• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 12

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 12


“ரப்ப்ப்…….”

நளினி மகளை ஓங்கி அறைந்த சத்தம், மேதாலக்ஷ்மியின் பேச்சில் அதிர்ந்து, அடங்கி, அடர்ந்திருந்த நிசப்தத்தைக் கிழித்துப் பட்டாளையைத் தாண்டி, கீழ்வாசல் முழுவதும் எதிரொலித்தது.

மேதா அடிவாங்கிய பதட்டத்தில் கையில் குழந்தையுடன் ஓரெட்டு முன்னே எடுத்து வைத்த வைரவனின் கையை மீனாக்ஷி இறுக்கமாகப் பற்றி நிறுத்த, ஜீவா அவன் தோளை அழுத்தினான்.

பார்வதி ஆச்சி “நளினி, என்னதிது, வயசுப் பொண்ணை அடிச்சிக்கிட்டு?”


எல்லோரும் பார்க்க மகளை அடித்துவிட்டதில் எழுந்த படபப்பு அடங்காத நளினி, மேதாவை முறைத்தபடி மௌனமாக நின்றாள்.

ராமநாதன் “மன்னிக்கணும் ஆச்சி, சம்பந்தி திடீர்னு பொண்ணு கேட்டதுல, நாங்க சுதாரிச்சு பதில் சொல்ல வரத்துக்குள்ள எம்பொண்ணு படபடன்னு பேசின ஷாக்குல அடிச்சிட்டா”

“மேதா சின்னப் பொண்ணு, அவ பேசின எதையும் பெரியவங்க மனசுல வெச்சுக்காதீங்க. விசேஷ வீடு. எங்களால இப்படி ஆனதுக்கு எல்லாரும் எங்களை மன்னிச்சுடுங்க” என்று கை கூப்பிய தந்தை ராமநாதனை, மேதா அதிர்ச்சியும் கோபமுமாக வெறித்தாள்.

முகத்தைச் சுளித்த தெய்வானை “ஏதோ, சீர், செனத்தியெல்லாம் கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும், தங்கையே ஓரகத்தியா வந்தா அக்காவும் தங்கையுமா ஒத்துமையா இருப்பாங்கன்னு நினைச்சோம். அதோட உங்க பொண்ணை எம்மகனுக்கும் புடிச்சிருக்குன்னு சொன்னான். அதான் கேட்டோம்”

“...”

“நல்ல வேளை, நாங்க தப்பிச்சோம். இத்தனை பேருக்கு மத்தில எவ்வளவு திண்ணக்கமா அவனைத்தான் கட்டிக்குவேன்னு கை காட்டுறா!”

“இவ தம்பி இருக்கற பவிசுக்கு, அவனுக்கு மச்சினன்னு மாலை மரியாதையா செய்ய முடியும்?”

தெய்வானை பாலாவைத் துச்சமாகச் பேசியதில் நளினி உடைந்து அழ, ராகவி அழுதபடி “அம்மா” வென நளினியின் அருகில் செல்ல, ராமநாதன் “காம் டவுன் நல்லி” என மனைவியின் தோளில் தட்டியவர், மகளிடம் “என்னடா இது, பாலா ஈஸ் ஃபைன். டயர்டா இருப்ப, நீ போய் ரெஸ்ட் எடு” என மகளின் கண்களைத் துடைத்து விட்டார்.

கூடியிருந்த சில உறவினர்களுக்கு, நடக்கும் நிகழ்வுகள் வளைகாப்பு விழாவை விட சுவாரஸ்யமாகப் பட்டது.

முருகப்பன் மனைவியைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்க, தான் அத்தனை மறுத்தும், பொதுவெளியில் போட்டுடைத்த பெற்றோரை எதுவும் பேச இயலாது நின்றான் சிவானந்தன்.

மனைவியின் முன்பும் மாமனார் வீட்டினரிடமும் தலையிறக்கமாக இருந்தது.

