• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 13

laavans

New member
Joined
Sep 3, 2024
Messages
17
அத்தியாயம் – 13

இரண்டு நாட்கள் கழிந்திருக்க, அருணின் வீட்டுக்குச் சென்றிருந்தான் ஆதிநந்தன். அருணின் இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆதிநந்தன் அங்கே நேத்ராவைப் பார்க்க நேரிட்டாலும் அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவளும் இவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவ்வளவு ஏன் அவன் ஒருவன் அங்கே இருக்கிறான் என்ற எண்ணம் துளியும் அவளுக்கு இருக்கவில்லை.

கடந்த வாரம் நடந்த நிகழ்வுகள் கண் முன்னே தோன்றி தோன்றி மறைந்தன நேத்ராவுக்கு. அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. எத்தனை கனவுகளுடன் அருண் அந்தக் கப்பலில் கால் பதித்திருப்பான்?

யாரோ ஒருவர் செய்த தவறால் அனைத்துமே தலைகீழாக மாறிப் போய்விட்டது. காரணம் காதல்? காதலிப்பதை வெளியில் சொல்வதற்குத் தைரியமில்லாதவர்கள் எதற்குக் காதலிக்க வேண்டும்? இதில் சம்மந்தமே இல்லாதவர்களையும் நடுவில் இழுத்துவிட்டு அவர்கள் வாழ்க்கையையும் நரகமாக்கிவிடுகிறார்கள்.

அதன்பின்னர் அனைவரும் அவரரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் அருணின் பெற்றோர்களின் நிலை? புத்திர சோகம் என்பது யாருக்கும் சாபமே. இனி அவர்கள் வாழும் வரையில் அவர்களைத் துரத்தும்.

கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்த அருணின் அன்னையை இமைக்காமல் நோக்கினாள் நேத்ரா. மெள்ள நகர்ந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டாள். அவளின் வலது கை நீண்டு அருணின் அன்னையின் வலது கரத்தினை ஆதரவாகப் பற்றிக் கொண்டது. அவளால் அதை மட்டுமே வழங்க முடியும். அங்கே உட்கார்ந்தவள் அதன்பிறகு எங்கும் நகரவில்லை.

நேத்ராவின் அசைவுகளைச் சில வினாடிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதிநந்தன் சூழ்நிலையும், இடமும் சரியாக இல்லாததால் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அதன்பிறகு அவனும் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவனுக்கு வேறொன்றும் உள்ளுக்குள் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது. சுனிலும் ஆராதனாவும் அருணுக்குத் தீங்கு இழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை. அருணின் பெயர் கெட வேண்டும், அதனால் அத்திருமணம் நிற்க வேண்டும் என்றே திட்டமிட்டனர்.

அப்படி நடந்தேறிவிட்டால் ஆராதனாவின் தந்தையிடம் அழுது புரண்டு அவள் அவகாசம் வாங்கிவிடலாம் என்றும் அதற்குள் அவரையும் சமாதானப்படுத்திச் சுனிலைச் சந்திக்க ஏற்பாடு செய்துவிடலாம் என்றும் எண்ணினர்.

இறுதியில் அது தீங்காக மாறி அருணின் உயிரைப் பறித்துவிட்டது. எவ்வளவு பெரிய கொடிய செயல் அது? விளையாட்டு வினையாகிப் போனது.

அது போலவே நேத்ராவின் மேலுள்ள கட்டுக்கடங்கா கோபத்தில் அவள் விக்கிக் கொண்டிருக்கையில் அவள் முன்னே இருந்த தண்ணீரை அபகரித்ததுமில்லாமல் அதை அவள் கண் முன்னேயே கீழே கொட்டி வீணடித்தானே?

எத்தனை திமிர்? எவ்வளவு ஆணவம்? அப்படி என்ன கோபம் அவனுக்கு? அப்படியே அவள் தவறு செய்திருந்தாலும் முதலில் அவன் யார் அவளுக்குத் தண்டனையளிக்க? அன்று மட்டும் அவளுக்கு ஒன்று கிடக்க ஒன்று ஆகியிருந்தால்? நினைக்கவே உள்ளம் பதறியது.

அவள் இல்லாமல் போயிருப்பாள். உடல் அதிர்ந்தது. மூச்சுத் திணறியது. அவன் கொலைகாரன் ஆகியிருப்பானே. அதன்பிறகு அவனால் உயிருடன் வாழ்ந்திருக்க முடியுமா என்ன? அவன் குடும்பம் அவனால் தலைகுனிந்து போயிருக்கும்.

