• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 18

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 18


வி
ளக்கேற்ற உரிமை கோரிய வைரவனுக்கு பதில் சொல்லும் சங்கடத்திலிருந்து வள்ளியம்மையைக் காப்பாற்றினார் முருகப்பன். ஆம், முருகப்பனேதான்.

சர்க்கரை கல்கண்டு கொடுத்து சிவானந்தனுக்கு மகள் பிறந்த செய்தியைச் சொன்னார். கூடவே “ஆத்தா குடுத்து விட்டாக” என ஒரு தூக்குவாளியைக் கொடுத்தார்.

பின்னாலேயே தணிகைநாதன் வந்துவிட பரஸ்பரம் மகிழ்ச்சியைத் தெரிவித்தபின், முருகப்பன் “அண்ணே, நான், சிவா, தெய்வானை, சின்னவன் நாலு பேரும் இப்பவே கோயம்புத்தூருக்குப் புறப்படறோம். நாளை சாயங்காலத்துக்குள்ள வந்துடுவோம். நைட் அப்புச்சியும், ஆத்தாவும் தனியா இருப்பாக. நீ போய்…”

தணிகைநாதன் “நான் போய் துணைக்கு இருக்கேன் முருகா, இதெல்லாம் சொல்லணுமா, நீங்க பொறுமையா வாங்க”

“நாளைக்கு கடைல இருண்ணே. சாலைய திறக்க வேணாம். சாரதியும் சிவகங்கைல இருக்காரு” - முருகப்பன்.

தணிகைநாதன் சரியென, வைரவன் அலட்டிக்கொள்ளாது நின்றான்.

முருகப்பன் சென்றதும் வள்ளியம்மை மாமனார், மாமியாருக்குப் பேசி, நான்காம் தலைமுறை விருத்தியானதை விசாரித்தார். ஓரகத்தி தெய்வானையிடமும் பேசினார்.

“ஆமா வள்ளி, கார்த்திகைல பொறந்திருக்கா. விளக்கேத்தும் முன்னவே தகவல் வந்தாச்சு.
இங்க மங்காதான் விளக்கு ஏத்தினா. முருகன் கிட்ட கார்த்திகை பலகாரத்தை குடுத்து விட்டுருக்கேன்” என்றார் பார்வதி ஆச்சி.

“விருத்தி தீட்டுல வெளக்கேத்தலாமாத்த…”

“அது கெடக்கு. நல்ல நாள்ள மகாலட்சுமியே வந்து பொறந்திருக்கா. விளக்கேத்தாம இருப்பானேன்? அங்க எம் பேரம்பிண்டிய ஏத்தச் சொல்லு, வெளங்குதா?”

“சரித்த…”

“இவுக வசதிக்கு மாத்தி மாத்தி பேசுவாக” என்று சற்று உரக்கவே முணுமுணுத்தவர்
“ஆத்தாவையா சொல்லுற?” என்ற தணிகைநாதனின் குரலில் கப்பென அடங்கிய வள்ளியம்மை “வைரவா, சுப தீட்டுதான். மஞ்சத் தண்ணிய தெளிச்சுக்கிட்டு, விளக்கேத்த சொல்லு” என, வைரவன் மனைவியைப் பார்க்க, மேதா அசைவற்று நிற்பதைக் கண்டான்.

அதற்குள் வள்ளியம்மை “என்னவோ அவ விளக்கேத்தாட்டா இந்த வீட்டுலயே இருக்க மாட்டேன்ன, இப்ப ஏத்தவும் சொல்லியாச்சு, புடிச்சு வெச்ச மாதிரி நின்னா என்ன அர்த்தம்னேன்?”

மனைவியின் மனநிலை புரிய, இன்னொரு பாய்ச்சலுக்குத் தயாராக இல்லாத வைரவன் மேதாவின் அருகில் சென்று “மோகீ, சீக்கிரம் விளக்கேத்திட்டு வா, நாம வெளில போகலாம். ஜீவா, கொஞ்சம் ஹெல்ப் செய்டா” என மேலே சென்று விட்டான்.

இயந்திரம் போல் தெரிந்ததை செய்தவளுக்கு மனது ஒரே நேரத்தில் நிறைந்தும் காலியாகவும் இருந்தது.

ஜீவா, ஆச்சி கொடுத்துவிட்ட பலகாரத்தை எல்லோருக்கும் கொடுத்தான்.

உடைமாற்றி வெளியே செல்லத் தயாராக வந்த வைரவன் “அப்பா, நாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரோம். நைட்டுக்கு டிஃபன் வெளில வாங்கிக்கலாம்ப்பா. என்ன வேணுமோ ஜீவாட்ட சொல்லுங்க. ஜீவா, பணம் அனுப்பி இருக்கேன். பாத்துக்கடா”

********************

காரைக்குடியே கார்த்திகை தீப ஒளியில் ஜொலிக்க, கோடு போட்டதுபோல் பைக் பிள்ளையார்பட்டியை நோக்கிச் சென்றது.

திருக்கார்த்திகை விழா கூட்டத்தில் ஊருக்கு அருகே செல்லச் செல்ல பைக்கை செலுத்துவதே கடினமாக இருந்தது. சற்றுத் தொலைவில் பாதுகாப்பான ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு நடந்தனர்.

கோவிலுக்கு வெகு தொலைவிலிருந்தே கடலை வண்டி, சர்பத், வேகவைத்த சோளம், குழந்தைகளுக்கான பலூன், பொம்மை கடைகள், கோலக்குழாய்கள் என சிறுவியாபாரிகளையும், கோவிலுக்குப் போக, வர இருந்த மக்களையும் கடந்து நடந்த வைரவன், மேதாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை.

கோபுரமும் வாசலும் தெரிய, ஒரு ஓரமாக நின்று கொண்டனர். பௌர்ணமி நிலவும் மின் விளக்குகளும் கார்த்திகை தீபங்களுமாக ஊரே ஜ்வலிக்க, தான் இருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் செழிக்கும் என்பதை நிரூபித்தார் தேசி விநாயகர்.

அருகில் இருந்த மூடப்பட்ட போஸ்ட் ஆஃபீஸ் குறட்டில் ஏறி அமர்ந்து, கூட்டத்தையும் உயரத்தையும் பார்த்துத் தயங்கியவளை “ஒரு ஜம்ப் பண்ணுடீ” என்றவன் சட்டெனத் தூக்கிவிட, நுனியில் உட்கார்ந்து தடுமாறியவள் “என்ன செய்யுற?”

“அதை விடு மோக்ஸ், உனக்கு உங்க அக்கா குழந்தையைப் பார்க்கணுமா?”

மேதா வைரவன் கோர்த்திருந்த தனது கரத்தை உருவ முயற்சி செய்ய “என்ன்ன்ன?” என்று இன்னும் இறுக்கினான்.

“கோவில்… கூட்டம் வேற”

“அவங்களுக்கு வேற வேல இல்ல பாரு. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“ம்ப்ச், அதெல்லாம் இல்ல ராசு. என்னைப் பாத்தா வீணா டென்ஷன் ஆவாங்க. பாலா எங்க, யாரோட இருக்கான்னுதான் கவலையா இருக்கு”

“அதான் உங்க ஆயா இருக்காங்கள்ல?”

“...”

“நீ வேணா உங்க வீட்டுக்கு பேசிப் பாரேன்”

“எங்கப்பா என் நம்பரை ப்ளாக் பண்ணி வெச்சுருக்காங்க”

“!!!”

“ராகாவோட லவ், நிச்சயம், கல்யாணம் எதுலயுமே நான் இல்ல. இப்பவும்…”

“உனக்கு பார்க்கணும்னா சொல்லு, அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கும்போதே போயிட்டு வந்துடலாம்”

“வேணாம்”

“ஏன்?”

“எதுக்கு தேவையில்லாம, என்னோட சேர்த்து உங்களையும் ஏதாவது சொல்லுவாங்க”

“சொன்னா சொல்லட்டுமே. எங்க வீட்ல என்ன வாழுதாம்? அவங்களாவது என்னைப் பார்த்தாதான் ஏதாவது பேசுவாங்க. இங்க 24×7ல டியூட்டி பாக்கறாங்க?”

கணவனின் நேர்மையும் ஒப்புதலும் கரிசனமும் கண்ணைக் கரிக்க “ராசுக்குட்டீ” என்று இரண்டு கைகளால் அவனது இடக்கையை அணைத்து, அவன் பின் தோளில் முகத்தை வைத்து இருட்டில் மறைத்தாள்.

“ப்ச், அழக்கூடாதுன்னுதானே வெளில கூட்டிட்டு வந்தேன்?”

“போடா, நீதான் அழ வைக்கற?”

“...”

அவன் முதுகுப் புற சட்டையில் முகத்தைப் புரட்டிக் கண்களைத் துடைத்துக் கொண்டு, அழுத்தமாக, சத்தமில்லாமல் முத்தம் கொடுத்தாள்.

“மோகினி, கோவில்… கூட்டம் வேற”

“This is my territory
(இது எனது பிரதேசம்)” என்றவளைப் பார்த்து “செய்” என்று கை காட்டிச் சிரித்தான்.

மேதா “கோவிலுக்குப் போலாமா?”

“குழந்தைக்குப் பேர் வைக்கற வரை போகக் கூடாதுன்னு நினைக்கிறேன்”

“யார் சொன்னது?”

“நிலா பொறந்தப்போ சொன்னாங்க”

“அப்ப ஏன் இங்க வந்தோம்?”

“வேடிக்கை பார்க்க”

சரியாக அந்த நேரத்தில் கும்பலாக ஆறேழு இளம்பெண்கள் கடந்து செல்ல, தீவிரமாக வேடிக்கை பார்த்தவனைக் கிள்ளினாள்.

“என்னடீ?”

“இப்டி பார்த்த, பார்க்க கண்ணே இருக்காது பார்த்துக்கோ”என்றவளை மேலும் கீழும் பார்த்து
“ஒரு முடிவோடதான் இருக்க போல” என்று சிரித்தவனுக்குப் புரையேறி விட்டது. முறைத்தாள்.

“ஒரு மோகினியவே சமாளிக்க முடியல, எனக்கேன் வம்பு?”

“தட்”ஸ் பெட்டர்”

வைரவனின் மொபைல் ஒலிக்க, ஜீவாதான்.

“எங்கடா இருக்க, கல்யாணம் ஆனதுமே என்னைக் கழட்டிவிட்ட பாத்தியா?”

“அதான் வந்துட்டியே, போஸ்ட் ஆஃபீஸ் வாசல்ல இருக்கோம், தண்ணி பாட்டிலும் சூடா கடலையும் வாங்கிட்டு வா.

ஜீவா வரவும் மூவரும் கலகலத்தனர்.

சற்று நேரத்தில் திடீரெனக் கூட்டத்தில் பரபரப்புக் கூடவும், “அரசு, என்னாச்சு?”

“நாமதான் போய் கல்புவைப் பார்க்கறோம்னு நினைக்காத, அவர் பிக் பாஸ் மாதிரி. எப்போதும் நம்மை பாத்துக்கிட்டேதான் இருக்கார், வெயிட் அண்ட் வாட்ச்”

ஜீவா “இவனப் பத்தித் தெரியாம வாலன்டியரா வண்டில ஏறிட்டீங்களே அண்ணி”

மேதா சிரிக்க, வைரவனும் சிரிப்புடன் “அடங்குடா” என்றான்.

அடுத்த சில நிமிடங்களில் தன்னைக் காணும் வாய்ப்பு இருந்தும் வராதவர்களைக் காண முதலில் அம்மை அப்பன் வீதி உலா வர, அடுத்து மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார் கற்பக விநாயகர்.

மூவரும் சொக்கப்பனை எரியும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு, வரும் வழியில் பிரபலமான ஒரு கையேந்தி பவனைத் தேடிச்சென்று மசால்தோசை, பரோட்டா குருமா, ரோஸ்மில்க் என மேய்ந்துவிட்டு வந்தனர்.

ஆட்டோவில் வந்திருந்த ஜீவா பைக் ஓட்ட, டிரிபிள்ஸ் வந்ததில், பின்னால் அமர்ந்திருந்த மேதா பயந்தாலும் அந்தத் த்ரில்லை அனுபவித்தாள்.

அறைக்கு வந்ததும் வைரவன் “மோகினி, நீ போட்டு அமுக்கினதுல என் முதுகே அங்கங்க மேடும் பள்ளமுமா….” என்ற வைரவன் வாயடைத்துப் போனான்.

*********************

தங்களை மீறி பாலா அப்படி சட்டெனக் குழந்தையைக் கையில் ஏந்துவான் என எதிர்பார்க்காத பெரியவர்கள் மூவரும் திகைத்து நிற்க, முதலில் சுதாரித்த ஆயா அருகில் வந்து குழந்தையை அணைவாகப் பிடித்துக்கொண்டார்.

புதுக் குழந்தையைப் பார்த்த பரவசத்தில் இருந்த பாலா “மாமா பாரு” என்றதில் ராமநாதனே கலங்கினார்.


பாலாவின் அந்த ஒற்றை வார்த்தை கோடிகளில் சீர் செய்யும் தாய்மாமன்களை விட உசத்தியாகத் தோன்றியது.