“தணிகா, அந்தத் தண்ணி சொம்பைக் குடு” என்று வாங்கிப் பருகிய சக்கரை ஐயா,

“போதும், இந்தப் பேச்சை இதோட விடுங்க. யாரும் அதிகமா பேசி காயப்படுத்திக்க வேணாம். நாளைக்கு வீட்ல சாமிக்கு பூஜை. சோலி நிறைய கெடக்கு. எல்லாரும் போய் வேலைய பாருங்க”


படக்கெனக் குதித்தபடி முன்னே வந்த தண்ணீர்மலை “எல்லாம் உங்களால வந்ததுதான்.
அந்தப் பய கிட்ட வேலை பழக இவளை அனுப்புனப்பவே இப்படிதான் நடக்கும்னு எனக்குத் தெரியும். இப்ப பாருங்க…”

வைரவனின் கை இறுகியது. ‘செய்யிறது அத்தனையும் பொறுக்கித்தனம். இதுல நாடி ஜோசியக்காரனாட்டமா பேச்சு வேற’

முருகப்பன் “தம்பி, ஐயா கிட்ட மரியாதையாப் பேசு.
கொஞ்சம் பொறுமையா இரு
பேசிப் பார்ப்போம்”

சக்கரை ஐயா உள்பட, அங்கிருந்த அனைவருமே ஆயாசமாக உணர்ந்தனர்.

ஜீவா ‘அவுக (மேதா) சொன்னது இவுகளுக்குப் புரிஞ்சுச்சா இல்லையா’ என முனகினான்.

மகனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசிய முருகப்பனுக்கு பதிலாக, ராமநாதன், வைரவனைப் பற்றியோ, பாலா குறித்தோ எதுவும் சொல்லாது “எம் மகளுக்குப் பிடிக்கலைன்ன பிறகு இதுல பேச எதுவும் இல்லை சம்பந்தி” என்றுவிட்டார் ஒரே வார்த்தையாக.

விழாவிற்கென வாடகைக்கு எடுத்திருந்த அதிகப்படி நாற்காலி அருகில் இருக்க, அதை எட்டி உதைத்த தண்ணீர்மலை, தணிகைநாதனைக் காட்டி “அப்பா, இதுங்களை அன்னைக்கே மொத்தமா வெட்டி விட்ருக்கணும். விடாது கருப்பாட்டம்… ச்சே, சரியான தரித்திரம் புடிச்ச குடும்பம்”

அதற்கு மேல் பொறுக்க முடியாத வைரவன், அதுவரை கையைக் கட்டியபடி, மேதாவின் பேச்சை, அங்கு நடப்பதை திகைப்பும் பதைப்புமாக வேடிக்கை பார்த்த தந்தை, இனி எந்த நொடியும் மன்னிப்புக் கேட்டுவிடுவார் போல் தோன்ற, மருமகளை ஜீவாவிடம் கை மாற்றி விட்டுத் தந்தையின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு, ஜீவாவும் மீனாக்ஷியும் பின்தொடர வெளியேறினான்.

அந்த இடத்தை விட்டு நீங்கும் முன் ஒரு கணம் மேதாவின் கண்களை நேரே சந்தித்த வைரவன், கண் மறையும் வரை தண்ணீர்மலையைக் கூர்ந்தபடி வெளியேற, அவன் பார்வையில் இருந்த எள்ளலில் ‘SHE IS MINE’ (அவள் என்னவள்) என்ற செய்தி நிசப்தமாக ஓங்கி ஒலித்தது.

இப்போது யார் எது பேசினாலும் நிலமை மேலும் ரசாபாசமாகும் என்பதால், ராமநாதன் “நாங்க வர்றோம்” என்றார்.

“நாளைக்கு பத்ததரை மணி போல பூஜை ஆரம்பம். எல்லாரும் வந்துடுங்க” என்றார் பார்வதி ஆச்சி.

ராகவி பெற்றோரை, தங்கையை ஏக்கமும் வருத்தமும் நிராசையுமாகப் பார்க்க, ராமநாதன் “ஒன்னுமில்லடா, நீ ரிலாக்ஸ்டா இரு. பார்த்துக்கோங்க சிவா. நல்லி, வா போகலாம்” என்றவர், மேதாவிடம் “ம்..” என, மூவரும் வெளியேறினர்.

*******************

ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து மௌனம் காக்க, யாரும் தன்னிடம் பேசாததில் சற்று பயந்து போன பாலாதான் அம்மா, அப்பா, அக்காவென மாற்றி, மாற்றிக் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“மேதா, கோவமா?”

“...”

“அப்பா, , பாலா தப்பா?”

“...”

“...மா, ஸாரிம்மா”

எந்தத் தவறும் செய்யாது, தன்னை ஒதுக்கி வைத்ததே தெரியாது மன்னிப்புக் கேட்டவனின் தோளில் சாய்ந்து நளினி அடக்க முடியாது அழ, பாலா மிரண்டான்.

ராமநாதன் “பாலா, அம்மாக்கு ஒன்னுமில்லடா. நல்லி, ஸ்டாப் திஸ். முதல்ல அவனோட பேசு” என அதட்டினார்.

நளினி “நீ சாப்பிட்டியா ராஜு, என்ன சாப்பிட்ட?”

“கீரை சாதம், அப்புறம் ஆயா குடுத்த லட்டு”

“குட், டீவி பார்க்கணுமா?”

“டைனஸார்”

ராமநாதன் எழுந்து அமேஸான் பிரைமில் ஜுராஸிக் பார்க்கைத் தேடிப் போட்டார்.

அவர்கள் மூவரும் ஓய்ந்து போய் உள்ளே வந்த கோலத்தில் பயந்து போன ஆயாவிற்கு, அங்கு நடந்ததைக் கேட்டு ஆற்று ஆற்று வந்தது.

“சரி, பேசிட்டா. அதுக்காக, அங்கேயே அடிப்பியா, அஞ்சு விரலும் பதிஞ்சு செவந்து போய் கெடக்கு”

ராமநாதன் “நாங்க பதில் சொல்ல மாட்டோமாக்கா, அப்படி அவங்க பொண்ணைக் கேட்டவுடனே தூக்கிக் குடுத்துருவோமா, அப்படி என்ன பெத்தவங்க மேல நம்பிக்கை இல்லாம?”

“அதுக்கில்ல தம்பி…”

“இன்னி வரைக்கும் ராகவி பிரசவத்துக்கு நம்ம வீட்டுக்கு வரதைப் பத்தி நாமும் கேட்கல, அவங்களும் பேசல. கேட்டு, பாலாவைக் காரணங்காட்டி மறுத்துட்டா என்ன செய்யன்ற பயத்துலயே நாளைக் கடத்தியாச்சு. இன்னைக்கே கூட்டிட்டு வர முடியாதபடி, அவங்க வீட்ல ஃபங்ஷன் வேற இருக்கு. வளைகாப்பு முடிஞ்சு பேசலாம்னு இருந்தேன், ப்ச், அதுக்குள்ள…”

நளினி “இவளுக்கு அப்படி என்ன அதிகப்பிரசங்கித்தனம்னு கேக்கறேன். அப்படியே பதில் சொன்னாலும், அவன் வேண்டாங்கறதோட நிறுத்திக்காம, இவனைத்தான் கட்டிப்பேன்னு எவனையோ கை காட்றா”

“...”

“இதுல பாலாவப் பத்தி வேற பேசி வெச்சதுல, இப்போ அவங்க ராகவியை நம்ம வீட்டுக்கு அனுப்பணுமேன்னு எனக்குக் கவலையா இருக்கு. இவ பேசினதுக்கெல்லாம் அவளைதானே குத்திக்காட்டுவாங்க. இந்நேரம் அங்க என்ன நடக்குதோ, பாவம், நிறை மாசக்காரி”

மேதா அங்கே பேசியதுதான், அதன்பின் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. எல்லோர் முன்பும் அம்மா அப்படி அடிப்பாள் என அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் அம்மாவிடம் எப்போது அடிவாங்கினாள் என நினைவில்லை.

நளினி “நீயே சொல்லும்மா, இவ பேசி வெச்சதுல இப்ப ராகாவை டெலிவரிக்கு அனுப்ப முடியாதுன்னு சொன்னா, நாம என்ன செய்யறது? அவளா அங்க பேசவே பயப்படறா”

“...”

“இவ செஞ்ச லூட்டில, பாவம் மாமா, அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு…”

மேதாவிற்குக் கழிவிரக்கமாக இருந்தது. எல்லோர் விரல்களும் தன்னை நோக்கி நீள்கையில், தான் சிறிது நிதானித்து இருக்கலாமோ எனத் தோன்றுகிறதுதான். ஆனால், பாலா குறித்தான அவர்களது தவறான நிலைப்பாட்டை அவளது பெற்றோர் ஒருபோதும் சுட்டிக் காட்டப்போவதில்லை.

‘அக்கா ராகவிக்காவது காதல் கல்யாணம். சிவா மாமாவின் பிடிவாதத்திற்காக அவங்க இசைந்திருக்கலாம். ஆனால் இந்த ஹிப்போபொட்டமஸ்?

‘அவனுக்கு ஆசைன்னா இவன் ஊர்மேயறதை மறந்துட்டு, நான் தலையாட்டணுமா?’

‘அக்காவோட புகுந்த வீடு, சம்பந்தி வீடுன்னு சொல்லி, வேணவே வேணாம்னு சொன்னவளைக் கட்டாயப்படுத்தி கடைக்கு போக/ வரச் சொல்லிட்டு, இவன் எத்தனை தரம் கடைல என்னைத் தப்பா பேசி இருக்கான்? இப்பவும் நானேவா போய் பேசினேன்?’

அம்மாவும் அப்பாவும் எழுந்து சென்றதைக் கூட உணராது, கண்களை மூடி, மனம்போன போக்கில் யோசித்தவளுக்குத் திடீரென இதில் வைரவனையும் சிக்க வைத்து விட்டோமோ என்று தோன்றியது.

தன் மனதில் இருந்ததைத்தான் வெளியில் சொன்னாள் என்றாலுமே, அவனிடம் கூட நேடியாகச் சொல்லாததை நடுக்கூடத்தில் சிதறிவிட்டோமோ என்ற ஐயம் எழுந்தது.

‘ஒருகால் வைரவனுக்கு நிஜமாவே என்னை புடிக்கலைன்னா?’

அப்படியெல்லாம் இருக்காது எனத் தன்னையே தேற்றிக்கொண்டாள். வைரவனின் குடும்பம் மீதான அக்கறையும் பொறுப்புணர்வும் புரிந்தவளுக்கு ‘நானா இப்டி எதையாவது செஞ்சாதான் உண்டு. அவனா வாயத் தொறக்க மாட்டான்’ என்று தோன்ற, கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது.

‘அம்மாதானே, அடிச்சா அடிச்சுட்டுப் போகட்டும். இந்தத் திட்டும் அடியும் கூட வாங்கலன்னா, என் லவ்வுக்கு என்ன மதிப்பு?’

‘திஸ் ஈஸ் காதலுக்கு மரியாதை 2024 மிஸ்டர் ராஜ்’

ஆயா “மேதா, எத்தனை நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப, போய் ட்ரெஸ்ஸை மாத்து போ”

“...”

“குட்டிமா”

அமைதியாக எழுந்து சென்றாள். உடை மாற்றுகையில், மதியம் பாயசம் பரிமாறிய வைரவன் தன்னை முறைத்தது நினைவு வந்தது.

‘நீ புடிச்சிருக்குன்னு கூட சொல்ல மாட்ட, உன் பொஸஸிவ்னெஸ்ஸுக்கு நான் பர்தா போட்டுக்க முடியுமா?’

‘ அவன் அப்பாவைப் பத்தி சொன்னதும் அவனுக்கு எவ்வளவு கோவம் வருது’

‘கடைசியா ஒரு தரம் பார்த்தானே, என்ன சொல்ல வந்தான்னு புரியல. ஆனா, அவன் அந்த வாட்டர்டாகை பார்த்த பார்வை…’

‘அரசு வல்லரசான மொமெண்ட்’


“கல்யாண வயசுல பொண்ணு இருந்தா நாலு பேர் கேக்கதான் செய்வாங்க. கேக்கறவங்களை எல்லாமா கல்யாணம் பண்ணிக்க முடியும். நமக்குப் பொருத்தமா இருக்கா, புடிச்சிருக்கான்னு பார்த்துதானே செய்வோம். ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதை விடுங்க சொல்றேன்” என்ற ஆயாவின் குரல் கேட்டது.

“போம்மா”

“நளினி, மேதா இந்தக் காலத்துப் பொண்ணு. ஏதோ புரியாம அவசரப்பட்டு பேசிட்டா, விடேன்”

ராமாதன் “நீ சொல்றது சரிதான்க்கா. ஆனா, அங்க ராகாவை என்ன பேசுவாங்களோன்னுதான் பயமா இருக்கு. நாளைக்கு அவங்க முகத்துல எப்படி முழிக்கப்போறோம்னு நினைச்சாலே சங்கடமா இருக்கு. அவங்க சொந்தமெல்லாம் நம்மைப் பத்தின பேச்சாதான் இருக்கும்”

அனைவர் மனதிலும் அங்கு நடந்ததே சுழல, மேதாவிற்குத் திடீரென ‘ராகா பாலா பேசினதுக்கு அழுதாளே தவிர, அவங்க பொண்ணு கேட்கப் போறாங்கன்னு அக்கா, மாமா ரெண்டு பேருக்குமே தெரியுமோ?’

“பாலா, தம்பி, சாப்பிட வாங்க. நளினி, மேதாவையும் கூட்டிட்டு வா” - ஆயா.

நளினி அம்மா சொன்னது காதில் விழாதது போல் சாப்பிட வந்த கணவனுக்கும் மகனுக்கும் தட்டை வைத்து சப்பாத்தியும் மசாலாவும் பரிமாறத் தொடங்க, ராமநாதனும் உண்ணத் தொடங்கவ்ம், ஒரு நொடி விழித்த ஆயா, பேத்தியை அழைக்கத் தானே செல்ல, மேதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

**********************

வைரவன் வீட்டிலும் இதற்குச் சற்றும் குறையாத இறுக்கம்தான். ஆனாலும், அவனுடன் இளையவர்கள் இருந்ததால், அவனை வைத்து நீயா நானா நடத்தினர்.

தணிகைநாதன், வீட்டினுள் நுழைந்ததுமே இனி தன் அப்புச்சியிடம் முகத்தைக் காட்ட முடியாதபடி வைரவன் அவரது கௌரவத்தைக் காற்றில் பறக்க விட்டானென்று குதிக்க, வள்ளியம்மை எதுவும் புரியாமல் முழித்தார்.

மீனாக்ஷி நடந்ததைச் சொல்ல, மேதா சொன்னதைப் பொருட்படுத்தாத வள்ளியம்மையின் கவனமெல்லாம் மகனிடம்தான் இருந்தது.

வைரவன் அன்று அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தபோது இயல்பாக இருந்தது இன்று நோக்கம் நிறைந்ததாகத் தோன்றியது.

மேதா தன் அன்னையிடம் அடி வாங்கியதும் ஆத்திரத்தில் உடல் இறுக, முன்னே செல்ல அடியெடுத்து வைத்ததைக் கண்டிருந்த மீனாக்ஷியும் தம்பியை சந்தேகமாகத்தான் பார்த்தாள்.

ஜீவாவின் கிண்டலும், லதாவின் குறுகுறுப்பான பார்வையும் உறுத்தியதில் “நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்” என்று பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி இலக்கின்றிப் பயணித்ததில், வைரவன் குன்றக்குடிக்கு வந்திருந்தான்.

சண்முகநாதனுக்கு எல்லாநாளும் திருநாள்தான் எனினும், கந்தசஷ்டியும், திருக்கல்யாணம் முடிந்து ஒன்றுக்கு இரண்டு மனைவியருடன் புது மாப்பிள்ளையாய் முருகனும், கல்யாண வீடாய் கோவிலும் விழாக்கோலத்தில் இருந்தனர்.

தரிசனத்திற்குச் செல்லும்போதே முதல் வேலையாக மொபைலை அணைத்துவிட்டான்.

செட்டிமுருகன் என்றே பெயர்பெற்ற மயூரகிரிநாதனின் தலத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதைக் காட்ட, குமரனுக்குச் சமமாய் இரண்டு தேவியரும் தனித் தனி மயில்வாகனத்தில் வீற்றிருக்கின்றனர்.

விபூதியை வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டவன், அர்ச்சகரின் தட்டில் பணம் போட பாக்கெட்டைத் துழாவ, நயா பைசாவைக் காணோம். நல்ல வேளையாக, அவசரத்திற்கு மொபைலில் UPI இருக்கிறது.
வெளியில் வந்து அமர்ந்துகொண்டான்.

தொடர் மழையும், சரத் காலத்தின் மாலை நேர சிலுசிலுப்பும் சேர, மலைக் காற்று அள்ளிச்சென்றது.

தன் வீடு, வேலை என ஒரு வட்டத்தில் சுழன்றவனைத் தடுமாற வைத்தவள், இன்று அவனை ரங்கராட்டினத்தில் ஏற்றி, உயரே போனதும் அந்தரத்தில் நிறுத்தி விட்டதான உணர்வு.

‘ உயரம்தான், பாதுகாப்பாகத் தரை இறங்கவும், அவளைத் தரை இறக்கவும் தன்னால் முடியுமா?’

‘மடையனாடா நீ, உம்மேல எத்தனை நம்பிக்கை இருந்தா, நீ அவளை கண்டுக்காத மாதிரி தள்ளி நிறுத்தினாலும், அத்தனை பேர் முன்னால தைரியமா அப்படிப் பட்டுனு பேசி இருப்பா, உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா?’

‘அவ அப்டி பொதுவுல வெச்சு சொன்னதுக்கு நான் என்ன செய்வேன்? இந்த அம்மா கூட என்னை சந்தேகப்படறா மாதிரியே பாக்கறாங்க. இப்ப போய் எனக்கு எதுவும் தெரியாது, நான் ஒண்ணும் அவளுக்கு வாக்கு குடுக்கலைன்னு சொன்னா, நம்பவா போறாங்க?’

‘அப்படியும் சொல்லத்தானே செஞ்சேன்? பலன்தான் பூஜ்ஜியம்’


“இவுக ஒத்துக்காம அந்தப் பொண்ணுக்கு அம்புட்டு தைரியம் எங்கிருந்து வந்துச்சாம். என்ன ஒன்னு, ரொம்ப நல்லவன் மாதிரி அந்த புள்ளைகூட எங்க போனாலும், எங்கிட்ட சொல்றதும், சக்கரை ஐயாகிட்ட சொல்றதுமா இருந்துருக்கான்” என்றார் தணிகைநாதன்.

‘ஒரே நாள்ல, ஒத்த வார்த்தைல என் வீட்டுலயே என்னை வில்லனாக்கிட்டா!’

‘என் மானத்தைக் கப்பலேத்த ஜீவா ஒருத்தனே போதும். இந்த செல்லி! நமுட்டு சிரிப்பு சிரிக்கறதும், நான் ஏதாவது சொல்லுவேனான்னு என்னையே பாக்கறதும். ஐயோ, நாளைக்கு அண்ணாவே லவ் பண்ணா, நாம செஞ்சா என்னன்னுதானே அவளுக்கு நினைக்கத் தோணும்?’

‘எல்லாம் அந்த இத்துப்போன கிறுக்குப் பயலால வந்தது. இந்தப் பக்கம் பொண்ணு கேக்க சொல்லிட்டு, அந்தப்பக்கம் பொன்னம்மா ஆச்சியோட பேத்தி கிட்ட கடலை வறுக்கறான். சர்ரியான… ச்சே, சமயம் பார்த்து திட்டக்கூட வர மாட்டேங்குது’

‘இவன் ஆசைப்பட்டான்னு சித்தப்பாவும் சித்தியும் ஏந்திக்கிட்டு பொண்ணு கேட்டதுக்கு, சபைல வெச்சு அடிச்சா பாரு ஆப்ப, எம் மோகினிடீ நீ!’

‘எதே, வீட்டுக்குப் போடீ, உனக்குப் பூசை போட புது வாருகோலோட காத்துக்கிட்டு நிக்கிறாக, தெரியும்ல?’

மணி எட்டுக்கு மேல் இருக்கும். மலை இறங்கி பைக்கில் அமர்ந்து, மொபைலை ஆன் செய்ய, ஜீவாவும் அக்காவும்தான் நிறைய அழைத்திருந்தனர்.

பாக்கெட்டில் போடப் போனவனுக்கு, ‘வேடிக்கை பார்க்கப் போன என்னையே இப்டி தனியா வந்து புலம்ப விட்டா, வேஷம் போட்ட அவளை என்ன பாடு படுத்திறாங்களோ? அவங்கம்மா வேற அவளை அங்கேயே அடிச்சாங்க’

வாட்ஸ் ஆப்பைத் திறந்தவன் ‘டோன்ட் ஒர்ரி, சாப்பிட்டியா’ என மெஸேஜைத் தட்டிவிட்டான்.
தாகமெடுத்தது. கையில் காசில்லாததில் நேரே வீடு வந்து சேர்ந்தான்.

“எங்க மாமா போன?” என்று எதிர்கொண்ட குழந்தையைக் கையில் அள்ளிக் கொண்டான்.

“இங்க ஏதோ குத்துது மாமா” என்று அவனது வலது புஜத்தைத் தடவியவள், வைரவனின் சட்டையை உயர்த்திப் பார்க்க, வைரவனின் காதல் வளையமாய்ச் சிரித்தது.

‘தந்தனத்தோம் என்று சொல்லியே…’ என மீண்டும் தொடங்கியது வில்லுப்பாட்டு.

*****************

மகளும் மகனும் நேசிக்க, சக்கரை ஐயாவின் குடும்பத்திற்குப் பெண்ணைக் கொடுத்த ராமனாதனும், தன்னையே கொடுத்த தணிகைநாதனும் இடர்ப்பாடு இல்லாது, அந்த உறவை சுமூகமாகத் தொடர்வது எப்படி என்ற கவலையில் மூழ்கி இருக்க, பொழுது புலர்ந்தது.

வைரவன் கொடுத்த காபியைக் குடித்துக் கொண்டே “இன்னைக்குப் படையல் போடறாங்க. பத்து மணிக்கு பூஜை. போறதா வேணாமான்னு புரியலை. இவன் செஞ்சு வெச்ச வேலைக்கு…” என அவனைக் கடிந்தார் தணிகைநாதன்.

நேற்றுமுதல் கட்டிக்காத்த பொறுமை பறந்துவிட, ஜீவா “வைரவனையே ஏன் பெரியப்பா திட்டறீங்க? மேதா அவுகளைக் கூட அவங்கம்மா கை நீட்டிட்டாங்க, ஆனா
உங்களை மரியாதை இல்லாம எடுத்தெறிஞ்சு பேசினது அந்த தண்ணீர்மலை. அவனை யாருமே எதுவும் சொல்லலை” என்றிருந்தான்.

ஜீவா சொன்னது மீனாக்ஷிக்கும் சரியெனத் தோன்றியதால், “ஏம்ப்பா, தம்பியத் திட்டறீங்க? அங்க வெச்சுப் பொண்ணு கேட்கவும், அந்தப் பொண்ணு தன் மனசுல இருந்ததை சொல்லிட்டா. அதுக்கு இவன் என்னப்பா செய்வான்?”

“உன் தம்பி செஞ்சதுதான் சரி, அப்படிதானே?”

“அப்படி இல்லப்பா, அந்தப் பொண்ணு பேசினதை கவனிச்சீங்களா? அவ தண்ணீர்மலையை வேண்டாம்னு சொல்லி, தம்பியைக் கை காட்டினதோட நிக்கலை. அவ தம்பி பாலாவை ஏத்துக்காத கோபம் அவளுக்கு. தெய்வானை சித்தி செய்யறதும் தப்புதானேப்பா? கூடப் பொறந்தவனை கண்ணாலயே பார்க்கக் கூடாதுன்னா?”

“...”

“சிவா பொண்டாட்டிதான் மாமியாருக்கு பயப்படணும். அதுவே தேவை இல்லாத பயம். இதுல அவ தங்கச்சி ஏன் அவங்களுக்கு பயப்படணும்? மனசுல இருந்ததை பளிச்சுனு கேட்டா. அவங்க அம்மா, அப்பா, பொண்ணோட மாமியார்னு பேச மாட்டாங்க. அதான் கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணிக்கிட்டா”

மீனாக்ஷி, ஜீவா, முந்தைய நாள் மாலை வம்பு கேட்கவும், சொல்லவும் வந்த சில உறவினர்கள் என எல்லோரும் சொன்னதில், வள்ளியம்மையின் தராசு முள் இப்போது மகன் பக்கம் சாய்ந்தது.

“நல்லாக் கேளு மீனா. விஸ்வாசத்துக்கும் ஒரு அளவு வேணாமா? பொண்ணோ பையனோ பாக்க நல்லா இருந்தா, புடிக்கதான் செய்யும்”

ஸ்வர்ணலதா “அப்ப லவ் பண்ணா உனக்கு ஓகேவாம்மா?”

மீனா “கழுத, அடி செருப்பால. வயசென்ன ஆகுது, பேச்சைப் பாரு”

வள்ளியம்மை “மீனா, நல்லவேளையா, உன் வீட்டுக்காரரும் மாமனார், மாமியாரும் நேத்து சாப்பாடு ஆனதுமே ஊருக்குப் போயிட்டாங்க”

“அதைச்சொல்லு, அவர் மட்டும் இருந்தா பிரச்சனையில்லை. கண்ணை முடிட்டு வைரவனுக்குதான் சப்போர்ட் செய்வார்”

எல்லோரும் குளித்துத் தயாராகி வர, ஸ்வர்ணலதா பள்ளிக்குக் கிளம்பி விட்டாள். மீனாக்ஷி அசதியாக இருக்கிறதென்று உறங்கி விட, வைரவன் வீட்டைசுத்தம் செய்து, வள்ளியம்மைக்கும் மருமகளுக்கும் இட்லி ஊட்டினான்.

தணிகைநாதன் பூஜைக்கு செல்ல வேண்டும் என்பதால், காலை உணவை தவிர்த்துவிட்டுப், பசியிலும் டென்ஷனிலும் நடைபோட்டார். ஜீவா ஆள் அட்ரஸையே காணோம்.


நேரம் பத்தை நெருங்க, எழுந்து அமர்ந்த மீனாக்ஷி “அப்பா, நான் புடவை மாத்திட்டு வரேன். நாம பூஜைக்குப் போகலாம் வாங்க” என தந்தைக்குத் அபயமளித்தாள்.

ரத்தினம் பெரியம்மாவும், வேறு சில உறவுப் பெண்களும் வள்ளியம்மையைக் காண வந்திருந்தனர்.

எல்லோரும் வள்ளியின் கட்டிலைச் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, வாயில்புற தூணோரமாய் நின்றிருந்த வைரவனின் மொபைலில் மெஸேஜ் வந்த ஒலி.

“பிள்ளையார் கோவிலுக்கு வா ஆத்தங்கரைப் பிள்ளையார் இல்ல, உன்னோட கல்புவைப் பார்க்க வா”என்றிருந்தாள் மேதா.

‘இவ ஒருத்தி, சும்மா கிடக்கறவன சூடேத்திக்கிட்டு’

“ஜீவா அவசரமா கூப்பிடறான், இதோ வர்றேன்” என்றவன், ஜெட்வேகத்தில்உடை மாற்றி, மொபைலோடு மறக்காமல் பர்ஸையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

வைரவன் வெளியேறிய சிறிது நேரத்தில், கொல்லைப் புறத்திலிருந்து உள்ளே வந்த ஜீவா “நேத்து அங்க சமையலே சரியில்ல. லெமன் ஜூஸ் போடப்போறேன். யாருக்கு வேணும்?” என்றான்.

*********************

உள்ளே நுழைந்ததுமே வழமைபோல் தூரத்திலிருந்தே கற்பக விநாயகர் ஆகர்ஷிக்க, வலப்பக்கத் தூணருகில் நின்றிருந்தாள் மேதாலக்ஷ்மி.

அவளை சமீபித்த வைரவன், முதலில் அவளது கன்னத்தைதான் ஆராய்ந்தான்.

“ஏய், நீ கொளுத்திப் போட்டதுல வீடே பத்திக்கிட்டு எரியுது, இப்ப எதுக்கு என்னை அவசரமா இங்க வரச்சொன்ன?”

“ராசுக்குட்டீ, நாம ரெண்டு பேரும் இன்னைக்கே, இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள் மேதா.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

இன்னாது! இன்னிக்கே, இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமாவா? 😳😳

ராசுக்குட்டீ...❤️❤️

 
Last edited:
Joined
Jun 19, 2024
Messages
26
அதென்ன..எல்லார் முன்னே பொண்ணை அடிக்கிறது🤨..பேசியது தப்பு என்றால் அடிப்பதா..😡
மேதாவின் மனசு இப்போ இதை தான் பாடுதோ😏
வீட்டுக்காரர் பேர் சொன்னேன் ராசுக்குட்டி ராசுக்குட்டி
அவரு பேசுற பேச்செல்லாம்
சீனிகட்டி😁
அட கண்ணுக்கு அழகா ஆளும் இருப்பாரே
மேதா கலக்குறே🤪
 
Last edited:

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
பிரமாதம்... இனி கல்யாணத்துக்கு அப்பறம் என்ன பூகம்பம் வரப்போறதோ தெரியலயே
 
Last edited:

Srinisaran

New member
Joined
Jun 21, 2024
Messages
5
உடனே கல்யாணம்? மேதா அதிரடி வேகம்தான். வைரூ -ராசுக்குட்டி சூப்பர் சேன்ஞ் 😍😍😍
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
எலே ராசு குட்டி, கல்பு சாட்சியா கல்யாணம் கட்டிக்கோ லே
 

eswari

Member
Joined
Jun 19, 2024
Messages
45
Appdi podu....medha Eppdi athiradiyaa yethaavathu panninaathaan evanga kalyanam nadakkum 😎😎😎😎
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
அரசு போய் ராஜ் ஆனது

சிலசமயம் ராஜு ஆனது

இப்போ ராசுக்குட்டியா????
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
அரசு போய் ராஜ் ஆனது

சிலசமயம் ராஜு ஆனது

இப்போ ராசுக்குட்டியா????
ராஜுன்னு, பாலாவை நனிளி சொல்றா.
 
  • Like
Reactions: VPR

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
அட மேதா உடனடியா வெடி வெடிக்குராளே, இப்போ ராசுக்குட்டி முறைப்பனா இல்ல அவனும் ஒரு அரை விடுவானா 🤔🤔🤔🤔🤔🤔
 
Top Bottom