• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சலன பருவம் - இறுதி அத்தியாயம்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
141
சலனபருவம் -16



அதிகாலை மணி மூன்று. அப்போது தான் உறங்க ஆரம்பித்த கயல்விழியை வயிறு பிராண்டியது. எதையாவது உள்ளே போடாவிட்டால் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்று வயிறு அறைகூவல் விடுத்தது.



கணவனின் இரும்புப் பிடியில் இருந்து நைசாக நழுவி பூனை நடை நடந்து வந்து ஃபிரிட்ஜை ஆராய்ந்தவளுக்குப் பால் பாக்கெட் மட்டுமே கண்ணில் பட்டது. வேறு வழியின்றி அந்த அர்த்த ஜாமத்தில், டீ தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தாள். மும்பையின் கிளைமேட்டுக்குச் சுடச் சுட டீ குடித்தால் கூட போதும் போல இருந்தது.



கணவனுக்குத் தெரியாமல் தான் மட்டும் டீ குடிப்பதில் அவளுக்கு இஷ்டம் இல்லை என்றாலும் ஆழ்ந்து உறங்கும் அவனை எழுப்பவும் அவளுக்கு மனமில்லை. மிகவும் கவனமாக மசாலா பொருட்களை எல்லாம் தேடிப் பிடித்து அவனுக்கும் சேர்த்தே டீ தயாரிப்பு ஈடுபட்டு இருந்தவளைப் பின்னிருந்து இரு கரங்கள் தழுவிக் கொண்டன.



"ஹேய்.. திருட்டுப் பூனை! இந்த நேரத்தில் என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அவள் கன்னத்தில் கன்னம் வைத்து இழைந்தான் அவன். அவசரமாக அடுப்பை அணைத்தவள், "பார்த்தால் எப்படித் தெரியுது.. டீ போட்டுட்டு இருக்கேன். நேத்து பகல்ல சாப்பிட்டது. விருந்துக்கு வான்னு கூப்பிட்ட கணேஷ் அண்ணா கிட்ட வயிறு சரியில்லை, இன்னொரு நாள் வரோம்னு சொல்லியாச்சு. சந்தேகம் எல்லாம் தீர்த்து வைக்கிறேன்னு ஆரம்பிச்சு.. பட்டினியோட படுத்தது தான் மிச்சம். தூக்கம் வரவேண்டாமா? எனக்கு ரொம்பவே பசிக்குது." என்று சிணுங்கினாள்.



அவனோ அதி முக்கியமான கேள்வியைக் கேட்டு வைத்தான். "பசியா முக்கியம்.. நான் எவ்வளவு பொறுப்பா நடந்திருக்கேன். உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா இல்லையா? பொண்டாட்டி சந்தேகத்தைத் தீர்க்கிறதை விட எனக்கென்ன வேலை.. இன்னும் இருந்தாலும் சொல்லு.. ராப்பகலா வேலை செஞ்சு தீர்த்துடலாம்" என்றவனைத் தள்ளி விட்டாள்.



"போதும்.. போதும்.. நீங்க சந்தேகம் தீர்த்த லட்சணம். என்னை அமைதியா டீ குடிக்க விடுங்க.. நீங்களும் சமர்த்தா குடிங்க" அவள் சும்மா டீயை நீட்டி இருந்தாலும் பேசாமல் அந்த வேலையை மட்டும் பார்த்திருப்பான். அவள் போட்ட எக்ஸ்ட்ரா பிட்டில் ஒரிஜினல் குருபிரசாத் முழித்துக் கொண்டான்.



"ஹூம்.. இது தான் நல்லதுக்கே காலம் இல்லைன்னு சொல்லுவாங்க.." என்று புலம்பிய படி டீயை வாங்கியவன் பல வித்தைகள் காட்டித் தானும் குடித்து அவளையும் குடிக்க வைத்தான். இருவரும் இணைந்து டீ குடித்து, கோப்பைகளைக் கழுவி வைத்த போது விடிந்து விட்டது.