மூவருக்குமே நல்ல வேளையாக சம்பந்தி வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என்ற நிம்மதியும், பாலா குழந்தையை வாங்கியதில் ஒருவித திருப்தியும் இருந்தது.

பாலாவின் முகத்தில் விரவிக்கிடந்த வாஞ்சையும் வாத்ஸல்யமும் மனதை நெகிழ்த்த, அவனை ஒதுக்கியதோடு கூடவே அவனுக்காக சண்டையிட்ட மேதாலக்ஷ்மியின் நினைவும்.

“ஃபோட்டோ எடுங்க” என்றாள் நளினி. எடுத்தார்.

தலையை உலுக்கிக் கொண்ட
ராமநாதன் குழந்தையை ஒருமுறை ஆசை தீரப் பார்த்துவிட்டு சம்பந்தி வீட்டுக்குத் தகவல் சொல்லச் சென்றார்.

இரவு பத்தரை மணிக்குமேல் முருகப்பன் குடும்பம் வந்தபோது ஆயாவும் பாலாவும் வீடு திரும்பி இருந்தனர்.

சிவா, தான் மருத்தவமனையிலேயே இருப்பதாகச் சொல்ல, மற்ற மூவரும் வீட்டுக்கு வர மறுத்து ஹோட்டலுக்குச் சென்றனர். பாலாதான் குழந்தையை முதலில் வாங்கினான் என அவர்களுக்குத் தெரியவராமலே போனது.

சில மகிழ்வான, நெகிழ்வான பிரத்யேகமான தருணங்களின் சிலிர்ப்பே அதன் ரகசியத்தில்தானே?

*********************

“அப்பா, நான் நேத்தே சொன்னேன்ல, நாளைக்கு காலைல நானும் மேதாவும் பெங்களூர் போகப் போறோம். வர மூணு நாள் ஆகும்”

சரியென்பதாகத் தலையசைத்த தணிகைநாதன் “பத்திரமா போய்ட்டு வாங்க. ஏதாவது தேவைன்னா ரவிக்கு ஃபோன் செஞ்சு பேசு”

“சரிப்பா”

“மகமிண்டிய வேற கூட்டிட்டுப் போற. நல்ல எடமாப் பார்த்து தங்குங்க”

“சரிப்பா. அம்மா, நாங்க விடிகாலை பஸ்ஸுல கிளம்பறோம். செல்லிக்கு ரெண்டு நாள் லீவு. ஜீவாவும் வீட்ல இருந்துதான் படிப்பான்...”

“ஏன், அவளுக்கு லீவு இல்ல, நீ போக வேணாம்னா போகாம இருந்துடுவியா?”

இரவு உணவுக்குப் பின்,, மேதாலக்ஷ்மி மாடியறைக்குச் சென்ற பின்புதான் தன் பயணத்தைப் பற்றிக் கூறினான்.

தன் முயற்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவே இந்தப் பயணம். அவனுக்கே எதுவும் உறுதியாகத் தெரியாத நிலையில், தந்தையிடம் கூட, முக்கியமான ஒருவரை சந்திக்கப் போவதாக மட்டுமே சொல்லி இருந்தான்.

தணிகைநாதன் “அம்மாடீ, அவனை விடு, காலைல சீக்கிரமே கிளம்பணும். நேரமாச்சு பாரு”

“அதானே, என்னை அடக்குங்க. சம்பளம்னு ஒண்ணும் வராம, கைல இருக்கற காசை இப்படி ஊர் சுத்த செலவு செஞ்சா, நான் ஏன்னு கேட்கக் கூடாதா? இந்த நிலமைல இவன் ஹனிமூன் போறது ரொம்ப அவசியமா?”

‘ஹனிமூனா, அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே நினைவில்லை, இந்த அம்மா என்னடான்னா…’

“வள்ளி, உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படியெல்லாம் பேசுற? வைரவன் ஒன்னும் ஹனிமூனுக்கு போகலை”

“...”

“அப்படியே நான் ஹனிமூனுக்குப் போனாதான் என்னம்மா? ஏன், மீனாக்கா போகலையா?”

“அவ ஃபாரினுக்குப் போய்ட்டு வந்தா. மாப்பிள்ளையும் நீயும் ஒண்ணா?”

“வள்ளீ…” என அதட்டிய தணிகைநாதன் அந்த ஒப்பீட்டைத் தாங்க முடியாது கையை ஓங்கிவிட்டார்

ஜீவா அதிர்ச்சியிலும், லதா பயத்திலும் இருக்க, வைரவன் அமைதியாக மாடியேறி விட்டான்.

அறையின் மொட்டைமாடிக் கதவு திறந்திருக்க, குளிர்ந்தது. பெங்களூர் செல்ல பேக் செய்து வைத்த பை ஒருபுறம் இருக்க, லேப்டாப் திறந்து கிடக்க, மேதா உறங்கி இருந்தாள்.

எல்லாவற்றையும் நகர்த்தி வைத்து, சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். அவனது அம்மா வள்ளியம்மை எப்போதுமே நிஷ்டூரமாக, குத்திப் பேசுபவராக இருந்திருந்தால், ஏற்பது இத்தனை கடினமாக இருந்திருக்காதெனத் தோன்றியது.

அன்பும் புரிதலுமான அம்மா இப்படிப் பேசுவதற்குக் காரணம், எதிர்காலம் குறித்தான பாதுகாப்பற்ற உணர்வும், என் மகன் என்ற உரிமையும் என்று புரிந்தாலுமே வலித்தது.

‘மாப்பிள்ளையும் நீயும் ஒண்ணா?’ என்ற கேள்வியே மனதில் சுற்றி வந்தது.

எத்தனையோ குடும்பங்களில் தந்தை இறந்தோ, இருந்தும் உபயோகம் இல்லாமலோ பெண்கள் வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். அவர்களுக்குக் கூட வயதில் திருமணம் செய்து வைக்காவிட்டாலும், சம்பாதித்துப் போடும் பெண்ணுக்கு சூடான உணவும், மரியாதையுமாவது கிடைக்கும்.

பருவத்தில் கல்யாணம் செய்துவைக்காத குற்றவுணர்வும், அவளிடம் சிறிது பயமும் இருக்கும். அவள் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப் படுவர். எங்கே?

ஒருவேளை நான் எங்கேயாவது சென்று வேலை பார்த்துப் பணம் அனுப்பினால் மதிப்பு இருந்திருக்குமோ?’


அம்மா ஏதோ ஆதங்கத்துல சொல்வதாக எண்ண விடாது, முரண்டியது மனது.

‘மேதாவின் தந்தை சொன்னதுபோல் என்னிடம் எதுவுமில்லை. அப்படி என்னிடம் என்ன இருக்கிறததென்று வீட்டை எதிர்த்துக்கொண்டு என்னோடு சேர்ந்து இவளும் பேச்சு கேட்கிறாள்?’

குளிரவும், மனைவியை நெருங்கிப் படுத்து இருவருக்கும் போர்த்தினான். அவள் அளவுக்குத் தான் அவளை நேசிக்கவில்லையோ, சுலபமாக எடுத்துக்கொள்கிறேனோ என்று தோன்ற, வலிந்து உறக்கத்தை வரவழைத்துக்கொண்டான்.

********************

பெங்களூர். இந்தியாவின் பிரபலமான நகைக்கடை நிறுவனம் அது. அவர்களது கார்ப்பொரேட் தலைமை அலுவலகம் பெங்களூரில்தான் இருந்தது.

அந்த நிறுவனம் நடத்திய போட்டியில்தான் வைரவன் பரிசு வாங்கியதும், அதன் மூலம்தான் GIA வில் படித்ததும்.

மூன்று வாரங்களுக்கு முன் அந்த நிறுவனத்தின் டிஸைனிங் பிரிவின் தலைமை அதிகாரியைச் சந்திக்கக் கேட்டிருந்தான். இன்றுதான் கிடைத்தது.

தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு எளிமையான ஆங்கிலத்தில், நிதானமாக தனது காப்புரிமை வாங்கிய, மேதாவின் சில மேற்கத்திய பாணி டிஸைன்கள் அடங்கிய போர்ட்ஃபோலியோவை, தங்களது கற்பகம் சைட்டின் விபரங்களை , தொடங்கி ஆறே நாட்களில் எண்பதாயிரத்தைத் தொட்ட விற்பனையை, அதன் நம்பகத் தன்மையை விவரித்தான்.

தான் ஒரு சுயேச்சையான, ஃப்ரீலான்ஸ் டிஸைனராக (freelance designer) அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதை, தேவையெனில், தனது டிஸைனை லீஸுக்குக் கொடுக்கத் தயார் என்பதுச் சொன்னான்.

அவர் தினமும் இதைப் போல் எத்தனை பேரை பார்க்கிறாரோ, எந்த வித மேலதிக உணர்ச்சியும் முகத்தில் காட்டாது, இதமான பாவனயுடன் காணப்பட்டார்.

“உங்களோட பேடன்டட் டிஸைன்களோட ஃபோட்டோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க. நான் கால் செய்யறேன். ஆல் தி பெஸ்ட்” என்று விடை கொடுத்தார்.

அதேபோல் பெங்களூரின் பிரபலமான, பழமையான நகைக் கடைக்குச் சென்று பேச, மறுநாள் வரமுடியுமா என்றனர்.

மறுநாள் காலையே வெற்றிகரமாக, வைரவனின் இரண்டு விதமான தோடு, பென்டன்ட் காம்போ டிஸைனையும் குழந்தையின் பிரேஸ்லெட் டிஸைனையும். பத்து வருட ஒப்பந்தத்துக்குக் கேட்டனர். வருடா வருடம் பணம் தருவதாக ஒப்பந்தம். மேதாவின் ஒப்புதலுடன் கையெழுத்திட்டான். முதல் வருடத்துக்கான பணம் உடனடியாக வைரவனின் கணக்கில் வந்துவிட்டது.

நகரின் மையப்பகுதியில் ஒரு சர்வீஸ்ட் அபார்ட்மெண்டில்தான் அறை எடுத்திருந்தனர். சாம்பார் சற்றே இனித்தாலும், சல்லிசான விலையில் சுவையான இட்லி, தோசை ஊரெங்கும் கிடைத்தது.

கமர்ஷியல் ஸ்ட்ரீட், பிரிகேட் ரோட், காவேரி எம்போரியம் என நடையாய் நடந்தனர். ஃபேமிலி பேக் சந்தன சோப், ஜீவாவிற்கு கீ செயின், நிலாவிற்கு ட்ரெஸ், பார்வதி ஆச்சிக்கும் வள்ளியம்மைக்கும் மரத்தினாலான மஸாஜர்கள், செல்லிக்கு இரண்டு டாப்ஸ் என அதிக செலவில்லாத பரிசுகளை வாங்கினர்.

வைரவன் “உனக்கு ஏதாவது வாங்கிக்கடா” என, மறுத்தாள்.

வற்புறுத்தி நல்லதாக மூன்று ஷிஃபான் புடவைகள் வாங்கினான்.

“இப்ப எதுக்கு வைரூ, ஏதானும் சொல்லப் போறாங்க”

“இப்ப மட்டும் சொல்லாமலா இருக்காங்க, சொல்லட்டுமே! எனக்குப் புடிச்சிருக்கு. என் பொண்டாட்டிக்கு நான் வாங்கித் தரேன்”

“பார்றா”

“ராசப்பு, இதை வாங்கவா?” என்றவளின் கையில் இரண்டு குட்டி குட்டி பேபி உடைகள் இருந்தன. வெளிர் நீலம், வெள்ளையில் பல நிறங்களில் போல்கா டாட் போட்டதென மென்மையான காட்டனில், ஜட்டியின் பின் பக்கத்தில் குட்டியாக ஃப்ரில் வைத்து, மிக அழகாக இருந்தது.

“வாங்கு”

“வேணாம் ராஜ், நாம சண்டை முடிஞ்சு பாப்பாக்கு குடுக்கறதுக்குள்ள சைஸ் சின்னதாயிடும்”

“சிவாண்ணா கிட்டயோ, அப்பா கிட்டயோ குடுத்து விடலாம், வாங்கு”

“மாமா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”

“சொல்ல மாட்டான்”

பில் போடக் காத்திருந்த நேரத்தில், வைரவன் “மோக்லி…”

“மோக்லின்னா சொன்ன, அது ஜங்கிள் புக்ல வர பையன் பேர்ல. ஜட்டி மட்டும் போட்ருப்பான்”

“அதான் ஃப்ரில் வெச்சு கிடைக்… ஏய், சொன்னாக் கேளுடீ, பப்ளிக்ல வேணாம்”

*******************

“செட்டியாரே, இதப் பாத்தீங்களா, எம்பேரன் ஆச்சிக்கு புடிக்கும்னு பிரவுன் கலர் சந்தன சோப்பும், புடவைல வெக்கற பவுடரும் வாங்கிட்டு வந்திருக்கான்”

சக்கரை ஐயா “ஏய்யா அரசு, இந்த ஐயாக்கு எதுவும் வாங்கலியா?”

“இந்தாங்கய்யா”

“என்னடா இது?”

“கண்ணாடிக் கூடுங்கய்யா”

“நல்லாயிருக்குடா. சரி, பேரம்பிண்டி எங்க?”

“வீட்லதான்யா இருக்கா”

“நானும் ஆச்சியும் குழந்தையைப் பார்க்க நாளைக்கு கோயம்புத்தூர் போகலாம்னு இருக்கோம். நீதான் கூட்டிட்டுப் போகணும், என்ன?”

“வரேங்கய்யா”

“தணிகாவும் நம்மோட வரான். அஞ்சு மணிக்கே புறப்படணும்”

“சரிங்கய்யா”

“மேதாவையும் கூட்டிட்டு வரணும்”

“ஐயா…”

“போடா”

கேட்ட வள்ளியம்மை சன்னதம் வந்தது போலானார்.

“மகளுக்கு சடங்கு, சீர் செனத்தின்னுதான் எதுவும் செய்யல. அக்காகாரிக்கு புள்ளை பொறந்ததைக் கூடவா சொல்ல மாட்டாங்க?”

“...”

“வேற இனம், ஊரு, தெரியாத ஜனம்னா கூட ஒத்துக்கலாம். ஒரே வீட்ல…”

“மட்டு, மரியாதை இல்லாத இடத்துக்கு எம்மவன் ஏன் போகணுங்கறேன்? அவங்க பேரனைக் கூட்டிட்டுப் போறது, இல்லைன்னா டிரைவரோட போறது”

தணிகைநாதன் “போதும் வள்ளி, நானும்தான் கூடப் போறேன்”

தன் அலைபேசியை நீட்டிய வைரவன் “ஐயாகிட்ட நீயே பேசிடும்மா”

“போயேன், எனக்கென்ன, அவங்க வீட்ல போய் ஏச்சு, பேச்சைக் கேட்கணும், அவமானப்படணும்னு இருந்தா படு”

வைரவனின் பொறுமை எல்லை கடந்துவிட, “ஏன், அவ (மேதா) இங்க தினமும் கேக்கலையா, ஒருநாள் அவங்க வீட்ல என்னைப் பேசினா எதுவும் குறைஞ்சு போயிடாது”

அதிகாலையில் பெரியவர்கள் தயாராக இருக்க, டொயோட்டா லெஜன்டரை எடுத்த வைரவன், தன் வீட்டு வாசலில் நின்ற
தந்தையையும் மேதாவையும் ஏற்றிக்கொள்ள நிறுத்தினான்.

ஐயாவும் ஆச்சியும் பின்னிருக்கையில் அமர்ந்திருக்க, வைரவனோடு முன்னால் ஏறப்போனவரை “தணிகா, நீ பின்னால வா. மேதா, நீ முன்னால உட்காரும்மா” என்றார் பார்வதி ஆச்சி.

இருள் பிரியாத அதிகாலையின் குளுமையிலும், தூக்கம் கெட்டதிலும் பின்னிருந்த மூவரும் காரைக்குடி எல்லையைத் தாண்டும் முன்பே உறங்கி இருந்தனர்.

பெற்றோரை, பாலாவை, அக்காவை, புதுக்குழந்தையை, தன் வீட்டை பார்க்கும் ஆர்வம் ஒருபுறம், ஆயாவிடம் சொல்லாமல் ஓடி வந்த பின் அவரை அழைத்துப் பேசும் தைரியம் கூட இல்லாது போக, அவரை எதிர்கொள்ள வேண்டுமே என்ற அச்சம், ராகவியின் பிரசவ சமயத்தில் பாலாவைப் பார்த்துக்கொள்ளச் சொன்ன தந்தையை ஏமாற்றிய குற்றவுணர்வு ஒரு புறம் என கலவையான உணர்வுகளுடன் மேதா அமைதியாக இருளை வெறித்தாள்.

“மோக்ஸ்”

“...”

இரண்டு, மூன்று முறை மெதுவாக அழைத்தும் திரும்பாது இருந்தவளின் கையைப் பிடித்து அழுத்தினான்.

“என்னடா?”

“பயமா இருக்கு”

“ம்ப்ச், eat the frog னு கேள்விப்பட்டிருக்கியா? கஷ்டமான வேலையை முதல்ல செஞ்சுடணும். எப்ப இருந்தாலும் உங்க அம்மா, அப்பாவை பார்க்காமலே இருக்க முடியுமா?”

“...”

“இல்ல நாம என்ன எங்கேயாவது ஓடிப் போய்ட்டமா? உறவுக்குள்ள கல்யாணம் செஞ்சுக்கிட்டு, பாரக்கவே பயந்தா எப்டி? ஐயா வீட்ல எதுவும் விசேஷம்னா அவங்க வரப் போக இருப்பாங்கதானே?”

“...”

“உங்கப்பாக்கு நான்தான்டீ பிரச்சனை. கொஞ்ச நாள்ல உன்கூட சரியாயிடுவார்”

“...”

“ஏய், நான்தான் கூடவே வரேன்ல?”

நிமிர்ந்து அமர்ந்து பின்னால் திரும்பிப் பார்த்தவள் எட்டி முத்தம் கொடுக்க யத்தனித்ததில் வைரவனின் கழுத்துதான் சிக்கியது.

“மோகிக் குட்டூஸ், நாம இப்டி செஞ்சா என்ன?”

“எப்டி?”

“நாமளும் குழந்தை பெத்துக்கிட்டா?”

“போற போக்குல அதான் நடக்கப் போகுது”

“முனகாதடீ, சத்தமா சொல்லு”

“அரசுவின் கட்டளையே சாஸனம், போதுமா?”

“ரைட்டு”

********************


மேதாலக்ஷ்மியின் வழி காட்டலில், வைரவன் சரியாகப் பதினோரு மணிக்கெல்லாம் அவளது(?!) வீட்டு வாசலில் காரை நிறுத்தினான்.

சம்பந்திகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த ராமநாதன் தம்பதியர் மகளையும் மருமகனையும் கண்டு அதிர்ந்து, முகம் மாறினாலும், இவர்களிடம் எதுவும் சொல்லாது, பெரியவர்களையும் தணிகைநாதனையும் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல, சில நிமிடங்கள் தயங்கி நின்ற மேதாவும் வைரவனும் , கேட்டை விட்டு வெளியேறினர்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
வள்ளியம்மை 😡😡😡😡,
நாளைக்கே இவங்க பெரிய ஆளாயிட்டாங்கன்னா எல்லோரும் நல்லா இளிச்சிக்கிட்டு வருவாங்களோ?
 

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
24
ஐய்யோ இது என்ன.??வீட்டுக்கு வந்த பின்னர் இப்பிடி பண்றாங்க
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
செல்ல பேர் இப்போ அடிக்கடி வருதே ராசப்பா வாயில்....

வள்ளி ungabkovam எல்லாம் சரி ஆனா உங்க இயல்பை மீறிய வார்த்தை பிரயோகம் எதுகுனு தான் புரியல
 

Storyreader

New member
Joined
Aug 12, 2024
Messages
3
Amazing writing! You keep us waiting eager for next episode. It is what happens in real life.. Even if Medha conceives Valli will talk bad for that too.. i understand Valli’s insecurities but what happened to the maturity.. I can’t digest the comparison.. always the person who cares the family will never get appreciated for their sacrifice
 

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நானும் எபிசோட் முடியும் போதெல்லாம் பரவால்ல அடுத்த எபி அட்டகாசமா இருக்கும்னு நம்பி கமெண்ட் கூட போடாம விட்டேன்...


இந்த கதைக்கு டீசர் போடும் போது இந்த ஆத்தர் ஏதோ சொன்ன ஞாபகம் எனக்கு... ஜாலிலோ ஜிம்கானானான்னு ஒவ்வொரு எபிசோட்லயும் ரீடர்ஸ் என்ஸாய் பண்ற மாதிரி இருக்கும் னு சொன்னாங்க. ஆனால் இப்போ வழக்கம் போல ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும் சீட் நுனில கொண்டு வந்து உட்காரவச்சிட்டு போயிடராங்க.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன்... அடுத்த கதைக்கு நாங்க பத்திரம் எழுதி பதிவு பண்ணிட்டு தான் ஆரம்பிக்கவே விடுவோம் 😏😏😏😏😏😏😏
 
Joined
Jun 19, 2024
Messages
33
❤️❤️❤️

மோகினி போட்டு அமுக்குனதுல அவன் முதுகே மேடு பள்ளம்ன்னா, மேதா நிலைமை..🙈🙈🙈
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
வறட்டு பிடிவாதமும் முரட்டு கோபமும் இருக்கிறவங்களை எல்லாம் ஒண்ணுமே செய்யமுடியாது என்று சிட்னியில் ஒரு சிட்டுக்குருவி கருத்து சொல்லிச்சு
 
Top Bottom