அவளும் தான் அன்று எவ்வளவு துடித்திருப்பாள்? ‘தனக்கு மன்னிப்பே கிடையாது’ என்று எண்ணிய அடுத்த நொடி, அவன் மனசாட்சி விழித்தெழுந்து, ‘நீ தானே அந்தப் பணியாளரிடம் அங்கே ஒருத்தங்க விக்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் ஜூஸ், இல்லை, தண்ணி எடுத்துட்டுப் போங்க எனச் சொன்னாய்?’ என அவனுக்கு ஞாபகப்படுத்தியது.

என்ன இருந்தாலும் அவன் செய்தது மிகப் பெரிய தவறு. அவளை உடனே பார்க்கவேண்டும் என்று மனம் கட்டளையிட, மீண்டும் பார்வையை உயர்த்தி அவளை நோக்கினான். அருணின் அன்னையின் கையை இன்னுமே பற்றியிருந்தாள். அப்படியே தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் நேத்ரா.

அவன் அதரங்கள் தன்னையுமறியாமல், “சாரி” என மெள்ள உச்சரித்தது. நடந்ததை அவனால் மாற்றி எழுத முடியாது. இனிமேல் அவளிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் நடந்தவைகளுக்கு அவளிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் எனத் தீர்மானமும் செய்து கொண்டான்.

வெளிவாயிலில் சலசலப்புக் கேட்க அனைவரின் பார்வையும் அங்கே திரும்பியது. “இன்னும் யாரைக் கொல்ல வந்திருக்கீங்க?” என அருணின் தந்தை யாரிடமோ கத்திக் கூச்சலிட்டு, அந்த நபரை உள்ளே விட மாட்டேன் என மல்லு கட்டிக் கொண்டிருந்தார்.

அந்தச் சலசலப்பில் ஆதிநந்தன் ஓடிச் சென்று யாரென்று பார்க்க, அருணின் இறுதி காரியத்துக்கு ஆராதனாவின் தந்தை, தேவராஜன் வந்திருந்தார். அவரைத் தான் உள்ளே விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வழியை மறித்துக் கொண்டிருந்தார் அருணின் தந்தை.

அவரை எப்படியோ சாமாதானப்படுத்தி தேவராஜனை உள்ளே அழைத்து வந்தான் ஆதிநந்தன். சென்ற வாரம் பார்த்த மனிதர் இவர் தானா எனச் சந்தேகிக்கும் வகையில் இருந்தது அவரது தோற்றம்.

மகள் செய்த தவறுக்கு அவர் வருந்தியது மட்டுமல்லாமல் தன்னையே வருத்தியும் கொண்டிருக்கிறார் என அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அவரால் மகள் செய்த செயலை இன்னுமே நம்ப முடியலை. மகள் ஆரம்பத்தில் இந்தத் திருமணத்தை மறுத்தாள் தான். இல்லையென்று சொல்லவில்லை. அவளிடம் பேசி, அருண் நல்லவன் என்றும் தனக்குப் பிறகு அவளையும் தொழிலையும் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்றும் எடுத்துச் சொல்லியே திருமணம் வரையில் வந்திருந்தார்.

அவள் காதலிப்பதாகச் சொன்ன பையன், சுனில் பெரிய இடம் என்றாலும் அவர் விசாரித்த வரையில் ஒருவர் கூட அவனைப் பற்றி நல்லதாக எதையும் சொல்லவில்லை.

‘அவனா சார்? வீட்டுக்கு அடங்காதவன்... சொன்ன பேச்சுக் கேட்காதவன்... இவனால் தொழில்ல நஷ்டம்... வீட்டு ஆளுங்களே அவனைத் தொழில்ல இருந்து ஒதுக்கிட்டாங்க... ஊதாரி’ என எதிர்மறையான பேச்சுகளே அவர் காதுகளை வந்தடைந்தன.

அதனால் சுனிலைப் பார்க்காமலேயே ஆராதனாவின் காதலை நிராகரித்துவிட்டார் தேவராஜன்.

ஒருவேளை ஆராதனா இன்னும் சற்றுப் பிடிவாதமாக இருந்திருந்தால் சுனிலை அழைத்துப் பேசியிருப்பாரோ என்னவோ. ஆனால் அவளும் எந்தப் பிடிவாதமும் பிடிக்காமல் தந்தை சொல்வதற்குத் தலையாட்டிக் கொண்டாள்.

மகள் மனதில் இப்படி ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு நாடகமாடி இருக்கிறாள் எனக் கூசிக் குறுகிப் போனார். எங்கோ தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என மனதளவில் ஒடிந்து போய்விட்டார். தாயில்லாத பெண் என்று அவளுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்தாரே. அனைத்தும் மண்ணோடு மண்ணாக அல்லவா போய்விட்டது.

நடையில் தள்ளாட்டத்துடன் அருணின் அன்னையை நெருங்கியவர், “என்னை மன்னிச்சிடும்மா தங்கச்சி. ஆராதனா இப்படிச் செய்வான்னு சத்தியமா நினைக்கலை. அம்மா இல்லாத பொண்ணுன்னு நிறையச் செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன் போல. என்ன சொல்லி என்ன? உங்க மகன் என்ன திரும்பி வரப் போறாரா?” என அவர் அழுகையில் குலுங்க, அருணின் அன்னையும் ஓவென்று கதறினார்.

தேவராஜனின் வேதனையைப் பார்த்துக் கொண்டிருந்த நேத்ராவுக்குத் தொண்டையில் வினோத வலி ஒன்று உருவானது. ‘தன் தந்தைக்கு மட்டும் ஏன் தன் மேலே பற்றில்லாமல் போய்விட்டது?’ நினைத்த அடுத்த நொடியே,

‘இங்கே மட்டும் என்னவாம்? தந்தையின் பாசத்தை அர்த்தமில்லாமல் செய்துவிட்டாளே ஆராதனா’ என நொந்து கொண்டாள் நேத்ரா. இதற்குமேல் அங்கேயே இருந்தால் தான் அழுதுவிடுவோமோ என்று பயந்தாள். அதனால் தடாலென்று எழுந்துவிட்டாள்.

“என்னோட வளர்ப்பில் தான் குறையிருக்கு. என் மேலே தான் தப்பிருக்கு...” என்ற ஆராதனாவின் தந்தை, அப்படியே தடாலென்று சரியலானார்.

அப்பொழுது தான் எழுந்து நின்றிருந்த நேத்ரா அவர் சரியவும் அவரைத் தாங்கிப் பிடிக்க முயன்று தோற்றாள். திடீரென்று விழுந்தது ஒன்று. அவரது உடல் எடை வேறு. அவளால் அவரைத் தாங்கிப் பிடிக்க முடியாமல் போக, அவரின் சட்டை மட்டுமே அவள் கைகளில் அகப்பட்டது.

ஆதிநந்தனின் பார்வை தேவராஜனின் மேலேயே இருந்ததால் நடந்தது அனைத்தும் அவன் பார்வையிலும் பட்டது. தூரத்தில் இருந்து பார்க்கையில் ஆராதனாவின் தந்தையை நேத்ரா வலுக்கட்டாயமாக அவளை நோக்கி இழுப்பதைப் போலிருந்தது.

ஆதிநந்தன் அருகில் செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் நேத்ராவின் உதவிக்கு வர, தேவராஜனைத் தாங்கிப் பிடித்திருந்தனர்.

ஆதிநந்தனுக்கு வேறொன்றும் உறுத்தியது. அன்றும் அந்த கார் நிறுத்தத்தில் இது போல் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போய் ஏதோ நடந்திருக்க வேண்டும். அன்று தன் பார்வையில் கீறலை வைத்துக் கொண்டு நேத்ராவைத் தவறாக எண்ணிக் குற்றம் சாட்டிவிட்டோமே என அவனுக்குத் தன் தவறு புரிந்தது.

அதற்குள் அங்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் தேவராஜனுக்கு முதலுதவி புரிந்தவாறே, “அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. சீக்கிரம் காரை எடுங்க” என்றார். அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவர் சென்றதும் அடுத்து நடக்க வேண்டிய அருணின் இறுதி சடங்குகளும் முடிவடைந்தன. அருணின் தங்கை சிந்து தாய்மையடைந்திருந்ததால் அவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டாம் என்ற மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் அவள் அருணின் திருமணத்துக்குக் கூட வந்திருக்கவில்லை.