காலை உணவுக்குப்பின் குருபிரசாத் மனைவியைத் தனது மும்பை அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தான். அவனது நண்பர்கள் அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். அலுவலகத்தில் உள்ள கட்டமைப்பு, ஊழியர்கள், டிரைனிங் நடத்தும் விதம் என்று எல்லாவற்றையும் பார்த்த பிறகு கயல்விழி முக்கியமான ஒரு விஷயத்தைக் கணவனிடம் கேட்டு வைத்தாள்.



"இது மும்பை செட்டப் மட்டும் தானா.. இல்லை சென்னை, பெங்களூர்ல கூட இது மாதிரி தான் இருக்குமா?"



"மூணு ஊர்லயும் இதே மாதிரி தான் இருக்கும். டிரைனிங் பீப்பிள் மட்டும் அங்கங்கே மாறுவாங்க."



"அத்தனையும் யார் பாத்துக்கிறாங்க?"



"நாங்க அஞ்சு ஃப்ரண்ட்ஸ் சேர்ந்து இதை ஆரம்பிச்சோம். அஞ்சு பேரும் பார்ட்னர்ஸ்.. மும்பைக்கு கணேஷ் அன்ட் சஞ்சய் பொறுப்பு, பெங்களூர்க்கு அவினாஷ் அன்ட் வெற்றி பொறுப்பு.. சென்னைக்கு நான் மட்டும் தான்.."



"ஓ… ட்ரைனீஸ் எல்லாம்.. ??"



"ஒவ்வொரு ஊருக்கும் தேவையான ட்ரைனீஸ் இருக்காங்க. தேவைப்படும் போது ஷஃபிள் பண்ணவும் செய்வோம்."



"அது ஏன் சென்னைக்கு மட்டும் ஒரே ஒரு ஆள். அது தான் சின்ன பிராஞ்சா?" இவள் கேட்ட கேள்வியில் குருபிரசாத் அவளை முறைக்க, அவனது நண்பர்கள் எல்லாம் கண்களில் நீர் வரச் சிரித்தார்கள்.



"ஆனாலும் சிஸ்டர், எங்க தலைக்கு இவ்வளவு பெரிய பல்பு கொடுத்திருக்க வேண்டாம். அவன் திறமை என்ன? சாமர்த்தியம் என்ன? நீங்க மட்டும் கஷ்டப்படுறீங்களான்னு கேட்காம இப்படி ஒரு கேள்வியக் கேட்டுட்டீங்களே? எங்க தலையோட இமேஜ் டோட்டல் டேமேஜ்" என்று ஆளாளுக்குக் கலாய்த்தார்கள்.



"அம்மா தாயே! அது தான் ஹெட் ஆஃபீஸ். உனக்கு வேணும்னா சொல்லு, உன்னை எம்டி சீட்ல உட்கார வச்சிட்டு நான் நிம்மதியா இருக்கேன்" என்று அவனது பங்குக்கு குரு ஒரு பெரிய பொறுப்பை அவளிடம் தள்ளப் பார்க்க, கயல்விழி பயந்து போனாள்.



தனது வங்கி வேலையை விட்டு இங்கே வந்தால் தன்னால் சரிவர வேலை செய்ய முடியுமா? என்ற கேள்வியும், ஏற்கனவே நற்பெயரோடு இருக்கும் நிறுவனத்திற்கு தன்னால் எதுவும் பாதிப்பு வந்து விடக் கூடாதே என்ற பயமும் இருந்தது.



குருபிரசாத் அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கண்டு அமைதியாக இருக்க, அவனது நண்பர்கள் அவளை ஊக்குவித்தார்கள். அதாவது மும்முரமாக மூளைச்சலவை செய்தார்கள்..‌



"கொஞ்சம் நாங்க சொல்றதைக் கேளுங்க சிஸ்டர். எதுவானாலும் முடிவு உங்க கையில் தான். எங்க கேங்ல இவனுக்கு தான் கடைசியா கல்யாணம் ஆகி இருக்கு. ஏற்கனவே எங்க வைஃப் கிட்ட எல்லாம் இந்த ஆஃபரைக் கொடுத்தோம். பட் அவங்க எல்லாரும் வேற வேற ஃபீல்டுல இருக்காங்க. மேனேஜ்மென்ட் சைட் வர அவங்களுக்கு தயக்கம் இருந்தது."



"பட் நீங்க அப்படி இல்லை. ஏற்கனவே மேனேஜ்மென்ட் பொஸிஷன்ல தான் இருக்கீங்க.. உங்களால முடியும்.. நீங்க பொறுப்பு ஏத்துக்கிட்டால் நாங்க சில விஷயங்களை மறந்து பிஸினஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியும். யோசிச்சு நல்ல முடிவு சொல்லுங்க. "



"ஆமா.. அங்கிள் ஆன்ட்டி எல்லார் கிட்டயும் கேளுங்க. ஃபியூச்சர்ல பேபீஸ் வரும் போது உங்க சொந்த தொழில்ல இருக்கிறது நிறையவே ஹெல்ப் பண்ணும்"



அனைவரும் பேசிய வார்த்தைகளில் கயல்விழிக்கு உடன்பாடு இருந்தாலும் அவளுக்கு யோசிக்கச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது.



அன்று இரவு, குருபிரசாத்தின் நண்பர்கள் புதுமண தம்பதிக்கு டின்னர் ஏற்பாடு செய்து இருந்தனர். பிரபலமான நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற அந்த விருந்துக்கு வைன் ரெட் நிறத்தில் முழு நீள அனார்கலி சுடிதார் ஒன்றினை மனைவிக்கு வாங்கிக் கொடுத்தான். அவனுமே அதே நிறத்தில் ஷர்ட் அணிந்து வந்தான். இருவருக்கும் மிகவும் பிடித்தமான நிறம் என்பதோடு, பொருத்தமாகவும் அமைந்திருந்தது.



விருந்துக்கு வரும் போதும் சரி, விருந்தின் போதும் சரி ஆண் பெண் பேதமின்றி சகஜமான மனோபாவத்தில் பேசினாள் கயல்விழி. நண்பர்களிடம் கை கொடுப்பதாகட்டும் அவர்களின் மனைவியரை அணைத்து வரவேற்றதாகட்டும்.. அவளின் உடல்மொழியில் முன்பிருந்த தயக்கங்களோ, விலகல் தன்மையோ இல்லை. இதுவே அவளுக்கு ஒரு நல்ல ஆரம்பம் தான் என்று சந்தோஷமாகவே விருந்தில் கலந்து கொண்டான் குருபிரசாத்.



மறுநாள் மும்பையில் இருந்து கிளம்ப முடிவு செய்தவர்கள், அன்றிரவு இருவீட்டுக்கும் பேசினார்கள். கயல்விழியின் தாய் வீட்டில் இருந்து வந்த செய்தி அவளை மேலும் சகஜமாக்கியது. தீபாவின் திருமணம் பற்றிய செய்தி தான் அது. அவளது அலுவலகத்தின் நியூஜெர்சி கிளையில் வேலை செய்யும் ஒருவரை அவளே தேர்ந்தெடுத்து, இவர் தான் என் வாழ்க்கைத் துணை என்று அறிவித்திருந்தாள்.



அவள் தேர்ந்தெடுத்த தேவ் டேவிட் சங்கரும் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவன் தான். அவனது தாத்தா சங்கர் ஆரம்ப காலங்களில் சிலிகான் வேலியில் வேலை செய்வதற்காக போனவர். காலப் போக்கில் கலப்புத் திருமணங்கள் பல செய்து அமெரிக்கராகவே மாறி விட்ட குடும்பம். இப்போது மூன்றாம் தலைமுறை பூர்வீகத்தை நாடி, இந்திய மருமகள் வேண்டும் என்று வந்திருக்கிறது.



தேவின் அழகிலும் பணத்திலும் அமெரிக்க குடியுரிமையிலும் மயங்கிய மல்லிகா மகளின் ஆசைக்கு யோசிக்காமல் தலையாட்டி விட்டாள். புதுப் பணக்காரராக ஊரில் வலம் வந்தவர் தங்கை குடும்பத்தையோ மகளுக்கு சேவகனாகவே இருந்த காளிதாஸையோ கண்டு கொள்ளவே இல்லை. திருமணம் அமெரிக்காவில் என்று வீட்டு மனிதர்கள் மட்டும் கிளம்பிச் சென்று விட்டனர். இதில் கயல்விழியின் தாய்மாமன் இருவருக்கும் ஏக வருத்தம்.



"எப்படியோ பொறுப்பா கல்யாணம் செய்து நல்லா வாழ்ந்தால் சரி" என்று ஒதுக்கி விட்டனர்.



விஷயம் கேள்விப்பட்ட கயல்விழிக்குக் காளிதாஸைப் பற்றி பெரும் கவலையாக இருந்தது. கணவனிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.



"நான் தான் நல்ல முடிவு வரும்னு சொன்னேனே.. வெயிட் பண்ணு.. உங்க அண்ணன் இந்த நேரம் அவனோட இடம் என்னன்னு தெரிஞ்சிருப்பான்.. காலப் போக்கில் அவனுக்குன்னு ஒருத்தி வரும் போது இன்னும் தெளிவாகிடுவான். நீ அநாவசியமா அவனைப் பத்தி கவலைப் படாமல் இரு" என்று மனைவிக்கு அறிவுறுத்தினான் குருபிரசாத்.



—--



"மாமா! இதைப் பத்தி உங்க அபிப்பிராயம் என்ன? உங்க மகன் என்னை அவங்க கம்பெனிக்குக் கூப்பிடறாங்க" வீட்டிற்கு வந்ததும் வராததுமாக பேச்சை ஆரம்பித்து விட்டாள் கயல்விழி. சுந்தரேசன் மகனைக் கேள்வியாகப் பார்க்க, அவன் ஆம் என்பது போல தலையசைத்தான்.



"டேய்.. என்னடா நீ.. என் மருமக அந்த பேங்க்ல எவ்வளவு பெரிய பதவில இருக்கா.. உங்க ஆஃபீஸ்ல வந்து வேலை பார்க்கணுமா? அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிடு கயல்" என்று மீனாட்சி பொரிந்து தள்ளினார்.



"ஏம்மா நீங்க வேற.. அவ உங்க கிட்ட போட்டு வாங்கறா.. நீங்க என்னடான்னா உங்க மகனைத் திட்டுறதே குறிக்கோளாக வச்சிருக்கீங்க.. " தாயிடம் புலம்பியவன் மனைவியை முறைத்தான்.



"ஹேய்… நீ தானே நான் மட்டும் சென்னை ஆஃபீஸைத் தனியா மேனேஜ் பண்றேன்னு ஃபீல் பண்ண.. அதான் ஒரு ஆஃபர் கொடுத்தேன்.. அதுவும் எம்டி சீட்டு.. நான் ஏதோ உன்னைப் பியூன் வேலைக்குக் கூப்பிட்ட மாதிரி ஒரு பில்டப் கொடுத்து வைக்கிற.. அதுக்கு உங்க மாமியார் சப்போர்ட் வேற"



"எம்டி சீட்டா.. அப்போ டபுள் ஓகே.. இனிமேல் தான் கம்பெனி ஓகோன்னு ஓடும்" என்று மீனாட்சி சட்டென்று தீர்ப்பு வழங்க சுந்தரேசன், அதை வழிமொழிந்து விட கயல்விழி செய்வதறியாது விழித்தாள்.



"நான் ஏதாவது ஸ்வீட் பண்றேன். கயல் உனக்கு முந்திரி கேக் தானே பிடிக்கும். இதோ அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்றேன் இரு" என்று மீனாட்சி எழுந்து சென்று விட, "கரெக்டான முடிவு டா.. நான் இப்பவே நல்ல நாள் பார்க்கிறேன்" என்று சுந்தரேசன் காலண்டர் தேடிப் போக தம்பதியர் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.



அடுத்த இரண்டாவது மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து அனைவரையும் அழைத்து கயல்விழியின் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மாமியாரும் மாமனாரும் மருமகளை மனதார வாழ்த்தினார்கள். நிர்வாக இயக்குனரின் நாற்காலியில் அமர்ந்தவளின் கையில் சுந்தரேசன் பேனாவைக் கொடுக்க, கையெழுத்திட்டு அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டாள், கயல்விழி.



"இந்தா கயல், இதைப் பிடி" என்று ஆனந்தி ஒரு பெட்டியைப் பரிசாக அளித்தாள். அது ஒரு கார் சாவி.. அவளுக்குப் பிடித்த கலரில் பிடித்த மாடலில் ஒரு கார்.. குறைந்தது ஆறேழு லட்சங்கள் இருக்கும்.



"எதுக்கு அண்ணி இவ்வளவு காஸ்ட்லி கிஃப்ட்?" என்று கயல்விழி தயங்க ஆனந்தியின் கணவன் உதவிக்கு வந்தான்.



"நாங்க இன்னும் உங்க கல்யாணத்துக்கு ஒன்னும் வாங்கித் தரலை தெரியுமா? என்ன தான் வாங்கிறதுன்னு குழம்பிப் போய் இருந்தோம். கிடைச்ச சான்ஸ மிஸ் பண்ணுவோமா.. வாங்கிக்கோம்மா.. நானும் உனக்கு ஒரு அண்ணன் தான்" என்று கயல்விழியின் மனதில் இன்னும் தெளிவு வரச் செய்தான்.



"இனிமேல் நீ எங்கே போகணும்னாலும் இவனை நம்பி இருக்க வேண்டியதில்லை. டிரைவிங் தெரியும் தானே.. இல்லேன்னா நான் சொல்லித் தர்றேன் உனக்கு" என்று அவள் சொல்ல அவளைப் பற்றித் தெரிந்த அனைவரும் சத்தமாகச் சிரித்தார்கள்.



"இவங்களுக்கு எல்லாம் ரேஸ்ல போறது மாதிரியே போகணும். நான் கொஞ்சம் ஸ்லோவா வண்டி ஓட்டுவேன். அதான் இப்படி சிரிச்சு வைக்கிறாங்க. என் காரையும் பாரு மத்தவங்க காரையும் பாரு, எத்தனை கீறல் இருக்குன்னு பார்த்துடலாம். சென்னை ரோட்டுல என்னை மாதிரி ஓட்டுவது தான் சேஃப்" என்று நீண்ட விளக்கம் கொடுத்து தான் ஒரு லெக்சரர் என்று நிரூபித்தாள்.



"ஆமா.. அக்கா கார்ல் போற ஸ்பீடுக்கு நாம நடந்தே போயிடலாம்னா பாத்துக்கோங்க சிஸ்டர்.. அம்பூட்டு ஸ்பீடு " என்று குருவின் நண்பர்கள் ஆனந்தியைக் கலாய்க்க அந்த இடமே ஆனந்தமயமாக இருந்தது.



சொந்தங்கள் எல்லாருமே ஏதேதோ பரிசளித்து அவளைத் திக்குமுக்காடச் செய்தார்கள்.



விழாவிற்கு வந்திருந்த கயல்விழியின் பிறந்த வீட்டினர் மாப்பிள்ளையைக் கொண்டாடித் தீர்த்தனர். கயல்விழி தான் அவர்களது வீட்டில் வேலைக்குச் சென்ற முதல் பெண். சொந்த தொழில் செய்வது தான் அவர்களின் குல வழக்கம் என்றாலும் பெண்களைத் தொழிலில் நேரடியாக ஈடுபடச் செய்ததில்லை. அவர்களது மாப்பிள்ளை அதைச் செய்து அதுவும் பெரிய பதவியில் அமர்த்தி வைத்ததைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்கள்.



குருபிரசாத் கயல்விழி இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த சோமசுந்தரத்திற்கு அவர்களின் அன்னியோன்யம் புரிந்து போனது.



"ரொம்ப நன்றி மாப்பிள்ளை. எங்க பொண்ணை நல்ல படியா வச்சிருப்பீங்கன்னு நல்லாவே புரிஞ்சிகிட்டேன்" என்று அவன் கைபிடித்து பேசிய சோமசுந்தரம் உணர்ச்சி வசப்பட்டார்.



"இதுல என்ன இருக்கு மாமா. ஒரு ஹஸ்பண்ட் என்ன செய்யணுமோ அதைத் தானே செஞ்சிருக்கேன். அவளுக்கு திறமை இருக்கு, ஏற்கனவே பெரிய வேலைல இருந்திருக்கா. அதையெல்லாம் பார்க்கும் போது நான் செஞ்சது ரொம்பவே சின்ன விஷயம். சொல்லப் போனால், அவங்க பேங்க்ல ஒரு நல்ல டெடிகேடட் வொர்க்கரை மிஸ் பண்ணுவோம்னு சொல்லி கயலோட ரெசிக்னேஷன அக்சப்ட் பண்ணவே யோசிச்சாங்க. எங்களைத் தான் வேற வழி பார்க்கச் சொல்லி ஐடியா எல்லாம் கொடுத்தாங்க.. " அவர் சொல்ல வந்த விஷயம் புரிந்தாலும் இருக்கும் இடம் உணர்ந்து வேறு பேசினான் குருபிரசாத்.



"அதில்ல மாப்பிள்ளை.. நான் சொல்ல வந்தது.." என்று ஆரம்பித்தவரிடம் கண்களால் சுற்றுப் புறத்தைக் காட்டி வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டான்.



அனைத்திலும் ஹைலைட்டாகத் தங்கையின் பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்த காளிதாஸ் வெகு இயல்பாக எல்லோரிடமும் பழகினான். அவன் முகத்தில் முன்பிருந்த முகமூடி எதுவும் இல்லாமல் இருந்ததே கயல்விழிக்கு ஆச்சரியமாக இருந்தது.



—--



விழா முடிந்து சொந்தங்கள், நெருங்கிய நட்புகள் அனைவரும் வீட்டில் கூடி இருந்தனர். காளிதாஸூம் குருபிரசாத்தும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.



"என்ன மச்சான்! தங்கச்சி கல்யாணம் தான் முடிஞ்சு போச்சே..அடுத்து உங்களுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாமா? நீங்களே பார்த்து வச்சிருந்தாலும் சரி.. தைரியமா சொல்லுங்க நான் பேசறேன் மாமா கிட்ட" என்று பேச்சை ஆரம்பித்து வைத்தான் குருபிரசாத்.



அவன் அந்த "தங்கச்சி"யில் கொடுத்த அழுத்தம் காளிதாஸை முகம் மாறச் செய்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான்.



"நீங்க வேற ஏன் மாப்பிள்ளை? நமக்கு அப்படிப்பட்ட சாமர்த்தியம் எல்லாம் இல்லை.. வீட்டில யாரைக் கை காட்டுறாங்களோ அவங்க கழுத்துல தாலி கட்டிக் குடும்பம் நடத்த வேண்டியது தான்" என்றான் கோர்வையாக. ஆனாலும் அவன் மனதில் ஒரு முள் தைத்திருப்பதைக் குருவால் உணர முடிந்தது. யாரும் அறியாமல் காளிதாஸைத் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தவன் சோமசுந்தரத்திடம் திரும்பினான்.



"கேட்டுக்கோங்க மாமா.. மச்சான் கல்யாணத்துக்கு ரெடியாம். நீங்க பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்."



"அச்சோ! நீங்க என்ன மாப்ள உடனே கோர்த்து விடறீங்க.." என்று குருபிரசாத்தைத் தடுத்தான் தாஸ்.



பிறகு கயல்விழியின் அருகில் வந்தவன், "கொஞ்சம் நாள் போகட்டும்.. தங்கச்சி குழந்தைக்கு சீர் எல்லாம் செஞ்சிட்டு தான் நான் கல்யாணம் செய்துக்குவேன். அது வரைக்கும் யாரும் என் கல்யாண விஷயம் பேச வேண்டாம்" என்று தங்கையின் தலையை வருடிக் கொண்டே வீட்டுப் பெரியவர்களைப் பார்த்தான்.



கயல்விழி அண்ணனின் பாசம் கண்டு சிலையாகி விட்டாள். கண்கள் நீரைப் பொழியத் தயாராக இருக்க அவளது கணவனின் கண்களில் இருந்து அது தப்பவில்லை.



"ஓ.. அப்போ உங்க கல்யாணம் என் கையில தான் இருக்குன்னு சொல்றீங்க.. இப்போ இருந்தே தீயா வேலை செய் டா குரு.." என்று தனக்குத் தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டே "நீ என்ன சும்மா உட்கார்ந்து இருக்க.. வா வா.. நிறைய வேலை இருக்கு" என்று மனைவியை எழுப்பி விட்டான்.



கயல்விழியை அவன் எழுப்பிய வேகத்தில் தலைசுற்றுவது போல இருக்க அப்படியே உட்கார்ந்தாள் அவள்.



"ஏற்கனவே நீ வேலை செஞ்சாச்சு போல இருக்கே மாப்பிள்ளை" என்று குருபிரசாத்தின் நண்பர்கள் சத்தமாகச் சிரிக்க அங்கே எல்லாம் இன்பமானது.



—--



இரண்டு வருடங்கள் கழித்து…



பதினெட்டாம் படி கருப்பசாமியின் கோவில் விழாக்கோலம் பூண்டு இருந்தது. சுந்தரேசன் மற்றும் சோமசுந்தரத்தின் சொந்த பந்தங்கள் அனைவரும் கூடி இருந்தனர்.



அந்த இடமே மனிதர்கள் நிற்க இடமில்லாமல் சீர் தட்டுகளால் நிரம்பி வழிந்தது. மற்ற அண்ணன்களின் பங்கை வேறு வகையில் செய்ய வைத்து தனது தங்கையின் மகனுக்குத் தானே சீர் தட்டுகளை நிரப்பி இருந்தான் காளிதாஸ்.



சின்சியராக வேலை செய்தவனுக்கு அருகில் இருந்து உதவி செய்தாள் தேன்மொழி, திருமதி. காளிதாஸாக இன்னும் ஒரு சில நாட்களில் மாறப் போகிறவள்.



"தேனு! அந்தக் கம்மல் இருக்கிற பை உன் கையில் தானே இருக்கு? சந்தனத்தைக் கரைச்சு உன் கையிலே வச்சுக்கோ" இடையிடையே சந்தேகம் கேட்ட காளிதாஸ் "தேனு" என்று அழைத்த குரலில் வழிந்த காதல் நான் எனது சலனபருவத்தின் சுவடுகளைக் கடந்து வந்துவிட்டேன் என்று சொல்லாமல் சொன்னது.



குறித்த நேரத்தில் அவனது மருமகனும் சிரித்தபடியே மாமனது மடியில் அமர்ந்து காது குத்திக் கொண்டு மொட்டை போட்டுக் கொண்டான்.



அருகில் நின்று பார்த்திருந்த கயல்விழிக்கு நெகிழ்வான தருணம் அது. அவளது நிலை கண்ட கணவன் தோளணைப்பில் மனைவியை வைத்துக் கொண்டான். அவனை நிமிர்ந்து பார்த்த கயல்விழியின் பார்வை சொன்னது என்ன??



'உன்னைப் போல் புரிதலுடன் ஒரு வாழ்க்கைத் துணை வாய்த்து விட்டால்.. எதையும் சாதிக்கலாம்' என்றதோ??



இருவரும் மெய்மறந்து நின்ற வேளையில் அவர்களின் செல்ல மகன் அவர்களைப் பார்த்துச் சிரிக்க, சுற்றி இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் தத்தளித்தனர்.



இனியெல்லாம் சுபமே!
 

Author: SudhaSri
Article Title: சலன பருவம் - இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom