• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 2

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 2


ல்ல வெளிச்சமும், காற்றோட்டமுமாய் ஆறு தூண்களுடன் முற்றம் வைத்து, இரண்டு புறமும் அறைகள் இருக்க, உட்காருவதற்கென வழவழத்த சலவைக்கல் திண்டுகள், நல்ல தேக்கு மரத் தூண்கள், ஆத்தங்குடி சிவப்பு டைல்ஸ் பளபளக்கும் தரை என இருந்தாலுமே, அந்த வீடு செட்டிநாட்டுக் கட்டிடக்கலையின் சிறு பதிப்பாகத்தான் (miniature) இருந்தது.

பழைய நாட்களில் விழாக்களுக்கும் விசேஷங்களுக்கும் பெரிய வீட்டையும், தங்களது தினப்படி புழக்கத்திற்கும், சில நேரம் வியாபாரத்திற்கு வெளியூரோ, வெளிநாடோ சென்றால் பெரிய வீட்டைப் பராமரிப்பவர்கள் குடி இருப்பதற்கும் கட்டப்பட்ட வீடு. ஆனாலுமே நேர்த்தியாக இருந்தது.

அழகான வாயில், பட்டாளை, நடுமுற்றம், இரண்டு படுக்கையறைகள், அளவான பூஜையறை, சிறிய உக்கிராண அறையுடன் கூடிய சமையலறை, பின்பக்கம் கிணறு, முற்றம், ஒய்வறை மற்றும் குளியலறை, மாடியில் ஒற்றையறையும் மொட்டை மாடியும் என கச்சிதமான, வசதியான வீடுதான்.

சமீப வருடங்களில் வள்ளியம்மையின் உடல்நலம் கருதி, ஒரு படுக்கை அறையில் மட்டும் அட்டாச்டு பாத்ரூம் கட்டி இருந்தனர்.

அரைக்கால் சட்டையும் முண்டா பனியனுமாகக் குந்திட்டு அமர்ந்து சரசரவென பின்னால் நகர்ந்தபடியே முற்றத்தைச் சுற்றி இருந்த இடத்தை மெழுகிக் கொண்டிருந்தான் வைரவன்.

“ஏ லதா, இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, லீவுதானே ஒனக்கு, கொஞ்சம் வீட்டைக் கூட்டி, மெழுகினா என்ன? ஒரு நாளைப் பார்த்தாப்போல எல்லாம் அண்ணனேதான் செய்யணுமா?” என்ற வள்ளியம்மை ஒற்றை ஆண்மகனைப் பெற்று, அவனை சமைக்கவும் வீட்டு வேலை செய்யவும் விட்ட தன்னையும் தன் விதியையும் நொந்து கொண்டாள்.

‘எப்படி இருக்க வேண்டிய புள்ளை’

“ம்ப்ச், விடும்மா. அடுத்த வாரம் பரீட்சை வருது. கணக்கு போட சொல்லி இருக்…”

சமையலறையில் இருந்து தடாலென ஏதோ கீழே விழுந்த சத்தமும், அதைத் தொடர்ந்து “ஐய்யோ” என்ற அலறலும் கேட்க, துடைக்கும் துணியைக் கீழே எறிந்துவிட்டு வைரவன் உள்ளே ஓடினான்.


கேஸ் அடுப்பின் மீது இட்லிப் பானையைக் கவிழ்த்துவிட்டு இட்லியும் வெந்நீரும் தட்டிலும் பாத்திரத்திலும் தரையிலும் சிதறி இருக்க, எங்கெங்கும் ஆவி பறந்தது.

தன் புறங்கையை ஊதியவாறு மூலையில் நின்றிருந்த ஜீவாவைக் கண்டு பதறியபடி அருகில் சென்றவன் “என்னடா ஜீவா, என்னாச்சு?” என, இதே கேள்வியுடன் பின்னாடியே தணிகைநாதனும் லதாவும் வந்தனர்.

ஜீவாவின் கையை இழுத்துப் பிடித்துப் பார்த்த வைரவன் “எங்கடா சுட்டுக்கிட்ட, ஒன்னுமே தெரியல?”

ஜீவா “இட்லிய எடுக்கப் போய் ஆவி பட்டதுமே உதறிட்டேன்டா வைரவா”

“இட்லிய எடுக்கவாடா இத்தனை கலாட்டா?” - தணிகைநாதன்.

“சுடுதுல்ல பெரியப்பா, வேணும்னா நீங்களே தொட்டுப் பாருங்க”

முறைத்தவர் “உனக்கு வாய் மட்டும்தான் ஒழுங்கா வேலை செய்யுது. கொஞ்சங்கூட பொறுமையே இல்லடா” என்று வெளியேற, கேலியாகச் சிரித்தபடி இட்லிகளை எடுத்துப் பாத்திரத்தில் போட்டாள் லதா.

வைரவன் “உன்னை விட சின்னப் பொண்ணு செல்லி. இப்ப அவ செய்யல? யூ ட்யூப்ல அத்தனை ரீல்ஸை வெட்டியா பாக்கிறாப்போல , இதையும் பாக்கறது”

ஜீவா “என்னடீ சிரிப்பு?”

“ டீ கீ ன்ன பல்லைப் பேத்துருவேன் பாத்துக்க”

“நான் அதுவரைக்கும் உங்கிட்ட பல்லைக் காட்டிக்கிட்டு நிப்பேனா?”

“இந்த வீரத்த இட்லி சுடறதுல காட்டி இருக்கலாம்”

“செல்லி, போய் கால்குலஸை முடி, போ”

ஜீவா லதாவின் மண்டையில் ஒரு கொட்டு வைக்க
“பாருண்ணா இவன”

“நான் பாக்கறேன், நீ போ”

அவள் சென்றதும் வைரவன் “இன்னொரு ஈடு இட்லி ஊத்தி வெச்சிட்டு தேங்கா சட்னி அரைச்சிடு”

“கை எரியுது வைரவா”

“சரி, இத நான் செஞ்சுக்கறேன், நீ போய் மெழுகுற வேலையைப் பாரு”

ஜீவா அமைதியாக இட்லி ஊற்றத் தொடங்க, “நன்று” என்ற வைரவன் சிரிப்புடன் வெளியேற, ஜீவா “போடா ஹிட்லர்”

“தான்கெ (Danke)”

“என்னடா சொல்ற?”

“ஹிட்லர் பாஷைல நன்றி”

தணிகைநாதன், பெருமாள் ஆசாரியின் வீட்டுக் கல்யாணத்திற்குப் போக வேண்டும்.

வழக்கம் போல் கடவுளர்களுடன் காலை கான்ஃபிரன்ஸில் இருந்தவரின் மொபைல் ஒலித்தது.

“சொல்லு தம்பி”

“...”

“இன்னைக்கு வீவாச்சே”

“...”

“சரி, சொல்றேன்”

வள்ளிக்கண்ணு “யாருங்க?” என “முருகன்தான்…. வைரவனை சாலைக்கு வரச்சொல்றான்”

“இன்னைக்கா, பட்டறை லீவாச்சே”

“எத்தனை மணிக்குப்பா?” - வைரவன்.

“பத்து மணிக்காம்” என்றவர், தயக்கத்துடன் “போறியா தம்பி, ஒரு மணி நேர வேலைதானாம்” என்றதில் கெஞ்சல் இருந்தது.

“ம்…”

“செல்லி, நான் வர லேட் ஆனா சோறு மட்டும் வடிச்சு வை. அம்மா பக்கத்துலயே இரு”

“ஜீவா, நீயும் எங்கூட வா”

*******************

தன்னிடம் இருந்த சாவியால் சாலையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று, விளக்கு, ஃபேனைப் போட்டுத் தன் இடத்தில் அமர்ந்து கொண்டவன் “உக்காருடா ஜீவா, டீ சொல்லவா?”

டீக்கடை பையனை மொபைலில் அழைத்தான். சில நிமிடங்களில் த்ரீ பை டூ டீ மற்றும் மூன்று மசால்வடையுடன் வந்தவன்,

“இன்னைக்கு ஏண்ணா?”

“வேலை இருக்குடா”

“ஒகேண்ணா” என்று ஓடிப்போனான்.

ஜீவாவிடம் இரண்டு வடைகளைக் கொடுத்தான்.

“ஏன்டா?”

“சும்மா சாப்பிடுடா”

ஜீவாவுக்கு இதுபோல் எண்ணெயில் பொரித்த பண்டங்கள் எனில் வெகு இஷ்டம். வள்ளியம்மையால் முடியாது போகவே இப்படி வாங்கினால்தான் உண்டு. வைரவனின் அக்கா மீனாக்ஷி பிறந்தவீட்டுக்கு வந்தால் செய்து தருவாள்.

“வைரவா, லதாக்கு வாங்கிட்டுப் போலாம்”

ஜீவா தணிகைநாதனின் தம்பி மகன். அவனது நான்கு வயதில் இரண்டாவது பிரசவம் சிக்கலாகி அம்மாவையும் தங்கையையும் ஒரே சமயத்தில் இழந்தான்.

தந்தையை மறுமணம் செய்துகொண்டு வந்தவள் சின்ரெல்லாவின் சித்திக்கே பாடம் எடுக்குமளவு சித்தி என்ற உறவிற்கு உதாரணமாய்த் திகழ்ந்தாள்.

ஜீவாவைக் கவனிக்கவெனத் திருமணம் செய்துகொண்டு வந்தவள், ஜீவாவைத் தவிர மற்ற அனைத்தையும் கவனித்தாள்.

ஒரு பெண்ணோடு வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்ற பிறகும், கணவனின் மூளையை மழுங்கடிக்க இரண்டாவதாக வருபவளால் எப்படி முடிகிறது என்பது இன்றளவும் ஆச்சரியமே.
இதில் விஞ்சி நிற்பது ஆணின் சபலமா அல்லது பெண்ணின் சாகசமா என்பது விவாதத்திற்குரியது

இத்தனைக்கும் ஜீவாவின் தந்தை சென்னையில் மாநில அரசில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இரண்டாவது மனைவியுடன் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

ஜீவா மூன்றாவது வகுப்பில் இருக்கையில், சொந்த வீட்டிலேயே சோறின்றி சுருண்டு கிடந்தவனை நேரில் பார்த்த தணிகைநாதன் கையோடு அழைத்து வந்துவிட்டார்.

எப்போதாவது ஃபோனிலும், குடும்ப விழாக்களில் பார்க்கையிலும் சித்திக்குத் தெரியாமல் தன்னிடம் ரகசியமாகப் பேசும் தந்தையிடம் அன்பை எதிர்பார்ப்பதை எப்போதோ நிறுத்தி இருந்தான் ஜீவா.

மீனாக்ஷி, வைரவன், ஸ்வர்ணலதாவோடு சேர்ந்து நால்வரானான் ஜீவா. பெரியப்பா, பெரியம்மா என்று அழைக்கிறானே தவிர, வள்ளியம்மைக்கு வைரவன் செய்யும் அனைத்தையும் செய்வான். ஜீவாவின் ஜிகிரி தோஸ்த், க்ரைம் பார்ட்னர், தீராப் பகை எல்லாமே ஸ்வர்ணலதாதான்.


இப்போது காரைக்குடியிலேயே அரசின் மெரிட் ஸ்காலர்ஷிப்புடன் கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங் நாலாவது வருடத்தில் இருக்கிறான்.

தணிகைநாதனின் வாழ்க்கையில் ஜீவாவும், ஜீவாவின் வாழ்வில் தணிகைநாதனும் மாற்றத்தைக் கொண்டு வந்தது விதியின் விளையாட்டன்றி வேறென்ன?

“வைரவா, என்ன இன்னும் யாரையும் காணும். டயமாகுது….”

தன் வேலையிடத்தில் அமர்ந்து கொண்டு சும்மா இருக்கப் பிடிக்காமல் இழுப்பறையில் இருந்து தன் ஸ்கெட்ச் பேடையும் பென்சில்களையும் வெளியில் எடுத்துக் காசு மாலையும் கெம்ப்பும் கலந்து நெக்லஸாகவும் இல்லாமல், ஹாரமாகவும் இல்லாமல், நடுத்தரமாக, எந்த வயதுப் பெண்ணும் அணிந்து கொள்ளத்தக்க விதமாக வரைந்து கொண்டிருந்தவன்,

“வைரவா, இவங்களுக்குக் காது குத்தணுமா(ம்), பெரிய ஆசாரி இருக்காரா” என்றபடி வந்த கடை மேனேஜரோடு வந்தவளைப் பார்த்த வைரவனுக்கு வாழ்வில் முதல் முறையாக அதி வேகமாக அட்ரினலின் பாய்ந்ததில் அவனது தில் தக் தக் கர்னே லகா.


பதின்ம வயதில், எளிமையான பெண் ஒருத்தி கூட வந்திருந்தாள்.

அந்தப் பெண்ணின் காதுகளில் ஏற்கனவே இரண்டிரண்டு தோடுகள் இருக்க, மூக்கிலும் பொட்டு போல பளீரென ஒற்றை வைரம், அதுவும் மிக அரிதான இயற்கை பிங்க் நிற வைரம், மின்னியது. குறைந்தது இருபது சென்ட் இருக்கும். சுலபமாக ஒரு லகரத்தைத் தாண்டும்.

அவளது முகத்தையே உற்றுப் பார்ப்பதை உணராது வைரத்தைப் பார்க்கும் மும்முரத்தில் இருந்தவனைப் பார்த்து வெகுண்டவள் “ஹலோ” என்று விரலைச் சொடுக்கினாள்.

அவள் தன் கவனம் கலைத்ததன் காரணத்தை உணர்ந்தாலும், சிறிதும் வெளிக்காட்டாத வைரவன் “காதா குத்தணும்?”

ஆமென்று தலையசைத்தவள், குட்டி குட்டியாக நாலைந்து ஜோடி தங்க வளையங்களை எடுத்துக் காட்டினாள்.

வலது காதில் கீழிருந்து மேலாக விரலை ஓட்டிக் காட்டியவள் “வரிசையா குத்தணும்” என்றதில், வைரவனின் காதில் சரளி வரிசை, ஜண்டை வரிசை எல்லாம் கேட்டது.

“வைரவா, ஆசாரி யாருமே இல்ல, எல்லாரும் பெருமாளோட மக கல்யாணத்துக்குப் போய்ட்டாங்களாம். சீக்கிரம் செய்டா, ரொம்ப வேண்டப்பட்டவங்க” என்றபடி வந்த தண்ணீர்மலையின் குரல் அபஸ்வரமாய் குறுக்கிட்டது.

“ம்”

”உள்ள வாங்க, நானே காது குத்திவிடறேன்” என்று அழைத்துச் சென்று, ஆசாரி அமரும் இடத்தில் அமர்ந்து, விளக்கைப் போட்டு, காதுகுத்துவதற்குத் தேவையான சாமான்களை வெளியில் எடுத்தான்.

வலி தெரியாதிருக்க அவளது காதுகளில் பஞ்சில் தோய்த்த ஸ்பிரிட்டைத் தடவினான். பிறகு பேனாவால் புள்ளி வைத்து, அவளிடம் “ஒரு ஒரு செட்டா குத்தலாம்” என்றவன், கூட வந்த பெண்ணிடம் “ரெண்டு காதுலயும் சரியா இருக்கா பாருங்க”

எலெக்ட்ரிக் லைட்டரை ஆன் செய்து ஒரு நுனி மட்டும் கூர்மையாக இருந்த செப்பு ஊசியைத் தீயில் காட்டினான்.

ஆசை இருந்தாலும் சூடான ஊசியைப் பார்த்தவளால் வலியை உணர முடிய, உடலில் சிலிர்ப்பு ஓடியது.

அவளது வலது காதைத் தன் இடது கையில் பிடித்து ஊசியால் குத்தப் போனவன்,
‘காதா, கரண்டி மாட்டுற ஸ்டாண்டா, இப்பயே அழகாதானே இருக்கு’

‘அவங்க காது, அவங்க காசு, உனக்கென்னடா?’ என்றது மை.வா.

வைரவனின் வேலையை மேற்பார்வை பார்ப்பவனைப் போல் அங்கேயே நின்றிருந்த தண்ணீர்மலை, இவன் ஊசியைக் கையில் எடுத்ததுமே,

“வைரவா, பாத்து அதிக வலி இல்லாம செய்”

“வலி தெரியாம மரத்துப் போற ஆயின்ட்மென்ட் ஏன் வாங்கி வெச்சுக்கலை?’

“ஒரே நேரத்துல இத்தனை ஓட்டை போட்டா காது என்னாறது? எங்கேயாவது புண்ணாகி செப்டிக் ஆயிட்டா?”

ஒவ்வொரு முறை வைரவன் ஊசியை அந்தப் பெண்ணின் காதருகே கொண்டு செல்வதும், தண்ணீர்மலை எதையாவது சொல்வதுமாக நாலைந்து தரம் ஆனதில் கடுப்பான வைரவன், ஊசியை மீண்டும் சூடு செய்து, தண்ணீர்மலையிடம் நீட்டினான்.

“இந்தா, நீயே குத்தி விடு”

தண்ணீர்மலையின் தலையீட்டில் எரிச்சலடைந்த அந்தப் பெண், வைரவனின் செயலில் வந்த சிரிப்பை அடக்கப் பாடுபட்டாள்.

“ஏய், என்ன?” என்று வைரவனிடம் குரலை உயர்த்தினான் தண்ணீர்மலை.

“என்னன்னா, இங்க பாரு, காது குத்தறது என் வேலை கிடையாது. கத்துக்கிட்டேன். தெரியும், அவ்வளவுதான். நம்பிக்கை இல்லைன்னா, நீயே செய்யி”

பார்த்துக்கொண்டிருந்த ஜீவா பதட்டமாக, அந்தப் பெண், தண்ணீர்மலையிடம் “நீங்க போங்க ஸார், நான் வரேன்” என்று கருக்காகக் கூற, அவன் வேறு வழியின்றி வைரவனை முறைத்தபடியே சென்றான்.

வைரவன் அவளது செவிப் பூக்களைத் தோட்பதில் சிறிதும் விருப்பமின்றி “நான் ஒரு ஐடியா சொல்லவா?”

“என்ன?”

“அங்க வாங்க” என்று எல்லாவற்றையும் வைத்து மூடிவிட்டு, அவனது இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டான்.

மேஜை மீதிருந்த ஸ்கெட்ச் புக்கில் நான்கு கல்லில் தோடும், அதனோடு இணைந்த ஒற்றைக்கல் தொங்கட்டானும் வரைந்தவன், அதைச்சுற்றிக் காதையும் வரைந்தான்.

வைரவன் வரைந்த லாகவம்! சாதாரண பென்சிலால் வரைந்த கற்களுக்கு அவன் கொடுத்த ஷேடிங்கிலயே அது வைரம் என்று புரிந்தது. அதைவிட அவன் வரைந்த காது! அது அவளுடையது!

அவன் வரைந்து முடிக்கும் வரை இங்குமங்கும் உருளும் அவனது மஞ்சள் கலந்த பூனைக் கண்களை, மீசைக்கு அடியில் உதடுகளை மடித்துத் தீவிரம் காட்டுவதை, மிக நுட்பமான நொடிகளில் நாக்கைத் துருத்துவதை, மெலிதான புஜங்களின் அசைவை வேடிக்கைப் பார்த்தவள், அவன் நிமிரவும், சட்டென சுதாரித்தாள்.

“இதை பாருங்க. இப்படி வரிசையா போடாம, காதோட மேல் பகுதில இங்க போடலாம். வேற டிஸைன் வேணும்னாலும் செஞ்சுக்கலாம். இல்ல, ரிங்தான் போடணும்னாலும் சரிதான்”

“கொஞ்சம் யோசிச்சுட்டு வரேன், நான் மேதா, மேதாலக்ஷ்மி, தேங்க்ஸ்”

வைரவன் தலையசைத்தான். அவள் சென்றதுமே ஜீவா வடிவேலுவின் மாடுலேஷனில்,
“ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன், நிலவில் குளிரில்லை, அவள் காதைப் பார்த்து, மூக்கைப் பார்த்தேன், பேச்சே வரவில்லை, எங்கண்ணன் மூச்சே விடவில்லை…”

“என்னடா தப்பு தப்பா பாடிக்கிட்டு?” என்ற வைரவன் சட்டென வாயிலைத் திரும்பிப் பார்த்தான்.

“யாரு, நான் தப்பா பாடறேனா? எதிர்க்க உக்கார வெச்சு அவங்களை நீ பாத்ததுக்கு நம்மூர் பொண்ணா இருந்தா இந்நேரம்…”

“அவங்க நம்மூர் இல்லையாடா ஜீவா?”

“நான் வேணா ஓடிப்போய் கேட்டு வரவா?”

“...”

ஜீவா தன் சிறு சலனத்தைக் கண்டு கொண்டதிலும் அந்தப் பெண் தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள் என்ற யோசனையிலும் அமைதியான வைரவன், பாதியில் விட்ட மாலையை வரையத் தொடங்கினான்.

“வைரவா”

“வீட்டுக்குப் போலாம், வா” என்றவன், சாலையையும் மனதையும் இழுத்துப் பூட்டினான்.

*******************

மேதா மனம் ஒருமுகப்படாத அளவுக்குக் கோபத்தில் இருந்தாள். இப்படியும் கூடவா ஆட்கள் இருப்பார்கள் என்ற ஆதங்கமும், அவர்கள் எல்லோரையும் ஏறி மிதிக்கும் ஆவேசமும் எழுந்தது.

‘அவங்களைச் சொல்லுவானேன், எங்கக்கா, இந்த ராகவி, கல்யாணம் ஆனதுல மூளையும் முதுகெலும்பும் தேவை இல்லைன்னு தூக்கிக் கடாசிட்டா போல’

‘இவ கல்யாணத்துலயும் சொந்தத் தம்பிய எந்த நிகழ்வுலயும் கலந்துக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. லைவ் டெலிகாஸ்ட் பார்க்கும்போதே பாலா எங்கன்னு அம்மா, அப்பா, ஆச்சியை எத்தனை தரம் கேட்டிருப்பேன்?’

‘ஜுரம், உடம்பு சரியில்லை, கூட்டத்தைப் பார்த்து மிரண்டு புடிவாதம் புடிக்கறான், வீசிங் இருக்குன்னு விதவிதமா காரணம் சொன்னாங்க. நேத்து எனக்கு உண்மை தெரிஞ்சதும் ஓன்னு அழறாங்க’

‘இந்தக்காவோட மாமியார் சொல்றாங்க : வயித்துப் புள்ளைக்காரிக்கு பாலாவைப் பாத்தா பயம் வந்துருமாம், டென்ஷன் ஆகி, பிபி, சுகர் எல்லாம் வர சான்ஸ் இருக்காம். இந்த லூஸும் வாயத் தொறக்காம பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுவா போல’

‘பாலாவைப் பார்க்கக்கூடாதுன்ற கண்டீஷனே அவளுக்கு ஸ்ட்ரெஸ் தருதுன்னு அவங்களுக்குப் புரியாதா? பாலா நேத்து எப்டி இருக்கான்னு கேட்டுட்டு அழுததுல இருந்தே அவ எத்தனை அழுத்தத்துல இருக்கான்னு தெரியுது’

‘இந்த மாமா, சரியான மங்குனி மாமாவா இருப்பார் போல. இந்த லட்சணத்துல லவ்வாம் லவ்வு. லவ்வுக்கு கண்ணு மட்டுமில்லை, மூளையும் சுத்தமா கிடையாது’

பாலாவைப் பார்க்கலைன்னா, அவனோட நெனப்பு வராம போயிடுமா, அவன் அவளோட தம்பி இல்லைன்னு ஆயிடுமா? சரியான கூமுட்டை குடும்பம்’

‘‘எல்லாம் ஓகே, டெலிவரிக்கு வந்துதானே ஆகணும். அப்ப என்ன செய்வாங்க?’ தறிகெட்டு ஓடின சிந்தனையில் இருந்து விலுக்கென விடுபட்டவள் “அவங்க மட்டும் ராகவியை அனுப்ப மாட்டேன், பாலாவை வேற எங்கேயாவது கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லட்டும்…” என்றாள் உரக்க.

“என்னடீ, ஏன் கத்தற?” என்றாள் நளினி.

“ம்…. நீங்க கத்த வேண்டியதை நான் கத்தறேன்”

நளினியின் அம்மா “சண்டை போட்டா எல்லாம் சரியாகிடுமா மேதா? அவங்க வீட்டு வாரிசு ஆரோக்கியமா பொறக்கணும்னு அவங்க எதிர்பார்க்கறதுல தப்பென்ன?”

“நீங்களுமா ஆயா, நம்ம பாலாவோட பிராப்ளம் பரம்பரையா வரலைன்னு அவங்களுக்குத் (hereditary disease) தெரியுந்தானே? ஸாரி டூ ஸே திஸ், அப்படி ஏதாவது வரணும்னா…”

ராமநாதன் “மேதா” என்று வேகமாக அதட்ட “ஸாரிப்பா, நான் அந்த அர்த்தத்துல சொல்லலை” என்றவளுக்கு அழுகை வந்து விட்டது.

“நீ சும்மா இரு தம்பி, அவகிட்ட எதுவுமே சொல்லாம திடீர்ன்னு தெரிய வரவும் புள்ள துடிச்சுப் போறா. அழறதை நிறுத்து குட்டீ”

ராமநாதன் “இதுல எங்களுக்கு மட்டும் சந்தோஷமாக்கா? ஆனா, இதுக்கு இன்னொரு பக்கமும் இருக்கே. சம்பந்தி வீட்ல அவ்வளவு பணக்காரங்க, மாப்பிள்ளை ராகவியைதான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்ததால கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க”

“...”


“பாலா மாதிரி குழந்தைகள் எங்கேயோ, யார் வீட்லயோ இருந்தா, ஐய்யோ பாவம்னு இரக்கப் படுவாங்க”

“அஞ்சலி சினிமால வர மாதிரி, பெஸ்ட் அம்மா, அப்பாக்குதான் ஸ்பெஷல் குழந்தைங்க பொறக்கும்னு சொல்றது சுலபம். ஆனா, பெஸ்ட் அம்மா அப்பாவா இருக்கறது அத்தனை ஈஸி கிடையாது”

“ பொதுவாவே சில விஷயங்கள்ல நாம படிக்கறதும், நம்ம புரிதலும் நம்பிக்கையும் (myth) வேற வேற”

“இதுவே உனக்கு இப்ப நாம மாப்பிள்ளை தேடினாலும் இதைப் பத்தின கேள்வியும் சந்தேகமும் பயமும் வரத்தான் வரும்டா"

“அப்படி ஒரு கல்யாணமே எனக்கு வேணாம்”

நளினி “வாய்லயே ரெண்டு போடுங்க சொல்றேன். என்னடீ பேச்சு இதெல்லாம்? இருக்குற பிரச்சனை போதாதுன்னு நீ வேற எதையாவது உளறாத”

“சும்மா இரு நல்லி” என்ற ராமநாதன் “இதெல்லாம் பாத்துக்கலாம். நாளைக்குக் காலைல நாம அவங்க கடைக்குப் போறோம்”

“எனக்கு அங்க போகவே பிடிக்கலப்பா”

இதுநாள் வரை பிள்ளைகள் மீது எதையும் திணிக்காத பெற்றோர், சம்பந்தி, பெரியவர் சொல்லைத் தட்ட முடியாது, ராகவியின் மரியாதை, என்ற பெயரில் அழகுநாச்சி ஆபரண மாளிகையில்தான் வேலை பழக வேண்டும் என்றனர்.

நளினி “ஒரு மூணு, நாலு மாசம் பாரு. ராகவி பிரசவ டயத்துல உதவிக்கு ஆள் வேணும், பாலாவைப் பார்க்கணும்னு சொல்லிடலாம். அப்ப ஊருக்கு வந்துடு”

“உண்மைல எனக்கும் இஷ்டமில்லைடா குட்டிமா. இப்பதான் ஃபாரின்ல இருந்து வந்திருக்க, திரும்பவும் உன்னை விட்டு இருக்கணுமேன்னு இருக்குடா”

“அதான் டாடி நானும் சொல்றேன். நான் கோயம்புத்தூர்லயே…”

“உனக்குத் தெரியாதா பட்டு, காரைக்குடி வைரம்னா முதல்ல சொல்ற பேரு அழகுநாச்சிதான். பேரே இல்லாம சின்னதா தொடங்கி, நூத்திப்பத்து வருஷமாகுதாம். சிவகங்கைலயும் ஒரு பிராஞ்ச் இருக்கு. AND (Azhagu Nachi Diamonds) ஒரு பெரிய பிராண்ட் டா”

அம்மா நளினி கண்டிப்பாக சொன்னதற்கு, இதமான குரலில் மகளுக்குப் பிடித்த வண்ணம், மானே, தேனே போட்டார் ராமநாதன்.

சிறுவயதில் நளினியின் கவனம் முழுவதும் பெரும்பாலும் பாலாவிடம் என்பதால், மேதாலக்ஷ்மிக்குத் தந்தையிடம் கூடுதல் சலுகை உண்டு.

ஏனோ, மேதாவிற்கு அக்கா ராகவியின் புகுந்த வீட்டை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

‘நான் என்ன அவங்க கடை தங்கமா, வைரமா, என்னை ஏன் எடைபோடுற மாதிரி பாக்கறாங்க?’

‘இந்த ராகவி ஏன் இந்த ஃபேமிலில போய் மாட்டினா, கேட்டா லவ்வாம். மூணே மாசத்துல பெரிய்ய சூப்பர் ஃபாஸ்ட் லவ்”

‘வீடுன்னா, கேஷுவலா, கலகலப்பா இருக்கணும். எல்லாரும் தீவா, தனியா இருக்காங்க. சிவா மாமா கொஞ்சம் பரவாயில்ல. ஆனாலும், வீட்டைவிட்டு நாலு கிலோமீட்டர் தள்ளி வந்தாதான் சிரிப்பார் போல’

‘அக்கா டென்ஷன்லயே இருக்கா’

பெற்றோரின் வற்புறுத்தலில் “முதல்ல நான் போய் கடையை பார்த்துட்டு வரேன். ஒரு கண்டீஷன், தனியாதான் போவேன்” என்று நிபந்தனை விதித்தவளை, வீட்டில் வேலை செய்பவரின் மகளோடு அனுப்பி வைத்தனர்.

அத்தனை மறுத்தாலும், அழகுநாச்சி ஆபரண மாளிகையின் பிரம்மாண்டத்தில், நகைகளின் நேர்த்தியில், பழமையும் புதுமையும் தனியாகவும் இணைந்தும் அணிவகுத்த டிஸைன்களில் அசந்துதான் போனாள்.

யாரும் பார்ப்பதற்கு முன்பு வாடிக்கையாளரைப் போல், நீண்ட நாளாக ஆசைப்பட்ட காது வளையங்களை வாங்கினாள்.

ராகவியின் மாமனார் அவளை சம்பந்தி வீட்டுப் பெண்ணாக வரவேற்றுப் பேசி சங்கடப் படுத்தினார்.

‘இங்க காது குத்த ஆசாரி இருக்காரா அங்கிள்?’ என்றதற்கு தண்ணீர்மலையை ஆசாரியிடம் அழைத்துப் போகச்சொன்னார்.

‘சரியான இம்சை புடிச்சவன்! அந்த தண்ணீர்மலை சிவா மாமாவோட தம்பியாமே! பேசாம ஜொள்ளுமலைன்னு பேர் வெச்சிருக்கலாம். அவனும் அவனோட தவக்களை மூக்கும் டைனசார் முழியும். இன்னொரு தரம் அப்படி பாக்கட்டும், முழியை ஸ்கூப் பண்ணி எடுத்துருவேன்’

‘இன்னொருத்தனும் அப்படிப் பார்த்தானே, அது…?’

‘சேச்சே, அது காது குத்தறத்துக்காக பாத்தது’

“மேதா, சாப்லாம் வா” என்றான் பாலா.

மேதா இரண்டு வாரங்களில் வருவாள் என சம்பந்தி வீட்டில் சொல்லிவிட்டு மறுநாள் மதியம் கோவைக்குப் புறப்பட்டனர்.

இந்த இரண்டு வாரங்களில் எப்படியாவது பெற்றோரை சமாதானம் செய்து இங்கே வராமல் இருக்க வழி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேதாவுக்கு.

ஆனால், சரியாக இரண்டே வாரங்களில் வைரவனின் பூட்டிய மனக்கதவின் சாவியாக, அழகுநாச்சி ஆபரண மாளிகையில் ட்ரெய்னி டிஸைனராக இணைந்தாள் மேதாலக்ஷ்மி.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

SaiSakthi

New member
Joined
Jun 20, 2024
Messages
25
மேதா... சூப்பர் Girl ( அறிவிலையும் சரி , அழகுலயும் சரி )😍😍😍

அருமையான பதிவு... ❤️
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
செட்டிநாட்டு பழக்கவழக்கங்களும் நகைகள் பற்றிய குறிப்புகளுமாக அத்தியாயங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

தில் தக் தக் கர்னே லகா - வில் தொடங்கி தம் தன தம் தன தாளம் வரும் என்று ஆகும் வரை படிக்க காத்திருக்கிறோம்.

ஒரு சந்தேகம்:- சர்க்கரை செட்டியார் தணிகை நாதனின் தந்தை என்றும் முருகப்பன் அவரது தம்பி என்றும் முதல் அத்தியாயத்தில் குறிப்ப்பிட்டிருக்கிறீர்கள். இந்த அத்தியாயத்தில் தணிகைநாதனின் தம்பி ஜீவாவின் தந்தை என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியென்றால் ஜீவா அவர்களுக்கும் சொந்தம் தானே. அல்லது அதில் ஏதேனும் ட்விஸ்ட் இருக்கிறதா?
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
வெறும் காது குத்த மட்டும் பார்த்தா சரி தான்
அப்ப
செட்டிநாட்டு பழக்கவழக்கங்களும் நகைகள் பற்றிய குறிப்புகளுமாக அத்தியாயங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

தில் தக் தக் கர்னே லகா - வில் தொடங்கி தம் தன தம் தன தாளம் வரும் என்று ஆகும் வரை படிக்க காத்திருக்கிறோம்.

ஒரு சந்தேகம்:- சர்க்கரை செட்டியார் தணிகை நாதனின் தந்தை என்றும் முருகப்பன் அவரது தம்பி என்றும் முதல் அத்தியாயத்தில் குறிப்ப்பிட்டிருக்கிறீர்கள். இந்த அத்தியாயத்தில் தணிகைநாதனின் தம்பி ஜீவாவின் தந்தை என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியென்றால் ஜீவா அவர்களுக்கும் சொந்தம் தானே. அல்லது அதில் ஏதேனும் ட்விஸ்ட் இருக்கிறதா?
வரும். 🙏
 
Top Bottom