• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 3

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 3

சாலை/ தங்க சாலை எனப் பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் நகைகள் செய்யும் பட்டறையில் வைரவன் தனது ஆஸ்தான இருக்கையில் அமர்ந்திருந்தான். உள்ளே ஒரு பெரிய கூடம் இருந்தது. அதன் இரண்டு பக்கத்திலும் கணிசமான இடம் விட்டுக் கம்பிக் கிராதி போடப்பட்ட ஆளோடி இருந்தது.

சில நேரம் வெக்கை தாங்காமல், அங்கே அமர்ந்து வேலை செய்வதும் உண்டு.

தரையில் அமர்ந்து வேலை செய்யத் தோதான உயரத்தில் மேஜைகள் அமைக்கப்பட்டு தலைகீழ் ப வடிவில் வரிசையாகப் போடப்பட்டிருந்தது. மொத்தம் இருபத்திநாலு பேர்.

எல்லோருமே திறமையான பொற்கொல்லர்கள்தான் என்றாலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெருமாள் ஆசாரிதான் மற்றவர்களுக்கு வேலையைப் பிரித்தளிப்பார்.

தினமும் காலை ஒன்பதரை மணிக்கு அழகுநாச்சி ஆபரணமாளிகையைத் திறப்பார்கள். அதற்கு முன்பே பெருமாள் ஆசாரியுடன் தணிகைநாதனோ அல்லது வைரவனோ கடைக்குச் சென்று முருகப்பன் அல்லது சக்கரை ஐயா மற்றும் ஒரு நிர்வாகியிடமிருந்து அன்றைய நாளுக்கான வேலைக்குரிய தங்கம், வைரம், மரகதம், கெம்பு, முத்து, பவளம், கருகமணி என, செய்ய வேண்டிய நகைக்கான பொருட்கள், அதற்கான டிஸைன்கள், ஆர்டர் செய்யப்பட்டதெனில் அதற்கான பிரத்யேக மாடல் என எடைபோட்டு, கையெழுத்திட்டுக் கொடுத்து வாங்கி வருவர்.

அதேபோல் மாலையில் எதுவரை வேலைப்பாடு முடிந்திருக்கிறதோ, எடைபோட்டு அலுங்காது அப்படியே ஒப்படைத்து விடவேண்டும். இது தினசரி வழமை.

பரபரப்பான ஆபரண மாளிகைக்கு நேர்மாறாக சுற்றிலும் மரங்களும் வெட்டவெளியும், ஒரு டெய்லர் கடையும், இரண்டு பழைய வீடுகளும் என அமைதியான
இடத்தில்தான் சாலை இருக்கிறது.

பொதுவாக காலையில் தணிகைநாதனும், மதியம் வைரவனும் சாலைக்கு வருவது வழக்கம்.

அன்று புதன் கிழமை. தணிகைநாதன் காலை எட்டரை மணிக்கே புறப்பட்டுச் சென்றிருக்க, சீக்கிரமாகவே புடலங்காய் கூட்டும் காரக்குழம்பும் செய்துவிட்டு ஃபேனின் கீழே அமர்ந்து தாயுடன் பேசிக்கொண்டிருந்த வைரவனை அழைத்தான் சிவானந்தம்.

“சொல்லுண்ணா”

“வைரவா, நேர கிளம்பி கடைக்கு வா”

“இப்பவா?”

“ஆமா, ஏன்?”

“இல்ல, அம்மா தனியா இருப்பாங்க”

“ஆமால்ல?”

“...”

“இல்ல, ஐயாதான் கூப்பிடச் சொன்னாரு”

சக்கரை ஐயா வயோதிகம் காரணமாக இப்போதெல்லாம் தினமும் கடைக்கு வருவதில்லை. அவரது வசதிப்படி வாரத்தில் இரண்டு, மூன்று முறை வருவார். பெரிய மனிதர்கள், இவர்களுக்கு வைரம், நவரத்தினங்களை விநியோகம் செய்யும் வியாபாரிகள் வரும் நாட்களில் வந்துவிடுவார்.


‘நேத்துதான் ஜேட், டர்க்காய்ஸ், டான்ஸனைட், சஃபையர் (Jade, Tanzanite, Turquoise, Saffire) ஸ்டாக் வந்ததை டெஸ்ட் பண்ண வந்தார். இன்னைக்கும் ஏன்?’ என்ற யோசனையோடு “சரி, ஒரு அரை மணில வரேன்”

ரத்தினம் பெரியம்மாவை அழைத்து வந்து “ அப்பா வர வரைக்கும் கொஞ்சம் அம்மா கூட இருங்க பெரியம்மா, அவசர வேலை இருக்கு” என்று கடைக்குக் கிளம்பினான்.

********************

அழகுநாச்சியில் சேராமல் இருக்கப் பலவிதங்களில் முயன்ற மேதா, பெற்றோரை சமாதானம் செய்ய இயலாமல், இறுதியில் வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவி, காரைக்குடியை நோக்கிப் பயணித்தாள். டிரைவர் காரைச் செலுத்த நளினியும் பாலாவும் உடன் வந்தனர்.

ராகவி வேறு “நீ இங்க வந்தா, அந்த சாக்குல நான் அடிக்கடி ஆயா வீட்டுக்கு வர முடியும். எனக்கு அம்மா செய்யுற மிளகு குழம்பும் நெல்லிக்கா சாதமும் சாப்பிடணும் போல இருக்கு” என்று சென்டிமென்ட் கேட்டைப் போட, நளினி மேதாவின் மூட்டயைக் கட்டி வெளியே வைக்காத குறைதான்.

“பாலாவைதான் பாக்கக் கூடாதே, அவ எப்படி ஆயா வீட்டுக்கு வருவா?”

“அவ வரலைன்னா என்ன, நான் போயிட்டு போறேன். ப்ரெக்னென்ட்டா இருக்கற பொண்ணுக்கு சமைச்சுத் தர்றதை விட ஒரு அம்மாக்கு வேற என்ன வேலை?”

“இரு, இரு. நானும் சீக்கிரமே ப்ரெக்னென்ட் ஆகி உன்னை என்ன பாடு படுத்தறேன்னு பாரு”

“அதுக்கு நீ முதல்ல கல்யாணம் செஞ்சுக்கணும்”

“அதுக்கும் இதுக்கும் என்னம்மா கனெக்ஷன்?”

“தொடப்பக்கட்ட பிஞ்சிரும்”


“சும்ம்மா, அலர்ட்டா இருக்கியான்னு செக் பண்ணினேன் மா”

திங்கள் மாலையே ஊருக்கு வந்துவிட்டாலும் நல்ல நாள், முஹுர்த்த நாள், பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்பதால், இதோ மேதாலக்ஷ்மி ஆபரண மாளிகையில் ஆஜர்.

முன்பும் இங்கு வந்தாள்தான், ஆனால், இப்போது வேலை கற்றுக்கொள்ளப் போகும் இடம் என்பதாலோ என்னவோ, நுணுக்கமாகக் கவனித்தாள்.

மேதா சென்னையில், கோவையில், பெங்களூரில், ஹைதராபாதில், லண்டனில், ஏன், ஒரு முறை துபாயில் கூட நகைக்கடைகளைப் பார்த்திருக்கிறாள். நிறைய நகைகள், ஏராளமான வகைகள், டிஸைன்கள் என தெரு முழுக்க நகைக்கடையாகக் குவிந்து கிடக்கும்தான்.

செயின் எனக் கேட்டால், ஏதோ நுடுல்ஸை அலச எடுப்பதுபோல் கொத்தாகத் தூக்கிப் போடுவர். வளையலோ, நெக்லஸோ அடை அடையாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தாலே திகட்டும்.

இங்கும் ஹெவியான நகைகள் இருந்ததுதான். ஆனால் அதில் ஒரு அழகியலும் பாரம்பரியமும் இருப்பதாகத் தோன்றியது. காலையில் கடை திறந்ததுமே கணிசமான அளவில் ஆட்கள் நிரம்பி இருக்க, வியப்புடன் சுற்றிப் பார்த்துக்கொண்டு நின்றவள்,

“புடிச்சிருக்கா?” என்ற கேள்வியில் ஜெர்க் ஆகித் திரும்ப, மிக அருகில் வந்து நின்றிருந்தான் தண்ணீர்மலை.

“வாட்?”

“இல்ல, எங்க கடையைப் புடிச்சிருக்கான்னு கேட்டேன்”

டார்க் மெரூன் நிற ஹேரம் (Harem) மற்றும் வெள்ளையில் மெரூன் போல்கா டாட் போட்ட குர்த்தியில் இருந்தவளைப் பார்த்தவனின் பார்வையும், கேள்வியும் பிடிக்காது போக,
பதில் சொல்வதைத் தவிர்த்தவள் “சிவா மாமா எங்க?”

“ஏன், நான்தான் இருக்கேனே?”

‘முதல் நாளேவாடா?’ என பல்லைக் கடித்தவள் அவனைக் கழட்டி விடுவது எப்படி என சுய கூகுள் செய்வதற்குள், நல்லவேளையாக சிவானந்தம் வந்துவிட்டான்.

“ஹாய் மேதா, வா ஆஃபீஸ் ரூமுக்குள்ள போகலாம், டேய் தம்பி, நீ போய் கல்லாவைப் பாரு. கொஞ்ச நேரத்துல நான் வரேன்” என்று தண்ணீர்மலைக்கு வேலை கொடுத்துவிட்டுக் கிளம்ப, மேதா சிறிது நிம்மதியாக உணர்ந்தாள்.

மேதாவிற்கு அந்த அலுவலக அறையில் தங்கத்தால் ஜரிகை இழைத்திருப்பதான பிரமை எழுந்தது. எளிமையான, திருத்தமான, ஆன்ட்டிக் (Antique) எனப்படும் பழமையும் மதிப்பும் மிக்க பொருட்களால் இன்டீரியர் செய்யப்பட்டிருக்க, அறையின் ஒவ்வொரு அங்குலத்திலும் பாரம்பரியம் மிளிர்ந்தது.

சக்கரை ஐயாவை அங்கு எதிர்பாராதவள், திகைத்தாள். அவருடன் கடையின் முதன்மை நிர்வாகி பார்த்தசாரதி மட்டும் இருந்தார்.

“குட்மார்னிங் சார்”

“சும்மா ஐயான்னே கூப்பிடுமா”

“சரிங்கைய்யா”


தன் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை அவரிடம் நீட்டினாள்.

“இது வேணாம், நீ வரைஞ்சு வெச்சிருக்கறதை கொடு”

‘ஓ, இது எனக்கு இன்டர்வ்யூ போல’

நிதானமாகப் புரட்டியவர் “உட்காருமா. சிவா, நீ போய் உன் வேலையப் பாரு. அப்படியே அரசுக்கு ஃபோன் போட்டு உடனே வரச்சொல்லு” எனவும், சிவானந்தன் வெளியேறினான்.

அவள் வரைந்த படங்களில் இருந்து சில கேள்விகள் கேட்டார். லண்டனில் என்ன கற்றுக் கொடுத்தார்கள், அங்கு நகை செய்யும் பட்டறை எப்படி இருக்கும், இங்கும் அங்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார்.

மேதா பதில் சொல்லும்போதே, அவர் எதிரே இருந்த கணினித் திரையை பார்த்தசாரதி சிறிது சங்கடத்தோடு சுட்டிக்காட்ட, முகம் மாறியவர் நொடியில் சமாளித்துக்கொண்டு, இன்டர்காமில் “சிவா, தம்பிகிட்ட கொஞ்சம் ஹேண்ட்மேட் கழுத்தணி கொண்டு வரச்சொல்லு” என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் கையில் நாலைந்து வெல்வெட் பெட்டிகளோடு தண்ணீர்மலை வந்தான்.

அவற்றில் இருந்த தாலிக்கொடிகள், செயின்கள், மெலிதான நெக்லஸ்களின் பெயர்களையும். அவற்றின் எடை எவ்வளவு இருக்குமென்றும் கேட்க, மேதா தனக்கு நிச்சயமாகத் தெரிந்ததை மட்டும் கூறினாள். சில கேள்விகளுக்கு பதில் தெரியாதபோது சற்றே சங்கடப்பட்டாள்.

அவர் கேள்விகள் கேட்கையில் கதவை தட்டிவிட்டுத் திறந்துகொண்டு உள்ளே வந்து நின்றான் வைரவன்.

சக்கரை ஐயா “பொண்ணு, இதுக்கு ஏன் முகம் வாடுது? இதெல்லாம் கையால செய்யற பழங்காலத்து நகைங்க. உறுதியா இருக்கும். பல நேரம் கேட்டு வாங்கறவங்களுக்கே பேர் தெரியாது. உதாரணமா இது பேர் நாயுருவிக்கொடின்னு தெரியும், ஆனா நகையைப் பார்த்தா இதுதான் அதுவான்னு தெரியாது. நீ நம்ம கடைக்கு வந்துட்டல்ல, எல்லாம் கத்துக்கலாம்” என்று சிரித்தார்.

வைரவன் அமைதியாக நிற்க, தண்ணீர்மலை, தன் தாத்தா மேதாவிடம் சமாதானமாகப் பேசி, சகஜமாக சிரிப்பதை ஒரே சமயத்தில் பரவசமாகவும், சிறிதே பொறாமையோடும் பார்த்தான்.

மேதா வேறு யார் முன்பாவது தன் அறியாமை வெளிப்பட்டிருந்தால் எப்படி உணர்ந்திருப்பாளோ தெரியாது, ஆனால் பெரியவர் முன்பு தன்னை பள்ளிச் சிறுமியாக உணர்ந்தாள்.

மேதாவிடம் “கொஞ்ச நாளைக்கு காலைல கடைக்கு வந்து ஆர்டரிங் செக்ஷன், செயின், வளையல், மோதிரம்னு எங்க கூட்டம் அதிகம் இருக்கோ அங்க இரு. கஸ்டமருக்கு என்ன புடிக்குது, எதை கேட்டு வாங்குறாங்கன்னு கவனி”

மேதா தலையசைக்க, வைரவனைக் கை காட்டியவர், மதியம் சாலைக்குப் போ. இவர் கிட்ட வேலை பழகு. அஞ்சு மணிக்கு முன்னால வீட்டுக்குப் போயிடு, சரியா பொண்ணே?”


வைரவனின் பார்வையில் இருந்த ‘இந்தப் பொண்ணுக்காகவா கடைக்கு வந்தீங்க?’ என்ற கேள்விக்கு “முருகு சிவகங்கைக்கு போயிருக்கான். இது நம்ம சிவாவோட மச்சினி. லண்டன்ல ஜுவல்லரி டிஸைனிங் படிச்சிருக்கா. நம்மகிட்ட வேலை பழக வந்திருக்கா. பாத்துக்க”

தண்ணீர்மலை தாளித்துக் கொட்டிய முகத்துடன் “நம்ம கடைல இருக்கற டிஸைனிங் கம்ப்யூட்டரை எல்லாம் விட்டுட்டு, எதுக்கு சாலைக்கு போய்…”

“கம்ப்யூட்டரைக் கண்டு புடிக்கறதுக்கு முன்னால கல்லைக் கட்டியா கழுத்துல போட்டுக்கிட்டாங்க?” என்ற பெரியவர் “நீங்க போகலாம். தம்பி, நீ இரு” என்று தணாணீர்மலையை மட்டும் நிறுத்திக்கொண்டார்.

வெளியே வந்த மேதாலக்ஷ்மி ‘நல்லவேளை அந்த ஜொள்ளு பார்ட்டியோட கோர்த்து விடாம, இவன் கூட அனுப்பினாங்களே’ என பெருமூச்சு விட, வைரவனோ,

‘அடேய் கல்பு, என்னை ஏன்டா சோதிக்கிற’ என கற்பக விநாயகரைக் கேட்டுக் காற்றை உள்ளிழுத்தான்.

*******************

மழையும் பனியும் பொழியும் நாட்களைத் தவிர, அநேகமாக ஜீவாவும் வைரவனும் தூங்குவது மொட்டை மாடியில்தான்.

ரீல்ஸில் மூழ்கி இருந்த ஜீவா, திடீரெனப் பக்கத்தில் வைரவனைக் காணாது தேட, அவன் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்றிருந்தான்.

‘மணி பதினொன்னரை. பத்து மணிக்கு மேல ரீல்ஸ் பாத்தாவே திட்டுவான். இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு?’

“அப்படி என்னத்தடா யோசிக்கிற?’ என்றபடி ஜீவா எழுந்து அருகில் செல்ல, வைரவன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருந்தான்.

ஓரிரு முறை அழைத்தும் எங்கேயோ சிந்தனையாக இருந்தவனைத் தொட்டான்.

“வைரவா, யாருடா அந்த மோகினி?”

“என்ன உளர்ற?”

“யாரு, நான் உளர்றேனா, சரிதான். ஒரு மணி நேரமா வானத்தைப் பாத்து சிரிச்சிக்கிட்டு நிக்கிற, ஏன்னு கேட்டா, நான் உளர்றேனா?”

“அந்தப் பொண்ணு, ராகவி அண்ணியோட தங்கச்சியான்டா”

“எந்தப் பொண்ணு?”

“அதான்டா, அன்னைக்கு காது குத்த சொல்லி சாலைக்கு வரல?”

“இன்னும் அதே மரமாடா, ரைட்டு, எங்க, எப்டி கண்டுபுடிச்ச?”

“அவளை பாத்துக்கச் சொல்லி எங்கிட்ட ஐயா சொன்னாருடா”

“ஹலோ பிரதர், யூடியூப் சேனல் கேப்ஷன் மாதிரி பேசாம, உண்மையைச் சொல்லு”

“அவ அழகுநாச்சில டிஸைனரா சேர்ந்திருக்கா”

“பார்றா, ம்… அப்போ இது அதுதானே ப்ரோ?”

“எதுதானே?”

சட்டென்று தீவிரமான வைரவனின் குரலில், ஜீவா அமைதியானான். விளையாட்டுத்தனமாகப் பேசினாலும், ஜீவா வாழ்க்கை புரியாதவனா என்ன?

இருவரும் படுத்துக் கொண்ட சில நிமிடங்களிலேயே ஜீவா உறங்கிவிட, ‘எதுவுமில்ல வைரவா, இனிமே ஜீவா கிட்ட எதையும் உளறக்கூடாது’ என தனக்கே சொல்லிக்கொண்ட வைரவனின் மூடிய கண்களுக்குள் “நான் இன்னும் லஞ்ச்சே சாப்பிடலையே” என்றாள் மேதா.

*******************

ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கே வீடு வந்த மேதாவுக்கு கறிவேப்பிலை, பூண்டு, மிளகு, புளி, தனியா, நல்லெண்ணெய், பெருங்காயம் எல்லாம் கல்சட்டியில் சங்கமித்துக் கொதிக்கும் மணம் முன் கோப்பு (முகப்பு) வரை வந்தது.

“ஏழு பொருட்களுக்குள் எத்தனை வாசம்…” என்று பாடியபடியே நுழைந்தவள், உள்ளே செல்லச் செல்ல மூக்கைச் சுருக்கி முசுமுசுவென மோப்பம் பிடித்தாள்.

“ம்…. வெல்ல வாசனை வருதே”

நளினி “கவுனி அரிசி அல்வாதான், ஆனா வெல்லம் போட்டு செய்யறோம்”

“செய்யறோம்னு ரெண்டு பேரும் இங்க உக்கார்ந்து இருக்கீங்க?”

“குட்டிமா, இங்க வா, அப்பா கிச்சன்ல இருக்கேன்” என்ற ராமநாதனின் குரல் அடுக்களையில் இருந்து வந்தது.

எட்டிப் பார்த்தவள் “இங்க என்ன டாடி செய்யறீங்க?”

“பாத்தா தெரியல, அல்வா கிண்டறேன். ராகவியும் மாப்பிள்ளையும் நைட் சாப்பிட வராங்க”

உற்சாகமாக “நிஜமாவாப்பா” என்றவளின் குரல் உடனே இறங்கிவிட “பாலா?”

“பார்த்துக்கலாம், அதைவிடு. உன் வேலை எப்படிப் போகுது?”

“அது எங்க போகுது, காலைல கடைல வேடிக்கை பாக்கறேன், மதியம் சாலைல வேடிக்கை பாக்கறேன். கேட்டா முதல்ல நல்லா கவனின்றாங்க”

“போஜனம், உறக்கம், கோழிச்சண்டைனு சொல்லு”

“போங்க டாடி”

“குட்டிமா, நீ என்ன நெனைச்ச, போன உடனே நகை டிஸைனிங்கை உன் கைல கொடுத்துடுவாங்கன்னா?”

“தம்பி, நெய் மிதந்து வருதா, இன்னுமா கிளறி முடிக்கல?” என்றபடி வந்தார் ஆயா.

“ஆச்சுக்கா”

மேதா “ஆயா, மாப்பிள்ளைன்னு கொஞ்சமாவது மரியாதை இருந்தா, எங்கப்பாவை அல்வா கிண்ட விடுவீங்களா?”

"உங்கப்பன் எந்தம்பியாக்கும்"

அவர்கள் பரபரப்பாக சமையலில் ஈடுபட, மேதா ஒரு தூக்கம் போட்டு எழுந்தபோது, இருட்டி இருக்க, ஆயாவும் பாலாவும் வீட்டில் இல்லை. பெற்றோரிடம் கேட்பதற்குள், வாசலில் கார் வந்து நிற்க, ராகவியும் சிவானந்தனும் வந்தனர்.

பாலகுமார், இவர்களோடு இருந்தாலுமே பெரிதாக எதுவும் பேசப்போவது இல்லைதான். ஆனாலும், அவனை ஒதுக்கி வைத்துத் தாங்கள் மட்டும் தனியே கலகலப்பதை ஏற்க முடியாது, முதலில் பட்டும் படாமலும் பேசிய மேதா, பிறகு சகஜமானாள்.

ராமநாதனும் சிவானந்தனும் பேசிக்கொண்டிருக்க, பெண்கள் தனியே வந்தனர்.

ராகவியின் பேச்சிலிருந்து அவளது புகுந்த வீட்டு மனிதர்கள் குறித்த தன் கண்ணோட்டமும் அக்காவின் மதிப்பீடுகளும் முற்றிலும் வேறு என மேதாவிற்குப் புரிந்தது.

நெடு நேரத்துக்குப் பின் ராகவி “ஆயாவும் பாலாவும் வெளில போய்ட்டாங்களா, ஆயாவைப் பாத்தே ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு” என படு இயல்பாகச் சொன்னதிலேயே, பாலாவை வெளியேற்றியதில் அவளுக்கும் சம்மதம்தான் என்பது புரிந்த மேதாவால் அதை நம்ப முடியவில்லை.

தாள முடியாது “நீ பாலாவைப் பாத்து எத்தனை மாசமாச்சு ராகா?”

தங்கையின் குற்றம் சாட்டும் குரலில் “அவன் எனக்கும் தம்பிதான். என் நிலமைல நீ இருந்தா உனக்குப் புரியும்”

“என்ன பெரிய நிலமை, உனக்கு உன் தம்பி முக்கியம்னு, உன் பக்கத்தை உங்க வீட்டு ஆளுங்க கிட்ட நீதான் திடமா பேசணும். சரி, நேரடியா பெரியவங்க கிட்ட பேச முடியாதுன்னே வை, மாமா கிட்ட கூடவா சொல்லமுடியாது?”

“நான் மாமாகிட்ட பேசலைன்னு நீ கண்டயா? அநாவசியமா அவரைப் பத்திப் பேசாத”

“ராகா”

“ஏன் சொல்லணும் மேதா? பாலா இப்படி இருக்கறதுக்கு அம்மா சாப்பிட்ட மருந்தைத் தவிரவும் வேற காரணங்கள் கூட இருக்கலாம் இல்லையா? அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே சொந்தம் வேற…”

தன் பதின் பருவத்திலிருந்து தாய்மாமா ராமநாதனை விரும்பித் திருமணம் செய்து கொண்டு, தான் செய்த தவறால் தன் குழந்தையின் வாழ்வோடு கூடவே தங்கள் வாழ்க்கையையும் சிக்கலுக்கும் சிரமத்திற்கும் உள்ளாக்கிய குற்றவுணர்வும் ரணமும் மகளாலேயே மீண்டும் இடறப்பட்டதில் நளினி சிதறி அழதாள்.

மேதா “அம்மா, ஸாரிம்மா, எல்லாம் என்னாலதான்… அழாதம்மா”

ராகவி “,யார் இல்லைன்னா, அம்மா மருந்து சாப்பிட்டதே உன்னாலதான். சொல்லப்போனா, பாலாவோட பிரச்சனைக்கு நீயும் ஒரு காரணம். ச்சே, அம்மா கையால சாப்பிட்டு போலாம்னு சந்தோஷமா வந்தேன்…”

கண்களைத் துடைத்துக்கொண்ட நளினி “அவ கிடக்காடீ, மணி எட்டாகுது பாரு, புள்ளைதாச்சிப் பொண்ணு நேரத்தோட சாப்பிடணும், நீ வா” என்று ராகவியுடன் வெளியேறினாள்.

சடாரென அம்மா கூடத் தன்னைத் தள்ளி நிறுத்தியது போல் உணர்ந்த மேதா அசையாது அமர்ந்திருந்தாள். அழுகை வரவில்லை, மனம் அழுந்திக் கிடந்தது.

‘பாலா மேல இவ்வளவு பயமும் அருவருப்பும் aversion ம் இருக்கறதுக்காகவே இவ குழந்தை….’ என்று மனம் சாத்தானாக மாறியதில் பயந்துபோன மேதா அமைதியாகத் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

தனக்கென்று வரும்போது தானும் ராகவிபோல் மாறி விடுவோமோ என்ற கேள்வி எழ, பேசாமல் ஆச்சிக்கு பதில் பாலாவுடன் தானே சென்றிருக்கலாம் என்று தோன்றியது.

மகள், மருமகனோடு கணவருக்கும் இலைபோட்டு, பருப்புப் பாயசத்தில் தொடங்கி, வெங்காய பச்சடி, ஆப்பம், தேங்காய்பால், சப்பாத்தி, காலிஃப்ளவர், பட்டாணி குருமா, தக்காளி பிரியாணி, கல்கண்டு வடை, என்று பரிமாறிய நளினி மேதாவை பரிமாறவோ, சாப்பிடவோ கூட அழைக்கவில்லை.

சாப்பிட அழைக்கும்போதே மனைவியின் அழுது சிவந்திருந்த விழிகளையும்
முகம் கழுவியதில் நனைந்திருந்த ஈரப் புடவையையும் கண்டாலும் ராமநாதன் அப்போதைக்கு எதையும் கேட்கவில்லை.

சிவானந்தன் “கடை பிடிச்சிருக்கா மேதா? லண்டன்ல நீ பார்த்த ஜுவல்லரி வொர்க் ஷாப்புக்கும் நம்ம சாலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்ல?” என்று மேதாவிடம் பேச்சுக் கொடுத்தான்.

“டிஸைனும் வேலைப்பாடும் அங்க விட இங்க ரொம்ப நுணுக்கமா இருக்கு மாமா. நிறைய கத்துக்கணும்”

“வைரவன் கூடதானே இருக்க, அவன் சொல்லித் தருவான். அவன் வரையறதைப் பாத்தா ஒரிஜினல் நகையை ஃபோட்டோ எடுத்த மாதிரி, யார் வேணா நகை செய்யலாம் போல இருக்கும்”

மேதா ஆமோதித்தாள். ஞாயிறன்று சாலை விடுமுறை, ஆனால் கடை உண்டு. முன்பெல்லாம் செவ்வாயன்று கடை விடுமுறையாக இருந்தது. இப்போது போட்டியும் தேவையும் பெருகி, மக்களின் நேரம் அருகியதில் ஏழு நாளும் கடை உண்டு.

செவ்வாயன்று கூட்டம் சற்றுக் குறைவு என்பதால் கடைக்கு வந்து நகைகளைத் தேர்வு செய்து, எடுத்து வைக்கச் சொல்லி, மறுநாள் பணம் கொடுத்து வாங்குவோரும் உண்டு.

பணம் இருப்பதைப் பொறுத்து மக்களின் நம்பிக்கைகளும் மாறுகிறதல்லவா?

இன்று சாலை விடுமுறை ஆதலால் வைரவனைப் பார்க்கவில்லை. சிவானந்தன் அவனைப் பாராட்டியதில் காரணமே இல்லாது மேதா மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

“கடை எடுத்து வைக்கப் போகணும், நாங்க புறப்படறோம்” என்றான் சிவானந்தன். கடையை மூடுவது ஒன்பது மணி என்றால், உள்ளே இருக்கும் வாடிக்கையாளர்கள் வியாபாரம் முடித்து வெளியே செல்ல பத்து மணிவரை ஆகலாம். அதன் பிறகு நகைகளைக் கணக்கிட்டு, பத்திரப்படுத்தி, கேஷ் கவுன்டரை, கம்ப்யூட்டரை, கார்ட் மெஷினை க்ளோஸ் செய்து, பந்தோபஸ்து செய்த பின் கிளம்ப வேண்டும். திருமணம், தீபாவளி, பொங்கல், சீஸன்களில் இரவு பன்னிரெண்டு, பன்னிரெண்டரை கூட ஆகும்.

பட்டுப்புடவையும், பேன்ட் ஷர்ட்டும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்தனர்.

போன முறையே “ராகவியை கூட்டிட்டுப்போய் அஞ்சாம் மாசம் முடியறதுக்குள்ள மருந்து கொடுக்கணும் ” என நளினி, ராகவியின் மாமியாரிடம் கேட்டதற்கு “அதெல்லாம் நாங்களே செய்வோம்” என்றுவிட்டார்.

ராகவிக்கென தயாரித்த மிளகு குழம்பு, கவுனியரிசி அல்வா, மாங்காய் துவட்டல், அச்சு முறுக்கு என டப்பாக்கள் அடங்கிய பைகளை சிவானந்தனின் காரில் ஏற்றச் சென்றார் ராமநாதன்.

“மேதா, அந்த வைரவன் கிட்ட வேலை கத்துக்கறன்னு எங்கிட்ட நீ ஏன் சொல்லலை, சரியான திமிர் பிடிச்சவன். உன்னை யார் அவனோட கோர்த்து விட்டது, அவங்கிட்ட அளவோட பழகு” என்றாள் ராகவி.

மேதாவின் “சக்கரை ஐயா” என்ற பதிலில் ராகவி அமைதியாகப் புறப்பட்டாள்.

உள்ளே வந்த ராமநாதன் “நல்லி…” என்றதுதான் தாமதம், நளினி கரகரவென அழத்தொடங்கினாள்.

“என்னம்மா, மேதா என்னாச்சு?”

நடந்ததைச் சொன்ன மேதா “ராகா இப்படிப் பேசினது ரொம்பக் கஷ்டமா இருக்கு டேடி. நானும் அப்படி ஆயிடுவேனோன்னு பயமா இருக்கு”

“சேச்சே, ராகாவோட சூழலும் அவங்க பார்வையும் சேர்ந்ததால அப்படிப் பேசறா. ப்ரெக்னென்ஸில மூட் ஸ்விங்க்ஸ், தேவை இல்லாத பயம் எல்லாம் வரும்தானே டா? எல்லாரும் அப்படியேவா இருப்பாங்க?”

மகளின் தோளில் தட்டியவர், அவள் எதிரிலேயே மனைவியின் கலங்கிய கண்களைத் துடைத்தார்.

“விடும்மா, இது நமக்கு புதுசா என்ன?”

“இல்ல மாமா, ராகாவே …”

“போதும், ரெண்டு பேரும் வாங்க, சாப்பாடு போடறேன்” என்று அழைத்துச் சென்றார்.

ராமநாதன் வீட்டுக்கு வரச்சொல்லி அக்காவின் அலைபேசிக்கு அழைக்க, அது தேங்காய் கூடைக்கருகில் கிடந்தது. அதில் இருந்த துணைக்குச் சென்றிருந்த பணிப்பெண்ணின் செல்லுக்கு அழைக்க, தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றது குரல்.

மணி பத்தரையை நெருங்கியும் யாரையும் காணாது போக, தன் காருக்கு கால் டிரைவர் போடுகிறேன் என்ற ராமநாதனை மறுத்து, தெரிந்த கேபில் போகிறேன் என்ற அக்காவின் பேச்சைக் கேட்டதற்குத் தன்னையே நொந்து கொண்டார்.

அக்காவின் வயது ஒரு பக்கம், பாலா இன்னொரு பக்கம். நான்கு மணிநேரம் பாலாவை வெளியில் சமாளிப்பது எளிதல்ல என்று அவருக்குத் தெரியும்.

அக்கா “போறது போறோம், பிள்ளையார்பட்டி கோவிலுக்குப் போய்ட்டு வரோம்” என்றிருந்ததால் “நான் போய் பாத்துட்டு வரேன்” என்று கார் சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு வாசலுக்குச் சென்றார்.

மேதா “நானும் வரேன் டேடி”

“நீ அம்மா கூட இரு, ஐ கேன் மேனேஜ்”

*****************

வைரவனின் அக்கா மீனாக்ஷி தன் மூன்று வயது மகளுடன் வந்திருந்தாள். ஈரெட்டாக நாள் தள்ளி இருக்க, காலையில்தான் இரண்டாவது குழந்தை உண்டாகி இருப்பதை உறுதி செய்தனர்.

அவளது புகுந்த வீட்டில் மதுரையில் சுங்குடி, செட்டிநாடு காட்டன் புடவைகளைத் தயாரிக்கும் தறி வைத்திருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை சாலை விடுமுறை என்பதால், பிள்ளையார்பட்டிக்குப் போகவேண்டும் என மீனாக்ஷி கூற, வைரவன் டாக்ஸி புக் செய்தான்.

மீனாக்ஷி, ஸ்வர்ணலதா, குழந்தை மூவரும் ஜீவாவுடன் டாக்ஸியில் செல்ல, வைரவன் “ஃப்ரீயா போங்க, பக்கம்தானே” என்று தன் பைக்கில் பின் தொடர்ந்தான்.

ஐந்து மணிபோல் கிளம்பி, நிதானமாகத் தரிஸனம் செய்து, வெளியில் குளத்தருகே அமர்ந்து காற்று வாங்கி, டீ குடித்து, பலூன், பொம்மை என குழந்தை கேட்டதனைத்தும் வாங்கி, வீடு திரும்ப வண்டியில் ஏறி, சிறிது தூரம் வரும்போது, அவர்களுக்கு சற்று முன்னே சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் டிரைவர் சீட்டின் கதவில் பைக் ஒன்று மோதியதில் கண்ணாடி தெறித்தது.

டிரைவர் சாமர்த்தியமாகக் காரை நிறுத்தி இட்டார். பைக் இளைஞர்களும் பதறியபடி வந்து மன்னிப்புக் கோரினர். யாருக்கும் அடி படவில்லை. ஆனால் அதிர்ச்சியில் இருந்தனர்.

வைரவன் காரில் இருந்து இறங்கிவர்களுக்கு அருகில் சென்று பைக்கை நிறுத்தினான்.

அந்த முதிய பெண்மணி பதட்டத்தில் படபடக்க, அதில் இருந்த பையன், பார்த்தாலே சற்று மந்தமாகத் தெரிந்தான் பணிப்பெண்ணாக இருக்க வேண்டும், அவளுக்கு அடங்காது மிரண்டு திமிறினான். சற்று அழுகை கலந்து அவன் பேசியது புரியவில்லை.

“ஆச்சி, எங்க போகணும்?”

“காரக்குடிக்குதான்” என்றவர் விலாசத்தைச் சொனனார். ஜீவாவுக்கு கால் செய்து திரும்பி வரச் சொன்னவன், லதாவைத் தன்னுடன் பைக்கில் வரச் சொல்லி, மற்ற மூவரையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யச் சொல்லி ஏற்றி விட்டான்.

அவர்கள் வீடு முதலில் வந்துவிட மீனாக்ஷி, ஜீவா, குழந்தை இறங்கிக் கொண்டனர். எல்லோருக்குமே அவர்களை எங்கோ பார்த்தது போல் இருந்தது, ஆனால் நினைவுக்கு வரவில்லை.

ஆச்சி சொன்ன விலாசத்தில் இறக்கி விட்டவன், பதட்டத்துடன் வாசலில் நின்ற மேதாவைப் பார்த்துத் திகைத்தான். நொடியில் அந்தப் பையன் யார் என்று புரிந்தது.

நன்றி சொல்லி, கிளம்பிச் சென்ற தந்தையைத் திரும்ப அழைத்து, இவர்தான் வைரவன் என அறிமுகம் செய்து, அவரும் அவனைப் பார்த்திருப்பதாகச் சொல்லி, மீண்டும் நன்றி தெரிவித்தார்.

சென்றவர்கள் பத்திரமாகத் திரும்பி வந்ததும், வைரவனுடன் நின்றிருந்த பெண்ணை மேலும் கீழும் பார்த்த மேதாவின் பார்வையில், வைரவன் “என் தங்கை, ஸ்வர்ணலதா” என,
மேதா கீற்றாகப் புன்னகைத்தாள்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Kokila Balraj

New member
Joined
Jun 19, 2024
Messages
6
பாலாவை வேறாக பார்க்காதவனும், பத்திரமாக இருப்பிடம் சேர்த்தவனுமாக மேதாவின் மனதில் பதிவானோ...
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சூப்பர்👌👌👌, : மாறிட்டாளா இல்லை மாமியார் வீட்டுக்காக அப்படி பேசறாளா?
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
பிரச்சினை பாதி பரபரப்பு பாதி
கலந்து செய்த கலவை தான்

ராகா பிரச்சினை
பாலா பரபரப்பு
எவ்விதம் தீரும் என்றே கேள்விகள் தான்

அடுத்த அப்டேட்டுக்காக காத்திருப்போம்
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் அம்மா 💚🩵💚🩵💚அடட டா அதுக்குள்ளே மேதாவுக்கு வைரவன் கூட இருக்க பொண்ணு யாருனு ஆராய்ச்சி பார்வை 😃😃😃😃😃😃
 

SaiSakthi

New member
Joined
Jun 20, 2024
Messages
25
ராகவி ... கருத்தரித்தால் ஆளே மாறிடுவாங்களா ‼️❓🧐😏 ( தாயைப் பற்றி , தமையனைப் பற்றி இப்படி யோசிக்க) 😡😡

அருமையான பதிவு... ❤️
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
ராகா நடந்ததை பேசி ஒன்னும் ஆக போறது இல்ல ஆனா உன்னோட தம்பியை நீயே விளக்கி வச்ச அப்புறம் அவனை யாரு பாக்குறது...
அப்படி என்னமா உனக்கு வைரவன் மேல கோவம் உன் தங்கை கிட்ட அப்படி சொல்லுற...
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
மூட் ஸ்விங் வந்தால் பாசமும் மாறி விடுமா என்ன.
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
மூட் ஸ்விங் வந்தால் பாசமும் மாறி விடுமா என்ன.
குடும்பத்தில் ஒரு ஸ்பஷல் சைல்ட் இருக்கும்போது, மூட்ஸ்விங் இல்லாமலே பயம் வரும் மா.
 
Top Bottom