சாகப் போன என்னை ஏன் தடுத்தீங்க? அவர் இல்லைன்னா, நான் மறுபடியும் …"

சாம்பவி "என்ன, மறுபடியும் சூயிஸைட் டாராமாவா? எப்டி தேவா, எப்படியும் யாராவது வருவாங்கன்னு, அவங்க வரும்போது சரியா தற்கொலை நாடகம் போட்டியே, அதே மாதிரியா?"

"அக்காஆஆ"

"ஏன் கத்தற, தற்கொலை செஞ்சுக்கப் போறவங்க யாராவது வீட்ல எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கற நேரத்துல ரூம் கதவைத் திறந்து வெச்சுக்கிட்டுத தூக்கு மாட்டிப்பாங்களா? அது கவன ஈர்ப்புக்காக, தப்பிக்கறதுக்காக, பிரச்சனையை திசைதிருப்ப நீ செஞ்சது"

"..."

நீலகண்டன் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் "சாம், நீ கவலைப்படாதம்மா, மனோஜோட அம்மா, அப்பா கிட்ட நான் பேசறேன்"

"என்னப்பா பேசுவீங்க, இனிமே என்னைப்பத்தி அவங்களோட பேச எதுவும் இல்லைப்பா. இப்பவாவது சொன்னாங்களே, அதுக்கே நான் நன்றி சொல்லணும்" என்ற சாம்பவி, பெற்றோரின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அன்று முதல் தங்கையுடன் உறங்க தங்கள் அறைக்கும் செல்லாது, பெற்றோர்களைத் தொந்திரவு செய்யவும் விருப்பமின்றி, ஹாலிலேயே பாய், தலையணை போட்டுத் தூங்கினாள். சுருக்கமாகச் சொன்னால், சாம்பவி ஆமை போல் தன்னை ஒடுக்கிக் கொண்டாள்.

மகன் செய்த தப்புக்கு மனோஜின் பெற்றோர் மறுநாள் வந்து மன்னிப்புக் கேட்டனர். அன்று சாம்பவியை நினைத்தோ என்னவோ, அதைத் தாண்டி யாரும் எதுவும் பேசவில்லை.

ஆனால், இடையில் மூன்று நாட்கள் கடந்து சென்றதோடு, தேவசேனாவின் வயிற்றுப் பிள்ளையும் வளர்வதில், மீதமிருக்கும் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மனோஜுக்கும் தேவாவுக்கும் அதே தேதியில், செய்யப்பட்ட ஏற்பாடுகளை வீணடிக்காது, திருமணம் செய்ய முடிவு செய்து, அதைப் பேசத்தான் இன்று கூடி இருக்கின்றனர்.

இரண்டு நாட்கள் முன் மன்னிப்புக் கேட்டவர்களின் உடல்மொழியில் இன்று 'உங்க வீட்டுப் பொண்ணு மட்டும் ஒழுங்கா?' என்ற கேள்வியும் அலட்சியமும் வந்திருந்தது.

சாம்பவியின் பெற்றோர்களுக்குமே, சாம்பவியின் காயம்பட்ட மனதை விட தேவசேனாவின் வயிற்றில் வளரும் கருவுக்கு சட்டப்படியும் தார்மீக ரீதியாகவும் அங்கீகாரம் தேடித்தருவதே முக்கியமாகப்பட்டது.

சாம்பவிக்கும் அதன் உடனடி அவசியம் புரிந்தாலும், ஒரு இயல்பான திருமணத்தின் சுவாரஸ்யங்கள் எதுவும் குறையாது, உரிமையாக வீட்டுக்கு வந்து தேவாவுடன் பேசிச் சென்ற மனோஜின் துரோகம் மிக எளிதாக மறக்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு விட்டதை ஜீரணிக்க இயலாது தவித்தாள்.

கல்யாணப் பரபரப்பில் இவளையே வேலை ஏவுவதும், இவளது இறுக்கமான முகத்தைக் குறை சொல்வதுமாக இருக்க, சாம்பவிக்கு ஒரு கட்டத்தில் எல்லோருமே, தனக்கு எதிராக இருப்பதைப போல் தோன்றியது.

“ஏதோ ரெண்டு பேரும் ஆசைப்பட்டுட்டாங்க. இந்த மட்டும், குழந்தைக்கு அப்பா நான் இல்லைன்னு சொல்லாம, மனோஜ் ஒத்துக்கிட்டாரே, அதுவே பெருசு”

“சம்பந்திங்களையும் சொல்லணும். பையன் தப்பு செஞ்சுட்டான்னு தெரிஞ்சதுமே மன்னிப்பு கேட்டதாகட்டும், கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதாகட்டும், பெரிய மனுஷங்கதான்”

“தேவாவுமே சின்னப் பொண்ணுதானே? சாம்பவியும் இங்க இல்லை.
ஜவுளி எடுக்க, நகை வாங்க, பத்திரிகை அடிக்கன்னு வரப் போக இருந்த மாப்பிள்ளை கம்பீரமா, கலகலப்பா பேசவும், ஆசைப்பட்டுட்டா. அவருக்குமே வயசு. தேவா மூத்தவளை விட பேச்சு, சிரிப்பு, உயரம், கலருன்னு இருக்கவும் புடிச்சுப்போச்சு. என்ன கொஞ்சம் அவசரப்படாம இருந்திருக்கலாம்”

தன் தவறை ஒப்புக்கொண்டு, தான்தான் தந்தையென ஒப்புக்கொண்ட மனோஜ் மனிதரில் புனிதனானான். மீண்டும் நீலகண்டனின் ‘மாப்பிள்ளை’ ஆனான்.

'அடுத்தத் தலைமுறைக்குக் காத்திருக்கத் தேவையின்றி, தரப்பரிசோதனை செய்யப்பட்டுக் கை மேல் பலன் தரும் மருமகளும், மருமகனும் யாருக்குக் கிடைக்கும்?!'

இரண்டு வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடக்க, காதல்(!) கை சேர்ந்ததில் மணமக்கள் இருவரும் மகிழ்ந்திருக்க, தேவசேனாவைப் பார்க்க மனோஜ் தங்கு தடையின்றி வந்து செல்ல, சமூக வலைத்தளங்களில் சாம்பவி மீண்டும் 'சிங்கிள்' ஆனாள்.

சாம்பவியின் ஒதுக்கத்தை, அவளை அவர்கள் ஒதுக்கியதை, யாரும் உணரவே இல்லை.

*********************

திருமண தினம் நெருங்க, நெருங்க, சாம்பவி தன் வீட்டிலேயே அந்நியமாக உணர்ந்தாள்.

சீரியல்களில் இவருக்குப் பதில் இவர் என்று வருவதை சுலபமாக ஏற்பதைப் போல், சாம்பவி கல்யாணத்துக்குப் பதில் தேவசேனா கல்யாணம் என்ற வீட்டினரின் மனநிலை சாம்பவிக்கு அதிர்ச்சியளித்தது.

கர்ப்பமான தங்கைக்கு உடனடித் திருமணம் அவசியம் என்று புரிந்தாலும், மற்றவர்கள் அதை ஏற்றுக்கொண்ட விதமும் வேகமும் சாம்பவிக்கு வருத்தமளித்தது.

சொந்தத்தில், தெரிந்தவர்களில் இருக்கும் திருமணமாகாத, தகுதியுள்ள வரன்களை சாம்பவிக்குப் பார்த்தால், ஒரே முஹுர்த்தத்தில் இரண்டு திருமணங்களையும் நடத்திவிடலாம் என்ற அன்னையின் யோசனையும்…

"எங்களுக்குத் தெரிஞ்ச குடும்பம். வசதி கொஞ்சம் குறைவுதான். ஆனா, பையன் ஐடில இருக்கான். இன்ஜினீயர். பாக்கறீங்களா?" என்ற மனோஜின் பெற்றோர் தந்த ஆலோசனையும்…

நல்லவேளை சூர்யா "இந்த ஷாக்ல இருந்து மீண்டு வர்றதுக்கு சாம்க்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கப்பா" என்றதில் பெற்றோர் அடங்கினர்.

திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு வந்த சகுந்தலாவின் தங்கைகளின் குடும்பமும், தம்பி குடும்பமும் மணப்பெண் மாறியது ஏனென்று குடைந்தெடுத்தனர்.

நீலகண்டன் ஒரே மகன் என்பதால், நெருங்கிய உறவு ஒருபக்கம் மட்டுமே. மற்றபடி தூரத்து சொந்தங்கள்தான்.

தூரமோ பக்கமோ, எல்லோரது கேள்வியும் பார்வையும் ஒன்றுபோல்தான் துளைத்தது.

சாம்பவிக்கென வாங்கப்பட்ட புடவைகள், நகைகள், பாத்திரங்கள், இதர பொருட்கள், மனோஜே தேர்ந்தெடுத்ததாக அவளிடம் காட்டப்பட்ட முஹுர்த்தப் பட்டோடு, சாம்பவிக்கென பார்த்து நிச்சயம் செய்த மாப்பிள்ளை உள்பட, குறித்த சுபமுஹுர்த்தத்தில் தன்னுடையதாக்கிக் கொண்டாள் தேவசேனா.

திருமண நிகழ்வுகளில் ஒன்றவும் முடியாது, விலகவும் இயலாது, மற்றவரின் பார்வையை, கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், ஓரமாக ஒதுங்கி நின்றவளிடம், ஒரு கட்டத்தில், அம்மா சகுந்தலாவே "என்ன சாம் இது, நீ இப்டி எதுலயும் பட்டுக்காம இருந்தா, பாக்கறவங்க என்ன நினைப்பாங்க?" என்றதில் மனம் நொந்தாள்.

சாம்பவிக்குக் காதல் தோல்வி இல்லைதான். திருமணத்திற்குப் பின் துரோகம் நடக்கவில்லைதான். ஆனால், அவளது கற்பனை, ஆசை? எல்லாம் கனவுக் குடித்தனமாய்ப் போனதில் வருத்தம் என்பதை விட, இன்னொருத்தியை விரும்பினவனை வருங்காலக் கணவனாய் எண்ணிச் செய்த கற்பனைகளே அவமானமாக இருந்தது.

'இவனைப் போன்ற மதில்மேல் பூனையை நம்பி, பொதுத்துறை நிறுவனத்தின் கௌரவமான வேலையை விட்ட தன்னை எதால் அடித்தால் தகும்?' என எண்ணற்ற முறைகள் யோசித்து மனம் நைந்தாள்.


 

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
12
❤️❤️❤️

நல்லவேளை அவங்களே உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டாங்க... இல்லையின்னா கடைசியில நான் வேற இந்த பாட்டு போட வேண்டி இருந்துருக்கும்..🤭🤭


 
Last edited:

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
Leaving the job for marriage is hight of ?
அதுதாம்மா நடக்கும். பையன் குஜராத்ல இருந்தா சென்னை வேலையை விட்டு அனுப்புவாங்க. யதார்த்தம்.
 
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

மனிதரில் புனிதனுக்கு ஒரு பாட்டு போடலையின்னா எப்படி? 😒😒

 
Joined
Jun 19, 2024
Messages
8
சாம் தப்பிச்சிட்டா..
இந்த அநாகரிக பிறவிகளிடம் இருந்து...
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
❤️❤️❤️

நல்லவேளை அவங்களே உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டாங்க... இல்லையின்னா கடைசியில நான் வேற இந்த பாட்டு போட வேண்டி இருந்துருக்கும்..🤭🤭


🤣🤣
 

jacky

New member
Joined
Jun 19, 2024
Messages
12
அதுதாம்மா நடக்கும். பையன் குஜராத்ல இருந்தா சென்னை வேலையை விட்டு அனுப்புவாங்க. யதார்த்தம்.
True but still it is hard
 
Top Bottom