• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை..! 1

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை..! 1

“ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி
சிவன் சேவடி போற்றி, ஈஸ்வரா, தென்னாடுடைய சிவனே, அவனருளாலே அவன் தாள் வணங்கி”

“பெருமாளே, ஏடுகொண்டல வாடா, கோவிந்தா, கோ…விந்தா”

“அப்பனே சண்முகா, தாயே மீனாக்ஷி”

“குள்ள குள்ளனே, குண்டு வயிறனே, வெள்ளி கும்பனே, விநாயகா… எல்லாரையும் காப்பாத்துப்பா! கண்கண்ட தெய்வமே, கற்பகக் களிறே, என் கற்பகமே… எல்லாம் உன் செயல், பாத்து செய்”

சமையலறையை ஒட்டி வலப் பக்கத்தில் சிறிதாக இருந்த பூஜையறையில் இருந்து பாதி பாட்டும் மீதி பேச்சுமாக வந்த தந்தை தணிகைநாதனின் குரலுக்குப் பள்ளிச் சீருடை அணிந்து முற்றத்துத் தூணில் சாய்ந்தபடி அமர்ந்து வாயசைத்துக் கொண்டிருந்தாள் ஸ்வர்ணா (எ) ஸ்வர்ணலதா.

“செல்லி, சாப்பிட வா” என்ற குரலைக் கண்டுகொள்ளாது இருந்தவளைக் கலைத்தது வள்ளியம்மையின் மெலிந்த குரல்.

“ஏ லதா, எத்தனை வாட்டி கூப்பிடறது, நேரமாகுதுல்ல. அண்ணனே கோவத்தை விட்டுக் கூப்பிடுறப்போ அப்படி என்ன புடிவாதம், போய் சாப்பிடு போ”

“...”

வெளியில் வந்த தணிகைநாதன் “லதா, நீ இன்னும் கெளம்பலை, வைரவா!”

“இதோ வரேம்ப்பா” என்ற குரல் முன்னே வர, இரண்டு கைகளிலும் ஏந்திய தட்டுகளில் தோசை மற்றும் காரசட்னி சகிதமாக வைரவன் பின்னே வந்தான்.

நாற்காலியில் அமர்ந்து கொண்ட தந்தையிடம் ஒரு தட்டைத் தந்தவன், இன்னொன்றைக் கீழே வைத்துவிட்டுச் சமையலறைக்குள் சென்று விட்டான்.

“பாருங்கப்பா…” என்று தொடங்கியவளைக் கை அமர்த்தியவர் “நேத்து நைட் உன் ரெக்கார்ட் நோட்டுல உங்கண்ணன் படம் வரைஞ்சதையும் பார்த்தேன். அவனை வரைய விட்டுட்டு நீ அவன் மொபைல்ல டேட்டாவை தீர்த்துட்டன்னு காலைல நீங்க அடிச்சிக்கிட்டதையும் பார்த்தேன். ஒழுங்கு மரியாதையா சாப்ட்டு ஸ்கூலுக்குப் போற வழியைப் பாரு”

சாப்பிடத் தொடங்கியவர் “ஜீவா?” என்றார்.

“மணி என்ன ஆகுது, அவன் எப்பவோ போயாச்சு” - வள்ளியம்மை.

“டிஃபன் பாக்ஸ் வேணாமா, அப்புறம் ஸ்கூல்ல உருப்படியா செய்யற அந்த ஒரு வேலையும் இருக்காது” என்றது அடுக்களை அசரீரி.

தணிகைநாதன் எழுந்து அறைக்குள் சென்றுவிட, ஸ்வர்ணலதா சமையலறைக்குள் சென்று, தனிக்கூடையில் டிஃபன் டப்பா, ஸ்பூன், தண்ணீர் பாட்டில், டவல், என அமைப்பாக வைத்து எடுத்துக்கொண்டு வர, பின்னால் கேலியாகச் சிரிக்கும் சத்தம் கேட்கவும் கோபத்துடன் தட், தட்டென நடந்து வந்தாள்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் தயாராகி வந்து, மனைவி வள்ளியிடம் “அம்மாடி, நான் சாலைக்குப் புறப்படறேன்” என்ற தந்தையிடம் “நானும் வரேம்ப்பா” என்று தன் பள்ளிப்பையைச் சுமந்து கொண்டு கையசைத்து விட்டுக் கிளம்பினாள் ஸ்வர்ணலதா.

இரண்டு தெரு திரும்பியதும் இருக்கிற பள்ளிக்கு நடந்து செல்ல சோம்பேறித்தனம் என்பதை விட, கிடைக்கும் ஸ்கூட்டர் சவாரியை அனாமத்தாக விடுவானேன் என்ற பெருந்தன்மை அவளுக்கு.

அவர்கள் சென்ற சில நிமிடங்களில் ஒரு தட்டில் சூடான இரண்டு தோசைகளும் காரசட்டினியும், கொஞ்சமே கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டுக் குழைத்த மிளகாய்ப் பொடியும் போட்டு எடுத்து வந்த வைரவன் “என்ன, வள்ளிக்குட்டி, இன்னைக்கு ஒரே வாசனையா இருக்க. இந்தா, ஆ காட்டு” என்று கட்டிலில் படுத்திருந்தவரின் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.

தோசையை சிறிது சிறிதாகப் பிட்டு சட்னி, பொடி என மாற்றி மாற்றித் தொட்டு ஊட்டினான். வள்ளியம்மையின் வாயைத் துடைத்துவிட்டான்.

“சமத்தா மருந்து சாப்பிடணும், சரியா, யெஸ், அப்டிதான், குட் கேர்ல்”

“சில்வர், நியூஸ் படிக்கிறேன், கேக்குறியா? இடுக்கியில் பிளாக்மெயில் செய்த காதலனைக் கணவருடன் சேர்ந்து கொலை செய்த புதுமணப்பெண், சிறப்பு”

“திருப்பதியில் பள்ளிப் பருவம் தொடங்கி தனது பழைய காதலர் (லி)களைத் திருமணத்திற்கு அழைத்த குண்டூர் தம்பதி. குட் ஃபேமிலி, செப்பதானிகி ஏமிலேது”

எழுந்து “வள்ளிக் கண்ணு, ஜோஜோ பண்ணலாமா?” என்று, தலையணையை சரியாக வைத்து, வள்ளியைம்மையைத் தூக்கிச் சரியாகப் படுக்க வைத்தான்.

“கொஞ்ச நேரம் டீ வி போடவா, டோரா புஜ்ஜி பாக்கலாமா?


“போட்டேனா தெரியுமா, பேரைச் சொல்றதும், குட்டிங்கறதும் கண்ணுங்கறதும். பன ஓலைல சொடசொடன்னு மழை பெய்யற மாதிரி என்ன வாய்டா உனக்கு”

“ஆத்தாளை, எங்கள் அபிராம வள்ளி(!)யை, மாதுளம்பூ நிறத்தாளை…”

“போதும்டா, படுத்துக்கிட்டே சிரிக்க முடியலை”

“வலிக்குதா, ஸாரிம்மா சும்மா வெளாட்டுக்கு…”

“ஸாரி பூரின்னு… நீ வேற ஏன்டா”

“என்ன வள்ளி, தம்பி என்ன சொல்லுது?” என்றபடி உள்ளே வந்தார் ஐந்தாறு வீடுகள் தள்ளி இருக்கும் ரத்தினம்மா.

“வாங்க பெரியம்மா, பேசிக்கிட்டு இருங்க” என்ற வைரவன் எழுந்து உள்ளே சென்றான்.

*******************


வாழைக்காய் பொரியல், சுரைக்காய் துவையல் செய்து, சோறு வடித்து, ரசத்திற்குத் தாளிக்கையில் பரபரப்பாக உள்ளே நுழைந்தார் தணிகைநாதன்.

“வைரவா… வைரவா, தாத்தாவும் சித்தப்பாவும் உன்னை உடனே கடைக்கு வரச்சொன்னாங்க”

தந்தை போட்ட சத்தத்தில் சமையலறையிலிருந்து கைகளைத் துடைத்தபடி வேகமாக வெளிப்பட்டவன் “என்னவாம்?”

“பன்னெண்டரை மணிக்கு பாண்டிச்சேரியில இருந்து யாரோ வராங்களாம். பெரிய பார்ட்டியாம்”

“அதைச் சொல்ல இந்த வேகாத வெயில்ல உங்களை அனுப்பணுமா, ஒரு ஃபோன் செஞ்சா வந்துட்டுப் போறேன். நீங்களாவது ஃபோன் பண்ணி இருக்கலாம்ல?”

“ஆமால்ல, எனக்கு இது தோணவே இல்ல பாரேன்”

உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டவனிடம் “ஒரு வாய் சாப்பிட்டே கிளம்பு” என்றார் வள்ளியம்மை.

சிறிது ரசம் சாதமும் பொரியலும் சாப்பிட்டவன் “அப்பா குட்டி வர வரைக்கும் வீட்லயே இருங்க. ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குங்க. நான் வரேன்”

‘அழகுநாச்சி ஆபரண மாளிகை’ யின் வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு நிதானமாக உள்ளே நுழைந்தான்.

தேக்கு மரத்தில் இழைக்கப்பட்ட பிரம்மாண்டமான பில்லிங் கவுண்டரின் பின்னே பெரிய்ய்ய்ய தஞ்சாவூர் ஓவியத்தில் அசல் தங்கமும் நவரத்தினங்களும் மின்ன கற்பக விநாயகர் அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

கல்லாவில் அமர்ந்திருந்த முருகப்பன் சித்தப்பாவின் மூத்த மகன் சிவானந்தன் இவனைப் பார்த்ததுமே “கெஸ்ட் ரூம்ல இருக்காங்க” என்றான்.

வைரவன் லிஃப்டைத் தவிர்த்துப் படிகளில் உயர்ந்தான். ஒவ்வொரு தளத்திலும், ஒவ்வொரு கவுன்ட்டரிலும் பணத்தையும் பவுனையும் கொடுத்துச் சேதாரமடையக் காத்திருந்தனர் மக்கள்.

மூன்றாவது தளத்தில் இருந்த அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

உயர்தரமான இருக்கைகளும், வசதியான உயரத்தில் மேஜையும், வைர வியாபர உத்திகளுக்கான சாகச விளக்குகளுடன் இருந்த அறையில் மேஜைக்குப் பின்னே இருந்த சற்று அகலமும் உயரமுமான நாற்காலியில் அமர்ந்திருந்தார்
சக்கரைச் செட்டியார்.


எண்பத்தி ஆறு வயதுக்குத் திடகாத்திரமாய் இருந்தார். வியாபாரமும் மனிதர்களை எடைபோடுவதும் ரத்தத்தில் ஊறி இருந்ததில் பார்வையில் அத்தனை கூர்மை. அவருக்குப் பின்னே, சற்றுத் தள்ளி தண்ணீர்மலை நின்றிருந்தான்.

“ஐயா” (தாத்தா) என்ற வைரவனை உட்காரச் சொல்லிக் கையமர்த்தினார். ஓரத்தில் இருந்த ஒரு உயரமான ஸ்டூலை எடுத்து வந்து அவருக்குக் கையெட்டும் தொலைவில் அமர்ந்துகொண்டான்.

எதிரில் ஒரு நடுத்தர வயது தம்பதி, ஒரு வயதான தம்பதி மற்றும் ஒரு யுவனும் யுவதியும் அமர்ந்திருக்க, எல்லோர் முன்பும் உறிஞ்சு குழலுடன் குளிர்பான பாட்டில்கள்.

கையில் அல்ட்ரா வயலட் விளக்குடன் (Ultraviolet light) உள் அறையில் இருந்து வந்த சித்தப்பா முருகானந்தம் “வா” என்பதாகத் தலையசைத்தார்.

சிறிதான மேக்னிஃபையிங் லென்ஸைக் கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், வைரவனிடம் லென்ஸை நீட்டி, வைரங்கள் இருந்த கருநீல நிற வெல்வெட் ட்ரேயை அவன் பக்கம் நகர்த்தி “நீயும் பாருடா” என்றார் மொட்டையாக.

“ஐயா, ஒரு நிமிஷம்” என்றவன் சற்றுத் தள்ளிச் சென்று மொபைலில் தந்தையை அழைத்தான்.

“அப்பா, நான் வர லேட் ஆகும். இன்னைக்கு நாலரை மணிக்கு அம்மாக்கு எக்ஸர்ஸைஸ் பண்ண ஃபிஸியோதெரபிஸ்ட் வருவாங்க, பாத்துக்கோங்க. அதுக்குள்ள செல்லியும் வந்துடுவா”

அவன் மிக மெலிதாகப் பேசினாலும் எல்லோருமே அதைக் கேட்டிருந்தனர்.

அவர் நீட்டிய லென்ஸை மறுத்த வைரவன், முதலில் எட்டு, பத்து வைரங்களைக் கையில் எடுத்துப் பார்த்தான். ஏதோ சூடாக வறுத்த நிலக்கடலையின் தோலியை ஊதி உதறிக் கை மாற்றுவதைப் போல் வைரங்களை இரண்டு மூன்று முறை கை மாற்றிப் பார்த்தான்.

பின் வெல்வெட் ட்ரேயின் ஒருபுறத்தில் வரிசையாக வைரங்களை எண்ணி அடுக்கியவன், தன் ஸ்லிங் பேகைத் திறந்து, 40 X jewllers magnifier loupe லென்ஸ், பேனா மற்றும் நோட்பேடை வெளியில் எடுத்தான்.

“மொத்தம் எவ்வளவு?”

“எண்பத்தி அஞ்சு”

எண்ணிக்கையைக் கேட்டு உறுதி செய்துகொண்டான். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு வைரவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒவ்வொரு வைரமாகக் கையில் எடுத்து வெறும் கண்களாலும், லூப் மூலமாகவும் ஆழ்ந்து பார்த்தபடி கையில் இருந்த நோட்பேடில் வைரங்களின் தோராயமான எடையையும் மதிப்பையும் குறித்தான்.

பிறகு, அவற்றை ட்ரேயின் மறுபுறம் பரேட் செய்யும் ராணுவ வீரர்களின் ஒழுங்குடன் அடுக்கினான்.

மூன்று வைரங்களைத் தனியே எடுத்து வைத்திருந்தான்.

பெரியவரிடம் “ஐயா, எண்பத்தி அஞ்சுல எண்பத்தி ரெண்டு ஃபர்ஸ்ட் குவாலிடி வைரம். ப்ளூஜாகர் இல்ல, ஆனா ஃப்ளோரஸன்ட் ப்ளு ரகம். ஒவ்வொன்னும் இருபத்தஞ்சு சென்ட் இருக்கும்”

எதிரில் இருந்த பாட்டி “அப்ப இந்த மூணும்?”

“அதுவும் வைரம்தான். இதுல இருக்கற ஜொலிப்பும் பூரிப்பும் இது மூணுலயும் இல்ல. ஆனாலும் இது மூணோட சைஸும் எடையும் மதிப்பும் அதிகம்” என்றபடி, தன் சாமான்களைப் பையில் வைத்தான்.

“ஐயா, வைரத்தை எண்ணிக்க சொல்லுங்க, நான் கிளம்பறேன்”

முருகப்பன் “வைரவா, அப்ப வைரத்தை இந்த UV மெஷின்ல பாக்க வேணாங்கறியா?”

“அது அவங்க விருப்பம். நகை செய்யப் போறாங்கன்னா அவங்க பொருள் அவங்க கிட்டயேதானே இருக்கப்போவுது, அப்போ
எதுக்கு வீணா பார்த்துக்கிட்டு?
ஆனா அந்த மூணை மட்டும் நீங்களும் பார்த்துட்டு அவங்கள்ட்ட காட்டுங்க. ரொம்ப அபூர்வம்”

தன்னை வெறுமே நிற்க வைத்துவிட்டு, நடுவில் ஒரு முறை காஃபி சொல்ல மட்டும் அனுப்பிய தந்தை மீதும், தான் ஒருவன் அங்கு நிற்பதையே உணராத தாத்தாவின் மீதும், வழக்கம்போல் காரணமே இல்லாது வைரவன் மீதும் பயங்கரக் கோபத்தில் இருந்தான் தண்ணீர்மலை.

‘இவுரு பெரிய லாடு லபக்தாஸு, வைரத்துலயே புரள்றவன் மாதிரி பேச்சைப் பாரு’

வைரவனிடம் “உக்காரு” என்ற சக்கரை ஐயா, தண்ணீர்மலையிடம் “எல்லாருக்கும் காஃபி சொல்லு” என, அவன் முகம்போன போக்கில், வந்த சிரிப்பை அடக்கினான் வைரவன்.

பழமையும் புதுமையும் கலந்த டிஸைனில் பூச்சரம் செய்ய வேண்டும் என்றனர்.

“பேரம்பிண்டி பிள்ளை உண்டாகி இருக்கா. அதுக்குதான்…”
(பேரனின் மனைவி).

முருகப்பன் ஒவ்வொரு கேட்டலாகாகக் காட்ட, அந்த இளைஞி ஒவ்வொன்றாய் மறுக்க, ஆமோதிப்பாகத் தலையை மட்டும் ஆட்டினான் கணவன்.

அந்தப் பெண்ணின் மாமியார் “சீக்கிரமா எதையாவது ஒன்னை முடிவு செய்ங்க” என்றார்.

அந்தப் பெண் அரைமனதோடு
எதையோ காட்ட, தாத்தா வைரவனைப் பார்த்தார்.

“ஒரு நிமிஷம்” என்றவன் முருகப்பனிடம் ஒரு பேப்பர் வாங்கி “இதையே கொஞ்சம் இப்படி செய்யலாம். வேற லுக் கொடுக்கும்” என மளமளவென வித்தியாசத்தை வரைந்து காட்ட, அவர்களுக்குப் பிடித்துப் போனது.

“இதுல ஒரு பூச்சரமும், ஒரு அட்டிகை பதக்கமும் வரும். அது வேணாம்னா ஒரு பென்டன்ட், தோடு செட்டா செஞ்சுக்கலாம்”

வைரவன் கிளம்பி, தன் பின்னே கதவைச் சாத்துகையில், அந்தப் பாட்டியின் “குறிப்பா இருக்கானே, யாரு அந்தப் பையன்?”என்ற கேள்வியும்,

சித்தப்பா முருகப்பனின் ‘நம்ம சொந்தம்தானும்’ காதில் விழுந்தது.


******************

‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்’

Èngayum,
Anywhere
Èppøthum,
Anytime
Šangeetham,
We Gøt Music
Šanthøsham,
Lets Get Høt

Rathirigal,
All The Nights
Vanthuvittal,
When They Cøme
Šaathirangal,
We Break Løøse
Oødividum,
Jump And Shout It


மார்ஷல் வூபர்ன் (Marshal Woburn) போர்ட்டபிள் ஸ்பீக்கர் உச்சஸ்தாயியில் அலற, அதை மீறி ராரார ரீ… ரீஈஈ… என்று சத்தமாகப் பாடியபடி, தம்பியுடன் லெகோ பில்டிங் ப்ளாக்ஸால் (LEGO) பெரிய ட்ரக்கைபொருத்திக் கொண்டிருந்தாள் மேதாலக்ஷ்மி.

திடீரென பாட்டு நின்றுவிட, கவலையே படாமல்

‘தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப் பறந்து கொண்டாடுவோம்’ என்று ஒரிஜினல் பாட்டைத் தொடர்ந்தவளை முறைத்தாள் நளினி. (கூகுள் மிஸ் கிட்ட கத்துக்கிட்டோம்ல!)

தன் வேலையில் கவனமாகத் திரும்பியே பார்க்காமல் “மா, வொய் ஆங்ரி?”

“நீ லண்டன்ல இருந்து வந்து ரெண்டு வாரமாச்சு. சொந்த அக்கா கல்யாணத்துக்குக் கூட வரலை, சரி, கோர்ஸே ஒரு வருஷம்தான்னு விட்டாச்சு. அவங்க வீட்டுக்குப் போகக் கூப்பிட்டாலும், இன்னைக்கு, நாளைக்குன்னு நாளைக் கடத்தற. இப்ப ராகவிக்குக்
கல்யாணமாகி எட்டு மாசமாகப் போகுது. அவளுக்கே இப்ப மூணு மாசம்…”

“...ம்மா, எனக்கு அக்காவைப் பார்க்கப் போறதுல எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா, அப்பா சொல்லுற மாதிரி அவங்களோட கடைல போய் எனக்கு வேலை கத்துக்க வேணாம்மா. நம்ம கோயமுத்தூர்ல இல்லாத நகைக்கடையா, இங்கேயே நானே அப்ளை பண்ணி…”

“அப்படி முன்னப் பின்ன தெரியாத இடத்துக்குப் போறதுக்கு நீ வேலைக்கே போக வேணாம்” என்றபடி மாடியில் இருந்து இறங்கி வந்தார் ராமநாதன்.

“வாட் ஈஸ் திஸ் டாடி, தைரியமா என்னை லண்டனுக்கு அனுப்பின நீங்களே…”

நளினி “சொல்றதைக் கேட்டுப் பழகு மேதா, இதென்ன கூடக் கூடப் பேசிக்கிட்டு”

தன்னை விட்டுப் பெற்றோரிடம் கவனம் செலுத்திய மேதாவின் கன்னத்தைப் பிடித்துத் தன்புறம் திருப்பி “பாலாட்ட பேசு” என்றான் தம்பி பாலகுமார்.

“டூ மினிட்ஸ் டா” என்று தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டவள், “ஏன் டாடி, ஒரு வருஷம் உங்களையெல்லாம் விட்டுட்டு இருந்ததே போதும். பாலா என்னை அவ்ளோ மிஸ் பண்ணி இருக்கான். நான் குளிக்க போனாக்கூட கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்”

“மேதா” என்றான் பாலா.

“அதெல்லாம் பாத்துக்கலாம் டா. நீ பாட்டி வீட்லதானே இருக்க போற. வெள்ளிக்கிழமை சாயங்காலம் நாங்க வந்துடறோம். வேணும்னா அம்மாவும் பாலாவும் அங்கேயும் இங்கேயுமா இருப்பாங்க. பாட்டியும் தனியாதானே இருக்காங்க”

“...”

“ராகவி வீட்டுக்காரரோட தாத்தா நம்ம கிட்டயே வந்து தொழில் பழகட்டுமேன்னு சொன்னார்டா. பெரியவர் சொன்னதை மறுக்க முடியலை. சம்பந்தி பாரு, மரியாதையா இருக்காது”

“எல்லாம் போவா. எப்படியும் கொஞ்ச நாள்தானே” என்றாள் அம்மா நளினி.

மேதா “ஏன், ஏன் கொஞ்ச நாள்தான்?” எனத் தாயிடம் பாய்ந்தாள்.

“ஆமா, உனக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா, இப்பவே இருபத்திரெண்டு முடிஞ்சாச்சு.”

“ம்மாஆ”

“நல்லா மாடு மாதிரியே கத்தறா பாருங்க”

பாலா “மேதா மாடு” என்று சிரித்தான்.

வியப்பில் கண்களை விரித்த மேதா, பாலாவைத் தோளோடு அணைத்துக் கொண்டவள், தம்பியிடம் “அக்காவைப் பார்க்கப் போலாமா?” எனவும், பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

மறுநாள் அதிகாலையே ராமநாதன் குடும்பத்தினர் கோவையில் இருந்து காரைக்குடியை நோக்கிப் பிரயாணித்தனர்.

காரின் பின்சீட்டில் மேதாவின் அருகே அமர்ந்து அவளிடம் ஓயாது கேள்வி கேட்டபடியே வந்தான் பாலா.

கோவையின் பிரபலமான ஆடிட்டர்களில் ஒருவர் ராமநாதன். அவரது அக்காவின் மகள்தான் நளினி. நளினியின் தந்தை ஒரு கண் மருத்துவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த மச்சினன் ராமநாதன் மீது நிறைய பிரியம் வைத்திருந்தார்.

ஒரே பெண் நளினி, பி.காம் படிக்கையிலேயே மாமனுக்கும் மருகளுக்கும் விருப்பம் இருப்பதைப் புரிந்துகொண்டு, படிப்பு முடிந்த கையோடு திருமணம் செய்து வைத்தனர்.

ராமநாதன் மனைவியை “நீயும் சிஏ படி” என்று சேர்த்து விட்டதோடு சரி.

முதல் வருட திருமண நாளன்று நளினிக்கு நாற்பது நாள். இரண்டே வருட வித்தியாசத்தில் மேதாலக்ஷ்மி. நளினி மேதாவைப் பிரசவித்த மூன்றாவது வாரமே ராமநாதனின் அம்மா, நளினியின் தாய்வழிப்பாட்டி இறந்துவிட, நளினி இங்கேயே வந்துவிட்டாள்.

தாயை இழந்து தனியே இருந்த ராமநாதனுக்கு மனைவியைப் பிரிய விருப்பமில்லை.

நளினியின் பெற்றோர் ராகவியை, தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லித் தூக்கிச் சென்றுவிட்டனர்.

மாமாவின் தனிமைக்கு மருந்தானவள், இளமைக்கு விருந்தாக, மேதாவிற்கு ஐந்து மாதம் ஆனபோது நளினிக்கு நாள் தள்ளிப் போனது.

வெளியில் சொல்ல முடியாத அவஸ்தை, பால்குடிக்கும் நாலுமாதக் குழந்தை, உடல் சோர்வு என எல்லாம் சேர, மருத்துவரைப் போய்ப் பார்த்தனர்.

கருவைக் கலைக்க எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாது, கர்ப்பம் தொடர்ந்தது.

விளைவு?
இதோ, இருபத்தியோரு வயதில் தாடி மீசையுடன், முகத்தில் இருக்கும் வெகுளித்தனத்தையும் சற்றே மேலே சொருகியது போன்ற கண்கள் நிற்காமல் மாதாடுவதையும் தவிர, முதல் பார்வைக்கு வேறுபாடு எதுவும் தெரியாத . இதயத்தில் பிறவிக் குறைபாடுடன், சற்றுக் குறைவான மூளை வளர்ச்சியுடன் பிறந்தான் பாலா.


நளினியின் தந்தையால் குழந்தை, அதிலும் இரண்டு பெண்களுக்குப் பின் பிறந்த ஆண் வாரிசை, தங்கள் தவறால் தப்பிப் பிறக்கச் செய்த மகளையும் மருமகனையும் ஒரு தந்தையாக, ஒரு மருத்துவராக மன்னிக்க முடியாத நளினியின் தந்தை காலமாகி மூன்று வருடங்களாகிறது.

தன்னைப் பார்க்கும்போதெல்லாம் பெற்றவர்களுக்கு அடிவயிற்றைக் கவ்வும் பயத்தையும் தாளாத குற்றவுணர்வையும் கொடுப்பவனுக்குத் தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.

பாலாவிடம் அழுகையாய், மிரட்சியாய், ஆக்ரோஷமாய், சிலநேரம் வன்மையாய் வெளிப்படும் அத்தனை உணர்வுகளும் அவனது அன்பின் வெளிப்பாடே.

பெற்றோரை, சகோதரிகளை, ஆச்சியை (நளினியின் அம்மா), என அவனுக்கு நெருக்கமானவர்களில் யாரையேனும் சேர்ந்தாற்போல் அரைமணி நேரம் பார்க்காவிடில் தன் மனதில் எழும் பயத்தைச் சொல்லத் தெரியாது முகம் கசங்கித் தவித்துப் போவான்.
அதிலும் அம்மா வீட்டில் இருக்கிறாளா என அடிக்கடி பார்த்துக்கொள்வான்.

ராகவி, மேதா இருவருக்குமே தம்பியின் மீது அன்பும் அக்கறையும் உண்டு. ஆனாலும், தன் குழந்தைப் பருவத்தை எண்ணிப் பெற்றோர் செய்த செயலால் பாலா இப்படி ஆனதில் தம்பியிடமும், அவனுக்காக மறுகும் பெற்றோரிடமும் மேதாவுக்குத் தனித்த பிரியம் உண்டு.


மகனின் பொருட்டு, அவனுடன் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிக்குத் தானும் கற்பிக்கச் சென்றதும், அவனுக்கான உடல், மன, மூளைக்கான பயிற்சிகளைத் தானே கற்றுக்கொண்டு செய்விப்பதும், அந்த வருத்தத்தை, ஆயாசத்தை, ஆதங்கத்தை ஒருமுறை கூடத் தங்கள் மீது காட்டாத தாயின் பேச்சை பெரும்பாலும் ராமநாதன், ராகவி, மேதா மூவருமே தட்டுவதில்லை.

அதேபோல் ராமநாதனும் நளினியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியதும் இல்லை.

என்ன, கணவனும் ராகவியும் நளினிக்கு ஆதரவாகப் பேசி உதவுவார்கள் எனில், அவசியமின்றி பாலாவைத் தனியே விட்டு வீட்டு வாசலுக்குக் கூடச் செல்லாத அம்மா நளினியை இயல்பாக்கவென்றே வம்புச் சண்டை போடுவாள் மேதா.

கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸை பாடமாக எடுத்துப் படித்தவளுக்கு ஜுவல்லரி டிஸைனிங்கில் ஆர்வம் ஏற்பட, விளையாட்டாய் விண்ணப்பிக்க, GIA (Gemological Institute of America) வின் லண்டன் கிளையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பதினைந்து மாத டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு இப்போதுதான் இந்தியா திரும்பி இருக்கிறாள்.

*****************

“யாரிந்த துரைசானியம்மா?” என்று பேத்தியை வரவேற்றார் பாட்டி.

பாட்டியின் சமையலை ஒரு கை பார்த்தவள் “ஆயா, நீ ஏன் உம்பொண்ணுக்கு உன்னை மாதிரி சமைக்கக் கத்துக் கொடுக்கலை, தம்பிங்கற அக்கறையே உனக்குக் கொஞ்சங்கூட இல்லை போ”

சிரித்த ராமநாதன் “நல்லாக் கேளுடா”

நளினி “என்ன நல்லாக் கேளுடா? ஊர்ல இருந்து வந்ததுல இருந்து ஒத்த விரலைக் கூட அசைக்காம, மூணு வேளையும் டைம் டேபிள் போட்டு மெனு குடுக்கறா. இதுல உங்க சப்போர்ட் வேறயா மாமா”

ராமநாதன் “ஏய் நல்லி, சும்மாடீ”

தந்தையின் குரலில் “உயிர் உங்களது தேவி” என்ற மேதா, துரத்தும் அம்மாவிடம் இருந்து தப்பி பின்கட்டுக்கு ஓடினாள்.

வழியெங்கும் பெற்றோரிடம் ஏதோ ஒரு சங்கடமும், வருத்தமும் இருப்பதை உணர்ந்த மேதாவிற்கு அதற்கான காரணம்தான் புலப்படவில்லை.

ராகவி இவர்கள் காரில் வரும்போதே அம்மா, அப்பா இருவரையும் நாலைந்து முறை அழைத்துவிட்டாள்.

நளினி “ம், புரியுது. நீ கவலைப்படாத, சரி” என்றாள்.

ராமநாதன் “நான் பாத்துக்கறேன் மா”

“அக்கா என்ன டாடி சொல்றா?”

“நத்திங் டா, பத்திரமா வரச்சொல்றா”

இப்போதும் சிரித்துப் பேசினாலும், இருவரிடமும் ஏதோ ஒரு வருத்தம் இழையோடுவது புரிந்தது.

மாலை நாலு மணிபோல் ராகவியின் புகுந்த வீட்டுக்கு
வெற்றிலை பாக்கு, பழங்கள், பலகார சம்புடங்கள் என சம்பிரதாயமாகக் கிளம்பினர்.

“மேதா, நேரமாச்சுடீ”

“டூ மினிட்ஸ் மா”

பிங்க்கும் க்ரேவும் கலந்த ஜெய்ப்பூர் காட்டன் சுடிதாரில் தயாராகி வந்தவள், பாலா இன்னும் தூங்குவதைப் பார்த்து எழுப்பப் போக “அவன் தூங்கட்டும் விடு, நாம போய்ட்டு சீக்கிரமா வந்துடலாம்” என்றார் ராமநாதன்.

“அப்பா, பாலா அக்காவைப் பார்க்க…”

“அக்கா எங்க போறா, நாளைக்குப் பாக்கலாம். அஞ்சு மணிக்குள்ள வரோம்ன்னு சொல்லி இருக்கேன்”

“ஓகேப்பா. அம்மா, அக்கா, மாமாக்கு நான் வாங்கிட்டு வந்ததை எடுத்து வெச்சியா”

******************

நளினி பூ வாங்குவதற்காக வழியில் காரை நிறுத்தச் சொல்ல, “நான் வங்கிட்டு வரேம்மா” என்று இறங்கிச் சென்றாள் மேதாலக்ஷ்மி.

மல்லிகைப் பூவை தனக்கும் அம்மாவுக்கும் கத்தரிக்கச் செய்தவள், அக்கா வீட்டிற்கு இலையில் கட்டி வாங்கிக்கொண்டாள்.

“ரெண்டு சம்பங்கிப் பூ கொடுங்க” என்றவள், மூன்று நான்கு கடைகள் தள்ளி இருந்த பூங்கொத்துகள் விற்கும் கடைக்குச் சென்று வெள்ளை மற்றும் லைட் பிங்கில் ஒரு பெரிய கொத்தை (Bouquet) வாங்கிக்கொண்டு காரில் ஏறினாள்.

நளினி “இது எதுக்கு, வேஸ்ட்டா?”

“மாமாவை இப்பதானேம்மா ஃபர்ஸ்ட் டைம் நேர்ல பாக்கப் போறேன், அதான்”

கார் போய் நின்ற இடம் மேதாவை பிரமிப்புக்கு உள்ளாக்கியது. காரைக்குடியும், அதன் வீடுகளும்(!) அவளுக்குப் புதிதல்ல. நளினியின் பிறந்த வீடுமே அது போன்றதுதான். ஆனால், அமைப்பில்தான் அதுவேயன்றி அளவில் இல்லை.

தொடர்ந்து மக்கள் வசிப்பதிலும் பாரம்பரியமான வீட்டின் மெருகு குன்றாது, பராமரிப்பதிலும் கம்பீரம் காட்டியது. ஒவ்வொரு கதவும் தூணும் அலங்காரப் பொருட்களும் அவர்களது கலையை, ரசனையை, பரம்பரையாக வந்த செல்வச் செழுமையைப் பறைசாற்றியது.
அலட்டல் இல்லை. ஆனால், பெருமிதம் இருந்தது. அகங்காரம் இல்லை, அதிகாரம் இருந்தது.


‘நம்ம ராக்ஸ் ரொம்ப சிம்பிளாச்சே, எப்டி சமாளிக்கறா?”

நன்றாகவே வரவேற்றனர். உபசரித்தனர். சொந்த அக்காவின் கல்யாணத்துக்கே மேதா வராமல் இருந்ததைப் பற்றி அங்கலாய்த்தனர்.

ராகாவின் மாமியார் “இருந்தாலும் பொம்பளைப் புள்ளையைத் தைரியமாதான் வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கீங்க” எனவும் மேதாவின் உச்சி மண்டையில் சுர்ர்ரென்றது.

பதில் சொல்லும் உந்துதலை அடக்கிப் பெற்றோரைப் பார்க்க, அவர்கள் இருவரும் என்னவோ வாழ்க்கையில் முதல்முறையாக பஜ்ஜியை சாப்பிடும் பாவனையைக் காட்டினர். ராகவியைத் திரும்பிப் பார்க்க, அவள் அருகில் இருந்த தேக்கினாலான தூணின் வழவழப்பை விரல்களால் வருடிப் பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.

பின் எல்லோரும் மேதாவின் படிப்பு குறித்தும், அவர்களது கடையில் வேலை பழக எப்போது வருகிறாள் என்றும் கேட்டனர். மையமாகப் புன்னகைத்து வைத்தாள்.

மணி ஏழாகி விட ‘இப்டியே போனா, அக்காவோட எப்படி தனியா பேசறது?’

எழுந்து நின்ற மேதா,
“வாஷ்ரூம் எங்க?” என, சிவானந்தன், மனைவியிடம் “ரூமுக்குக் கூட்டிட்டுப் போ” என்றான்.

“அம்மா, நீயும் வா” என்று நளினியையும் இழுத்துச் சென்றாள்.

மேதா, நாலெட்டு நடந்ததுமே, “நல்லவேளை, ஒருவழியா மாமாக்காவது பல்ப் எரிஞ்சுதே” என்றதில், நளினியும் ராகவியும் டென்ஷனாகித் திரும்பிப் பார்த்தனர். அவள் சொன்னதைக் கேட்டிருந்த சிவானந்தன் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

அறைக்குள் சென்றதுமே “ராக்ஸ்” என்று தமக்கையின் தோளைக் கட்டிக்கொண்டாள்.

“பர்மிஷன் கேட்டுதான் பாத்ரூம் கூடப் போகணுமாக்கா?”

“மேதாஆஆ”

“ஓக்கே, ஓக்கே. அதைவிடு, உன்னைப் பாத்தா ப்ரெக்னென்ட் மாதிரியே தெரியலையே, நிஜமாவே உள்ள பேபி இருக்கா?”

நளினி “வாய மூட்றி, யாராவது கேட்கப் போறாங்க” என்றாள் பதற்றத்துடன்.


அறையிலிருந்து வெளியேறும் முன் “ஸாரிம்மா, பாலா எப்படி இருக்கான்?” என்ற ராகவியின் கேள்வியில் இருந்த தவிப்பிலும் தடுமாற்றத்திலும் திகைத்தாள் மேதாலக்ஷ்மி.
 

Attachments

  • thangachilai (1).png
    thangachilai (1).png
    60.5 KB · Views: 0
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை..! 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

shanbagavalli

New member
Joined
Jun 19, 2024
Messages
1
வாழ்த்துகள் மா💐
வழக்கம் போலவே அருமை.
பாலாவை கூட்டி வர அனுமதிக்கலையா மாமியார் ?
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
வைரவன் அப்பாவுக்கும் நகை கடை மக்களுக்கும் சம்பந்தம் இருக்கு தானே சொந்தம் னா எந்த வகையில் சொந்தம்... அது யாரு தண்ணீர் மலை ...
ராகவி வீட்டுல பாலா வச்சி எதோ சொல்லி இருப்பாங்க போலவே
 
Top Bottom