• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 13

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
31
தனித்த வனத்தில் 13
“சாம், மீராக்கு பசிக்குதாம். ஸ்ட்ராங்கா ஒரு கப் ஹார்லிக்ஸ் கலந்து தர்றியா?”

“இதோ வரேண்ணா”

“சாம்பவி, அப்புகுட்டி (தேவாவின் மகன்) அழறான் பாரு. கொஞ்சம் ஜூஸ் போடுறியா?”

“இதோ வரேம்மா”

ஆதி “அத்த, பார்க் போகலாம்”

“இப்ப இல்லடா செல்லம், குட்மார்னிங் ஆகி வெயில் அடிக்குது பாரு. சாயங்காலம் போகலாம். உனக்கு பிஸ்கட் தரவா? நீ போய் குட் பாயா தாத்தா கிட்ட இரு, நான் வரேன்”

சாம்பவி ஹார்லிக்ஸைக் கலந்து மக்கில் ஊற்றி எடுத்துக்கொண்டு, சூர்யாவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டியவளைப் பார்வையால் தொடர்ந்தாள், ஹாலில் அமர்ந்திருந்த தேவசேனா.

“இந்தாண்ணா ஹார்லிக்ஸ்”

“தேங்க்ஸ் சாம்”

“ஏம்மா, இப்ப குழந்தைக்கு ஜூஸ் முக்கியமா, அண்ணிக்கு ஹார்லிக்ஸ் முக்கியமா?”

சகுந்தலா “தேவா, நீ கொஞ்சம் சும்மா இரேன்”

சூர்யா “இவள, நகரு சாம்…” என்று வெளியே வரப் பார்க்க, சாம்பவி “உள்ள போண்ணா. அண்ணிக்குத் தலை வலிக்கப் போகுது” என்று அவனை உள்ளே அனுப்பி, கூவி அழைத்த குக்கரிடம் ஓடினாள்.

கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு வெந்நீரில் போட்டிருத்த தக்காளியை எடுத்துத் தோல் உரித்துக் கையால் நன்கு பிசைந்து, வடிகட்டி, சிறிது சர்க்கரையும், வெந்நீரும் கலந்து ஃபீடிங் பாட்டிலில் ஊற்றி, அம்மாவிடம் கொண்டு போய் கொடுத்தாள்.

“நீ காயை நறுக்கு சாம்பவி, நான் வந்து சமைக்கறேன்”

“சரிம்மா”

சாம்பவிக்குத் தலை வலி விண்ணென்று தெறித்தது. சூடாக ஒரு கப் காஃபியோ டீயோ குடித்தால் தேவலாம்தான். ஆனால், தனக்கு மட்டும் போட சோம்பேறித்தனமாக இருந்தது.

டைனிங் மேஜையில் காய்கறிகளுடன் அமர்ந்தவள், கீரையை ஆய்ந்தபடியே மொபைலைத் திறந்து, தேதியைப் பார்த்தாள்.

‘நான் வந்து எட்டு நாள்தான் ஆச்சா? எனக்கென்னமோ, மாசக்கணக்குல ஆயிட்டாப்பல இருக்கு’

வாட்ஸ்ஆப்பைத் திறக்க, வழக்கம்போல் ஏமாற்றமே.

மன்மத ராவ் கோல்ஃப் டோர்னமென்ட் ட்ராஃபியை வென்றிருந்தான். அதனுடன் ஒரு ஃபோட்டோ அனுப்பியதோடு சரி. மற்றபடி அவனும் பேசவில்லை. இவளும் அழைக்கவில்லை. ஒரு குறுந்தகவல் கூட இல்லை.

‘நீ பேசறதுதானே, அவரை மட்டும் எதிர்பார்க்கற?’

‘உன் மனசுல நீயா கட்டற கோட்டைக்கெல்லாம் அவரா பொறுப்பு?’

‘ஒரு செக்ஷன் ஹெட், சீனியர் மேனேஜர் எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கார். கொஞ்சம் சின்ன வயசா, சிரிச்சுப் பேசினா நீ அவருக்கு சமமா?’

‘இதே மத்த சீனியர் மேனேஜர்களை மாதிரி வயசானவரா இருந்து இப்படிப் பழகினா, கெழவன் ரொம்பத் துள்றான், சரியான ஜொள்ளு பார்ட்டின்னு சொல்ல மாட்ட?’

‘அதான் அவர் அப்டி இல்லைல்ல, இப்ப டோர்னமென்ட் முடிஞ்சு ஃப்ரீயாதானே இருக்கார். ஒரு மெஸேஜ் அனுப்பினா என்னவாம்’

இரண்டு, மூன்று முறை தானே ஏதாவது டைப் செய்ய நினைக்க, அவன் ஆன்லைன் என்று காட்டவும், விட்டுவிட்டாள்.

‘இங்க இருக்கற வேலைக்கும், வீடு இருக்கும் நிலமைக்கும் எனக்கு இது தேவையா? ரெண்டு நிமிஷம் நிம்மதியா விட மாட்டேன்றாங்க’

வாசலில் காலிங் பெல் ஒலிக்க, மனோஜும் அவனது அம்மாவும் வந்திருந்தனர். வரவேற்பாகத் தலையசைத்த சாம்பவி மேய்வதையும் ஆய்வதையும் அமைதியாகத் தொடர்ந்தாள்.

ஏனோ தெரியவில்லை, சாம்பவிக்கு மனோஜின் முகம் சிறிது டல்லடிப்பதுபோல் தோன்றியது.

‘அது என் கவலையில்லை. எனக்கது தேவையுமில்லை’ என்று தோளைக் குலுக்கிப் புறம் தள்ளினாள்.

சகுந்தலா “சாம்பவி, குடிக்க ஏதாவது கொண்டு வா” எனவும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றாள்.

ஒரு அடுப்பில் பாலை வைத்து, டீக்கு இஞ்சியை எடுத்துத் தோல் சீவியவளுக்கு அவள் வந்து இறங்கிய தினம் நினைவுக்கு வந்தது.

தேவசேனாவுக்குக் கரு கலைந்ததென்னவோ கஷ்டம்தான். அதற்கான ஓய்வாக தாய்வீட்டிற்கு வந்ததும் நியாயம்தான்.

ஆனால், அண்ணி மீராவின் அம்மா, மீராவையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்த ஐந்தாவது நாளே, குழந்தையைத் தானே குளிப்பாட்டி எழுந்தவர், பாத்ரூம் டைலில் இருந்த எண்ணெயிலும் சோப்பிலும் வழுக்கி விழ, இடது காலில் மெலிதான எலும்பு முறிவு.

நல்ல வேளையாகக் குழந்தையைப் பார்க்க வந்திருந்த மீராவின் அக்காவிடம் குழந்தையைக் கொடுத்த பிறகே விழுந்திருக்கிறார். மூன்று நாட்கள் தங்க வந்த அக்கா ஒரு வாரம் வரை நீட்டித்தாள்.

மும்பையில் இருக்கும் அவளால் பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகளை விட்டு எத்தனை நாள் இங்கே இருக்க முடியும்?

சூர்யாவுக்கும் விடுப்பு முடிந்துவிடவே, மனைவி, குழந்தைகளை இங்கேயே அழைத்து வந்துவிட்டான்.

அம்மா சகுந்தலாவின் கவனம் தன்மீதே இருக்கவேண்டும் என அண்ணியுடன் போட்டியிட்ட தேவசேனா, மனோஜ் அவன் வீட்டிற்கு அழைத்தும் செல்லவில்லை.

இரண்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள், பிள்ளைபெற்ற மருமகள், தேவா, அவளது குழந்தை, தினமும் வந்து செல்லும் மாப்பிள்ளை மனோஜ், குழந்தையைப் பார்க்கவென வரும் உறவும் நட்பும் என, இரண்டு நாட்களிலேயே பகல் முழுதும் வேலை, இரவில் புதுக் குழந்தையின் அழுகை என சகுந்தலா விழி பிதுங்கிப்போக, சூர்யா சாம்பவியை அழைத்துவிட்டான்.

உள்ளே நுழைந்த நொடியில் இருந்து, சாம்பவியை வேலை பிடித்துக் கொண்டது. இவ்வளவுக்கும், மேல் வேலைக்கும், மீராவுக்கும் குழந்தைக்கும் குளிக்க, குழந்தையின் துணிகளைத் துவைக்கவும் இரண்டு பெண்கள் வருகின்றனர்.

சாம்பவிக்கு வேலை செய்வது பிரச்சனையில்லை. தேவா குற்றம் சொல்வதும், அவளது கவன ஈர்ப்பு முயற்சிகளும், உடல் தேறிவிட்ட பின்பும் அன்னையைத் தன்னிடமே இருத்திக்கொள்ள நினைப்பதும் அண்ணி மீராவைப் பெரிதும் சங்கடப்படுத்தியதோடு, சூர்யாவின் ஆத்திரத்தைக் கிளப்பியது.

அண்ணா என்ற உரிமையோடு அவனிடமிருந்து சலுகைகளை எதிர்பார்ப்பவள், அதே உரிமையை, மரியாதையைத் அவன் மனைவிக்குத் தராவிட்டால், தன்னிடம் அவனுக்கு வெறுப்புதான் வளரும் என்று தேவசேனாவுக்குப் புரியவில்லையா, அல்லது அது குறித்து அவளுக்குக் கவலையில்லையா என்று சாம்பவிக்குப் புரியவில்லை.

பிள்ளை பெற்றுப் பதினைந்து நாட்கள் கூட ஆகாத நிலையில், மூன்று வயதில் விஷமமும் துறுதுறுப்புமாய் ஒரு சவலைக் குழந்தை இருக்க, தன் தேவை ஒவ்வொன்றுக்கும் அழைத்து, தேவசேனாவுடன் போட்டியிட நேர்ந்ததில், இங்கு வந்த இரண்டே நாட்களில் மீரா நொந்து போனாள்.

அவளது பிறந்த வீட்டில் அவளுக்குச் செய்ய மறுக்கவில்லை. ஒரு அசந்தர்ப்பமான சூழலில் தன் வீட்டில், தன் மனைவியை உரிமையோடு வசதியாகப் பார்க்க முடியாததில் சூர்யாவுக்குப் பயங்கரக் கோபம்.

போதாததற்கு, பல நேரங்களில் சகுந்தலா “பாவம்டா தேவா. ஒரு அபார்ஷன் மூணு பிரசவத்துக்கு சமம். இதுல தாய்ப்பாலை விடாத கைக்குழந்தை வேற” என்று மகளுக்காக உருகினார்.

சாம்பவி ‘அப்படி அவசரப்படச் சொன்னது யாரு?’ என்ற தன் வாய்வரை வந்துவிட்ட கேள்வியை முழுங்கினாள்.

டீ பொங்கியதில், நினைவில் நீர் தெளித்த சாம்பவி, டீயை லோட்டாவில் வடிகட்டி சர்க்கரை சேர்த்து ஆற்றி, எல்லோருக்குமே கப்பில் ஊற்ற, மனோஜின் அம்மா தன்னைப் பற்றி விசாரிப்பது காதில் விழுந்தது.

“சாம்பவிக்கு ஏதாவது வரன் வந்துச்சா சம்பந்தி?”

நீலகண்டன் “சீக்கிரம் அமைஞ்சுடும். நாங்களும் பாத்துக்கிட்டேதான் இருக்கோம்” என்றவரின் குரலில் சிறிது விரக்தி தொனித்ததோ?

பேச்சை மாற்ற எண்ணிய சூர்யா “சாம்”

“இதோண்ணா”

டீ கப்புகளையும் சொம்பில் குடி நீரையும் ஒரு ட்ரேயில் எடுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.

தான் பேச வந்ததைப் பேசிவிடுவதில் முனைப்பாக இருந்த சம்பந்தியம்மா
“இப்பக்கூட நான் சொன்ன அந்த சீர்காழி பையன் வீட்ல ரெடியா இருக்காங்க. நிச்சயம் பண்ணிக் கல்யாணம் நின்னதைக் கூட அவங்க பெருசா எடுத்துக்கலை. நீங்க சரின்னு சொன்னா…

“நானே சொல்றேம்மா” என்றார் தந்தை.

“நான் உங்களுக்காக மட்டும் சொல்லலை. இவரோட அக்கா, எங்க வீட்டுக்கே மூத்தவங்க, “இந்தக் கரு கலைஞ்சதுக்குக் காரணமே, சாம்பவியோட மனவருத்தமும், சாபமும்தான்னு…”

சாம்பவி வேகமாகச் சமையலறைக்குத் திரும்பி விட, நீலகண்டனும் சகுந்தலாவும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

மனோஜ் “ஏம்மா?”

சூர்யா “தேவை இல்லாத பேச்சு எதுக்கு ஆன்ட்டி?”

“எதுப்பா தேவையில்ல? இவ்வளவு சீக்கிரம் ரெண்டாவது குழந்தை வேண்டாம்தான். ஆனா, உண்டான கரு கலைஞ்சா வருத்தமா இருக்காதா? அது எங்க வீட்டு வாரிசு இல்லையா?”

பேசுவது தன் அம்மாதானா என்று நம்பமுடியாத பார்வை பார்த்தான் மனோஜ்.

தேவசேனா இரண்டாவது உண்டாகி இருக்கிறாள் என்று தெரிந்ததும் ‘உன் பொண்டாட்டியால ஒரு குழந்தையையே ஒழுங்கா பார்க்க முடியலை. இதுல இவ்வளவு சீக்கிரம் இன்னொன்ணு வேறயா?’ என்றவர், இப்போது ஏதோ, வேண்டி, விரும்பி உருவான வாரிசு கலைந்தது போலவும், அதற்கு சாம்பவிதான் காரணம் என்பது போலவும் பேசுவதைக் கேட்டவனுக்குத் தலைகுனிவாக இருந்தது.

ஏற்கனவே, தேவசேனாவின் குணத்திற்கும், தன் தாய்க்கும் ஒத்துப்போகாமல் இருவரும் முட்டிக்கொள்வது ஒருபுறம், பிஸினஸில் தன்னை அலுவலகத்துக்குள் முடக்கி வைத்திருப்பது ஒருபுறம், 24×7 குழந்தைக்கு மேலாய் கணவன் தன்னைக் கொஞ்சிக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கும் தேவசேனா ஒருபுறம் என மும்முனைத் தாக்குதலில் இருந்தவனுக்கு, அம்மா தேவையில்லாது சாம்பவியை இழுத்துப் பேசியதில், இதுவரை இல்லாத குற்றவுணர்வு எழுந்தது.

எழுந்து கையில் இருந்த மகனை மனைவியிடம் கொடுத்தவன் “கிளம்பலாம்மா” என்று வாசலை நோக்கி நடந்துவிட, வேறு வழியின்றி எழுந்தவர்,

“இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு அவங்க செய்யறது தெரியல, நாம சொல்றதுதான் தப்பா படுது. கல்யாணத்தைப் பத்தி சீக்கிரமா முடிவு செய்ங்க” என்ற முத்தை உதிர்த்துவிட்டே வெளியேறினார்.

சமையலறைக்குச் சென்று “சாம்?” என்ற சூர்யாவிடம்

“ஐ’ம் ஆல்ரைட் ணா”

“அவங்க சொன்னதையெல்லாம் நினைச்சுக் குழப்பிக்காதடா”

“ம்”

‘நிச்சயம் செஞ்ச கல்யாணம் நின்னாலும்’ - நானா நிறுத்தினேன்?’

ஏதோ உறவில், தெரிந்தவர்களில் யாரும் பேசினால் கூட வெறும் வம்பு என்ற அளவில் ஒதுக்கி, ஒதுங்கி விடலாம். அப்படி ஒதுங்கித்தான் இருக்கிறாள்.

மகன் செய்த தவறுக்கு, துரோகத்துக்கு வருந்தி இழப்பீடு செய்யவேண்டாம். குறைந்தபட்சம் மனதை நோகடிக்காமல் இருக்கலாமே? வீடுதேடி வந்து, வலிக்க வார்த்தையால் அடிப்பது என்ன மாதிரி ஒரு மனநிலை?

அவரைச் சொல்லிப் பயனில்லை. மனோஜின் நம்பிக்கை துரோகத்துக்குத் துணை, அவளது சொந்தத் தங்கை என்கையில், எதையும் பேச முடியாமல் போகிறது. வெட்டியவளை வீட்டில் வைத்துக்கொண்டு, கோடாரியைக் குறை சொல்வதில் லாபமென்ன?

சாம்பவி தன் எரிச்சலை, உள்ளுக்குள் கனன்ற ஆத்திரத்தை, அவரது பேச்சின் மீதான விருப்பம் இன்மையை வெளிப்படுத்தத்தான், சட்டென விலகி வந்தாள்.

அதோடு, அவள் மனோஜை எப்போதோ தூக்கி எறிந்திருக்க, ‘இவங்க யாரு என்னைப் பத்திப் பேச’ என்ற கோபம்.

இன்னும் சொல்லப்போனால், இது போன்ற சலன புத்தி கொண்ட ஆளிடமிருந்தும், தனக்குச் சாதகமில்லாத சூழலில் எதையும் யாரையும் எப்படியும் மாற்றிப் பேசும் குடும்பத்திலிருந்தும் தான் தப்பி விட்டதாகவே தோன்ற, உள்ளுக்குள் நிம்மதி பரவியது.

ஆனால், அந்த நிம்மதிக்கு ஆயுள் அதிகமில்லை.

***********************

சாம்பவி வந்து இரண்டு நாட்கள் பேசாமல் இருந்த சகுந்தலா, மீண்டும் அவளது திருமணம் குறித்து அவ்வப்போது புலம்பத் தொடங்கினார். சாம்பவியும் இங்கு வரும்போதே எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதால், இதுவரை காதில் வாங்காததுபோல் இருக்கிறாள்.

இப்போது சம்பந்தியம்மா வந்து அடங்கி இருந்த நெருப்பை விசிறும் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்க, வீட்டில் மீண்டும் ‘சாம்பவி கல்யாணம்’ பற்றி எரியத் தொடங்கியது.




 

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

jacky

New member
Joined
Jun 19, 2024
Messages
15
இந்த சாம்பவிக்கு கொஞ்சம் ரோஷம் வந்தால் நல்லாருக்கும்
 
Joined
Jun 19, 2024
Messages
21
😍😍😍

தப்பு செஞ்ச பொண்ணை தாலாட்டி, சீராட்டுறாங்க... இவங்க சங்காத்தமே வேண்டாம்னு தூரமா போய், தான் உண்டு, தன் வேலையுண்டுன்னு இருந்த பொண்ணை இங்க வர வச்சு இப்படி பண்றாங்களே.. சாம்பவி பாவம்...🥺🥺🥺

 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
85
இராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாதுங்கறாப் போல இந்த தேவாவும் அவள் மாமியாரும் தீராத தலைவலி,😡😡😡😡 சாம்பவி கொஞ்சம் போல்டா பேசலாம்
 
Top Bottom