• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 10

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 10


காரை சற்றுத் தள்ளியே நிறுத்திய வைரவன் “வண்டிலயே இரு” என்றதைப் பொருட்படுத்தாது, மேதா இறங்க முற்பட, கூர்ந்து பார்த்த அவனது பூனைக் கண்களில் இருந்த எச்சரிக்கையில் தானாகவே, ஆனால் கொஞ்சம் கோபத்துடன் அமர்ந்துவிட்டாள்.

அந்த பேக்கரி கம் ஸ்வீட் கம் ஸ்நாக்ஸ், கடையின் உள்ளும் புறமும் கல்லூரி மாணவர்கள், அக்கம் பக்கத்து அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என, ஏதோ ‘ஜென்ட்ஸ் ஒன்லி’ போர்டு போட்டது போல், ஆண்கள் மட்டுமே நின்றிருந்தனர். ஒரே சத்தமாக வேறு இருந்தது.

இரண்டு ஃபேன்ட்டா கேன்களும் ஒரு பெரிய காக்கி நிற காகித உறையில் எதையோவும் வாங்கி வந்தவனிடம் “நீங்க அரசுன்னா எனக்கே ரூல் போடுவீங்களா, ஏன், நான் இறங்கினா என்ன? லண்டன்ல…”

“லண்டன்ல? குண்டனுக்கு நடுவுல போய் நிப்ப, அதானே?”

“உங்க கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை”

“சரி, சூடா பஜ்ஜி போடறான் பாரு, போய் வாங்கிட்டு வா, போ”

“ஏன் போக மாட்டேன்னு நெனைச்சீங்களா?” என்று விருட்டென கீழே இறங்கிச் சென்றவள், அதை விட வேகமாக வந்து வண்டியில் ஏறினாள்.

“பஜ்ஜி எங்க?”

“ச்சே, என்ன இப்டி பாக்கறாங்க, கமென்ட் செய்யறாங்க? அங்க போகவே முடியல. ஒரு லேடி கூட இல்ல. கூடவே சிகரெட் ஸ்மெல்… ” என மூக்கைச் சுருக்கினாள்.

“நீதான் லண்டன்ல…”

“நீங்கதான் பாடிகார்ட் மூனீஸ்வரன்னு தெரியாம சொல்லிட்டேன், போதுமா?”

“ஆமா, நீ பெரிய பிரிட்டிஷ் இளவரசி பாரு”

“,,,,”

காரைக் கிளப்பியவன், மார்க்கெட் சந்தடியைக் கடந்ததும் “அந்த ஃபேன்ட்டாவை ஓபன் பண்ணிக் குடு. நீயும் எடுத்துக்க” என, சில கிலோ மீட்டர்களை அமைதியாகக் கடந்தனர். பளீரென அடித்த வெயில் போய், மேகம் கூடியது.

“நாம ஏன் வேற ரூட்ல போறோம்?”

“காளையார் கோவில் வழியா போகலாம். ட்ராஃபிக் கொஞ்சம் கம்மியா இருக்கும்”

“...”

திடீரென U டர்ன் அடித்து வலப்புறம் திரும்பி இரண்டு பக்கமும் தென்னை மரங்கள் அணிவகுத்து நிற்க, அதன் பின்னே மயில் கொன்றை, கொய்யா, வேப்ப மரங்கள் நிறைந்திருந்த ஒரு குறுகிய மண் ரஸ்தாவில் காரை செலுத்தினான்.

“ஏன் எங்கேயோ ஆஃப் ட்ராக்ல போறீங்க?”

“...”

பாதை முழுவதும் வெறிச்சோடி இருக்க மேதா “வைரவ்” என்றாள் பயத்துடன்.

“...”

இரண்டு நிமிடங்களுக்குப் பின் இன்னுமே மரங்கள் அடர்ந்திருந்த இடத்தில் காரை சற்று ஓரங்கட்டி நிறுத்த, சிறிது தூரத்தில் இருந்த கண்மாய் தெரிந்தது.

பின்னிருக்கையில் இருந்த காகித உறையிலிருந்து கேக்கும் பஃப்ஸும் எடுத்து ஒரு பேப்பர் தட்டில் வைத்து மேதாவிடம் நீட்டியவன் “கீழ இறங்கி நின்னு சாப்பிடு” என்றபடி, தானும் இறங்கினான்.

மேதா ஹோட்டலில் லஞ்ச் வேண்டாம் என்றதால் வைரவனும் சாப்பிடாமல், இருந்த பசியில் தலையே நிமிராது வேகமாக உண்டு முடித்து மேதாவைப் பார்க்க, அவள் பாதி கடித்த உணவுடன் தீவிர யோசனையில் இருந்தாள்.

வைரவன் அவளருகில் வர, அனிச்சையாக பின்னால் நகர்ந்தவள் “யாருமே இல்லாத இடத்துக்கு ஏன் கூட்டிட்டு வந்தீங்க?”

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தவனை “எ..என்ன?”

“ஏய்… நீயா வரேன்னு வந்துட்டு… நான் என்னமோ உன்னைக் கிட்நாப் பண்ணாப்போல பேசுற… ஆளைப்பாரு. நகரு, தண்ணி பாட்டில் எடுக்கணும்”

மெலிதாக மழை பெய்யத் தொடங்க, மீதமிருந்த பஃப்ஸை அவசரமாகத் திணித்துக் கொண்டு காரில் ஏறியவள் வைரவனிடம் ஒரு வெட் டிஷ்யூவை நீட்டினாள்.

“பஃப்ஸை சிதறாம, ஒட்டிக்காம சாப்பிடறது ஒரு கஷ்டமான ஆர்ட் தெரியுமோ, முதல்ல மீசையைத் தொடைங்க”

‘ஏன் தாயீ?’

திடீரென தட்டட் தட்டட் என்ற ஒலி கேட்க, ஒரே ஒரு ஆள் மெதுவே பின்னால் நடந்து வர, இருபது, இருபத்தைந்து ப எருமை மாடுகள் கண்மாயிலிருந்து காரை நோக்கி வந்தன. அதில் ஒன்றிரண்டு மேடேறியதும் ஓடி வரத் தொடங்கின.

அதில் ஒன்று சரியாக மேதாவின் பக்கம் வேகமாக வர, மேதா பயத்தில் எழுந்து நின்று தலையில் இடித்துக்கொண்டு, காரின் பின் பக்கம் செல்லப் பார்த்தாள்.

இதற்குள் முன்னால் சென்ற எருமை திரும்பி வந்து கார் கண்ணாடியில் மூக்கை (முகத்தை?!) வைத்து உள்ளே பார்க்க, மேதா கண்ணை இறுக மூடியபடி வைரவனின் சட்டையைப் பிடித்திருந்தாள்.

“ஏஏஏ.. என்ன செய்யுற?”

“வைரூ, அது போயிடுச்சா”

‘வைரூவா, படுத்தறாளே’

“நான்தான் மாடுங்களை தொலைவுல பார்த்ததுமே கார் கண்ணாடிய ஏத்திட்டேன்ல, அப்புறம் என்னத்துக்கு சீட்ல ஏறி டான்ஸ் ஆடற?”

தன் இருக்கையில் அமர்ந்து
“ஸாரி” என முனகியவளின் முகம் கூச்சத்தில் சிவந்துவிட, அவஸ்தையில் இருந்தவள், கழுத்தில் ஒரு கட்டையைக் கட்டியபடி தனியே தெறித்து ஓடி வந்த மந்தையின் கடைசி எருமையைப் பார்த்து மிரள,

வைரவன் “ஏ, டோன்ட் பேனிக், ஓகே, அது பாட்டு போகும்”

“போகும், போகும். உங்க கதையைக் கேட்டதுக்கு, எங்கதைய முடிச்… ஆ….”

மெயின் ரோடில் இருந்து இருநூறு மீட்டரில் அழகான, அமைதியான இடம் என்று காரை நிறுத்தியவன், மேதா பயந்த விதத்தில் தவறு செய்து விட்டோமோ என்ற யோசனையில் இருக்க, அவள் பேசியது ஆத்திரத்தைத் தர , சடாரென காரைக் கிளப்பி, அந்தக் குறுகலான இடத்தில் திருப்பினான்.

“ஸாரி, இப்ப என்ன, டென்ஷன்ல, அதுவும் வந்தது எருமைங்கவும் பட்டுனு அப்டி சொல்லிட்டேன்”

“...”

“அதான் ஸாரி சொல்லிட்டேன்ல”

“...”

மழை வலுக்க, மெயின் ரோடை பார்த்தபடி, அந்த உள் சாலையிலேயே காரை நிறுத்தினான். வெறுமே மழையை, வரும் வேகத்தில் தண்ணீரை விசிறியடித்தபடி விலகிச்செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.

வைரவன் தன் அம்மா, அக்காவிடம் கூட அதிகம் சண்டையிட்டதில்லை. செல்லியைத் திட்டுவது கூட அவளது வயதின் கவன ஈர்ப்புகள் குறித்துதான்.

வீட்டுப் பெண்களிடம் கூட இது போல் கிண்டல் பேச்சும் சொல்லுக்குச் சொல் சிங்காரமுமாக வாயாடுவதும், சீண்டுவதும் அவனது சுபாவம் அல்ல.

கோபம் அடங்கி விட்டாலுமே மேதா தன்னிடம் உணர்வுகளை மறைக்காது வாயாடுவதிலும், அவளது அண்மையிலும், பயத்தில் அவனிடம் நெருங்கியதும் சேர, வைரவன் தன் தடுமாற்றத்தை மறைக்க அமைதி காத்தான்.

காரின் ரியர் வ்யூ கண்ணாடியில் பார்க்க, மேதாவும் ஏதோ சிந்தனையில் இருந்தாள். பிரமாண்டமான சைஸில் இருந்த எருமையை அத்தனை அருகில் பார்த்தது, அது ஓடி வந்தது என, நிஜமாகவே அவள் அரண்டு போயிருந்தது புரிந்தது.

தண்ணீரைக் குடித்தவன், பாட்டிலால் அவளது கைகளைத் தட்டி “குடி” என, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“ஸாரிம்மா, மழை கொஞ்சம் குறைஞ்சதும் போயிடலாம்”

“...”

இதற்கு மேல் என்ன சொல்வதெனத் தெரியாமல் வைரவன் மௌனமாகிவிட,

மேதா “அதுவரைக்கும் உங்க கதையை சொல்லுங்க”

“!?%₹#@!”

கதை கேட்கத் தயாராக முழுதாக அவன் புறம் திரும்பி சம்மணமிட்டு அமர்ந்தவளைக் கண்டு வைரவன் வாய் விட்டுச் சிரித்தான்.

“உண்மைல இது என் கதை இல்லை, எங்கப்பாவோட கதை…”

******************

வைரவச் செட்டியார் கடல் கடந்து வாணிபம் செய்த பணத்தைக் கொண்டு, தன் மனைவி அழகு நாச்சியின பெயரில் தங்க, வைர வியாபாரத்தை காரைக்குடியில் தொடங்கினார். அவரது ஒரே மகன்தான் சக்கரை.

சக்கரைக்கும் பார்வதிக்கும் அந்தக்கால வழமைப்படி பதின் பருவத்திலேயே திருமணம் செய்து வைத்தனர். வருடங்கள் கடந்தும் வாரிசு வராததில், கோவில், குளம், பரிகாரம், ஏச்சு, பேச்சு என நாட்கள் சென்றது.

வைரவரின் பரம்பரை நாலைந்து தலைமுறையாகவே ஒற்றை வாரிசு பரம்பரைதான். இதில் தன் மகனுக்கு அதுவும் இல்லாது போய்விடுமோ என்று கவலைப்பட்டார்.

இத்தனைக்கும் சக்கரைக்கு இருபத்தெட்டும் பார்வதிக்கு இருபத்தி மூன்றும்தான். ஆனால், திருமணமாகி பன்னிரெண்டு வருடங்கள் ஓடி இருந்தது.

குடும்பத்தின் வசதியும் வளமையும் கண்ட பல பெற்றோர்கள் நேரடி வாரிசுக்கென அவனுக்குப் இரண்டாவதாகப் பெண்ணைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.

சர்க்கரை இரண்டாம் தாரத்தை அறவே மறுக்கவும், நன்றியிலும் குற்றவுணர்விலும் தவித்த பார்வதியின் நாள்கள் விரதமும் விசனமுமாய்க் கழிந்தது.

பஞ்சாரத்தைத் திறந்து கோழி முட்டை போட்டுவிட்டதா எனப் பார்ப்பதுபோல் மாதா மாதம் பாய்ந்த சுற்றங்களின் கேள்வியும், பார்வையும் அலைக்கழித்ததில், கணவன் நெருங்கினாலே இயல்பைத் தொலைத்து, விளைவை எண்ணி மருகினாள் பார்வதி.

பெண்கள் இதுபோன்ற நுண்ணுணர்வுகளை வெளியே சொல்லக் கூடிய காலமல்லவே?

“வேணும்னா நம்ம இனத்து வழக்கப்படி ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமே” என உறவில் ஒரு பெருசு ஆலோசனை சொல்ல, வைரவச் செட்டியாரின் ஒன்றுவிட்ட பங்காளி குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் மூன்றாவது மகனைத் தேர்ந்தெடுத்தனர்.

சமீபத்தில் தந்தையை இழந்திருந்தவன் தன் நான்காவது வயதிலேயே ஒரு அண்ணன், அக்கா, ஒரு தங்கை மற்றும் தம்பியின் வாழ்வுக்கும் திருமணத்திற்கும் வசதி செய்யும் பொருட்டு, முறைப்படி தத்து கொடுக்கப்பட்டு,
வைரவரிற் தந்தை பெயரான தணிகைநாதன் என பெயர்மாற்றம் செய்யப்பட்டான்,

சமூக சமன்பாடுகள், பெரியவர்களின் நியாயங்கள், தேவைகள், அபிலாஷைகள் எல்லாம் குழந்தைக்கு எப்படிப் புரியும்?

அதுவரை சுவைக்காத பலகாரங்கள், கண்டிராத உடுப்புகள், நகைகள், எண்ணியும் பார்க்காத ஏராளமான விளையாட்டுப் பொருட்கள், பட்டு மெத்தை, பால் சோறு என தணிகைநாதன் கேட்காததும், நினைக்காததும் கிடைத்தும், குழந்தை ஏங்கியதென்னவோ, கிழிந்த பாயில் தன் உடன்பிறந்தோரின் நடுவே இடத்துக்கு சண்டையிட்டு ஒருவரை ஒருவர் உதைத்தபடி, அன்னையின் பழைய புடவையில் சுருண்டு உறங்குவதைத்தான்.

விழாக்கள், விசேஷங்கள், கோவில் திருவிழாக்கள் என அடுத்த ஊரில் இருந்துகொண்டு அடிக்கடி தன் குடும்பத்தைப் பார்க்க நேர்ந்ததில், தணிகைநாதன் அழுவதைக் கண்ட பெரியவர், மகனையும் மருமகளையும் கடல் கடந்த வாணிபம் என்ற பெயரில் மலேயா எனப்பட்ட மலேஷியாவுக்கு நாடு கடத்தினார்.

நச்சரித்த உறவுகளை விட்டு விலகி வந்ததோ, புதிய இடத்தின் சூழலோ, சுதந்திரமோ, தத்துப்பிள்ளை வந்த நேரமோ, எதுவோ ஒன்று, மலேயா சென்ற ஆறே மாதங்களில் பார்வதி கருவுற்றார். ஐந்தாம் மாதம் காரைக்குடிக்குத் திரும்பினர்.

தணிகைநாதனின் அதிர்ஷ்டமும், அவன் வந்த நேரமும் வீட்டினரால் கொண்டாடப்பட்டது. ஆனால், அவனது அதிர்ஷ்டமும் நேரமும் அவனுக்கு நன்மை பயந்ததா என்பது வேறு விஷயம்.

சிறு பிள்ளை என்பதாலும், மலேயாவில் (ஸ்வீகார) பெற்றோர் மட்டுமே உடன் இருந்ததாலும், அன்பு காட்டியவர்களிடம் தணிகைநாதன் ஒட்டத் தொடங்கிய நேரத்தில், முருகப்பன் பிறந்தான்.

ஒரே தாய்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தாலே முதல் பிள்ளை சவலையாக நிற்கையில், சொந்த ரத்தம் வந்ததும் தணிகைநாதன் மீதான கவனிப்பும் அக்கறையும் படிப்படியாகக் குறைந்தது.

அதிலும், சக்கரையின் பெற்றோர்களும் சக்கரையும் ஒரு எல்லையில் நின்றுகொள்ள, தத்துப் புத்திரனின் குறைந்தபட்சத் தேவைகளை பார்வதி மட்டுமே கவனித்துக் கொண்டாள்.

தங்களைக் கடைத்தேற்ற வந்த பேரக் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் அழுகையிலும், சிரிப்பிலும் சிணுங்கலிலும் தங்கள் வீட்டு ஜாடையைக் கண்டு ஆனந்தித்தப் பெரியவர்கள் தங்களது ரத்த வாரிசைக் கொஞ்சியதிலும் கொண்டாடியதிலும், அவர்கள் அறிந்தோ, அறியாமலோ தணிகைநாதன் தள்ளி நிறுத்தப்பட்டான்.

இங்கு வந்து மூன்று வருடங்கள் கடந்திருக்க, முருகப்பனின் முதல் பிறந்தநாள் நடந்த தடபுடலில், ஆறரை வயது தணிகைநாதன் தனிமையை பெரிதும் உணர்ந்தான்.

தணிகைநாதனின் அடிப்படைத் தேவைகளிலோ, படிப்பிலோ, வீட்டினுள் உலவும் சுதந்தரத்திலோ யாரும் எந்தக்குறையும் வைக்கவில்லைதான். ஆனால் நான்கு பேருடன் கூடப்பிறந்த தணிகைநாதன் நெருங்கிப் பேச, விளையாட ஆளின்றி தனித்து நின்றான்.

தன்னுடன் விளையாட, பேச, சிரிக்க வந்த தம்பி முருகப்பனை தணிகைநாதன் ஏற்றுக்கொண்ட அளவுக்கு தம்பி அவனை ஏற்கவில்லை.

வயதாக, ஆக நாள் சென்று பிறந்த குழந்தை என எல்லோரும் தனக்களித்த முக்கியத்துவத்தை முருகப்பன் புரிந்துகொண்டான்.

வெளிப்படையான எந்த ஒரு வித்தியாசமோ விலகலோ இல்லைதான். ஆனாலும், வேண்டி விரும்பி ஏற்ற தணிகைநாதன், அவர்களது சொந்த ரத்தத்தின் முன்னே எடுபடவில்லை.

அவனது உடன்பிறந்தவர்களுக்கு இவனது செல்வச் செழிப்பான வாழ்க்கை பொறாமையையும் விலகலையும் கொடுக்க, இங்கோ இவன் இரண்டாம் பட்சமாகிப் போக, எல்லாம் இருந்தும் இல்லாத நிலைதான்.

ஒருமுறை கிடைத்த தனிமையில் பெற்றவளிடம் சொல்ல, முருகப்பன் பிறந்ததில் இருந்தே இதுபோன்ற ஒன்றை எதிர்பார்த்தவளைப் போல், அவள் அவனிடம் சொல்லாமலே சென்றுவிட்டாள். அதோடு, அவர்கள் இதுவரை உதவிகளை நிறுத்தாத நிலையில் அந்தத் தாய்க்கு வேறு வழியும் தெரியவில்லை.

விவரம் புரிந்தபின், எந்தப் பக்கமும் போக முடியாத திரிசங்குவைப் போல் உணர்ந்த தணிகைநாதன் அடக்கத்தையும் அமைதியையும் பழகிக்கொண்டான். தன் வயதுக்கான வேலைகளைச் செய்தான். இயன்றவரை நன்கு படித்தான். வளர்த்தவர்களுக்கு விசுவாஸமானான்.

பள்ளி இறுதி முடித்ததுமே தந்தை சக்கரைக்கு உதவியாக அழகுநாச்சிக்கு வந்துவிட்டான்.

இருபத்தி ஐந்து வயது தணிகைநாதனுக்கும் இருபது வயது முருகப்பனுக்கும் அடுத்தடுத்துத் திருமணம் நடந்தது.

பார்வதியின் சொந்த அண்ணன் மகள்தான் தெய்வானை.
முருகப்பன் அளவுக்குக் கூட அவளால் தன் மைத்துனரையும் ஓரகத்தியையும் ஏற்க முடியவில்லை. தினமும் உராய்வுகள், உரசல்கள். சத்தம், சண்டை.

சிவானந்தனுக்கும் மீனாக்ஷிக்கும் நான்கு மாத வித்தியாசம்தான்.

வள்ளியம்மை பிரசவத்துக்கென பிறந்த வீடு சென்றிருந்த சமயம் தெய்வானைக்கு வளைகாப்பு நடந்தது. புதுக்கோட்டையில் இருந்து அவளது பெற்றோர் வந்து நாலைந்து நாட்கள் தங்கி இருந்தனர்.

தெய்வானையா, அவளது பெற்றோரா, முருகப்பனா யார் என்ன சொன்னார்கள் என்று தெரியாது. வள்ளியம்மை மகளுடன் புகுந்த வீட்டுக்குத் திரும்பியபோது, தணிகைநாதன் ‘மீனாக்ஷி ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் பாத்திரக் கடையின் முதலாளி ஆகி இருந்தார்.

தணிகைநாதனிடம் அழகுநாச்சியும் பார்வதியும் காட்டிய அளவு நெருக்கம் காட்டாவிடினும், தாத்தா வைரவரும் சரி, தந்தை சக்கரையும் சரி தங்கள் கடமையில் தவறவில்லை.

அவரது சாத்வீகமான குணமும், ஜாடிக்கேற்ற மூடியாக அவரை அனுசரிக்கும் வள்ளியம்மையின் தன்மையும் புரிந்ததில், உரசல்கள் விரிசல்களாக மாறுவதற்கு முன் தணிகைநாதனுக்கு தனி வியாபாரம் தொடங்கிக் கொடுத்தனர்.

தணிகைநாதன் வாரம் ஒருமுறை தன் வருமானத்தையும் கணக்கையும் கொடுத்து, வியாபாரத்திற்கும் கைச்செலவுக்கும் பணம் பெற்றுக் கொண்டார்.

இரண்டு வருடங்களில் தெய்வானைக்குத் தண்ணீர்மலையும், அதற்கு அடுத்த வருடம் வள்ளியம்மைக்கு வைரவனும் பிறந்தனர்.

அதற்குப்பின் சில நாட்களிலேயே வைரவர் சிவபதமடைந்தார்.

அதிகப் பிரச்சினை ஏதுமின்றி எல்லாம் சீராகச் சென்ற நிலையில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் கடைசி தம்பியின் வீட்டிற்குச் சென்ற தணிகைநாதன், மாற்றாந்தாய் கொடுமையை அனுபவித்த ஜீவாவை கையோடு அழைத்து வந்துவிட்டார்.

குழந்தைகள் அனைவரும் உயர்நிலைப் பள்ளியில் இருக்க, ஸவர்ணலதா இரண்டு வயது கைக்குழந்தை.

துறுதுறுப்பாக இருந்த ஜீவாவை தண்ணீர்மலையும், அவனது பெற்றோரும் ஏற்கத் தயாராக இல்லை. தன்னை விட நன்றாகப் படிக்கும், வரையும் வைரவனைப் பிடிக்காத தண்ணீர்மலை அவனுடன் நட்போடு சுற்றிய ஜீவாவை அறவே வெறுத்தான்.

இருவரும் கட்டிப்புரண்டு போட்ட சண்டைகளும், சிவாவும் வைரவனும் அவரவர் தம்பிகளுக்கு ஆதவாகக் கைகலப்பதும் அடிக்கடி நடந்தது.

பிள்ளைகளின் சண்டை பெருஞ்சண்டை ஆனதில், ஒருநாள் இரவு உணவு நேரத்தில், ஜீவா எதுவோ வேண்டுமென வள்ளியம்மையிடம் அடம் பிடிக்க, ஆத்திரமடைந்த தெய்வானை,

“இவங்களே இங்க அதிகப்படி. இந்தப் பய திங்கறதே ஓசிச் சோறு. இதுல அஞ்சு வித பதார்த்தம் கேக்குதோ? இதுக்குக் கூட வழியில்லாமதானே இங்க வந்து ஒண்டிக்கிட்டு கிடக்கான்” என்று கத்தினாள்.

சாப்பாடு பற்றி பேசவும், பார்வதி ஆச்சி, சக்கரை ஐயா என எல்லோரும் தெய்வானையைத் திட்ட, “அவ சொன்னதுல என்ன தப்பு, ஏற்கனவே மூணு பசங்க. இதுல இன்னொண்ணு வேற. இதென்ன சத்திரமா, சாவடியா” என முருகப்பனும் மனைவிக்கு வக்காலத்து வாங்கினார்.

தணிகைநாதன் தந்தையிடம் “அப்புச்சி, இந்த வீட்ல எனக்கும் ஏதோ உரிமை இருக்குன்னு நினைச்சு கூட்டிட்டு வந்துட்டேன். இனிமே அவன் எங்கூடதான் இருப்பான். நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லுங்க” என முதல் முறையாக தன் நிலைப்பாட்டை ஸ்திரமாக எடுத்துரைத்தார்.

சக்கரை ஐயாவும் பார்வதி ஆச்சியும் “முருகா, நம்ம வீட்ல எத்தனையோ வேலைக்காரங்க சாப்பிடறாங்க. சின்னப் பையனோட என்ன, போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க” என்று சமாதானமாகப் பேசியதெல்லாம் ஒத்துவராது போனது.

தணிகைநாதனிடமே “போய் சின்ன வீட்டு சாவிய எடுத்துட்டு வா” என்றார் பெரியவர்.

வந்தவரிடம் “நாளைக்கே முஹுர்த்த நாள்தான். காலைல ஒம்போது பத்தரை சின்ன வீட்ல பால் காச்சிட்டு, அங்க குடி போங்க” என, தணிகைநாதனும் வள்ளியம்மையும் அதிர்ந்தனர்.

அவர்கள் மன்னிப்புக் கோர “இதுவும் நல்லதுக்குதான். திடுதிப்புனு எனக்கு ஏதானும் ஆயிட்டா, நிலமை மோசமாயிடும். பரவால்ல தணிகா, அதுவும் நம்ம வீடுதானே” என்றார்.

மனைவியிடம் “இங்க பாரு, மகமிண்டியோட சாமானைத் தவிர, அவங்களுக்குத் தேவையானதை எடுத்துக் குடு. அவனா எதுவும் கேக்க மாட்டான்” என, தெய்வானை கழுத்தை நொடித்துக்கொண்டு போனாள்.

முதல் வார வருமானத்தை வழக்கம்போல் சென்று கொடுக்க “தணிகா, இனி உன் வியாபாரக் கணக்கை, வரவு செலவை நீயே பாத்துக்க” என்றார் தந்தை.

வியாபாரம், குடித்தனம், வரவு செலவைப் பிரித்த பின், தன் வருமானத்திற்குள் வாழ்ந்த தணிகைநாதன் தம்பதியர், நல்லது கெட்டதுக்கு அடிக்கடி பெரிய வீட்டுக்குப் போய் வர, பெரியவர்கள் அத்தி பூத்தாற்போல் எப்போதாவது வருவர்.

தனிக்குடித்தனம், பாத்திர வியாபாரம், குழந்தைகளின் படிப்பு என வாழ்க்கை அமைதியாகச் செல்ல, வள்ளியம்மையை உடம்பு படுத்தத் தொடங்கியது.

வைரவன் தன் ஐந்து வருட பி ஈ ஆர்க்கிடெக்ட் படிக்க கிண்டி இன்ஜினீயரிங் காலேஜில் சேர சென்னை சென்றான். கடைசி வருடத்தில் இருந்த மீனாக்ஷியை நிறைய இடத்திலிருந்து பெண் கேட்டு வந்தனர். எல்லாமே பெரிய இடம்தான்.

தணிகைநாதனே தள்ளி வந்துவிட்டாலும், உலகம் அவரை சக்கரை ஐயாவின் தத்துப் பிள்ளையாகவே பார்த்ததில், தங்கம், வைரம், வெள்ளி, பித்தளை, எவர்சில்வர், வெங்கலம், ரொக்கம், மனை என பெண் கேட்டு வந்தவர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது.

வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்பதும், அதற்கான சட்டங்களும் கீழ், மத்திய தர மக்களுக்குத்தானே தவிர, என்றுமே, பெருந்தனக்காரர்களின் கதை வேறல்லவா?

இந்நிலையில் பார்வதி ஆச்சியின் உறவு வகைகளில் மதுரையிலிருந்து மீனாக்ஷியைப் பெண் கேட்டு வர, அந்த வரனுக்குத்தான் பேத்தியைக் கொடுக்க வேண்டும் என பெரியவர்கள் இருவரும் வற்புறுத்தினர்.

தோற்றம், தொழில், குடும்பம் என எல்லாமே பரஸ்பரம் பிடித்துப்போக, தணிகைநாதன் தன் சக்திக்கு மீறி அவர்கள் கேட்ட சீர்வரிசையைத் தரச் சம்மதித்தார்.

பெரிய வீட்டுக்கு அழைத்த
சக்கரை ஐயாவும் பார்வதி ஆச்சியும் , மூத்த பேத்திக்கென தங்களது பங்காக சில நகைகளைக் கொடுத்தனர். பிறகு சீர் வரிசைகளின் விவரம் கேட்டனர்.

“என்ன வேணுமோ கேளு தணிகா. தேவையான நகைய நம்ம கடைலயே செஞ்சு வாங்கிக்க. அவங்க கேக்குற சீர் செனத்தியெல்லாம் நம்ம பொண்ணுக்குதானே” என்றார் சர்க்கரை ஐயா.

சீர் பட்டியலைக் கேட்ட தெய்வானை “விரலுக்குத் தகுந்த வீக்கம் வேணும். பவுனு என்ன சும்மாவா விக்குது?” என்றாள்.

முருகப்பன் அமைதி காக்க, பார்வதி ஆச்சி “தணிகா, இம்புட்டு சீர் செய்ய கையில ஓட்டமிருக்கா, சொல்லிட்டு செய்யலைன்னா பின்னால இழுபறியா போயிடும். எதானாலும் தயங்காம எங்கிட்ட வந்து சொல்லணும். புரியுதா, வள்ளி, ஒனக்குந்தான்”

தலையை பலமாக ஆட்டிவிட்டு வந்தனர். திருமணத்திற்கு இன்னும் நேரமிருக்க, ஒருபுறம் வள்ளியம்மையின் வைத்தியச் செலவு எகிறியது.

நகைகளைச் செய்யக் கொடுக்க, அழகுநாச்சிக்கு சென்றவர்களிடம் முருகப்பன் முகம் கொடுத்தே பேசவில்லை. இதற்குள் சிவானந்தனும் தண்ணீர்மலையும் கடைக்கு வரத் தொடங்கி இருந்தனர்.

தணிகைநாதன்,செலவு கட்டுப்படியாகாது, உள்ளூரில் இல்லாது புதுக்கோட்டையில் இருந்த தன் நண்பன் மூலம் கடையை அடகு வைத்துப் பெருந்தொகையை வாங்கினார்.

திருமணம் முடிந்து, வள்ளியம்மை படுக்கையில் விழ, கடன் கை மீறிப் போகவும் தந்தையிடம் தஞ்சமடைந்தார்.

“கடையை எழுதிக் கொடுத்துட்டு, மிச்சம் மீதி எதுவுமிருந்தா கைல வெச்சுக்கிட்டு, நம்ம சாலைல வந்து வேலையைப் பாரு” என்றார் சர்க்கரை ஐயா.

கௌரவம் பார்க்கும் சமயம் இதுவல்ல என்று உணர்ந்த தணிகைநாதனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.

வள்ளியம்மை இரண்டு வாரம்போல் திருச்சி மருத்துவமனையில் இருக்க நேர, தன் தம்பி, தங்கைக்காக படிப்பை விட்டு வீட்டில் இருந்த வைரவனை, சாலையில் தணிகைநாதனின் பொறுப்பை ஏற்கச் சொன்னார் முருகப்பன்.

வரைவதில் ஆர்வமுள்ளவனின் கை சும்மா இராமல் டிஸைன் செய்யத் தொடங்கினான்.

“அவ்ளோதான், கதை ஓவர், மழையும் கம்மி ஆயிடுச்சு. மணி அஞ்சாகப் போகுது. போலாமா?”

“ஸ்டாப், ஸ்டாப். இந்தக் கதைல நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் இல்ல. அப்ப அந்த **** நகை கடை பேனர்ல நீங்க ஏதோ ப்ரைஸ் வாங்கற ஃபோட்டோ…”

‘இத எப்ப பாத்தா?’

“சாலைக்கு போகத் தொடங்கினதும், ஒருநாள் பேப்பர்ல பிரபலமான அந்த நகை கம்பெனியோட ஜுவல்லரி டிஸைனிங் போட்டி விளம்பரத்தை பார்த்தேன். சாம்பிள் அனுப்ப சொன்னாங்க. ரெண்டு ஸ்டேஜுக்குப் பிறகு செலக்ட் ஆனேன். அதுல ரெண்டாவது ப்ரைஸ் கிடைச்சது”

“அப்போ நான் படிச்ச அதே GIA ல இருந்து ரெண்டு சர்ட்டிஃபிகேட்?”

“அந்த கம்பெனியே பாதி பணம் கட்டி வொர்க் ஷாப்புக்கு போகச் சொன்னாங்க. மும்பைல மூணு மாசம் கேப்ஸ்யூல் கோர்ஸ் (Capsule course). நான் ஒரே நேரத்துல டிஸைனிங்கும், டயமண்ட் டிகிரியும் படிச்சேன்”

“???”

“எங்கம்மாவதானே, அக்கா டெலிவரிக்கு வந்திருந்தா. குழந்தை பிறந்து ரெண்டு மாசம் கழிச்சு நான் மும்பை போனேன். அவ பாத்துக்கிட்டா”

“பாவம் இல்ல உங்கப்பா, உங்க ஐயா ஏன்…” என்று தொடங்கியவளை இடையிட்டான்.

“இங்க பாரு, ஐயா, அப்பத்தா பத்தி நான் கமென்ட் பண்ண மாட்டேன். அவங்கவங்க நியாயம் அவங்கவங்களுக்கு. இப்ப என்னால அவங்களை புரிஞ்சுக்க முடியுது”

“உங்க சித்தப்பா, சித்தி…”

“ஏன், தண்ணீர்மலை பத்தி கேளேன்”

“எனக்கு கதையே வேணாம்”

“குட், போலாமா?”

“ஒன்னே, ஒன்னு… அந்த அரசு…”

“எக்ஸ்பெக்டட். ஐயாவோட அப்பா பேர் வைரவன்னு சொன்னேன்ல?”

“அதெப்படி உங்க சித்தப்பாக்கோ, சிவா மாமாக்கோ, அந்த தண்ணிலாரிக்கோ அந்தப் பேரை வைக்காம உங்களுக்கு எப்டி?”

‘கல்பு, என்னை ஏன்டா இப்டி மாட்டிவிட்டு வேடிக்கை பாக்குற?’

“ஹலோ மிஸ்டர் கவர்ன்மென்ட்”

“வெக்க வேண்டிய தாத்தாவோட பேரெல்லாம் முடிஞ்சு வைரவைய்யாவோட டர்ன் வரும்போது நான் பொறந்தேன். அரசு நம்ம பக்கத்துல ஆம்பளைப் பசங்களைக் கூப்பிடறது, எனி அப்ஜக்ஷன்?”

“ஓ… அரசு…”

“கேள்வி நேரம் முடிஞ்சுது. விட்டா மூணு மணி நேரம் எழுதச் சொல்லி கொஸ்டின் பேப்பர் குடுப்ப போல” என்று காரைக் கிளப்பினான்.

பயணமும் மழையும் சுவாரஸ்யமாவதே சூடான தேநீரால்தானே?

வழியில் பித்தளை பாய்லர் பளபளவென மின்னிய ஒரு டீக்கடையில் நிறுத்தி “இறங்கு” என்றான்.

“இங்கேயா?”

“ஏன், அங்க அவ்வளவு கூட்டத்துல போறேன்ன?”

“அது பேக்கரி, இது மாதிரி இடத்துல… பழக்கமில்ல”

“பழகிக்கோ” எனச் சொல்ல வந்தவன் அமைதியாக இறங்கிவிட, பின் தொடர்ந்தாள்.
சிறிய கட்டிடத்தின் முன் இரண்டடிக்கு சிறிதாக கீற்று வேய்ந்திருக்க ஓரிவரைத் தவிர யாருமில்லை. அந்த இடம் முழுதும் டஸ்ட் டீயின் மணம்.

மேதாலக்ஷ்மி சற்றுத் தள்ளி நிற்க, இரண்டு ஏலக்காய் டீ சொன்னான். டீ வருவதற்குள் மழை வந்துவிட, ஆங்காங்கே இருந்தவர்கள், அந்தச் சிறிய கூரையின் கீழ் மழைக்கு ஒதுங்கினர்.

வைரவன் மேதாவை “வா” என அவனது வலப்பக்கம் வந்து நின்றாள்.

“சார் டீ”

அந்தச் சூழலுக்கு வெகு இதமாக தொண்டையில் இறங்கியது தேநீர். ஒலையிலிருந்து தண்ணீர் சொட்ட, ஒடுங்கி உள்பக்கம் நகர்ந்தாள்.

வைரவன் டீ அருந்த க்ளாஸை உயர்த்தும்போதெல்லாம் அவனது கை லேசாக அவள் மீது உரசியது. திரும்பிப் பார்க்க, சங்கடத்துடன் “ஸாரி” என்றான்.

முதலில் கவனமின்றி இருந்தவள், திடீரென அதை உணர்ந்தாள். தொட்டுப்பார்க்கப் பரபரத்த ஆவலை அடக்கிக்கொண்டாள்.

‘அப்போ நான் குடுத்த அந்த பேன்டை (armlet) கழட்டலையா இவன்?’

அதுவரை வைரவன் சொன்னதை மீறி கேள்வி கேட்டவள், மீதிப் பயணத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அன்று அத்தனை கோபமாகக் கத்தியவன், அதை இன்னும் அணிந்திருப்பதில் எழுந்த உவகை உணர்வில் திளைத்தவளுக்குப் பேசத் தோன்றவில்லை.

“என்ன கொஸ்டின் பேங்க்லாம் காலியா?” என்றவனின் கேள்விக்கு சிறிதாக ஒரு புன்னகை மட்டுமே கிடைத்தது.

தன் கதையைக் கேட்டபின், கிடைத்த இடைவெளியில் யோசித்ததில்தான் மேதா அமைதியாகிவிட்டாள் போல என எண்ணிய வைரவனுக்கு, அவள் தன்னை விட்டு விலகியது போல் தோன்றியது.

‘என்னமோ அவ உங்கூட வாழ்ந்துட்டு பிரிஞ்சா மாதிரி… ஓவரா பண்ற… அடங்குடா’

மழையில் ஆறுமணிக்கே நன்கு இருள் கவிந்திருந்தது. மேதாவை அவளது வீட்டு வாசலிலேயே இறக்கி விட, அங்கே அவளது தந்தை ராமநாதனின் கார் நின்றிருந்தது.

*****************

ஜோதியின் குடும்பம் வந்து சத்தம் போட்டதையும், வைரவனுடன் மேதா வந்து சென்றதையும் சிவகங்கைக் கிளையின் பொறுப்பாளர் சக்கரை ஐயாவிடமே நேரடியாகச் சொல்லி இருந்தார்.

சாரதியை வீட்டுக்கு வரச் சொல்லி சிவகங்கைக் கிளையின் சிசிடீவி காட்சிகளைப் பார்த்த பெரியவர்,
முருகப்பனிடம் கேட்டார்.

முருகப்பன் “உன்னால தீபாவளி நேரத்துல அங்க போகாம நானும் சாக்கு சொல்றேன். ஐயா கேட்டா நீயே பதில் சொல்லிக்க” என மகனிடம் சத்தம் போட்டார்.

இரவில் கேட்டதற்கு “என்னை கேக்கறீங்களே, அந்த வைரவன் நம்ம கடை கார்ல மேதாவோட சிவகங்கை வரைக்கும் போயிருக்கான். அதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரியலையா? என தாத்தாவிடம் சண்டைக்கு நின்றான்.

சக்கரை ஐயா “ரெண்டு பேரும் எங்கிட்ட கேட்டுதான் போனாங்க” என்றார்
.
 

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

SaiSakthi

New member
Joined
Jun 20, 2024
Messages
25
முருகப்பன் , தண்ணீர் மலை... 😡😡😡

அருமையான பதிவு பதிவு... ❤️
 

Srinisaran

New member
Joined
Jun 21, 2024
Messages
5
அருமை. பெரியவருக்கு இரண்டு பேரும் ஒன்றாக போனது தெரியுமா? தண்ணீர்மலை அந்த பிரான்ச்ல நடந்த கூட்டத்திற்கு காரணம் நீதானா? சட்டப்படி தத்தெடுத்தா பரம்பரை சொத்துல பங்கு உண்டுதானே? அப்புறம் ஏன் இப்படி வேலையாள் போல நடத்தனும்? என்ன இருந்தாலும் சக்கரை ஐயா செய்வது தப்புதான்
 

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
24
Super sister. தணிகைநாதன் பாவம். திரிசங்கு சொர்க்கம் நிலை. ஆனாலும் ஜீவா வை கூட வைத்து பார்க்கும் நல்ல மனது.
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
தத்து பிள்ளைகள் அவர்கள் மட்டும் வளரும் போது சுகம் தான் ஆனால் அவர்களுக்கு அடுத்த சொந்த ரத்தம் வரும்போது யாரோவாகிடுறாங்க 😔😔😔😔😔இது சகஜமான நடைமுறையாகிடுச்சு
 
Top Bottom