• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 16

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 16


ம்பந்தி வீட்டுப் பெரியவர்களின் எழுபதாவது திருமண நாளுக்குக் கொடுக்கவென வாங்கி வைத்திருந்த பட்டுப்புடவை, ஜரிகை வேஷ்டி, அதை வைத்துக் கொடுக்க ஒரு கனமான பெரிய வெள்ளித் தட்டு, வெற்றிலை பாக்கு, பூ, பழம், கல்கண்டு, மஞ்சள், குங்குமம் என அனைத்தையும் தானே எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ராமநாதன்.

நளினி விழாவிற்குச் செல்லும் விருப்பம் சிறிதுமின்றி நைட்டி அணிந்து சாவகாசமாகத் தலையைக் காய வைத்துக்கொண்டிருக்க, ராமநாதன் முறைத்தார்.

“இப்ப நீ கிளம்பப் போறியா இல்லையா?”

“...”

“உன்னைத்தான்டீ, காதுல விழலை?” என எரிச்சலை மறையாது கத்த, அவரது கோபமான குரலில் பயந்த பாலா, நளினியின் அருகே சென்று ஒட்டியபடி அமர்ந்துகொண்டான்.

நேற்றிலிருந்து இது முதல் தடவையல்ல. ஆத்திரம், அழுகை, புலம்பல், உரத்த குரலில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுதல் என்றே இருந்ததில், ஆயா, அப்பா, அம்மாவென மாறி மாறித் தஞ்சம் புகுந்தான் பாலா.

போதாததற்கு “மேதா எங்க?” என்று கேட்டு அவனுமே நளினியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டான்.

தன் வீட்டில், தன் பொறுப்பில் விட்டுச்சென்ற பேத்தியைத் தான் கவனிக்காது விட்டு விட்டோமே என்ற எண்ணத்தில் இருந்த ஆயா மகளுக்கும் தம்பிக்கும் இடையில் பேசவே தயங்கியவர்,
இப்போது வேறு வழியின்றி

“நளினி, தம்பி சொல்றான்ல, நேரமாகுது பாரு. நீ போய் புறப்படு சொல்றேன்”

“ம்ப்ச், போம்மா. எத்தனை ஆசையா ராகவி வளைகாப்புக்கு சீர் கொண்டு வந்தோம். இந்தப் பொண்ணால எல்லாம் போச்சு. மேதா முதல்நாள் பேசினதுல நேத்து அங்க போக சங்கடம்னா
இன்னிக்கு அவமானமா இருக்குமா”

“...”

“போனதுதான் போனா, வேற எவனோடயாவது, பார்வைல படாம வேற எங்கேயாவது போய்த் தொலைக்கக் கூடாதா? நல்ல நேரம் பார்த்தா பாரு. இப்ப நாமும் போய் அவளும் அவனோட அங்க வந்து நிப்பா. ஊரே நம்மைதான் வேடிக்கை பாக்கும்”

“...”

“இதுல அந்தக் கிழவன் என்னடான்னா கல்யாணத்தை முறைப்படுத்தறேன்னு நம்ம மூஞ்சில கரியப் பூசினா, அந்தக் கிழவி சிவா மாப்பிள்ளைகிட்ட சாந்தி கல்யாணத்துக்கு சாமான் குடுத்து விட்டுருக்கு”

ஆயா “இதை யாருடீ சொன்னா?”

“ராகாதான்”

ராமநாதன் “நல்லி, அவ பேச்சை விடு. ராகாவைப் பிரசவத்துக்கு கூட்டிட்டு வரணும். இருக்கற நிலமைல நம்ம கூட அனுப்புவாங்களான்னே தெரியல. மேதா பாலாவை பார்த்துக்குவான்னு நினைச்சோம். இப்ப அதுவும் இல்லை. நாம போனாதான் பேசி கூட்டிட்டு வர முடியும். இதை கடந்துதான் ஆகணும். கிளம்பி வா, போகலாம்”

ஆயா “தம்பி சொல்றதும் சரிதானேடீ. பாவம், ஒம்போதாம் மாசம் நடக்குது. ஆயா, அப்பா, அம்மான்னு செய்ய ஆள் இருந்தும், வசதியும் ஆசையும் இருந்தும் அந்தப் பொண்ணுக்கு சீராட குடுத்து வைக்கலை பாரு”

ராமநாதன் “ஏங்க்கா அப்படி பேசற, ராகவிக்கு ஒரு குறையும் இல்லாம எல்லாம் நடக்கும்”

நளினி தயாராகி வரவும் கிளம்பியவர்களை வழிமறித்த பாலா “பாலாவும் வரேன்” என்றான் பிடிவாதமாக. கெஞ்சிக் கொஞ்சி அவனை சமாதானம் செய்து விட்டுக் கிளம்பினர்.

****************

முதல் இரண்டு நாள்களை விட இன்று கூட்டம் அதிகம் இருந்தது. பார்வதி ஆச்சி, தெய்வானை இருவரது பிறந்தவீட்டு உறவுகளும் திரண்டு வந்திருந்தனர்.

வளைகாப்பு முடிந்ததுமே சென்றுவிட்ட தெய்வானையின் சகோதரர்களுக்கு, இன்றுதான் நடந்தவை அனைத்தும் மறுஒளிபரப்பு செய்யப்பட “எம் மருமவனை சபைல வெச்சு வேண்டாம்னு சொல்ல அவ யாரு?” என்ற குதித்த சின்ன அண்ணன், தங்கையிடம் ‘எம் பொண்ணக் கேட்டு வந்துடாத’ என்று தான் சொன்னதை வசதியாக மறந்துவிட்டார்.

எழுபது வருடங்கள் இணைந்து வாழ்ந்து, வாழ்வின் சுக துக்கங்களில், ஏற்ற இறக்கங்களில் கை கொடுத்து, காத்து, பூத்து, காய்த்து, முதிர்ந்து கனிந்திருந்த சக்கரை ஐயா - பார்வதி ஆச்சி தம்பதியரைப் பார்க்க அம்மை அப்பனாகவே தெரிந்தனர்.

முருகப்பனின் குடும்பமும் தணிகைநாதனின் குடும்பமும் பெரியவர்களுக்கு அருகிலேயே இருந்தனர்.
எல்லோரும் விழாவிற்கென அவரவர்களுக்கு வழங்கிய உடையில் இருந்தனர். தண்ணீர்மலை கூட வெள்ளை வேட்டி சட்டையில் அமைதியாக நின்றிருந்தான்.

தம்பதிகள் நலனுக்காக ஹோமமும் பூஜையும் தொடங்கிய சில நிமிடங்களில், வைரவன் மேதாலக்ஷ்மியுடன் வர, அங்கிருந்த அத்தனை கண்களும் அவர்கள் மீதுதான்.

‘இவுகளுக்கு இருக்குற தைரியத்தைப் பாரேன். தன் இஷ்டப்படி கல்யாணமும் கட்டிக்கிட்டு, கூச்ச நாச்சங்கறதே கொஞ்சமும் இல்லாம நல்லவங்க கணக்கா நீட்டி நிமிர்ந்துகிட்டுல்ல வராக’ என்பதே பலரது சிந்தனையாக இருக்க, யார் கண்களையும் சந்திக்காது, இருவரும் கூட்டத்தை ஊடுருவினர்.

முந்தைய நாள் மதியம் மேதா வீட்டுக்கு வந்தது முதல், தேவைப்படும் நேரத்திலும் உடையோ வேறு எதுவுமோ தேவையா என்று வாய் வார்த்தையாகக் கூடக் கேட்காத வள்ளியம்மை, மீனாக்ஷி இருவருக்கும், மேதாலக்ஷ்மியை புதுப் பட்டுப்புடவையில் பார்த்ததுமே, காலையில் வைரவன் எங்கே, எதற்குப் போனான் என்று புரிய, முகம் சுருங்கியது.

நிறைமாத வயிற்றுடன் தன் பெற்றோரின் அருகே அமர்ந்திருந்த ராகவி, தன் தாயின் கையைத் தட்டி, மேதாவைக் காட்ட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே புடவை வைத்திருக்கும், வெகு நேர்த்தியாகப் புடவை கட்டிக்கொள்வதோடு, தாய் நளினியின் புடவையைக் கூட, கச்சிதமாகத் தைக்கப்பட்ட டிஸைனர் பிளவுஸ் ரெடியாக இருந்தால் மட்டுமே உடுத்திக்கொள்ளும் மேதா, இன்று அணிந்திருந்த நல்ல சிவப்பில் நீல பார்டர் போட்ட பட்டுப்புடவைக்கு, நீலம்தான் என்றாலும் நிறபேதம் பளிச்செனத் தெரியும் சற்றே தளர்வான ரவிக்கையுடன் வந்து நின்றவளைப் பார்க்கப் பார்க்க எழுந்த ஆற்றாமையும் ஆதங்கமும், கோபமாக மாறியதில் நளினி முகம் கடுத்தாள்.

முதல் வரிசையில் அமர்ந்திருந்ததோடு, வந்து நிற்பது தன் மகள் என்பதால், சுற்றுப்புறம் கருதி எதுவும் பேசவில்லை.

மேதாவும் வைரவனும் சற்றுத் தள்ளி நின்றிருக்க,
நந்தகுமாரும் ஜீவாவும் வைரவனுடன் பேச, மேதா முற்றிலும் தனியாக நின்றாள்.

புடவை, கழுத்திரு, புதுத்தாலி, பெரிய அளவிலான பொட்டு
என , மேதாலக்ஷ்மி நேற்றைவிட இன்றுதான் புதுமணப் பெண் போல் இருந்தாள்.

கனமான கௌரிசங்கத்தை எது வரை அணிய வேண்டும், கழற்றலாமா, கூடாதா என்று தெரியாதவளுக்கு யாரும் சொல்லவும் இல்லை. அவள் அம்மாவிடம் இருப்பது தெரியும். ஆனால் நளினி அதை அணிந்து பார்த்ததே இல்லை. அப்படியே கழற்றினாலும் பாதுகாப்பாக எங்கே வைப்பது என்று புரியாமல், அதோடே இருந்துவிட்டாள்.

அங்கே கூடி இருந்த அனைவருமே சொந்தம்தான் என்பதால், ஒரே வீட்டில் இருந்து ஒரே குடும்பத்து ஆண்களைத் திருமணம் செய்தாலும், வைரமும் தங்கமுமாக, அழகுநாச்சி ஆபரண மாளிகையின் உரிமையாளர் வீட்டு மருமகள் என்பதை நிரூபித்த ராகவிக்கும் கழுத்திரு மட்டுமே அணிந்திருந்த மேதாவுக்கும் இருந்த வேறுபாடு பளிச்செனத் தெரிந்தது.

என்னதான் சொந்தம், கட்டிக்கொள்ளும் முறை என்றாலும்,வீட்டை விட்டு வெளியேறி, தானே திருமணம் செய்து கொண்ட பெண்ணும், பெற்றோர்கள் ஏற்பாடு செய்து, சீரும் சிறப்புமாய்த் திருமணம் செய்து கொடுப்பதற்குமான ஆறு முதல் அறுபது வித்தியாசங்களும் அங்கே கூடி இருந்தோரால் ஆராயப்பட்டது.

மேதா வைரவனின் சட்டை நுனியைப் பிடித்து இழுத்து, கிசுகிசுப்பாக “எல்லாரும் என்னையே பாக்குற மாதிரி இருக்கு”

மேதாவின் கண்களைப் பார்த்துப் பளிச்சென சிரித்தவன் “எனக்கும்தான்டீ உன்னையே பார்க்கணும் போல இருக்கு”

“இருக்கும், இருக்கும். நல்லவன் மாதிரி வேணாம் வேணாம்னு சொல்லிட்டு…”

கண்ணைச் சிமிட்டிய வைரவன் “சொல்லிட்டு…”

அவனைக் கிள்ள கையை உயர்த்தியவள், சூழலை உணர்ந்து கீழிறக்கினாள். மூன்று மாதங்களுக்கும் மேலாக இவளது மனதை அறிந்தும், பிரதிபலிப்பே காட்டாது இருந்தவன் இவன்தானா?

அவனைப் பார்க்க முடியாது பார்வையை விலக்கிக்கொண்டவளுக்கு, வீட்டில் சற்று முன் நடந்தது நினைவுக்கு வந்தது.

இரண்டு நாட்களாய் தடதடவென நிகழ்ந்தவையும், அதுவரை பிறரிடமிருந்து அவள் அறியாத அலட்சியமும் விலகலும், பெற்றோரின் புறக்கணிப்பும், அதற்கு முற்றிலும் மாறாக, வைரவனின் அன்பும் ஆக்கிரமிப்பும், கணவனைக் காணாது தவிப்புடன் நின்றவளிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காது, பட்டும் பளபளப்புமாக அவனது வீட்டினர் கிளம்பியதும் மேதாவிற்கு மிகுந்த அழுத்தத்தைத் தந்தது.

தன் தேவையை உணர்ந்து பூர்த்தி செய்தவன், பொட்டு வைத்த நொடியில் கலங்கி அழுதவளிடம் “ஏய், என்ன சென்டிமென்ட்டா?”

“...”

“இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்து, பேசிதானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். விடு”

“...”

“அவங்க யாரும் உனக்கு ட்ரெஸ் குடுக்காததே நல்லதா போச்சு. உனக்கு இனிமே டெய்லி நைட்ல டீ ஷர்ட் வேட்டி, லுங்கிதான். நல்ல வசதியா, அங்கங்க காத்தோட்….”

தன் அணைப்பை இறுக்கி, சற்று எக்கி அவன் வாயை மூடி இருந்தாள் மேதா. சில நிமிடங்களில் தன்னிடமிருந்து அவளைப் பிரித்து மேலும் கீழும் பார்த்தவன் “ப்ளவுஸ்தான் கொஞ்சம் லூஸா இருக்கு. மத்தபடி ஓகே.”

“இது கொஞ்சமா…?”

“புடவை பிடிச்சிருக்கா?”

“ம்… நல்ல கலர். இப்ப எதுக்கு இவ்ளோ செலவு செஞ்சீங்க? நான் கொஞ்சம் ட்ரெஸ்ஸை எடுத்திட்டு வந்து இருக்கணுமோ? சினிமால வர டயலாக் மாதிரி கட்டின புடவையோட, இல்லல்ல, போட்ட குர்த்தியோட வந்துட்டேன்”

பக்கெனச் சிரித்த வைரவன் “ஆளைப் பாரு, எல்லாம் வேணாம்டீ. அந்த வருண்ராஜ் வீட்டுக் கல்யாணத்துல ஒரு புடவையும் ப்ளவுஸும் போட்டிருந்தியே, அதை மட்டும் கொண்டு வந்திருக்கலாம்”

“என்ன புடவை…” என யோசித்தவளுக்கு நினைவு வந்துவிட, மேதாவின் உதடு O போட்டது.

“OMG, அப்பவே நீங்க என்னை பார்த்தீங்களா, நிஜமாவா?”

“கண்ணு இருக்கற எவனாவது பாக்காம இருப்பானா, என்ன, எல்லாரும் உன்னைப் பார்த்ததுதான் எனக்குப் புடிக்கல”

வாய்விட்டுச் சிரித்தவள்
“ராசுக்குட்டிக்கு பொறாமையப் பார்றா… நிஜம்மாவா சொல்றீங்க?”

“பின்ன, அதான் சாலைல மட்டும் வேலை பழகறேன்னு ஐயா கிட்ட சொல்ல சொன்னேனே”

“அடப்பாவி! பெரிய்ய அரச கட்டளை”

“இல்லன்னு சொல்லு பார்ப்போம்?”

“அப்புறம் ஏன்…?”

“ஆசை வேற, என் நிலமை வேற. உன்னை பக்கத்துலயே வெச்சுக்கிட்டு… அவஸ்தைடீ அது”

நிலா வந்து “வைரன் மாமா, தூக்கு” என்றதில் கலைந்தாள் மேதா.

வைரவனும் மேதாவும் கண்கள் ஒளிர பேசிய அந்த அழகிய சிறு தருணத்தை ராமநாதன் சற்று வியப்புடன் பார்த்தார் என்றால், தண்ணீர்மலை வெறியோடு முறைத்தான்.

ஒரிருவரைத் தவிர எல்லோரும் சிறியவர்கள் என்பதால், மூத்த தம்பதியின் பாதம் பணிந்து அவர்களால் இயன்ற பரிசை சமர்ப்பித்தனர்.

வர்த்தக, நண்பர்கள் கூட்டம் பந்தி நடக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது.

இப்போது வைரவன் கோவிலில் இருந்து இருவர் பிரசாதம் எடுத்து வந்திருக்க, வைரவனையும் மேதாவையும் அழைத்த சக்கரை ஐயா, இருவரையும் அவர்களது குலதெய்வக் கோவிலில் புள்ளிகளாக்க, பதிய வேண்டிய விபரங்களை அவர்களிடம் கொடுத்தார்.

திருமணத்தைப் பதிவு செய்யும் வழமை இல்லாத காலத்திலேயே, தாங்கள் சார்ந்திருக்கும் கோவிலில் பதிவு செய்வது நகரத்தார் வழமை.

அடுத்து முருகப்பனை விட்டு ஒரு பத்திரத்தை எடுத்து வரச்செய்த ஐயா, ராமநாதனையும் தணிகைநாதனையும் அழைத்தார்.

“ராமநாதன், இது இவங்க கல்யாணத்தோட சாட்சியா எழுதின இசை குடிமான பத்திரம். வைரவனோட ஐயாவா நான் கை எழுத்து போடறேன். நீங்களும் தணிகாவும் போடுங்க”

நடந்ததை மாற்ற இயலாதபோது, அதற்குண்டான அங்கீகாரத்தை வழங்க பெரியவர் ஏற்பாட்டுடன் இருக்க, தந்தையர் இருவரும் மறுபேச்சின்றி கையெழுத்திட்டனர். இனி மறுத்து ஆகப்போவதுதான் என்ன?

பார்வதி ஆச்சி “மீனம்மா, நம்ம வீட்ல விளக்கேத்த சொல்லு. அரசு, கூட்டிட்டுப் போப்பா” எனவும், தண்ணீர்மலை முகம் கடுத்தான்.

உணவுக் கூடத்திலிருந்து வந்த முருகப்பன் “டேய் சிவா, தம்பி கொஞ்சம் பந்தியைக் கவனிங்க. செம கூட்டம். சாப்பாட்டு நேரம் வேற. சமாளிக்க முடியல” என, தண்ணீர்மலை அசையாது நின்றான்.

பூஜையறையில் இருந்து திரும்பி வந்த வைரவன் மேதாவிடம் “நீ இரு. நான் போய் அங்க பாக்கறேன்” என்று அழைக்காமலே சிவாவுடன் நடந்தான்.

முருகப்பன் சொன்னது உண்மைதான். இருநூறு பேர் ஒரே நேரத்தில் சாப்பிடும் அளவிற்கு வசதி செய்திருக்க, ஒவ்வொரு இருக்கைக்குப் பின்னும் குறைந்தது மூன்று பேராவது காத்திருந்தனர்.

தஞ்சாவூர் தலைவாழை இலையில், வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், ஆப்பம், பால் பணியாரம், மசாலைச் சீயம், இனிப்புச் சீயம், கவுனி அரிசி, பாதாம் அல்வா, தம்புருட் அல்வா, ஃப்ரூட் புட்டிங், வறுத்த முந்திரி, முந்திரி பக்கோடா, வெங்காயக் கோஸ், அவியல், சாம்பார், டாங்கர் சட்னி, வெண்டைக்காய் மண்டி, தென்னம்பாளைப் பொடிமாஸ், இளநீர்/ ரோஜாப்பூ ரசம், பேபிகார்ன்/ காலிஃப்ளவர் சூப், கருவேப்பிலை சாதம், கொத்துமல்லி சாதம், புலவு, காளான் மசாலா, இங்கிலீஷ் காய்கறி பிரட்டல், துவட்டல், கூட்டு, பட்டாணி பாலாடைக்கட்டி குருமா, தக்காளிக்குழம்பு, இளங்குழம்பு, மிளகுக் குழம்பு, கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு, மாம்பழ சாம்பார், குறுவை அரிசிப் பாயாசம், உக்காரை என பாரம்பரிய செட்டிநாட்டு உணவின் மணம் சுண்டி இழுத்தது.

அதோடு ஐஸ்க்ரீம், கும்பகோணம், திருவையாறு, சோழவந்தான், அந்தியூர் என விதவிதமான வெற்றிலைகளும் வாசனை பாக்கு, கூடவே பீடா ஸ்டால் என விரிவான ஏற்பாடுதான்.

காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரையில் இருந்து சக நகைக்கடை உரிமையாளர்கள் பலர் வந்திருந்தனர்.

திருமணம் போன்ற விழாக்களை எடுத்து நடத்தும் கான்டிராக்டர்கள் நியமித்த சீருடை அணிந்த பெண்கள் பன்னீர் தூவி வரவேற்க, கம்பெனி கேன்டீனின் சிப்பந்திகள் போல் ஆள்கள் கூட்டமாகப் பரிமாற, விருந்தினர்கள் அழையாமலே சென்று விருந்துண்ணும் காலத்தில் கூட, தணிகைநாதனும் முருகப்பனும் மகன்களுடன் நின்று பாரம்பரியம் குறையாது பந்தி விசாரணை செய்தனர்.

*******************

வள்ளியம்மைக்கு உதவியின்றி சாப்பிடுவது கடினம் என்பதால், அவருக்கான உணவுடன், தாங்கள் உண்ட பின் ஜீவாவும் நந்தகுமாரும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, நிலா அழுது சிணுங்குகிறாள் என மீனாக்ஷியும் லதாவும் கூடவே சென்று விட்டனர்.

ஐயா அறைக்குள் சென்று அசதியில் படுத்துவிட, கால் மரத்துப்போய்த் தள்ளாடிய ஆச்சியுடன் உள்ளே சென்ற மேதா, ஓய்வறைக்கு சென்று வந்தவருக்குப் புடவை மாற்ற உதவினாள.

“படபடப்பா வருது” என்றவரின் கண்கள் மேலே செருகவும் பயந்தவள், வெளியே வர, யாருடனோ பேசியபடி நின்றிருந்த தெய்வானையிடம் சென்று “ஆன்ட்டி, ஆச்சிக்கு மயக்கம் வர மாதிரி இருக்காம்”
எனவும், மேதா தன்னிடம் சகஜமாகப் பேசியதில் ஒரு கணம் அவர் திகைத்தார்.

“நான் போய் பாக்கறேன். அத்தைக்கு லோ பிபி. நீ போய் பெரியவங்களுக்கு சாப்பாடு கொண்டு வரச் சொல்லு. முதல்ல பாயசம் எடுத்துட்டு வா” என தெய்வானை ஐயாவின் அறைக்குள் சென்றார்.

உணவுக்கூடத்தில் முதலில் கண்ணில் பட்ட தணிகைநாதனிடம் “அங்கிள், ஆச்சிக்கும் ஐயாக்கும் சாப்பாடு வேணும். எல்லாம் வேணாம். கூட்டு, பொரியல், ரசம், கொஞ்சமா ஸ்வீட் மட்டும் வேணும். முதல்ல பாயசம் வேணும்” என்றாள்.

வைரவனுடன் நடந்த திருமணம் இப்போது தான் அவளது மாமனார் என எதையும் யோசியாது, மேதா தன்னிடம் எப்பொழுதும் போல் பேசியது தணிகைநாதனுக்கு வியப்பளித்தது.

பரிமாறுபவரை அழைத்து அவளிடம் பாயசத்தைக் கொடுத்தவர் “இதைக் கொண்டு போம்மா, நானே சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றார் தானாகவே.

அங்கே பந்தியில் அம்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நளினி, ராகவி, ராமநாதன் மூவரும் தன்னைக் கவனிப்பதை மேதா உணரவில்லை.

உணவுக்குப் பின் கிளம்ப எண்ணி, ஐயாவின் அறைக்குள் வந்த வைரவனும் மேதாவும், ராகவியின் பெற்றோர், முருகப்பன், தெய்வானை, சிவானந்தன், ராகவி, தண்ணீர்மலை, தணிகைநாதன் என எல்லோரும் கூடி இருந்ததைக் கண்டனர்.

நளினி “ஆச்சி, ராகவியோட டெலிவரிக்கு இன்னும் ஒரு மாசங்கூட இல்லை. முதல் குழந்தை, பிரசவம் முன்னப் பின்ன ஆகலாம். உங்களுக்குத் தெரியாததா?”என,

ராமநாதன் பொதுவில் “ஆமாங்க, நீங்க சரின்னு சொன்னீங்கன்னா, நாளைக்கு விடி காலைல நாள் நல்லா இருக்கு. ராகவியை பிரசவத்துக்கு கோயம்புத்தூருக்குக் கூட்டிட்டுப் போயிடுவோம்” எனவும் அறையில் நிசப்தம் சூழ்ந்தது.

ஐயாவும் ஆச்சியும் அமைதியாக இருந்தனர். காரணங்கள் எதுவாயினும், எவ்வளவு மதிப்பும் செல்வமும் செல்வாக்கும் மிக்க மூத்த தலைமுறையின் சொல்லும் கூட எடுபடாமல் போகும் இடங்கள் நம் வீடுகளில் அநேகம்.

சில நேரங்களில் திருதராஷ்ட்டிரனைப் போல் பாசம் கண்களை மறைப்பதுண்டு, சில நேரம் காந்தாரியைப் போல் தன் கண்களைத் தானே மறைத்துக்கொள்வதும் உண்டு.

எல்லோருமே மனுநீதிசோழனாகி விட்டால், அவனது நீதிக்கும் தியாகத்துக்கும் பெருமையேது?

சிவானந்தனின் திருமணத்தின்போதே பாலாவின் விஷயத்தில் தெய்வானை பிடிவாதமாக இருக்க, ஓரிரு முறை பேசிப் பார்த்ததோடு, ராமநாதன் தம்பதிகளும் சம்மதித்ததில், பாலா ஒதுக்கி வைக்கப்பட்டான்.

ராகவி சில மாதங்களிலேயே கருவுற்றதில், நிபந்தனைகள் கூடியதே தவிர, குறையவில்லை. பார்வதி ஆச்சி கூட “மாசமா இருக்கற பொண்ணு, நாளப் பின்ன பிரசவத்துக்கு அங்கதானே போகணும்?” என்று ஓரிரு முறை சொல்லித்தான் பார்த்தார்.

தெய்வானையின் மூடநம்பிக்கையை ராகவியே எதிர்க்காததும், ஸ்ட்ரெஸ், கர்ப்ப கால மனநிலை என ஏதேதோ சொன்னதும் பெரியவர்களை பயமுறுத்த, அமைதியாகிவிட்டனர்.

உண்மையைச் சொன்னால், வளைகாப்புவிற்கு முஹூத்தம் பார்த்தபொழுது கூட அவர்கள் அதிகம் யோசிக்காததை ‘என் தம்பிக்கு இடமில்லாத வீட்டில் எனக்கு உறவே தேவையில்லை’ என்ற மேதாதான் பாலாவை நினைவூட்டினாள்.

எல்லோரும் தெய்வானையை எதிர்நோக்கி இருக்க, மீண்டும் நளினியே “டெலிவரிக்கு பொறந்த வீட்டுக்கு வர்றது பொங்கல், தீபாவளி மாதிரி நாலஞ்சு நாள்ல முடியாது. நல்லபடியா குழந்தை பொறந்து, ரெண்டு பேரும் உடம்பும் தேர்ற வரை மாசக் கணக்குல இருக்கணும்”

“ரெண்டு நாளுக்கு மேல எங்கம்மாவால பாலாவை சமாளிக்க முடியாது. தயவு செய்து…” என்று குரல் கரகரக்க கை கூப்பிய நளினியைக் கண்ட மேதா பதறினாள்.

‘தான் அவசரப்பட்டு விட்டோமோ, அப்பா சொன்னதுபோல், இந்த பிரசவம் வரை பாலாவோடு துணைக்கு இருந்திருக்கணுமோ, ஆனால், அப்பா பிரசவம் ஆன கையோடு நிச்சயம்னு சொன்னாரே’

அம்மாவை நெருங்கத் தயங்கியவள் வைரவனைப் பார்க்க, அவன் தலையசைத்தான். அவனிடம்தான் தந்தை பேசியது முழுவதையும் ஒப்பித்து இருந்தாளே?

திடத்தை வரவழைத்துக்கொண்ட மேதா “பாலாவை நான் பார்த்துக்கறேம்மா”

ராமநாதன் “எங்க மகனைப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்” என வள்ளென்று விழ,

தண்ணீர்மலை “நல்லா சொன்னீங்க அங்கிள். நாங்க உங்க பையனை ஒதுக்கி வெச்சோம்னு சொன்னவங்க, இப்ப நீங்களே வேணாம்னு…”

இடைமறித்த வைரவன் “ஐயா, ஆச்சி நாங்க கிளம்பறோம். அதை சொல்லிட்டுப் போகதான் வந்தோம். ஏய் என்ன பாக்கற, சண்டை போட்டு கேள்வி கேட்க வேண்டிய உங்க அக்காவே பேசாம இருக்காங்க. உனக்கென்ன?” என்றவன், மேதாவின் கையைப் பிடித்து இழுத்தபடி வெளியேறினான்.

***********************

என்ன நடந்ததோ, யார் யாரை சமாதானம் செய்தார்களோ, யார் யாருக்கு உத்தரவிட்டார்களோ, யாருக்கு ஞானம் பிறந்ததோ தெரியாது. ஆனால், மறுநாள் அதிகாலையில் ராமநாதன் காரை ஓட்ட, நளினி, பாலா, ஆயா மூவரும் பின்னே அமர்ந்திருக்க, ராகவி வசதியாக முன்ஸீட்டில் அமர்ந்து கோயம்புத்தூருக்குப் புறப்படுவதை மாடியறையின் ஜன்னல் வழியே பார்த்தான் வைரவன்.

தணிகைநாதனிடம் ஐயா புதுமணத் தம்பதிகளை பிள்ளையார்பட்டிக்கும், வைரவன் கோவிலுக்கும் அழைத்துப்போகச் சொல்ல, அவரையும் வள்ளியம்மையையும் தவிர, மற்ற அனைவரும் ஒரு இன்னோவாவை வரவழைத்துப் போய் வந்தனர்.

அடுத்தநாள் காலையில் மீனாக்ஷியும் நந்தகுமாரும் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்ல, தணிகைநாதனுக்கு சளி, காய்ச்சலாக இருக்கவே வைரவன் காலையிலேயே அழகுநாச்சிக்கு சென்றான்.

கற்பகவிநாயகருக்கு சிவா விளக்கேற்றுவதைப் பார்த்தபடியே, அங்கே காத்திருந்த பெருமாள் ஆசாரியுடன் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

“வைரவா, என்னதான் சொந்தம்னாலும் கடைல வேலை பார்க்க வந்த பொண்ணை திடீர்னு நீ கல்யாணம் பண்ணினதால, அவங்கவங்க வீட்ல பொண்ணுங்களை வேலைக்கு அனுப்பவே யோசிககறாங்க. அதனால, நீ இனிமே சாலைக்கு வரவேணாம்” என அவனை வேலையை விட்டுத் தூக்க அர்த்தமில்லாத நொண்டி சாக்கு சொன்னார் சித்தப்பா முருகப்பன்.

எதையோ சாதித்த எக்களிப்பில் இருந்த தண்ணீர்மலை, வருத்தமான முகத்தோடு நின்றிருந்த பார்த்தசாரதி, என எல்லோரையும் ஒருமுறை பார்த்தான்.

“எதிர்பார்த்தேன், ஆனா இவ்வளவு சீக்கிரமா இல்ல” என்றவன், சாலையின் சாவியை அதிர்ச்சியில் இருந்த பெருமாள் ஆசாரியிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினான்.

லதாவும் ஜீவாவும் தத்தம் பள்ளி, கல்லூரிக்குச் சென்றிருந்தனர்.

வள்ளியம்மை “இதென்னங்க அநியாயம்?”

“நான் போய் அப்புச்சி கிட்ட பேசறேன்” என்றார் தணிகைநாதன்.

வைரவன் “விடுங்கப்பா, பார்த்துக்கலாம். இப்ப வரை ஐயாவுக்குத் தெரியாமலா இருக்கும்” என்கையிலேயே, அழைத்த பார்வதி ஆச்சி “அரசு, ஐயா உங்கிட்ட பேசணுமாம்”

“அரசு… நான் எத்தனை சொல்லியும்…” என்றவரின் குரலில் அப்படி ஒரு சோர்வு.

“பரவாயில்லைங்கைய்யா. நீங்க விசனப்படாதீங்க”

“அப்புறமா வாடா”

“சரிங்கய்யா”

நாலைந்து நாட்களாக விழா, உறவுகள், நிகழ்வுகள், மாப்பிள்ளை நந்தகுமார் வீட்டில் இருந்தது என அவசியத்துக்கு அதிகமாகவே உடலை அலட்டிக் கொண்டிருந்த வள்ளியம்மைக்கு, ஃபிஸியோதெரபிஸ்ட்டுக்கு அழைத்து காலையிலேயே வரச்சொன்னவன், உடல் வலிக்கு மாத்திரை கொடுத்தான்.

மேதாவிடம் “போய் அந்த அவரைக்காயை ஆய்ஞ்சு நறுக்கி வை. நான் வரேன்”

தணிகைநாதன் காய்ச்சலில் உள்ளறையில் போய் உறங்கி இருந்தார்.

ஃபிஸியோதெரபிஸ்ட் வந்துவிட, வலி அதிகமாக இருந்ததில் முரண்டிய வள்ளியம்மையை பிடித்துக்கொண்டு உதவினான்.

அடுக்களையில் இருந்து அரவமே இல்லாது போக, எட்டிப்பார்த்தவன் அரண்டு விட்டான். ஃப்ரிட்ஜில் இருந்த மொத்த காய்கறியும் சுற்றிலும் இருக்க, மேதாலக்ஷ்மி சாகம்பரியாகக் காட்சியளித்தாள்.

‘அவரைக்காய் ஆய்வதெப்படி?’ என யூடியூபில் தேடி, அதேபோல் முயற்சித்து, அது வேலைக்கு ஆகாமல் அவளைச் சுற்றி பிய்ந்தது, பிய்யாதது, நரம்பு கிழித்தது, கிழிக்காதது என அவரைக்காய்கள் இறைந்து கிடக்க, சமையலறை வெம்மையில் வியர்த்திருந்தாள்.

அவளெதிரில் அமர்ந்து, அவள் முடியில் சுருண்டு சிக்கி இருந்த அவரை நாரை எடுத்தவன்,

“என்னடீ இது?”

“ஃபர்ஸ்ட் டே வே கஷ்டமான வெஜிடபிளைக் குடுத்தா நான் என்ன செய்ய, அதனால…”

அவரைக்காய்களைத் திரட்டிக் கழுவும் கூடையில் போட்ட வைரவன் “அதனால?”

“இது வேணாம். நான் வேணா அதை ட்ரை பண்ணட்டுமா?” என்றவள் காலையில் ரத்னம் பெரியம்மா கொண்டு வந்து தந்த வாழைப்பூவைக் காட்ட, அவள் தலையில் முட்டியவன் அடக்க முடியாமல் சிரித்தான்.

அவனையே பார்த்திருந்தவளிடம்
“என்ன?”

“ எப்பேர்ப்பட்ட intricate (நுணுக்கமான) டிஸைனை எல்லாம் மாசம் வெறும் முப்பத்தஞ்சாயிரத்துக்கு ஆட்டையைப் போட்டாங்க? ரொம்ப நல்லதா போச்சு” என்றவளின் வார்த்தைகள் பெரும் ஆசுவாஸம் தர, மேதாவை அணைத்துக் கொண்டவனின் இறுக்கத்தில் அவனது பதட்டத்தை உணர்ந்தாள்.

“மிஸ்டர் அரசப்பர், அவரைக்…”

“எவரை?”
 

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

அதானே வேணாம். வேணாம்னு சொல்லிட்டு, மோகினின்னு ஒத்த வார்த்தையில கூப்பிட்டு மொத்த சோலியையும் முடிச்சுப்புட்டானே...😜😜

 
Last edited:

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
இப்படியெல்லாம் சாப்பாட்டு மெனு கொடுத்து எங்கள் நாவில் எச்சில் ஊற வைக்க கூடாது ரைட்டரே.
 
Joined
Jun 19, 2024
Messages
26
எத்தனை ஐட்டம்..இவ்வளவும் லைட்டா டேஸ்ட் பண்ணவே வயத்தில் இடம் இருக்காதே🤷
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

அதானே வேணாம். வேணாம்னு சொல்லிட்டு, மோகினின்னு ஒத்த வார்த்தையில கூப்பிட்டு மொத்த சோலியையும் முடிச்சுப்புட்டானே...😜😜

💖💖💖
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
அப்பாடி எவ்ளோ ஐட்டம், பார்த்தாலே பசியாறிடும் போல,
அவரை, எவரை ஆச்சு? 😜😜😜😜😜😜
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵இவனுங்க வைரவணை ஒதுக்கீனது தான் சரி இனிமேலாவது அரசு நல்ல படியா பொழைக்கட்டும் 🙄🙄🙄🙄
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
இந்த ராகவிக்கு சுயமரியாதை, முதுகெலும்பு இதெல்லாம் இல்லையா? அல்லது, வெறும் சுயநலவாதியா?

அவரைக்காய் ஆய்வது எப்படி என்றே தெரியலையே கண்ணு, வாழைப்பூவை ஆயப்போகிறாயா? டமாசு டமாசு...
 
Top Bottom