• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 19

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! அத்தியாயம் 19


பா
ர்வதி ஆச்சி இரண்டு நிமிடங்களுக்குள் வாசலில் நடந்துவிட்ட எதையுமே கவனிக்காது நளினியோடு பேசியபடி முதலில் வீட்டுக்குள் நுழைந்தார்.

ஐயாவும் ராமநாதனும் உள்ளே வர, கடைசியாக வாயிலைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தயங்கியவாறே உள்ளே வந்தார் தணிகைநாதன்.

பெரியவர்கள் ஓய்வறையை உபயோகித்து வந்து அமர, முட்டியைப் பிடித்து விட்டுக்கொண்டார் ஆச்சி. காஃபியும் கவுனி அரிசியில் செய்த இனிப்புப் பணியாரமும் மைசூர் போண்டாவும் வந்தது.

ஆயா குழந்தையுடன் வந்து வரவேற்க, கூடவே சிவானந்தனும் வந்தான்.

பார்வதி ஆச்சி தரையில் அமர்ந்து குழந்தையைக் கையில் ஏந்திப் பார்த்தார். தன் மோதிரத்தை அவிழ்த்து தேன் கொண்டு வரச் சொல்லி அதில் சொட்டு நனைத்து பாவனையாக குழந்தையின் நாவில் தடவினார். விளக்கெண்ணெய் கேட்டு ஒரு விரலில் தொட்டு உச்சியில் தடவினார்.

“பொறந்ததும் செவ்வெண்ணை தடவுனீங்கதானே, என்னவோ அந்த நாளைய பழக்கம். விட முடியல” என்ற ஆச்சி,

“சிவா, நல்லாயிருக்கியாடா, பத்தியமெல்லாம் செல்லுதா, லேகியமெல்லாம் ஒழுங்கா பொழுதோட சாப்பிடுறியா?”

“அப்பத்தா”

சிரித்த நளினி “மாப்பிள்ளைக்கு குழந்தையை விட்டு நகரவே மனசு வரலை. ராத்திரில பேபி லைட்டா சிணுங்கினா கூட எனக்கு முன்னால அவர்தான் எழுந்திருக்கறார்”

“பின்ன, பொண்ணுன்னா சும்மாவா நளினி?”

“...”

பிறகு ஆச்சியே “தணிகா, அரசு எங்க, நாம எடுத்துட்டு வந்த சாமானை எல்லாம் கார்ல இருந்து இறக்காம இன்னும் என்ன செய்யறான்? போய் கூப்பிடு சொல்றேன்”

மகன், மருமகளின் கௌரவம், இங்கு தனக்கான வரவேற்பு என்ன என்ற குழப்பத்துடன் இருந்த தணிகைநாதன், ஆச்சியின் அழைப்பில் கலைந்து “இதோ போறேன் ஆத்தா” என, அவரது மொபைல் ஒலித்தது. வைரவன்தான்.

“சொல்லு”

“...”

“ம், வரேன் இரு” என வெளியில் செல்லப் போக, சிவானந்தன் “நீங்க இருங்க பெரியப்பா, நான் போறேன்”

ஆச்சி “ரெண்டு பேரும் நில்லுங்க”

“அப்பத்தா”

“ஆத்தா, வைரவன் கூப்பிடுறான்த்தா”

மகனிடம் “இருக்கட்டும்” என்ற ஆச்சி, ராமநாதனிடம் “ஏந்தம்பி, எங்க பேரனும் பேரம்பிண்டியும் எங்க கூட வந்ததை நீங்க காணலையோ?”

“ஆச்சி… அது…”

“வழி முச்சூடும் நீங்க என்ன சொல்லுவீங்களோ, எப்படி நடப்பீங்களோன்னு அம்புட்டுக் கலக்கம் எம்பேத்திக்கு. நானும் தூங்குறாப்பல, அரசு கிட்ட அவ புலம்பினதை பாத்துக்கிட்டேதான் வந்தேன்”

“...”

“அவுக ரெண்டு பேரும் செஞ்சது தப்புதான். அதுக்காக வீடு தேடி வந்தவங்களை, அதுவும் எங்க கூட வந்தவங்களை வெளிலயே நிக்க வெச்சா.., எம் பேரன் என்ன டிரைவரா? எம்புள்ளைங்களை தெருவுல நிறுத்திட்டு, நான் இங்க பலகாரத்தை தின்னா செரிக்குமா?”

கையில் வைத்திருந்த சிசுவிடம் கவனம் வைத்து, குரலை உயர்த்தாது, அதிராது ஆச்சி பேசியதில் நளினி கணவரைப் பார்க்க, ராமநாதன் அமைதியாக வாசலுக்குச் சென்றார்.

ஆச்சி ஆயாவிடம் “உங்க மூத்த பேத்தியைக் கூப்பிடுங்க. பேரனை எங்க காணும்?” என்றார், அலட்டிக்கொள்ளாமல்.

ராகவி வந்து தரையில் அமரப் போக “ஆத்தாடீயாத்தா, பச்ச உடம்புக்காரி. கார்த்தி மாசக் குளிரு. உங்க ஊரு வேற ஐஸு பொட்டீல வெச்ச மாதிரி சில்லோனு கிடக்கு. மேலயே உக்காருத்தா. நல்லா இருக்கியா?” என்று ராகவியின் முகத்தருகே கையைச் சுழற்றி வழித்துச் சொடுக்கி திருஷ்டி கழித்தார் ஆச்சி.

ஆச்சியின் அருகில் அமர்ந்த சிவானந்தன் “ப்ளானோடதான் வந்திருக்கியா அப்பத்தா?”

“ஆமாடா, இவுக சண்டை போடுவாக, நாங்க ப்ளான் போட்டு சேர்த்து வைப்போம், எனக்கு வேற சோலிக் கழுதை இல்ல பாரு. நீயும் உம் பொஞ்சாதியும் பேச வேண்டியதை நான் செய்ய வேண்டியதா இருக்கு. அதை விடு, பொண்ணுக்குப் பேர் வெச்சிட்டியா, நஸ்ரியாதானே?” எனவும், ராகவி கணவனை முறைக்க, ஆச்சி ஆனந்தமாகச் சிரித்தார்.

********************

மேதாலக்ஷ்மியும் வைரவனும் கம்பிக் கதவுக்கு வெளியே நிறுத்தி இருந்த காரின் அருகே வந்து நின்றதுமே, அக்கம் பக்கத்து வீடுகளின் கவனம் ஈர்த்தனர்.

மேதாவிற்குத் திருமணமான விஷயம் நிறைய பேருக்குத் தெரிந்ததே ராகவிக்குப் பிரசவமான பிறகு அவள் இங்கே இல்லாததை கவனித்த பிறகுதான்.

ராமநாதனின் தாத்தா காலத்திய வீடு என்பதால், அந்தத் தெருவில் எல்லோரும் பழக்கம். நீண்ட வருடங்களாக எதிர் வீட்டில் இருக்கும் பத்மா மாமியும் கிருஷ்ணன் மாமாவும், நேரே இவர்களிடமே வந்து “இதான் உன் ஹஸ்பண்டா, என்னடீ பொண்ணே இப்டி பண்ணிட்ட?” என்று உரிமையாக விசாரித்தனர்.

இனியும் இங்கேயே நின்றால், நன்றாயிராதெனத் தோன்ற, பழங்கள், இனிப்புகள், அவர்களது மாத்திரைகள், மாற்றுடை என இருந்த பைகளைக் கொடுத்துவிட்டுச் செல்ல எண்ணிய வைரவன் தந்தைக்கு அழைக்க, வரேன் என்றவரை ஆளைக் காணோம்.


“காரைப் பூட்டிட்டு பக்கத்துல எங்கேயாவது போகலாம்டா. அப்பாவே கால் செய்யட்டும்” என்ற வைரவன் பைகளை உள்ளே வைத்துப் பூட்டினான்.

மேதா “ஸாரி, ஸாரி ராசு. நாம இங்க வந்திருக்கவே கூடாது. என்னாலதான் உங்களுக்கு… ம்ப்ச், ஊர் விட்டு ஊர் வந்து, வீட்டுவாசல் வரைக்கும் வந்தபிறகு இப்படி செய்வாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ராசு”

“ எத்தனை நாள், சீக்கிரமே சரியாகிடுவாங்கடா”

“உங்க வீட்லயும் பிடிக்கலைன்னாலும் நம்மை வெளில போன்னு சொல்லலை. ஆனா இங்க நம்மை உள்ள கூட விடலை…”

‘எங்க வீட்டுக்கு நான் தேவை. அதனால புலம்புறது, ஜாடை பேசுறதோட நிக்குது. அது புரியாம இவ வேற…’

“நான் யாருக்குமே வேண்டாமா”

“ இந்த ராசப்புக்கு என் மோகினி வேணுமே”

“ம்ப்ச், அழ வெக்காத ராசு”

“கமான் மோகீ, அதை விடு. ஐயாவோ, அப்பத்தாவோ உங்கிட்ட நாம எப்ப திரும்ப ஊருக்குப் போகப் போறோம்னு சொன்னாங்களா?”

“எதுவும் சொல்லலை, ஆனா அவங்களால எப்படி இன்னைக்கே திரும்பவும் ஆறு மணிநேரம் ட்ராவல் செய்ய முடியும்?”

“அப்ப நாம வேணா ஊட்டி, வால்பாறைன்னு வேற எங்கயாவது போய்ட்டு நாளைக்கு காலைல வருவோமாடீ?”

மேதா சீரியஸாக “அடப்பாவி, சைக்கிள் கேப்ல ரயில் ஓட்டப் பாக்குறியே”

“மோக்ஸ், கொஞ்சம் சிரியேன், ப்ளீஸ்”

“எனக்கு பாலாவை மட்டுமாவது பாக்கணும் வைரூ” என்றவளின் குரலில் ஙஞணநமன.

“பாக்கலாம், இப்ப பக்கத்து வீட்டு அக்கா உன்னைப் பார்க்க வராங்க பாரு. வா, முதல்ல இங்கிருந்து போகலாம்”

இருவரும் மெதுவே தெருமுனையை நோக்கி நடக்கத் தொடங்க, அவர்கள் பேசுவதைக் கேட்டு அந்தப் பெரிய வண்டியின் இந்தப் பக்கத்திலேயே நின்று விட்ட ராமநாதனுக்கு, மகள் ‘பாலாவை மட்டுமாவது பார்க்க வேண்டும்’ என்றதில் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.

*******************


தன் பெற்றோரை, உடன்பிறந்தவளை, தான் பிறந்து வளர்ந்த வீட்டை அத்தனை அந்நியமாகத் தான் உணரக்கூடும் என மேதாலக்ஷ்மி கனவிலும் நினைத்ததில்லை.

ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் இழப்பையைம் ஏக்கத்தையும் விட, தானே துணையைத் தேடிக் கொண்டதில் உரிமை மறுக்கப்பட்டது போல் தோன்றியது.


மாமா சிவானந்தனுக்கு இருக்கும் உரிமையும் சலுகையும் கூட , அந்த வீட்டில் பிறந்த தனக்கு இல்லையெனப் புரிந்தது.

அதைவிட, மாப்பிள்ளை மரியாதையுடன் ஸ்வாதீனமாக ஒரு ஷார்ட்ஸில் இருந்த சிவானந்தனுக்கு நேர்மாறாக, தன் அகத்தை முகத்தில் காட்டாதிருக்கப் பெருமுயற்சி செய்தபடி, சாப்பாட்டு மேஜையின் நாற்காலிகள் ஒன்றில் உடல் பொருந்தாது அமர்ந்திருந்த வைரவனைப் பார்க்க, மனம் உறுத்தியது.

மகளும் மருமகனும் பேசியதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட ராமநாதன், வேகமாக அவர்களை நெருங்கி “நில்லுங்க…உள்ள வாங்க” என்றார் விளிக்காமல்.

“...”

“அங்க எல்லாரும் உங்களுக்கு வெய்ட் பண்றாங்க, வா மேதா, நீங்களும்தான்” என்றவரது கடைசி வார்த்தை மெலிந்து ஒலித்தது.

வைரவன் தலையசைக்க, இருவரும் காரில் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு ராமநாதனுடன் வீட்டிற்குள் வந்தனர். சில நிமிடங்கள் நீண்ட அதீத அமைதியை குழந்தைதான் அழுது கலைத்தாள்.

“சிவா, உம்மக என் பட்டுச்சேலைய ஈரம் பண்ணிட்டா பாரு, நீதான் புது சேலை வாங்கித்தரணும். போய் மாத்துத் துணி கொண்டா”

தணிகைநாதன் “ஆத்தா, சிவாக்கு இன்னும் எத்தனை புள்ளைங்களோ, எம்புட்டு தரம் ஈரம் பண்ணுமோ, அத்தனைக்கும் உனக்கு சேலை வாங்கிக் கட்டுமா?” என்று சிரித்தார்.

எல்லோருமே சிரித்துவிட, “கரெக்ட் பெரியப்பா” என்ற சிவானந்தனும் வைரவனும் தணிகைநாதனை ஆச்சர்யத்துடன் நோக்கினர்.

ஆச்சி “போடா வெக்கமத்தவனே. நளினி, ரெண்டு பெரிய தட்டு குடும்மா. அரசு, இங்க வா, அந்தப் பைல இருக்கறதை எடுத்து இந்தத் தட்டுல வை”

“ஒரு நிமிஷம் அப்பத்தா” என்ற வைரவன் வெளியே சென்று, வரும்போது பார்த்த வீட்டின் வலப்புறத்தில் இருந்த குழாயில் கை, கால் கழுவி வர, நளினி “எதுக்கு வெளில… சொல்லுங்களேன். மேதா உள்ள கூட்டிட்டுப் போ. நீயும் போ” என்றாள்.

“பரவால்ல ஆன்ட்டீ” என்றவன் ஆச்சியின் அருகில் அமர்ந்து தட்டுகளை நிறைக்கத் தொடங்கினான். மாடியிலிருந்து பாலாவின் ஃபிஸியோதெரபிஸ்ட் இறங்கி வந்து விடைபெற்றுக் கிளம்பினார்.

சில நிமிடங்களில் அப்போதுதான் குளித்த ஈரத்துடன் தடதடவென இறங்கி வந்த பாலா, ஹாலில் புது மனிதர்களைக் கண்டு சற்றுத் தயங்கியவன் “மேதாஆஆஆ” என்று ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டான்.

“எங்க போன மேதா?”

“நீ காணாம போயிட்டியா?”

“நீ ஓடிப் போயிட்டியா மேதா?”

“ராகாக்கு பாப்பா வந்தாச்சு. நான்தான் பாலா மாமா”

“என் கூட பேசு மேதா”

எங்கே, அவள்தான் பிறந்த வீட்டில் இருந்து அவள் எதிர்பார்த்து ஏங்கிய அத்தனை அன்பையும் தனியொருவனாக வெளிப்படுத்திய பாலாவின் தோளில் சாய்ந்து அழுகை தொண்டையை அடைக்க அமர்ந்திருந்தாளே?

அவர்களைக் கண்ட சக்கரை ஐயாவின் கண்கள் கூட ஈரத்தில் மின்னியது.

மேதாவின் அழுகையில் சுதாரித்த வைரவன் “மோகீ, நான் யார்னு பாலா கிட்ட சொல்லப்போறியா, இல்ல அழுதுகிட்டே இருக்கப் போறியா? பாலா, என்னைத் தெரியுதா?”

வைரவனை நினைவுகூர முயன்ற பாலாவிடம் மேதா “பாலா, இது மாமா, சிவா மாமா மாதிரி ராசு மாமா” என ஒவ்வொரு வார்த்தையாகக் கூறித் தம்பியின் மனதில் பதிய வைக்க முயன்றாள்.

பாலாவும் “ராசு மாமா” என்றான்.

வைரவன் சிவா, ராகவியிடம் வாழ்த்துச் சொல்லி ஆச்சியின் கையிலிருந்த குழந்தையைப் பார்க்க “நீயாவது தூக்குவியா, உங்க ஐயன், அப்பனாட்டம் பயப்புடுவியா?” என்ற ஆச்சி குழந்தையை நீட்ட, லாகவத்துடன் தூக்கிக்கொண்டான்.
கணவனிடம் கை நீட்டிய ஆச்சி, அவர் தந்த பொட்டலத்தில் இருந்த தங்க அரைஞாண் கொடியை ராகவியின் கையில் தந்தார்.

தணிகைநாதன் ஆலிலை கிருஷ்ணர் போட்ட டாலர் ஒன்றைக் கொடுத்தார்.


ஆச்சி வைரவன் அவரிடம் கொடுத்திருந்த உடைகளை மேதாவிடம் தந்து “நீயே குடு” என்றார்.

வைரவன் “குடு மோக்ஸ்” என, மேதா வெகு இயல்பாக அவனது ஷர்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு கவரை எடுத்தாள்.

நல்ல கனமான எந்த வேலைப்பாடும் இல்லாத, மொழுக்கென்று ஸ்மூத்தாக டிஸைன் செய்யப்பட் திருகாணியோ, கொக்கியோ, சலங்கைகளோ இல்லாது க்ளிக்கினால் பூட்டிக்கொள்ளும் இணைப்போடு இருந்த
தண்டைக் கொலுசுகளை ரோஸ் நிறப் பேப்பரில் இருந்து எடுத்த மேதா, உடுப்பின் மீது வைத்து ராகவியிடமே நீட்ட, ராகவி அழத்தொடங்கினாள்.

பிள்ளை பெற்ற பத்தாம் நாள் ராகவி அழவும், ஆளாளுக்குப் பதற, மேதா எந்தப் பதட்டமுமின்றி வேடிக்கை பார்த்தாள்.

உடன் பிறந்தவர்களுடன் உறவைத் தக்க வைத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்காது, பணிவு என்ற பெயரில் மண்புழுவைப் போல் முதுகெலும்பின்றி, எல்லோர் சொல்வதற்கும் தலையாட்டிய குற்றவுணர்வில் அழுபவளைக் கண்டு மேதா சற்றும் கலங்கவில்லை.

மாறாக, இன்று தன் பிரச்சனையெல்லாம் தானே சரியான பின்னும், தன்னிடம் பேச முற்படாமல், கோழைபோல் பெற்றவர்களின், கணவனின் பின்னே பதுங்கிக் கொண்ட தமக்கையிடம் இம்மியளவு கூட பரிதாபம் எழாதது அவளுக்கே வியப்புதான்.

“பேரம்பிண்டி, இப்ப என்னத்துக்கு அழுவுற? பச்சை உடம்புக்காரி, சொல்லுத்தா” என்றார் ஐயா.

மேதா அமைதியாக வைரவனின் அருகில் அமர்ந்து குழந்தையைத் தொடுமுன், தந்தையைப் பார்க்க, ராமநாதனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

“மோக்ஸ், தூக்குறியா?”

“பயமாயிருக்குடா” என்றவள் சூழ்நிலை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

குழந்தை சிணுங்கத் தொடங்க, கையில் வைத்து வைரவன் ஆட்ட, ஆயாவும் நளினியும் வியப்பாகப் பார்த்தனர்.

ஐயா, ஆச்சி, தணிகைநாதன் மூவரும் முன்னரே தண்டைக் கொலுசை பார்த்திருக்க, கையில் எடுத்துப் பார்த்த சிவானந்தன், அதிலிருந்து வந்த சத்தத்தில் மீண்டும் குலுக்கிப் பார்த்தான்.

“வைரவா, சூப்பரா இருக்குடா, உள்ள என்ன, கல்லா? எங்க வாங்கின?”

“என் டிஸைன்தாண்ணா. கல்லு இல்லண்ணா, பாப்பாக்காக வெள்ளிச் சலங்கைதான்”

“நீயா வெள்ளில டிஸைன் செஞ்ச, சொல்லவே இல்ல, ஐயா, நீங்க பார்த்தீங்களா?”

சக்கரை ஐயா “அரசு, சிவாக்கு உன்னோட பிஸினஸ் பத்தி சொல்லு” என, வைரவன் கற்பகத்தின் லிங்க்கை அனுப்பினான்.


“சூப்பர் டா, சூப்பர் டா. நம்ம கடையை மறந்துடாதடா” என மனதாரப் பாராட்டிய சிவாவிடம் வைரவன் சிறிதாகப் புன்னகைத்தான்.

ராமநாதனுக்கு ராகவி மூலமாக இந்தக் கல்யாணத்தால் வைரவனுக்கு வேலை போனது தெரியும். நளினி கணவரைப் பார்க்க, இருவருமே தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும் காட்டிக்கொள்ளாது நின்றனர்.

அழத் தொடங்கிய குழந்தையை எடுத்துக்கொண்டு நளினி ராகவியுடன் உள்ளே செல்ல, நேரத்தைப் பார்த்த வைரவன் எழுந்து கொண்டான்.

“ஆத்தா, கொஞ்ச நேரம் படுக்குறியா, குறுக்கு வலிக்கப் போகுது” - தணிகைநாதன்.

ராமநாதன் “ஆச்சி, உள்ள வந்து ரெஸ்ட் எடுங்க, வாங்க, ஐயா, நீங்களும்தான்” என, பார்வதி ஆச்சி மெதுவே எழுந்தார்.

வைரவன் சக்கரை ஐயாவிடம் “நான் கொஞ்சம் வெளில போய் என் ஃப்ரெண்டை பார்த்துட்டு வரேங்கய்யா”

“இப்பவா, நாலு, நாலரைக்கெல்லாம் ஊருக்கு கிளம்பிடணும்டா”

“வந்துடுவேங்கய்யா”

வைரவன் மேதாவைப் பார்க்க, அவளும் தயாராக இருந்தாள்.

அருகில் நகர்ந்து “மோகி, நீ இருக்கறதுன்னா இருடா”

“இல்ல, நானும் வரேன்”

“சரி, இப்ப எங்கூட வா” என மனைவியின் கையைப் பிடித்தவன், நேரே ஆயாவிடம் சென்றான்.

மேதா கலக்கத்துடன் அழ, எல்லோருக்கும் முன் ஆயா சங்கடப்பட்டார்.

வைரவனே “மன்னிச்சுடுங்க ஆச்சி. எங்க நடக்காம போயிடுமோன்ற பயத்துல அவசரப்பட்டுட்டோம்” என்றவன், மேதாவை முழங்கையால் இடிக்க, இருவரும் சட்டென ஆயாவின் காலில் விழுவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

வைரவன் ராமநாதனிடம் “நாங்க எங்க கூட பாலாவை கூட்டிட்டுப் போகலாமா?”

“...”

நளினி “உங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஏன்…”

“அதெல்லாம் பிரச்சனையில்லை”

மொபைலைப் பார்த்த வைரவனிடம், சக்கரை ஐயா “டாக்ஸி வேணாம், காரை எடுத்துட்டுப் போடா”

“சரிங்கய்யா”

மேதா “யோவ் அரசு, இதான் உங்க ஃப்ரெண்ட் வீடா?”

“பின்ன, கல்பு எனக்கு ஃப்ரெண்டா இல்லையா, நமக்காக வெயிட் பண்றான் பாரு, சீக்கிரமா வா” என பன்னிரெண்டே முக்காலுக்கு மனைவி மற்றும் மைத்துனன் சகிதமாக வைரவன் சென்றது ஈச்சனாரிக்கு.

****************

அன்னபூர்ணாவுக்குச் சென்று, பாலாவிற்குப் பிடித்த பூரி கிழங்கும் ரோஸ்மில்க்கும் வாங்கி உண்ண வைத்தாள் மேதா.

“மோக்ஸ், எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்குத் தெரியுமா?”

“சாப்பாட்டுலன்னா எனக்குத் தெரியாது?”

“வேற எதுல எல்லாம் தெரியும்?”

“லிஸ்ட் போடவா?”

பாலாவிற்கு டீ ஷர்ட்டும் அவன் கேட்ட ஸ்மைலி பால் பாக்கெட்டும் வாங்கினர்.

வீட்டில்…

அறைக்குள்…

ஐயா “ஏன்டா தணிகா, புள்ளைங்க ரெண்டும் காப்பித்தண்ணி கூட குடிக்காம போய்ட்டாங்களே, சாப்பாட்டு நேரம் ஆகப் போவுது”

ஆச்சி “அதான் முன்னாலயே போய்ட்டான்”

வெளியில்…

நளினி “பாலாவோட லஞ்ச் டயம் ஆயிடுச்சு. அவனை ஏன் மாமா அனுப்பினீங்க?”

ராமநாதன் “இங்க சாப்பிட வேணாம்னுதான் வைரவன் வெளில போய்ட்டான். நாம தப்பா நினைக்கக் கூடாதுன்னு கூடவே பாலாவையும் கூட்டிட்டுப் போய்ட்டான். சும்மா சொல்லக்கூடாது. ஹி ஈஸ் வே டூ ஸ்மார்ட்” என சிலாகித்தார்.

எதுவும் சரியாகவில்லை, ஆனால் எல்லாம் சரியானது போன்றதொரு பிம்பத்துடன் ஊர் திரும்பினர்.

******************

வைரவன், மேதாவின் டிஸைன்களை செய்து தருவது பெருமாள் ஆசாரியின் மகனும், செந்திலின் தம்பியும்தான். முன்னர் எப்போதாவது செய்ததை இப்போது வழக்கமாக செய்ய நேர்ந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.

இதுவரை பெருமாள் ஆசாரியின் வீட்டிலேயே வேலை செய்து வந்தனர். இப்போது அவரது மகள் பிரசவத்துக்கு வந்திருக்க, இடப்பற்றாக்குறை.

எப்படியும் தனியே ஒரு இடம் வேண்டும் என்பதால் இன்று முதல் இடத்திற்கான வேட்டை ஆரம்பம்.

ஜீவா, லதா, தணிகைநாதன் எல்லோரும் வெளியில் சென்றுவிட, உடனடியாக இடத்தைப் பார்க்க வரச்சொல்லி வைரவனுக்கு அழைப்பு வந்தது.

வள்ளியம்மை ஏனோ மீண்டும் உறங்கி இருக்க, அவர் இன்னும் காலை ஆகாரமே உண்ணவில்லை என்பதால் சிறிது தயங்கினான்.

குளித்துவிட்டு வந்த மேதா, ஊதுபத்தி, ஏற்றிவிட்டுத் தலையில் துண்டுடன் பூஜையறையில் இருந்து வெளியே வர, வைரவன் மயங்கி விழுவது போல் பரிகாசம் செய்தான்.

“என்ன?”

“துளசி மடத்தை சுத்தலை?”

“அடப்போடா”

“இது ஓகே. மோகினி, நான் அவசரமா வெளில போகணும். வர ரெண்டு மணிநேரம் ஆகும். அம்மா…”

“ஆன்ட்டிய நான் பாத்துக்கறேன், நீங்க போய்ட்டு வாங்க”

“இல்ல, அம்மா இன்னும் பிரேக்ஃபாஸ்ட் கூட சாப்பிடலை”

“ஒன்னு என்னை நம்புங்க, இல்ல உங்கம்மாவோட வீட்லயே இருங்க. நான் போய் இடத்தை பார்த்துட்டு வரேன். பைக் சாவி குடுங்க”

“மோகீ”

“ராசு”

“ம்ஹும், இது சரியா வராது, நான் போய்ட்டே வரேன்”

சிறிது நேரத்தில் கண்விழித்த வள்ளியம்மைக்கு பொங்கலும் சட்னியும் ஸ்பூன் போட்டு எடுத்து வந்தாள் மேதா.

“வைரவன் எங்க?”

“அவசரமா வெளில போய் இருக்கார்”

“அவன் வந்தப்புறம் சாப்பிட்டுக்கறேன்”

“அவர் வர நேரமாகும்”

“பரவாயில்ல”

“இனிமே அவர் தினமும் போக வேண்டி இருக்கும்”

“என்ன, மிரட்டறியா?”

“மிரட்டலை. நான் சாப்பாடு தரேன், சாப்பிடுங்கன்னுதான் சொல்றேன்”

“நீ சொன்னா, நான் கேக்கணுமா?”

“...”

அந்த அமைதியான தெருவில் வேக வேகமாக இரண்டு ஸ்கார்பியோக்கள் வந்து நிற்க, திடீரென ஒரே சத்தமாக இருந்தது.

சில நிமிடங்களில் பைக்கை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே வந்த வைரவன் “மோகீ, வாசக்கதவைத் தாள் போட்டுக்கோ. ஜீவா வந்தா மட்டும் கதவைத் திற. நான் பெரிய வீட்டுக்குப் போறேன்”

வள்ளியம்மை “வைரவா, வந்ததும் வராததுமா எங்கடா போற?

“வாசல்ல சத்தம் கேக்குதா. பெரிய வீட்டைச் சுத்தி ஆள் நிக்கறாங்க. ஏதோ தகறாரு. ஐயாவும் ஆச்சியும் வேற தனியா இருக்காங்க. நான் போய் என்னன்னு பாக்கறேன். தண்ணீர்மலையைக் கூட்டிட்டு அப்பாவையும் அங்க வரச்சொல்லி இருக்கேன்”

“நான் இன்னும் சாப்பிடல”

“உம் மருமக போடுவா, சாப்பிடு”

********************

குழந்தை பிறந்த பதினாறாம் நாள் பேர் சூட்டும் விழாவிற்கெனகோவை சென்றிருந்த முருகப்பன், சிவானந்தன், தெய்வானை மூவரும் இன்றுதான் திரும்புகின்றனர்.

தணிகைநாதன் சாலையிலும், தண்ணீர்மலை கடையிலும் இருக்க, சக்கரை ஐயாவும் ஆச்சியும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

பலமுறை பலவழிகளில் தண்ணீர்மலையையும் முருகப்பனையும் தொடர்பு கொண்டு பேச முயன்ற ஜோதியின் வீட்டினருக்குத் தொடர் தோல்விதான்.


அவர்கள் எவ்வளவோ கண்காணிப்பாக இருந்தும், முந்தைய நாள் மாலை, மூன்றரை மாத கர்ப்பிணியான ஜோதி தூக்கு மாட்டித் தற்கொலைக்கு முயல, மிகுந்த சிரமத்துக்குப் பின் காப்பாற்றி இருந்தனர்.

இதற்குமேல் முடியாதென்ற நிலையில் இப்போது சொந்த பந்தங்களையும், சிவகங்கையின் ஆளுங்கட்சிக் கவுன்சிலரையும், வேறு சில கட்டப்பஞ்சாயத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளையும் அழைத்துக்கொண்டு, காரைக்குடி வீட்டுக்கே வந்துவிட்டனர்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
Haa Haa தண்ணீர்மலைக்கு டின்னு கட்டப்போறாங்க...

சொல்லாம கொள்ளாம திடுதிப்புன்னு செஞ்சுக்கிட்டாலும் ஒழுங்கா கௌரவமா கல்யாணம் செஞ்சு இருக்கிற ரா.மோ. கூட்டணியின் அருமை பெருமை தெரியப்போகுது - சூப்பர்
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
ஊருக்கே தண்ணீர் காட்டினா மலைக்கு இப்போ ஊரே தண்ணீர் காட்ட போகுது....

ராகா சிவா சரியான செலபிஷ்....
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
வாவ் வாட்டர் பால்ஸ் உனக்கு இன்னிக்கு பூசை ரெடி👌👌👌👌,
மேதா, வைரவா சூப்பர் 👌👌👌👌👌
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
வைரவன் நியாயமாக பேசுவார் இது தண்ணீர் மலைக்கு பிடிக்காதே.
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

அடேய் வைரவா, உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியுமே..;);) மோகினியாட்டம் ஆட பிடிக்கும்..🤭🤭🙈🙈

 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
Waterfalls திரும்ப ஏதோ எக்கு தப்பா செஞ்சுட்டானோ 🤔இருக்கும் ஜொள்ளு பயல்
 
Top Bottom