• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 6

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 6

ம்பந்தி ராமநாதனிடம் சக்கரை ஐயாவே பேசியதோடு, முருகப்பனையும் பேச வைத்தார். ராகவியின் தயக்கத்தையும் மனத்தாங்கலையும் புரிந்த சிவானந்தன் “நானும் அங்கேயே இருந்தும் தடுக்காதது என்னோட தப்புதான்” என்று மாமனாரிடம் மன்னிப்பும் கேட்டான்.

மேதாவிடமும் பேச, அவள் அமைதியாகக் கேட்டுக் கொண்டாள். காதல் திருமணம், பெரிய இடம், இரண்டு தலைமுறை பெரியவர்கள், ஊரே அறிந்த குடும்பம் என்றிருக்க, அதிகம் மறுக்காது காதலை ஏற்றுக்கொண்ட புகுந்த வீட்டில் தன்னை பொருத்திக் கொள்ளவும், நிலை நிறுத்திக் கொள்ளவுமே ராகவி பணிந்து போவதாக, அம்மாவும் ஆயாவும் மாற்றி மாற்றி வேப்பிலை அடித்தனர்.

“கல்யாணமாகி ஆறேழு மாசத்துல, சடங்கும் விருந்தும் முடியவே மூணு வாரமாச்சு. மலேஷியா, பாலின்னு ஒன்னரை மாசம் ஹனிமூன்ல போச்சு. திரும்பி வந்த கொஞ்ச நாள்லயே புள்ள நின்னாச்சு. அவளும் சிறிசுதானே?”

“எந்த வீட்ல
கல்யாணமான கையோட என் ரெண்டாவது புள்ளை சரியில்லை முரடன், முன்கோபி, பொம்பளை விஷயத்துல கொஞ்சம் வீக்னு புதுசா வந்த மருமக கிட்ட சொல்லுவாங்க?”

“ஏன் தம்பி, நம்ம ராகவிய நாமே தப்பா நினைக்கலாமா, அவளுக்கு இது ரெண்டு பக்கமுமே அவமானம்னு உனக்குமா புரியலை? நம்ம கிட்ட பேச கூச்சப்பட்டு, தயங்கிதான் அவ பேசலை. நீயா தேடிக்கிட்டதுதானேன்னு கேட்டுடுவோமோன்ற பயம் இருக்கும்ல”

“அப்படிச் சொல்லும்மா, நாளைக்கு அனாமலி ஸ்கேன் வேற இருக்கு. பாவம், ராகாவே டென்ஷன்ல இருப்பா. இதுல அந்தக் கடங்கார கொழுந்தன் வேற”

“எல்லாம் சௌகரியமா ஆன பிறகு, குடும்பத்தோட வந்து மருதமலை முருகனுக்குத் தங்கத்தேர் இழுக்கறேன். முருகா, நீதான் துணையா இருக்கணும்”

“அப்பனே, மாத்ருபூதேஸ்வரா, எம் பேத்திய ரத்னாவதியா நினைச்சு, நீ போட்ட பூட்டைக் கழட்டி, சுகப்பிரசவமாகி, தாயும் புள்ளையும் ஆரோக்கியமா இருக்க வழி செய்யப்பா. மலைப்பழத்துல வாழைத்தார் கட்டறேன்” என்று திருச்சியில் இருக்கும் தாயுமானவரைத் துணைக்கழைத்தார் ஆயா.

ராமநாதன் “ஆயிரம் காரணம், சமாதானம் சொன்னாலும் நம்ம மாப்பிள்ளை கொஞ்சம் தைரியமா பேசி இருக்கலாம். தம்பியை அடக்க முடியலைன்னா, மேதா கிட்டயாவது நீ வேலைக்கு வராதம்மா, பெரியவங்க கிட்ட நான் பேசிக்கறேன்னு சொல்லி இருக்கலாம்”

“ஏன் தம்பி, அப்படிப் பாத்தா, இவ ஏன் நாலு நாள் எதுவும் பேசாம சும்மா இருந்தா? அவன் செய்யறது சரியில்லைன்னு எப்ப புரிஞ்சிச்சோ உடனே வெளில வந்திருக்கலாமே?”

“அக்கா”

“அம்மா”

“ரொம்ப நல்லா இருக்கு ஆயா, உன் நியாயம். அந்த ஊரு, அவங்க கடை ரெண்டுமே வேண்டாம்னு சொன்னேன். நானே வேலை தேடிப் போன இடத்துல இப்படி நடந்திருந்தா, கடைக்கு நடுவுல நிக்க வெச்சுக் கேள்வி கேட்டிருப்பேன். ஏன், என் ஆத்திரம் அடங்கலைன்னா ரெண்டு அறை கூட விட்டிருப்பேன்”

“மேதா, வாயை மூடு” - நளினி.

“சம்பந்தி வீடு, மாப்பிள்ளையோட கடை, மரியாதையா நடக்கணும், நீ நடந்துக்கற விதத்துலதான் ராகாவோட மதிப்பே இருக்கு. உன்னால அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு எல்லாருமா சேர்ந்து என் மண்டையக் கழுவிட்டு, இப்ப விக்டிம் ப்ளேமிங் செஞ்சா என்ன அர்த்தம்?”

“நிறுத்துடீ. அவங்க வீட்டுக்கு அரைப் பேன்ட்டுல போயிருக்க…”

“யாரு உம்பொண்ணு சொன்னாளா, ஓவரா பேசாதம்மா. இதே ட்ரெஸ்ஸைதான் அன்னைக்கும் போட்டிருந்தேன். இதுல எது சரி இல்லை, அல்லது எது மரியாதைக் குறைவா இருக்குன்னு நீயே சொல்லு”

நளினியின் ஸ்ருதி குறைந்து “தப்பா எதுவும் தெரியலை”

“தப்பு பாக்கறவங்க பார்வைல இருக்கு. ஐயாவும், ஆச்சியுமே சாதாரணமாதான் பேசறாங்க. உம்பொண்ணுதான் அவளும் டென்ஷனாகி, தேவையில்லாம நம்மையும் இம்சை பண்றா. லாஸ்ட் அண்ட் ஃபனல், ராகாக்குதான் அது மாமியார் வீடு. எனக்கில்லை, புரியுதா?”

“என்ன பேச்சு பேசுறா பாருங்க, நீங்க அவளை எதுவுமே சொல்ல மாட்டீங்களா மாமா?”

“ஷி ஈஸ் ரைட்” என்று மகளின் உச்சந்தலையில் முத்தம் வைத்து, மாடியேறிச் சென்றவரைப் பார்த்து நளினி முழிக்க, மேதாவுக்கு சிரிப்பு.

ஆயாவிடம் சென்றவள், அவர் கன்னங்களைப் பிடித்து “ஸாரி ஆயா, படபடன்னு பேசிட்டேன். மே பீ, நீ சொன்னதுபோல முதல் நாளே அதை செய்ய மாட்டேன்னோ, பெரியவங்க கிட்ட புகாரோ சொல்லி இருக்கலாம்”

ஆயா “விடுடா, நீ சொல்றதும் சரிதான். வீட்டுல உன்னை நல்லா தெரிஞ்ச நாங்களே இப்படிக் குறை சொன்னா, மத்தவங்க எப்படான்னு காத்துட்டுதானே இருப்பாங்க?”

மேதா ஆயாவைத் தொடவும், பாலா வந்து “ஆயா” என்று இடித்துக்கொண்டு அமர்ந்தான்.

முதல் இரண்டு நாட்கள்
கத்தி, ஆர்ப்பாட்டம் செய்தவன் , ஆயாவும் மேதாவும் அவனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பதாலோ என்னவோ இரண்டு, மூன்று நாட்களாக சற்று அமைதியாக இருக்கிறான்.

ஆனாலும், வீட்டு வேலை செய்யும் பெண்ணோ, வேறு யாருமோ வருகையில், நளினியோ, ராமநாதனோ (வீட்டில் இருந்தால்) அவனுக்குத் துணையாகவோ/ காவலாகவோ ஒரு அறையில் உடன் இருந்தனர்.

தன் பிடிவாதத்தை, உடலின் சக்தியை நெறிப்படுத்தும் வழி தெரியாது, ஆத்திரப்பட்டு பொருட்களை உடைப்பதும், அருகில் இருப்பவரின் கைகள் நெரிபடும் அளவுக்கு அழுத்திப் பிடிப்பதும் என சிறு வயதில் குழந்தையின் பிடிவாதமாக இருந்தது, பதின்ம வயது ஏற,ஏற வெகு சில சமயங்களில் மூர்க்கமும் முரட்டுத்தனமுமாக வெளிப்படும்.

மேதா சொல்வதை வரைந்து கொண்டோ, விளையாடிக் கொண்டோ, ஆயா சொல்லும் கந்த சஷ்டி கவசத்தையும், சிவபுராணத்தையும், விநாயகர் அகவலையும் கேட்டுக் கொண்டிருப்பான்.

இந்நிலையில் நளினியும் ராமநாதனும் ஒரு முக்கியமான க்ளையன்டின் வீட்டில் நடந்த இழப்பிற்குத் துக்கம் விசாரிக்க, பொள்ளாச்சி வரை சென்றனர்.

அந்த ஐந்தாறு மணி நேரத்தில் தன் மாற்றத்தை, பிரச்சினையை பாலாவே புரியவைத்ததில், மேதா தடுமாறிப்போனாள்.

