• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 26 - FINALE AND EPILOGUE

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 26


பை
க்கை நிறுத்திவிட்டு, நடை சாற்றும் முன் புள்ளுச்சாமியைக் கண்டு விடும் அவசரத்தில் முன்னே சென்ற வைரவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது மேதா திணறினாள்.

வீட்டில் நடந்த களேபரத்தில், விசிறி விட்ட வார்த்தைகளும், உரித்துக் காட்டிய உணர்வுகளும் நிசப்தத்திலும் உரத்துக் கேட்க, பேசியவரை போதும் என்பதுபோல் இருவரிடமும் மௌனம் மட்டுமே.

ஆம், அது மௌனம்தானே தவிர, அமைதி இல்லை. ஏனெனில், மௌனமும் அமைதியும் வெவ்வேறல்லவா?

தான் சொன்னதில் ஒரு வார்த்தை என்ன, ஒரு எழுத்து கூடத் தவறில்லை என்றாலும், தன் மௌனத்தை உடைத்ததே கணவனுக்காகத்தான் எனினும், அவனை மீறி பேசிவிட்டோமோ, தன்மீது கோபமோ, தன்னிடம் அதனால்தான் அவன் பேசவில்லையோ எனக் குழம்பிய மேதா, கற்பனைக் கழுதையில் ஏறி காரைக்குடியைச் சுற்றிவந்தாள்.

வைரவனின் மனமெங்கும் தீபாவளி முடிந்த சாலை போல் சொற்களும் சுயரூபமும் இறைந்து கிடக்க, ஒரே கயாமியாவாக இருந்தது.

நேரத்தைக் கூடப் பார்க்காமல், மேதாவையும் கிளப்பி, அசுர வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு, நேரே இங்கே வந்துவிட்டான்.

கண்ணைவிட்டுக் கீற்றாக கல்பு மறையும் வரை நின்றவன், ஓரடி, அரையடி நீளச் சாவிகளுடன் கோவில் நிர்வாகியும் அர்ச்சகர்களும் வெளியே வந்து “தம்பி, நடை அடைக்கணும்ப்பா” என வெளியேறச் சொல்லும் வரை நின்றுவிட்டு வெளியே வந்தனர்.

இன்று மிக எளிமையான கோலத்தில் இருந்த, ஆறடி உயர ஆகர்ஷிக்கும் பிள்ளையாரைப் பார்த்ததில், ஏதோ ஒரு சமாதானம், இனி எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை, என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் மனதுக்குள் பரவியது.

நமக்குத் தேவையான திடத்தை, தைரியத்தை, நம்பிக்கையை, வீரத்தைக் கொடுக்கும் சக்தியின் உருவம்தானே கடவுள்?

மூடிய கதவின் முன் கண்மூடி நின்றவனின் மனதில் வந்து நின்ற களிறு சிரிப்பது போல் இருக்க, ஒரு நொடி அதிர்ந்தான்.

‘கல்பு’ என்றவனுக்கு அதற்கு மேல் எதுவும் தோன்றவில்லை.

‘உனக்குத் தெரியாத எதை நான் பெரிசா சொல்லப் போறேன், அடுத்த வாரம் பாக்கலாம், பை கல்பு’ என்றான் நண்பனிடம் போல்.

இருவரும் காலையில் சாப்பிட்டது. பசித்தது. ஃபிப்ரவரியிலேயே வெயில் தகித்தது, தாகித்தது. ஆளுக்கொரு இளநீர் வாங்கிப் பருகினர்.

மேதாவிற்கு, பைக்கில் வரும்போது ‘ஐயோ, குழந்தை பிறந்தா விருத்தி தீட்டு, கோவிலுக்குப் போகக் கூடாதுன்னு ஆன்ட்டி சொன்னாங்களே?’ என்ற நினைவு வர, இப்போது அதைக் கேட்டால் கும்மி விடுவான் என்பதால், பிள்ளையாரிடமே மன்னிப்புக் கேட்டாள்.

‘இவங்களே சட்டம் போட்டு, இவங்களே மீறிட்டு, மன்னிப்பை மட்டும் எங்கிட்ட கேட்கறதே இவங்களுக்குப் பொழப்பா போச்சு’ என அலுத்துக்கொண்டே மன்னித்தார் ஐய்ங்கரன்!

ஞாயிற்றுக்கிழமை என்பதால், நல்லவேளையாக சாலை விடுமுறை. வீடு வந்து, மேதா வாசல் கதவைத் தாழிட்டு வருவதற்குள் கோவிலில் இருந்து வந்தால், ஒரு கணமேனும் உட்கார்ந்த பின்புதான் கால் கழுவ வேண்டும் என்பதை அந்த டென்ஷனிலும் கடைபிடித்து, பின்பக்கம் சென்று வந்தவன், மின்விசிறிக்கு நேர் கீழே ஒரு குஷனைப் போட்டு, வெறும் தரையில் படுத்துவிட்டான்.

கசகசவென இருந்ததில், மினி குளியல் போட்டு, சிவப்பு நிற அஜ்ரக் ப்ரின்ட் ஸ்கர்ட்டும் கருப்பு டீ ஷர்ட்டும் அணிந்து வந்தவள், வைரவனின் அருகே அமரப்போக, கண்ணைத் திறக்காமல் “தரை ஜில்லுனு இருக்கு, சோஃபால படு” என்றான். இருவருமே பசித்திருந்தாலும், விழித்திருக்காது உறங்கி விட்டனர்.

மேதாலக்ஷ்மி தூக்கம் கலைந்து எழுகையில், நேரம் மாலை ஆறு மணி. சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, சமையலறையின் விளக்கும் பூஜையறையின் ஜீரோவாட் பல்பும், குத்துவிளக்கும் கீற்றாக வெளிச்சம் தர, தனது தூக்கம் கலையக் கூடாதென, வைரவன் இரண்டு கதவுகளையும் ஒருக்களித்து சார்த்தி இருந்ததைக் கண்டு புன்னகையுடன் எழுந்து அவளது அறைக்குள் சென்றாள்.

சத்தம் போடாமல் அடுக்களைக்குச் செல்ல, ஒரு அடுப்பில் பாலும், மற்றொன்றில் டீயும் காய, அதையே பார்த்திருந்தவனைப் பின்னிருந்து அணைத்து, மொத்தமாக அவன் முதுகில் சாய்ந்தாள்.

“ராஸ்ஸ்ஸூ…”

‘...”

“எங்கூட பேச மாட்டியா?”

“...”

“நான் அங்க பேசினது பிடிக்கலையா வைரூ, எம்மேல கோபமா இருக்…?”

அழைப்பு மணி ஒலிக்க “போய் கதவைத் திற”

“...”

மீண்டும் கதவு தட்டப்பட, நிலாவுடன் ஜீவா நின்றிருந்தான்.

“நிலா குட்டீ, வா வா வா, ராசு, ஜீவா”

வைரவன் மூவருக்கும் டீயுடன் வந்தான். அவனைக் கண்டதுமே, மடியில் ஏறிக்கொண்டாள் நிலா.

“தங்கம் எங்க வந்தீங்க, பால் குடிக்கிறீங்களா?”

“ம்ஹூம், டீ”

“குட்டிப் பொண்ணெல்லாம் டீ குடிப்பாங்களா, ஜீவா, நீ இங்க வர்றது வீட்ல தெரியுமா, நிலாவோட வந்திருக்க?”

நிலா தெளிவாக “வைரன் மாமா வேணும் நாதான் சொன்னே”

“என் பட்டுத் தங்கம், மாமாவைப் பாக்க வந்தீங்களா, நாம பைக்ல ரவுண்டு போலாமா, நிலா குட்டிக்கு…”

வைரவனின் முழங்கையில் சுரண்டிய மேதா, கையில் தேநீருடன் அமைதியாக வேடிக்கை பார்த்த ஜீவாவைக் கண் காட்டினாள்.

வைரவன் “சொல்லுடா”

“...”

“வீட்ல ஏதாவது பிரச்சனையா ஜீவா?”

“இன்னுமா?” என்றவனின் பாவத்தில், மேதா சத்தமாகச் சிரிக்க, வைரவன் முறைத்தான்.

“...”

ஜீவாவின் இயல்புக்கு மாறான அமைதியும் அவனது உடல்மொழியும் உறுத்த, வைரவன் “என்னடா ஜீவா, என்ன சொல்லணும் உனக்கு?”

“...”

மேதா “சீக்ரெட்னா நான் வேணா போயிடவா?”

“நீங்க இருந்தா பரவாயில்ல அண்ணி”

“...”

“பேசணும்னுதானே வந்த, அப்புறமென்ன?”

“அது.. வைரவா… அது…”

“மதியம் சாப்பிடல, கொலப்பசில இருக்கேன். இனிமேதான் சமைக்கணும். வெறியேத்தாம, சீக்கிரமா சொல்லு”

“ஒன்னுமில்லடா, நிலா, நாம வீட்டுக்குப் போவோமா?”

“அறைஞ்சேன்னா தெரியுமா, சொல்லுடான்னா வீட்டுக்குப் போறானாம், இது வீடில்லயா?”

நிலா மிரட்சியாய்ப் பார்க்க, மேதா “அவன் கிட்ட ஏன் கோபத்தைக் காட்டற, நீ வா நிலாகுட்டி” என்றவள் “நாம மேகி செய்யலாமா?” எனக் கேட்டபடி அடுக்களைக்கு அழைத்துச் சென்றாள்.

மேதா பத்து நிமிடத்தில் ஒரு ஃபேமிலி பேக் மேகியை வெங்காயம், தக்காளி போட்டு செய்து முடிக்கும் முன் மீண்டும் கதவு தட்டப்பட்டது.

கதவைத் திறந்த வைரவன் திகைப்புடன் உள்ளே வர, பின்னால் வந்த பெண்ணைக் கண்டு, ட்ரேயில் கிண்ணங்களுடன் வெளியே வந்த மேதா “யாரு ராசு?”

தயங்கியபடி வந்தவளைப் பார்த்து மேதா யாரென்று முழிக்க, அந்தப் பெண்ணிடம் மிக மிக மெலிதாகத் தலையசைத்த ஜீவா “அண்ணி, இது சீதா, மங்கா அக்காவோட பொண்ணு” என்றவனைக் கூர்ந்தான் வைரவன்.

குறுகுறுவென மூவரையும் மாறி மாறிப் பார்த்த மேதாவை “அத்த, மேகி” என உலுக்கினாள் நிலா.

“இதோ” என்றவள், உள்ளே சென்று இன்னொரு கிண்ணம் எடுத்து வந்து, சீதாவுக்கும் பகிர்ந்து “ப்ளீஸ், எல்லாரும் எடுத்துக்கோங்க, ஆறிடும்” என்றபடி நிலாவிற்கு ஊட்டத் தொடங்கினாள்.

தன் அனுமானங்களை ஒதுக்கிய வைரவன் “என்ன சீதா, காலேஜ் லீவா, என்னைப் பார்க்கவா வந்த, இந்த வீடு எப்படித் தெரியும்?”

சீதா “மாமா…” என, மேதா வைரவனைப் பார்த்த பார்வையில் அவன் தன் முகத்தின் தீவிரம் குறையாது காட்டிக்கொள்ள சிரமப்பட்டான்.

ஜீவா “வைரவா, நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். நீதான் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணும்” என்றான் மனப்பாடப் பகுதியை ஒப்பிப்பதைப் போல்.

“லவ்வ்வா, இதெப்போ?”

ஜீவா “ஸ்கூல் படிக்கறதுல இருந்தே…”

வைரவன் “அடப்பாவி, ஸ்கூல் படிக்கும்போது லவ்வா கேக்குது லவ்வு” என ஜீவாவின் தோளில் ஓங்கி , ஓங்கி அடிக்க,

சீதா, நிலா இருவருமே “வேணாம் மாமா, ஜீவா மாமாவை அடிக்க வேணாம் மாமா” என்றனர்.

“இவன் சொல்றது நிஜமா சீதா?”

“ஆமாம் மாமா”

“என்ன ஆமாம் மாமா, ஓமாம் மாமான்னு.. மொதல்ல இந்த நேரத்துல நீ இங்க வந்தது உங்கம்மாக்கு தெரிஞ்சாலே உயிரை விட்டுடுவாங்க. அது தெரியுமா உனக்கு”

”வைரவா, ப்ளீஸ்…”

“என்னடா ப்ளீஸ், ரெண்டு பேரும் இன்னும் படிப்பையே முடிக்கலை. வேலை கிடைச்சாலும், அங்க போய் செட்டில் ஆகி, ஊர் பழகி…”

“வைரவா, அவங்கம்மா அவங்கப்பா வழில ஒரு அத்தை பையனை புடிச்சிருக்காங்க. நீதான்டா எப்படியாவது…”

“என்ன, விளையாடுறியா ஜீவா, நீ கல்யாணம் பண்ணி வைன்ன உடனே வெக்கறதுக்கு நான் என்ன ஐயரா இல்ல ரெஜிஸ்ட்ராரா? நடுவுல அப்பா, அம்மா, உங்கப்பா, ஐயா, ஆச்சி, மங்கா அக்கான்னு எத்தனை பேர் இருக்காங்கன்னு கொஞ்சமாச்சும் ஐடியா இருக்காடா உனக்கு?”

சீதா அழத் தொடங்க, ஜீவா தவிக்க, மேதாவும் வைரவனும் ஸ்தம்பித்து நின்றனர்.

ஜீவா “நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்ட மாதிரி…”

“அதான் நடக்கற சண்டையை பார்க்கறல்ல, இன்…” மனைவியின் பார்வையில் பேச்சு தானாக நிற்க,

“சீதா, நீ முதல்ல கிளம்பி வீட்டுக்குப் போ. என்ன செய்யலாம்னு யோசிப்போம்”

சீதா ஜீவாவைப் பார்க்க, மேதா “இருங்க, ஆட்டோவை கூப்பிடறேன்”

சீதாவை ஏற்றி அனுப்பிவிட்டு வந்த ஜீவாவிற்கு லக்ஷார்ச்சனை தொடங்கியது.

இறுதியில் வைரவன் “என் கூடவே இருந்து, நல்லவனாட்டமே பேசி, வருஷக்கணக்கா திருட்டுவேலை பார்த்திருக்க, எப்புட்றா ஜீவா? ஒரு நாலு மாசம் கூட எனக்குத் தாங்கல” எனவும், ஜீவா வெடித்துச் சிரிக்க, மேதா உள்ளே ஓடி விட்டாள்.

ஜீவா புறப்பட, வைரவன் “இருடா, மாவு இருக்கு. இட்லி ஊத்தி தரேன். எடுத்துட்டுப் போ”

“வைரவா…”

“விடு ஜீவா, எல்லாம் சரியாயிடும்”

தன்னை ஆதரித்து, தன் பிள்ளைகளுக்குச் சமமாக வளர்த்தவர்களைக் குறை சொல்ல முடியாது, பிடிக்காது, தனக்காக வருந்திய ஜீவாவை வைரவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

இருந்த மாவை இட்லி உற்றி, தக்காளி சட்னியுடன் கொடுத்து அனுப்பினான். போகவே மனசில்லாத நிலாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான் ஜீவா.

உணவுக்குப் பின் மேதா அவள் தந்தையுடன் அலைபேசிக் கொண்டிருக்க, வைரவன் மாடிக்குச் சென்றுவிட்டான்.

விடிவிளக்கின் வெளிச்சத்தில் மேலே செல்லத் தயங்கி, குழப்பத்துடன் அமர்ந்து இருந்தவளுக்கு கணவனிடமிருந்து மிஸ்ட் கால் வரவும், மேலே சென்றாள்.
அதிசயமாக, ஏசி போட்டு வைத்திருந்தான்.


“???”

“என் மேல கோபமா ராசு, நான் பேசினது தப்புன்…”

மேதாவின் இதழில் வலியப் பதிந்து விலகியவன்

“நீ மட்டும் பேசலைன்னா, என்னால என்னைக்குமே பேசி இருக்க முடியாது மோகி. ஒண்ணு பட்டுனு கோபப்பட்டுப் பேசி இருப்பேன். இல்லன்னா, அன்னைக்கு மாதிரி வேகமா முடிவெடுத்து வெளில வந்திருப்பேன். கைல காசு இருந்தா எதுவும் பேசாம குடுத்திருப்பேன்”

“...”

“படிப்பை விடறதுன்னு முடிவு செஞ்ச பிறகு, முதல்ல வருத்தமா இருந்தாலும் சீக்கிரமே சரியாயிட்டேன். இப்பவும் நான் தியாகியெல்லாம் இல்லை. எத்தனையோ பொண்ணுங்க கூட பொறுப்பை எடுத்து செய்யறாங்க. ஆனா…”

“ரிலாக்ஸ் ராசு”

இரண்டு தலையணைகளை வைத்துச் சாய்ந்திருந்தவனின் தோளை, ஆர்ம்லெட்டை வருடினாள்.

“இருந்தாலும் அம்மா இப்படி பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலைடீ”

எல்லா அம்மாக்களையும் போல் என் அம்மா இல்லை. என் அம்மா ஸ்பெஷல் , என்னைப் புரிந்து கொண்டவள், என் சந்தோஷமே, அவளது லட்சியம். என் ஆசைகளே அவளது ஆதர்ஸம், என் கனவுகளே அவளது விருப்பம் எனத் தனக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவளாக, அதீத நம்பிக்கையுடன் தன் தாயைப் புரிந்து வைத்திருக்கும் ஒவ்வொரு மகனும், தோற்றுப் போகும் இடம் ஒன்று உண்டு. அதைத்தான் வைரவனால் தாங்க முடியவில்லை.

உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக, வசதியும் வளமையும் நிறைந்து வாழும் அம்மாக்களே, மகனுக்கென ஒருத்தி வந்ததும் தடுமாறும்போது, வள்ளியம்மையின் நிலையில் அவர் பேசியதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான்.

ஆயின், புத்திக்குப் புரிவதெல்லாம் மனதுக்குப் புரிவதில்லையே…

மதியம் வைரவனின் வீட்டில்…

வள்ளியம்மை “சாலை திறக்க மாமா(ஐயா), மாப்பிள்ளை(நந்தகுமார்) எல்லாம் குடுத்த பணம் என்னாச்சு?”

“பணமில்லாமலா மும்பைக்கு போய் படிக்கப் போனீக?”

“...ம்மாஆ…, பணம்…” எனத் தொடங்கிய கணவனை மேதா இடையிட்டாள்.

“நான் சொல்றேன், ஆன்ட்டீ, படிக்கப் போனது என் பணத்துல”

“வைரவா, இதென்ன…?”

“நான்தான் சொல்றேன்ல ஆன்ட்டீ, , அவர்கிட்ட இருந்த பணத்தை வெச்சுதான் ஆன்லைன் பிஸினஸ் தொடங்கினோம்.
பிறகு மிச்சப் பணத்தோட, ஆன்லைன் ஆர்டருக்கு வந்த பணத்தையும் போட்டு அண்ணிக்கு வளையல் செஞ்சாச்சு. நான் அழகுநாச்சில வாங்கின சம்பளம் எங்கிட்டதான் இருந்தது. அதுல இருந்துதான் படிச்சோம், சாலைக்கு தங்கத்தை உருக்கற மெஷினும் மத்த சாமான்களும் வாங்கினோம்”

அறைக்குள் படுத்திருந்த மீனாக்ஷி “ஏம்மா, இப்படி செஞ்சதை சொல்லிக் காட்டறத்துக்கு, உங்களால முடியாதுன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே”

“ஏன், அவங்களால முடியுமா, முடியாதான்னு உங்களுக்குத் தெரியாதா அண்ணி?”

சிஸேரியனில் பிள்ளை பெற்ற பத்து நாட்களில் அழும் குரலில் மகள் பேசியது பொறுக்காத வள்ளியம்மை “பொண்டாட்டியை பேச விட்டு வேடிக்கை பாக்கறியா வைரவா?”

“நான் அண்ணியை ஒண்ணுமே சொல்லலையே ஆன்ட்டி. நீங்க கேட்டதுக்குதான் பதில் சொன்னேன்”

வள்ளியம்மை தணிகைநாதனிடம் “என்னை அடக்கினீங்களே, ரெண்டு மாசமா ஊமைக்கோட்டான் போல இருந்துட்டு, இப்ப பொறந்த வீட்ல இருந்து சீர் வந்ததும் பேச்சைப் பார்த்தீங்களா?”

வள்ளியம்மையின் தங்கை சுகந்தி கூட “அக்கா, நீ கொஞ்சம் பொறுமையா பேசேன்”

“எனக்குப் பேசத்தெரியாம நான் அமைதியா இல்லை ஆன்ட்டி, நாங்க அவசரப்பட்டது தப்புங்கறதாலதான் பொறுமையா இருக்கேன்.


“ஆமா, எங்கப்பா அம்மாவோட சப்போர்ட் எனக்கு பலம்தானே? அண்ணிக்கு நீங்க சீர் செய்ய நினைக்கறதும் அதுக்காகதானே ஆன்ட்டீ?”

“அவர் சாலை வைக்க இடம் தராம இருந்திருந்தா, இந்நேரம் அட்வான்ஸ் பணம் ஒன்னரை லட்ச ரூபாய்க்கு என்ன செய்யறதுன்னு தெரியாம திண்டாடி இருப்போம்”

வள்ளியம்மை “கைலயும் பணமில்ல, வீட்டுலயும் செலவு இருக்கையில, அப்படியாவது லட்ச ரூபா செலவு செஞ்சு என்ன படிப்பு வேண்டிக் கெடக்கு?”

மௌனத்தைக் கை விட்ட வைரவன் “ஏம்மா, நானும் ஏதாவது செஞ்சு முன்னேற வேணாமா? தேவையில்லாம செலவு செய்யுற ஆளா நான்?”

“நீ தேவையில்லாம அவசரப்பட்டு இவளைக் கல்யாணம் செஞ்சதால வேலையும் போய், கைல இருந்த பணமும் கரைஞ்சு, இப்ப சொந்த அக்காக்கு செய்ய கணக்குப் பாக்குற”

“அம்மா…”

“ஆன்ட்டீ, நான் கூட உங்களுக்கு என்மேலதான் கோபம், பையன் மேல இருக்கற உரிமைல, பொஸஸிவ்நெஸ்ல கோபப்படறீங்கன்னு நினைச்சேன். ஆனா, நான்னு இல்ல, அவர் யாரைக் கல்யாணம் பண்ணி இருந்தாலும் நீங்க இப்படிதான் இருந்திருப்பீங்க”

“உங்க பையன் மட்டும் அன்னைக்கு கல்யாணம் செய்யலைன்னா, கற்பக விநாயகருக்குப் பக்கத்துலயே அவருக்கும் சிலை வைக்க வேண்டியதுதான்”

வைரவன் “மோகீ, போதும்”

“ரொம்ப நிறைவா இருக்குடா, பெத்த மனசும் வயிறும் குளுர்ந்து போச்சு”

மேதாலக்ஷ்மியை அந்த வார்த்தைகள் என்னவோ செய்ய “ஸாரி ஆன்ட்டீ, நானும் பேசக்கூடாதுன்னு பொறுமையாதான் இருந்தேன். உங்களுக்கு தெரியாது, நான் ஃபர்ஸ்ட் டைம் இங்க வந்தபோது, எனக்கு உங்க பையனை விட, உங்க வீடும், நீங்க இயல்பா பேசினதும்தான் ரொம்பப் பிடிச்சது”

“...”

“உங்களோட கோபம், ஆதங்கம்லாம் எனக்குப் புரியுது. ஆனா, நான் சாப்பாடு குடுத்தா சாப்பிட மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சதெல்லாம் ரொம்பவே வருத்தமா இருந்தது”

“உங்களுக்கு உதவி செய்யறதுல எனக்குக் கஷ்டம் இல்ல. என் தம்பி பாலாக்கு செஞ்சு எனக்கு பழக்கம்தான்”

“இப்ப கூட நான் பேசி இருக்க மாட்டேன். இந்த ஒரு வாரமா, தன் பொறுப்பை விட்டு தனியா போய் இருந்ததுல அரசு எப்படி நிம்மதி இல்லாம ரெஸ்ட்லெஸா இருந்தார்னு எனக்குதான் தெரியும். அதோட அவருக்கு எத்தனை அலைச்சல்?”

“இப்ப இருக்கற மனநிலைல, நான் பிடிவாதமா தனியா போகணும்னா, அவர் மறுக்க மாட்டார். ஏன், ஆயா வீட்லயே கூட இருக்கலாம். அடுத்த பில்டிங்ல சாலை இருக்கு. ஆனா, மனசுல உறுத்தலோடயே இருப்போம்”

“ஏன், ஒரு வாரமா இந்த உறுத்தல் எங்க போச்சு? மயங்கின மாதிரி நடிச்சு, எம்புள்ளையைத் தனியாவும் கூட்டிட்டுப் போயிட்டு, நல்லாவே பேசுற. அத்தனை வருத்தப்பட்டு, கசந்து மோர்ந்துகிட்டு யாரும் எங்க பொறுப்பை சுமக்க வேண்டிய அவசியமில்லை”

தணிகைநாதன் “உனக்கென்ன பைத்தியமாடீ, பேசிட்டே போற, இத்தோட நிறுத்திக்க, சொல்லிட்டேன். வைரவா, உங்கம்மாவை விடு…”

“எல்லாரும் என்னை விட்டுடுங்க, யார் வேணாம்ன்னது? இப்ப சம்பந்தி வீட்ல பேரு வைக்க அழைக்கணுமே, அதுக்கு வேண்டியதை செய்ய முடியுமா, முடியாதா?”

வைரவன் “இப்ப ஃபங்ஷனை நடத்தி, சாப்பாடு போட்டு, வெள்ளி சங்கு, கிண்ணம்னு வெள்ளி சாமான்லாம் வாங்கிடலாம். அக்கா அவங்க வீட்டுக்குப் போகையில நீங்க கேட்ட நகையை செய்ய முடியுதான்னு பார்ப்போம். இப்ப இவ்வளவுதான் முடியும்”

“கூடப் பொறந்தவளுக்கு, தாய் மாமன் சீர் செய்யாம, சொந்தத்துல சாலை வெச்சு என்ன பிரயோஜனம்? அவ என்ன இல்லாத வீட்டு மருமகளா, வேணும்னா அவ வீட்டுக்காரர்…”

தணிகைநாதன் “ஆமான்டீ, ஒத்த புள்ளை, தாத்தா, அப்பான்னு பரம்பரையா தறி வெச்சிருக்காங்க. உன் மாப்பிள்ளையால எல்லாம் முடியும். இருக்கப்பட்டவங்க, அவங்களே செஞ்சுக்கட்டுமே.

எம்புள்ளைக்கு நான் என்ன சேர்த்து வெச்சிருக்கேன்?”

“கடனை சேர்த்து படிப்பை விட்டான், ரெண்டு பொண்ணுங்களுக்கு நடுவுல பொறந்தும் வீட்டுவேலை அத்தனையும் செஞ்சான். கிடைச்சதைக் கத்துக்கிட்டு முன்னேற நினைக்கறான். அதுக்கும் குத்தம் சொல்லுவியா, அவனை என்ன தவிட்டுக்கு வாங்கினமா, இல்லை என்னை மாதிரி…”

வைரவன் “அப்பா…” என தந்தையை நெருங்கினான்.

தணிகைநாதன் “போதும்டா, நீ எங்களுக்கு செஞ்சது. நீ அங்கேயே போய் நிம்மதியா இரு. உங்கம்மா இப்படி மாறுவான்னு எனக்குத் தெரியாம போச்சுடா, இல்லைன்னா, அன்னைக்கு எப்படியாவது உன்னை திரும்பி படிக்க அனுப்பியிருப்பேன்”

“அப்பா, வேணாம்ப்பா”


“சமையல் எல்லாம் கூட நீங்க அனுப்ப வேணாம். விசேஷத்துக்கு வந்து தாய் மாமா முறை செஞ்சுட்டுப் போங்க, அது போதும்”

“அப்பா…”

“மாமா, அதெல்லாம் சரியா வராது மாமா. சுகந்தி ஆன்ட்டியால எவ்வளவு நாள் இங்க இருக்க முடியும், ஜீவாக்கு ஃபைனல் செமஸ்டர், லதாக்கு போர்ட் எக்ஸாம், குட்டிப் பாப்பா, நிலா…”

வள்ளியம்மை “ஏன், அவுக படிக்க போனபோது இந்த வீடு நடக்கலையா?”

முற்றத்துக் குறட்டில் அமர்ந்திருந்த வைரவன் “கிளம்பறோம்ப்பா, ஃபங்ஷனுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க, அப்படியே செய்யலாம், வாடீ” என்றவன், திரும்பிப் பார்க்காது வெளியேறி, மேதா வந்ததும், நேரே சென்றது பிள்ளையார்பட்டிக்கு.

*********************

பெயர் சூட்டும் விழாவிற்குச் சென்று உரசலும் கிழிசலும் வெளியில் தெரியாதபடி, பட்டுப்புடவையால் போர்த்தி மூடி வேண்டியதைச் செய்து வந்தனர்.

ஐயாவும் ஆச்சியும் அழைத்துக் கேட்க, மேலோட்டமாகச் சொன்னான்.

“கொஞ்ச நாள் நாங்க ஜாலியா இருக்கறது தப்பா அப்பத்தா?”

“என்னோட ஆசையெல்லாம் நீ எப்போதுமே ஜாலியா இருக்கணும்னுதான்டா அரசு”

அப்படியே ஜீவா, சீதாவுக்கும் ஆச்சியிடம் ஒரு பிட்டைப் போட்டு வைத்தான்.

“ஏன் அப்பத்தா, இந்த ஜீவா வேலைக்குப் போன நாலஞ்சு மாசத்துல எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்பிடுவாங்களாம். பேசாம, நம்ம மங்கா அக்காவோட மக சீதாவை அவனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டா என்ன?”

“நல்ல வார்த்தை சொன்னடா, அரசு. ஆனா, அவங்கப்பா…”

“நீங்க உங்க தணிகாவை தணிச்சாலே போதும் அப்பத்தா, கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான்” என்றவன், பேச்சு வார்த்தையை வளர்த்து, மாசியில் வீட்டோடு தாம்பூலம் மாற்றி, ஆனியில் திருமணம் என்ற அளவிற்குக் கொண்டு வந்துவிட்டான்.

இருபது நாள் கூடச் சென்றிருக்காது. சுகந்தி சித்தி குழந்தைக்கு ஒரு மாதம் நிறையவும் ஊருக்குத் திரும்பி விட்டார். இந்தக் காலத்தில் இப்படி ஒருவர் உதவி செய்வதே அரிதல்லவா?

மார்ச் முதல் வாரத்தில் ஸ்வர்ணலதாவின் ப்ளஸ் டூ தேர்வுகள் தொடக்கம். ஸ்டடி லீவில் இருந்தவளை அம்மா, அப்பா, அக்கா, நிலா, குட்டிப் பையன் என எல்லோரும் வேலை சொல்ல, அவளது ரிவிஷன் திட்டமெல்லாம் பாழானதில் பயம் பிடித்துக் கொண்டது.

மூன்று, நான்கு நாள்கள் பொறுத்தவள், அன்று கைகுழந்தைக்கு சிறிது சளி இருக்க, வீட்டிலிருந்த தங்கையைப் படிக்க விடாது படுத்தி எடுத்ததில், அக்கா மீனாக்ஷியுடன் சண்டை.

மீனாக்ஷி “நான் ஊருக்குப் போறேன்” என நந்தகுமாருக்கு அழைத்து விட்டாள்,

மகளையும் மாப்பிள்ளையையும் சமாதானம் செய்த தணிகை நாதனும் வள்ளியம்மையும் , லதாவைத் திட்டித் தீர்த்தனர்.

ஜீவா மீனாக்ஷியையும் குழந்தையையும் டாக்டரிடம் அழைத்து சென்று வந்ததும், ஸ்வர்ணலதா அவனது மொபைலிலிருந்து சாலையில் இருந்த வைரவனை அழைத்தாள்.

“சொல்லு செல்லி, நல்லா படிக்கிறியா?”

“...”

“செல்லி…”

பேச முடியாமல் தங்கை அழுகையில் விக்கியதைக் கேட்டுப் பதறியவன், மேதாவிடம் கூடச் சொல்லாது வீட்டுக்கு ஓடினான்.

ஏழு வருடங்களுக்கு முன் அவன் படிப்பை விட முடிவு செய்ததை விட, மோசமான நிலையில் இருந்தது வீடு. இதில் சமையலுக்கு ஆள் வேறு.

“செல்லி, உன் புக்ஸும், ட்ரெஸ்ஸும் எடுத்துக்க, அங்க வந்து படி”

தணிகைநாதன் “அதெல்லாம் எதுக்குடா, இங்கயே இருக்கட்டும்”

வள்ளியம்மை “உனக்கு வேணா, உம் பொண்டாட்டியோட ஆயா வீடு. அவ ஏன் அங்க வரணும்”

ஸ்வர்ணலதா விழிக்க, வைரவன் “உன்னால இங்க படிக்க முடியலன்னா எப்ப வேணா வா. ஜீவா கொண்டு வந்து விடுவான்”

இரண்டு நாள்கள் இருப்புக் கொள்ளாது தவித்தவன் “மோகீ, நாம வேணா செல்லியோட எக்ஸாம் முடியுற வரை வீட்ல போய் இருப்போமா?” என்றதைக் கேட்ட மேதா உருண்டு புரண்டு சிரித்தாள்.

“என்னடீ ஒண்ணும் சொல்லாம சிரிக்குற?”

‘சரியான நாய் வால் குடும்பம். இதுல வேற இவன் பேரே வை(பை)ரவன்’ என மனதில் நினைத்ததைச் சொல்ல முடியாது,

“வைரவன் எக்ஸ்பிரஸ் இரண்டு நாள் தாமதமாகத் தன் இலக்கை வந்தடைந்தது” என மேலும் சிரித்தாள்.

இரண்டரை மாத வனவாசத்திலிருந்து வீடு திரும்பிய வைரவன், தன் பட்டமகிஷியோடு அரியணையில் ஏறி, சாம்ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்யத் தொடங்கினான்.

**********************

ஆறு மாதங்களுக்குப் பிறகு…

ராகவி குழந்தையுடன் திரும்பி வந்து விட, ஜோதிக்கு மகன் பிறந்து அவளும் வர, பாரம்பர்யம் மாறாது ஓரகத்திகள் ஓயாது முட்டிக்கொண்டதில், தண்ணீர்மலையை, அவர்களது சிவகங்கை வீட்டில் குடிவைத்து, அங்கிருக்கும் அழகுநாச்சியின் கிளையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

தன் மனைவியின் உறவினர்களின் கண்காணிப்பு வட்டத்தில் இருந்த தண்ணீர்மலையைத் தனியே விடாது, தாயிடம் குழந்தையை விட்டுவிட்டு, அவனோடே கடைக்குச் சென்று வந்தாள் ஜோதி. அத்தனை நம்பிக்கை கணவன் மீது!

ஜூன் இரண்டாம் வாரத்தில் வேலையில் சேர்ந்த ஜீவாவுக்கும், படிப்பை முடித்துவிட்டு வந்த சீதாவிற்கும் ஆவணியில் திருமணமாகி, சென்ற வாரம்தான் சிலிக்கன்வேலிக்குப் பறந்திருந்தான்.

ராகவியும் சிவானந்தனும் எல்லோருக்கும் நல்லவராக இருக்கும் அரிய பணியைச் செய்ய, பேரனுக்கும் பேத்திக்கும் இடையே திண்டாடுவது என்னவோ தெய்வானைதான்.

மதுரையில் அழகுநாச்சியின் கிளை ஒன்றைப் புதிதாகத் திறந்திருந்தனர்.

அக்காவும் மாமாவும் எப்படி இருந்தாலும், மேதா மகளைத் தூக்கி வந்து சீராட்டத் தவறுவதில்லை.

நிலாவைப் பள்ளிக்கு அனுப்பும் சமயம், மதுரைக்குக் கிளம்பிய மீனாக்ஷி, மூன்று மாதங்களாகத் தன் குழந்தைகளுக்குக் கிடைத்த தாய்மாமனின் அரவணைப்பைத் தானே கெடுத்துவிட இருந்ததைப் புரிந்து கொண்டாள். அதற்கு அவளது கணவன் நந்தகுமாரும் ஒரு காரணம்.

“உன் லிமிட்ல இரு. எது வேணும்னாலும் என்னைக் கேளு” என்றிருந்தான்.

ஆங், முக்கியமான விஷயம், இரண்டரை பவுன் தங்க அரணாவும், தம்பித்தோழனும் கற்பகத்தின் சாலையிலேயே செய்யப்பட்டது.

ஸ்வர்ணலதா கோவையில் இருக்கும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மெரிட்டில் ஸீட் கிடைத்து, ஹாஸ்டலில் இருக்கிறாள். அவளுக்கு லோக்கல் கார்டியன், ராமநாதன்தான்!

இப்போதெல்லாம், மேதாவின் கையில் உணவைப் பார்த்ததுமே, வள்ளியம்மையின் வாய் தானாகத் திறக்கிறது!

குத்தலும், குடைச்சலும் ஜாடைப் பேச்சும் தொடர்கிறதுதான்… ‘இது கூட இல்லைன்னா, அப்புறம் என்ன மாமியார்?’ என்பது நளினியின் வாதம்.

“மாமியார், மாமனார் இல்லாத வீடு, அம்மாவே நாத்தனார், நீ ஏம்மா பேச மாட்ட?” - மேதா.

ஆயா கோவையிலேயே தங்கி விட, மதிய நேரங்களிலும், சில நேரம் இரவிலும் ஆயாவின் வீட்டில் தங்கிக் கொள்கின்றனர்.

வைரவன் முன் சென்றுவிட, மேதா சிறிது தாமதமாக சாலைக்குக் கிளம்பிச் செல்கிறாள். கல்பு கலெக்ஷன்ஸ் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

மங்கா, சீதாவின் திருமணத்திற்கென சேர்த்து வைத்திருந்த கொஞ்ச பவுனில் கழுத்திரு செய்ய ஆசைப்பட, ஏழு பவுனுக்குத் அழுத்தம் திருத்தமாக நெக்லஸைப் போல் வைரவன் செய்து கொடுத்தது,
நடுத்தர மக்களின் கவனத்தை ஈர்த்தது.

கற்பகத்தின் சாலையும் வைரவனின் டிஸைன்களும் நம்பிக்கை தர, தனிப்பட்ட முறையில் நகை செய்து தரச் சொல்லி நிறைய பேர் கேட்டனர். தொழில் சீராக முன்னேறியது.

**********************

ஆயா வீட்டு மாடியறை… அதிகாலை நேரம். வைரவன் மேதாவை எழுப்பினான்.


“மோகிக் குட்டூஸ், இதைப் பாரு”

மேதாவிற்குப் பிடித்த, வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட டர்க்காய்ஸும் பவளமும் பொதித்த நகைகள். அதிலும், முத்து, டர்க்காய்ஸ், பவளம் மூன்றும் வைத்த மூக்குத்தி கண்ணைப் பறித்தது.

“செமயா இருக்கு ராசுக்குட்டீ, எனக்கும் ஓரு செட் பண்ணிக் குடேன்”

“உனக்கு மட்டும்தான் இது”

“நிஜமா?”

“நிஜமா”

“என்ன திடீர்னு?”

“ரெண்டு வாரமா டெஸ்ட் பண்ணாம தள்ளிப் போடற பார்த்தியா, அதுக்குதான்”

“பயமா இருக்கு ராசு”

“பயப்படறதுக்கு இதென்ன அரங்கேற்றமாடீ, வேணும்னா, திரும்பவும் ஒரு தில்லானா…”

அவன் வாயைப் பொத்தியவளை இழுத்துக் கொண்டுபோய் ஓய்வறையில் தள்ளினான். பத்து நிமிடங்களில் பரவசமாக வந்தவள், சட்டென வைரவனைத் தூக்கி விட்டாள்.

“ஏய், மோகினிப் பிசாசு, விடுடீ என்னை. இதை நான் செய்யணும். ஏடாகூடமா எதையாவது செய்யறதே உனக்கு வேலையாப் போச்சு” என்றவன் “பத்திரமா இருக்கணும் மோகீ, விளையாட்டா கூட இதுபோல ரிஸ்க் எல்லாம் வேணாம், புரியுதா?” என்றான் அக்கறையாக.

“அப்புறம்?”

“உனக்கு ஏதாவது வேணும்னா கேளேன்”

“ஒரு பாட்டு பாடு ராசு”

“என்ன, விளையாடுறியா?”

“என் ராசுக்குட்டில்ல”

“எனக்குப் பாட்டெல்லாம் வராதுடீ”

“இல்லாட்டி, என்னை மேதான்னு கூப்பிடு”

இரண்டு, மூன்று முறை முயன்றவன், மேதா என்று அழைக்க வராமல் கெஞ்சலாகப் பார்க்க, “அப்ப பாடு ”

குரலைத் தழைத்துக் கொண்டவன்
“பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா?
தங்க மோகினி, என் வைர தேவதை…”

*******************

மூன்று வருடங்களுக்குப் பிறகு…

பூ மலர்வதும், கனி உதிர்வதும் இயற்கையின் நியதியல்லவா?

தொண்ணூற்றி இரண்டு வயதில், தேவையான நடமாட்டத்தோடு இருந்த சக்கரை ஐயா, உறக்கத்திலேயே அனாயாஸ மரணமடைந்தார்.

ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் உடன் வாழ்ந்த பார்வதி ஆச்சி, மூன்றே மாதங்களில் கணவனைப் பின் தொடர்ந்தார்.

பிள்ளை கூட்டி வந்த தணிகைநாதன் தலை மகனாய் நின்று தன் கடமையைச் செய்தார்.

ஐயாவின் உத்தரவுப்படி, முதல் நினைவு தினத்தன்று உயில் படிக்கப்பட்டது.

வைரவன் மாளிகையும் சிவகங்கை வீடும், சிவகங்கை மற்றும் மதுரை கிளை இரண்டும் முருகப்பனுக்கும், காரைக்குடி அழகுநாச்சி ஆபரண மாளிகையும், இப்போது குடி இருக்கும் வீடும் தணிகைநாதனுக்கும் எழுதப்பட்டிருத்தது.

மற்ற பேரன்கள், பேத்திகளுக்கு நகைகளும், நிலங்களும் தரப்பட்டிருக்க, அழகுநாச்சி
சாலையின் முழுப் பொறுப்பும் உரிமையும் வைரவனுக்கென எழுதி இருந்தார் ஐயா.

வாக்குவாதங்கள், கோபதாபங்களை வெளிப்படுத்த இடமின்றி, வக்கீலும் ஆடிட்டரும் தனித்தனியாக ரெஜிஸ்தர் செய்யப்பட்ட பத்திரங்களை ஒப்படைத்தனர்.

பெற்ற பாசத்தில், தணிகைநாதனை சரிவர கவனிக்கத் தவறியவர்கள், பேரனின் மீதிருந்த அபிமானத்தில், அதை ஈடுகட்டிவிட்டனர்.

********************

நான்கு நாட்களில் ஸ்வர்ணலதாவிற்குத் திருமணம். மாப்பிள்ளை அவளுடனே வேலை செய்கிறான். பெண்கேட்டு வரவும், பின்னணியைப் பார்த்துச் சம்மதித்து விட்டனர்.

ஜீவாவும் சீதாவும் தங்கள் மகளுடன் வந்திருக்க, மீனாக்ஷி இரண்டு வாரமாகவே குழந்தைகளுடன் இங்குதான் இருக்கிறாள்.

மேதாவிற்கு முதலில் மகன் (பாலசந்திரன்) பிறந்திருக்க, இப்போது வைரவனின் கையில் எட்டுமாதக் கல்பு. வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் தந்தையிடம்தான் வாசம்.
சில நேரம் சாலைக்கும் கையோடு தூக்கிச் சென்றுவிடுவான்.

“உம்பொண்ணோட பகல்ல என்ன வேணா செஞ்சுக்கோ, நைட் டைம் ஈஸ் மை டைம், ராசு”

“அப்புறம்?”

“இங்கென்ன கதையா சொல்றாங்க?”

“ஆமா, மோகினி புராணம்”

“ராசுக்குட்டீ…”

வைரவனுக்கு மேதா வரமாக, வாழ்க்கை வசமானது.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 26 - FINALE AND EPILOGUE
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
அருமை, வைரவன் கல்பு அவனோடு வந்துட்டார். ஐயா கடைசில வைரவனுக்கு நியாயம் செஞ்சிட்டார். வள்ளி முழுக்க திருந்தலையே. . மோகினி ராசு குட்டி கலக்கிட்டாங்க, மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்❤❤❤❤❤❤💐💐💐💐💐💐
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

முதல்ல ஆடின மோகினி, கதகளி ஆட்டத்துக்கு பாலசந்திரன், அப்புறம் ஆடின தப்பாட்டம், வைரவனாட்டத்துக்கு கல்பு, அப்ப இப்ப புதுசா ஆட போற தில்லானாவுக்கு மூணாவதா வர வாய்ப்பு இருக்கா? 🤔🤔🙈🙈

 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

மகனுக்கு பாலசந்திரன்னு பேரு வச்சது தம்பி பாலா பேரு நினைவா இருக்குமா?

மோகினியாட்டம், மோகினி புராணம்.. ஒரே மோகினி மயமா இருக்கு... ராசு, மோகினியை ஆட கூப்பிடுறான்...😍😍

யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி

 
Last edited:

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

மகனுக்கு பாலசந்திரன்னு பேரு வச்சது தம்பி பாலா பேரு நினைவா இருக்குமா?

மோகினியாட்டம், மோகினி புராணம்.. ஒரே மோகினி மயமா இருக்கு... ராசு, மோகினியை ஆட கூப்பிடுறான்...😍😍

யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி

Semmmaya irukku, groupla podungalen🤣🤣🤣
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

முதல்ல ஆடின மோகினி, கதகளி ஆட்டத்துக்கு பாலசந்திரன், அப்புறம் ஆடின தப்பாட்டம், வைரவனாட்டத்துக்கு கல்பு, அப்ப இப்ப புதுசா ஆட போற தில்லானாவுக்கு மூணாவதா வர வாய்ப்பு இருக்கா? 🤔🤔🙈🙈

Possible🙈🙈😍😍
 
Top Bottom