• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 4

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 4

ள்ளியம்மையின் தலைக்கு எண்ணெய் தடவி, ஊறவைத்து, ஷாம்பூ போட்டு அலசிக் காயவைத்தாள் ஸ்வர்ணலதா.

தினமும் தணிகைநாதன் செய்யும் வேலை, வள்ளியம்மை தலைக்குக் குளிக்கும் நாளன்று மட்டும் ஸ்வர்ணலதாவிடம் வந்து விடும்.

அந்த அரை மணி நேரம்கூட வலி தாங்க முடியாது வள்ளியம்மையின் முகம் வாதையில் சுருங்கியது.

மீனாக்ஷி “என்னை எதுவும் செய்ய விட மாட்டேன்றம்மா நீ”

“உண்டாகி இருக்கற பொண்ணுக்கு நான் செய்யறதுக்கு இருக்க, உன்னை வேலை வாங்க சொல்றியா மீனா?” என்ற வள்ளியம்மை சிரமத்துடன் ரவிக்கையைப் போட்டுக்கொண்டார். புடவை கட்டிக்கொள்ள மீனா உதவினாள்.

ஸ்வர்ணலதா “ஒரு நைட்டிய போட்டுக்க சொன்னா கேக்குறியா, இப்ப பாரு, புடவை கட்டறதுக்குள்ள மூச்சு வாங்குது” என்றபடி, வள்ளியம்மையை மெதுவே பிடித்து அறையிலிருந்து முற்றத்திற்கு அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தாள்.

ஸ்டிக்கர் பொட்டை வைத்தவள், பூஜை அறையிலிருந்து குங்குமமும் விபூதியும் கொண்டு வர, வள்ளியம்மை கையைத் தூக்க முடியாது தூக்கி அவற்றை நெற்றியில் இட்டுக்கொண்டார்.

அந்த மரக்கட்டிலில், விரிப்பு ஏதுமில்லாது, மெலிதான துண்டு ஒன்றை நான்காய் மடித்துப்போட்டு, அதில் வள்ளியம்மையின் தலையை வைத்துப் படுக்க வைத்து, கால் பக்கப் புடவையைக் கீழே இழுத்துச் சரி செய்து,

“அண்ணா, ஜீவா அம்மா ரெடி” என்று அறிக்கை விட்டாள்.

குட்டித் தங்கை அம்மாவைக் கவனித்துக் கொள்வதையும், வலிக்காது கையாள்வதையும் பார்த்த மீனாக்ஷிக்கு மகிழ்ச்சியும் வருத்தமும் சேர்ந்தே வந்தது.

மீனாக்ஷி கல்லூரியில் படிக்கும்போது, வள்ளியம்மையின் பின் முப்பதுகளில் பின்னங்கழுத்தில் முணுமுணுப்பாகத் தொடங்கிய வலி தோள், முதுகு, இடுப்பு என மெது மெதுவே பரவியது.

டாக்டரைப் பார்ப்பதும், மருந்து வாங்கி சாப்பிடுவதும் தற்காலிகமாக வலியை மறந்து வேலையைப் பார்ப்பதுமாக நாள் சென்றது.


மீனாக்ஷி பிகாம் இறுதி வருடம் படிக்கையிலேயே திருமணத்திற்குக் கேட்டு வந்தனர். மேலே படிக்க விரும்பிய மீனாக்ஷியை தன் உடல் நிலை கருதி, வந்த நல்ல சம்பந்தத்தை விட மனமின்றி, மகளுக்குத் திருமணம் முடித்தே ஆக வேண்டும் என வள்ளியம்மை பிடிவாதம் பிடித்தார்.

திருமணத்தையும் உறுதி செய்து மகளின் விருப்பப்படி CMAவில் சேர்த்துவிட்டார் தணிகைநாதன். அதை முடித்துவிட்டுக் கணவனின் தொழில் மற்றும் கணக்கு வழக்குகளைப் பார்க்கிறாள், மேற்பார்வை பார்க்கத் தறிக்குப் போகிறாள்.
புடவையின் நிறங்களில், காம்பினேஷனில் மீனாக்ஷியின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறான் கணவன்.

அந்தத் திருமணம் நடந்தபின் நிகழ்ந்தவை எல்லாம் அவர்களது வாழ்வையே புரட்டிப்போட்டது வேறு கதை.


அப்போது வைரவன் சென்னை கிண்டி இன்ஜினீயரிங் காலேஜில் அவன் மிக விரும்பிய ஆர்க்கிடெக்ட் படிப்பின் முதல் வருடத்தை முடித்து இருந்தான்.

மீனாக்ஷிக்கு அந்த வைகாசியில் திருமணம் நடந்து, புகுந்த வீடு சென்ற மூன்று, நான்கு மாதங்களிலேயே
வள்ளியம்மையின் வலி அதிகமாகி சின்னச் சின்ன அசைவுகள் கூட கடினமாக இருந்தது.

மருத்துவர்கள் கழுத்து மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் எலும்பு தேய்ந்திருக்கிறது என்றனர். எலும்பு வளர்ந்திருக்கிறது என்றனர். அது தேய்ந்திருப்பதால்தான் வளர்ந்திருக்கிறது என்றனர். நரம்பை பாதித்திருக்கிறது என்றனர்.

அதற்கு Bone spurs அல்லது Cervical Osteophytes என்று வாயில் நுழையாத பெயரைச் சொன்னார்கள்.

மருந்து, மாத்திரை, ஃபிஸியோதெரபி, ட்ராக்ஷன், என பலவித சிகிச்சையின் பின், அசையாமல் படுத்திருப்பதுதான் ஒரே வழி என்றும், அதுதான் மேலும் எலும்பு உராய்வையும், வலியையும் தடுக்க ஒரே வழி என்றனர்.

மீனாக்ஷி புகுந்த வீட்டிலும் ஜீவா ப்ளஸ் ஒன்னிலும் லதா எட்டாவதிலும் வைரவன் சென்னையிலும் இருக்க, மூன்றே மாதத்தில் வீடு திக்கித் திணறியது.

பூஜா ஹாலிடேஸ் என நவராத்திரி சமயத்தில் கிடைத்த ஐந்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்த வைரவன், மீண்டும் கல்லூரிக்குத் திரும்பவில்லை.

தந்தை தணிகைநாதனுக்கு இருந்த பிரசினைகளில் தினசரி சமைப்பதும், கடைங்குச் செல்வதும், மனைவிக்கு பல் துவக்குவதில் தொடங்கி பாத்ரூம் அழைத்துச் சென்று, குளிக்க உதவுவது வரை செய்வதுமாகத் திண்டாடினார்.

மகளின் திருமணமும், மனைவியின் மருத்துவச் செலவுகளும், அதன் பக்க விளைவாக அடிக்கடி வெளிச் சாப்பாடும் என பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது.

வைரவன் அம்மாவை விட, தங்கை ஸ்வர்ணலதாவைப் பார்த்து மிரண்டுவிட்டான். வயதுக்கு வந்து ஏழெட்டு மாதங்களே ஆன லதாவுக்கு நல்ல நீண்ட அடர்த்தியான கூந்தல். சரியாகப் பராமரிக்காததால், பேன்கள் கூடு வைத்திருந்தது.

முதல் வேலையாக அவளை மதுரைக்கு அழைத்துச் சென்று, அக்கா மீனாக்ஷியோடு ஒரு பார்லருக்கு அனுப்பி, தலையைச் சரி செய்து, பாதியாக வெட்டச் செய்தான். ஜீவாவையும் லதாவையும் வைத்துக்கொண்டு வீட்டை சரி செய்தான்.

ஐந்து நாட்கள் ராட்சசனைப் போல் வேலை செய்தவன், கல்லூரிக்குத் திரும்ப வேண்டிய நாள் வர, அவனுக்கு ஹாஸ்டல் செல்ல தன்னால் எதுவும் செய்து தர முடியாதென்பதால், கணவரிடம் கடையிலிருந்து வாங்கி வரச்சொன்னார் வள்ளியம்மை.

கையில் இருந்த பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணியபடி பையுடன் வெளிக்கிட்ட தந்தையைத் தடுத்தவன் “நான் இனிமே காலேஜுக்குப் போகப் போறதில்லப்பா” என்றதில் தணிகைநாதன் திகைத்தார், ஆத்திரப்பட்டார், சமாதானம் செய்தார்.

“மூணு வருசந்தானேடா, ஓடியே போயிடும். சமாளிச்சுக்கலாம். ஒரு வருசம்போனா உங்கம்மைக்கு ஓரளவுக்கு நல்லாயிடும்னு சொல்லி இருக்காங்கள்ல வைரவா. நான் பாத்துக்கறேன்டா” என அவர் எத்தனையோ சொல்லியும் மறுத்துவிட்டான்.

ஜீவாவும் லதாவும்ப ள்ளிப் படிப்பையே முடிக்காத நிலையில், வேறு வழியின்றி வீட்டு வேலைகள் செய்வதும், தணிகைநாதன் வர தாமதமானால், வள்ளியம்மை சொல்லச் சொல்ல இரவு உணவை சமைப்பதுமாக இருந்தது வைரவனை உறுத்தியது. அவனுடைய செல்லியின் இரண்டு கைகளிலும் வரிவரியாக சுட்டுக்கொண்ட காயம்.

படிக்கும் வயதில் வீட்டு வேலை எதுவும் செய்யக்கூடாது என்பதில்லை. பெரியவர்கள் கூப்பிட்ட குரலுக்கு உதவுவதும், ஏவிய வேலையை செய்வதும் அவசியமும் கூட.

ஆனால், நகரக்கூடாத உடல்நிலையில் அம்மா இருக்க, எல்லா வேலைகளையும் செய்வதென்பது சுமையல்லவா?

ஸ்வர்ணலதாவின் காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களைப் பார்த்தவனுக்கு, தன் உயர்கல்வியைவிட, அவர்களது அடிப்படைக் கல்விதான் முக்கியம் என முடிவே செய்து விட்டான்.

வைரவனுக்கு மட்டும் சமைக்கத் தெரியுமா என்ன? கல்லூரி செல்லும் வரை வள்ளியம்மை அவனுக்கும் எல்லாவற்றையும் கையில் கொண்டு வந்துதான் கொடுத்தார். அதற்காக?

தனக்கான கல்லூரி மற்றும் ஹாஸ்டல் கட்டண சுமையாவது குறையுமே என்பது மற்றொரு முக்கியமான காரணம்.

மகன் ஆசைப்பட்ட பாடம், ஆசைப்பட்ட கல்லூரியில் இடம் கிடைத்தும் படிப்பு பாதியில் நின்றதில் தணிகைநாதனுக்கு மிகுந்த வருத்தம்தான். ஆனாலும், அதில் சின்ன ஆசுவாஸமும் எழுந்தது. ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன.

முட்டி, மோதி சமைக்கக் கற்றுக்கொண்டான். லதா, ஜீவாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தான்.

தாயும் தமக்கையும் பராமரித்த அடர்த்தியான தலைமுடியைத் தேய்த்துக் குளிக்க சிரமப்பட்ட ஸ்வர்ணலதாவிடம் “செல்லி, எண்ணெய் தடவி ஊறிட்டு, பின்கட்டுல போய் ட்ரெஸ்ஸோட உக்காரு. நான் சீயக்கா தேய்ச்சு முடிய அலசி வுடறேன். அப்புறமா நீ குளிச்சுட்டு வா” என்றவனைக் கட்டிக்கொண்டு அழுத அழுகையில் தெரிந்தது அவளது மன அழுத்தம்.

நான்கே மாதங்களில் அவளது தலையில் பேன் வைத்த காரணமாக, பள்ளியில்தான் எத்தனை கேலியும் கிண்டலும்? ஆசிரியைகள் கூட அறிவுறுத்தினாலும் நக்கல் அடிக்கவே செய்தனர்.

எட்டிப்பார்க்க வந்த உறவுகள் பரிதாபப்பட்டனர். அதற்கு மேல் அவர்களாலும்தான் என்ன செய்யமுடியும்?

வள்ளியம்மையின் வார்த்தைகளில் ‘நித்யம் சாகறவனுக்கு யார் அழறது?’

தணிகைநாதன் சாலைக்குச் சென்றிருக்க, ஏதோ இஸ்லாமிய பண்டிகை என்பதால், ஜீவாவுக்கும் லதாவுக்கும் அன்று விடுமுறை. அநேக வீடுகளைப் போலவே, தந்தை வெளியே சென்றுவிட, மீனாக்ஷியும் வந்திருந்ததில் கலகலத்தனர்.

ஜீவா “மஹாஜனங்களே, திருமதி மீனாக்ஷி நந்தகுமாரின் வருகையை முன்னிட்டு இன்றைய ஸ்பெஷல் டனட்டடய்ன்…. வெங்காய ரவா உப்புமா”

லதா “ரெண்டு பேரும் இத்தனை நேரமா இதையா கிண்டிட்டு இருந்தீங்க?”

“நான்தான்டீ கேட்டேன். அங்க உங்க மாமா உப்புமாவே செய்ய விட மாட்டேன்றாங்க”

ஜீவா “அடடா, என்ன ஒரு சோகம்!”

மீனாக்ஷியின் மகள் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து, வைரவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“தங்கம், பால் குடிக்கிறீங்களா?”

“பைக்ல போணும்” என்றாள் குழந்தை.

ஜீவா “நேத்து போனோமேடா செல்லம்”

“வைரன் மாமா பைக்”

“சரி, போகலாம், பாலைக் குடி”

“சித்தி(லதா) பைக்ல வேணாம்” எனவும் ஜீவா “அப்டி சொல்லுடா கோல்டு பார்(gold bar)” என்று சத்தமாகச் சிரித்து லதாவின் முழங்கையால் குத்து பட்டான்.

வாயிலில் ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்க, வள்ளியம்மையின் அண்ணனும் அண்ணியும் உள்ளே வந்தனர். வரவேற்றுக் குசலம் விசாரித்தனர்.

“என்னம்மா மீனா, எப்ப வந்த, எப்படி இருக்க?”

“ரெண்டு நாள் ஆச்சு மாமா, நல்லா இருக்கேன்”

“வள்ளி, நம்ம திவ்யாவுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு. பையன் பெங்களூர்ல ஐடி கம்பெனில இன்ஜினீயர்”

“சந்தோஷங்கண்ணா. எப்ப நிச்சயம்?”

“நிச்சயத்த பெருசா செய்ய வேணாம்னு சொல்லிட்டாங்க. அதனால வீட்டுலயே தாம்பூலம் மாத்திக்கிட்டோம். நம்ம திருக்கோயிலூர் கோவில் மண்டபத்துலதான் கல்யாணம்”

கேட்டிருந்த வள்ளியம்மை “நல்லது” என்றார்.

தணிகைநாதனின் சகோதரிகளின் பெண்கள் அனைவரும் வைரவனை விட வயதில் மூத்தவர்கள்.
தன் அண்ணனின் மகளை மகனுக்குக் கேட்க எண்ணி, வள்ளியம்மை தன் தங்கையிடம் சொல்லப்போக, அவள் அண்ணனுக்கு விசுவாஸமாக அங்கே சென்று ஒலிபரப்பியதில், நேரிடையாகக் கேட்டால் அப்போது மறுப்போம் என்றில்லாமல், ஒரு நாள் அண்ணனே ஃபோனில் அழைத்து “அண்ணி பேசணுமாம்” என்றார்.

“சொல்லுங்க அண்ணமிண்டி”

அண்ணி “வைரவனுக்கு எம்மகளைக் கேக்கப் போறதா சுகந்தி கிட்ட சொன்னியாம். படிப்பும் இல்லாத, வேவையும் இல்லாத, சும்மா வீட்ல சமையல் செஞ்சு, பாத்திரம் கழுவுறவனுக்கு ஐடில வேல பாக்குற எம்மகளைக் கேக்கணும்னு நீ எப்படி நினைக்கலாம்?” என எடுத்தவுடனே எகிறினாள்.

“இல்ல…”

“என்னத்த இல்ல, உனக்கு குளிச்சு, தெளிச்சு, சமையல் செஞ்சு, ஆஃபீஸ் போய் அவ சம்பாதிச்சா, நீங்க கூட்டமா உக்காந்து…”

வள்ளியம்மையால் கையில் பிடித்துப் பேசமுடியாது என்பதால், மொபைலை ஸ்பீக்கரில் போட்டிருக்க, அதில் வழிந்த இளக்காரத்தில், வைரவன் ஃபோனை கட் செய்துவிட்டான்.

மகனின் பார்வையைத் தாங்க முடியாது “வைரவா…” என தயங்கியபடி , தவறு செய்த குழந்தைபோல் விழித்தவரைக் கண்ட வைரவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“குழந்தைத் திருமணம் சட்டப்படி தப்பு ஆத்தா”

இது நடந்து ஒரு வருஷத்துக்கு மேல் இருக்கும்.

வைரவன் அவர்கள் இருவருக்கும் டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தான்.

“மருமகனுக்கு (வைரவன்தான்) கல்யாணத்துக்கு பாக்குறியா வள்ளி, பொண்ணு ஏதாச்சும் வருதா?”

“காரக்குடி வரைக்கும் வந்தாச்சுங்கோவ்” என்று முனகிய ஜீவாவின் பின்புறம் கிள்ளலில் சிவந்தது.

அவன் போட்ட டீயைக் குடித்துக்கொண்டு, தன் கேள்விக்கும் ஏளனப் பார்வைக்கும் அவனிடம் துளியும் சலனம் இல்லை என்பதே மாமிக்கு எரிச்சலூட்டியது. தணிகைநாதன் வந்தபிறகு மதியம் உண்டுவிட்டுதான் புறப்பட்டனர்.

வள்ளியம்மை தன்னால்தான் மகனுக்கு இந்த நிலை என்ற எண்ணத்தில் மனது அடித்துக்கொள்ள புலம்பினார்.

வள்ளியம்மைக்கு மாத்திரை கொடுத்த ஜீவா “நான் ஒன்னு சொன்னா கோபப்படுவீங்களா பெரியம்மா?”

“சொல்லேண்டா”

“அரை சீப்பு பூவன் பழத்தைக் கொடுத்துட்டு எத்தனை பேச்சு பேசறாங்க அந்த அத்தை. ஒரு நாள் இங்க வந்து பேசுனவங்க எல்லாருக்கும் இருக்கு பெரியம்மா”

“அடப்போடா ஜீவா, அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். எத்தனையோ பார்த்தாச்சு, இதென்ன பிரமாதம்?”

“தெரியுதுல்ல, அப்புறம் ஏன் பூவன் பழத்துக்குப் போய் பொலம்புறீங்க ஆப்பிளா இருந்தாலாவது அழலாம்”

வைரவன் “ஜீவா” என்று பல்லைக் கடிக்க, ஸ்வர்ணலதா “சிரிக்காதம்மா, படு மொக்கை”

மீனாக்ஷி “விடும்மா, தம்பிக்கு வேற பொண்ணா கிடைக்காது?”

ஜீவா “கிடைக்கூ…ம், கிடைக்கூ..ம்” என வட்டமாக மண்டையை ஆட்டினான்.

ஸ்வர்ணலதா “பொண்ணுன்ன உடனே ஞாபகம் வருது. நேத்து அவங்க கேக்காமயே என்னை ஏண்ணா அறிமுகம் செஞ்சுவெச்ச?”

ஜீவா “இதெப்போ?”

வள்ளியம்மை “யாருடா தம்பி?”

“அதான் ராகவி அண்ணியோட தங்கை கடைல வேலைக்கு சேர்ந்திருக்கான்னு சொன்னேனேம்மா”

“சொல்லலையே”

“நாலு நாளாகுது. அப்பா சொல்லி இருப்பார்னு நினைச்சேன்”

லதா “அவங்க ஏன் கல்யாணத்துக்கு வரலை?”

வைரவன் “லண்டன்ல ஜுவல்லரி டிஸைன் படிச்சிட்டு இருந்தாங்களாம்”

மீனாக்ஷி “அதான் அந்த ஆச்சியும் பையனும் பாத்த மாதிரியே தெரிஞ்சாங்க. அவ லண்டன்ல படிச்சது உனக்கெப்படித் தெரியும்?”

“எங்கிட்டதான் வேலை கத்துக்க சொல்லி ஐயா அனுப்பி இருக்கார்” என்றவனை அக்காவும் தங்கையும் ‘அடப்பாவி’ பார்வை பார்த்தனர்.

வள்ளியம்மை “கவனமா இரு தம்பி. அதிகம் பேச்சு வெச்சுக்காத. சரியா செய்யலைன்னா ஜீவா, லதாவைத் திட்டற மாதிரி திட்டி கிட்டி வெச்சுடாதடா. வீண் வம்பு வேணாம்”

“ம்…”

******************

மேதா வேலையில் சேர்ந்து மூன்று வாரங்கள் ஓடியிருந்தது. அவளது பெற்றோர்கள் பாலாவுடன் மறுநாளே கோயம்புத்தூர் சென்றுவிட்டனர்.

ராகவியுடன் ஃபோனில் மட்டுமே பேசினாள். ஓரிரு முறை ராகவி “மாமா கிட்ட லஞ்ச் கொடுத்து விடவா?” என்றதை மறுத்துவிட்டாள்.

வைரவனை ராகவிக்கு எப்படித் தெரியும், உறவா, நட்பா என்றெல்லாம் கேட்கத் தோன்றினாலும், அவனை அவள் திமிர் பிடித்தவன் என்றதும், அவனோடு அதிகம் பேசாதே என்றதும் மேதாவுக்குப் பிடிக்கவில்லை.

‘அவனிடம் பேசாமல் கடையில் வேலை பழகுவது எப்படி?’

ராமநாதனைக் கேட்டதற்கு “ராகா கல்யாணத்துல பார்த்தேன். இப்ப அவன் கிட்ட நீ வேலை செய்யறப்போ, சம்பந்தி வீட்ல விசாரிச்சா தப்பா படும்டா, அவன் என்ன உறவா இருந்தா நமக்கென்ன?” என்றார்.

கடை முழுவதும் மேதா, சிவானந்தத்தின் மைத்துனி என்பது பரவியிருக்க, மற்ற விற்பனைப் பெண்கள் / ஆண்கள் அனைவரும் அவளிடமிருந்து சற்று விலகியே நின்றனர். மேதாவே வலியச் சென்று பேச்சுக் கொடுத்தாலும் ஓரிரு வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்டனர்.

இரண்டு, மூன்று பெண்களின் பார்வை இவளது அசைவுகளை ஊடுருவிக் கண்காணிப்பதை உணர்ந்து திகைத்தாள்.

‘நான் அம்புட்டு வொர்த் இல்லை மக்கா’

மேதா நகைக்கடைக்குப் பெற்றோருடன் போய் தன் விருப்பத்தைச் சொல்லி இருக்கிறாளே தவிர, அதன் வியாபார சூட்சுமங்கள் அவள் அறியாதது.

நகைகளின் எடையை, தூய்மையை விட்டு விடலாம். ஆனால் இந்த சேதாரம், மத்திய, மாநில ஜிஎஸ்டி, VAT, சேவை வரிகள் போன்றவை ஒரு பக்கம் குழப்பியது.

அங்கே வேலை செய்யும் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி, அந்தக் கணக்கை போடச்சொல்லித் தந்தது யார், எப்படி அதைப் புரிந்து கொண்டு, வாய் ஓயாது விளக்குகின்றனர் என்பதெல்லாம் கம்பசூத்திரமாக, பிதாகரஸ் தேற்றமாகத் தோன்றியது.

கடை விற்பனையாளரின் சீனியாரிட்டி உயர, உயர நகையின் விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் அற்புதம் நிகழும் விதம், எதன் அடிப்படையில் அவர்கள் கணக்குப் போட்டு ஒரு தொகையைச் சொல்கின்றனர், அதுதான் விலையெனில் எப்படி குறைக்க முடியும் போன்ற கேள்விகள் மட்டுமே மேதாவிடம் இருந்தது.


‘எனக்கு அத்தனை அறிவில்ல போல’

குறிப்பிட்டு யாரும் எந்த வேலையும் சொல்லாது தினமும் ஒரு மணி வரை கடையில் நேரத்தை நெட்டித் தள்ளுபவள், டாணென்று சாலைக்குக் கிளம்பி விடுவாள். சில நேரம் தணிகைநாதன் இருக்கும்போதே கூட சென்றிருக்கிறாள்.

கோயம்புத்தூரில் இருந்து மேதாவின் ஸ்கூட்டர் வந்துவிட, வீடு, கடை, சாலை என போக வர வசதியாக இருந்தது.

இதில் பெரிய இம்சையாக இருந்தது மதிய உணவுதான். சகஜமாகப் பேசி, சேர்ந்து உண்ணும் அளவுக்குக் கடையில் யாரும் நட்பாய் பழகவில்லை.
முருகப்பன், சிவானந்தம், தண்ணீர்மலை எல்லோரும் அநேகமாக சாப்பிட வீட்டுக்குச் சென்றனர்.

சிவானந்தம் கூட அழைத்தான்தான். மேதாவிற்கு அங்கே வேலை செய்பவள் என்ற எல்லையைத் தாண்ட விருப்பமில்லை. அதோடு கூட தண்ணீர்மலையின் வழிசலான பேச்சும் பார்வையும் பிடிக்காது அவனைத் தவிர்க்கவே விரும்பினாள்.

மேதா சின்னச் சின்ன கிண்டல்கள் பாராட்டுதல்களோடு கூடிய, விளையாட்டாய், வெளிப்படையாய் பேசும் ஆண் நட்புகளை அதே இயல்புடன் எளிதாகக் கடந்திருக்கிறாள்.

ஆனால், தண்ணீர்மலையை அப்படி எண்ண முடியவில்லை. அவளிடம் என்றில்லாமல், பொதுவாகவே கடையில் வேலை செய்யும் பெண்களையும் அவன் அதேபோல் பார்ப்பதை உணர்ந்தாள்.

சாலையிலும் வேலை என பெரிதாய் எதுவும் இல்லைதான். ஆனால், ஆசாரிகள் தங்கம் உருக்குவதையும், உப்சம் செய்து கற்களைப் பதிப்பதையும், தங்கம் செப்புடன் கலப்பதையும், நகையாக மாறுவதையும், கண்ணளவிலேயே ஒன்றுபோல் செய்து அவற்றைப் பற்ற வைத்து இணைப்பதையும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கப் பிடித்திருந்தது.

எல்லாவற்றையும் விட வைரவனை, வைரவனின் வேலையை, ஆசாரிகளோடு அவன் பேசுவதை, அவன் வரைவதை, கற்களை மதிப்பீடு செய்வதை, வேடிக்கை பார்க்க ரொம்பவே பிடித்திருந்தது.
அவள் பார்ப்பதை அவன் அறியாது செய்ய வேண்டி இருந்தது.

ஆசாரிகள் அனைவரும் பல்வேறு வயது ஆண்களாக இருக்க, சுற்றிலும் பார்வையைச் சுழற்றுவதே கடினமாக இருந்தது. படிப்பு, அந்தஸ்து, முதலாளியின் உறவினள் என பல வித்தியாசங்கள் இருப்பினும், பெண் என்பதே அவர்களுக்கு ஒரு ஈர்ப்பையும் குறுகுறுப்பையும் தந்தது.
மேதா முடிந்தவரை இயல்பாக இருக்க முயன்றாள்.

******************

முதல் நாலைந்து நாட்கள் கடையில் கொடுத்த டீயுடன் மதிய உணவை பையில் வைத்துக்கொண்டு உண்ணாமலே கழிக்க, அசிடிட்டியில் வயிற்றைப் பிரட்ட, பித்தமாக வாந்தி எடுத்த பேத்தியைக் கண்ட பாட்டி டென்ஷனாகி விட்டார்.

“உன் சாப்பாடை ஒரு ஓரமா உக்கார்ந்து சாப்பிட முடியாதா உன்னால? கொண்டுபோறதே இத்துனூண்டு டப்பா. இன்னொரு தரம் இப்படி சாப்பாடைத் திருப்பி கொண்டு வந்தா, அடுத்த பஸ்ஸைப் புடிச்சு கோயமுத்தூருக்குக் கிளம்பு. நீ பாத்த வேலை போதும்” என்றவர் அவளது பெற்றோருக்கும் ஒலிபரப்ப, மேதாவின் செவிக்கு செமத்தியான உணவு கிடைத்தது.

அவளுக்குமே பசித்ததால் மறுநாள் முதல் உணவு வேளையைத் தவறவிடவில்லை.
ஆனால்…

*******************

“நம்ம சாலையே இப்பதான் நல்ல வெளிச்சமா இருக்கு, இல்லண்ணே”

“இருக்கும்டா, இருக்கும்”

“வைரவா, அந்தப் புள்ளைக்கு வேலைய மெதுவா கத்துக்குடு. இத்தன தடிப்பசங்க நடுவுல ஒரு பொண்ணு வந்ததுமே, நம்ம பயலுவளோட பேச்சே மாறிப்போச்சு பாரு. கெட்ட வார்த்தை பேசறதில்ல, வேட்டிய தொடைக்கு மேல வழிச்சிக்கிட்டு, சட்டையத் தொறந்து போட்டுக்கிட்டு காத்து வாங்கறதில்ல…”

“எது எப்படியோ, சாலைக்கே தனி களை வந்திருச்சு”

“அதுசரி, வெளிநாட்ல படிச்ச பொண்ணுன்னு சொன்னாங்க, ஆனா, தமிழ் நல்லா பேசுதில்ல?”

ஆசாரிகளின் பேச்சைக் கேட்டபடி, வைரவன் சிரிப்பை வெளிக்காட்டாது அமர்ந்திருக்க, பெருமாள் ஆசாரி “அது சிவானந்தம் தம்பியோட மச்சினிச்சி. நீங்க பாட்டுக்கு எதையானும் பேசி, அது அந்தப் பொண்ணு காதுல விழுந்து வைக்கப் போகுது. உங்க வாயாலயே ஏழரையைக் கூட்ட வேணாம்”

“ஓ… புரியுது, புரியுது. முறையா… அதான் இளையபெருமாள் (தண்ணீர்மலை) அடிக்கடி இங்க விஸிட் அடிக்கிறாரா?”

வைரவன் “செந்திலண்ணா…”

“இவன் ஒருத்தன்…நா(ன்) ஒன்னும் பேசலடா, போதுமா?’

நகை செய்யக் கொடுக்க, காது, மூக்கு குத்தவென வரும் பெண்களைத் தவிர, கூடவே ஆண்களோ, வயதான பெண்களோ இருப்பர், வேறு யாரும் சாலைக்கு வருவதில்லை. முதல் முறையாக தங்களுக்கு நடுவே ஒரு பெண்ணின் இருப்பு, ஆசாரிகளிடையே ஆர்வத்தையும் கலகலப்பையும் அழைத்து வந்திருந்தது.

எல்லோரும் நல்லவர்தான் ஆனால் யாருக்கு என்பதுதான் கேள்வி. இங்கு பொதுவில் கமென்ட் செய்துவிட்டு, அங்கே போய் போட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

அதேபோல், நிரந்தரமாகவோ, மாற்றி மாற்றியோ, மற்றவரின் குணத்தை, எண்ணப்போக்கை, கருத்தை அறிய சித்தப்பா முருகப்பன் இங்கு உள்ளவர்களிடம் பேச்சுக்கொடுக்கிறார் என்பது வைரவனுக்குத் தெரியும்.

இங்கு தவறாக எதுவும் நடக்கவில்லைதான். போதாதற்கு சிசிடீவி காமெரா வேறு இருக்கிறது. ஒலி கிடையாதுதான். இருந்தாலும் உடல்மொழி என்று ஒன்று இருக்கிறதே!

இத்தனை ஆரவாரத்துக்கும் காரணமானவளை ஒருநாள் மதியம் அவன் பார்த்தபோது….

வைரவன் மதிய உணவுக்குப் பின், தந்தை வீட்டிற்கு வந்தபிறகுதான் சாலைக்கு வருவதால், ஒன்றிரண்டு டீயோடு சரி. அதையுமே சில நாள்கள் மறுத்துவிடுவான்.

இவன் வரும் முன்பே வந்து உள்ளே போகாமல் வாசலில் காத்திருந்த மேதாலக்ஷ்மியை முதலில் புரியாது பார்த்தவனுக்கு, ஆண்களாக அமர்ந்து சாப்பிடுவதும், அரட்டை அடிப்பதும் தனியாக இருப்பவளுக்கு சங்கடமாக இருப்பது புரிந்தது. ஆனாலும், ‘அதற்கு நான் என்ன செய்ய முடியும்’ என விட்டுவிட்டான்.


ஒருநாள் மதியம் சாலை இருக்கும் அமைதியான பகுதியில் பைக்கைத் திருப்ப, ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி, அதன் மீது அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவளை கண்டதும் ‘ஏன், உள்ள போய் சாப்பிட்டாதான் என்ன, அவங்களோட வேலை பாக்கணும்னா சாப்பிடவும்தான் வேணும்’ என முதலில் கோபப்பட்டவனுக்கு பிறகு என்னவோ போலானது.

‘எத்தனை நாளா இப்படித் தெருவுல நின்னு சாப்பிடறா? இதுக்குதான் உங்கிட்ட வேலைக்கு அனுப்பினேனான்னு ஐயா கேட்டா?’

‘ஏன்டா, ஐயா கேக்கலைன்னா அவ இப்படி ரோட்ல நின்னா உனக்குப் பரவாயில்லையா?’

இப்போது அருகில் சென்றால், சாப்பிடுவதை நிறுத்தி விடுவாள் என்பதால், கண்டுகொள்ளாது சென்றவன், மறுநாள் மதியம் அவள் அருகில் போய் பைக்கை நிறுத்தவும், அவன் நினைத்தது போலவே வண்டியிலிருந்து குதித்தாள்.

“என்ன?”

“...”

“சாலைக்குள்ள போகலாம்ல?”

“இல்ல… தனியா…”

“கடைலயே சாப்பிட்டு வரதுக்கென்ன?”

“அங்கேயும் தனியாதான் சாப்பிடணும். எங்கிட்ட யாரும் பேசறதில்லை”

“உன் மாமா கூடவா?”

“எனக்கு அவங்களோட எல்லாம் போக வேணாம்”

“சரி, நாளைல இருந்து வீட்டுக்குப் போய்ட்டு வா”

“அவ்வளவு தூரம் யார் போறது?”

அவ்வளவுதான். பைக்கைக் அவன் கிளப்பிக்கொண்டு போய்விட,
மேதா ‘இவன் வைரவனா, பைரவனா?’ என்ற யோசனையோடு பின்தொடர்த்தாள்.

அடுத்தநாள் அவளுக்கு முன்பே வந்து அந்த மரத்தடியில் நின்றிருந்தான்.

“சாலைலயே வந்து சாப்பிடு” என்றவன், அவள் உண்டு முடிக்கும் வரை அவளோடு ஆளோடியில் இருந்த குறட்டில் அமைதியாக அமர்ந்து கொண்டான். பிறகு அதுவே வழக்கமானது.

ஆசாரிகள் ஜாடை பேசிக் கேலி செய்வதைக் கண்டு கொள்ளவில்லை. பேச்சு எல்லை மீறவும், மேதா வீட்டுக்குச் சென்றதும், ஆசாரிகளிடம் நடந்ததை சொன்னவன் ‘இத்தனை பேருக்கு நடுவுல சாப்பிட அவங்க சங்கடப்படறாங்க. இதுல கேலி செய்ய எதுவுமில்ல. நம்ம கூட வேலை செய்யற பொண்ணு ரோட்ல நின்னு சாப்பிட்டா நல்லாவா இருக்கு?” எனவும் சலசலப்பு குறைந்தது.
மௌனமாய் துணையிருப்பது மட்டும் தொடர்கிறது.

*******************

பிற்பகல் மூன்று மணி இருக்கும். ஒரு தம்பதியோடு வந்த தண்ணீர்மலை “புதுக்கோட்டைல இருந்து வந்திருக்காங்க” என்றான் மொட்டையாக.

பழைய தங்கத்தை உருக்கி எடுத்துக் கொள்வதற்கென கடையிலேயே ஆசாரி இருக்கிறார். அதுவே, வைரம் போன்ற விலை உயர்ந்த கல் நகைகளை அழித்துப் பண்ணுவதென்றால், சாலைக்குதான் வரவேண்டும்.

வைரவன் முதலில் சரவணனிடம் கொடுத்து கற்களையும் தங்கத்தையும் பிரிக்கச் சொன்னான்.

தரையில் பாய் போட்டு அமர்ந்திருந்த வைரவன் கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில் சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த முப்பரிமாண பூதக் கண்ணாடியைக் (40x triplet magnifier loupes) கண்ணில் பொருத்தித் தன் எதிரே இருந்த குட்டை மேஜையின் மேல், கருநீல வெல்வெட்டில் பரப்பப் பட்டிருந்த வைரங்களைப் பார்த்தான்.

மொத்தம் அறுபத்தி நான்கு கற்கள். ஒவ்வொன்றும் கல்கண்டு சைஸில் இருந்தது. நல்ல ஜாதி வைரங்கள்.

எதிரில் இருந்தவர் வைரவன் ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் பார்க்க, தன்னிடம் இருந்த சிறிய பேழையில் எடுத்து உள்ளே வைத்துக்கொண்டிருந்தார். வேலை முடிந்தது. உருக்கிய தங்கத்தையும் அவரிடமே கொடுத்தான்.

“முதல்ல பத்திரமா உள்ள வைங்க. இப்ப சொல்லுங்க, எப்படி செய்யணும்னு, செஞ்சுடுவோம். எங்க கிட்ட இருக்கற டிஸைனை பாக்கறதுன்னாலும் காட்டறேன்”

கேட்டலாகைக் காட்டினான். மறுத்துக்கொண்டே வந்த அந்தப் பெண்மணி “இப்படி இல்ல தம்பி, டிஸைன் மனசுல இருக்கு. ஆனா விளக்க முடியலை” என்றாள்.

கடை கேட்டலாகை மூடி வைத்தவன், தன் மொபைலைத் திறந்து அதிலிருந்த சில டிஸைன்களைக் காட்ட,
கூட வந்திருந்த பெண்மணி பரபரத்தாள்.

“இதுக்கு முன்னால இருந்த படத்தைக் காட்டுங்க. இதான், இதேதான் தம்பி, ஒரு கல்யாணத்துல பாத்தேன். அம்புட்டு அழகா இருந்துச்சு”

“எங்க பாத்தீக?”

“தஞ்சாவூர்ல தம்பி”

“தங்கவேல் ஐயா வீட்டுக் கல்யாணமா?”

“ஆமாம்பா, உங்களுக்குப் பரிச்சயமா?”

“நாங்கதான் செஞ்சு கொடுத்தோம்”

“எங்களுக்கும்…”

“முழுசா அஞ்சு வாரம் ஆகும், பரவாயில்லையா, அவசரப்படுத்தக் கூடாது”

“நிதானமா ஆகட்டும்பா”

“நீங்க கடைல ஆர்டரிங் செக்ஷன்ல குடுத்துட்டு ரசீது வாங்கிக்கங்க சார்”

அதுவரை வைரவன் பேசுவதை, அந்த வைரங்களை, கேட்டலாக் டிஸைனை, சற்றே முன்னால் சாய்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மேதாலக்ஷ்மி ஒரு குட்டை மோடாவில் அமர்ந்து பெரும்பாலும் தன்னையே வெறித்துப் பார்த்த தண்ணீர்மலையின் பக்கமே திரும்பவில்லை.

அங்கிருக்கும் அத்தனை ஆண்களின் நடுவே தனியே இருப்பது கொஞ்சம் அவஸ்தையாக இருந்தாலும், இதுவரை அவன் பாதுகாப்பின்மையை உணரவில்லை. அவனது பார்வை கொடுத்த அவஸ்தையில் அவளையறியாது ஏழுட்டு முறை தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டாள்.


‘என்ன மாதிரி ஆளு இவன், ராகா எப்படி இவனோட ஒரே வீட்டுல இருக்கா?’

அவர்களோடு தண்ணீர்மலையும் சென்றதும் டென்ஷன் நீங்கி, மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து வெளியே விட்டாள்.

அவளை வீட்டுக்குக் கிளம்பச் சொன்ன வைரவன், மெல்லிய குரலில் “ரிலாக்ஸ்” என்றது மேதாவின் காதில் இரவு முழுவதும் ரிபீட் மோடில் ஒலித்தது.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

காரைக்குடி வரை வந்தவ, வள்ளியம்மைக்கு மருமகளா எப்ப வர போறா? 🤗🤗

 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
படிக்காதவன்னு ஒதுக்குன சொந்தங்களுக்கு ஆப்பு இருக்கும் போல வைரவன் துணையால்
 

SaiSakthi

New member
Joined
Jun 20, 2024
Messages
25
மேதா... 🥰🥰

தண்ணீர் மலை ... என்ன மனுஷன் இவன் ‼️😏😡 ( மனுஷனே இல்லை 😖)

அருமையான பதிவு...💖
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
கேட்காமலேயே ஏன் அறிமுகம் செஞ்சு வெச்சே என்ற கேள்விக்கு விடை கொடுக்கவில்லை...

ஆனால், (மேதா) கேட்காமலேயே எதுவும் சொல்லாமலேயே அவளுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறான் -

வைரவரு தலைகுப்புற விழுந்து ரொம்ப நாளாச்சுது போலவே
மேதா எப்போ விழுகப்போறாங்களோ தெரியலே
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
படிப்பு வேலை எல்லாமே தன்னோட அம்மா குடும்பத்துக்காக விட்டுட்டு வர எத்தனை தைரியம் வேணும்... அவனோட வேலை திறமை தெரியாம இந்த அத்தை IT பொண்ணுக்கு ஓவர் பேசிச்சு .... தண்ணீர் மலை பேருக்கு ஏத்த மாதிரி ஊத்தி கிட்டே இருக்க...
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
வைரவன் அருமை மேதாவுக்கு எப்போ தெரியும், புரியும்?
 
Top Bottom