***********************

“ராக்கம்மா, ஏதாவது பேசுடீ. அவன் செஞ்சதுக்கு என்னை ஏன் இம்சை பண்ற”

“...”

“எஃப் எம் ரேடியோ மாதிரி நானே பேசிட்டு இருக்கேன். நான் சும்மா இருந்தாக் கூட என் குரல் எனக்கே கேக்குது”

மூன்று நாட்களாகியும் சிவானந்தனின் சமாதான முயற்சிகள் யாவும் படுதோல்வியைத் தழுவியது.

மடித்த துணிகளை அலமாரிக்குள் அடுக்கிய ராகவியின் அருகே சென்று, அவளை நகர விடாது பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான். சிறிதும் அசையாது நின்றாள்.

“திரும்பு சொல்றேன், என்னைப் பாரு, பாருடீன்னா… நமக்குள்ள சண்டையான்னு அப்பத்தா கூப்பிட்டு கேக்கறாங்க” என்று மனைவியைத் தன்புறம் திருப்பினான்.

“...”

“இன்னைக்கு அனாமலி (Anomaly scan) ஸ்கேனுக்கு போகணும்னு, கடையை அப்பாட்ட விட்டு வந்திருக்கேன்… ஏய், ஏம்மா அழற, எதுக்கு இப்டி அழற. இங்க பாரு, எங்கிட்ட கோச்சுக்கிட்டு நீதான் பேசாம இருந்த…. என்னடா?”

ராகவி “அனாமலி ஸ்கேனை நினைச்சா பயமா இருக்கு சிவா. அதுல குழந்தைக்கு பிறவிக் குறைபாடு ஏதாவது இருந்தா பெரும்பாலும் தெரிஞ்சுடுமாம். எனக்கு … எனக்கு ரொம்பப் பயமா இருக்கு சிவா”

மனைவி சொன்ன தகவலில் சிவானந்தனுக்குமே பயம் வந்தது. இதை மருத்துவரே மேலோட்டமாக குறிப்பிட்டதால் அவன் அதை அதற்கு மேல் ஆராய விரும்பவில்லை.

“இந்த கூகுளை நோண்டாதன்னா கேக்குறியா, நம்ம கன்ட்ரோல்ல இல்லாத விஷயத்தைப் பத்திக் கவலைப்படக் கூடாது, புரியுதா?”

ராகவி படிப்பு ஒன்றுதான் மேன்மை தரும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவள். சிவானந்தன், வியாபாரத்தைக் கவனிக்கும் வயது வரும் வரை படிக்க அனுப்பப்பட்டவன்.

ராமநாதன் தன் தொழிலுக்கு வாரிசாக இரண்டு பெண்களில் ஒருவராவது சிஏ படிக்க வேண்டுமென ஆசைப்பட்டார். மேதாலக்ஷ்மி சின்ன வயதில் இருந்தே ஃபைன்ஆர்ட்ஸ் என்று உறுதியாக இருக்க, ப்ளஸ் டூவில் ஆயிரத்து சொச்சம் மதிப்பெண்களை வைத்துக்கொண்டு, தமிழ் இலக்கியம்தான் படிப்பேன் என்ற ராகவியை , வேறு வழியின்றி அவள் விருப்பப்படியே விட்டுவிட்டனர்.

ராகவி எம் ஏ தமிழ் இலக்கியம் இரண்டாவது வருடம் படிக்கையில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய சொற்பொழிவுப் போட்டியில் கலந்துகொள்ளத் தன் கல்லூரியின் சார்பாக வந்திருந்தாள்.

‘செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனும் கும்பர்ணனும் - ஒரு பார்வை’ என்ற தலைப்பில் உண்மையாகவே சொற்களைப் பொழிந்தாள்.

பரிசளிக்க வந்திருத்த கொடையாளரும் தலைமை விருந்தினருமான சக்கரை ஐயாவுடன் துணைக்கு வந்திருந்த சிவானந்தனை ராகவியின் பேச்சும், அதைவிட அவளது தோற்றமும் கவர்ந்தது. தயங்காது அறிமுகம் செய்துகொண்டு பாராட்டியவன், மறுநாளும் அவள் அங்கே ஒரு பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளப் போவதை அறிந்து கொண்டான்.

நான்கு மணி விழாவுக்கு ராகவி நுழையும் முன்பே சிவானந்தன் அங்கே ஆஜர். அவளுமே அவனை அடையாளம் கண்டு புன்னகைத்தாள். அன்றிரவே ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் ராகவி ராமனாதனைத் தேடி நட்பைக் கோரினான். மூன்று நாட்கள் கழித்து ஏற்றுக்கொண்டாள்.


ஒரே மாதம். ராகவியின் கடைசி செமஸ்டரின் முதல் தேர்வு நாளன்று காலையிலேயே ராகவியின் கல்லூரி வாசலில் நின்றான் சிவானந்தன். அவள் வெளியில் வரும்வரை காத்திருந்தான். ஒருவழியாய் தோழிகளை டபாய்த்துவிட்டு வந்து சேர்ந்தாள்.

“என்ன?”

“நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?”

“வாட்?”

“எல்லாம் சரியாதான் கேட்டுச்சு. சரின்னு சொல்றதுதான் உன்வேலை”

தேர்வுகள் நடந்த இருபது நாள் இடைவெளியில் சம்மதித்தாள். ஆயின், அவனது அந்தஸ்து அவளை மிரட்டியதெனில், இருவரும் ஒரே இனமென்பது அவனுக்குத் தைரியமளித்தது. கம்பன் கழகத்தில் காதல் கொண்டு, ஆன்லைனில் ஆசை வளர்த்தனர்.

சிவானந்தன் தாமதிக்காது தன் வீட்டில் பேசி விட்டான்.
அவனது பெற்றோருக்குதான் பெண்ணின் அந்தஸ்து குறித்த மனத்தாங்கலே தவிர, ஐயாவும் அப்பத்தாவும் டாக்டர், ஆடிட்டர்னு படிச்ச குடும்பம். ஓரளவு வசதியாதான் இருக்காங்க. சிவாவோட சந்தோஷத்தைப் பாரு முருகா” என்றுவிட்டனர்.

அம்மா தெய்வானைக்குதான், தன் இரண்டு அண்ணன்களின் மூன்று பெண்களையும் மகன் மறுத்துவிட்டதில் கொஞ்சம் வருத்தம். ஆனாலும் தேற்றிக்கொண்டாள்.

ராமநாதன் தெளிவாக இருந்தார்.
“அத்தனை பெரிய குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா நிறைய சமரசங்களுக்குத் தயாராக இருக்கணும், பரவாயில்லையா?”

“உன்னை வேலைக்கு போக அனுமதிக்க மாட்டாங்க. நீ ஆசையா படிச்ச தமிழை உன்னால அனுபவிச்சு உபயோகிக்க முடியாது, நல்லா யோசிச்சுக்கோ”

“எனிதிங் ஃபார் சிவா டாடி” என்றவளை ஆழ்ந்து பார்த்தவர் “இதையே சிவாவும் சொல்வாரா?”

ராகவி அவள் காதலைச் சொல்லி, இரண்டு வீட்டிலும் விவாதங்கள் நடக்கையில் மேதா லண்டனுக்குச் சென்றுவிட்டாள்.

பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணமாக வகை மாற்றம் செய்ய பெண் பார்க்க வந்தனர்.

இதற்கு முன் அறிமுகத்திற்காக ஒரே ஒருமுறை ராமநாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்த சிவானந்தனுக்கு, பாலகுமாரைப் பற்றி ராகவி சொல்லித் தெரியும்தான். ஆனால், அதை அவன் பெரிதாக எண்ணவில்லை.

ஆவணி மூன்றாம் வாரத்தில் திருமணம் என தேதி குறித்துவிட்டு, வெள்ளி வாளியில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கல்கண்டு நிறைத்து, முறைச்சிட்டு எழுதி, திருமணத்தை கெட்டி பண்ணிக் கொள்ளத் தயாராக வந்தவர்களின் முகங்கள், பாலாவைப் பார்த்ததும் மாறிவிட்டது.

நளினியும் ராமநாதனும் நடந்தது அனைத்தையும் பாலாவின் முதல் மருத்துவ அறிக்கை முதல் காட்டியே விளக்கியபோதும், தெய்வானைக்கு மனத்தாங்கல்தான்.

காதல், சீர், சடங்கு, சம்பிரதாயம் என்றவற்றைத் தாண்டி திருமணத்தின் அடிப்படையும் நோக்கமும், சந்ததிகள்தான் என்பதே இயற்கை, உண்மை.
‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பதன் அர்த்தமும் அதுவே.

என் இனம் என்று பிரிந்ததும், நல்ல குலம், பெரிய குடும்பம் எனத் தேடுவதும், ஆரோக்கியமான சந்ததிகளின் பொருட்டே.

பாலாவின் நிலை அவர்களுக்குத் தந்த முதல் பயமும் கவலையும் , அவர்கள் வீட்டு எதிர்கால வாரிசை எண்ணியே.

சிவாவின் பிடிவாதமும், ராகவியின் இடிந்துபோன தோற்றமும், திருமண நிகழ்வுகளில் இருந்து பாலாவை விலக்கி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு, திருமணத்தை உறுதி செய்ய வைத்தது.

அதன் பின், மறுவீடு, தலை தீபாவளி என கோவைக்கு வந்தார்கள்தான். ஆனால், ராகவி உண்டாகி இருப்பது தெரிந்ததும், பாலாவைப் பார்க்கவே தடைவிதித்தார் தெய்வானை. ராகவியுமே அவரது பயத்தைப் புறந்தள்ள முடியாத மனநிலைக்கு வந்துவிட்டாள்.

வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவளிடம் விலகி நின்றாலும் விதியை மாற்ற முடியாது போன்ற சமாதானங்களுக்கு அது சமயமல்லவே?

மேதா விஷயத்தில் தண்ணீர்மலை செய்த குளறுபடியோடு, தன் கணவனின் மீதான பெற்றோரின் அபிப்பிராயமும் பயமுறுத்தவே, மூன்று நாட்களாக அவர்களிடம் பேசவே ராகவிக்குத் தயக்கமாக இருந்தது.

‘அண்ணி’ என்று அழைத்துத் தன்னிடம் மரியாதையாகப் பேசுபவன், மேதாவிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளித்தது.

இதுபோல் சக்கரை ஐயா, அப்பத்தா, அவளது மாமனார் முருகப்பன் என பெரியவர்களிடம் தண்ணீர்மலை அவ்வப்போது திட்டு வாங்குவது வழக்கம்தான். அது எல்லாமே பெண்கள் சம்பந்தப்பட்டது என்று இப்போது கணவன் மூலம் அறிந்ததில் அருவருப்பாக இருந்தது.

‘என்னால் மனிதர்களைப் படிக்கவோ, எடைபோடவோ முடியவில்லையா?’ என்ற கழிவிரக்கமும், தனக்காக தன் புகுந்த வீட்டினரின் அழைப்பை ஏற்றுக் கடையில் சேர்ந்த தங்கைக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணிக் குற்றவுணர்வும் வாட்டியது.

‘சிவாவுக்குத் தெரிஞ்சும் தம்பியைக் கண்டிக்கலை, எங்கிட்ட சொல்லி இருந்தா, மேதாவை மக்கா நாளே கடைக்கு வர வேணாம்னு சொல்லி இருப்பேன்’ என கணவனிடம் இருந்த மனத்தாங்கலில் மௌனத்தைக் கையில் எடுத்துக்கொண்டாள்.

சிவானந்தனுடன் பேசாமல் இருந்தது, பெற்றோரிடம் பேசாதது, அனாமலி ஸ்கேனில் தவறாக எதுவும் இருந்துவிடுமோ என்ற பயம் எல்லாம் சேர, மிகுந்த அழுத்தத்தில் இருந்தவள், அவனது ‘என்னடா’ வில் உடைந்துவிட்டாள்.

“ஒன்னும் ஆகாது. நீ வேணா பாரேன், பேபி சூப்பரா வெளில வருவாங்க”

“ப்ராமிஸா?”

“ம்” - சிவானந்தன் மனைவியின் கையில் அடித்தான்.

“நானும் வரட்டுமா சிவா?” என்ற தெய்வானையைக் கஷ்டப்பட்டுக் கழற்றிவிட்டுக் கிளம்பினர்.

காரில் ஏறியவள், கேட் தாண்டும் முன் “கடவுள் புண்ணியத்துல எல்லாம் சரியா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டா, நான் பாலாவை பார்க்கலாம்தானே?”

சிவானந்தன் அமைதியாகக் காரைச் செலுத்தினான்.

********************

இடையில் ஒரு மாதமும், பொங்கல் பண்டிகையும் கடந்திருக்க, திருமண காலங்களின் தொடக்கம் என்பதால், கடையில் கூட்டம் நெரிந்தது.

திவ்யாவின் திருமணம் அந்த வெள்ளிக்கிழமையன்று இருக்க, முருகப்பன், தணிகைநாதனிடம் “கடைல இவ்வளவு கூட்டத்தை வெச்சுக்கிட்டு நீ எப்டி போவ?” என்றார்.

‘சாலைல இருக்கற எனக்கும் கடைல இருக்கற கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று திருப்பிக்கேட்டால், அது தணிகைநாதன் அல்லவே? தம்பி சொன்னதைக் கேட்டுக்கோண்டு மேலே எதுவும் பேசாது திரும்பியவர், ஞாயிறன்று மறுவீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டார்.

வள்ளியம்மையின் சொந்த சகோதரனின் மகளுக்குத் திருமணம். பெண் கொடுக்க மறுத்துவிட்டதால், யாரும் வரவில்லை என்று சொந்தக்களுக்கிடையே பேச்சு வரும்.

“வைரவா, நீயாவது போய்ட்டு வாடா” என்றார்.

வைரவனுக்கு மாமன் மகளின் மீது எந்த அபிப்பிராயமும் கிடையாது. ஆனால், இவன் ஏதோ உரிமையை இழந்ததுபோல் பரிதாபமான, அல்லது இயலாமையில் விட்டுவிட்டதைப்போல் ஏளனமான பார்வைகளைத் தவிர்க்க நினைத்தான்.

வேறு வழியின்றி, முருகப்பன் சித்தப்பாவிடம் தான் திருமணத்திற்குப் போவதாகச் சொன்னான்.

“அப்போ சாலைல?” என்றான் அருகில் நின்ற தண்ணீர்மலை.

என்னவெல்லாமோ கேட்கத் தோன்றியதை அடக்கிக் கொண்டவன் “அப்பா இருப்பாங்க”

“உங்கம்மாவை யாரு பாப்பா?” - தண்ணீர்மலை.

“உங்கம்மாவை அனுப்பேன்” என்றவன், “நாளன்னைக்கு வெள்ளிக்கிழமை நான் வரமாட்டேன் சித்தப்பா. அதோட, அடுத்த வாரம் மூணுநாள் வரமாட்டேன். முன்னாலயே சொன்னதுதான். திரும்பவும் நியாபகப் படுத்தறேன்” என்று வெளியேறினான். தந்தையும் மகனும் பல்லைக் கடித்தனர்.

********************

கோவையின் மையப்பகுதியில் பெருந்தனக்காரர்கள் வாழும் ஏரியாவில் இருந்த பாரம்பரியம் மிக்க, நவீனமாக்கப்பட்ட அந்தத் திருமண மண்டபம் இருந்த தெரு முழுவதும் பென்ஸுகளும் ஆடிக்களும் பிஎம் டமிள்யூக்களும், ஏன், ஓரிரண்டு போர்ஷேக்களும் கூட உறங்கும் ஓட்டுனர்களை மடிதாங்கி வரிசைகட்டி நின்றன.

மகிழ்வுந்துகளின் அணிவகுப்பால் உந்த இடமின்றித் திணறிய சாலையில், நெளிந்து வளைந்து வெகு சாமர்த்தியமாக மண்டப வாயிலுக்கு உள்ளேயே வந்து நின்ற ஆட்டோவில் இருந்து உதிர்ந்தவன் சற்றே ஆச்சரியமான, கீழ்நோக்கான, ஏளனமான, அட்ரஸ் மாறி வந்துட்டான் போல, இவன் யாரா இருக்கும்? போன்ற கேள்விகள் நிறைந்த பார்வைகளை அலட்சியம் செய்து மண்டபத்தினுள் ஊடுறுவினான்.

தோளில் ஒரு பேக் பேகும், ஒரிஜினல் டெனிம் நீலத்தில் ஜீன்ஸும், சற்றே சுருட்டிவிடப்பட்ட வெண்ணிற முழுக்கை சட்டையுமாக நின்றவனின் கண்கள் யாரையோ தேட,

“டேய் வைரவா, இப்பதான் என்னடா இன்னும் உன்னைக் காணும்னு நினைச்சேன், நம்ம பசங்கள்லாம் அங்க நிக்கறாங்க, வா” என்று தோளில் அடித்த வருண்ராஜ், நண்பனை இறுக அணைத்து வரவேற்றான்.

என்னதான் நண்பன் என்றாலும், கல்லூரி ஹாஸ்டலில் ஒன்றரை வருடம்போல் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அவனது அழைப்பின் பேரில்தான் வந்திருந்தாலும், அவனே எதிர்கொண்டு அழைத்ததிலும், அதில் இருந்த நட்பிலும் நிம்மதியானான். ஒவ்வாத இடத்தில் போய் சிக்கிக்கொள்வானேன்?

கோவையின் பிரபலமான கட்டுமானத் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த வருண்ராஜ், அதற்காகவே ஆர்க்கிடெக்சர் படித்தவன், அவனது தங்கைக்குத் திருமணம். வைரவனின் வருகைக்கு இன்னொரு காரணமும் உண்டு.

வைரவனுடன் பொறியியலில் ஒன்றாகப் படித்த மாணவர்களில் நாலைந்து பேர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தனர். இணைய தளத்தால் இணைந்தே இருந்தது நட்பு. வரவேற்பு மேடை தயாராக இருக்க, இன்னும் மணமக்கள் வரக் காணோம்.

காபி, சாட் ஐட்டம்ஸ் என்று உபசரித்து, சில நிமிடங்கள் நண்பர்களோடு அளவளாவிய வருண்ராஜ் “ஃபீல் ஃப்ரீ கைஸ், ரிஸப்ஷன் முடிஞ்சு நைட் பாக்கலாம்”

வைரவன் “ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு ராஜ்”

“ஷ்யூர் டா, என்ஜாய் பண்ணுங்க”

கூட்டத்தில் இடிபடாது, வேடிக்கை பார்க்க வசதியான இடமாகப் பார்த்து அரை வட்டமாக அமர்ந்து கொண்டனர். இருபத்தைந்து, இருபத்தாறு வயது இளைஞர்கள் திருமண வரவேற்பில் என்ன செய்வார்கள்?

யெஸ், மண்டபத்தில் இருந்த இளம்பெண்களுக்கெல்லாம் மதிப்பெண் போட்டனர். அதில் ஒருவனின் பெயர்
அரிஸ்டாட்டில்.

“இதெல்லாம் என்னடா, நான் வந்தபோது ஒரு பொண்ணு வந்தா. படா ஸ்டைலா சுஸூகி FRONXஐ பார்க் செஞ்சா. நேர பொண்ணோட ரூமுக்குள்ள போயிட்டா. இன்னும் ஆளைக்காணும். அவளை மாதிரி யாருமே இல்லைடா”

“அரிஸ்டாட்டில் சொன்னா அப்பீல் உண்டா?”

ஒருவழியாக மணமக்கள் மேடைக்கு வந்தனர். நண்பர்களின் பேச்சு அவரவரது வேலை, கம்பெனி, வருமானம், எதிர்காலம் என்று சுழன்றது.
.

வைரவன் உன்னிப்பாகக் கேட்டிருந்தான். அவனது விருப்பம் கட்டிடங்கள் அல்ல. அதன் இன்டீரியர். நல்ல உள் அலங்கார அமைப்புக்கு கட்டும்போதே அதற்கான வசதிகளை செய்து விட வேண்டும். பழைய கால கட்டிடங்களைப் பாதுகாக்க வேண்டும்..

எத்தனை ஆசை, என்னென்ன கனவுகள்?

பேசிக்கொண்டே இருந்த நண்பர்கள் திடீரென அமைதியாகி விட, அவர்கள் முகம் வியப்பைக் காட்ட, அரிஸ்டாட்டிலின் விழிகள் விரிய, “என்னங்கடா?” என்றான் வைரவன்.

“அரசரே, பின்னால திரும்புங்க” என்ற மேதாவின் குரலில் பட்டென எழுந்து நின்றவனுக்கு இரவு நண்பர்களிடம் மொத்து வாங்கப் போவது இப்போதே கண்ணில் தெரிந்தது. திரும்பி நின்றான்.

“ஹாய்”

“இங்க எப்டீ… ஓ… ஷர்மி (கல்யாணப் பெண்) சொன்ன ஜுவல்லரி டிஸைனர், வருண் அண்ணாவோட ஃப்ரெண்ட்… மை காட், நீங்கதானா அது?”

எலெக்ட்ரிக் வயலெட் பட்டுப்புடவையின் ஓரத்தில் மிக மெலிதாக பச்சை நிறக் கரை இருக்க, முந்தானையில் மட்டும் ஜரிகை இருந்தது போலும். அது அல்ல விஷயம். அவளது பச்சை நிற ஹால்டர் நெக் பிளவுஸ்தான் விஷயம், விசேஷம்.

‘நெஜமாவே இவ மோகினிதான்’

“ஷர்மியும் நானும் எல்கேஜி டு காலேஜ் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்” என்று உபரித் தகவல் அளித்தாள்.

நண்பர்களின் முகங்களில் ‘இன்ட்ரொட்யூஸ் பண்றா எரும’ என்றதைப் படித்தவன்,

“இவங்க மேதாலக்ஷ்மி” என்றவன் நண்பர்களை அறிமுகம் செய்தான். ஹலோ, ஹாய்’ என்றவள் வைரவனிடம் “நேரமாச்சு, நான் வீட்டுக்குப் போய்ட்டு காலைல வரேன். இருப்பீங்கதானே?”

“இங்கேயேதான் இருப்பான். நாங்க கட்டிப்போட்டு வைக்கறோம்” என்றனர் கோரஸாய்.

“தட்’ஸ் குட்” என்றவள் “ஸீ யூ வைரவ்” என்றபடி நகர்ந்ததுதான் வைரவனுக்குத் தெரியும். சும்மா குமுறி விட்டனர்.

“யாருடா அது?”

“ஜுவல்லரி டிஸைனர், என் கூடதான் வேவை பாக்கறா”

“விதவிதமா பேர் வெச்சு கூப்புடுறா?”

‘இவனுங்க முன்னால என்னை ஏன் உசுப்பி விடறான்னு எனக்கே புரியலை. இவனுங்க வேற’

அரிஸ்டாட்டில் “வைரவா, நான் வேணா உங்கிட்ட அஸிஸ்டன்ட்டா சேரவா?”

இரவு உணவுக்குப் பின், வருண்ராஜின் பெற்றோர், தங்கை ஷர்மி, மாப்பிள்ளை, அவனது பெற்றோர் என பலரும் ஷர்மிளாவுக்கென வைரவன் செய்து கொடுத்த பிரத்யேகமான டிஸைன்களைப் பாராட்டினர்.

ஆறு மாதத்துக்கு முன்பு திருமணம் உறுதியானதுமே, அழைத்துச் சொல்லிவிட்டான் வருண்ராஜ். வைரவனுக்குதான் அவன் நட்பை எண்ணி, நம்பிக்கை வைக்கலாம். அவனது வீட்டினர்?

“ராஜ், உங்க அம்மா, அப்பா?”

“நீ எனக்கு அனுப்பின மாடல் ஃபோட்டோஸ்லாம் பார்த்து, அவங்களே உன்கிட்ட கொடுன்னு சொன்ன பிறகுதான் கன்ஃபர்ம் செஞ்சேன், போதுமா, செய்டா வைரவா”

தங்கம், குந்தன், ஆன்ட்டிக், சிவப்புக்கல், காசுமாலை, வைரமாலை என ஆறு செட் நகைகள்.

ஷர்மி திடீரென “அண்ணா, மேதா சொன்ன வைரவனும் நீங்கதானா?” என,

“ஆமாம், ஆமாம்” என்றனர் நண்பர்கள்.

‘சும்மா இருக்க விடறாளான்னு பாரு, கல்பு, என்னன்னு கேக்க மாட்டியா?’

நண்பர்கள் மண்டபத்திலேயே ஒரு அறையில் தங்கிக்கொண்டனர்.

*********************

மறுநாள் காலை தந்தை சகிதம் நேரே வைரவனைத் தேடி வந்தாள்.

“நல்லா இருக்கீங்களா தம்பி?” என்றவரை வருண்ராஜின் தந்தை வந்து அழைத்துச் சென்றார். அவர்களது நிறுவனத்தின் ஆடிட்டராம்.

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள், வைரவனின் கையைப் பற்றி இழுத்துப் பக்கத்தில் அமரச் செய்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் “என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” என்று ஒருமைக்குத் தாவி இருந்தான்.

“எதுக்கு இந்த டென்ஷன், அப்பாவோட வந்திருக்கிற நானே சும்மா இருக்கேன்”

முறைத்தான். “என்ன வேணும் உங்களுக்கு?”

“ஒரு தரம் நீ சொன்னா, அதையே கன்டின்யூ பண்ணலாம்”

“ரொம்ப முக்கியம், ஹேய், அப்படியா, ஸாரி மா”

“என்னை திரும்பவும் அழகுநாச்சிக்கு வரச் சொல்றாங்க”

“யாரு?”

“ஐயாவும் ஆச்சியும்”

“உனக்கு விருப்பம்னா வா”

“...”

“என்ன?”

“எனக்கு அந்த தண்ணீர்மலை கூட அந்தக் கடைல இருக்க வேணாம். நான் இப்ப என்ன செய்ய?”

“இந்த ஊர்லயே வேலை தேடலாமே?”

“விட்டா செய்ய மாட்டேனா?”

“...”

“நான் இப்ப என்ன செய்யட்டும்?”

"..."

“அரசரே”

“ஏய்…”

“தாலி கட்டப் போறாங்க, சீக்கிரமா சொல்லுங்க”

“சாலைல மட்டும் வேலை பழகறேன்னு சொல்லு”

“தேங்க் யூ அர்ர்ரரசு”

மேதா எழுந்து செல்ல, கெட்டிமேளம் ஒலித்தது.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Kokila Balraj

New member
Joined
Jun 19, 2024
Messages
6
நடக்கட்டும் நடக்கட்டும்
அரசியார் அரசனின் யோசனைப்படி நடக்க ஆரம்பித்து விட்டார்கள்
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
ராகா உன்னை நினைச்சாலே கோவம் வருது....
தணிகைவேலனை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு கூட விடாம அப்படி என்ன அப்பனுக்கு பையனுக்கும் வஞ்சம்...வைரவா தான் சரி அந்த குடும்பத்துக்கும் கிட்ட பேச... மேதா உன் முடிவை நீ ஏன் அரசர் கிட்ட கேட்டுட்டு இருக்க... என்ன அரசே கல்பு கிட்ட கைம்ப்லைன்ட் பண்ணுறது எல்லாம் சும்மாவா...
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் சூப்பர் அம்மா 💚💚💚💚💚💚💚வைர❤️மேதா பேர் பொருத்தமும் அழகா வருதே இனி ஒரே என்ஜோய் தான் சாலைல 😄😄😄😄😄
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
அர்ர்ர்ரரசு... அரசரே... வைரவ்... Variations are interesting👌
Waiting for such interesting variations for Medha too 👍
 

SaiSakthi

New member
Joined
Jun 20, 2024
Messages
25
பாலா ... அவனுக்கு என்னாச்சு ❓❓🧐🌺

ராகவி... படிப்புக்கும் , மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கும் சம்பந்தமே இல்லை போல ‼️🍀

அருமையான பதிவு... 💖
 
Top Bottom