• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 2

laavans

New member
Joined
Sep 3, 2024
Messages
9
அத்தியாயம் – 2

உணவகத்தில் இருந்து அப்படித் திடீரென்று அருண் கிளம்பிச் செல்வான் என நேத்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக அவனுக்கு ஏதோ பிரச்சனை என்று ஊகித்தவள், அவன் சென்ற சிறிது நேரத்திலேயே அவன் அலைபேசிக்கு அழைத்தாள்.

அவன் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அழைப்பை வைத்துவிட்டாள். மீண்டும் அழைத்து அவனைத் தொல்லை செய்ய வேண்டாம் என்றெண்ணி அங்கிருந்து அவளும் கிளம்பிவிட்டாள்.

தன் வீட்டுக்குச் செல்லும் வழியில் அவளது அலைபேசிக்கு அழைப்பு வர, ஒளிர்ந்த எண்ணை பார்த்ததும், கோபத்தில் மூக்கு விடைத்தது.

“ஏன் என் உயிரை இப்படி வாங்கறீங்க? என்னைக் கொஞ்சம் தொல்லை செய்யாமல் இருக்கறீங்களா?” என எதிர்முனையில் இருந்தவரிடம் கோபத்தில் வெடித்தாள்.

“உன்னைத் தொடர்ந்து கண்காணிக்கலைன்னா எங்களுக்குத் தான் அது பிரச்சனையில் போய் முடியும். எங்கே போய் ஊர் சுத்திட்டு இருக்க? யார் அவன்?” என எதிர்முனையில் இருந்தவர் விசாரிக்க, “உங்களுக்குத் தேவையில்லாத விசயம் அது” என்றாள்.

“எது தேவையில்லாத விசயம், எது தேவையிருக்கிற விசயம்னு சீக்கிரம் உனக்குப் புரிய வைக்கிறேன். சீக்கிரம் வீட்டுக்குப் போற வழியைப் பாரு” என மேலும் சில அறிவுரைகளைப் பொழிந்துவிட்டு தொடர்பு அறுபட்டது.

துக்கம் தொண்டையை அடைத்தது. பீறிட்டு அழ வேண்டும் போலிருந்தது நேத்ராவுக்கு. ஆனாலும் அவளால் அழ முடியாது. அழகக் கூடாது. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் தன் காரை இயக்கிச் சாலையில் கலந்தாள்.

‘யாருமில்லாத தீவொன்று வேண்டும்.. அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்’ என்ற பாடல் வரிகள் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தன. யாருமில்லாத தீவு இருந்தாலே போதும். அதில் யாருமே அவளுக்குத் தேவையில்லை.

அவள் ஒன்றும் தனிமை விரும்பியல்ல. இருந்தும் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு தனிமையைத் தேடி ஓட வேண்டும் போலிருந்தது. வீட்டுக்குச் சென்று கதவைத் திறக்க முற்பட, அவள் எதிர்வீட்டில் குடியிருக்கும் விவேக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்து, “ஹாய் நேத்ரா” என்றான்.

திடுமென ஒலித்த குரலில் திடுக்கிட்டாள். அவள் வருவதற்காகவே காத்திருந்தானோ? புதிதாகக் குடி வந்திருக்கிறான் என்று ஆரம்பத்தில் அவனுடன் சிரித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாள். அவனோ அவளிடம் நெருக்கம் காட்ட விழைவதாகப் பட்டது.

இவனிடம் ஒதுங்கி இருக்க வேண்டும் என எண்ணியவளாக, “ஹாய் விவேக்... வெளில கிளம்பறீங்க போல. பை... எனக்கும் வேலையிருக்கு” என அவசரமாகப் பேசிவிட்டு அவன் பேசுவதற்கு இடம் தராமல் வீட்டுக்குள் புகுந்து கொண்டாள். அதுவுமில்லாமல் அவள் இருந்த மனநிலையில் யாருடனும் அவளுக்குப் பேசப் பிடிக்கவில்லை.

வீட்டினுள் நுழைந்தவளுக்கு வயிறு பசித்தது. பிரிட்ஜிலிருந்த உணவைச் சூடுபடுத்திச் சாப்பிட்டவள், உறங்கத் தயாரானாள். மீண்டும் அருணை அழைத்துப் பார்க்கலாம் என்று அவனை அழைத்தாள். இம்முறை அழைப்பு எடுக்கப்பட்டது. அதில் வந்த தகவல் கேட்டு சிலையென அமர்ந்துவிட்டாள்.

‘ஒருவேளை இந்த விபத்து அவரின் வேலையாக இருக்குமோ?’ மனம் படபடக்கத் திகைத்துப் போனாள். ‘கடவுளே அப்படியிருக்கக் கூடாது. இருக்காது’ எனத் தனக்கே தைரியம் சொல்லிக் கொண்டவள், அவசரமாக அலைபேசியில் யாரையோ அழைத்தாள்.

எதிர்முனை எடுக்கப்பட, “ரொம்பவெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அருண் தொழில்முறையில பழக்கம்” எனத் தானாகவே முன்வந்து விவரங்களைக் கூறினாள் நேத்ரா.

“அதானே உனக்கு எங்க அந்தத் தைரியமெல்லாம் இருக்கப் போகுது” என இயல்பாகப் பேசிவிட்டு எதிர்முனையில் இருந்தவர் அழைப்பை வைத்துவிட்டார்.

‘அப்படியென்றால் அருணுக்கு நடந்தது உண்மையில் விபத்து தானோ ? கடவுளே அருண் சீக்கிரம் குணமடைய வேண்டும்’ என வேண்டியவாறே அன்றிரவை அரைகுறை உறக்கத்தில் கழித்தாள்.

*****

ஒரு வாரம் கழிந்திருந்தது. அறுவைசிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றுவிட்டான் அருண். நண்பனுக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கி அவன் வீட்டில் பத்திரமாகச் சேர்த்துவிட்டு நிம்மதியாகத் தான் முடிக்காமல் விட்டிருந்த வேலையைக் கவனிக்கச் சென்றான் ஆதிநந்தன்.

உண்மையில் காதலித்தவனுக்கு உள்ளுக்குள் வலி இருக்கத் தானே செய்யும். கண்டிப்பாகக் காலம் அருணுக்கு மருந்தாக அமையும் என நம்பினான் ஆதிநந்தன்.

அருணின் உடல்நிலை தேறி வருவது ஒரு பக்கம் அவனுக்குத் திருப்தி அளித்தாலும் மற்றொரு பக்கம் ஆதிநந்தனின் மனதில் முணுமுணுவென்று எரிச்சல் ஓடிக் கொண்டிருந்தது. காரணம் நேத்ரா. பின்னே அருணுக்கு அடிப்பட்டிருக்கிறது என்று தெரிந்த பின்னரும் அவனை வந்து அவள் நலம் விசாரிக்கவேயில்லை.

அருணின் நண்பர்கள், அவன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், உற்றார் உறவினர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என அனைவரும் வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.

காதல் என்றெல்லாம் வேண்டாம். அறிந்தவன், தெரிந்தவன் என்ற மனிதாபிமான அடிப்படை கூடவா அவளிடம் இல்லை? அவள் வரவேயில்லை. வந்திருந்தால் அருணின் புண்பட்ட மனம் பண்பட்டு இருக்குமோ என்னவோ?

அருண் தன் தங்கையின் திருமணத்தில் தான் நேத்ராவை முதல் முதலாகப் பார்த்திருக்கிறான். இப்போதெல்லாம் திருமணத்தை நடத்தவென்று ‘ஈவண்ட் மேனேஜர்’கள் இருக்கிறார்கள். அவர்களே அனைத்தையும் ஒருங்கிணைத்து நடத்திவிடுவார்கள்.

அப்படித் தான் அந்தத் திருமணத்துக்கு நேத்ரா வேலை செய்ய வந்திருக்கிறாள். கலகலவென்ற குணமோ, அழகோ, பேச்சோ ஏதோ ஒன்று அருணை ஈர்த்திருக்கிறது. அதன்பிறகு அவளிடம் நட்புக்கரம் நீட்டிப் பழகியிருக்கிறான் அருண்.

நாளடைவில் அது காதலாக உருமாறி இப்போது கழுத்தைச் சுற்றும் பாம்பாக அவனைக் கொல்ல முயன்றிருக்கிறது. அது எப்படி ஒருவரைப் பார்த்தவுடன் அவர்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து விடுமா என்ன? இப்படித் தலைகுப்புற விழுந்திருக்கிறான்.

அவள் எப்படியோ போகட்டும். இந்த மட்டில் அருண் தப்பித்தான் என எண்ணியவாறே அந்த உணவு விடுதியின் வளாகத்தினுள் காரைத் திருப்பினான் ஆதிநந்தன்.

இதற்குமேல் தாமதித்தால் அவன் தந்தை அவனை உண்டு, இல்லை என்று ஆக்கிவிடுவார். ஆகவே சென்ற வாரம் தான் சந்தித்துப் பேசச் சென்ற பெண்ணைப் பார்த்துப் பேசுவதற்கு அந்த உணவகத்தின் வாயிலில் காரை நிறுத்தியிருந்தான்.

மனதுக்குள் ஒருவித பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது. என்ன இருந்தாலும் வருங்காலத் துணை என்று கருதி ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசப் போகிறோம் என்றால் யாருக்கும் இந்தப் பரவசம் இல்லாமல் போகுமா என்ன?

சுற்றியிருந்த சூழலும் ரம்மியமானதாகவே இருந்தது. விசிலடித்தவாறே காரிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் கண்களில் அக்காட்சி பட்டது. எதிர்புறத்தில் மஞ்சள் வண்ணத்தில் சுடிதார் அணிந்து, பிங்க் வண்ணத் துப்பட்டாவைப் போட்டிருந்தாள் அப்பெண்.

அவள்! நேத்ரா! கடந்த வாரத்தில் எத்தனை முறை இவளின் புகைபடத்தை அலைபேசியில் அருண் காட்டினானோ என்றே கணக்கில்லை. அதனாலேயே ஆதிநந்தனுக்கும் அவள் முகம் நன்றாக மனதில் பதிந்து போயிருந்தது.

நேத்ராவுடன் வேறொரு பெண் இவனுக்கு முதுகு காட்டி மிகவும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தாள். இருவருக்குமிடையில் இருந்த இடைவெளி அவன் புருவங்களை உயரச் செய்தது.

‘அப்படி என்ன செய்கிறாள்?’ என இவன் உற்றுப் பார்க்கையிலேயே நேத்ராவின் எதிரில் இருந்த பெண் அப்படியே கீழே சரிந்து விழ ஆரம்பித்திருந்தாள். நேத்ராவின் கையில் சரிந்து விழுந்த பெண்ணின் துப்பட்டா அகப்பட்டிருந்தது.

பார்க்கையில் நேத்ரா அப்பெண்ணின் கழுத்தை அவளின் துப்பட்டாவாலேயே நெறிப்பதைப் போலிருக்க, “ஏய்” எனக் கூவியவாறே அவர்களை நோக்கி ஓடினான் ஆதிநந்தன். அதே சமயத்தில் கீழே குனிந்து அப்பெண்ணை நோக்கினாள் நேத்ரா. அவள் பேச்சு மூச்சில்லாமல் அசைவற்று கிடந்தாள். அவள் கன்னத்தைத் தட்டிப் பார்த்தாள்.

இதயத் துடிப்புக் கேட்கிறதா எனக் காதை வைத்துக் கேட்டுப் பார்த்தாள். சுற்றும் முற்றும் பார்க்க, அவள் கண்களில் அப்போது யாரும் படவில்லை. ஆதிநந்தன் அடுத்த வரிசையில் வாகனங்களுக்குப் பின்னால் இருந்ததால் அவனும் தெரியவில்லை.

தன் கைப்பையில் இருந்த அலைபேசியை நேத்ரா அவசரமாக எடுப்பதற்குள் அதுவே இசைத்தது.

எடுத்துக் காதுக்கருகில் வைக்க, “அவளை அப்படியே விட்டுட்டுப் போயிடு... நான் பார்த்துக்கிறேன்” என எதிர்முனையில் சொல்ல, “முடியாது...” என நேத்ரா கத்திவிட்டு அழைப்பை வைக்க முயன்றாள்.

“இங்க பாரு, உனக்கு ஒருதரம் சொன்னா புரியாதா? எங்களை நடுரோட்டுக்கு இழுத்துட்டு வந்து அவமானப்படுத்தணுமா உனக்கு? எங்களை நிம்மதியா இருக்க விட மாட்டியா? தனியா இருந்துட்டு உன்னால என்ன பண்ண முடியும்?” என எகத்தாளத்துடன் கேள்விகள் தொடர்ந்து வந்து அவளைத் தாக்க,

“அடுத்த நிமிஷம் உங்க ஆளுங்க இங்க இருக்கணும். அப்போ தான் இங்கிருந்து கிளம்புவேன்” என வேகமாகப் பதில் உரைத்தாள் நேத்ரா. இவருடன் தர்க்கம் செய்து நேரத்தைக் கடத்த அவள் விரும்பவில்லை.

“சரி” என்றதும் அவள் கேட்டதைப் போலவே அடுத்த நிமிடம் சர்ரென்று வேறொரு கார் அவர்களுக்கருகில் வந்து நிற்க, அதிலிருந்து இரண்டு பேர் இறங்கினர். கீழே இருந்த பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு விருட்டென்று எழுந்த நேத்ரா தன் காரை நோக்கிச் சென்றாள்.

தன் காருக்கு அருகில் நின்று நடப்பதை ஆராய்ச்சிப் பார்வையுடன் பார்த்தாள். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கீழே விழுந்து கிடந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு அக்கார் மறைந்துவிட்டது.

அவளும் உடனே தன் காருக்குள் ஏறி காரை பின்னால் எடுக்க, யாரோ, ‘ஏய்’ எனச் சொல்வது இறக்கி விடப்பட்டிருந்த கார் கண்ணாடி வழியே கேட்டது. யாரென்று பார்ப்பதா வேண்டாமா என அவள் மனதில் பட்டிமன்றம் நடத்தி, தேவையில்லாமல் எந்தச் சிக்கலையும் வரவழைத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் விருட்டென்று கிளம்பிவிட்டாள்.

கிளம்பினாளே ஒழிய அவளுக்குப் போகும் பாதை மங்கலாகத் தெரிந்தது. கண்களில் குளம் கட்ட ஆரம்பித்தது. ‘வேண்டாம்... வேண்டாம்.. அழாதே. அது உனக்குத் தான் பாதிப்பு’ என இழுத்துப் பெருமூச்சொன்றை வெளியிட்டுத் தன்னை உடனே மீட்டுக் கொண்டாள் நேத்ரா.

தன்னால் யாரும் சிரமப்படக் கூடாது என முயன்று கண்களைத் துடைத்துக் கொண்டு கவனத்துடன் சாலையில் கலந்தாள்.

வேலை காரணமாக ஒரு வாரமாக அவள் வெளியூருக்குச் சென்றுவிட்டு அன்று காலையில் தான் ஊர் திரும்பியிருந்தாள் நேத்ரா. வந்ததும் அருணின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தாள். அழைப்பு போகவேயில்லை.

அவனை அனுமதித்திருந்த மருத்துவனைக்குச் சென்று பார்க்க, அவன் உடல்தேறி அன்று காலையில் வீட்டுக்குப் போய்விட்டதாகத் தகவல் சொன்னார்கள். அவனது அலைபேசிக்கு என்னவாகிவிட்டது என்ற யோசனையோடு சாப்பிடுவதற்கு அங்கே வந்திருந்தாள். இப்போது அதுவும் முடியவில்லை.

தன்னால் எதையும் தனித்துச் செய்ய இயலாதா? எந்நேரமும் ஏதோ ஒரு கண்காணிப்பில் இருந்தே தீர வேண்டுமா? அவளுக்கு உடலும் உள்ளமும் சோர்ந்து போனது. வயிறு வேறு பசித்தது. மெள்ளக் கோபம் சுரந்தது. எனினும் அக்கோபத்தால் என்ன பயன் என மனம் தெளிவடையவும் நிதானமாகக் காரைச் செலுத்த ஆரம்பித்தாள்.

அப்படி முகத்தில் அறைந்தாற்போல் நேத்ரா காரைக் கிளப்பிக் கொண்டு சென்றதில் ஆதிநந்தனுக்கு மிதமிஞ்சிய ஆத்திரம் வந்தது. என்னவொரு திமிர். என்னவொரு தெனாவெட்டு? அவனையுமறியாமல் இரத்தம் மொத்தம் கொதிக்க ஆரம்பித்தது.

காரைத் துரத்திக் கொண்டு வெளி கேட் வரையில் ஓடிச் சென்றான். ஆனால் அவள் கார் எந்தத் திசையில் சென்றது என்று அவனுக்குச் சரிவரத் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே சாலையில் காவலர் ஒருவர் பணியில் இருப்பது அவன் கண்களுக்குப் பட்டது.

விரைந்து அவரிடம் சென்றவன் விஷயத்தைச் சொல்ல, ‘நீ என்ன படம் பார்த்துவிட்டு வந்து உளறுகிறாயா?’ என்பதைப் போல அவனைப் பார்த்தார்.

அவன் தன் அடையாள அட்டையை அவரிடம் காட்டி, ஒரு பெண்ணைக் கடத்திவிட்டார்கள் எனப் புகாரளித்தான். அப்போது அருகில் ரோந்து பணியிலிருந்த மற்றொரு காவலரும் அங்கே வர, அப்பெண்ணை நேத்ரா ஏதோ செய்துவிட்டாள் என மேலும் குற்றப்பத்திரிக்கை வாசித்தான். .

காவலர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சொல்பவன் அரசுப் பணியில் இருப்பவன். அவன் எதற்குப் பொய் சொல்லப் போகிறான் என எண்ணி மேலும் விவரங்களைத் திரட்டிக் கொண்டனர்.

சற்றுமுன்னர் அங்கே வந்து நின்ற காரின் எண்ணையும், நேத்ரா ஏறிச் சென்ற வண்டியின் எண்ணையும் அவர்களிடம் தந்தான் ஆதிநந்தன். உடனே அருணுக்கு அழைத்து நேத்ராவின் புகைப்படத்தைக் கேட்க, “எதுக்கு? நீ தானே எல்லாத்தையும் டெலீட் பண்ண சொன்ன. பண்ணிட்டேன். நம்பரையும் பிளாக் பண்ணிட்டேன்” என்றான் அருண்.

“ஒண்ணுமில்லை... அப்புறம் சொல்லறேன்” என அவனிடம் மழுப்பலாகப் பதில் தந்தவன், காவலர்களிடம் திரும்பினான்.

“நாங்க போய் விசாரிக்கறோம் சார். கார் நம்பரை கண்ட்ரோல் ரூமுக்குக் கொடுத்திட்டோம். விசாரிச்சு சொல்லறோம்” என அவன் கைப்பேசி எண் மற்றும் மற்ற விவரங்களைப் பெற்றுக் கொண்டனர்.

காவலரின் எண்ணை வாங்கிக் கொண்ட ஆதிநந்தன், “வரேன் சார்” எனக் காவலர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டான். அவர்கள் நகரவும் அவன் அலைபேசிக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது. அதிலிருந்த எண்ணைப் பார்க்கவும், “ஓஹ் காட்” எனத் தான் பார்க்க வந்த வேலை ஞாபகத்துக்கு வந்தது.

கைப்பேசியை எடுத்து, “சாரி ஸ்வப்னா... இங்க பார்க்கிங் லாட்ல நிக்கிறேன்.. ஒரு பிரச்சனை...” என அவன் முடிக்கவில்லை,

“நீங்க உங்க பிரச்சனையைப் பார்த்துட்டே இருங்க. நான் கிளம்பறேன். ஒவ்வொரு தடவையும் இப்படிக் காக்க வச்சுட்டு நீங்க பொதுச் சேவை செய்யக் கிளம்பிட்டா ஏமாந்து போறது நான் தான். பெரிய ஸ்பைடர் மேன் வந்துட்டார்.., பை” எனப் படபடவென்று பொரிந்துவிட்டு வைத்துவிட்டாள் ஸ்வப்னா.

அவளின் கோபம் நியாயமானது என அவனுக்குப் புரிந்தது. ஒருதரம் இப்படி நடந்தால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் இப்படி நடந்தால் அவளுக்கு ஏமாற்றமாக இருக்காதா?

நேரில் பேசிப் புரிய வைத்துவிடலாம் என அங்கிருந்த உணவகத்தை நோக்கி ஓடினான் ஆதிநந்தன். ஓடியவனை உணவகத்தின் வாசலிலே எதிர்கொண்டாள் ஸ்வப்னா. அவளிடம் சென்றவன், “சாரி ஸ்வப்னா... வேணும்னு இப்படிப் பண்ணலை” என அவன் மன்னிப்பை வேண்ட,

அவனை மேலிருந்து கீழ் வரையில் ஆராய்ந்து பார்த்தவள் ஒரு நொடி தடுமாறி நின்றாள். பின்னர், “இல்ல ஆதி... நமக்கு ஒத்து வராது. எனக்கு என்னை மட்டுமே நினைக்கிற துணை வேணும். இப்போவே இப்படின்னா....” என நிறுத்தியவள்,

“அப்பா சொன்னார் என வந்தேன். நீங்களே உங்க வீட்டில பேசி இது ஒத்துவராதுன்னு சொல்லிடுங்க” எனத் தொடர்ந்து பேசிவிட்டு அதற்குமேல் தாமதிக்காமல் கிளம்பிவிட்டாள்.

அவள் புகைப்படத்தை வீட்டில் தந்தபோது பார்த்துவிட்டு அவனுக்குப் பிடித்துப் போக, அவளிடம் பேச வேண்டும் என்று சொன்னான். அதற்கு வீட்டினர் ஏற்பாடு செய்ய, முதல்முறை அவனால் சந்திக்கப் போக முடியவில்லை.

இரண்டாம் முறையும் இப்படி அவனுக்குத் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. இரண்டு முறையும் அந்த நேத்ராவால் தான் அவனால் பேச முடியாமல் போய்விட்டது.

மனதுக்குப் பிடித்த பெண்ணுடன் பேசித் திருமணம் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருந்தவனின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டாளே என நேத்ராவின் மேலிருந்த கோபம் அவனுக்குப் பன்மடங்காகப் பெருகியது.

எனினும் தான் சொல்ல வருவதைக் கூட செவிச் சாய்க்காமல், தன்னை வேண்டவே வேண்டாம் என்று நிராகரிக்கும் ஸ்வப்னாவைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் அவனுக்குத் தோன்றவில்லை. அங்கேயே அப்படியே சற்றுநேரம் செய்வதறியாது நின்றுவிட்டான்.

சிறிது நேரத்திலேயே அவன் தந்தை, தாமோதரனிடமிருந்து அழைப்பு வந்தது. ‘உஸ்..’ எனப் பெருமூச்சு எடுத்து வெளியில் விட்டவன், அதற்குள் விஷயம் அவருக்குப் போய்விட்டது எனப் புரிந்து போனது. அவரிடம் என்னவென்று விளக்குவது?

அவன் அழைப்பை எடுக்கவுமே தாமோதரன் மகனைப் பேச விடவில்லை. “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க ஆதி? நம்ம குடும்பத்தைப் பார்த்துச் சம்மந்தம் பேச வந்தாங்க. எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? பெரிய பதவியில இருக்கீங்கன்னு உங்க திமிரைக் காட்டறீங்களான்னு கேட்கிறாங்க. என்ன பதில் சொல்லட்டும்?” எனப் பொரிந்தார்.

“அப்பா...” எனத் தன்னைச் சேகரித்துக் கொண்டவன், “வேணும்னு எதுவும் பண்ணலைப்பா. விடுங்கப்பா... பிளீஸ்... என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியுமில்ல. நம்ம நிலைமையைப் புரிஞ்சுக்காம வாய்க்கு வந்தபடி பேசறவங்ககிட்ட இதுக்கு மேலே போய் விளக்கத் தேவையில்லை என எனக்குத் தோணுது. வேற பொண்ணைப் பாருங்க” என இயல்பாக முடித்துவிட்டான் ஆதிநந்தன். அதன்பிறகு தாமோதரனால் என்ன செய்ய முடியும்?

கதைகளிலும் சினிமாவிலும் வருவதைப் போல் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து போய் எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று வசனமா பேச முடியும்? ஆரம்பமே ஆட்டம் கண்டால் எப்படித் தொடர்ந்து கோட்டையை எழுப்புவது? இது தான் அவன் இயல்பு.

எல்லாமே இயல்புபடி நடந்துவிடுமா என்ன? அவன் இயல்பையும் மாற்றும் காலம் கூடிய விரைவில் வரும். அதுவும் ஒரு பெண்ணால்.

அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணிடம் தொல்லை செய்து, ‘நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது’ எனத் தொடர்ந்து சென்று வசனம் பேசுவான் என்று அவனிடம் இப்போது யாராவது சொல்லியிருந்தால் கையில் அகப்பட்டதை எடுத்து அடித்திருப்பான்.

மறுமுனையில் இருந்த அவன் தந்தை ஏதோ முணுமுணுத்தவாறே அழைப்பை வைத்துவிட்டார்.

அவனுக்கு வந்த ஆத்திரத்துக்கு அந்த நேத்ரா கையில் கிடைத்திருந்தால் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விட்டிருப்பான். வன்முறை அவனுக்கு ஆகவே ஆகாது. ஆனால் இவள் செய்த காரியத்துக்கு இவளை அடித்தால் மட்டும் போதாது.

அவன் விஷயம் போகட்டும். ஆனால் ஓர் இளம் பெண்ணை இப்படிப் பட்டப் பகலில் கடத்திக் கொண்டு போவது என்றால்? என்ன ஒரு தெனாவெட்டு அவளுக்கு? பணம் இருக்கிறது என்ற திமிர். இவளை விட்டுவிடக் கூடாது எனக் கறுவியவாறே அங்கிருந்து கிளம்பினான்.

கீழே மயங்கிச் சரிந்த அந்த முகமறியாப் பெண்ணுக்கு என்னவாகி இருக்கும் என்று மனதின் மூலையில் அவனுக்கு அரித்துக் கொண்டிருந்தது. அப்பெண்ணை எங்கே கொண்டு சென்றிருப்பார்கள் என ஆதிநந்தனின் மனம் ஓயாது வேலை செய்து கொண்டிருக்க, அருணைப் பார்த்துவிட்டு வரலாம் என மீண்டும் அவன் வீட்டுக்குக் கிளம்பினான்.

அங்கே அவன் வீட்டில் வேறொரு போராட்டம் வெடித்துக் கொண்டிருந்தது.

தொடரும்...
 

Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom