• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 21

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 21

திகாலை அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுந்த
மேளச்சத்தமும், அதைத் தொடர்ந்து நாதஸ்வரத்தில் இழைந்த கம்பீரநாட்டையும் அந்தத் தெருவுக்கே கல்யாணக் களையைக் கொடுத்தது.

வைரவன் வீட்டில் கீழே ஒவ்வொருவராகக் குளித்துத் தயாராகும் அரவம் கேட்டது.

மணி பார்க்கவென எழுந்து படிக்கும் விளக்கைப் போட்ட வைரவன் மனைவியைப் பார்க்க, இவனது அடர்நீல முழுக்கைச் சட்டையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் தூக்கத்திலும் சுண்டி இழுக்க, பல் பதியாமல், உதடுகளால் அழுந்த அவள் கன்னத்தை கடித்தான். மேதா அசைவேனா என்றாள்.

“மோக்ஸ், எந்திரிடீ”

“...”

கள்வெறி கொண்டவன் ஆழ்ந்து சுவாஸித்து “ம்ம்மோ…க்க்ஸ்”

“ம்… என்ன்ன?”

“அயர்ன் செஞ்ச சட்டைய ஏன்டீ எடுத்த?”

அவனது கேள்வி தாக்கியதில், தூக்கத்திலேயே வேகமாக “பெரிய்ய சட்டை… நீயே வெச்சுக்கோ…” என்றவள் திரும்பவும் உறங்கி இருந்தாள்.

மார்கழிக்கு சில நாள்களே இருக்க, வங்கக்கடல் வாரம் ஒரு முறை சீறியதில் தமிழகம் முழுவதும் நல்ல மழை. குளுமையான காலை நேரம். வைரவனுக்கும் கண்கள் சொருகியது.

மீண்டும் மேளச்சத்தம் உரத்து ஒலிக்க, எழுந்த மேதா கணவனை எழுப்பினாள்.

கண்களைத் திறந்தவனுக்கு, அடக்கப்பட்ட விளக்கொளியில் மனைவி தேவதையாகத் தெரிய, அவள் புறம் திரும்பித் தன்னிடம் இழுத்தான் .

“நீல மோகினி”

“அரசரே, பெருத்த சந்தேகம்”

“மேதாவி மேடத்துக்கே டவுட்டா, கேளு”

“இந்த வாட்டர் ஸ்நேக் அந்தப் பொண்ணோட எங்க, எப்டி.. . ஒன்னுமே புரியலை. ஹோட்டல்லயா, கடைலயேவா?”

“ரொம்ப முக்கியம்”

“ப்ச், குறுக்க பேசாத வைரூ,
ஒரே தடவைலயே ப்ரெக்னென்ட்டா… இல்…”

மேலும் அவளைப் பேசவிடாது தன்னோடு இறுக்கியவன், “அன்வான்ட்டட் ஆணி”

ஏழு மாதம் முடியும் தருவாயில் இருந்த மீனாக்ஷிக்கு அலைச்சல் வேண்டாமென நந்தகுமார் மட்டும் வர, எல்லோரும் தண்ணீர்மலையின் தட்கல் (Tatkal) திருமணத்திற்குக் கிளம்பினர்.


ஆளும் அம்பும் நீட்டிய இடத்தில் பாய்ந்திருக்க, காசும் பணமும் கலகலத்ததில் ஒரே நாளில் எவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமோ செய்திருந்தனர்.

எட்டு மணி போல் இரண்டு டெம்போ டிராவலர் மற்றும் மூன்று கார்களில் பெண் வீட்டார் வந்து இறங்கினர்.

மேதாவையும் வைரவனையும் தவிர, தெய்வானை உள்பட முதன்முறையாக ஜோதியைப் பார்த்த அத்தனை பேருக்குமே அதிர்ச்சிதான்.

மீனாக்ஷி வராததில் கிடைத்த திடீர் பதவி உயர்வில், தாலி முடியக் காத்திருந்த ஸ்வர்ணலதாவைத் திரும்பிப் பார்த்த தணிகைநாதனுக்குப் பகீர் என்றது.

தன் மகளை விட இரண்டு வயதுதான் மூத்தவளாக இருப்பாள். பார்க்க சிறு பெண்ணாக, பொம்மைபோல் இருந்தாள் ஜோதி.

வைரவன் தண்ணீர்மலையை அடித்ததும், சாலையில் மேதாவைத் தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டதும், அவளைப் பெண் கேட்டதுமே திருமணம் செய்து கொண்டதிலும் தவறில்லை என்று தோன்றியது.

ஜோதியின் தந்தை பல்பொடி, பால் முதல் கொசுவர்த்தி வரை தினசரித் தேவைகளுக்கான சகலமும் கிடைக்கும் கடை ஒன்று வைத்திருக்க, பணத்தேவை இருப்பதாகத் தெரியவில்லை. கல்லூரிக்குப் போகாமல் இந்த வேலைக்கு வந்தவள், தண்ணீர்மலையிடம் சிக்கினாள்.

தண்ணீர்மலையை சரியான பருவத்தில் சந்தித்ததில், அவனது தோற்றத்தில், ஸ்டைலில், பணத்தினால் வந்த மிடுக்கில், பக்குவமாக வறுக்கும் கடலையில் மயங்கியவளுக்கு, அவன் அதையே முழுநேரமாகச் செய்கிறான் என்று புரியவில்லை.

சீரான நிறமும் நீளமான கூந்தலும், அழகான உடலமைப்புமாக இருந்தவளின் தன் மீதான மயக்கத்தைப் புரிந்து ‘ஜோ குட்டி , ஜோ குட்டி என்றவன் குட்டியைக் கொடுத்து அவளையே ஜோக் ஆக்கி விட்டான்.

ஒரே வருடத்தில் வேலை, வருமானம், காதல், கலவி, கர்ப்பம், தற்கொலை முயற்சி என முழுதாக வாழ்க்கையைப் பார்த்தவளின் கண்களில் கலக்கம். அத்தனை பெரிய வீடும் ஆடம்பரமில்லாத, ஆழ்ந்த செல்வமும் மிரட்டியது.

தண்ணீர்மலையின் பசப்பு வார்த்தைகளும், வேற்றினப் பெண்ணைத் திருமணம் செய்வதை தன் வீட்டினர் ஒப்பமாட்டார்கள் என்றதும், தன் கருவைத் தானே அழிக்கப் பணம் தருகிறேன் என்றதும்...

உண்மையாகவே அவனில் மயங்கி, அவனை நேசித்தவளுக்கு அவனது முகமூடி கிழிந்து, நிஜமுக தரிஸனம் கண்டதில் பயங்கர அதிர்ச்சி.

சற்றே வயதில் மூத்த தோழி ஒருத்தி அழகுநாச்சியில் வேலை செய்ததில் இவளுக்கும் ஆசை வர வீட்டில் கெஞ்சிக் கூத்தாடிதான் வேலையில் சேர்ந்தாள். சும்மா இருப்பதற்கு பதில் மாசம் பிறந்தால் கையில் கணிசமாகப் பன்னிரெண்டாயிரம், ஏசியில் வேலை என முதல் மூன்று மாதங்கள் எல்லாம் நன்றாகத்தான் சென்றது.

தன் தோழியின் எச்சரிக்கையிலும், சுற்றுப்புறத்திலும் கவனத்தை வைத்திருந்தாலே இந்த நிலை வந்திருக்காது.


தண்ணீர்மலை எப்போது சிவகங்கைக்கு வருவான் என ஆர்வமாய்க் காத்திருந்த ஜோதியைத் தூண்டி எரிய வைத்துத் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டான்.

தனது கர்ப்பத்தைவிட, வீட்டில் வாங்கிய அடிகளை விட, வட்டம் வட்டமாக உறவுகள் கூடி செய்த பஞ்சாயத்தை விட, தான் மட்டும் கர்ப்பமாகவில்லை என்றால், இன்னுமே அவனிடம் மயங்கி, அங்கீகாரம் இல்லாத இந்த உறவை தொடர்ந்திருப்போம் என்ற எண்ணமே அவமானத்தைத் தர, மூன்று முறை தற்கொலைக்கு முயன்றாள்.

பாவம், சின்னப் பெண்ணுக்கு முதல் இரண்டுதரமும் கடைசி நிமிடத்தில் தைரியம் இல்லாது போக, மூன்றாம் முறையும் கொஞ்சம் ஆபத்தான நிலையில் காப்பாற்றி விட்டனர்.

இரண்டு மாதங்களாக கர்ப்பமானதுக்கு சபித்து அடித்தவர்கள், இப்போது அவளோடு சேர்த்துக் குழந்தையையும் கொல்லத் துணிந்ததற்கு வசைபாடினர்.

உரிமையில்லாத தொடர்பில் விளைந்த உயிரைச் சுமந்து, முகத்தில் கலக்கமும், பயம் நிறைந்த கண்களுமாக நின்ற ஜோதியிடம் சிறிதும் ஜீவனில்லை.

கல்யாண மாப்பிள்ளை
எந்த உணர்வையும் காட்டாது இறுகிய முகத்துடன் நின்றிருந்தான்.

கடலை போடுவதில் இருந்து, ரூம் போடுவது வரை பழகும் ஒவ்வொரு பெண்ணிடமும் வெவ்வேறு நிலையில் உறவைப் பராமரித்தவன், அந்தப் பெண்களில் யாரையுமே தன் மனைவிக்கான இடத்தில் வைக்கத் தயாராக இல்லை.

அவனிடம் பழகிய பெண்கள் அனைவரும் இத்தனை ஏமாளிகளா என்றால், ஆம் என்பதுதான் வருத்தமான உண்மை. தெரிந்தே பலர், தெரியாமல் சிலர்.

ஜோதியின் இளமையிலும் தன்மீதான அவளது மயக்கத்திலும் தண்ணீர்மலை கிறங்கினான்தான். ஆனால் அவளுடன் திருமணம் என்பதை இப்போது கூட முழு மனதாக ஏற்க முடியவில்லை.

வயிற்றுப் பிள்ளையை வழித்தெறிந்து விட்டு வேறொருவனைக் கைபிடிக்கும் அலட்சியத் திண்மை இல்லாத ஜோதி, கர்ப்பமாக்கிக் கை விட்ட அயோக்கியனையே திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி கேட்காது, நம் சமூகக் கோட்பாட்டின் கற்புநெறியின்படி(!), தண்ணீர்மலையின் தாலியை ஏற்றுத் தவறான தன் கணக்கை நேராக்கிக் கொண்டாள்.

நேரவிருந்த அவமானத்தைத் தடுத்து விட்ட நிறைவில் ஜோதி வீட்டினரும், பெண்ணின் சாபத்தைத் தவிர்த்த திருப்தியில் தண்ணீர்மலை வீட்டினரும் திளைத்திருக்க, வாழ்க்கை இனி தம்பதியின் கையில்…

இரவு…

வைரவன் ஏதோ கணக்கில் மூழ்கி இருக்க, அவன் மேலேயே மோதி விழுந்த மேதா, அவன் கையில் இருந்தவற்றைப் பிடுங்கி ஓரமாக எறிந்தவள், முகத்தை நிமிர்த்தி “ராசுக்குட்டீ…”

“இப்ப என்ன சந்தேகம்?”

“அது… அந்த வாட்டர் கேட்டுக்கும்(Water cat) ஜோதிக்கும் இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்லியா?”

“அதுக்கென்ன?”

“ஆனா அவங்களுக்கு இது ஃபர்ஸ்ட் டைம் இல்….”

மேதாவின் கன்னங்களை ஒரு கையால் அழுத்திப் பிடித்து, “உனக்கேன் இந்தக் கவலை?”

“ஒரு ஆர்வம்தான். அவங்களுக்கு அவங்களே செகண்ட் ஹேண்…”

மனைவியைக் கை எடுத்துக் கும்பிட்ட வைரவன் “உன்னோட மிடிலடீ, கொஞ்சமாவது வெக்கப்படுறியா?”

“உன்னைத் தவிர இதை நான் யார் கிட்ட கேட்க முடியும் ராசு?”

பக்கெனச் சிரித்த வைரவன் “மோகினிப் பிசாசு” என அணைக்க, திமிறினாள்.

வைரவன் “நான் தூங்கின அப்புறம் எழுப்பக்கூடாது”

“பிசாசோட என்ன மோகினியாட்டம், ஒன்னும் வேணாம் போ”

“அது வேணாம்னா லெட்’ஸ் ட்ரை கதகளி, குச்சிப்புடி”

“ம்… தப்பாட்டம்”

“அடிப்பாவி” என அடக்க மாட்டாது சிரித்த வைரவனின் பூனைக்கண்களின் ஒளிர்வில் மேதாவின் முகத்தில் நேசமும் நாணமும் நர்த்தனமாடியது.

அங்கே…

ஆண், பெண் உறவென்பது கற்பனைகளுக்குள் அடங்காதது, நம் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது.

கோபம், மோகம், சண்டை, சமாதானம், ஊடல், கூடல் என எல்லாவற்றின் தொடக்கமும் முடிவும் ஏன், எதற்கு, எப்போது, எப்படி என்றே தெரியாது நிகழ்வதுதான் தாம்பத்தியம் ரகசியம், அதிசயம்.


இரண்டு நாட்களாக, எல்லாப்பக்கமும் சிக்கி, மீளாச்சிறையில் அடைத்தது போன்ற இறுக்கத்துடன் இருந்தாலும், மாதக்கணக்கில் மண்டையைப் பிய்த்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தண்ணீர்மலைக்குமே தளையிலிருந்து விடுபட்ட உணர்வுதான்.

மங்கா அக்காவின் முகத்தை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. போகிறேன் என்றவளை “சீதாவோட பாதுகாப்பும் கல்யாணமும் என் பொறுப்பு” என சமாதானம் செய்து நிறுத்தி இருந்தார் பார்வதி ஆச்சி.

மாலையில் இருந்து தண்ணீர்மலையை பட்டாலையிலேயே அமர வைத்திருந்தனர்.

ஜோதியின் வீட்டினர் மதியமே சென்றிருக்க, அவள் எங்கிருக்கிறாள் என்றே தெரியவில்லை. உறவினர்களில் சிலர் ராத்திரி பஸ், ரயிலுக்காகத் தாமதித்தனர்.

இரவு உணவுக்குப் பின் அவரது அறைக்கு அழைத்து “இங்கேயே குளிச்சிட்டு இதை உடுத்திக்க” என்று பாத்ரூமிற்கு அனுப்பிய தெய்வானையின் முகம் சோர்ந்திருந்தது.

“ஏன் இந்த அவசரக் கல்யாணம், அதுவும் வேற ஆட்களோட?” என்று குடைந்த அண்ணன்கள், அண்ணிகளின் நக்கல் சிரிப்பு, திடீர் திருமணம் குறித்தான உறவினர்களின் அனுமானங்கள், தான் பார்த்து அங்கீகரித்த பெண்கள்தான் மருமகள்களாக வேண்டும் என்ற மகன்களின் திருமணக் கனவு பொய்த்தது என, தெய்வானை மனதளவில் பெரிதும் அடி வாங்கி இருந்தார்.

அதிலும் ஜோதியின் வயதும் தோற்றமும் தந்த அதிர்ச்சியில் அந்த உறவை முடிக்கச் சொன்னவரால் தன்னையே மன்னிக்க முடியவில்லை. மகனை வெறுக்கவும் ஒதுக்கவும் முடியாமல் கனத்துக் கிடந்தது மனம்.

வெளியில் வந்தவனை ஐயாவின் அறைக்கு அழைத்துச் செல்ல, மெல்லிய அலங்காரத்துடன் நின்றிருந்தாள் ஜோதி.

“ரெண்டு பேரும் எதையும் நினைக்காம, கவனமா, ஆதரவா, உண்மையா இருங்க” என்ற ஆச்சியை எல்லோரும் அமைதியாக ஆமோதித்தனர்.

நன்றாக அலங்கரிக்கப்பட்ட அறையில் நுழைந்த ஜோதிக்கு படபடப்பாக இருந்தது. தேடல் பழகி இருக்க, பழக்கத்தைத் தேட வேண்டி இருந்தது.

தற்கொலை முயற்சி, சிகிச்சை, அவசர ஏற்பாடுகள், திருமணச் சடங்குகள் என வாட்டமாக இருந்தவளுக்கு தண்ணீர்மலையின் உதாசீனத்துக்கும், மூன்று மாத பிரிவுக்கும்(!) போராட்டத்துக்கும் பின் அவனுடனான இந்தத் தனிமை அச்சுறுத்தியது.

தண்ணீர்மலையின் காம, க்ரோத, லோப, மத, மாச்சர்யங்களை அறிந்தவளுக்கு அந்த அறையில் கமழ்ந்த கலவையான நறுமணமும், தண்ணீர்மலையின் தனியறையானதால், அவனது பிரத்யேக மணமும், உருவத்தைத் தாண்டியும் அவனே நிறைந்திருப்பதான பிரமையும், காலம் தாழ்த்தி உண்டதும், வயிற்றுக் கருவை இம்சித்ததில், உமட்டியது.

அடக்க முடியாது ஓங்கரித்துக் கொண்டு வர, அவளையே பார்த்திருந்த தண்ணீர்மலை “வாஷ்ரூம் அங்க இருக்கு” என வழி சொன்னான்.

கால் மணி நேரம் சென்று, கண்களில் அழுத தடமும், கலைந்த மையும், நனைந்த சேலையுமாக வெளியில் வந்தவளைக் கண்டு சிறிதே பயந்தான்.

“உன்… உனக்கு என்ன செய்யுது?”

“...”

அவனது பிள்ளைதான். தப்பு இருவருடையதும்தான். ஆனாலும், முதலிரவு அறையில் அதைப்பற்றிய பேச்சு பெண்ணுக்கு சங்கடத்தைத் தந்தது.

“கேக்கறேன்ல?”

“அது… மசக்கை படுத்துதுன்னு சொன்னாங்க”

“தினமுமா?”

“ம்”

“போய் ட்ரெஸ் மாத்திக்க”

நைட்டியில் இன்னுமே சின்னப் பெண்ணாக வந்தவளைக் கண்டவன் வாழ்வில் முதல்முறையாகக் குற்றவுணர்வை அனுபவித்தான்.
நிர்வாணத்தில் தோன்றாதது, நைட்டியில் உறைத்தது.

ஜோதிக்கு மதுரை ஹோட்டலில், கொடைக்கானல் கெஸ்ட் ஹவுஸில் வராத தயக்கம் இன்று வர, கட்டிலில் உட்காராது நின்றாள்.

“சரி, போய் படு”

படுக்கையின் படிக்கும் விளக்கை ஆன் செய்து, அவளைக் கடந்து குழல் விளக்கை அணைத்து, மறு பக்கம் சென்று படுத்த பின்னும் ஜோதி அதே இடத்தில் நின்றிருந்தாள்.

உண்மையில் ஆர்ப்பாட்டமான தண்ணீர்மலையின் அமைதி அவளை அச்சுறுத்தியது.

எழுந்து அமர்ந்தவன் “உக்காரு”

“...”

“இங்க வா”

அசையாது நின்றவளின் அருகே சென்று தோளைத் தொட “ஸார்…” என்றவள் அழுத அழுகையில் கண் சிவந்தான்.

“அழாத…”

“...”

“ஜோ… ஜோ குட்டீ”

மூக்கை உறிஞ்சியபடி “ஸார்…”

“ஸார் வேணாம், மாமான்னு சொல்லு ஜோ” என அணைத்துக் கொண்டவனிடம் ஒண்டியவள் மேலும் அழுதாள். அத்தனை அழுத்தமும் கரைய எத்தனை அழ வேண்டுமோ?

ஜோதியை மெதுவே படுக்க வைத்துத் தட்டிக் கொடுத்த தண்ணீர்மலைக்கு தன்னை நினைத்தே சிரிப்பு வந்தது.
முதலிரவு பற்றிய அவனது கனவுகளும் இங்கே நடப்பதும்!

ஜோதி உறங்கி இருந்தாள். அவளது நெற்றியில் முத்தமிட்டுப் போர்த்திவிட்டான். களங்கமில்லாத உருண்டையான குழந்தை முகம் என்னவோ செய்தாலும், உள்ளே ஒரு நிம்மதி பரவியது.

தண்ணீர்மலையின் சபலங்களும் சலனங்களும் தொடருமா தொடராதா என்பது அவனுக்கே தெரியாது. ஆனால், அவனிடம் ஜோதிதான் அவன் மனைவி என்ற உறதி பிறந்தது.

***************

வைரவன் தன் பெற்றோர்களிடம் தங்களுக்காக வீடு பார்ப்பதாகச் சொன்னதோ, பார்த்ததோ மேதாலக்ஷ்மிக்குத் தெரியாது.

அதேபோல், தணிகைநாதன் “அவசரப்படாத வைரவா, இந்தக் கல்யாணம், பின்னாலயே வர பிள்ளையார் நோன்பு முடியட்டும், பார்ப்போம்” என்றதும் அவளுக்குத் தெரியாது.

இரண்டும் தெரிந்த வள்ளியம்மைக்கு, காலையில் வழமை போல் வைரவன் சொன்ன வேலைகளை அமைதியாகச் செய்த மேதாவைக் கண்டு ஆத்திரம் மிகுந்தது.

தனது உடல் நிலை கருதி, தன்னை முன்னிறுத்தி, தன்னையே சுற்றி வந்த தன் மகனை மயக்கிய மேதா முழுதாக அவள்பக்கம் இழுத்துக் கொண்டதான பிரமை எழுந்தது.


தணிகைநாதன் சாலைக்கும்,
ப்ளஸ் டூ என்பதால் ஏதோ கெமிஸ்ட்ரி பிராக்டிகல்ஸ் என லதாவும் கிளம்பி இருக்க, ஜீவா கல்லூரிக்கு சற்று தாமதமாகத் தயாரானான்.

வைரவன் குளிக்கச் சென்றிருக்க, வீட்டைப் பெருக்கிய மேதா, யாரையும் அழைக்காது தன் போக்கில் எழுந்து கட்டிலைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு நடந்த வள்ளியம்மையைக் கவனிக்கவில்லை.

அவரால் நடக்க முடியாது என்பதை விட, கூடாது என்பதுதான் நிஜம். துணையின்றி நடக்கப் பழக்கம் விட்டுப் போனதில், கால் நடுங்க, தலை சுற்றுவது போல் இருக்க, தடாலெனக் கீழே விழுந்தார்.

முற்றத்தின் எதிர்ப்புறத்தில் பெருக்கிக் கொண்டிருந்தவள், சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு, விளக்குமாற்றை உதறிவிட்டு “ஐயோ ஆன்ட்டி, ஜீவா, ராசு, யாராவது வாங்களேன்” என்று கத்தியபடி அருகே ஓடி வந்து அவரைத் தூக்க முயல, வள்ளியம்மை அவளது கையை உதறினார்.

மேதாவின் அலறலைக் கேட்டு வெளியே வந்த ஜீவா பார்த்தது உதவி செய்யச் சென்றவளை அவர் உதாசீனப்படுத்தியதை.

“நகருங்கண்ணி” என்றவன் வள்ளியம்மையை அலாக்காகத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தான்.

“பாத்ரூம் போகணும்னா கூப்பிட மாட்டீங்களா பெரியம்மா, நீங்களே எழுந்து போய் இப்படி விழுந்து வெச்சா, பண்ற ஃபிஸியோக்கெல்லாம் அர்த்தம் இல்லாம போகும்னு உங்களுக்குத் தெரியாதா, காலை வலிக்குதா” என்று வள்ளியம்மையின் கால்களைப் பிடித்து விட்டான்.

ஈர உடலும் இடுப்பில் துண்டுமாக ஓடி வந்த வைரவன் “என்னடா ஜீவா, ஏன் மோக்ஸ் கத்தின?”

“பெரியம்மா தானே நடக்கப் போய் கீழ விழுந்துட்டாங்க”

“ஏம்மா, நாங்கள்லாம் வீட்லதானே இருக்கோம், மேதா எதிர்லயேதானே இருந்தா? கூப்பிடறதுக்கு என்ன?”

“நாளைக்கே நீங்க தனிக்குடித்தனம் போய்ட்டா, நான் ஒவ்வொரு தரம் பாத்ரூம் போகவும் ஓடி வருவீங்களா, இல்ல நீங்க வரும்போதுதான் நான் போகணுமா?”

“அம்மா…”

மேதா “தனிக்குடித்தமா?” என்று சற்று உரக்கவே கேட்டு விழிக்க, வைரவன் பிறகு சொல்வதாகக் கண்ணைக் காட்டினான்.

“நாங்க தனியா போனபிறகு நீயே நடை பழகு. இப்ப எங்களைக் கூப்பிடு, பரவாயில்ல” என்ற வைரவன், முற்பகலிலேயே தெரபிஸ்ட்டை வரச்சொன்னான்.

வள்ளியம்மை வேண்டுமென்றே எழுந்து சென்றது புரிந்த வைரவனுக்கு எந்த வழிக்கும் தன்னைப் போக விடாது படுத்துவது தன் அம்மாதானா என்று வேதனையாக இருந்தது. சிறிது அவமானமாகவும் கூட…

தன் பெற்றோருக்கும் உடன்பிறந்தோருக்கும் அன்பாக, அக்கறையாக ஆதரவாக நின்ற, இன்னும் நிற்கத் தயாராக இருக்கும் வைரவன் போன்ற ஆண்களுக்கு பெற்றோரின் சுயநலம் அதிர்ச்சியும் அவமானமுமன்றி வேறென்ன?

வைரவனுக்கு, வள்ளியம்மை நடத்தும் உரிமைப் போரில் ‘என் வீடு’ என்ற உரிமையைத் தான் இழந்துவிட்டதாகத் தோன்றியது.

மீண்டும் புழக்கடைக்குச் சென்றவனைத் தொடர்ந்த ஜீவா “வைரவா, தூக்கப் போன அண்ணி கையை பெரியம்மா உதறிட்டாங்க. நீ தனியா போற பிளான் இருந்தா சீக்கிரமா போயிடு. பாவம்டா அண்ணி”

“பார்க்கலாம்டா, நீ காலேஜ் போறியா?”

“ம்… இந்த வாரம் ஃபுல்லா கல்ச்சுரல்ஸ்”

“மேல போய் என் பர்ஸ்ல இருந்து பணம் எடுத்துக்கோ”

“மேலயா, அண்ணி…”

“நான் முன்னாலய சொன்னதுதான் ஜீவா, உங்களை மாதிரிதான் அவளும். போடா”

ஜீவா உள்ளே வர, மேலிருந்து இறங்கி வந்த மேதா “ஜீவா, கல்ச்சுரல்ஸ்னு சொன்னேல்ல, எவ்ளோ பணம் வேணும்” என்றபடி தன் பர்ஸைத் திறக்க,

ஜீவா “ப்ப்பா… புருஷனும் பொண்டாட்டியும் மாடு மேயுற அளவுக்குப் புல்லரிக்க வைக்கறீங்க”

வைரவன் “எருமை மாடெல்லாம் உரசுறமாதி அந்த சுவர் ஓரமா போய் சொறிஞ்சுக்கோ” என்றபடி மாடியேறிச் சென்றான்.

ஜீவா சென்ற சிறிது நேரத்தில் வைரவன் மதிய உணவை சமைக்கச் செல்ல, குளித்துவிட்டு வந்த மேதா, லேப் டாப்பில் அமர்ந்து, ஆர்டர்களை சரி பார்க்கத் தொடங்க, “ரா…சூ” என்று கத்தினாள்.

“ரொம்ப நல்லா இருக்கு. புருஷன் சமைச்சு போடறதை வக்கணையா சாப்பிடுறதும், அவனைப் பேர் சொல்லிக் கூப்பிடறதும்… இதெல்லாம் பார்க்கணும்னு என் தலையெழுத்து” என்ற வள்ளியம்மையின் குத்தல் மேதாவின் காதிலேயே ஏறவில்லை.

“என்ன மோக்ஸ், இங்க வாயேன்”

லேப்டாப்பை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு ஓடினாள்.

“இந்த இ மெயிலைப் பாரு ராசு”

அவர்கள் சென்ற பெரிய நிறுவனத்திலிருந்து வைரவனின் காப்புரிமை பெற்ற இரண்டு டிஸைன்களை அவர்களுக்கே உரிமை தரக் கேட்டிருந்ததோடு, குந்தன் மற்றும் வைர நகைகளை அவர்களது பிரத்யேகமான வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கக் கேட்டிருந்தனர்.

கணிசமான தொகையோடு, பேச்சு வார்த்தைக்குட்பட்டது (negotiable) என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

புளியைக் கரைத்துக் கொண்டிருந்தவனை யச் சொல்லி, குனிந்தவனின் உதட்டில் முத்தமிட்டவள் “கன்டின்யூ” என்று வெளியே செல்ல, வைரவனுக்குப் புன்னகை.

*****************

திடீரென ஏற்பாடான சம்பந்தி வீட்டுக் கல்யாணத்திற்கு வராவிட்டாலும், ராகவி மூலம் அங்கு நடந்த அனைத்தும் மேதாவின் பெற்றோருக்குத் தெரிந்திருந்தது.

அவர்கள் வந்து சென்றது முதலே ஆயா “பாவம், நாம பேசாததுல குட்டிம்மாக்கு மூஞ்சியே வாடிப்போச்சு. அந்தப் பையனுமே நல்லவனாதான் தெரியுறான்” எனப் புலம்பிய படியே இருந்தார்.

தன் மகளுக்காக சண்டை போட்டவனின் மீது தானாகவே மரியாதை கூடுவதை ராமநாதன் உணர்ந்தார்.

நளினி “இதெல்லாம் உனக்கு முன்னாலயே தெரியுமா ராகா?”

“தெரியும்மா. மேதா வைரவனோட சிவகங்கை போன அன்னிக்கு வீடியோவே வந்துச்சு. அப்போதான் அவரோட தம்பி மேதாவைப் பொண்ணு கேட்கச் சொன்னாரு”

“அவங்க பொண்ணு கேட்கப் போறாங்கன்னும் உனக்குத் தெரியுமா ராகா?” - ராமநாதன்.

“தெரியும்ப்பா. இவர் வேணாம்னு சொல்லியும் அவங்க கேட்கலை.

“அதை விடு, நீ ஏன் இதை எங்க கிட்ட சொல்லலை?”

“சிவாதான் சொல்ல வேணாம்னு சொன்னார்ப்பா”

“நீ புருஷன் பேச்சைக் கேட்டு நடக்கறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, நீ சொல்லி இருந்தா, நான் மனசுல பதிலோட தயாரா இருந்திருப்பேன்ல. எம்பாரஸ்மென்ட்டை தவிர்த்திருக்கலாமே?”

ராகவி “அதனால மேதா வைரவனோட ஓடிப்போய் திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டது இல்லைன்னு ஆயிடுமா?”

நளினி அதிர்ச்சியாக “ராகா..” என, வேகமாக எழுந்த ராமநாதன் “அது எங்க பிரச்சனையா இருந்திருக்கும். அவங்க பொண்ணு கேட்டதாலதான் எல்லாமே அவசரத்துல நடந்து போச்சு”

“...”

“தப்பு செஞ்சுட்டு நியாயப் படுத்தாத. உன்னை இன்னொஸன்ன்ட்டுனு நம்பினேன். ஆனா, நீ தெரிஞ்சே கமுக்கமா இருந்திருக்க. அன்னைக்கு மட்டும் மேதா பாலாவைப் பத்தி உங்க வீட்டுல பேசலைன்னா, நீ இப்படி இங்க வந்து சீராடியிருக்கவே முடியாது. உன் கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை ராகவி” என்ற ராமநாதன்,

“நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன்” என கார் சாவியுடன் வெளியேறினார்.

பிள்ளை பெற்றவள் கையில் மொபைலும் கண்ணில் நீருமாய் அறைக்குள் சென்றுவிட, ஆயாவும் நளினியும் கையைப் பிசைந்தனர்.

********************


மேதாவும் வைரவனும் பகல் வேளைகளில் இணைந்து மாடியறைக்குச் செல்வதில்லை.
வள்ளியம்மைக்குத் துணை தேவை என்பதோடு, அவர்களது திருமணம் நடந்த விதம், ஜீவா அநேகமாக வீட்டில் இருப்பது, மதிய உணவுக்கு தணிகைநாதனின் வருகை, நான்கு மணிக்குத் திரும்பி வரும் ஸ்வர்ணலதா என பல காரணங்கள்.

காலையில் வள்ளியம்மை சொன்ன தனிக்குடித்தனம் பற்றிக் கேட்கக் காத்திருந்தவள், வைரவன் வந்ததுமே தொடங்கி விட்டாள்.

“நினைச்சேன்”

“என்னத்தை நினைச்ச, எங்கிட்ட சொல்ல மாட்டியா? நான் தனியா போகணும்னு உன்னைக் கேட்டேனா?”

“ரிலாக்ஸ் மோகீ. கூடவே இருந்து தினமும் சண்டை போடறதுல என்ன லாபம்? ஒரு வீட்ல கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, சுதந்திரமும் அவ்வளவு முக்கியம்.

“...”

“நாம தனியா போனா பொறுப்பை உதறிட்டுப் போய்ட்டான்னு எங்கம்மாவே சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியாதா?”

“...”

“இன்னைக்கு நடந்த மாதிரி இன்னும் நாலு தரம் ஏதாவது நடந்தா, நீ அம்மா எதிர்ல போகவே தயங்குவ”

“...”

“உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் நான் அவங்க
மகன்தான்னு எப்படிப் புரிய வைக்கிறதுன்னுதான் தெரியல. அவங்க செஞ்சதுல, நமக்கு கிடைச்ச வாய்ப்பை கூடப் பகிர முடியலை. அதோட பணக் கணக்கை அவங்க போடத் தொடங்குவாங்க. நீ அதைக் கையாள்றதுக்கும் ஏதாவது சொல்லுவாங்க”

தான் புகார் சொல்லாமலே, தனக்காக யோசிப்பவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். வைரவன் அசையாது மௌனமாக இருந்தான்.

“ராசைய்யா”

“என்னடீ?”

“இதுக்கு ஒரு பிரேக் விடேன். காலைல கன்டின்யூ பண்ணலாம்”

“ஏன் இப்ப என்ன?”

“டான்ஸ் பிராக்டீஸ்தான்”

******************

மறுநாள் விடிகாலையிலேயே மீனாக்ஷியின் மாமியார் அழைத்தார். இரண்டாவது குழந்தைதான் என்றாலும், நந்தகுமார் ஆசைப்படுவதால், மீனாக்ஷிக்கு வளையடுக்கப் போவதாக அழைப்பு விடுத்தார்.

கூடவே “வளைசெட்டிக்கு சொல்லியாச்சு. எல்லா ஏற்பாடும் நாங்க பாத்துக்கறோம். எல்லாரும் வந்துடுங்க” என்றார்.

இரண்டு மணி நேரம் சென்று தத்தைக்கு அழைத்த மீனாக்ஷி “அத்தை நம்ம வீட்ல இருந்து வளையல் போடணும்னு எதிர்பார்க்கறாங்கப்பா”

“இரண்டாவதுக்கா?” என்ற வள்ளியம்மை வைரவனைப் பார்க்க, அதில் துளிச் சலனமில்லை.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

இதுக்கும் மட்டும் வள்ளியம்மை எதுக்கு வைரவனை பார்க்கிறாங்க? 😏😏
எனக்கு ஒரு டவுட்டு...மேல டான்ஸ் பிராக்டீஸ் பண்ணா, கீழ சத்தம் கேட்காதா?? 🤔🤔🙈🙈

 
Last edited:

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
24
தட்கல் கல்யாணம். உங்கள் touch sister. தண்ணீர்மலை marriage ஒரு வழியாக smootha முடிஞ்சிட்டு. வள்ளியம்மாள் தான் tension பண்றாங்க
 

Storyreader

New member
Joined
Aug 12, 2024
Messages
3
This happened exactly in our life. Ours was an arranged marriage my mother in law was bedridden for 10 years. I have one sister in law. My husband love his mom a lot but he know that their parents are one sided and using him selfishly. He told me I know that they are using me but I am doing all the things with my good intentions. Their actions will not change my actions or who I am. If they are selfish let them be.. but I see a wounded heart. My father in law always praises my sil husband and compared his son to his son in law.. parents are not understanding how much they are hurting .. my mil is no more still my husband loves his mom do all the thithi.. Vedha mam by reading this episode you made me relive certain moments in my life.. I don’t know whether in real life vairavan went to separate house. Please atleast in story move them to separate house. Even vairavan moves to separate house he will do all his family responsibilities correctly.. I don’t want atleast vairavan to get hurt. Your words that is embarrassing and hurting for vairavan is 100 % true ..rather than embarrassing the hurt is what bothers them a lot. Sorry for the long post… I couldn’t resist from sharing..
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
தண்ணீர் மலை தட்கல் கல்யாணம் 👌👌👌👌.
இந்த வள்ளியம்மா 😡😡😡😡
இப்ப மட்டும் வைரவன பாக்கறாங்க
தப்பாட்டம் ஆடியாச்சா?
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
This happened exactly in our life. Ours was an arranged marriage my mother in law was bedridden for 10 years. I have one sister in law. My husband love his mom a lot but he know that their parents are one sided and using him selfishly. He told me I know that they are using me but I am doing all the things with my good intentions. Their actions will not change my actions or who I am. If they are selfish let them be.. but I see a wounded heart. My father in law always praises my sil husband and compared his son to his son in law.. parents are not understanding how much they are hurting .. my mil is no more still my husband loves his mom do all the thithi.. Vedha mam by reading this episode you made me relive certain moments in my life.. I don’t know whether in real life vairavan went to separate house. Please atleast in story move them to separate house. Even vairavan moves to separate house he will do all his family responsibilities correctly.. I don’t want atleast vairavan to get hurt. Your words that is embarrassing and hurting for vairavan is 100 % true ..rather than embarrassing the hurt is what bothers them a lot. Sorry for the long post… I couldn’t resist from sharing..
Thank you so uch for sharing dear. Lot of Vairavans are here. Completely understand your emotions. Loads of love n respect for both of you💖💖
 

eswari

Member
Joined
Jun 19, 2024
Messages
45
Avanga mariyaathaiya avangaley kedurhthukkuraanga valliamma...konjam vilagi erukkurathu yellaarukkum nallathu thaan 👍👍👍👍
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
இதுக்கு மட்டும் ஏன் வைரவனைப் பார்க்க வேண்டும்.
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் சூப்பர் அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ஆண் பிள்ளை பெற்றவங்க பலருக்கு எதிர்பார்ப்புகளுக்கு முடிவில்லை
 
Top Bottom