• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 2

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
தனித்த வனத்தில் 2

றுநாள் போக மறுநாள் ஞாயிறன்று மனோஜும் அவனது அம்மா, அப்பாவும் வந்தனர். சாம்பவிக்கு நான்கு மாதங்களுக்குப் பின் மனோஜை நேரில் பார்ப்பது ஒருமாதிரி நன்றாகத்தான் இருந்தது. அதுவும் இப்போது திருமணம் ஒன்றே இலக்காக இருக்க, உறவு உறுதியானதாக, அவனுக்குக் கடமைப்பட்டதுபோல், நிறைய கமிட்டடாக, உணர்ந்தாள்.

அதிக வேலையோ, அலைச்சல் காரணமாகவோ சற்றே சோர்வாகத் தெரிந்தாலும் அழகனாகத் தெரிந்தவன், சாம்பவியை முன்னை விட அதிகம் கவர்ந்தான்.

"சாம், இதைக் கொண்டு போய்க் கொடு" என்ற அண்ணியின் குரலில் சமையலறைக்குச் சென்ற சாம்பவி, அப்பாவும் அம்மாவும் மனோஜின் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்க, சூர்யா மகனுடன் பிஸியாக இருக்க, மனோஜ் பால்கனிப்பக்கம் எழுந்து செல்வது தெரிந்தது.

'பாவம், போரடிக்குதுபோல' என நினைத்தவள், டீ கப்புகளுடன் வெளியில் செல்ல, பக்கோடாவுடன் பின் தொடர்ந்த அண்ணி "சாம், உனக்கும் மனோஜுக்கும் டீ எடுத்துட்டுப் போய்ப் பேசு"

எல்லார் முன்பும் அவனிடம் செல்லத் தயங்கியபடி அருகில் சென்றவள், டீயை வாங்கி மௌனமாகப் பருகியவனுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்தாள்.

"நைஸ் டீ" என்றவன் உள்ளே சென்றுவிட்டான். சற்று நேரம் பொதுவாக கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசினர்.

சூர்யா "உங்க ஹனிமூன் பிளான் என்ன மனோஜ்?"

அரைக் கண்ணால் சுற்றி எல்லோரையும் ஒரு முறை பார்த்தவன் "இன்னும் முடிவு செய்யலை"

மனோஜின் தந்தை "சாம்பவியோட எங்கயாவது வெளிய போய்ட்டு வாயேன்டா மனோ"

"சரிப்பா"

திருமணத்திற்கு முன் அவனுடன் தனியே வெளியில் செல்லும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்காதென நினைத்திருந்தவள், 'அவனுக்கென வாங்கிய ஷர்ட்டை எப்போது எப்படிக் கொடுப்பது? கல்யாணத்துக்குப் பிறகு கொடுப்பதில் என்ன ஸ்வாரசியம்?' என்ற யோசனையில் இருந்தாள்.

"அப்ப நானும் அம்மாவும் வீட்டுக்குப் போகவா?" - மனோஜின் தந்தை.

"இன்னைக்கு முக்கியமான ஒரு வேலை இருக்குப்பா. எப்பன்னு நானே சொல்றேன்" என்றவன், சாம்பவியிடம் 'ஓகேதானே?' என்பதுபோல் தலையசைக்க, ஒத்திசைத்தாள்.

********************

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் திருமணம். சாம்பவிக்குத் தேவையான உடைகள் தைத்து, தைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சாவகாசமாக வீட்டில் இருப்பதில் பளபளப்புக் கூடி, கல்யாணப் பெண்ணின் மகிழ்ச்சியும் மினுமினுப்பும் சேர, மெருகேறித் தெரிந்தாள் சாம்பவி.

சென்னையிலேயே இருந்த சில கம்பெனிகளுக்கு விண்ணப்பித்தாள். எப்போதோ அப்ளை செய்திருந்த அஸ்ஸாம் ஆயில் கம்பெனி ஆன்லைனில் முதல்கட்ட இன்டர்வியூவுக்கு அழைக்க, முதலில் வேண்டாமென நினைத்தவள், பிறகு, ஒரு அனுபவத்துக்காக செய்துதான் பார்ப்போமே என்று பங்கேற்றாலும், சிறப்பாகவே செய்தாள்.

அம்மாவின் நச்சரிப்பில், "ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் வீட்ல இருக்கேன். அதுக்குள்ள துரத்துறியேம்மா" என்று சடைத்தாலும், அவளது சாமான்களை சிறிது சிறிதாக பெட்டிகளில் சேகரிக்கத் தொடங்கினாள்.

சாம்பவி பழைய சாமான்களை ஒழிக்கும்போது சிறு வயது ஃப்ராக்குகள், ஸ்கூல் பொருட்கள், ரிப்போர்ட் கார்ட், அவளும் தேவசேனாவும் உறங்கும் சிறுவயது ஃபோட்டோ என கலந்துகட்டியாகக் கிடைத்தவற்றில் பரவசப்பட்டவளைக் கண்டு அப்பாவும் அம்மாவும் உணர்ச்சி வசப்பட்டனர்.

அம்மா சகுந்தலாவின் வற்புறுத்தலில் சில கடினமான உணவுகளை சமைக்கக் கற்றுக்கொண்டாள்.

அன்று காலை பரபரப்பில் அலுவலகம் கிளம்பிய தந்தை நீலகண்டன் "சாம், உன்னோட ஆதார் கார்டை குடும்மா. மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு அப்ளை பண்ண ஜெராக்ஸ் எடுத்துட்டுத் தரேன். இப்ப பதிவு செஞ்சா, கல்யாணத்தன்னைக்கே ரெஜிஸ்தரும் செய்துடலாம்"

கையில் மைக்ரோ ஃபைபர் கிளவுஸ் அணிந்துகொண்டு ஷோ கேஸில் இருந்த பொருட்களை, டீவியை டஸ்ட்டிங் செய்து கொண்டிருந்த சாம்பவி "அண்ணி, கப்போர்ட் டிராயர்ல ஒரு ஃபைல் கவர் இருக்கு. அதுக்குள்ளதான் ஆதார் கார்ட் இருக்கு. கொஞ்சம் அப்பாகிட்ட எடுத்துக் கொடுங்களேன்"

சொன்னதைச் செய்த மீரா, சற்று நேரத்தில் வீட்டின் ஆண்கள் இருவரும் கிளம்பியதும்,
"இது என்ன சாம்பவி?" என்றவளின் கையில் கர்ப்பத்தை உறுதி செய்த அடையாளத்துடன், அதற்கான சாதனம் இருந்தது.

*******************

சாம்பவி மீராவின் கேள்வியில் ஒரு கணம் திகைத்தாலும், சட்டென விரிந்த புன்னகையுடன் "ஐய், கங்கிராட்ஸ் அண்ணி" என்று கையை நீட்ட, மீரா எந்த எதிர்வினையுமின்றி, தன் முகத்தையே கூர்ந்ததில், சாம்பவி குழம்பினாள்.

"என்னண்ணி, ஏன் அப்படிப் பாக்கறீங்க?"

"நான் ப்ரெக்னென்ட் இல்லை சாம். போன வெள்ளிக்கிழமை கூட கோவிலுக்கு வரமுடியாதுன்னு சொன்னேனே"

"ம், நான் கூட நம்ம வீட்டுக்கு இன்னொரு பாப்பா வரப்போகுதுன்னு நினைச்சேன்"

"அப்ப இது யாரோடது சாம்?"

"என்னைக் கேட்டா?"

"இது உன்னோட ஃபைல் இருந்த டிராயர்ல இருந்தது சாம். என்னோடதா இருந்தா, உன் ரூமுக்கு ஏன் வரப்போகுது?"

அண்ணி மீராவின் கேள்வியைப் புரிந்துகொண்டவள், "அண்ணி, என்னை சந்தேகப்படறீங்களா?" என்றாள் நம்பிக்கையின்றி.

பெற்றோர் காட்டிய வரனைத் திருமணம் செய்துகொள்ள மறுபேச்சின்றி சம்மதித்து, அவர்களின் விருப்பம், நிபந்தனை, வசதி என்பதால், தன் லட்சிய வேலையை உதறிவிட்டு இன்னும் இரண்டு வாரத்துக்குள் கல்யாணம் என்ற நிலையில், அண்ணி மீராவின் கையில் இருந்த பொருளும், அவளது சந்தேகமும் கேள்வியும் சாம்பவியை நிலைகுலையச் செய்ய, நீண்ட வருடங்களுக்குப் பிறகு அழுகை வந்தது.

மீரா பதில் சொல்லாது நிற்க, சாம்பவி அன்னையை அழைத்து, அழுகையுடன் மீராவின் கையில் இருந்ததைக் காட்டி, அவளது கேள்வியைச் சொல்ல, சகுந்தலாவிற்குக் கோபம் வந்து விட்டது.

"இன்னும் பதிமூணு நாள்ல கல்யாணம் ஆகப்போற எம் பொண்ணை சந்தேகப்படுவியா நீ?"

"இல்லத்த…"

" என்ன நொள்ளத்த? நம்ம வீட்ல நீதான் அந்த ஸ்டேஜ்ல இருக்க. நீயும் இல்லைன்னா , பின்ன நானா? எனக்கு யூட்ரஸை எடுத்தே ஏழு வருஷம் ஆச்சு"

"அம்மா"

"பின்ன என்னடீ, குப்பைய தூக்கிப் போடாம ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு"

"இது பழசு இல்லை அத்த. இந்த பாக்ஸ்ல தேதியைப் பாருங்க. யாரோடதும் இல்லைன்னா, இவங்க ரூம் டிராயருக்கு இது வந்தது எப்படித்த?"


**********************

ஒரு நாள் என்பது இத்தனை நீளமா? கடிகாரத்தில் ஒவ்வொரு நொடியும், நிமிடமும், மணித்துளிகளும் கடப்பதை முதல்முறையாக அதன் ச்சக், ச்சக் சத்தத்தோடு கேட்டாள் சாம்பவி.

ஏதோ ஒரு நகை சரியில்லை என்று மாற்றுவதற்காக வெளியே செல்லவிருந்த அம்மாவும் அண்ணியும் இரண்டாவது வேளை காஃபியைக் கூடக் குடிக்கும் எண்ணமின்றி அமர்ந்திருந்தனர்.

கருத்தரிக்கும் வயதைத் தாண்டிய சகுந்தலா, ஒரு குழந்தைக்குத் தாயான மீரா, திருமணத்தை எதிர்கொண்டு காத்திருக்கும் சாம்பவி, இவர்கள் மூவரும் இல்லையெனில்…

மீராவின் கேள்வி மூவரின் மனதிலுமே எதிரொலிக்க, அதற்கான பதில்களின் சாத்தியங்கள், அவர்களை மேலே சிந்திக்க விடாது பயமுறுத்தியது.

'தேவாவா? சேச்சே, சின்னப்பொண்ணு. ஏதோ விளையாட்டுத்தனமா பேசுவாளே தவிர… '

'ஒருகால் இருக்குமோ? காலேஜ்ல படிக்கறா, லவ்வு, ஹுக்கிங் அப், நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்டு, ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ்னு (love, hooking up, no strings attached, friends with benefits) யார் கிட்டயாவது மாட்டி ஏமாந்திருப்பாளோ?'

'சேச்சே, தேவா என்னை விட தைரியமான ஆளு. எல்லாத்துலயும் பெஸ்ட்டா வேணும்னு சண்டை போட்டு, அடம் புடிச்சு வாங்கிக்கறவ. அவ போய் இது மாதிரியெல்லாம் எப்படி செய்வா?'

'ஆடை, கல்லூரி, படிப்பு, என எதைத் தேர்ந்தெடுத்தாலும் 'என் லெவலே வேற' என்பவளாயிற்றே?"

ஒரு கட்டத்தில் சகுந்தலாவால் சூழலின் இறுக்கத்தைத் தாங்க முடியாது போகவும், வாய்விட்டே புலம்பத் தொடங்கினார்.

"முருகா, இதென்ன குழப்பம்? யாரையுமே நம்ப முடியலையே"

சாம்பவி "அம்மா, இதை பொண்ணுங்கதான் செஞ்சிருப்பாங்கன்னு ஏன் நினைக்கறீங்க? அண்ணனோ, அப்பாவோ கூட எங்க ரூம் கப்போர்ட்ல மறைச்சு வெச்சிருக்கலாமே?"

"வாயை மூடுடீ"

மீரா "அவ சொல்றதும் சரிதானே அத்த?"

விளையாடிக்கொண்டிருந்த ஆதி பசியில் அழத் தொடங்கவும்தான் நேரத்தைக் கூட கவனிக்காது மூவரும் அவரவர் சிந்தனையிலேயே இருந்தது புரிய, முதலில் சுதாரித்த மீரா மகனுக்கு உணவூட்ட எழுந்து சென்றாள்.

மருமகளின் தலை மறைந்ததும் சகுந்தலா "ஒருவேளை தேவாவா இருக்குமோடீ. ப்ராஜக்ட்டு, ப்ராஜக்ட்டுனு ஊரைச்சுத்தறா"

"...ம்மாஆஆ, ஃபைனல் இயர்னா ப்ராஜக்ட் செய்யதானேமா வேணும்? நல்லா படிக்கற பொண்ணைப் போய் எதையாவது சொல்லாதம்மா. அவ எல்லாமே பெஸ்ட்டா வேணும்னு சொல்றவ, அவளைப்போய்…"

"பயமா இருக்குடீ சாம்பவி. உன் கல்யாணத் தேதி வேற பக்கத்துல இருக்கு. எனக்கு யாரை சந்தேகப்படறதுன்னே தெரியலை. அப்படி ஏதாவது இருந்தா, உங்கப்பாக்குத் தெரிஞ்சா என்னைத்தான் முதல்ல வெட்டுவார். போயும் போயும் இது உங்க அண்ணி கையிலயா கிடைக்கணும்?" என்று அவசரமாகப் புலம்பினார் .

தாயை விநோதமாகப் பார்த்த சாம்பவி "ஏம்மா, யார் கைல கிடைச்சா என்ன, உண்மையா இருக்கற பட்சத்துல மறைக்கற விஷயமா இது, அதுவும் வீட்ல இருக்கறவங்க கிட்ட?"

"அதுக்கில்லடீ, இது அவ அம்மா, அக்கா காதுக்கெல்லாம் போய்…"

"...ம்மா, உன் கற்பனையைக் கொஞ்சம் நிறுத்தறியா? இன்னும் யார் ப்ரெக்னென்ட்னே தெரியல, அதுக்குள்ள நீ வேற…"

எதையோ சொல்ல வந்த சகுந்தலா, ஆதி ஓடி
வந்து மடியில் ஏறிக்கொண்டு "பாத்தீட்ட" எனவும் அமைதியாகிவிட, அவன் பின்னாலேயே வந்த மீரா "உங்க கிட்டதான் சாப்பிடுவானாம் அத்தை" என்று தட்டை மாமியாரிடம் கொடுக்க, "எந்தங்கம்" என்று பேரனைக் கொஞ்சியபடி ஊட்டத் தொடங்கினார்.

ஆதி உறங்கிவிட, காலை வரையில் இருந்த திருமண வீட்டின் உற்சாகம் சிறிதுமின்றி மூவரும் அவரவர் சிந்தனையில், அமைதியாக உண்டனர்.

மூன்று மணிபோல் சாம்பவியின் மொபைலில் அழைப்பு வர "ஹாய், சொல்லுங்க" என்றவள் மனோஜ் என்று சத்தமின்றி வாயசைக்க, மீரா 'எழுந்து போ' என்பதாக ஜாடை காட்டினாள்.

இரண்டே நிமிடத்தில் திரும்பியவளின் முகத்தில் அங்கிருந்த சஞ்சலங்களை மீறி சந்தோஷம் தெரிந்தது.

"அம்மா… அவர்… அவங்க என்னை வெளில மீட் பண்ண அடையார் வரச் சொல்றாங்கம்மா. அங்க நாலு மணிவரை வேலை இருக்காம். அப்புறம் ஃப்ரீயாம். உங்க கிட்ட கேட்டுச் சொல்றேன்னு…"

சகுந்தலா "இத்தனை நாளா இல்லாம, இன்னைக்குன்னு பாத்து கூப்பிடறார் பாரு. கல்யாணத்தைப் பக்கத்துல வெச்சுக்கிட்டு உன்னை எப்படி தனியா அனுப்பறது? அப்பாவைக் கேளு. இல்லாட்டி, இன்னொரு நாள் வரேன்னு சொல்லிடுறியா?"

தாயின் பதிலில் முகம் வாடிய சாம்பவியைக் கண்ட மீரா "போய்ட்டு வரட்டும் அத்தை. நம்ம ஆட்டோ சுரேஷ் அண்ணன் கிட்ட சொன்னா, பத்திரமா கொண்டு போய் விடுவார். வரும்போது மனோஜ் அண்ணனோட வந்துடுவா. என்ன சாம்?"

"சரி, போய்ட்டு வா. அப்பா, சூர்யாக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடு"

"சரிம்மா" என்று எழுந்து சென்று தயாராகி வந்தவளிடம் காணப்பட்ட மெலிதான படபடப்பும், சிரிப்பை, பேச்சை மனதுக்குள் ஒத்திகை செய்வதான முகபாவமும் மீராவை நெகிழ்த்தியது.

'வெளி மாநிலத்துல வேலை பார்த்த பொண்ணு மாதிரியா இருக்கா? பாவம் சாம், இவளைப் போய் சந்தேகப்பட்டு பட்டுனு அப்டி கேட்டுட்டேனே' என்று வருந்தினாள்.


 

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

இதென்ன புது குழப்பம்? 😳😳. இப்ப யாரு கர்ப்பமா இருக்காங்க? சாம்பவியா? தேவாவா? 🤔🤔
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
118
சூப்பர் அம்மா 😄😄♥️♥️♥️அந்த pregnency kit டால என்ன கழகம் வருமோ 🤔🤔🤔🤔🤔
 
Joined
Jun 19, 2024
Messages
8
தேவாதான் அக்காவுக்கு போட்டி🤨மனோஜ் கூப்பிட்டு பவிக்கிட்டே அதை தான் சொல்ல போறான்னு நினைக்கிறேன்
 
Top Bottom