• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 5

laavans

New member
Joined
Sep 3, 2024
Messages
9
அத்தியாயம் – 5



அன்றிரவு! கப்பலுக்குள் ஒளி வெள்ளம் மிதந்து கொண்டிருக்க, கப்பலோ நிலவொளி குளிப்பாட்டிய தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

நேத்ரா சற்று பரபரப்புடன் திரிந்து கொண்டிருந்தாள். விருந்தினர்கள் அனைவரும் வந்துவிட, கப்பல் மெள்ள நகர ஆரம்பித்தது. அவர்களை வரவேற்கவென்று அன்று மாலையில் ஒரு சிறு நிகழ்ச்சி கப்பலிலிருந்த உணவகத்தில் ஏற்பாடாகியிருந்தது.

அந்தப் பொறுப்பு முற்றிலும் நேத்ராவின் கையில் இல்லை என்றாலும் ஆங்காங்கே வைக்க வேண்டிய பூச் சாடிகள், மற்ற அலங்காரங்கள் எனச் செய்ய வேண்டிய சில வேலைகள் அவளுக்கு இருந்தன. அத்தோடு விருந்தினர்களின் தேவையறிந்து எல்லாம் நல்லபடியாக நடக்கிறதா என்று பார்க்கும் முக்கியப் பொறுப்பும் இருந்தது.

வெவ்வேறு துறையில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிந்தால் மட்டுமே இந்தத் தொழிலில் முன்னேற முடியும் என அனைத்து வேலைகளையும் பாரபட்சமின்றி ஒன்று கூடிச் செய்தனர்.

ஆகையினால் விரைவில் தயாராகி, நேராக உணவு செய்யுமிடத்துக்குச் சென்றாள் நேத்ரா. அங்கிருப்பவர்களை அவளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் சில விஷயங்களைச் சரிபார்த்துவிட்டு, அலங்காரங்களைப் பார்வையிடச் சென்றாள்.

சொல்லப் போனால் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். அவள் மட்டும் தனியாக வேலைச் செய்யவில்லை. அவளுக்குக் கீழே இன்னும் மூன்று பேர் உதவிக்கு இருந்தனர். அவளுக்குக் கீழே பணிபுரிகிறார்கள் என்றாலும் அனைவரையும் சரி சமமாகவே நடத்துவாள் நேத்ரா.

அவளின் இந்தக் குணந்தாலேயே அவளிடம் வேலை செய்பவர்களும் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலையை முடிப்பார்கள்.

காற்றில் கேசம் அலைந்து முகத்தில் மோத, அதை ஒதுக்கிவிட்டவாறே அழகான பர்பில் வண்ணச் சேலையில் கப்பலின் மேல்தளத்தில் நடந்து வந்து கொண்டிருந்த நேத்ராவை கைநீட்டி இடைமறித்தான் ஆதிநந்தன்.

‘யார்’ என விழியுயர்த்தி வழிமறித்தவனை நோக்கினாள். கல்லைப் போன்று இறுகி நின்று கொண்டிருந்த ஆதிநந்தனைக் கண்டதும் தாமரையாய் முகம் மலர்ந்தவள், “சொல்லுங்க சார், ஏதாவது வேணுமா?” எனத் தன் பணியைச் செவ்வனே செய்ய முயன்றாள்.

அவளை மேலும் கீழும் ஆராய்ச்சியாய்ப் பார்த்தவன், உதட்டை வளைத்தவாறு, “இப்படி அழகா மேக்கப் போட்டு ஆளை மயக்கலாம்னு பிளானா?” எனக் கேட்டு அவளை அதிர்ச்சியடைய வைத்தான்.

அவனை ஒரு கணம் நெற்றி சுருக்கிப் பார்த்தாள். அனைவரும் கூடியிருக்கும் இடத்தில் அவள் கோபப்பட்டால் அவள் பணிக்குச் சரி வராது. அதனால் உடனே முகத்தில் மீண்டும் புன்னகையைத் தவழவிட்டவள், “உங்க பாராட்டுக்கு ரொம்பத் தேங்க்ஸ் சார்” என இளமுறுவலுடன் அவனைக் கடந்து போக எத்தனித்தாள்.

ஒரு அடி பின்னால் நகர்ந்து மீண்டும் அவள் முன்னால் கையைக் குறுக்காக நீட்டி, “என்ன நக்கலா?” என அவளை முறைக்க,

“அழகா இருக்கேன் எனச் சொன்னீங்களே சார். பாராட்டுக்கு நன்றி சொல்லாம இருக்கக் கூடாது பாருங்க. நீங்க கெஸ்ட்டா வந்திருக்கீங்க. நான் அந்த கெஸ்ட்டை எல்லாம் குறையில்லாம கவனிக்க வந்திருக்கேன். அப்படியிருக்கறப்போ மேக்கப் போட்டுட்டு வராம அழுது வடிஞ்சிட்டு முன்னாடி வந்து நின்னா நல்லாவா இருக்கும்?

அப்படி வந்தா அடுத்தத் தடவை யாராவது என்கிட்ட வேலையைத் தூக்கிட்டு வருவாங்களா? கொஞ்சம் தள்ளினா, நான் போய் என் தலைக்கு மேலே இருக்கிற வேலையைப் பார்ப்பேன்” என நேத்ரா சொல்லிக் கொண்டிருக்க,

“ஆதி...” என்று யாரோ ஒரு பெண் அழைப்பது கேட்டது. கையை இறக்கியவாறு சட்டென்று அவன் திரும்ப, நேத்ராவும் குரல் வந்த திசையில் பார்த்தாள்.

“உங்களுக்கும் வேலை வந்திடுச்சு பாருங்க” என அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவனைச் சுற்றிக் கொண்டு மின்னலென மறைந்துவிட்டாள் நேத்ரா.

திரும்பிய ஆதிநந்தன் அங்கு நின்றிருந்த பெண்ணைப் புருவம் சுருக்கி, ‘இவளை எங்கோ பார்த்திருக்கோமே’ என்ற யோசையுடன் அளவிட்டான். அப்பெண் அவனை நெருங்கி வர, டக்கென்று அவனுக்கு ஞாபகத்துக்கு வந்துவிட்டது. ஸ்வப்னா!

முதன் முதலில் திருமணத்துக்கு என்று இவளை அல்லவா பெண் பார்க்க உணவுவிடுதிக்குச் சென்றான் அவன். அச்சமயத்தில் அருண் விபத்தில் மாட்டிக் கொள்ள அது நிறைவேறாமல் போனது. மறுமுறை அவளைச் சந்திக்க ஏற்பாடாகியிருந்த பொழுது இந்த நேத்ராவால் தடங்கல் ஏற்பட்டது.

அப்பொழுது தான் நினைவு வந்தவனாக நேத்ரா நின்றிருந்த இடத்தைப் பார்த்தான். அவள் இருந்த சுவடே இல்லை. அவளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஸ்வப்னாவின் மேல் அவன் கவனம் திரும்பியது.

அன்று அவன் தரும் விளக்கத்தைக் கூடச் செவி சாய்த்துக் கேட்காமல், ‘ஒத்துவராது’ என்று சென்றவள், இன்று தானாகவே வந்து பேசுகிறாளே எனப் புருவம் உயர்த்தி ஒருவித கர்வத்துடன் அவளை எதிர்கொண்டான் ஆதிநந்தன்.

“ஞாபகம் இருக்கா ஆதி?” என அவனருகில் நெருங்க, “ஹாய் ஸ்வப்னா, எப்படி இருக்கீங்க?” எனப் புன்னகைத்தான். அவள் பெயரை அவன் ஞாபகத்தில் வைத்திருக்கவும் அவளுக்கு உச்சிக் குளிர்ந்து போனது.

“அன்னைக்கு இருந்த கோபத்துல உங்களை நான் சரியா ட்ரீட் பண்ணலை. உங்களுக்கு செகண்ட் சான்ஸ் தரேன். நீங்க ரெடியா?” என ஸ்வப்னா அவன் முகத்தை ஊடுருவ, உள்ளுக்குள் துணுக்குற்றாலும் முகத்தில் அறைந்தாற்போல் அவன் எதுவும் சொல்லவில்லை.

ஏனெனில் அவன் கவனம் இப்போது ஸ்வப்னாவைத் தாண்டி அங்கே பற்கள் தெரிய அரும்பென மலர்ந்து கொண்டிருந்த நேத்ராவின் மீது படிந்தது. இவளால் எப்படி எதுவும் நடக்காததைப் போல் நடந்து கொள்ள முடிகிறது? ஒருவேளை ஏதாவது பெரிய திட்டம் போட்டு வைத்திருக்கிறாளோ?

விட்டில் பூச்சியாய் அவன் எண்ணங்கள் நேத்ராவைச் சுற்றியே நகர்ந்தன.

“என்னங்க ஆதி ரெடியா?” என ஸ்வப்னா மீண்டும் கேட்க, விழிகள் அவள் மேல் படிந்தன. அவன் வீட்டில் பார்த்த பெண் என்றாலும் அவனுக்கும் அப்போது பிடித்திருந்தது என்றாலும் இப்போது அவனுக்குள் எவ்வித மாறுதலும் நிகழவில்லை.

இவ்வளவு ஏன் கடந்த ஆறு மாதங்களில் அவளைப் பற்றிய எண்ணம் சிறிதளவும் அவனுக்கு எழவில்லை. நேத்ராவை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தாய் என்பதற்காக அவளைப் பிடித்திருக்கிறது என்று எடுத்துக் கொள்வாயா என மனசாட்சி அவனைக் கேலி செய்தது.

அதை ஒதுக்கியவாறே, “நீங்க எங்க இங்க?” என ஸ்வப்னாவுக்குப் பிடி கொடுக்காமல் பேசினான்.

மணப்பெண் ஆராதனாவின் தந்தையும் அவள் தந்தையும் தொழில்முறையில் நெருங்கிய நண்பர்கள் எனத் தெரிவித்தவள், “நீங்க மாப்பிள்ளை அருணுக்கு ஃப்ரெண்ட்னு சொன்னாங்க” எனப் பளீரென்று புன்னகைத்தாள்.

ஏற்கனவே தன்னைப் பார்த்துத் தன்னைத் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. உண்மையே. குளித்து, ஆகாய வண்ணச் சட்டை மற்றும் ஜீன்ஸ் சகிதம் புத்துணர்வோடு கிளம்பி வந்த ஆதிநந்தனைத் திருமணத்துக்கு என்று வந்த பெண்கள் வஞ்சனையில்லாமல் பார்த்து ரசிக்க, ஸ்வப்னாவின் தலைக்கனம் தூண்டிவிடப்பட்டது.

உங்களால் பார்க்க மட்டுமே முடியும். என்னால் அவனிடம் பேசவே முடியும் என அவனைத் தனக்குத் தெரிந்தவன் என்பதை அவர்களிடம் காட்டிவிட வேண்டும் என்ற வேகம் தலைதூக்கியது. அதனாலேயே அவர்கள் ஆவென்று பார்த்துக் கொண்டிருக்கையில் அவனிடம் பேச வந்தாள் ஸ்வப்னா.

அதுவும் அன்று அவள் கோபத்தில் பொரிந்துவிட்டுச் செல்லவும் ஆதிநந்தன் உடனே அவளைத் தொடர்ந்து வருவான் என்று மிகவுமே எதிர்பார்த்தாள். பின்னோடு வந்து கெஞ்சுவான் என நினைத்து ஏமாந்து போனாள்.

அந்தக் கடுப்பில் தன் தந்தைக்கு அழைத்துக் கோபத்துடன் இவனைப் பற்றித் தாறுமாறாகத் திட்டிவிட்டு வைத்துவிட்டாள். அதன்பிறகு பலரையும் அவள் தந்தை கை காட்டினார் என்றாலும் அவளுக்கு ஏனோ யாரையும் பிடிக்கவில்லை.

இன்று ஆதிநந்தனை மீண்டும் பார்க்கவும் அவனின் கம்பீரம் அவளை ஈர்த்தது. அவளுக்குள் இனம்புரியா உணர்வு எழும்பியது. அதுவும் மற்ற பெண்கள் இவனைக் கண்ணெடுக்காமல் பார்க்கவும் இவள் அடுத்த அடியை எடுத்து வைத்துவிட்டாள்.

கூடுதலாக அவள் எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யும் விதமாக அவளை யாரென்று ஞாபகத்தில் வைத்து அவன் பேசவும், அவனை இன்னுமே பிடிக்க ஆரம்பித்தது அவளுக்கு. அதனாலேயே இரண்டாம் வாய்ப்புத் தருகிறேன் என்றாள்.

அப்போது அந்த வழியாகச் சென்ற நேத்ராவை, “ஏய், இங்க வா?” எனக் கைதட்டி ஸ்வப்னா அழைக்க, அவர்களை நோக்கித் திரும்பியவளை விழிக் கொட்டாமல் ஆராய்ந்து கொண்டிருந்தான் ஆதிநந்தன்.

“ஒரு பிளாக் காப்பி சர்க்கரை இல்லாம எடுத்துட்டு வா” என அவள் ஏவலிட, “கொண்டு வரச் சொல்லறேன்” என இன்முகத்துடன் சொன்னவள், “உங்களுக்கும் ஏதாவது வேணுமா சார்?” என அவனிடம் வினவினாள்.

அது அவளின் பணியில்லை என்று இத்தனை நேரம் அங்கிருந்ததில் தெரிந்து வைத்திருந்தான் ஆதிநந்தன். ஆகவே அவளின் கேள்வியில் எதுவும் சொல்லத் தோன்றாமல் அப்படியே அவளைக் கூர்மையாகப் பார்க்க, “வேண்டாமா? ஓகே” என நேத்ரா நகர்ந்துவிட்டாள்.

அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் விருந்தினரின் கூட்டம் அதிகரிக்க ஆரம்பிக்க, “எல்லோரும் வர ஆரம்பிச்சுட்டாங்க ஸ்வப்னா. அருண் ரெடியா எனப் பார்க்கிறேன். அப்புறம் பார்க்கலாம்” என வாய்க்கு வந்ததை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றான் ஆதிநந்தன்.

*****

வரவேற்பு விருந்து கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. கடல் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருக்க, சற்று ஓரமாகப் போடப்பட்டிருந்த அந்தப் பெரிய வட்ட மேஜையில் அருண், ஆராதனா, ஆதிநந்தன், ஸ்வப்னா மற்றும் அருணின் நண்பர்கள் இருவரும், ஆராதனாவின் நெருங்கிய தோழி ஒருத்தியும் அமர்ந்திருந்தனர்.

ஸ்வப்னா இப்படித் தன்னிடம் அட்டையாக ஒட்டிக் கொள்வாள் என ஆதிநந்தன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளைத் தவிர்க்கவும் முடியவில்லை. வீணாகப் பேசி அவளுக்கு நம்பிக்கையும் தரப் பிடிக்கவில்லை. ஒருவித தர்ம சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தான்.

அதே சமயத்தில் அவர்களின் டேபிளுக்கு வந்து ஏதாவது வேண்டுமா என உபசாரமாகக் கேட்ட நேத்ரா, விடைபெறும் முன்னால் ஆராதனாவைப் பார்த்து, “யு லுக் லைக் ஏன் ஏன்ஜல் (தேவதைப் போலிருக்கிறாய்)” என்றாள். ஸ்வப்னாவிடமும் திரும்பி, அவளையும் நேத்ரா பாராட்ட, அவளுக்கு உச்சி குளிர்ந்து போனது.

‘பேசியே ஆளை மயக்கிவிடுவாளே… டிராமா குவீன்’ என ஆதிநந்தன் முகம் மாறாமல் காக்க வெகுவாகச் சிரமப்பட்டான். அதுமட்டுமல்லாமல் ஆதிநந்தனின் மூளைக்குள், ‘இவர்களை விட நேத்ரா ஏன்ஜலாகத் தெரிகிறாளே’ என்ற வாக்கியம் குறுக்கும் மறுக்கும் ‘கேட் வாக்’ சென்று வந்தது.

இந்தச் சிந்தனை தன்னுள் தோன்றியதும் விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தான். இதற்கும் அவளைக் காரணம் காட்டி, “வேண்டும் என்றே அருணின் முன்னால் வந்து அவன் மனசைக் கலைக்கப் பார்க்கிறாள்’ என மனதுக்குள் திட்டிவிட்டு அவளைக் கண்ணிமைக்காது பார்த்தான்.

அப்போது அங்கே ஆராதனாவுக்குப் பழச்சாறு எடுத்து வந்த பணியாள் ஒருவன் கை தவறி அதை ஆராதனாவின் மேலேயே கவிழ்த்துக் கொட்டிவிட்டான். ஒரு சொட்டுவிடாமல் குவளையில் இருந்த அனைத்தும் அவளது ஆடையில் வழிந்து கோலம் வரைந்தது.

“என்ன சுனில் இது? இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கக் கூடாதா நீங்க?” என நேத்ரா அவனிடம் சொல்ல, “சாரி... சாரி... மேடம்...” என சுனில் பயத்தில் பதறினான்.

“இட்ஸ் ஓகே.. இட்ஸ்.. ஓகே.. தெரியாம நடந்தது. எதுக்குப் பெருசு பண்ணறீங்க” என ஆராதனா அதைப் பொருட்படுத்தவில்லை.

“சாரி மேம்... நீங்க உங்க டிரஸ்ஸை கொடுத்தா உடனே அந்த இடத்துல டிரை கிளீன் பண்ணித் தரச் சொல்லறேன்” என மிகவும் அமைதியான குரலில் நேத்ரா சொல்ல, “நான் என் ரூமுக்குப் போய் மாத்திட்டு வர்றேன்” என ஆராதனா எதுவும் அலட்டிக் கொள்ளாமல் உடனே எழுந்து விட்டாள்.

ஆராதனாவுடன் நேத்ரா நகர முயல, “மேடம் நீங்க இருங்க. நான் பார்த்துக்கிறேன்” என நேத்ராவிடம் சொன்னான் சுனில்.

அவளுக்கு மேற்பார்வை பார்க்க வேண்டிய வேலை இருந்ததால் அப்படியே நின்றவள், “சரிங்க சுனில், போய் ஹெல்ப் பண்ணுங்க...” என்றவள், “சாரி... தெரியாம நடந்திடுச்சு...” எனப் பொதுவாக மன்னிப்பை வேண்டிவிட்டு வேலையைக் கவனிக்க நகர்ந்தாள்.

அவள் நகர்ந்ததும், அருணின் நண்பன் ஒருவன் அவனிடம் தணிந்த குரலில், “பொண்ணு சூப்பரா இருக்கா. யார் இவங்க?” என விசாரித்துக் கொண்டிருந்தான்.

அருண் தர்மசங்கடத்துடன் நெளிய, ஆதிநந்தனின் காதில் அது விழுந்து எரிச்சல் கொள்ள வைத்தது. தூரத்தில் சென்றவளையே வெறித்துப் பார்த்தான்.

பழச்சாறை கொட்டிய சுனில் அவளிடம் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. இத்தொழிலில் அவனுக்கு உள்ள நாட்டத்தினால் மட்டுமே அவனை வேலைக்கு எடுத்துக் கொண்டாள் நேத்ரா. ஏனெனில் அவனுக்கு முன் அனுபவம் எதுவுமில்லை.

அடுத்த அரைமணி நேரம் ஓடியாடி அனைத்தையும் சரி பார்த்துவிட்டு நடந்து வந்தவளின் கண்களில் சுனில் பட, “என்ன சுனில் இது? இப்படியா கவனக்குறைவா இருப்பீங்க? ஆராதனா மேடம் எதுவும் பெருசு பண்ணாததால நம்ம தப்பிச்சோம். இதே அவங்க திட்டி எல்லோரையும் கூட்டியிருந்தா என்ன ஆகியிருக்கும்?” என நேத்ரா அமைதியாகக் கேட்டாலும் அவள் குரலில் அடக்கப்பட்ட கோபம் இருப்பது அவனுக்குத் தெரிந்தது.

“சாரி மேடம்... இனிமேல் கவனமா இருப்பேன்..” எனத் தலையைக் குனிந்து கொண்டான்.

சற்றுநேரம் எதுவும் பேசாமல் அவனைக் கூர்ந்து பார்த்தவள், “போங்க... போய்ப் பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு வீட்டு சைடும் நல்லாக் கவனிங்க” என அவனை அனுப்பி வைத்துவிட்டு, இழுத்துப் பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.

“நல்ல பிளான்... ஆராதனாவை அந்தப் பக்கம் அனுப்பிட்டு அருண்கிட்ட பேச பிளான் பண்ணினியா?” என்ற குரலில் சலிப்புடன் திரும்பினாள் நேத்ரா. இவனுக்கு அவளிடமிருந்து என்ன வேணும்? முன்ன பின்ன பார்த்தது கூடக் கிடையாது. இப்படித் தொடர்ந்து வந்து குற்றம் சுமத்துகிறான்.

ஆதிநந்தனை மேலும் கீழும் கூர்மையுடன் ஆராய்ந்தவள், “நீங்க என்ன வேலைல இருக்கீங்க?” எனச் சம்மந்தமே இல்லாமல் வினவினாள்.

“ஏன் அடுத்து என்னை மடக்கப் பிளான் பண்ணறியா என்ன?” எனக் கேட்க, அவளுக்கு இப்போது சுள்ளென்று கோபம் வந்துவிட்டது.

“மடக்கறதுக்கு உருப்படியா அங்க ஏதாவது இருக்கணும் இல்ல” என அவளும் வார்த்தைகளைக் கொட்டிவிட்டாள்.

அவன் தன்மானம் சீண்டப்பட, “ஏய்...” என அவளை நெருங்கி, “நீ என்ன பெரிய அழகின்னு நினைப்பா? என் கால் தூசிக்குக் கூட சமமில்லை நீ” என அவனும் வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தான்.

திடுக்கிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனும் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்தது என்ன? கோபமா, வெறுப்பா, இல்லை, வேறு ஏதாவதா? அவளால் அதைப் படித்துப் பகுத்தறிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு அவளுக்கு நேரமுமில்லை.

மெல்ல தன்னுணர்வு கொண்டவள், “அப்படி நினைக்கிற நீங்க ஏன் என்னைத் தொடர்ந்து வந்து பேசி உங்க டைமை வேஸ்ட் பண்ணறீங்க? உங்களுக்குச் சமமா இருக்கிறவங்களோட போய்ப் பேசுங்க” எனச் சன்னமான குரலில் அடக்கப்பட்ட கோபத்துடன் சொன்னவள்,

தொடர்ந்து, “இல்ல… ஆராதனா மேலே கொட்டி அவங்களைத் துரத்திட்டு, அருண்கிட்ட பேசறதுக்கு, நேரா அவர் மேலேயே கொட்டி அவரை மடக்கிட்டுப் போயிருப்பேனே” என அவனை நக்கலாகப் பார்க்க, ஆதிநந்தனின் இரத்தம் ‘கதக் புதக்’ என்று கொதிக்க ஆரம்பித்தது.

“அதான்... இந்தப் புத்திசாலியை யார் வேலைக்கு வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன். வேற ஒண்ணுமில்லை” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, “ஆதி” என்றவாறே ஸ்வப்னா ஒரு பெரியவருடன் அவனை நோக்கி வந்தாள்.

“ உங்களுக்குச் சரி சமமா இருக்கிறவங்க உங்களைத் தேடி வந்துட்டாங்க. போய்ப் பேசுங்க” எனச் வார்த்தைகளைச் சுளீரென்று சாட்டையாய் அவனை நோக்கிச் சுழற்றினாள் நேத்ரா. அச்சொற்கள் அவனைக் குத்திப் பதம் பார்த்தது. அவன் அப்படி ஒன்றும் பாகுபாடு பார்க்கிறவனில்லை.

இவளால் தன் மொத்தக் குணமும் மாறிப் போய்விடும் போல. அப்படியே நின்று அதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க அவனுக்கு வழியில்லை.

“அப்பா, இவர் தான் ஆதி” என்றவாறே ஸ்வப்னா தன் தந்தையுடன் அவனருகில் நெருங்கியிருந்தாள்.

“ஹலோ அங்கிள்” என மரியாதை நிமித்தம் கை குலுக்கி அவரிடம் இன்முகத்துடன் பேச அரம்பிக்க, “ஸ்வப்னா சொன்னா உங்களைப் பார்த்ததா. எப்படியோ உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா எங்களுக்குப் போதும். நான் அப்பாகிட்ட பேசறேன்” என அவர் சொல்ல, ஆதிநந்தனுக்குத் தலையெல்லாம் கிறுகிறுவென்று சுற்றிவிட்டது.

அவன் சம்மதம் என்று எதுவும் சொல்லவில்லையே. ஆரம்பத்தில் இந்தச் சம்மந்தம் வந்த பொழுதும் கூடத் தன் வீட்டினர் பெரிய இடம் என்று சற்று தயங்கவே செய்தனர். ஆதிநந்தனின் குடும்பம் கஷ்டப்பட்டு முன்னேறி இன்று நல்ல நிலையில் இருக்கின்றது.

அவன் அண்ணன் விஷ்ணு, கட்டுமானத் தொழிலில் முன்னேறி சாதிக்க, இவன் இந்திய வருவாய்த் துறையில் வேலையில் இருக்கிறான். அதனால் ஸ்வப்னாவின் வீட்டிலிருந்து விருப்பம் எனத் தெரிவிக்கையில் சற்று யோசிக்கவே செய்தார்கள்.

நாளடைவில், இவ்வளவு பெரிய இடத்திலிருந்து பெண் கிடைக்கிறது என்றால் அது ஆதிநந்தனின் அதிர்ஷ்டம் என்று உறவினர்கள் உசுப்பேத்தியதில் ஒருவழியாகச் சம்மதித்தார்கள்.

ஆதிநந்தன் தன் சிந்தனையில் உழன்று கொண்டிருக்க, “நீங்க பேசிட்டு இருங்க சார். உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்லறேன்” என அவனிடம் இன்முகத்துடன் சொல்லிவிட்டு, மற்றவர்களையும் பார்த்துத் தலையசைத்துவிட்டு விடுவிடுவென்று நகர்ந்துவிட்டாள் நேத்ரா.

அவளைப் பின் தொடர்ந்து செல் என்று அவன் மனம் கட்டளையிட, இவளை ஏன் தொடர வேண்டும் என்று மூளையோ கோபம் கொண்டது. ஏதோ ஓர் இக்கட்டில் சிக்கிக் கொண்டதைப் போலுணர்ந்தான் ஆதிநந்தன். மூச்சுத் திணறுவதாக இருந்தது.

நல்லவேளையாக அதன்பிறகு ஸ்வப்னாவின் தந்தை அவர்கள் திருமணம் பற்றிய பேச்செடுக்கவில்லை. அவன் வேலையைப் பற்றி, அருணை எப்படித் தெரியும் எனப் பொதுவான விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டார். ஆகவே அவனாலும் இயல்பாகப் பேச முடிந்தது.

இரவு விருந்து முடிந்து விருந்தினர்கள் பலரும் தங்கள் அறைக்குச் சென்றிருக்க, இளையவர்கள் சிலர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அனைத்தும் சரியாக நடந்து முடிந்துவிட்டதா என இறுதியாக ஒருமுறை மேற்பார்வை பார்க்க வந்தாள் நேத்ரா.

உணவு உண்ணும் இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்திருந்தனர். இனி மறுநாள் காலையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்குத் தயார் செய்ய வேண்டும். அனைத்தும் திருப்தியாக இருக்கவே தன் அறைக்குச் செல்ல நினைத்த நேத்ராவுக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்தது.

சற்றுமுன்னர் தான் சாப்பிட்டு முடித்திருந்தாள். பசி காதை அடைக்க, வேலையை முடித்துவிட்டு அவசர அவசரமாக உணவை அள்ளிப் போட்டுக் கொண்டதன் விளைவு இந்த விக்கல்.

அங்கிருந்த மேஜையில் ஒரே ஒரு தண்ணீர் பாட்டில் மீதமிருக்க, அவசரமாக அதை எடுக்கக் கையை நீட்ட அதை வேறொருவர் கையில் எடுத்திருந்தார். அவளுக்குச் சுள்ளென்று கோபம் மூண்டது. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். யாராவது விருந்தினராக இருந்தால் என்ன செய்வது என விழியசைத்துக் கைக்குச் சொந்தமானவரை நோக்கினாள்.

நக்கலான சிரிப்புடன் அதைத் திறந்து குடிக்க ஆரம்பித்திருந்தான் ஆதிநந்தன். இவனிடம் பேசிப் பயனில்லை. வாய் திறந்து பேசினால் அதற்கும் எடக்கு மடக்காக ஏதாவது சொல்லி வைப்பான் என அவள் எதுவும் சொல்லாமல் வேறு எங்கு தண்ணீர் இருக்கிறது எனப் பார்த்தவாறே போனாள்.

அவளைத் துரத்திக் கொண்டு வந்தவன், “அன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு உதவாம விட்டுட்டுப் போனியே... அப்போ அவங்களும் இப்படித் துடிச்சிருப்பாங்களே” என நியாயத் தராசில் தன் வாதத்தை ஏற்றினான்.

‘எந்தப் பெண்? என்ன உதவி?’ என அவள் இருந்த அவஸ்தையில் எதுவும் புரியவில்லை. விக்கலுக்குத் தண்ணீர் குடித்தால் போதும். நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வு விடுபடும்.

“என்ன புரியலையா? அந்தப் பொண்ணை இப்படித் தானே பார்க்கிங் லாட்ல தவிக்க விட்டுட்டுப் போன?” என ஆதிநந்தன் நியாயவதியாகப் பேச, நேத்ரா எதுவும் பதில் சொல்லவில்லை.

“ஹ்க்... ஹ்க் குட்நைட் சார்” என அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவனும் அவளைத் தொடர்ந்து வருவதை அவனின் காலடி ஓசை அவளுக்கு உணர்த்தியது. ஆனாலும் அவள் திரும்பவில்லை. மெதுவாக நீச்சல் குளத்தைக் கடந்து சென்றாள்.

“குடிக்கத் தண்ணி வேண்டாமா?” என ஆதிநந்தன் அவளிடம் கேட்க அவள் திரும்பினாளில்லை.

சலசலவென்று தண்ணீர் கொட்டும் ஓசை கேட்க, தன்னையுமறியாமல் நேத்ரா திரும்பிப் பார்த்தாள். தன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலுள்ள தண்ணீரை அந்த நீச்சல் குளத்தில் கொட்டிக் கொண்டிருந்தான் ஆதிநந்தன். முகத்தில் எள்ளல் சிரிப்பு வேறு.

‘சரியான சாடிஸ்ட்டாக இருப்பான் போல...’ என்ற எண்ணம் தோன்றினாலும் இவன் முன்னால் எதிர்வினை ஆற்றினால் இன்னும் தலையில் ஏறி அமர்ந்து கொள்வான். அவனைச் சட்டை செய்யாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

விக்கல் நின்ற பாடில்லை. அவசரமாக நடக்க ஆரம்பிக்க அதே சமயத்தில் சுனில் இன்னொரு பணியாளருடன் பேசியவாறே தட்டில் ஜூஸ் கிளாஸ்களை ஏந்தியவாறே பக்கவாட்டில் இருந்து திரும்பினான். அவளைப் பார்த்ததும் தட்டிலிருந்த ஜூஸை எடுத்து அவள் கைகளில் தந்து, “குடிங்க மேடம்” என்றான்.

“யாருக்கோ எடுத்துட்டுப் போறீங்க போல” என அவள் தயங்க, “இல்ல.. இல்ல உங்களுக்குத் தான். நீங்க முதல்ல குடிங்க” என்றான்.

அவசரமாக நன்றியுரைத்து அதை வாங்கிக் கொண்டவள், ‘இவனைப் போல் நல்லவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள்’ என்ற யோசனையுடன் தன்னறையை நோக்கி நடந்தாள்.

அத்தோடு, ‘யாரிவன்? எதற்காக அவள் மேல் இத்தனை கடுப்புடன் திரிகிறான்? அதுவும் தண்ணீரை எடுத்துக் கீழே கொட்டிக் கவிழ்க்கும் அளவுக்கு. ஒருவேளை முன் ஜென்ம பகையாக இருக்குமோ?’ என எண்ணியவளுக்குத் தன்னையுமறியாமல் சிரிப்பு வந்தது.

இவனால் தன் வேலைக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்ற கவலையும் உள்ளூர எழுந்தது. ஆனால் ஆதிநந்தனின் கோபம் எதற்காக என்று தெரிய வருகையில் ‘மனிதநேயம் செத்துப் போய்விட்டதா?’ என்ற விரக்தி அவளுக்கு ஏற்பட்டது.

தொடரும்...
 

Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom