• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 4

laavans

New member
Joined
Sep 3, 2024
Messages
9
அத்தியாயம் – 4


அந்தக் கப்பல் ஒரு ராணியின் கம்பீரத்துடன் வங்கப் பெருங்கடலில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிப்பவர்கள் இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவார்கள். அமைதியாக இருக்கும் அந்த இடம் கூடிய விரைவில் அமர்களமாக மாறிவிடும். அதற்காகப் பணியாளர்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் கப்பலில் அடுத்த மூன்று நாட்களுக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. ஏனெனில் இன்னும் இரண்டு நாட்களில் அங்கு ஒரு திருமணத்துக்கு ஏற்பாடாகியிருந்தது.

பெண் மிகவும் விருப்பப்பட்டதால் நெருங்கிய உறவுகளுக்கும் நட்புகளுக்கும் மட்டும் அழைப்பு விடுத்து அக்கப்பலில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தார் மணமகளின் தந்தை.

சென்னையில் ஆரம்பித்து அப்படியே நடுக்கடலில் சென்று சுற்றிவிட்டு மீண்டும் மூன்று நாட்களில் சென்னைத் துறைமுகத்தில் போய் நிற்கும். அதற்குள் திருமணம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் நடந்தேறியிருக்கும்.

நேரமாகிவிட்டதே என்று அவசரமாகத் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு நேத்ரா கப்பலில் கால் பதித்தாள். இனி மூன்று நாட்களுக்கு யாருடைய இம்சையும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்ற எண்ணமே அவளுக்கு இனித்தது.

யாரையும் பார்க்கத் தேவையில்லை. யாருடனும் பேசத் தேவையில்லை! முக்கியமாக யாரின் கண்காணிப்பும் இருக்காது. ‘லலா.. லலா’ என மனதுக்குள் உற்சாகத்துடன் பாடியவாறே தன் அடையாள அட்டையை அங்கிருந்த பணியாளரிடம் தந்தாள்.

ஏற்கனவே அவளை அறிந்தவர்கள் என்பதால் சினேகமாகப் புன்னகைத்து, “உன்னை மறுபடியும் பார்ப்பதில் மகிழ்ச்சி” என அவளை வரவேற்றனர்.

“உன் டீம் எல்லோரும் வந்துட்டாங்க” என மற்றொருத்தி புன்னகைத்தவாறே அவளது அடையாள அட்டையைச் சரிபார்த்துவிட்டுத் திருப்பித் தந்தாள்.

“தாங்க்ஸ்.. நான் போய் வேலையைக் கவனிக்கிறேன்” என அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் அடையாள அட்டையைக் கைப்பையில் வைத்தவாறே நேத்ரா வலது பக்கமாகத் திரும்பினாள்.

அதே சமயத்தில் அலைபேசியில் பேசியவாறே வந்த யாரோ ஒருவன் இடது பக்கம் திரும்ப, இருவரும் மோதிக் கொண்டனர். அனிச்சைசெயலாக எதிரில் வந்தவள் கீழே விழாதவாறு அவள் கையைப் பிடித்துத் தடுத்திருந்தான் மோதியவன்.

எனினும் மோதிய வேகத்தில் அவள் கைப்பை கீழே விழுந்தது. அடையாள அட்டையை வைக்கத் திறந்து வைத்திருந்ததால் அதிலிருந்த பொருட்கள் நாலா பக்கமும் சிதறிப் போய் விழுந்தன.

தப்பு அவள் மேல் இல்லையென்றாலும், சம்பிரதாயமாக, “சாரி” எனச் சிதறியிருந்த பொருட்களைப் பார்வையால் அளந்த நேத்ரா, உடனே தன் கையை உருவி கொண்டு கீழே குனிந்து அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தாள்.

ஒற்றைச் சொல்லில் தவழ்ந்து வந்த இனிமையை மீண்டும் கேட்க வேண்டும் போலிருந்தது அவள் மேல் மோதியவனுக்கு. கீழே குனிந்திருந்தவளைக் கவனித்தான். அவள் முகம் தெரியவில்லை. அவள் முடி முன்னே சரிந்து அவளது அசைவுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தது.

சட்டெனத் தானும் காலை மடித்து அவளுக்கு முன்னே தரையில் அமர்ந்து, “சாரிங்க... நான் ஏதோ யோசனையில வந்துட்டேன்” எனத் தவறை ஒத்துக் கொண்டு அவளுக்கு உதவும் நோக்கில் அவனும் பொருட்களை எடுக்க ஆரம்பித்தான்.

சேகரித்துக் கொண்டிருந்தவனின் கைகள் அப்படியே ஸ்தம்பிக்க, விலுக்கென்று எதிரிலிருந்த பெண்ணின் முகத்தை ஏறிட்டான் ஆதிநந்தன்.

“நீயா?” எனத் தீ மழையில் நனைந்ததைப் போல் உரைத்தவன், கையிலிருந்த பொருட்களை அப்படியே தரையில் விசிறிவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தான். இன்னும் பயணிகள் யாரும் வந்திருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன், அவளை நெருங்கி,

“நீ எதுக்கு இங்க வந்த? உன்னை யாரு உள்ளே விட்டது? அருணுக்குக் கொஞ்சம் கூட அறிவேயில்ல. யாரைக் கல்யாணத்துக்குக் கூப்பிடறதுன்னு விவஸ்தை இல்லை?” என உள்ளக் கொதிப்பை வெளியில் பொரிந்து கொட்டினான் ஆதிநந்தன்.

அவன் திட்டுவதெல்லாம் அவளுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. ‘யாரிவன்?’ என அவள் முகத்தில் ஆச்சர்யக் கோடுகள் மட்டுமே. கூடவே உதட்டில் கேலிப் புன்னகை வேறு. ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையில் மும்முரமானாள்.

அவள் பதில் உரைக்காமல் அவள் வேலையைப் பார்க்கவும் அவன் பேச்சை நிறுத்திவிட்டு அவளையே உறுத்து விழித்தான்.

அனைத்தையும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு மெள்ள எழுந்து நின்றவள், “நிறுத்திட்டீங்களா? இனி நான் பேசலாமா?” எனச் சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு, “சாரி... நம்ம இதுக்கு முன்னாடி சந்திச்சிருக்கோமா என்ன? எனக்கு உங்களைப் பார்த்ததா ஞாபகமில்லையே” என்றாள்.

அவளின் குரல் உளியைப் போன்று அவன் கோபத்தை உடைத்துக் கொண்டு அவன் இதயப் பாசறை நரம்புகளைத் தொட்டு மீட்டியது.

அன்று அலைபேசியில் கேட்ட பொழுதே அவள் குரல் செவி வழி நுழைந்து இதயம் தொட்டது. இன்று வெகு அருகில் நின்று கொண்டிருக்கையில் கேட்கவா வேண்டும்? அதுவும் அந்த இதழ்கள் மொட்டைப் போல் குவிந்திருந்தன.

“சார்...” என அவள் அழைத்த பிறகே தேவைக்கும் அதிகமாகவே அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்து தன் மேலேயே கோபம் கொண்டான் ஆதிநந்தன். தேன் போன்ற குரலை வைத்தே அனைவரையும் வசீகரித்துவிடுவாள் போல. அவனையே தடுமாற வைத்துவிட்டாளே?

மீட்டிய நரம்புகள் அனைத்தும் பட்டென்று அறுபட, சுளீரென்று வலியைத் தோற்றுவித்தது. நண்பன் ஏன் இவளிடம் விழுந்து கிடந்தான் என அவனுக்குப் புரிவதைப் போலிருக்க, தலையை உலுக்கிக் கொண்டான்.

“உன்னைச் சந்திக்க வேற செய்யணுமா?” எனச் சுள்ளென்று பேச, “அப்போ சந்திக்காமலேயே உரிமை இருக்கிறவ மாதிரி திட்டறீங்க... உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்?” என அவனை மடக்கினாள்.

அவள் பேச்சு சாட்டையாய் சுழன்று அவன் நெஞ்சில் மளமளவென்று இறங்கியது. உண்மையல்லவா? பார்த்ததும் ஒருவரை எடை போடுவது தவறு என்றாலும் அருண் சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் இவள் நல்லவள் இல்லை என்றே தெரிகிறது.

அதுவுமில்லாமல் அவன் ஒன்றும் அருண் சொன்னதை மட்டும் வைத்துப் பேசவில்லை. அவனும் கண்கூடாக இவளின் இரக்கமற்ற குணத்தைக் கண்டானே. ஓர் உயிர் பிரிவதைக் கூடப் பொருட்படுத்தாமல், அவளுக்கு உதவ முன் வராமல் சென்றாளே.

“உன் இலட்சணத்தைப் பழகிப் பார்த்து வேற தெரிஞ்சுக்கணுமா? அந்த ஹோட்டல் பார்க்கிங் லாட்ல நீ ஒரு பெண்ணைத் துடிக்க விட்டுட்டுப் போனதைப் பார்த்தேன். கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாதவ நீ. உன்னை அடிச்சாலும் தப்பில்லை” என்றான்.

புருவம் சுருக்கி அவனைக் கூர்ந்து நோக்கியவள், “இவ்வளவு பேசறீங்களே, நீங்க காப்பாத்தினீங்களா? அவங்களைத் தொடர்ந்து போய்க் காப்பதியிருக்க வேண்டியது தானே?” என எய்த அம்பை அவன் பக்கமே திருப்பிவிட்டாள்.

என்னவொரு தெனாவெட்டு என அப்படியே சில கணங்கள் உறைந்து போய் நின்றுவிட்டிருந்தான்.

“உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கும் உங்களைத் தெரியாது. அதனால் தெரியாம தப்பா எதுவும் பேச வேண்டாமே” என்றதும், ஆதிநந்தன் என்னும் சிலைக்கு உயிர் வந்தது.

“நீ பார்த்தியா நான் உதவலைன்னு. இன்ஃபாக்ட் உன்னைப் பத்தி போலீஸ்ல புகார் கூடக் கொடுத்தேன். அவங்க அது இயற்கை மரணம் எனக் கேஸை முடிச்சிட்டாங்க” என ஆதிநந்தன் கோபத்தில் சீற, அவனை வியப்புடன் பார்த்திருந்தாள் நேத்ரா.

தொடர்ந்து, “உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அருண் கல்யாணத்துல ஏதாவது குழப்பம் பண்ண நினைச்ச...” என நிறுத்தியவன், வலதுகை சுட்டு விரல் நீட்டி, “கொன்னுடுவேன்” என்றான்.

‘இவன் யார்? சம்மந்தமே இல்லாமல் வந்து உளறுகிறான்’ என வியப்புடன் அவனைப் பார்த்தவள், “ம்ம்ம்... ரொம்பப் பயங்கரமான டெரரா இருப்பீங்க போல. கவலைப்படாதீங்க. வந்த வேலையைக் கரெக்ட்டா முடிக்காம போக மாட்டேன்” என்றாள்.

‘என்ன திமிர் இவளுக்கு?’ அருணின் கல்யாணத்தை நிறுத்த தான் வந்திருக்கிறாள் என்பதில் ஐயமில்லை அவனுக்கு.

“ஏய்...” என அவளருகில் மேலும் நெருங்கி அவள் கையைப் பற்றுவதற்குத் தன் கையை உயர்த்திவிட்டான். ‘என்னடா செய்து கொண்டிருக்கிறாய்?’ என அவன் மனம் அதட்ட, மூளை விழித்துக் கொண்டது.

‘எதற்கு இவனிடம் தேவையில்லாமல் பேச்சை வளர்ப்பது?’ என அதற்குள் அவளே அவனை விட்டு விலகி, “ஓகே,அப்புறம் பார்க்கலாம். எனக்கு நிறைய வேலையிருக்கு” எனத் திரும்பிவிட்டாள்.

அவளை விட்டுப் பின்னால் நகர்ந்தவன், அவளை உறுத்து விழித்தவாறே, “ஐ வில் பி வாட்சிங் யூ .. ஜாக்கிரதை” எனச் சொல்லிக் கொண்டிருக்க, “ஆதி இங்க என்ன பண்ணிட்டு இருக்க? ரொம்ப நேரமாத் தேடறேன்” என அங்கே வந்து நின்றான் அருண்.

அருணின் குரலில் பட்டென்று தலையைத் திருப்பிப் பார்த்த நேத்ரா, “அருண்!” என ஆச்சர்யத்துடன் விழி விரித்தாள். அவளை அங்கே முற்றிலும் எதிர்பார்க்காத அருணுக்கு என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி நின்றான்.

சில கணங்களில் சுதாரித்து, “ஹே... நேத்ரா நீயா? இங்க எங்க?” என அருண் இயல்பு நிலைக்குத் தாவிவிட்டான். முகத்தில் அப்பட்டமாகக் காட்டவில்லை என்றாலும் அருண் சற்று சங்கடப்படுவதை உணர்ந்து கொண்டான் ஆதிநந்தன்.

“நீங்க கல்யாணத்துக்குக் கூப்பிடலைன்னா எனக்கு வரத் தெரியாதா என்ன?” என நேத்ரா சொல்லிச் சிரிக்க, அருண் அருகிலிருந்த நண்பனைப் பார்த்து எச்சில் விழுங்கினான்.

அவன் தடுமாறுவதைக் கண்ட நேத்ரா, அவனைச் சங்கடப்படுத்திவிட்டோம் எனப் புரிந்து கொண்டாள். “சில் அருண்... சும்மா வம்புக்கு இழுத்தேன். இவ்வளவு நாளா என் அழைப்புக்கு எல்லாம் ஏன் பதில் வரலைன்னு இப்போ புரியுது. சார் ரொம்பப் பிஸியா இருந்திருப்பீங்க போல. எங்க கூட எல்லாம் பேச டைம் இருந்திருக்குமா என்ன?” என அவனைக் கலாய்த்துவிட்டு,

“உங்க கல்யாணத்துக்கு அலங்காரம் எல்லாம் நான் பண்ணப் போறேன். இந்த மாதிரி க்ரூஸ்ல (cruise – கப்பலில் உல்லாச பயணம் ) நடக்கிற கல்யாணத்துக்கு ‘வெட்டிங் கோஆர்டினேடரா’ இருக்கேன்” என்றாள்.

‘இன்னும் மூன்று நாட்கள் இவளுடன் ஒரே கப்பலில் பயணம் செய்ய வேண்டுமா?’ என நொந்து கொண்டான் ஆதிநந்தன். அத்துடன் இவளைப் பார்த்ததும் அருணும் எதுவும் மனசு மாறாமல் இருக்க வேண்டுமே?

அருணிடம் பேசி, கரைத்து, சமாதானம் செய்து அவனை அமெரிக்கா செல்ல வைக்கவே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. அவனும் கடந்த சிலமாதங்களாத் தான் ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறான். இதில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடக் கூடாதே என உற்ற நண்பனான அவனுக்குக் கவலையளித்தது.

“ஓஹ் அப்படியா?” என்ற அருணுக்கு நேத்ராவிடம் வேறு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

“எனக்கு இது மாதிரி க்ரூஸ்ல போறது ரொம்பப் பிடிக்கும் அருண். எல்லோரையும் விட்டுத் தூரமா, நிஜத்தையெல்லாம் மறந்து சுதந்திரக் காத்தை சுவாசிக்கறது” என மூச்சை இழுத்து விட்டவள்,

“ரொம்பப் பிடிக்கும். அதுவும் எனக்குப் பிடிச்ச வேலையை இங்கே செய்யறது ரொம்பவும் பிடிக்கும். இப்போ சமீபமா தான் இதுல சேர்ந்தேன். இது என்னோட ரெண்டாவது ப்ராஜக்ட்” எனப் பற்கள் தெரிய புன்னகைத்தவாறே மளமளவென்று ஒப்பித்தாள்.

அவள் பேசப் பேச, ‘ரொம்ப முக்கியம்’ என மனதுக்குள் நொடித்துக் கொண்டான் ஆதிநந்தன்.

அவளின் இளநகையில், ‘கண்டிப்பாக இவளின் இந்தச் சிரிப்பில் தான் அருண் தொபுக்கடீர்னு விழுந்திருக்க வேண்டும். சிரிக்கும் போது இன்னுமே அழகாகத் தெரிகிறாளே.’ அவளின் தேன் குரலில் இருந்து இப்பொழுது அரும்புச் சிரிப்புக்குத் தன் ஆராய்ச்சியினை மாற்றியிருந்தான் ஆதிநந்தன்.

“கங்க்ராட்ஸ் அருண்” என அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தவள், “ஆமா கல்யாணத்துக்கு முன்னாடி இப்படியா மூஞ்சில அடி வாங்கிட்டு வர்றது?” என நேத்ரா தொடர்ந்து பேச, அருண் டக்கென்று வலது கையை உயர்த்தி முகத்தில் அடிப்பட்டிருந்த இடத்தை மிருதுவாகத் தடவினான்.

பார்வை அவனையுமறியாமல் அருகிலிருந்த ஆதிநந்தனைத் தழுவியது. ஆதிநந்தனின் முகம் தொட்டாச்சிணுங்கியாய்ச் சுருங்கிப் போக, அருணை அவனால் எதிர்கொள்ளவே முடியவில்லை.

“இங்க இருக்கிற பார்லர்ல போய்க் கேளுங்க. உங்க காயம் வெளில தெரியாத மாதிரி மேக் அப் போட்டு விடுவாங்க, இல்லைனா ஃபோட்டோ, வீடியோல எல்லாம் அப்படியே தெரியும்” என ஆலோசனை வழங்கியவள், “நான் கிளம்பறேன் அருண். எனக்கு நிறைய வேலையிருக்கு” என அருணிடம் விடைப்பெற்றுக் கொண்டாள் நேத்ரா.

சற்றுதூரம் நடந்து சென்றவள் மீண்டும் திரும்பி சென்று , “ஆமா, என்கிட்ட என்னவோ சொல்லணும்னு ரொம்ப நாளைக்கு முன்னாடி வரச் சொன்னீங்களே... உங்க கல்யாணத்தைப் பத்தியா சொல்ல நினைச்சீங்க? உங்க கல்யாணத்தை நான் நடத்தணும் என நினைச்சீங்களா?” என அருணை அதிர வைத்துவிட்டு,

தன் சிந்தனையில் மூழ்கியிருந்த ஆதிநந்தனைப் பார்த்து, “வரேன் சார். நல்லா வாட்ச் பண்ணுங்க. எனக்கு டைட்டன் கம்பெனி வாட்ச் ரொம்பப் பிடிக்கும்” எனப் பரிகாசமாக உரைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

நக்கல் இழையோடியதோ?அவள் நக்கல் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஆதிநந்தன் அவள் நடவடிக்கைகளைக் கவனிக்கப் போவது உறுதி.

அவள் பேசியவாறே அங்கிருந்து நகர, அந்தப் பேச்சை அப்படியே விட முடியாமல், “நேத்ரா...” என அருணும் தயங்கித், தயங்கி அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.

அவன் ஒருத்தன் அங்கே இருப்பதைக் கூடக் கண்டுகொள்ளவில்லையா? ஒருவேளை அருண் தான் இவளை வரவழைத்தானோ என ஒரு கணம் நண்பனையே சந்தேகித்தான் ஆதிநந்தன்.

ஏனெனில் நேத்ரா நல்லவளில்லை என்று சொன்னாலும் அவளைப் பற்றிய பேச்சுக்களை அவன் முற்றிலும் விடவில்லையே. ஏதோ ஒரு விஷயம் கிடைத்தால் போதும் அது முடியும் இடம் நேத்ராவாகத் தான் அருணுக்கு இருக்கும்.

எப்படியோ சமாதானம் செய்து இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்திருந்தான். ‘எதற்கும் இப்பெண்ணின் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும். சரியான டிராமா குவீனாக இருப்பா போல. நடிச்சே ஏமாத்திடறா” என எண்ணியவாறே அங்கிருந்து நகர்ந்தான் ஆதிநந்தன்.

தொடரும்...
 

Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom