• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 22

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 22


பா
லுக்கு அழும் குழந்தையைக் கூடக் கண்டுகொள்ளாது அழுது கரைந்த ராகவியைத் தட்டிக் கொட்டி சமாதானம் செய்து, தாய்க்கும் சேய்க்கும் எண்ணெய்க் குளியல், மதிய உணவு என எல்லாம் முடியவே மதியம் இரண்டரை மணியாகிவிட்டது.

கோபமாக வெளியில் சென்ற ராமநாதன், அலுவலகத்திற்கு வந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தவர், லஞ்ச் வேண்டாமென்றார்.

எப்போதும் மதியநேரத்தில் பாலாவையும் தூங்கவிடாது, தானும் தூங்காத நளினியால், குழந்தை பிறந்ததிலிருந்து அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை.

இன்று ராகா, குழந்தை, ஆயா என எல்லோரும் உறங்கிவிட, அசதி மிகுந்ததில் நளினி பாலாவை வலுக்கட்டாயமாக உறங்க வைத்துத் தானும் கண்ணயர்ந்தாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு வாசல் கதவு தட்டப்படும் சத்தமே கேட்கவில்லை. முதலில் கண் விழித்த பாலா, வாசல் கதவை அவன் திறக்கக் கூடாதென்று நிபந்தனை இருந்ததால், நளினியை எழுப்பினான்.

தூக்கக் கலக்கத்தில் மந்தமாக எழுந்து சென்று கதவைத் திறந்தவளுக்கு, வாசலில் நின்ற மாப்பிள்ளை சிவானந்தனைப் பார்த்ததில் தூக்கம் போன இடம் தெரியவில்லை.

இரண்டு நாள் முன்புதான் சென்றவன், நேற்று தம்பியின் கல்யாணம் முடிந்து இன்று மீண்டும் இங்கே வந்திருக்கிறான் என்றால்…

காலையில் அழுதுகொண்டே மொபைலுடன் அறைக்குள் சென்று கதவை சார்த்திக்கொண்ட ராகவி அழைத்துதான் வந்திருக்கிறான் என்று புரிந்தது. கைப்புண்ணுக்குக் கண்ணாடியா?

‘முட்டாள் பெண், அப்பாதானே, ரெண்டு வார்த்தை சொன்னாதான் என்ன? அதுக்குள்ள இவரை வரச்சொல்லி… என்னத்தையெல்லாம் சொன்னாளோ தெரியலையே’

“வாங்க தம்பி. ராகாவும் குட்டியும் இதோ, இப்பதான் தூங்கறாங்க”

தண்ணீர் கொணர

சமையலறைக்கு வர, ஆயா எழுந்து வந்திருந்தார்.

“என்னடீ நளினி இது?” என்றார் கவலையாக.

பின் வாசல் படிக்கட்டில் நின்று கணவனுக்கு அழைத்த நளினி “உடனே வாங்க மாமா”

தேநீரை வாங்கிக்கொண்ட சிவானந்தன் ஒரு தலையசைப்புடன் மனைவி இருந்த அறைக்குச் சென்றான்.

ஐந்தரை மணிக்கு மேல் ராமநாதன் வந்து சிறிது நேரத்திற்குப் பிறகுதான் இருவரும் வெளியே வந்தனர்.

“வாங்க சிவா, கல்யாணமெல்லாம் நல்லபடியா நடந்துச்சா?”

“ம், நடந்துச்சு மாமா”

அவன் மனைவியும் மகளும் இங்கிருக்க, ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்?

ராமநாதன் “அக்கா, சாப்பிட ஏதாவது…?”

“இதோ” என்றபடி பஜ்ஜியுடன் வந்தாள் நளினி.

வாழை, உருளை, வெங்காயம் என பஜ்ஜிகளை சட்டினியில் தோய்த்து நிதானமாக உண்டவன் திடீரென “மாமா, ராகவியையும் பாப்பாவையும் நாளைக்குக் காலைல ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றதில் ராமநாதன் எழுந்து நின்றுவிட்டார்.

நளினிதான் “என்ன தம்பி இது, இன்னும் இருபது நாள் கூட ஆகாத குழந்தையை எப்படிக் கூட்டிட்டுப் போவீங்க? ராகாவுக்கு இன்னும் பத்தியம் முடியல. ரெண்டு பேர் உடம்பும் தேற…”

“அங்க போய் பாத்துக்கறோம்”

ஆயா “நல்ல நாள் பார்த்துதான் அனுப்பணும் மாப்பிள்ள, உங்க வீட்ல இருந்து வந்து முறையா அழைச்சிக்கிட்டுப் போகணும்”

தன்னை மீட்டுக்கொண்ட ராமநாதன் “இது உங்க அம்மா அப்பாக்கு… ஐயா, ஆச்சிக்கெல்லாம் தெரியுமா?”

‘குழந்தை பொறந்ததுல இருந்து பேர் வைக்கிற வரைக்கும் முக்காவாசி நாள் அங்கதான் இருந்த. தம்பிக்கும் நேத்துதான் கல்யாணமாகி இருக்கு. எத்தனை நாள் டா கடைல ஆள் இல்லாம அட்ஜஸ்ட் பண்ணிட்டே ஓட்ட முடியும்?” - என்ற தந்தை,


“ வியாபாரம் பண்றவன் இப்படி வாரக்கணக்குல விட்டுட்டுப் போக முடியுமா சிவா? நஷ்டமானா பரவாயில்லைன்னு அலட்சியப் படுத்த நாம என்ன விலை குறைஞ்ச பண்டத்தையாடா விக்கறோம்?” - என்ற ஐயா,

“ஊர் உலகத்துல யாருக்கும் குழந்தை பொறக்கலையா, இப்படி மாமனார் வீட்டுக்கு அடிக்கடி போனா நல்லாவா இருக்கு?” என்ற அம்மா,

“சிவா கண்ணு, உன் பொண்டாட்டி, புள்ளைதான். புதுக்குழந்தையைப் பாக்க ஆசை இருக்கும்தான், இல்லைங்கல. ஆனா, புள்ள பெத்தவ ஓய்வா இருக்கணும்பா. ராத்திரி பகல் இல்லாம, காரணமில்லாம அடிக்கடி அழும். அவ தூக்கம் கெடும். புள்ளை தூங்கும்போதே அவளும் தூங்கினாதான் உண்டு.

“அது மட்டுமில்லாம, பத்தியம் சமைக்கறது, குழந்தைத் துணிய தோய்க்கிறது, புள்ள பெத்தவளுக்கு மருந்து, எண்ணெய்க் குளியல், குழந்தை அழும்போதெல்லாம் கூடவே கண்ணு முழிக்கிறதுன்னு அவ அம்மா, ஆயாக்குமே பொழுது சரியா இருக்கும்.

வீட்ல ஒரு குழந்தை இருந்தா நம்ம நேரத்தை எல்லாம் கொண்டு போயிடும்டா. எத்தனை பேர் இருந்தாலும் வேலை இருக்கும். இதுல அவங்க பையனை வேற கவனிக்கணும். அவங்கன்னா அந்த பத்திய சாப்பாடையே கூட சாப்பிட்டுக்குவாங்க. மாப்பிள்ளைக்கு அதையே போட முடியுமா, நம்மால அவங்களுக்குத் தொந்தரவு கூடாதுப்பா” என்ற அப்பத்தா என எல்லோரது பேச்சையும் மீறித்தான் சிவானந்தன் இங்கு வந்திருக்கிறான்.

காலையில் கடைக்குக் கிளம்பும் நேரம், மனைவி “இப்பவே கிளம்பி இங்க வாங்க சிவா, என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுங்க” என காரணம் சொல்லாது அழுதுகொண்டே அழைப்பு விடுத்தால் அவனும்தான் பாவம், என்ன செய்வான்?

மாமனாரின் நேரடிக் கேள்வி சங்கடத்தைத் தர, ராகவியைப் பார்த்தான்.

“நான் அவரோட எங்க வீட்டுக்கே போறேன்” என்றவளைப் பெரியவர்கள் மூவரும் அதிர்ச்சியும் ஆயாசமுமாகப் பார்த்தனர்.

‘இது என்ன பொறுப்பற்ற தனமும், சொல் பொறுக்காது தப்பிக்கும் எண்ணமும்?

பிரசவித்த மருமகளையும் பேரக்குழந்தையையும் புகுந்த வீட்டினர் முறைப்படி அழைக்காது எப்படி அனுப்புவது?

கர்ப்ப காலம் முழுதும் இங்கே வரவிடவில்லை என்று புகார் படித்துவிட்டு, இப்போது பதினெட்டு நாள் குழந்தையுடன் அனுப்பினால், காரணம் என்னவென்று சொல்லுவது?

பெற்றவர்களே சரியாகக் கவனிக்கவில்லை என புகுந்த வீட்டில் வெளிச்சம் போட்டுக் காட்டவா? அப்படி என்ன குறைச்சல் இங்கே, ராகவிக்கும் குழந்தைக்கும் தேவையானதை எடுக்க, கொடுக்க என பாலா கூட உதவுகிறான்.

குழந்தைகளுக்குத் தேவையானதை செலவழிப்பதில் என்றுமே கணக்குப் பார்த்ததில்லை. இதைவிட வேறென்ன வேண்டும்?

இது பெற்றவர்களுக்கு அவமானத்தைத் தரும் என்று இவளுக்குப் புரிகிறதா இல்லையா?’

சிவானந்தனின் எதிரே மகளைக் கடியவும் முடியாது, ராமநாதனும் நளினியும் வார்த்தைகளைத் தேடினர்.

நளிளி கவலையுடன் “ராகா ஏதாவது சொன்னாளா தம்பி?”

மனைவியின் தரப்பு ஆதங்கம் அனைத்தையும் கேட்டிருந்தாலும் சிவா கப்சிப்.

ராமநாதன் “ஏன் ராகா, இப்படி அவசரமா அவரை வரவழைச்சு ஊருக்குப் போற அளவுக்கு இப்ப என்ன நடந்துச்சு?”

“...”

“உன் இஷ்டத்துக்கு ஊருக்குப் போன ரெண்டாம் நாளே மாப்பிள்ளையை வரவழைச்சு, திடுதிப்புனு நீ குழந்தையோட அங்க போய் நின்னா, அவங்க வீட்ல என்ன நினைப்பாங்க?”

சிவானந்தன் “அதெல்லாம் நான் பாத்துக்கறேன் மாமா”

சற்று நிதானித்த ராமநாதன் “அவங்க குறை சொன்னா, பதில் சொல்ல முடியும் சிவா, மனசுல நினைக்கறதை…? தேவையில்லாம எங்க மேல அழுத்தமா ஒரு அபிப்பிராயம் வராதா?”

குரலை உயர்த்தாது சமனாகப் பேசியவரைக் கண்ட சிவானந்தனுக்கு, மனைவி அழுததும் கேள்வி கேட்காது ஓடிவந்தது தவறோ எனத் தோன்றியது. அதனால்,

“ராகவி எல்லாம் சொல்லிட்டா. நான்தான் உங்ககிட்ட எதையும் சொல்ல வேணாம்னு சொன்னேன். பெரியவங்க பார்த்துக்குவாங்கன்னு எங்க வீட்லயுமே நான் அதிகம் பேச மாட்டேன். அதைவிட தானா சரியாகுற விஷயத்துல கருத்து சொல்லி பேரைக் கெடுத்துக்க எனக்குப் பிடிக்காது. அமைதியா ஒதுங்கிடுவேன். ராகவி கிட்டையும் அதையேதான் சொன்னேன்” என ஈதிபாதியாக நீண்ட விளக்கமளித்தான்.

‘அவன் வீட்டில் அவனைப் பற்றித் தெரியும். மாப்பிள்ளையின் சுபாவம் என நாமும் ஏற்கலாம். ஆனால் நமது ஒதுக்கம் அடுத்தவரை பாதிக்கும்போதும் அமைதியாகவே இருந்தால்…?

“அமைதியா போறது நல்லதுதான் சிவா. அது மூணாவது மனுஷங்க விஷயத்துல. நம்ம வீட்டுக்குள்ளயே அப்படி இருந்தா எப்படி?”

“நான் யாரோடயும் பிரச்சினை வராம இருக்கணும்னு நினைக்கிறேன் மாமா”

“பேசாம ஒதுங்கி இருக்கறதை அமைதின்னும் எடுத்துக்கலாம், அக்கறையின்மை, அலட்சியம்னும் எடுத்துக்கலாமே?”

வீட்டு மாப்பிள்ளை கோபித்துக் கொள்ளப் போகிறாரே என, ஆயா “தம்பி, பொறுமையா பேசுப்பா”

“நான் குறையா சொல்லலைக்கா. எல்லா நேரமும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது இல்லையா?”

“என்ன சொல்ல வரீங்க மாமா?”

“நீங்க பாலாவை பத்தி ராகாக்காக உங்க வீட்ல பேசி இருக்கலாம். அது போகட்டும். பிரக்னென்ஸி சமயத்துல அவனைப் பார்க்க பயமா இருக்குன்னு அவளே சொல்லிட்டா”

ராகவி “அப்டி இல்ல டேடி..”

“லீவ் இட் மா. சிவா, அட்லீஸ்ட் உங்க தம்பி ஒவ்வொரு தரமும் மேதா கிட்ட தப்பா பேசினபோதும், நாகரிகமில்லாம முரட்டுத்தனமா நடந்துக்கிட்டபோதும் கூட நீங்க வாயைத் திறக்கல. எம் மகளும் எதுவும் பேசல. அவரை கண்டிச்சு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, அவருக்கு ஒரு பயம் இருந்திருக்கும்”

“...”

“அன்னைக்கு சபைல வெச்சு பொண்ணு கேட்டபோதும் நீங்க எதுவும் பேசலை. நான் உங்க ரெண்டு பேருக்குமே தெரியாதுன்னு நினைச்சேன்”

“...”

“இங்கேயே இருக்கேன்னு சொன்ன மேதாவை சம்பந்தி சொன்னதை மறுக்கக் கூடாதுன்னு சொல்லி மரியாதை கொடுத்து அனுப்பினதுக்கு என்னென்னவோ நடந்து போச்சு”

“...”

“நீங்க கூட எங்க கிட்ட சொல்ல வேணாம். உங்க வீட்டு விஷயம் உங்களோட. ஆனா, எம் மக மேதா சம்பந்தப்பட்ட விஷயத்தைக் கூட ராகவி எனக்கு சொல்லாததுதான் எனக்கு வருத்தம். அதைத்தான் அவகிட்ட கேட்டோம்”

“...”

“எங்க மகளையே அவ இப்படித்தான்னு புரிஞ்சுக்க முடியாதபோது, உங்களைச் சொல்ல என்ன இருக்கு?”

நளினி ‘போதும் மாமா’ என்பதாக ஜாடை காட்டினாள்.

“சிவா, நான் எம்பொண்ணு, எம் மாப்பிள்ளைன்னு தான் மனசுல இருந்ததை, அதுவும் ராகா உங்களை தொந்திரவு செஞ்சு வரச்சொன்னதால சொல்லிட்டேன்”

“பரவாயில்ல மாமா”

“ராகா, இப்பவும் நீ உங்க வீட்டுக்கு உடனே போகணும்னு நினைச்சா, நானே சம்பந்தி கிட்ட பேசறேன்”

ராகவி “இல்லப்பா, இல்லப்பா” என்று அழுததிலும், நடந்த விவாதத்திலும் வேர்த்து, சோர்ந்தாள்.

ஆயா “நளினி நேரமாகுது பாரு, ராகாக்கு முதல்ல சூடா ஹார்லிக்ஸ் கரைச்சு குடு. நான் போய் இட்லி வைக்கிறேன்” என்றார்.

குழந்தை அழவும் ராகாவுடன் உள்ளே சென்ற நளினி “திடீர்னு நீ போய் நின்னா எங்களுக்கு அது தலைக்குனிவுன்னு உனக்குத் தோணலையாடீ? எங்க கிட்ட பிணங்கிக்கிட்டுப் போய், அவங்க ஏதாவது சொன்னா, உடனே அங்கிருந்து ஓடி வருவியா?”

“...”

“நாங்க கேட்டதுக்கே படபடத்து வருதே, உங்க மாமியார் பேசினா? அங்க போய் இப்படி நைட்டிய போட்டுக்கிட்டு ரிலாக்ஸ்டா இருக்க முடியுமா?”

“அம்மா”

“உன் புருஷன்தான், உன் வீடுதான். ஆனா, அதுக்காக மூளையையும் மனசாட்சியையும் கழட்டி வெச்சுட்டு நல்ல பேர் வாங்கணும்னு அவசியமில்லை. உன்னை சண்டை போட சொல்லலை. உன் நிலைல திடமா நில்லு, உனக்கு சரின்னு படறதைப் பேசிப் பழகுன்னுதான் சொல்றோம். சிவாவோட அமைதியை, தப்பை சுலபமா மன்னிச்சுடுவாங்க. நீதான் சுயநலவாதி, பச்சோந்தின்னு பேர் வாங்குவ. புரிஞ்சு நடந்துக்க”

மறுநாள் அதிகாலையில் சிவா மட்டும் காரைக்குடிக்குப் புறப்பட்டுச் சென்றான்.

********************

ஜோதிராமலிங்க கற்பகவிநாயகர், தொடர் மழையினால் ஓரளவு தண்ணீர் ஓடிய தேனாற்றைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்க, அவரையே பார்த்தபடி இருந்த வைரவனைப் பார்ப்பதும், அணில், காக்கா, குருவியை எண்ணுவதுமாகப் பொழுதைக் கடத்தினாள் மேதா.

காலையில் அவள் எழுந்து, மாடிப்பகுதியை சுத்தம் செய்து, குளித்துத் தயாராகி வரும்போதே கணவனும் மாமனார் மாமியாரும் ஏதோ தீவிரமாகப் பேசியதில்
மீனாக்ஷிக்கு வளைகாப்பு என்று தெரிந்தது.

காலையில் ஒரு பொங்கல், சாம்பார், சட்னியை வைத்தவன், லதாக்கு தக்காளி சாதம் தாளித்து, வீட்டில் இருந்த ஜீவாவிடம் “மதியத்துக்கு சோறு மட்டும் வைடா. சிப்ஸ் வாங்கிக்கலாம். சாம்பார் இருக்கு. நாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரோம்” என மேதாவையும் கிளப்பிக்கொண்டு இங்கே வந்து விட்டான்.

“அரசு, என்னன்னு சொல்லேன்”

தீவிர சிந்தனையில் இருந்தவனிடம் பலமுறை இந்தக் கேள்வியைக் கேட்டு கவனத்தைக் கலைக்கும் முயற்சியில் மேதாவிற்குப் படுதோல்வி.

என்னவென்று சொல்லுவான்? வந்திருக்கும் ஆர்டர்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் பொருட்களை அனுப்ப வேண்டுமெனில், தங்கம், வெள்ளி, தேவையான கற்கள், கூலி என எத்தனை இருக்கிறது?

அதோடு புதிதாக மூன்று சிறுநகைகளின் டிஸைன்களின் மாதிரியை செய்ய வேண்டும். சைட்டில் இருப்பவை ஒவ்வொன்றிலும் குறைந்தது நாலைந்தாவது கைவசம் இருந்தால்தான் சரிவரும்.

இளம்பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள் மத்தியிலுமே வெள்ளி நகைகளின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதில், அவர்களுக்கும் சில டிஸைன்களை உருவாக்கி வைத்திருக்கிறான்.

அதைத் தயாரிக்க முதலீடு செய்ய வேண்டும். பட்டறை வைக்கப் பணம் வேண்டும். தனியாகப் போவதெனில் வீட்டுக்கு அட்வான்ஸும், குறைந்தபட்ச சாமான்களும் வாங்க வேண்டும்.

பெங்களூர் ஒப்பந்தத்தில் கிடைத்த பணம், அந்தப் பெரிய நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்ததில் வர வேண்டிய தொகை என எல்லாவற்றையும் சேர்த்து இவன் ஒரு கணக்கு போட, தாயும் தமக்கையும் சேர்ந்து வாழ்க்கைப் பாடம் எடுக்கின்றனர்.

இன்னும் ஆறு மாதத்திற்குள் மீனாக்ஷியின் பிரசவம், செல்லியின் மேற்படிப்பு என செலவுகள் தொடர்கதையாக இருக்கும் நிலையில், அக்கா கேட்கும் பவள வளையலை செய்யக் குறைந்தது ஐந்து முதல் ஆறு பவுனாகும். அதைத்தவிர, புடவை, வேஷ்டி, சட்டை, பலகாரம், போக்குவரத்து என அஞ்சு லட்ச ரூபாயைக் கொடுத்து விட்டால், ஆன்லைன் வியாபாரத்தை இழுத்து மூட வேண்டியதுதான்.

முதலில் எடுத்துக்கொண்ட ஆர்டர்களையாவது செய்து தர வேண்டுமே?

இனிமேல் சிந்தித்துப் பலனில்லை என்றாலும், தன்னால் தன் மனைவியும் அவளது தொழிலில் முன்னேறாது, காதல் என்ற பெயரில் தன்னோடு சேர்ந்து அவளும் இழுபடுவது வருத்தமளித்தது.

அதுவும் கோவையில் அவளது வீட்டில் இருந்த வசதியைப் பார்த்ததில் இருந்து ஒருவித இயலாமை மனதை உறுத்துகிறது.

ராகவிக்கு வளையல், தண்ணீர்மலைக்குப் பணம் என சீர் செய்த பிறகு தந்தையிடம் அவ்வளவு ஓட்டம் இருக்காதெனத் தெரியும். கடன் வாங்கினாலும் அதன் மதிப்பிற்கு இணையான பாதுகாப்போ,(Collateral security) சம்பளச் சீட்டோ கேட்பார்களே?

நகைக்கடையிலேயே பிறந்து வளர்ந்தவனுக்கு வீட்டுப் பெண்களின் நகைகளை அழிப்பதிலோ, அடமானம் வைப்பதிலோ உடன்பாடில்லைதான்.

இருப்பினும் வள்ளியம்மையிடம் இருக்கும் நகைகளிலிருந்து ஒரு ஜோடி வளையல்கள் செய்யலாம் எனத் தோன்றாமல் இல்லை. ஆனால், அவர்தான் அது பற்றிப் பேசவே இல்லையே?

‘சேச்சே, அது எதுக்கு, முடிஞ்சவரை சமாளிப்போம்’ என நினைத்தவனுக்கு அதற்கான வழி எதுவும் புலப்படாததில் பெருமூச்சு வந்தது.

மழை வரும் போல் மேகம் கூடி குளிர் காற்று வீச, கண்கள் சொருகியது. இதமான அணைப்பிலும் மெத்தென்ற ஸ்பரிஸத்திலும் மனைவியை உணர்ந்து ஒரு நொடி முகத்தை ஆழப் புதைத்தவன், சூழல் உறைக்க “என்னடீ செய்யுற, விடு” என மேதாவை விலக்கினான்.

“ஈ, காக்கா கிடையாது வைரூ. நம்ம கல்புக்குட்டி பாத்தா பரவாயில்ல”

“பாவம்டீ, அவரே பேச்சிலர்”

“நார்த் இன்டியால கல்புக்கு சித்தி, புத்தின்னு ரெண்டு ஒய்ஃபாம்” என்றவள், பட்டென்று குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட, முகம் சிவந்து போனவன் “மேட்னி மோகினி” (Matinee)

“என்னன்னு எங்கிட்ட சொல்ல மாட்டியா ராசு?”

“சொல்றேன், உக்காரு. பசிக்கலையா உனக்கு?”

“பசிக்குது”

“சரி, வா சாப்பிட்டுகிட்டே பேசலாம்” என அன்னலக்ஷ்மிக்கு அழைத்துச் சென்றான்.

“ஐய், ஹோட்டலுக்கா” என்றவள் உடனேயே “வேணாம் ராசு, எதுக்கு வீண் செலவு?”

“...”

“ஸாரி ராசு. லஞ்சுக்கு அப்புறம் எனக்கு டபுள் ஸ்வீட் பான் வேணும்”

“டன்”

“********************

வள்ளியம்மையின் நகைகள் குறித்து வைரவன் நினைத்ததையே தணிகைநாதன் மனைவியைக் கேட்டார்.

“அம்மாடீ, உன்னோட வளையல்ல இருந்து ஒரு ஜோடியை மீனாக்கு குடுக்கலாம்ல”

“புரியாம பேசாதீங்க. இது பழைய மாடல். போட்டு வாங்கினாலும் கூடதான் பணம் குடுக்கணும். வைரவன் கிட்ட இருந்தா செய்யட்டுமே”

“இது சரியில்லை வள்ளி. நீ இப்படிப் பேசுவன்னு நான் கொஞ்சங்கூட நினைக்கலை”

“என்ன, என்ன பேசினேன், பொண்டாட்டிக்கு செட்டு செட்டா ட்ரெஸ்ஸு வாங்கித் தரான். திடீர்னு பெங்களூர் போனாங்க. பிஸினஸ் பண்றேன்னான். இப்ப என்னன்னா தனிக்குடித்தனம் போறேன்றான். பணமில்லாமலா இதையெல்லாம் செய்யறான்?”

“வள்ளி”

“நாளைக்கே அவன் தனியா போய்ட்டா, புள்ளை குட்டின்னு பொறந்துட்டா… என்னோட நகை இருந்தா லதா கல்யாணத்துக்கு கொஞ்சமாவது உதவும்ல”

“அவனும் முன்னேற வேணாமா வள்ளி, ஆம்பளைப் பையன்ங்கறதுக்காக எத்தனை தாங்குவான்? இந்த முறை நான் மாப்பிள்ளை கிட்ட பேசத்தான் போறேன்”

“இப்ப பேசுறேன்றவர் மீனாவோட கல்யாண சமயத்துலயே பேசி இருக்கலாம். எவ்வளவு முறை சொன்னேன்? எம் புள்ளை நல்லா இருக்கக்கூடாதுன்னு எனக்கென்ன வேண்டுதலா? நீங்க மட்டும் செயலா இருந்தா, நான் ஏன் அவனை எதிர் பார்க்கறேன்?”

குறி தன்னை நோக்கித் திரும்பவும், தணிந்தார் தணிகைநாதன். இவர்களது வாக்குவாதத்தைக் கேட்டிருந்த ஜீவாவிற்குத் தன் உணர்வுகளைக் காட்டத்தான் ஆளில்லை.

வைரவனும் மேதாவும் உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பார்வதி ஆச்சி மகனை அழைத்தார்.

“தணிகா, வழக்கம்போல பிள்ளையார் நோன்புக்கு எல்லாரும் வந்துடுங்க. வீட்ல புதுசா ரெண்டு கல்யாணம் ஆகி இருக்கு. குழந்தை பொறந்திருக்கு. மீனாக்கு நல்லபடியா பிரசவம் ஆகணும். நோன்பை நல்லா செய்யணும்யா. புது சம்பந்தியும் சீர் வைக்க வராங்க. நீ இப்ப இங்க வரியா?”

“இதோ ஆத்தா”

தணிகைநாதன் விஷயத்தைச் சொல்லி விட்டுக் கிளம்ப, வள்ளியம்மை “ கல்யாணம் எப்படி நடந்தாலும், பொண்ணு வேற இனமா இருந்தாலும் பிள்ளையார் நோன்புக்கு பொறந்த வீட்டு சீர் வருது பாரு”

இரவின் தனிமையில்…

மேதாலக்ஷ்மி முகம் வாடி யோசனையில் இருந்தாள்.

“என்னடா மோக்ஸ்?”

“ஒன்னுமில்ல”

“அம்மா சொன்னதுக்காக வருத்தப் படுறியா?”

“ம்ப்ச், எங்கம்மாக்கு ஆயா இன்னும் வருஷா வருஷம் சீர் கொடுக்கறாங்க. சொல்லாம கல்யாணம் செஞ்சது தப்புதான். ஆனாலும் கஷ்டமா இருக்கு ராசு”

“அதை விடுடீ. நமக்காகவே ஆறடில கல்லாட்டமா கல்பு இருக்கும்போது, இதெல்லாம் ஒரு மேட்டரா?”

“ப்ச், உனக்குப் புரியாது வைரவ். நாம பேசாம எங்கேயாவது ஓடிப் போயிருக்கலாமோன்னு தோணுது”

“யு ஆர் ரைட்”

******************

பிள்ளையார் நோன்புக்கென எல்லோரும் பெரிய வீட்டில் கூடி இருந்தனர்.

கார்த்திகை மாதம். திருக்கார்த்திகை நாளில் தொடங்கி 21ம் நாள் சுக்ல பட்ச அஷ்டமி திதியும் சதய நட்சத்திரமும் கூடிய தினத்தில் நகரத்தார்களின் தனிச்சிறப்பான பிள்ளையார் நோன்பு கொண்டாடப் படுகிறது.

முன் காலத்தில் திருக் கார்த்திகை தினத்தன்று கடல் கடந்து வணிகம் செய்யச் சென்ற ஆண்கள், கடலின் சீற்றத்தில், தங்களது பாதுகாப்பு வேண்டி நோன்பு இருக்க, சரியாக இருபத்தி ஒன்றாம் நாள் கரை தென்பட, கையில் இருந்த பொருட்களைக் கொண்டு விநாயகரை வழி பட்டனர். இன்றும் அதைப் பின்பற்றுகின்றனர்.


அரிசியில் இழை மாவு தயாரித்து, அதில் கருப்பட்டிப் பாகைக் கலந்து மஞ்சள் பிள்ளையாரைப் போல் பிடித்து வைப்பர்.

புது வேட்டியில் இருந்து நாளுக்கொன்றாய் 21 இழை நூல் எடுத்து அவற்றில் திரியாகப் போடுவர். (மாவிளக்குப் போல)

ஐந்து வகைப் பொரி, கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம், எள்ளு உருண்டை, கடலை உருண்டை, கந்தரப்பம், மோதகம், உப்புக் கொழுக்கட்டை, சீடை, அதிரசம், வடை என பலகாரங்களுடன் வெற்றிலை பாக்கு பழங்களையும் நிவேதனம் செய்வர்.

இந்தப் பூஜையை வீட்டு ஆண்கள்தான் செய்ய வேண்டும். எத்தனை பேர் வீட்டில் இருக்கின்றனரோ, அத்தனை பிள்ளையார், கூடவே பிள்ளையாருக்கென ஒன்று என பிடிக்க வேண்டும். எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருப்பது அவசியம்.

திருமணத்தின்போதே மகளுக்கு சீராக வெள்ளியில் பிள்ளையார் தருவது வழக்கம். மணையில் கோலமிட்டு அதையும் வீட்டில் வழக்கமாக வைத்து வணங்கும் படத்தையும் வைத்துப் பூவால் அலங்கரித்துப் பூஜை செய்வர்.

விநாயகர் அகவல் படித்து, நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டியபின், இழைமாவில் செய்த பிள்ளையார்களில் தீபமேற்றி, வீட்டின் மூத்த ஆண் தீபம் எரியும்போதே உட்கொள்ளுவது வழக்கம்.
அவரவர் சகிப்புத் தன்மையில் மலையேற்றிவிட்டும் உண்பர்.
அதன்பின் வயது வாரியாக உண்ணக் கொடுப்பர்.

மாக்கோலமிட்ட மணையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட புராதனமான கற்பக விநாயகரின் படத்தை வைத்து, அதன் அருகில் அழுகு நாச்சி முதல், பார்வதி ஆச்சி, வள்ளியம்மை, தெய்வானை, ராகவி என எல்லோரும் சீராகக் கொண்டுவந்த வெள்ளிப் பிள்ளையார்களும் வெவ்வேறு வடிவில் இருக்க, பார்வதி ஆச்சி சொன்னதை செய்து கொண்டிருந்தாள் மேதாலக்ஷ்மி.

அவளது நேர்த்தியான இழைகோலத்தை தெய்வானை கூடப் பாராட்டினார்.

ஒன்பது மணிபோல் ஜோதியின் தாத்தாவும் பெற்றோரும் வந்தனர். சிவகங்கைதான் என்பதால், தோன்பு இல்லாவிட்டாலும் இவர்களது சமூகப் பழக்கம் அறிந்து வெள்ளிப் பிள்ளையார், அரிசி, வெல்லம், கருப்பட்டி என சீருடன் வந்திருந்தனர். அதுவரை மிரட்சியுடன் நின்ற ஜோதியின் முகத்தில் பெற்றோரைக் கண்டதில் பிரகாசம்.

நிவேதனம் பிள்ளையாருக்கென்றாலும் பிரசாதம் எல்லாருக்கும்தானே? அவை தயாராவதற்குக் காத்திருக்க, சக்கரை ஐயாவிடம் வந்த வைரவன் “ஐயா, இவரையும் சேர்த்துக்கங்க. இது மேதாக்காக” என்று நீட்டியது சிறிதான, ஆனால் அழுத்தமான கல்புவை.

ஆவாரம் பூ, மாவிலை மற்றும் பொங்கல் பூவால் குச்சியில் குடை போல் செய்து கொண்டிருந்த மேதா, தன்னை சமன் செய்து கொள்ள எழுந்து ஆச்சியின் அறைக்குள் சென்றாள். ஐயா ஆச்சியைப் பார்க்க, இதை மறந்து போனோமே என இருவரும் வருந்தினர்.

சிவானந்தனின் மகள் வரை இழைப் பிள்ளையார் பிடிக்கப்பட்டிருக்க, விளக்கேற்றி பூஜை தொடங்கும் வேளையில் ராமநாதனும் நளினியும் உள்ளே பிரவேசித்தனர்.

சிறிது சங்கடமான மௌனத்திற்குப் பின் “வா ஆத்தா, வாங்க ராமநாதன்” என்ற ஐயாவின் குரல் ஒலித்தது.

இரண்டு பெரிய தட்டுகளில் பழம், வெற்றிலை, தேங்காய், இனிப்பு என அடுக்கியவர்கள், இன்னொன்றில் பட்டுப்புடவை, வேஷ்டி, சட்டை வைத்து, நான்காவது தட்டில் ஓரிரு நகைப் பெட்டிகளும், வெள்ளிப் பிள்ளையாரும் வைத்து, ஐந்தாவதில் பூவும் மாலையும் வைத்து நீட்டினர்.

ராமநாதன் “ஐயா, எங்க பொண்ணுக்கு நோன்பு சீர் கொண்டு வந்திருக்கோம். நேரமில்லாததால ஒண்ணு ரெண்டு நகை கொண்டு வந்திருக்கோம். பொங்கல் சமயத்துல முழு சீரையும் செஞ்சிடறோம். நடந்ததை மறந்து எல்லாரும் பெரிய மனசு பண்ணி
ஏத்துக்கணும்” என்றவர், தணிகைநாதனையும் வள்ளியையும் நோக்கிக் கை கூப்பினார்.

என்றாவது ஒரு நாள் நடக்கப்போவதுதானே என்ற பாவனையில் ஐயாவும் ஆச்சியும் “அதுக்கென்ன, உங்க பொண்ணு, உங்க இஷ்டம்” என, தணிகைநாதன் ஆமோதிப்பாக இருந்தார்.

மேதாவின் தந்தை தன்மீது வைத்த குறைகள் அனைத்தும் அப்படியே இருக்க, வைரவன் இறுக்கமாக நின்றான்.

தந்தையின் வருகையில் ஸ்தம்பித்து நின்றவள் “குட்டிம்மா” என்றவரின் குரலில் நெகிழ்ந்து, வைரவனைப் பார்க்க, மிக மெலிதாகக் கண்ணசைத்தான். எத்தனை நாட்களுக்குப் பிறகான அழைப்பு!

“டாடி” என அருகில் சென்றவளை ராமநாதன் அணைத்துக்கொள்ள, பெற்றோர் இருவருமே கண் கலங்கினர்.

“நல்லா இருக்கியாடா?”

“டாடி”

“சொல்லுடா”

“ராசு ரொம்ப நல்லவர் டாடி” என மேதா அழுகையில் உடைந்தாள்.

மருமகளுக்குப் பிறந்த வீட்டுச் சீர் வந்ததில் ,அமைதியாக இருந்த வள்ளியம்மையின் பாதுகாப்பின்மை பன்மடங்கு உயர்ந்தது.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Manikodi

New member
Joined
Jun 19, 2024
Messages
12
மோகினி ஆட்டம் கலை கட்டும் என்று காத்திருந்து காத்திருந்து ஏக்கமா போச்சிதடி
 

Manikodi

New member
Joined
Jun 19, 2024
Messages
12
வள்ளியம்மை தங்கமான புள்ளைய நம்பாம இன்னும் கஷ்டபடபோறிங்க
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

இந்த வள்ளியம்மைக்கு என்னதான் வேணுமாம்? 😎😎 சீர் வரலையின்னும் குத்தம் சொல்றாங்க, இப்ப சீர் வந்ததுல பாதுகாப்பின்மை பன்மடங்கு உயர்ந்துச்சு..😏😏

கல்யாணம் கட்டிக்கிட்டு தானே ஓடி போக நினைச்சீங்க..😛😛

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

இந்த வள்ளியம்மைக்கு என்னதான் வேணுமாம்? 😎😎 சீர் வரலையின்னும் குத்தம் சொல்றாங்க, இப்ப சீர் வந்ததுல பாதுகாப்பின்மை பன்மடங்கு உயர்ந்துச்சு..😏😏

கல்யாணம் கட்டிக்கிட்டு தானே ஓடி போக நினைச்சீங்க..😛😛

சிறப்பு😍
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?😜😜😜😜😜
தெய்வானை தேவலை போல,
இந்த வள்ளிக்கு என்னதான் வேண்டுமாம்? நல்ல பிள்ளை மருமகளை படுத்தாதே கல்பு உன்னை சும்மா விட மாட்டார்
 

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
24
வேதா பொண்ணு வீட்டு side ல ராசியாகிட்டா வள்ளியம்மாள் சமாதானம் ஆகிடுவாங்க என்று பார்த்தால் இன்னும் முறுக்கிக்கிறாங்க
 

SRD.Rathi

New member
Joined
Jun 19, 2024
Messages
16
Mamiyar eppavume mamiyar thanoo.....
Eppama unaku puriya poguthu.....
Nalla irukura pullaiyai keduthuvidurathe neengathanma😡😡😡
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
அப்படிப்போடு மேதா! அடிபொலி அப்டேட்
 
Top Bottom