• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 3

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
தனித்த வனத்தில் - 3

ரூன் கலர் கோட்டா சில்க் புடவையைத் தவிர (மாப்ளையோட முத முதல்ல வெளிய போற. நல்ல புடவையா கட்டிக்கோ - அம்மா), இடது கையில் வாட்சும், வலது கையில் பிரேஸ்லெட்டும், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியுமாகத் தன் வழக்கமான தோற்றத்தில் கிளம்பியவள்
"தோடையாவது மாத்திக்கோ சாம்" என்ற அண்ணி மீராவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, J வடிவிலான வைரத்தோட்டை எடுத்து அணிந்திருந்தாள்.

மனோஜுக்கென வாங்கிய ஷர்ட்டை எடுத்துச் செல்ல ஆசையிருந்தும் அம்மா, அண்ணி என்ன நினைப்பார்களோ என்று தயங்கினாள்.

அதோடு, அவர்களே குழப்பத்தில் இருக்க, சட்டை எங்கே போகப்போகிறது, மனோஜும்தான் எங்கே போகப்போகிறான், பின்னால் பார்த்துக்கொள்வோம் என்று ஒரு மனம் நினைக்க, கல்யாணத்திற்குப் பிறகு கொடுப்பதில் என்ன த்ரில் இருக்கிறது என்ற மறு சிந்தனையோட, ஆசை
தயக்கத்தை வென்றது.

"என்னடீ இத்தனை பெரிய பை?"

"அது… அவருக்காக ஒரு ஷர்ட்…"

மீரா "பார்றா, சூப்பர் சாம்" என்று கேலி செய்ய, அம்மா அமைதி காத்தாள்.

"ஹேவ் ஏ நைஸ் டைம் சாம். ஒண்ணுவிடாம எங்கிட்ட வந்து சொல்லணும்"

"நேரத்தோட வந்துடுடி. ஃபோன் செய்" என்றார் சகுந்தலா.

ஆட்டோ வரவும் ஏறிக்கொண்டாள். எல்கேஜி முதல் இருபாலர் பள்ளி, கல்லூரி, வெளிமாநிலத்தில் வேலை என ஆண்களுடன் பேசுவதோ, பழகுவதோ சாம்பவிக்குப் புதிதில்லை என்றாலும், இப்படி யாருடனும் தனியே வெளியில் சென்றதில்லை.

சாம்பவிக்கு நல்ல ஆண், பெண் இருவரிலுமே நண்பர்கள் உண்டு. பெண்ணோ, ஆணோ ஒரு எல்லை வகுத்துப் பேசும் இயல்புடையவளுக்கு
இன்றைய சந்திப்பில் ஒரு பரவசமும் எதிர்பார்ப்பும், மெலிதான வசீகரமும் இருந்தது.

மனோஜ் இருந்த பிஸியில், எங்கே, திருமணத்திற்கு முன் தனியே சந்திக்கவோ, வெளியில் செல்லவோ வாய்ப்பில்லாமலே போய்விடுமோ என்ற குறை தீர்ந்ததில் சாம்பவிக்கு வெகு மகிழ்ச்சி. கூடவே கொஞ்சம் டென்ஷன்.

சூர்யாவிடமிருந்து அழைப்பு வர "சொல்லுண்ணா"

"கிளம்பிட்டியா சாம், டென்ஷனா இருக்கியா?" என்றான், தங்கையை அறிந்தவனாக.

"ம், ம்ஹும்"

சிரித்தவன் "ஜஸ்ட் ச்சில் மா. மனோஜ் ஈஸ் எ கூல் கை. ஸோ, ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய்"

"ம்.."

அடையாரை நெருங்க, நெருங்க ஆட்டோவுடன் சேர்ந்து சாம்பவியின் இதயமும் படபடத்தது.

'அரேஞ்ச்டு மேரேஜ்னால இப்படி படபடப்பா இருக்கா? எனக்கு மட்டும்தான் இப்படியா, இல்ல, எல்லாரும் இதே மாதிரிதான் ஃபீல் பண்ணுவாங்களா?'

'ஒரு நாள் வெளில
வர்றதே எனக்கு இப்டி இருக்கே, இந்த தேவியெல்லாம் எப்டிதான் ப்ரீ வெட் ஷூட்லாம் பண்ணாளோ? 'ஏ யப்பா, என்ன்னா போஸு? சினிமா தோத்தது. நல்லவேளை, மனோஜ் அதெல்லாம் கேக்கலை.
கேட்டா மட்டும்? நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லியிருப்பேன், சிம்பிள்' தானே சிரித்துக்கொண்டாள்.

மனோஜ் குறிப்பிட்ட கேஃப், அமைதியான இடத்தில் ஆடம்பரமான எளிமையுடன் கூட்டமற்று இருந்தது. சீக்கிரமே வந்துவிட்ட சாம்பவி, சில நிமிடங்கள் வெளியில் காத்திருக்க, அங்கிருந்த சிலரும், தெருவில் செல்வோரும் தன்னையே பார்ப்பது போல் தோன்ற, மனோஜ் வந்தால் கால் செய்யட்டும் என்று உள்ளே சென்றாள்.

அங்கு நண்பர்களுக்கான இருக்கைகளாக வரிசையாக, உயரமான பார் ஸ்டூல்களும், எதிரெதிரே நால்வர் அமரும் ஓரிரு சோஃபாக்களையும் தவிர, இருவர் மட்டுமே அமரும் மேஜை நாற்காலிகளே அதிகமிருந்தன.
அங்கே இருந்த சில ஜோடிகள், பரவச நிலையில் இருந்தனர்.

'பாத்தாலே பச்சை நோட்டு மின்னுதே'

ஒரு ஓரமாக இருந்த இருவர் அமரக்கூடிய மேஜையில் சென்று அமர்ந்த சாம்பவி மனோஜுக்காகக் காத்திருந்தாள்.

இரண்டு முறை வந்து நின்ற வெய்ட்டரிடம் 'ஒன் வர்ஜின் மொஹிடோ' என்றவள், காஃபி மணத்தை மீறி எழுந்த கடலை வறுக்கும் வாசனையில், தலையை நிமிர்த்த சங்கடமாக இருக்கவே நேரத்தைக் கடத்த மொபைலில் மூழ்கிப்போனாள்.

மனோஜ் சொன்ன நேரம் தாண்டி முழுதாக அரைமணிநேரம் கடக்கவும், எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் தோன்றவே, அவனை அழைக்க நினைக்கையில் "ஸாரி பவி, ட்ராஃபிக்ல லேட் ஆயிடுச்சு" என்றபடியே வந்தவன் "வா, நாம அங்க போய் உட்காரலாம்" என நால்வர் அமரும் இருக்கையைக் காட்டினான்.

சாம்பவி ஏனென்று புரியாமல், மனதிற்குள் தோளைக் குலுக்கியபடி பின்தொடர்ந்தாள்.

அவன் வந்து அமர்ந்ததுமே பரிசைக் கொடுக்க நினைத்தவள், இடம் மாறி உட்கார்ந்ததிலும், அவனைக் கண்டதுமே பார்த்த ஒத்திகையும் கோர்த்த வார்த்தைகளும் மறந்துவிட, அவன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள். அவனை இடைமறித்துப் பரிசை நீட்டத் தயக்கமாக இருந்தது.

குஜராத், குஜராத்தி உணவு வகைகள் , அவனது அண்ணன் மகள், சென்னையின் போக்கு வரத்து என, இருவரும் தங்களைத் தவிர அனைத்தையும் அலசினர்.

சாம்பவிக்கு நேரில் விட ஃபோனில் பேசுவது எளிதாக இருப்பதாகத் தோன்றியது. பசித்தது.

'என்னை மாதிரி அவருக்குமே கொஞ்சம் தயக்கமா இருக்கு போல. வந்து இருபது நிமிஷமாச்சு. ஒரு காஃபியாவது வாங்கித் தருவாரா?'

மனோஜ் "எனி பிராப்ளம், பவி?"

"நத்திங்"

மேஜை மீதிருந்த அவனது ஃமொபைலில் அழைப்பு வந்து ஒளிரவும், சாம்பவி அதில் பார்வையைத் திருப்பும் முன் சட்டென்று எடுத்துவிட்டான்.

'ஒரு நிமிடம்' என்பதாகக் கையைக் காட்டியவன், ஃபோனில், மிக மெலிதான குரலில் "உள்ள வா… ம்ப்ச், பாத்துக்கலாம் வா, நாம பேசலாம்" என்றது சாம்பவிக்கு அரைகுறையாகக் கேட்டது.

'இங்கே யாரை அழைக்கிறான்?'

'யாருடன், என்ன பேசப்போகிறார்கள்? என்னை அனுப்பிவிட்டு பிஸினஸ் விஷயமாக யாரையாவது சந்திக்கப் போகிறாரோ? இன்னிக்குதான் நேரம் கிடைச்சுதா?'

'அப்ப நான் வீட்டுக்குத் தனியாதான் போகணுமா?'

'சரி, யாரும் வர முன்னே நாம அவருக்கு வாங்கின ஷர்ட்டைக் குடுத்துட்டா, கிளம்ப வசதியா இருக்கும்'

"ம… ம்க்கும்.. ந்.."

"சொல்லு பவி"

தயக்கத்தை உதறி "இது உங்களுக்கு" என்று, பரிசுத்தாளில் சுற்றப்பட்டு, பேப்பர் பையில் இருந்ததை அவனிடம் நீட்டினாள்.

கையில் வாங்காமலே "ஓ! நைஸ்…" என்றவன்

அவர்களுக்கு எதிரே சற்றுத் தொலைவில் இருந்த கேஃபின் கதவு திறந்த அரவம் கேட்டுத் திரும்ப, உள்ளே நுழைந்த தங்கை தேவயானியைக் கண்ட சாம்பவி இனிதாக அதிர்ந்தாள்.

அருகில் வந்தவளிடம் சாம்பவி "ஏய் தேவா, என்னடீ, சர்ப்ரைஸ் பவுன்ஸிங்கா? நான் இங்க இருக்கறது உனக்கெப்படித் தெரியும், அண்ணி சொன்னாங்களா? வீட்டுக்குப் போய்ட்டா வர?"

மனோஜ் "தேவாக்கு நான்தான் சொன்னேன்" என்றான்.

******************

நேரம் இரவு எட்டரை மணிக்கு மேல். சாம்பவி அடையார் அனந்தபத்மநாப ஸ்வாமி கோவில் பிரகாரத்தில், ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். வாரநாள் என்பதால் கூட்டம் அதிகமில்லை.
மொபைலை அணைத்து வைத்திருந்தாள்.

ஒவ்வொரு சன்னதியாக நடை சாத்தப்பட்டு, விளக்குகளை அணைத்துக்கொண்டே வந்தனர். இனி இங்கே உட்கார்ந்திருக்க முடியாது. வீட்டுக்குப் போய் எல்லோரையும், எல்லாவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

எழுந்து வெளியே வந்தவள், கிடைத்த முதல் ஆட்டோவில் ஏறி, முகவரியைச் சொன்னாள். மொபைலைத் திறக்க, அழைப்புகளும் தகவல்களும் வெள்ளமாய்ப் பாய்ந்தது.

சூர்யாவின் அழைப்பை ஏற்க "எங்க இருக்க சாம், சொல்லாம கொள்ளாம எங்க போயிட்ட? மனோஜைக் கேட்டா நீ அஞ்சரை மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிட்டேன்னு சொல்றாரு. அடையார் ஃபுல்லா பத்து தரத்துக்கு மேல சுத்திட்டேன். நான் ஒடிஸி கிட்ட இருக்கேன். இப்ப நீ எங்க இருக்க?"

"வீட்டுக்குப் போக ஆட்டோல ஏறிட்டேண்ணா"

"சரி பத்திரமா போ. நான் பின்னாலயே வரேன்" என்றவன் அவளது ஸாரியைக் கேட்காமலே காலை கட் செய்தான்.

வெளி கேட்டில் இருந்தே அப்பா ஹாலில் நடைபயில்வது தெரிந்தது. மிகுந்த டென்ஷனோ, கோபமோ இருந்தால்தான் நீலகண்டன் இப்படி நிலைகொள்ளாது நடப்பார். சாம்பவிக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

உள்ளே நுழைந்ததுமே அம்மா சகுந்தலா "இத்தனை நேரம் எங்கடீ போன? மாப்பிள்ளையே ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய்ட்டாராம். ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு இருட்டின பிறகு வெளில உனக்கென்ன வேலை? ஏதோ அவர் கூப்பிட்டா, போனோமா, கொஞ்ச நேரம் பேசினோமா, கிளம்பி வந்தோமான்னு இல்லாம. இதுல ஃபோனையும் அணைச்சு வெச்சா, என்னன்னு நினைக்கிறது?" என்று பொரிந்தார்.

வாசலில் பைக் வந்து நிற்க, சூர்யா வேகமாக உள்ளே வந்தான்.

நடையை நிறுத்தி மகளைப் பார்த்த நீலகண்டன் ஏதோ கேட்க வர, மீரா "இதென்ன சாம், மனோஜ் அண்ணனுக்கு வாங்கின கிஃப்டைக் கொடுக்கலையா, நீ ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"தேவா எங்க அண்ணி?"

"ரூம்லதான் படிக்கறா. ஏன்?"

"எப்ப வந்தா?"

நீலகண்டன் "சாம்பவி, இத்தனை நேரம் நீ எங்க போன, ஏன் லேட்டு, மொபைலை ஏன் ஸ்விட்ச்ன ஆஃப் பண்ணி வெச்சிருந்தன்னு கேட்டா, நீ வேறெதையோ கேக்கற"

"ஒரு நிமிஷம்ப்பா" என்று கையிலிருந்த பரிசை சோஃபாவில் போட்டுவிட்டுப் பெற்றோரின் அறைக்குள் சென்று ஓய்வறையை உபயோகித்து, முகம் கழுவிக்கொண்டு வந்தபோது, சூர்யா அந்த கிஃட்டைத் திறந்து ஷர்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சூர்யா "ஏதாவது பிரச்சனையா சாம், மனோஜுக்கும் உனக்கும் சண்டையா? அழகான ஷர்ட். இதை ஏன் குடுக்காம வந்த?"

"ம்ம்ஹ்ம்… நான் வாங்கினது அவரோட சைஸ் இல்லையாம்ணா"

"சாம், மனோஜுக்குப் பிரிக்காமலே எப்படி சைஸ் தெரியும்?"

மீரா "நீங்க என்னங்க, போலீஸ் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு. இதானே உங்க சைஸுன்னு இவ கேட்டிருப்பா, அப்டிதானே சாம்?"

"..."

சகுந்தலா "அது கிடக்கட்டும். இவ்வளவு நேரம் எங்க போன நீ?"

"ஏம்மா, ஒரு நாள், ஒரு ரெண்டு மணி நேரம் சொல்லாம போய், லேட்டா வந்ததுக்கு என்னை இவ்வளவு கேட்கற நீ, இந்தக் கேள்வியை ஒரு தரமாவது தேவாவைக் கேட்டிருக்கியா?"

கடைசிப்பெண் தேவசேனாவுக்கு நீலகண்டனிடம் சற்றே சலுகை அதிகம்.

"பொறுப்பில்லாம நீ செஞ்ச வேலைக்கு உன்னைக் கேட்டா, தேவாவை ஏன் இழுக்கற?"

"..."

சூர்யா "சாப்பிடலாமா, பசிக்குது"

முதலில் மறுக்க நினைத்த சாம்பவி, பசிக்கவே மனதை மாற்றிக்கொண்டு உணவருந்தச் சென்றாள்.

"தேவா சாப்பிட்டாளாம்மா?"

"எங்க, இரு கூட்டிட்டு வரேன்"

சூர்யாவின் மொபைலில் அழைத்த மனோஜிடம் "சாம் வந்துட்டா மனோஜ். கோவிலுக்குப் போயிருக்கா. ஸாரி, உங்களையும் டென்ஷன் பண்ணிட்டோம்"

"..."

"நோ ப்ராப்ளம் மனோஜ், அவ ஓன்னும் சொல்லலை. தேங்க்…"

"ஐயோ தேவா, என்னடீ பண்ற, என்னங்க, டேய் சூர்யா, இங்க வாங்களேன்" என்ற சகுந்தலாவின் அலறலில் வீடே அங்கு விரைய, கப்போர்டில் இருந்த சாம்பவியின் புத்தம் புதிய புடவை ஒன்றை சீலிங் ஃபேனில் முடிச்சிட்டுக் கட்டிலின் மீது ஏறி நின்று தன் கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்ளத் தயாராக நின்ற தேவசேனாவைப் பார்த்து அதிர்ந்தனர் என்பது சம்பிரதாயமான வார்த்தை.

"நகரும்மா" என்று உள்ளே பாய்ந்து ,மளமளவென அவளது கழுத்திலிருந்து புடவையை உருவிய சூர்யா "உனக்கென்ன பைத்தியமா தேவா?" என்று அவளை உலுக்கிக் கீழே இறக்கி வெளியில் அழைத்து வந்தான்.

சகுந்தலா அழ, நீலகண்டன் பிரமை பிடித்தவர் போல் நின்றார். நடந்த கலவரத்தில் பயந்து அழுத ஆதியைத் தூக்கிக்கொண்டு ஹால் பால்கனிக்குச் செல்லும் வழியில் நின்ற மீரா அலட்டல் இல்லாது, அழாது, பதில் சொல்லாது மௌனம் சாதித்த தேவசேனாவையும், தங்கையை அழுத்தமாகப் பார்த்தபடி நின்ற சாம்பவியையும் யோசனையுடன் பார்த்தாள்.

விசாரணையும் சமாதானப் பேச்சுகளும் நடக்கையிலேயே சூர்யா பாதிப் பேச்சில் "தேவா" என்ற அலறலில், மொபைலை அணைக்காமலே எழுந்து சென்றதில் இங்கு நடப்பதை அறிந்துகொண்ட மனோஜ்,
நுங்கம்பாக்கத்தில் இருந்த தன் வீட்டிலிருந்து அசோக்நகருக்குப் பதினைந்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.

அழைப்பு மணியில் கலைந்து சூர்யா கதவைத் திறக்க, நேரே தேவசேனாவிடம் சென்று மண்டியிட்டு, அவள் கைகளைப் பிடித்தவன் "தேன்குட்டி, ஏன்டா இப்டி செஞ்ச, உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லையா?" என்றதில் வீடு உறைந்தது.
 

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

அக்காவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு, தங்கச்சியை ரூட்டு விட்டு இருக்கான்... அக்கா பவிகுட்டி, தங்கச்சி தேன்குட்டியா? 😏😏 மனோஜ் உன்னை நினைச்சா..😜😜

FB_IMG_1717749368386.jpg
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
75
அடேய் தேன் குட்டியா? நாசமா போறவனே முதலிலேயே சொல்லித் தொலைய வேண்டியது தானே பாவம் பவி
 
Top Bottom