• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல்வந்து மனதை…! 11

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல்வந்து மனதை…! 11

“அம்மாடி, நம்ம சிவா மகமிண்டிக்கு இப்ப ஒம்போதாம் மாசமாம். வளைகாப்பை வளர்பிறைல வைக்கணும்ல, அதான் தீவாளி அமாசி கழிஞ்சு பதினோராம் நாள்,
நாள் குறிச்சிருக்காங்க”

“ம்… நாள் ஓடுது, மாசமா இருக்கற பொண்ணுக்கு ஒரு நாள் வாய்க்கு ருசியா எதுவும் செஞ்சு தரக் கூட என்னால முடியல”

தரையில் பாய், கம்பளி, பெட்ஷீட் என விரித்து, துவைத்த உடுப்புகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருந்த ஜீவா “ஆனாலும் ஒன் ஆசை கொஞ்சம் ஓவர்தான் பெரியம்மா”

தணிகைநாதன் “டேய் வேலையப் பாருடா, வெட்டி நியாயம் பேசிக்கிட்டு…” என ஜீவாவைக் கடிய, ஸ்வர்ணலதா களுக்கென்று சிரித்தாள்.

“இங்க பாரு, உன் யூனிஃபார்ம்தான் கைல. பொசுக்கிருவேன், பார்த்துக்க…”

“பாருங்கப்பா இவன…”

“ரெண்டு பேரும் இப்ப வாயை மூட்றீங்களா, முக்கியமான விஷயம் பேசுறப்போ விளையாடிக்கிட்டு…”

தணிகைநாதன் பிள்ளைகளை கடிந்து கொள்வதே அபூர்வம் என்பதால், இருவரும் கப்சிப்.

“அதைவிட முக்கியம் அதுக்கு ஒரு நாள் தள்ளி அப்புச்சிக்கும் ஆத்தாக்கும் கல்யாணம் கழிஞ்சு எழுவது வருஷமாகுதாம். அதையும் பெருசா கொண்டாட முடிவு செஞ்சிருக்காக”

“இந்த ராகவி பொண்ணுக்கும் பெரியவங்களுக்கும் என்ன செய்யணும்னு யோசிக்கணுங்க”

“செஞ்சிடலாம். வைரவா, நீ என்ன சொல்ற?”

பெரிய வீட்டிலிருந்து அழைப்பு வந்ததென்று சாலையில் இருந்து மதியமே சென்றவர் இரவு எட்டு மணிக்குத் திரும்பி வந்ததில் இருந்து கதை சொல்கிறார்.


முற்றத்துத் தூணில் சாய்ந்தமர்ந்து கவனத்தைத் தொலைத்திருந்த வைரவன் பதில் ஏதும் பேசாதிருக்க லதா உலுக்கினாள்.

“ம்ப்ச், என்ன வேணும், செல்லி?”

வள்ளியம்மை “வைரவா, நானும் நீ சாலைல இருந்து வந்ததுல இருந்து பாக்குறேன். ஏன் ஒரு மாதிரியா இருக்க”

“நானா, அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா”

“உங்க அப்புச்சி சொன்னதைக் கேட்டியா இல்லியா?”

வைரவன் தந்தையிடம் “என்னப்பா?” என இப்போது எல்லோருமே அவனைக் கேள்வியாகக் கூர்ந்தனர்.

“என்ன அப்புடிப் பாக்குறீக, ஏதோ யோசனைல இருந்துட்டேன். என்னன்னு சொல்லுங்களேம்ப்பா”

தணிகைநாதன் சொல்ல, “செஞ்சிடலாம்” என்ற வைரவன், பணக் கணக்கை மனக்கணக்காகப் போட்டான்.

தணிகைநாதன் “அப்புச்சி நம்ம எல்லாருக்கும் தீபாவளிக்குப் பணம் கொடுத்தாக”

“...”

“ சம்பந்தி வீட்ல இருந்து, அதான் நம்ம மேதாப் பொண்ணு இல்ல, அவங்க அம்மா, அப்பா வந்து வளைகாப்புக்கு நாள் குறிச்சிட்டுப் போனாகளாம்”

வைரவன் தலையசைத்துக் கொண்டான். தணிகைநாதன் “லதா, படுக்கையைப் போடு. படுக்கலாம். நேரமாவுது பாரு” என்றபடி வாசல் கதவைப் பூட்டச் சென்றார்.

வைரவனும் ஜீவாவும் மாடியேறினர். வைரவன் பாய்களை எடுத்து மொட்டைமாடியில் போட, ஜீவா “மழை வர்ற மாதிரி இருக்குடா”

“வந்தா பார்த்துக்கலாம்”

நாளை மறுநாள் தீபாவளிக்குப் பள்ளி விடுமுறை தொடங்கி இருக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிச்சத்தம் கேட்டது.

அமாவாசைக்கு இரண்டு நாள் முந்தைய நிலவுப் பத்தையை மழை மேகங்கள் புகையாய் மறைத்திருந்தது.

ஞாயிறன்று சிவகங்கைக்குப் போய் வந்த பிறகு, மூன்று நாட்களாக மேதா சாலைக்கு வரவில்லை. இன்று காலை அழைத்தவள் “கோயம்புத்தூர் வந்துட்டேன்” என்ற குறுந்தகவலை இன்னுமே குறுக்கிச் சொல்லி உடனே வைத்துவிட்டாள்.

தன்னைப் பற்றி அறிந்து கொண்டபின் தவிர்க்கிறாள் போல என் எண்ணினான். அப்படி இல்லை என்றும், ஏன் இருக்காது என்றும் அவனுக்குள்ளேயே இரண்டு கூறாகப் பிரிந்து விவாதம் நடந்தது.


அன்று சிவகங்கை செல்ல நகைகளை வாங்கிச் செல்ல கடைக்குச் சென்றபோது முருகப்பனும் தண்ணீர்மலையும்தான் இருந்து ஒப்படைத்தனர்.

“நகை பத்திரம், எங்கேயும் நிக்காத. நாம தனியா போனாதான் சேஃப்டி” என முதல் முறைபோல் சித்தப்பா முருகப்பன் பலமுறை எச்சரித்தாலும், அதுதான் சரி என்பது புரிந்தவன், காரில் ஏறியதுமே, மேதாவை அழைக்க,

“அதுக்குள்ள வந்துட்டீங்களா?”

“அஞ்சே நிமிஷம். முதல்ல நான் சொல்றதை கேளு. சக்கரை ஐயாக்குப் பேசி சிவகங்கை பிராஞ்சைப் பாக்க, என் கூட போகட்டுமான்னு கேளு”

“பார்றா, வைராக்ய வைரவரு பொய் சொல்ல சொல்றத”

“ஹலோ அரிச்சந்திரி மேடம், எங்கூட வரேன்னது நீங்கதான். அங்க கடைக்குப் போனா சிசிடிவி இருக்கும். எப்படியும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து போனது எல்லாருக்கும் தெரியும். சொல்லிட்டு போனா பெட்டர். வேணாம்னா, நான் பாட்டு போய்க்கிட்டே இருப்பேன்”

“சரி, பேசறேன்”

“ ம், மூணு நிமிஷம் கழிச்சு பேசு. முதல்ல நான் சொல்லிடறேன்”

“வெவரம்தான்”

பிறகு ஐயாவை அழைத்தான்.

“கிளம்பிட்டியா அரசு?”

“இதோ… ஐயா, சிவகங்கை கடையைப் பார்க்கணும்ன்னு ஒருமுறை மேதாலக்ஷ்மி கேட்டாங்க. நீங்க சரின்னா…”

“பார்த்து கூட்டிட்டுப் போ. ஜாக்கிரத அரசு. சம்பந்தி வீட்டுப் பொண்ணு. பொழுதோட வந்துருங்க” என உடனடியாக அனுமதியும் தந்து எச்சரிக்கையும் விடுத்தார் பெரியவர். தந்தையிடம் முன்பே சொல்லிவிட்டுதான் வந்திருந்தான்.

வைரவனிடம் காரணம் ஏதுமின்றியே முறுக்கித் திரியும் தண்ணீர்மலை இரண்டு நாட்களாக முறைத்துக்கொண்டு திரிகிறான். எதிர்பார்த்ததுதான்.

அன்று ஒயாமல் பேசியவளின் திடீர் அமைதியும், பிறகு ஆளே காணாமல், இப்போதைய திடீர் கோவை பயணமும்…

வைரவனுக்கு ‘எதுவோ சரியில்லை’ என்று தோன்றியது.

‘’சரி, அவ வீட்டுக்கு அவ போறா, போகட்டும். சாலைக்கு திரும்ப வருவாளா, மேதாவோட குரல்ல அந்த அவசரமும், ரகசியமும் ஏன்? இல்லை, எனக்குதான் அப்படித் தோணுதா?’

‘காரைக்குடில நடக்கப்போற சீமந்தத்துக்கு இவ ஏன் கோயமுத்தூர் போனா?’

‘எப்படியும் அவங்கக்காவோட வளைகாப்புக்கு வருவால்ல?’

‘வந்தா, நீ என்ன செய்வ வைரவா? உன்னால என்ன செய்ய முடியும்?’

‘அப்போ அவ சொன்ன மாதிரியே இது சாதாரண கிஃப்ட்தானா? நாதான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா? இருக்கும், இருக்கும். MVன்னா முட்டாள் வைரவன்தான் போல’

‘அவ கிட்ட இருந்து விலகி நிக்கணும்னு விறைப்பா இருந்தவன், அவ போனா பிரச்சனை விட்டுதுன்னு இல்லாம எதுக்கு இப்டி புலம்பறேன்’

பட்டென நெற்றியின் மத்தியில் கனமாக விழுந்த மழைத்துளியில் எழுந்தவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஜீவாவை எழுப்பி உள்ளே இழுத்துக்கொண்டு செல்வதற்குள் இருவரும் முழுதாக நனைந்திருந்தனர்.

தூக்கக் கலக்கத்திலும் ஜீவா “அப்பவே சொன்னேன்” என்றான்.

******************

மேதாலக்ஷ்மி அம்மா, அப்பா, ஆயா, அக்கா என எல்லோர் மீதும் கடும் கோபத்திலும் , தண்ணீர்மலையின் மீது கொலைவெறியிலும் இருந்தாள். பின்னே?

ஒன்றுமில்லாத விஷயத்தை, அவனுக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தை, இன்னொருவர் வீட்டுப் பெண்ணை பொதுவில் இழுத்துப் பேசுவது என்ன மாதிரியான குணம்?

‘நான் என்ன செஞ்சா அவனுக்கென்ன? அப்படி நான் தப்பே செஞ்சாலும் என்னைக் கேட்க இவன் யாரு? என்ன உரிமைல பேசறான்? எவன் குடுத்த ரைட்ஸ்? அந்தத் தண்ணி டாங்க்கைப் பொத்து விடலை என் பேர் மேதா இல்லை’

‘இருடீ, இருக்கு ஒனக்கு’

‘அவனோட அப்பா ,அம்மா அவனுக்கு மேல இருப்பாங்க போல. சிவா மாமா… சிவானந்தன்னு பேர் வெச்சதால அமைதியா, ஆனந்தமா இருப்பார் போல… சரியான டால்டா!

‘எல்லாத்துக்கும் மேல இந்த ராகா, கொஞ்சம் முதுகெலும்போட பொறந்திருக்கலாம். எதுக்கு வம்பு, எதுக்கு ரிஸ்க்கு… இது ஒன்னும் லண்டன் இல்லன்னு அட்வைஸ் விடறா, இல்ல, எதானும் கேட்டா அழுகாச்சி காவியம் படிக்கறா. ஷப்ப்பா…மிடில!’

‘அவங்களை விட்ருவோம். இந்த அம்மா, அப்பா எப்படி அவங்க சொன்னதை வெச்சு என்னைக் கூட்டிட்டு வரலாம்? இவங்க போன்னா போகணும், வான்னா வரணுமோ, அதுக்கு வேற ஆளைப் பாருங்க’

‘நல்ல வேளை ராகவி வீட்டுக்கு நான் போகலை. பாலாவைப் பாத்துக்க வீட்ல இருந்துட்டேன். அதுசரி, நான் போய் இருந்தாதான் அந்த நீர்யானை இப்படி உளறி இருக்க மாட்டானே!”

திங்கள் காலை வழக்கம்போல் எழுந்து கடைக்குப் புறப்பட்டவளிடம் “நாங்க ராகவி வீட்டுக்குப் போயிட்டு சீக்கிரம் வந்துடறோம். நீ இன்னைக்கு கடைக்குப் போகவேணாம். நான் சிவா மாப்பிள்ளை கிட்ட பேசிட்டேன். நீ பாலாவைப் பாத்துக்க” என்றார் ராமநாதன்.

கிண்டலாக “ஸ்கூல்ல பேரன்ட் லீவ் லெட்டர் தர்றாப்போல, ஏம்ப்பா?” என்றவள், ஹாய்யாக பாலாவுக்குப் பிடித்த

Baby’s day out படத்தைப் போட்டு அவனுடன் பார்க்கத் தொடங்கினாள்.

மூன்று மணிநேரத்தில் திரும்பி வந்தவர்களின் முகமே சரியில்லை. பாலாவை உண்ண வைத்துக் கொண்டிருந்த மேதா என்னவென்று கேட்க, அவளது தந்தை வேகமாக

“மூணு மணிக்கு ஊருக்குக் கிளம்பணும். உனக்கு அவசியமான சாமானை பேக் பண்ணிட்டு ரெடியா இரு” எனவும், மேதா விழிக்க, ஆயா “இப்ப ஏன் தம்பி, பத்து, பன்னெண்டு நாள்ள ஃபங்ஷன் இருக்கு. அதுக்கு இங்கதானே வரணும். என்னைக் கேட்டா நீங்களே…”

“அதை அப்ப பார்த்துக்கலாம் கா. மேதா இன்னைக்கு எங்களோட வரட்டும். நீயும் புறப்படு”

“நீயாவது சொல்லக்கூடாதா நளினி?”

“மாமா சொல்றதுதாம்மா சரி”

மேதா “அப்போ கடை வேலை?”

ராமநாதன் மீற முடியாத குரலில் “இப்ப எங்க கூட வர்ற, என்ன?” என, மேதாவின் தலை தானாக ஆடியது.

ஆயா வற்புறுத்தியதில் அங்கு நடந்ததை நளினி சொன்னார்.

இவர்கள் சென்றதும், வரவேற்று உபசரித்து, வளைகாப்பு தேதியையும், அதற்கான ஏற்பாடுகளையும் பற்றிப் பேசினர். அதோடு சக்கரை ஐயாவின் எழுபதாண்டு திருமண நிறைவு குறித்தும் பேசினர்.

முந்தையநாள் இரவுதான் தங்கை மேதா வைரவனுடன் சிவகங்கை சென்று வந்ததும், அதன் பின்னான வாக்குவாதங்களும் ராகவியைப் போட்டு உழட்ட, பெற்றோரை நேரில் கண்டதும் தனியே அழைத்துச் சென்று, தண்ணீர்மலை தங்கையைத் தரக்குறைவாக பேசியதைச் சொன்னாள்.

அப்போது கூட ராமநாதன் “அவன் அப்படிதான்னு தெரியுமேடா. பெரியவர் சொன்னார்னுதானே மேதாவை திரும்ப அனுப்பினோம்”

சிவானந்தன் வேறு “ஜோதி விஷயத்தையும், அம்மா பொண்ணு கேக்கறேன்னதையும் உங்க வீட்ல சொல்லி வைக்காத. அப்புறம் ஃபங்ஷன் முச்சூடும் டென்ஷன்லதான் நடக்கும். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றிருந்தான்.

சரியாக இவர்கள் விடைபெற்றுக்கொள்ளும் சமயம் உள்ளே நுழைந்த தண்ணீர்மலை “வாங்க மாமா, வாங்க அத்தை” என்றவன், பின் ஏதோ, தினசரி பழகும் நபரிடம் பேசுவதைப்போல்,

“எங்க, உங்க பொண்ணு? கடைக்கு வரக்காணும். நேத்து லீவு. நாங்க சொல்லாமலே சிவகங்கை கடைக்கு போனா. இன்னைக்கும் ஆளைக் காணோம் தீபாவளி நேரம் வேற” என்றான்.

ராமநாதனின் முகம் கடுக்கவும், சிவானந்தன் “தம்பி, என்ன இது… மேதா இன்னைக்கு வரலைன்னு என்கிட்ட சொன்னா”

தண்ணீர்மலை “ஏன், இன்னைக்கு யாரோட எங்க போய் இருக்காளாம்?”

தண்ணீர்மலையின் பேச்சில் பெரியவர்கள் பதற, கோபமுற்ற ராமநாதன், தன்னைப் பெரிதும் சமன்படுத்திக்கொண்டு, சக்கரை ஐயாவிடம் “நாங்க போய்ட்டு ஃபங்ஷனுக்கு வர்றோம். வேற ஏதானும் செய்யணும்னா சொல்லுங்க. மேதாவை கோயம்புத்தூருக்கு கூட்டிட்டுப் போறேன். இனிமேலும் அவ இங்கே வேலை செய்யறது சரியா வரும்னு எனக்குத் தோணலை”

முருகப்பன் “சம்பந்தி..” என சமாதானமாக ஏதோ கூற வர, சக்கரை ஐயா என்ன நினைத்தாரோ “விடு முருகப்பா, ஒரு வகைல அதுவும் நல்லதுதான்” என்றுவிட்டார்.

கண் கலங்கிய ராகவியிடம் “இதை விடுடா. இந்த நேரத்துல நீ சந்தோஷமா இருக்கணும். ஒரு வாரத்துல ஒம்போதாம் மாசம் தொடங்கப் போகுது” என்ற ராமநாதன், தண்ணீர்மலையிடம்

“எம் பொண்ணு மேதா நேத்து வைரவனோட சிவகங்கைக்கு போனதும் எனக்குத் தெரியும், அதுக்கு முதல்நாள் அவனோட அவன் வீட்டுக்குப் போனதும் எனக்குத் தெரியும். எங்க கிட்ட மறைச்சு எதையும் செய்யற பழக்கத்தை எம் பொண்ணுங்களுக்கு நாங்க கத்துக் கொடுக்கலை. வார்த்தையை பார்த்து பேசுங்க. ஐயா முகத்துக்காக அமைதியா போறேன்” என்றிருந்தார்.

ராகவி சற்று பயமும் பிரமிப்புமாய் நின்றதோ, நளினி கையைப் பிடித்து அவரது பேச்சை நிறுத்த முயன்றதோ, ராமநாதனின் வேகத்தை சற்றும் பாதிக்கவில்லை.

வாசலுக்கு வந்தவர் சிவானந்தனிடம் ராகவியைக் காட்டி “பார்த்துக்கங்க சிவா” என்ற பிறகே காரில் ஏறினார்.

வர மறுத்த ஆயாவையும் “அக்கா, உம்பேத்திக்கு புடவை, வளையல், நகைங்கன்னு என்ன சீர் வாங்கணும் என்ன பலகாரம் செய்யணும்னு வந்து சொல்லுக்கா” எனவும் அவரும் கிளம்பினார்.

“உன் தம்பி சொன்னாதான் மதிப்பு, அப்படித்தானே?” - நளினி.

அன்று முழுவதும் மறுநாளும் பயணம், நடந்ததையே பின்னிப் பின்னிப் பேசியது என்றே பொழுது கழிந்தது. மேதாவை தனித்து விடாது, பாலா உள்பட எல்லோரும் கூடவே அவளுடனே இருந்தனர்.

அழகுநாச்சியில் வேலை என்பதொன்றும் அவளது வாழ்நாள் கனவில்லையே, எனவே அவள் அதற்காக வருந்தவில்லை. ஒரு வகையில் அங்கிருந்து வெளியே வந்ததில் அவளுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், வைரவன்…?

பின்நாக்கும் தொண்டையும் சேருமிடத்தின் அடியில் ஒரு பாக்குத் தூளோ, கடுகோ, கொத்தமல்லியின் நாரோ சிக்கினால் முழுங்கவும் துப்பவும் முடியாத உறுத்தலை, கண்ணில் கரிப்பை, கனைப்பை, குற்றவுணர்வை, அவஸ்தையை அழுத்தத்தைக் கொடுக்கத் தண்ணீரைக் குடித்தாள்.

புதன் கிழமை மதியம் வரை பொறுத்தும் போகாது உள்ளும் வெளியுமாக வியாபித்த வைரவனை ஜீரணிக்க முடியாது, நடுஹாலில் எல்லோரும் இருக்கையில் அவனை அழைத்து “கோயம்புத்தூர் வந்துட்டேன்” என்றவளின் குரல் நடுங்கியதோ என்ற ஐயம் தந்தைக்கு.

“யாரு?”

“வைரவன்”

இதில் மறுநாளே தீபாவளி வேறு. அவசரமாக எதையோ செய்து, பண்டிகையை விடாது கொண்டாடினர். மகளின் முகவாட்டத்தை வேலையை விட்டதற்கெனத் தவறாகப் புரிந்து கொண்டார் ராமநாதன்.

“அழகுநாச்சிய நம்பியா உன்னை லண்டனுக்கு படிக்க அனுப்பினேன்? யூ டோன்ட் ஒர்ரி குட்டிமா” என்றவர் வலுக்கட்டாயமாக பட்டாசை வெடிக்க வைத்தார்.

மேதாவின் ஒர்ரியெல்லாம், இவள் நெருங்கினாலே தள்ளி நிற்கும் வைரவன், இப்போது தனது பரிசை விடாது அணிந்திருப்பதை அறிந்த பிறகான தனது மௌனமும், அவனிடம் சொல்லாமல் இங்கு வந்ததும் அவனை எப்படி பாதிக்கும் அல்லது பாதிக்குமா என்பதுதான்.

அடுத்து வந்த நாட்களில் புடவை, நகை, வளையல்கள், வேட்டி, பாத்திரங்கள், ராகவிக்கும் வருபவர்களுக்கும் டஜன் கணக்கில் விதவிதமான கண்ணாடி வளையல்கள், என வாங்கிக் குவித்தனர்.

கந்தசஷ்டியன்று, மருதமலை மாமணியை தரிசித்துவிட்டு மறுநாள் காரைக்குடிக்கு வந்தனர்.

இங்கு வந்தும் பலகாரங்கள் செய்து டப்பாக்களை நிரப்புவதுமாகக் கழிய, அஞ்சு வகை பூக்கள்,ஏழு வகை சித்ரான்னங்கள் என சகல ஏற்பாட்டுடன் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றனர்.

*******************

வைரவன் வீட்டிலும் மேதா வீட்டினரின் பரபரப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லாது நாள்கள் நகர்ந்தன.

முருகப்பனும் தெய்வானையும் வளைகாப்புக்கு வந்து அழைத்துவிட்டுச் சென்றனர்.
ஐயாவின் திருமண நாளுக்கென பட்டாடைகள் வந்தன.

மதுரையில் இருக்கும் மீனாக்ஷியின் வீட்டிற்குச் சென்று முறைப்படி அழைத்து வந்தார் முருகப்பன்.

மீனாக்ஷிக்கு ஐந்தாம் மாதம் தொடங்கி விட்டதால், தணிகைநாதன் மகளையும் பேத்தியையும் மருந்து குடிக்கவும், விழாவிற்கும் முன்கூட்டியே சென்று அழைத்து வந்தார்.

மதுரையில் இருந்தே
ராகவிக்கு இரண்டு பவுனில் ஒரு பிரேஸ்லெட்டும், பெற்றோருக்கு பட்டுப்புடவை, வேட்டியும், இருவருக்கும் தஙக மோதிரமும் வாங்கி வந்தார்.

இருபக்க உறவான மீனாக்ஷியும் ராகவிக்கு ஒரு ஜோடி வளையலும் பெரியவர்களுக்கு அவர்களது தறியில் நெய்த நுணுக்கமான வேலைப்பாடுள்ள உயர்ரக செட்டிநாடு காட்டன் புடவைகள் இரண்டு, ஐயாவுக்கு வேட்டி, சட்டை என எடுத்து வந்தாள். அவளது கணவனும் மாமனார் மாமியாரும் விழாவன்று வந்து செல்வதாகக் கூறினர்.

*********************

அழகுநாச்சி இல்லம் கோலமும் பூக்களும் விளக்குகளுமாக ஜகஜ்ஜோதியாக ஜ்வலித்தது.
பெரியவீட்டு விசேஷமென்றால், ஆதாயம், வேடிக்கை, வரவு, சண்டை, வாய், வம்பு என அவரவர் ரசனைக்கேற்ப பலவற்றையும் பார்க்க நினைக்கும் உறவினர்கள் கூடி இருந்தனர்.

ஜீவாவை வள்ளியம்மையுடன் இருத்திவிட்டு, மற்ற அனைவரும் விழாவிற்குச் சென்றனர். அங்கு மேதாலக்ஷ்மியைக் காணாது உடைந்து இறுகிய வைரவன், சற்று நேரத்தில் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

‘இங்க வரலியா, காரைக்குடிக்கே வரலியா?’

விழாவிற்கென நளினி, ராமநாதனுடன் ஆயா முதலில் வந்து செல்வதாக இருக்க, மேதா, பாலாவுக்குத் துணையாக வீட்டில் இருந்தாள். இது தெரியாது திரும்பி வந்தவனைக் குடைந்தான் ஜீவா.

“இப்ப என்ன, வேணும்னா நீ போய்ட்டு வா. நான் அம்மாவைப் பாத்துக்கறேன்” என அவனிடம் எரிந்து விழுந்தான்.

அருகில் வந்த ஜீவா “உங்காளோட சண்டையோ?”

பொதுவாக ஜீவாவின் கேலிகளை சிரிப்பும் மறுப்பும் கண்டிப்புமாகக் கடப்பவன், பட்டென “அவதான் வரவே இல்லையே” என்றிருந்தான்.

“ஓ… தலைவனுக்குப் பசலை கண்டோ?”

“டேய்…”

வள்ளியம்மைக்கு உணவுடன் வந்த ஸ்வர்ணலதா “நான் அம்மாவோட இருக்கேன். அப்பா உங்களை வரச்சொன்னாக”

பரந்து விரிந்த கீழ்வாசலில் ராகவி இன்னும் மணையில் அமர்ந்திருக்க, நலங்கு, வளைகாப்பு முடிந்து பூ முடிக்கச் சொல்ல, நாத்தனார் முறைமைகளைச் செய்தாள் மீனாக்ஷி.

வைரவனும் ஜீவாவும் சென்று அக்கா செய்வதை வேடிக்கை பார்த்தபடி ஒரு ஓரமாக நின்றனர். முருகப்பன் வந்து “வைரவா, அப்பா எங்க?” என வைரவன் தெரியாதென்றான்.

வைரவனின் முதுகைச் சுரண்டிய ஜீவா “அங்கே பார்” என, ரத்தச் சிவப்பில் வெள்ளி ஜரிகையிட்ட புடவையில், வைரங்கள் மின்ன, கண்ணாடி வளையல்களைப் பிரித்து, யாருடனோ பேசிச் சிரித்தபடி பெண்களின் தாம்பூலத்தில் அடுக்கிக் கொண்டிருந்த மேதாவைக் காட்டினான்.

“மங்காத்தா ராணிய பாத்தேனே
கைமாத்தா காதல கேட்டேனே
இந்த கோமளவள்ளி என்ன
தொட்டா குளிக்கவே மாட்டேனே”

“டேய் ஜீவா, என்னடா பாட்டு இது?” என்ற வைரவனைக் கூர்ந்தவன்,

“ஏன், ஐயா மனசுல இருக்கறத அப்டியே பாடற மாதிரி தோணுதோ?”

“சும்மா உளராதடா”

“இப்பவாச்சும் சிரிடா, மூஞ்சியே அறுந்து தொங்குது”

சட்டென்று அவர்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவன்,
“டேய், சும்மா இருடா. விசேஷ வீடு. யார் காதுலயாவது விழப்போகுது”

“யாரு வைரவனா, ஏன்டா மசையாட்டம் நின்னா என்னடா அர்த்தம்? விருந்துன்னு நெனப்போ, போய் பந்தியக் கவனி”

சித்தப்பா முருகப்பனின் குரலில் வந்த சுணக்கத்தை முகத்தில் காட்டாது, ஜீவாவை இழுத்துக்கொண்டு உணவுக் கூடத்தை நோக்கி நகர்ந்தான்.

பந்தி பந்தியாக உணவு நடந்து கொண்டிருக்க, கடையிலிருந்தும், சாலையில் இருந்தும் ஆட்கள் வந்தவண்ணம் இருந்தனர்.

அவனுக்கு முன்பே அங்கே கையில் சாம்பார் வாளியுடன் நின்றிருந்த தந்தை தணிகைநாதனைக் கண்டவனின் ஆத்திரம் வைகாசி வெயிலைப்போல் ஏறியது.

வேக நடையில் நடந்து அருகில் சென்று, வாளியைப் பிடுங்கியவன் “உங்களை யாருப்பா இதெல்லாம் செய்யச் சொன்னது?” என்று வார்த்தையைக் கடித்துத் துப்பினான்.

“நம்ம வீட்டு விசேஷந்தானேடா, செஞ்சா என்ன?”

“எதுப்பா நம்ம வீடு?”

“வைரவா”

ஜீவா “நாங்க பாத்துக்குறோம் பெரியப்பா, நீங்க.போங்க. டேய் வைரவா, அங்க பாயாசம் கேக்கறாங்க பாரு” என இருவரையும் விலக்கி சாம்பார் வாளியை வேறொருவரிடம் தந்தான்.

இரண்டு வரிசைகளுக்கு வைரவன் காகிதக் கப்புகளை வைத்துக்கொண்டே செல்ல, ஜீவா பால் பாயசத்தை ஊற்றியபடி நகர்ந்தனர்.


மூன்றாவது வரிசை காலியாக இருக்க, புதுப் பந்தி தொடங்கவும், வரிசையாக வந்து அமர்ந்தவர்களிடையே இருந்தவளைப் பார்த்த வைரவனின் பார்வை தடுமாறியது.

‘ டேய் கல்பு , என்னைய மட்டும் ஏன்டா இப்டிக் கோத்து வுடற? சாம்பார் வாளியோட நிக்கறவனை எவளாவது சைட் அடிப்பாளா?’

பின்னாலிருந்து “யாருப்பா அங்க, இங்க பாயாசம் கொண்டாங்க” என்ற தண்ணீர்மலையின் குரல் கேட்டது.

‘பொறுக்கி ராஸ்கல், அவ எங்க போனாலும் நாய் மாதிரி நாக்கைத் தொங்க போட்டுக்கிட்டு பின்னாலயே வரான் பாரு ******”

‘இவளைச் சொல்லணும், இவன் வீட்டுக்கு வரதுக்கு இந்தப் புடவை, அலங்காரமெல்லாம் எதுக்கு?’

ஜீவா “போடா, போய் அவன் தலைலயே பாயசத்தை ஊத்து”

******************

பந்திகள் அனைத்தும் முடிந்து கூட்டம் குறைந்து, இரண்டு பக்கமும் சில நெருங்கிய உறவுகளைத் தவிர யாருமில்லாத நேரம். எல்லோரும் பட்டாளையில் அமர்ந்து வெற்றிலை பாக்குடன் பேசியபடி இருக்க, காஃபி வந்தது.

தந்தையை எண்ணிப் பயந்தாலும், தெய்வானையின் தூண்டுதலில், முருகப்பன், ராமநாதனிடம் “சம்பந்தி, இந்த நல்ல நாள்ல, உங்க இரண்டாவது பொண்ணு மேதாவை என் மகன் தண்ணீர்மலைக்குப் பேசலாம்னு…”

வேலை முடிந்து, வீட்டுக்குப் போகக் கிளம்பிய வைரவன், அக்காவின் மடியில் உறங்கி இருந்த மருமகளைக் கையில் தூக்கிக் கொள்ள, மீனாக்ஷி எழும்போதே முருகப்பன் இதைக் கேட்டிருந்தார்.

இதை எதிர்பார்க்காத ராமநாதனும் நளினியும் தங்களை நிதானித்துக் கொள்வதற்குள், தெய்வானை, நளினியிடம் “நீங்க சொல்லுங்க” என உந்தினார்.

“நான் இவரைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். அதோட, பாலா எனக்கும் தம்பிதான். உண்மைல அவனுக்கு இடமில்லாத வீட்டுக்கு வர்றதுக்கே எனக்கு விருப்பமில்ல. இதுல கல்யாணமெல்லாம்… நோ சான்ஸ்” என்று நிறுத்தி, நிதானமாக, அழுத்தமாகக் கூறி தன்னைக் கை காட்டிய மேதாலக்ஷ்மியைப் பார்த்த வைரவன் உள்பட அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல்வந்து மனதை…! 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

SaiSakthi

New member
Joined
Jun 20, 2024
Messages
25
தண்ணீர் மலை... இப்ப நீ கண்டிப்பா பாயாசம் குடிக்கணும் ‼️( மேதாவோட. Proposal காக ‼️)😜🤪

அருமையான பதிவு... ❤️
 

Srinisaran

New member
Joined
Jun 21, 2024
Messages
5
super mam😍😍😍 மேதாவிடமிருந்து இதைதான் எதிர்பார்த்தேன்.
 
Joined
Jun 19, 2024
Messages
26
மேதா நச்சுன்னு சொல்லிட்டா..செம சூப்பர்.
தண்ணீ டேங்க்க்கு ஓட்டையை போட்டுட்டா🤪
 
Joined
Jun 19, 2024
Messages
26
Adae water tank enaku kulu kulunu irukku oru oru episode layum final touch irukkae perandham seekeram next epi venum ippadiku water tank damage army
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சூப்பர் மேதா, டைம் பாத்து வெடிய போட்டா💣💣💣💣💣💣
வாட்டர் பால்ஸ் சோன முத்தா போச்சா 😜😜😜😜😜
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
மேதா இப்போதே சொல்லவில்லை என்றால் எப்போதுமே சொல்ல முடியாது என்று தோன்றுகிறது.
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
அப்படி போடு போடு தண்ணீர் மலை மேல.... மேதா சூப்பர்... கல்பு கப்புன்னு மாட்டி விட்டுட்டார் enjoy வைரூ
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!
இத்தனை நேரம் வைரவன் மனம் அலட்டிக்கொண்டதையெல்லாம் ஒக்கடே அனௌன்ஸ்மெண்டுல சரி பண்ணிட்டாளே!!!

சபாஷ்👍 அந்த வாட்டர்லாரிக்கு இந்த நோஸ்கட் வேண்டியது தான் - கழிசடை
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
😃😃😃😃😃சூப்பர் சூப்பர் அம்மா 🩷🩷🩷🩷பட்டுனு மேதா சொன்னதுல ஆச்சர்யம் இல்ல 😃😃😃😃
 
Top Bottom