• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 25 - FINALE 1

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 25


றுநாள் போகி என்ற நிலையில், வைரவன் வீட்டின் சிறிய பட்டாலையில் ஐயா, ஆச்சி, முருகப்பன், தெய்வானை, சிவானந்தம், ஜோதி, தண்ணீர்மலை, நந்தகுமார் என எல்லோரும் கூடி இருந்தனர்.

பித்தளை, வெங்கலம், இரும்பு, எவர்சில்வர், வெள்ளி, கண்ணாடி, பீங்கான் மற்றும் மரத்தாலான சாமான்கள், மூங்கிலில் செய்த பொருட்கள், அத்தியாவசியமான பிளாஸ்டிக் சாமான்கள், ஊசி முதல், பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள் கேஸ் ஸ்டவ் வரை, எலெக்ட்ரானிக் பொருட்களில் டீவி முதல் ஏசி வரை என வசந்த் & கோ வும் மங்கள் அண்ட் மங்களும் வீட்டுக்குள் வந்ததுபோல் எதிர்ப்பக்க வளவில் அணி வகுத்திருக்க, மேலும் நான்கு பெட்டிகள், இரண்டு பைகளை ஆள்கள் கொண்டு இறக்க, நளினி தன் கையில் இருந்த லிஸ்ட்டை சரிபார்த்தாள்.

“எப்ப சொல்றாங்களோ, அப்ப வந்து இன்ஸ்டால் செய்யணும்” என்று அவர்கள் எதிர்பார்த்ததைக் கொடுத்து அனுப்பி வைத்த ராமநாதன் உள்ளே வந்தார்.

ராகவிக்குப் பணமாகக் கொடுத்தது அனைத்தையும், இங்கே தேவைப்படும் என்பதால், பொருளாக வாங்கி இருந்தனர்.

ராமநாதன் “எங்களால முடிஞ்ச அளவு செஞ்சிருக்கோம்” என, நளினி மேதாலக்ஷ்மியின் நகைகளை பெரியவர்களிடம் காட்டினாள்.

மீனாக்ஷிக்கும் ஸ்வர்ணலதாவிற்கும் நாத்தனார்களுக்கென பட்டுப்புடவையும் மோதிரமும் கொடுத்தனர்.

அதேபோல் மாமியார் வள்ளியம்மைக்கு நான்கு புடவைகளும், ஒரு செயினும், தனியாக பாத்திரச் சீரும் கொடுத்தனர்.

பெண் வீட்டார் மாப்பிள்ளைக்குக் கொடுப்பதுபோல், பெண்ணுக்கும் கொடுப்பது வழக்கம் என்பதால், இவர்கள் வரிசையுடன் வருவது தெரிந்ததுமே, வைரவன் தந்தையின் கணக்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்பிவிட்டான்.

தணிகைநாதன் “அவங்க சிவா மகமிண்டிக்கு செஞ்ச மாதிரி செஞ்சா, இது பத்துமாடா வைரவா?”

தந்தையிடம் “இப்ப இதாம்ப்பா முடியும்” என்றவன், மனைவியிடம் “பரண்ல தூக்கிப் போட அண்டா வேணும்னு நான் கேட்டேனாடீ?” எனக் காய்ந்தான்.


ராமநாதன் “அவங்களுக்கு வேற ஏதாவது விட்டுப் போயிருந்தா, ஆசையா இருந்தா வாங்கிக்கட்டும்” என ஒரு தொகையையும் தர, வைரவன் தந்தையிடம் மறுப்பாகத் தலையசைத்தான்.

“அரசு, இதெல்லாம் வழக்கமா செய்யறதுதான், வாங்கிக்க தணிகா” என்றார் பார்வதி ஆச்சி.

“இது எங்க சார்புல மகமிண்டிக்கு” என்ற தணிகைநாதன் ஒரு பட்டுப்புடவையும், மெலிதான பிரேஸ்லெட் ஒன்றும், வைரவன் கொடுத்த பணமும் கொடுக்க, அது அவனிடமே திரும்பி விட்டது.

விருந்துக்கென வெளியில் சாப்பாடு சொல்லி இருக்க, வைரவன், ஜீவா, மேதா மூவரும் பரிமாறினர்.

ஆச்சிக்கும் ஐயாவிற்கும் தற்காலிகமாக ஒரு மேஜையைத் தயார் செய்து பரிமாற, தெய்வானை முட்டி வலியால் கீழே அமர சற்று சிரமப்பட்டதைக் கண்ட ராமநாதன், மனைவியிடம் “நாம டைனிங் டேபிள் வாங்கி இருக்கணுமோ நல்லி?”

நளினியும் ராமநாதனும் மாப்பிள்ளை பெண்ணை கோவைக்கு வருமாறு அழைத்துவிட்டுப் புறப்பட்டனர்.

பொங்கல் வேலைகளுக்கு நடுவே, வந்து இறங்கி இருந்த சீரை மீண்டும் பேக் செய்து, இடம் தேடி வைக்கவே இரண்டு நாட்களானது.

மகனும் மருமகளும் சாமான்களைப் புழங்க வேண்டுமா, பொருத்த வேண்டுமா என எதுவும் கேட்காது, மூட்டை கட்டி வைத்ததை வள்ளியம்மை ரசிக்கவில்லை.

கணவரிடம் கேட்க “அவங்க தனியா போனா திரும்பவும் சாமானைப் பிரிச்சுக் கட்டணும். இங்க உபயோகிக்கத் தொடங்கினா, விடறதா, எடுத்துட்டுப் போறதான்னு குழப்பம் வரும். இதான் சரி. அதைப் பத்தி உனக்கென்ன கவலை?” என்றார் தணிகைநாதன்.

“அந்த வீடுதான் அமையலையே, அதோட சாலைக்குதான் இடம் கிடைச்சிடுச்சே?”

“வைரவன் எவ்வளவு பணம் கொடுத்தான்?”

“கை செயின் வாங்க உங்க கிட்ட ஏது பணம்?”

வள்ளியம்மையின் தொடர் கேள்விகளில் பொறுமையே வடிவான தணிகைநாதனுக்கே கோபம் வந்துவிட, “ஏன்டீ, இருவத்தெட்டு வருஷமா நான் சம்பாதிக்காமதான் இந்தக் குடும்பம் நடக்குதா?”

“இல்ல, மீனாக்கு பிரசவம் ஆகணும். நமக்கே செலவு இருக்கேன்னு…”

“இதுவும் நாம செய்ய வேண்டிய செலவுதான்”

*********************


நந்தகுமார் இங்கே இருந்ததில், பொங்கல் விழா இனிதாகவே சென்றது. மேதாவிடம் வீட்டில் புழங்குவதில் ஒரு தயக்கமும், எதற்கும் அவள் வைரவனின் முகம் பார்ப்பதையும் கண்டான்.

மாமியார் வள்ளியம்மையின் சின்னச் சின்ன வாழைப்பழ ஊசிகளையும், மகன், மருமகளுக்கு எதிரிலேயே மகள்களுடன் கூடிப் பேசுவதையும் பார்த்த நந்தகுமார், போகும் முன் மனைவியைத் தனியே அழைத்துத் தாளித்து விட்டான்.

“ஏன்டீ, உங்கம்மாதான் தன் நிலமை புரியாம பேசறாங்கன்னா, அவங்க பாட்டுக்கு நீயும் ஆடினா என்ன அர்த்தம், உனக்காவது அறிவு வேணாம், ரெண்டு பேரும் சேர்ந்து லதாவையும் கெடுக்கறீங்க”

“மாமா…”

“என்னடீ மாமா, எங்கம்மா உன்னை ஒரு வார்த்தை சொல்ல விடறேனா நான்? நீங்க பண்றதுக்கு வைரவன் இன்னும் தனியா போகாம பொறுமையா இருக்கறதே பெரிய விஷயம். நானா இருந்தா, என்னைக்கோ தூக்கிக் கடாசிட்டு போய் இருப்பேன்”

“...”

“அந்தப் பொண்ணு வீட்ல செஞ்ச சீரையும், மகளோட எத்தனை நாசூக்கா பேசறாங்கன்றதையும் பார்த்தல்ல, உன் தம்பியை பிடிச்சிருக்குன்ற ஒரே காரணத்துக்காகதான் அந்தப் பொண்ணு பொறுமையா இருக்கா. நம்ம நிலா அவளோட எப்படி ஒட்டிக்கிட்டா பாரு. நேத்து மாமா, அத்தையோடதான் தூங்குவேன்னு மாடிக்கே போய்ட்டா”

“உங்கம்மா பேச்சைக் கேட்டு, வைரவன் மாதிரியான தம்பியோட உறவைக் கெடுத்துக்காத, சொல்லிட்டேன்”

“எல்லாத்தையும் விட, இப்படி செஞ்சீன்னா வயித்துல இருக்கற குழந்தையும்ல சேர்ந்து கெட்டுப்போகும், நல்லதை நினை, பேசு. அதுதான் நம்ம குழந்தைக்கு நல்லது. இல்ல, இப்படியேதான் இருக்கப் போறேன்னா, மரியாதையா என்னோட கிளம்பு” என்றுவிட்டான்.

*******************

ஜீவா கேம்பஸில் பிரபலமான எம்என்ஸி நிறுவனத்தில் சிஸ்டம் அனலிஸ்ட்டாக வருடத்திற்கு பதினோரு லட்ச ரூபாய்க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

செய்தி தெரிந்து முதல்முறையாக தன்னைக் காண அவனது தந்தையுடன் வந்து நின்ற சித்தியை, ஜீவா ‘யார் நீ?’ என்று பார்வையிலேயே தள்ளி நிறுத்தினான்.

தன் தந்தையின் மறுமணத்தை ஏற்கும் வயதும் பக்குவமும் வந்துவிட்ட ஜீவா, அவரது அலட்சியத்தையும், சித்தியின் பின் சென்று வருடக்கணக்கில் தன்னை ஒதுக்கி வைத்ததையும் மன்னிக்கத் தயாராக இல்லை.

“சென்னைலதானே வேலைல சேரணும், பரீட்சை முடிஞ்சதுமே நம்ம வீட்டுக்கு வந்திடு தம்பி” என்று குழைந்தாள் சித்தி.

“அந்தக் கம்பெனி சென்னைல இல்லை”

காலம் கடந்து விட்டது என்று அவன் தந்தைக்குப் புரிந்தாலும், சித்தி அவனை விடத் தயாராக இல்லை. தம்பி, தம்பி என நெஞ்சை நக்கினாள்.

“எங்கண்ணன், அண்ணிக்கெல்லாம் நம்ம அனுஷா (சித்தியின் அண்ணன் மகள்)குடுத்து வெச்சவன்னு, மாப்பிள்ளைக்கு வேலை கிடைச்சதுல எம்புட்டு சந்தோசம் தெரியுமா?”

“கொஞ்சம்கூட கில்ட்டோ (குற்றவுணர்வு), கூச்சமோ இல்லாம எப்படி ராசு அவங்களால இப்படிப் பேச முடியுது?” என மேதாதான் ஆற்றுப் போனாள்.

அவர்கள் சென்றதும் இத்தனை நாள், மூத்தாளின் மகனாக இருந்தவன் திடீரென மூத்த மகனானதை சொல்லிச் சொல்லி சிரித்த ஜீவா, கடைசியில் தன் பெரியம்மாவின் மடியில் தலை சாய்த்துக் கண் கலங்கி விட, அவர் தந்த ஆறுதலில் முற்றிலும் வேறான வள்ளியம்மையைக் கண்டாள் மேதா.

******************

ஜோதிக்கு நான்கு மாதங்கள் முடிந்திருக்க, மசக்கை நின்று, அவளது வாய்க்கு ருசியான பதார்த்தங்களைக் கேட்டது நாக்கு.

அதுவரை உணவின் வாசனை, தாளிதம் என எதை நுகர்ந்தாலும் உமட்டி, ஓங்கரித்தவளுக்குக் காரசாரமாகக் கறியும் மீனும் உண்ணும் ஆசை வர, தண்ணீர்மலையை நச்சரிக்கத் தொடங்கினாள்.

முன்பே தெய்வானை “நம்ம வீடு சைவம் மா. பிள்ளையாருக்கு, முருகனுக்கு விரதம் இருக்கறதோட, வருஷா வருஷம் வைரவன் கோவிலுக்கு வடைமாலை சாத்துறது வழக்கம். என்னை எல்லாம் சைவமான்னு கேட்ட பெறகுதான் பெண்ணே கேட்டாங்க” என்று நீண்ட விளக்கமளித்தார்.

தண்ணீர்மலையைக் கேட்க,
“எங்க வீட்ல இனம் மாறி இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கிட்டதே பெரிசு, இதெல்லாம் ஒரு பிரச்சனையா ஜோ?”

“எனக்கு சாப்பிடணும் போல இருக்கு மாமா, என்னை எங்க வீட்டுக்காவது கூட்டிட்டுப் போங்க”

“நீ நான் வெஜ் சாப்பிடுவேன்னே எனக்கு இப்பதான் தெரியும். இங்க பழக்கம் கிடையாதுன்னா, உங்க வீட்ல போய் சாப்பிடறதும் தப்புதானே. எங்க வீட்டு மருமகளான பிறகு மாற வேண்டியது நீதான்” என தீர்ப்பளித்த கணவனை வெறித்தாள்.

அவனுடன் ஊரைச் சுற்றிய பொழுதுகளில் இட்லி தோசையும், வெஜிடபிள் பிரியாணியும்தான் உண்டோம் என்பதே இப்போதுதான் உறைத்தது.

தங்களது விருப்பு, வெறுப்பு, உணவுப் பழக்கம், பிடித்தம் என எதையும் அறியும் முன்னர், ஒருவரை ஒருவர் உண்டு களித்திருக்க, புகுந்த வீட்டுப் பாரம்பரியப் பெருமைக்கு நடுவே, கணவனிடம் கரிசனத்தையும் கறிசோறையும் தேடினாள் பெண்.

ஜோதியின் ‘என்னோட விருப்பம், சாய்ஸ்னு எதுவும் கிடையாதா?’ என்ற கேள்விக்கு பதில்தான் இல்லை.


‘என் உடல், என் உரிமை’ என்று ஆராயாமல் அவசரப்பட்டதன் பலன், இன்று ‘என் உணவு, என் உரிமை’ என்று பேச முடியவில்லை. அந்த வீட்டில் அதற்கான சூழலும் இல்லை.

********************

மீனாக்ஷிக்கு மருத்துவர் கொடுத்த பிரசவ தேதியில்

வலி வர, மருத்துவமனைக்குச் சென்றனர்.

வலி வந்து வந்து போனதில், ஒன்றரை நாள் காத்திருந்த பின், ஸ்கேன் செய்து பார்க்க, குழந்தை மீண்டும் தலை திரும்பி Breech பொஸிஷனுக்குச் சென்றுவிட, சிஸேரியன் செய்தனர். கூடவே
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டதில், ஏழு நாட்கள் வரை மருத்துவமனை வாசம்.

ஆண்குழந்தை பிறந்ததில் இரண்டு வீட்டிலுமே அளவில்லா சந்தோஷம்.

குழந்தை பிறக்கும் சமயம் உதவுவதெற்கென, தேவகோட்டையில் இருந்து வந்த வள்ளியம்மையின் தங்கை சுகந்தி மீனாக்ஷியுடன் மருத்துவமனையில் இருந்துகொண்டார்.

ஜீவா தன் ப்ராஜக்ட் சப்மிஷனில் தீவிரமாக இருக்க, ஃபிப்ரவரி மாதம் என்பதால், லதாவுக்குப் பன்னிரெண்டாம் வகுப்பிற்கேயான கெடுபிடிகளும், செயல்முறை தேர்வுகளுமாக இருக்க, தணிகைநாதனும் வைரவனும் வீட்டுக்கும், ஹாஸ்பிடலுக்குமாக அலைய, மேதாதான் தங்களது சாலைக்குப் போய் வேலையைக் கவனித்துக் கொண்டாள்.

நந்தகுமார் இங்கேயே இருக்க, அவனது பெற்றோர் வந்து பார்த்துவிட்டுச் செல்ல, நிலா தம்பி பிறந்ததில் மகிழ்ந்தாலும் சவலைப் பிள்ளையாய் அடம் செய்ய என வீடு திமிலோகப்பட்டது.

அன்று காலையிலேயே தணிகைநாதன் அழகுநாச்சியின் சாலைக்கும் வைரவன் இவர்களது சாலைக்கும் சென்றுவிட, மதியம் மருத்துவ மனைக்கு நந்தகுமார்தான் உணவை எடுத்துச் சென்றான்.

சமைத்தது வைரவன்தான் எனினும், காலையிலிருந்து உணவை கட்டுவதும், ஹாஸ்பிடல் துணிகள் தொடங்கி அனைத்தையும் தோய்த்து உலர்த்துவதும், ஒவ்வொருவராக வர வர, உணவு பரிமாறுவதுமாக இருந்த மேதா, தன் பின்னோடே சுற்றிய நிலாவுக்கு உணவூட்டி உறங்க வைத்தாள்.

அத்தனை வேலை செய்து பழக்கமில்லாதவளுக்கு, நான்கு நாட்களாகக் கடமை கழுத்தை நெறித்ததில், ஜூரம் வரும்போல் உடம்பு அனத்தியது.

சாப்பிட வர வேண்டிய தணிகைநாதன், வைரவன் இருவருமே வரக்காணோம்.

ஒரு கிளாஸ் மோரைக் குடித்தவள், வட்டிலில் உணவுடன் வள்ளியம்மையிடம் வந்து “ஆன்ட்டீ, சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்”

“எனக்கு வேணாம்”

“நேரமாச்சு ஆன்ட்டீ, நீங்க மாத்திரை போடணும். வாங்க சாப்பிடலாம்”

“என் வீட்ல எனக்கே உபசரணையா?”

இரண்டு நிமிடங்கள் வரை செய்வதறியாது நின்றவள், அருகில் இருந்த ஸ்டூலில் உணவை மூடிவைத்துவிட்டுத் தூணில் சாய்ந்து அமர்ந்தாள். கண்கள் தீயாய் எரிந்ததில், நீர் வழிய, தாமாகவே மூடிக்கொண்டன. சில நிமிடங்களில் உடல் கனத்துச் சூடேறுவதை மேதாவால் உணர முடிய, அங்கேயே சுருண்டு படுத்தாள்.

சாலையில் ஒரு ஆசாரிக்கு கைகளில் சின்னதாகத் தீக்காயம் பட்டுவிட, அதனால் தாமதமாக வந்த தணிகைநாதன், மேதா கீழே உறங்குவதைக் கண்டு, என்னவென வள்ளியம்மையைக் கேட்க, அவர் தெரியாதென்றார்.

அருகில் இருந்த உணவைப் பார்த்த தணிகைநாதனுக்குப் புரிந்துவிட்டது.

“வீடு இருக்கற நிலைல அந்தப் பொண்ணு சாப்பாடு குடுத்தா சாப்பிட மாட்டேன்னு அப்படி என்ன புடிவாதம் உனக்கு?” எனக் கடிந்து கொண்டே மனைவிக்கு உணவை ஊட்டி, தானும் உண்டார்.

மேதா அப்போதும் அசையாது உறங்க, “மேதா, ஆத்தா மேதா, அம்மாடீ” என விதவிதமாக அழைத்தும் எழாதவளைக் கண்டு பயம் வர, மகனுக்கு அழைத்து விட்டார்.

தொடர்ந்து அழைத்த தந்தையின் அவசரத்தில், “பழனியண்ணே, இப்ப நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க. நாளைக்கு பார்த்துக்கலாம். நான் கால் செய்யறேன் ரமேஷ்” என்றவன், அவர்களது கை வேலையை ஒரு கட்டத்துக்கு கொண்டு வந்து நிறுத்திய பின் பொருட்களை பத்திரப்படுத்திவிட்டு வர மேலும் ஒரு மணி நேரமானது.

இடைகழியிலேயே தூணுக்கு வெளியே முற்றத்துக் குறட்டின் அந்தரத்தில் நீண்டிருந்த மேதாவின் கால்கள் தெரிய, இரண்டே எட்டில் நெருங்கியவன் “என்னப்பா, இவ ஏன் இப்படி படுத்திருக்கா?”

“தெரியலடா, அதான் உனக்கு ஃபோன் போட்டேன்”

“இதோ வரேன்” என்றபடி கை, கால் கழுவ பின்பக்கம் சென்ற வேகத்தில் திரும்பினான். ஈரக் கைகளைத் தன் சட்டையிலேயே துடைத்தபடி, மனைவியைத் தொட்டவனை சுட்டது சூடு. கையை உதறினான்.

“நல்ல ஜுரம் அடிக்குது. அவ சாப்பிட்டாளா?”

வள்ளியம்மை கேள்வி தனக்கானதில்லை என்ற பாவம் காட்ட, தணிகைநாதன் “தெரியலைப்பா. நான் வந்தபோதே இப்படிதான் இருந்தா” என்றதோடு, “உங்கம்மாக்கு சாப்பாடு எடுத்து ஸ்டூல்ல வெச்சிட்டு படுத்துட்டா போல” என உண்மையை விளம்பினார்.

வள்ளியம்மையை நேராகப் பார்த்த வைரவன் “சாப்பாடை எடுத்து வெச்சாளா, தரேன்னு சொல்லலையா?”

“...”

தடதடவென மாடியேறியவன் ஒரு பையில் இருவருக்கும் உடைகள், லேப்டாப், மேலும் சில அத்தியாவசியமான பொருட்களுடன் இறங்கி வந்து, மேதாவை எழுப்பினான்.

ஒரு கணம் ஒன்றும் புரியாது விழித்தவளை “எழுந்திருடா, டாக்டர் கிட்ட போவோம்”

“வேணாம், பாராசிட்டமால்…”

“எழுந்திருடீ”

“...”

“பின்பக்கம் போகணுமா?”

பெரியவர்கள் எதிரே இருக்க, வேண்டாம் என்பதாகத் தலையசைத்தாள். எழுப்பி, அவள் கையைப் பிடித்துக் கொண்டவன், குனிந்து இரண்டு பைகளையும் எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டான்.

“நாங்க டாக்டரை பார்த்துட்டு, அவளுக்கு ஜுரம் சரியாகற வரை அவளோட ஆயா வீட்ல போய் தங்கிக்கறோம். மீனாக்கா ஹாஸ்பிடல்ல இருந்து வர இன்னும் நாள் இருக்கு. வீட்டுக்கும் ஹாஸ்பிடலுக்கும் அங்க இருந்தே சமைச்சு கொண்டு வரேன். சாலையும் பக்கத்துலதான் இருக்கு. நாங்க வரோம்” என்றவன், மேதாவைப் பேச விடாது, கைப்பிடியாக இழுத்துக்கொண்டு வாசலுக்கு நடந்துவிட்டான்.

இரவு ஏழாவது மணிக்கெல்லாம் டாணென்று உப்புமாவும் சட்டினியும் வந்தது. மீனாவுக்கென சோறும் பீர்க்கை கூட்டும், கறிவேப்பிலை துவையலும் செய்திருந்தான்.

ஆயா வீட்டுப் பணிப்பெண்ணின் கணவன் ஆட்டோ வைத்திருக்க, வைரவன் அவனையே டெலிவரி பாயாக நியமித்துக் கொண்டான். வேளா வேளைக்கு எடுப்பு சாப்பாடு வந்ததே தவிர, வைரவன் வீட்டுப் பக்கமே வரவில்லை. ஜீவா மட்டுமே தினமும் வந்து பார்த்துச் சென்றான்.

********************

அடித்துப் போட்டதுபோல் காய்ச்சல் அடித்ததில், தூங்கியே பொழுதைக் கழித்த மேதா, வைரவனை அருகிலேயே நெருங்க விடவில்லை.

“உனக்கும் ஒட்டிக்கும் ராசு”

“பரவாயில்லடீ, சுடுதான்னு பாக்க விடேன்”

“மீனா அண்ணிக்கு, ஆன்ட்டிக்கு, நிலாக்கு சாப்பாடு தரணும். குட்டிப் பாப்பா வேற இருக்கான்”

ஏற்கனவே, தனக்குள் கோபத்தில் கனன்றவனுக்கு, அவள் தொட வேண்டாமென்றது அர்த்தமில்லாத கோபத்தை விசிறிவிட்டது.

சமைப்பதும், சாலைக்குச் செல்வதுமாக இரண்டு நாள் கழிய, மற்ற வீட்டு வேலைகளை சுப்பு பார்த்துக் கொண்டதில், நேரம் கிடைக்க, ஒரு விதத்தில் தனியாக இருப்பதை நிம்மதியாகக் கூட உணர்ந்தான்.

அதற்கு மாறாக, மேதா தன்னால்தான் இப்படி, வீட்டுக்குத் தேவையான நேரத்தில் தானும் உதவாமல், வைரவனையும் இங்கே இழுத்துக்கொண்டு வந்திருப்பதில் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.

மூன்றாம் நாள், மேதாவின் காய்ச்சல் நன்கு இறங்கி இருக்க, மீனாக்ஷியையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வர, வைரவன் மருத்துவமனைக்குச் சென்றான்.

டிஸ்சார்ஜ் செய்வதற்காகவே காரை எடுத்து வந்திருந்த நந்தகுமார் பணம் செலுத்த விழைய, தடுத்த வைரவன் தானே கட்டினான்.

எல்லாவற்றையும் செட்டில் செய்துவிட்டுக் கிளம்ப மாலையாகிவிட, நந்தகுமாரின் காரில் எல்லோரையும் ஏற்றிவிட்டவன், வீட்டுக்குப் போகாமல் அங்கிருந்தே கிளம்பிவிட்டான்.

வைரவன் அப்படி சென்றுவிடுவான் என்பதை சற்றும் எதிர்பாராத வீட்டினருக்கு அதிர்ச்சி என்றால், திரும்பி வந்தவனைப் பார்த்து மேதா பதட்டமடைந்தாள்.

வந்தவன் குளித்துவிட்டு, இட்லி, பயத்தம்பருப்பு சாம்பார், சோறு, புதினா துவையல் செய்து பேக் செய்து அனுப்புவதற்கு ஆளை அழைக்க, மேதா “நாமே போகலாம் வாங்க” என, மறுத்தான். மேலும் இரண்டு நாள்கள் சென்றது.

“ராசுக்குட்டீ, எதுக்கு இவ்ளோ கோபம்?”

“கோபமில்லடீ, வருத்தம். ஏன்டா வீட்டுக்கு வரலைன்னு யாராச்சும் கேட்டாங்களா? தினமும் ரெண்டு வேளை ஹாஸ்பிடல் போன அப்பா ஒரு தரம் இங்க வந்திருக்கலாம்ல?”

“...”

“குழந்தையைப் போய் பாக்க முடியலைன்னு வருத்தப் பட்டு மீனாக்கா கிட்ட தினமும் பேசின அம்மா உங்கிட்ட வேணாம், எங்கிட்ட பேசலாம்ல?”

“விடு ராசு” என்று அணைத்துக்கொள்ள,

“ம்ப்ச் போடீ, நீ கூட என்னைத் தொட விடல”

மேதா “Ban lifted” (தடை நீக்கப்பட்டது) என்று சிரித்தாள்.

“மோக்ஸ்” என்றவனின் குரல் கலங்கிக் கரகரக்க “ஸாரி டா”

“சரிடா, நீ மாடிக்குப் போ, நான் முன்னால, பின்னால கதவையெல்லாம் பூட்டிட்டு வரேன்”

“நாம சேர்ந்தே போகலாம்”

“சொன்னாக் கேளு அரசு, ப்ளீஸ்”

“என்னவோ செய், வரவர நீ கூட என் பேச்சைக் கேட்கறதில்ல” என்றபடி சுணங்கிக் கொண்டே சென்று மொட்டை மாடியில் போய் நின்றவன், கொலுசொலியில் திரும்பியவனின் விழிகளில் இன்ஸ்டன்ட்டாக போதை ஏறியது.

சோர்ந்திருந்தவனுக்கு ஸ்ருதியேற்ற, ழைரவன் ஆசைப்பட்ட பச்சை நிற ஹால்டர் பிளவுஸும், எலெக்ட்ரிக் வயலெட்டில் மெலிதான பச்சை பார்டர் போட்ட பட்டுப்புடவையும் அணிந்து நின்றிருந்தாள் மேதா.

“மோக்ஸ், மோகீ, மோகினி…” என தன்வசமிழந்தவன் மலையிறங்க, மறுநாள் இருவரும் வீட்டிற்குச் சென்றனர்.

நந்தகுமார் ஊர் திரும்பி இருக்க, தணிகைநாதன் மட்டும் மேதாவின் உடல்நிலை பற்றிக் கேட்டார். வழக்கம்போல் நிலாதான் சூழலை இயல்பாக்கினாள்.

பேர்சூட்டும் விழாவைப் பற்றிப் பேச்சு வர “ஆம்பளப் புள்ளை, இடுப்புக்கு அரணா, நாய்க்காசு, தாயத்து, தம்பித்தோழன், மணி எல்லாம் வாங்கணும்…”

“...”

“வைரவா, உங்கிட்டதான் பேசறேன்”

“எங்கிட்ட இப்ப சுத்தமா பணம் கிடையாது” - வைரவன்.

தணிகைநாதன் “வள்ளி, பொறுமையா இரு. எதை, எப்ப செய்யணும்னு முடிவு செய்யலாம்”

“ஏன், நான் கேட்டா என்ன தப்பு, சாலை திறக்கக் கூட மாமா, மாப்பிள்ளை எல்லாம்
பணம் கொடுத்தாங்கள்ல? “

“...”

“வள்ளி”

“ஏன், பணமில்லாமலா ரெண்டு பேரும் மும்பைக்கு போய், படிச்சுட்டு வந்தாக?”

வைரவன் பதில் பேச வாயெடுக்கும் முன், மேதா “எங்கிட்ட கேளுங்க, நான் சொல்றேன், அது என் பணம்” என்றிருந்தாள்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 25 - FINALE 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
24
Super sister. என்ன இப்பிடி இன்னும் புரிஞ்சிக்காம வள்ளியம்மாள் இருக்காங்க
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
வள்ளியம்மாளிடம் இதை எதிர்பார்க்கவில்லை.
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️இருந்தாலும் மேததாவோட ராசுகுட்டிய இப்படி ரவுண்டு கட்டுறீங்க, பயபுள்ள பிறக்குறப்பவே வரம் வாங்கிட்டு வந்துருக்கான் 🙄🙄🙄🙄🙄
 

Vidhushini

New member
Joined
Aug 11, 2024
Messages
2
இப்போ இத்தனை கேள்விகள் கேட்கிற வள்ளியம்மை, தன் மாமனார்-மாமியார்(?!)கிட்ட ஏன் கேட்கலை? வைரவன் திறமையை அவங்க உபயோகித்துக் கொண்டது எல்லாம் தெரியும்தானே?
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

"Ban lifted"..🙈🙈🙈

இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை
தனிமையிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீது தப்பில்லை

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

"Ban lifted"..🙈🙈🙈

இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை
தனிமையிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீது தப்பில்லை

உரிமையும் உறவும் இருக்கும்போது why not?🙈🙈😍
 
Top Bottom