ஆனால் இந்தச் சமயத்திலும் அவளால் பெற்றோர்களின் அருகில் இருக்க முடியவில்லை என்றதும் அவளால் துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இப்போது அவனைக் கடைசியாகப் பார்க்க முடியவில்லை என்று ஒரு பாட்டம் வீடியோ சாட்டில் அழுது தீர்த்தாள். ஆதிநந்தன் அவளைச் சமாதானம் செய்து, அவள் பெற்றோர்களைக் கூடிய விரைவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக வாக்களித்து அழைப்பை வைத்தான்.

அடுத்து வந்த மூன்று நாட்களும் அவன் அருணின் வீட்டிலேயே தங்கி அவர்களுக்கு ஆதரவாக இருந்தான். அதன்பிறகு ஆதிநந்தனுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. முதலில் அருணின் தொழிலை ஒழுங்குபடுத்த ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக அருணின் தந்தைக்கு உடனிருந்து உதவினான்.

அடுத்ததாக அவன் அண்ணன் விஷ்ணுநந்தன் அருணிடம் கடனாக வாங்கிய பணத்துக்கும் ஏற்பாடு செய்து கடனை அடைத்துவிட்டான் ஆதிநந்தான்.

அருண் உயிருடன் இருந்திருந்தால் அது வேறு. ஆனால் இப்போது அப்படியே அவனால் இருக்க முடியவில்லை. அதுவும் அருண் இறந்ததற்கு அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகப் படும்படி ஆகிவிட்டது.

ஆகவே சற்றும் தாமதிக்காமல் அவனிடம் இருக்கும் பணம், மற்றும் தந்தையிடம் ஆலோசனைக் கேட்டு ஆதிநந்தனின் சுயசம்பாத்தியத்தில் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கும் வீடு ஆகியவற்றைக் கொண்டு கடனை முழுமையாக அடைத்துவிட்டான்.

அப்படி இப்படி என்று மூன்று மாதங்கள் கழிந்திருந்தன. அருணின் பெற்றோர்களை அமெரிக்காவுக்கு அவர்களின் மகள் சிந்துவின் வீட்டுக்கு எப்படியோ சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

அனைத்து விஷயங்களும் ஓரளவுக்கு ஒழுங்காக, ஆதிநந்தனின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு மெள்ளத் திரும்ப ஆரம்பித்தது. பகலெல்லாம் வேலையின் பொருட்டு வேறெதுவும் அவன் சிந்தனையில் குறுக்கிடவில்லை. ஆனால் இரவு நேரத் தனிமையில் அருணின் இழப்பு பூதாகரமாக அவனை அச்சுறுத்தியது.

எத்தனை வருட நட்பு இது! இப்படியெல்லாம் ஆகும் என நினைத்திருப்பானா என்ன?

அவன் வேதனை ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் அந்த ஸ்வப்னாவின் தொல்லை வேறு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அன்று உணவகத்தில் அவன் தன்னைக் காக்க வைத்தான் என்ற காரணத்தால் அவனை ஒதுக்கித் தள்ளியவளுக்கு இவன் அவளைத் தவிர்ப்பது தெரிந்தும் உடும்பைப் போல் பற்றிக் கொண்டு திரிவது ஏனென்று புரியவில்லை.

அவள் தந்தை வேறு ஒரு படி மேலே போய் இவனை மாப்பிள்ளை என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார். அவன் வீட்டிலும் கூட இதற்கு முழுச் சம்மதமே. ஆனால் அவனால் முழுமனதாக ஸ்வப்னாவிடம் பேசவே முடியவில்லை.

அவளைப் பார்த்தாலே ஏதோ தவறு செய்வதைப் போன்றதொரு உணர்வு அவனை ஆட்கொண்டது. ஆகவே இப்போதைக்கு விருப்பமில்லை என்று வீட்டினரிடம் சொல்லிவிட்டான்.

அருணின் இறப்பு அவனைப் பாதித்திருக்கிறது என அவன் பெற்றோர்கள் நன்கு அறிவர். அதனால் அவனை அதற்கு மேல் அவர்கள் காட்டாயப்படுத்த விரும்பவில்லை. ஸ்வப்னாவின் வீட்டிலும் ஆதிநந்தனின் தந்தை நாசூக்காகச் சொல்லிவிட்டார்.

எனினும் ஸ்வப்னா விடுவதாக இல்லை. அடிக்கடி அவன் கைபேசிக்கு வாட்ஸ்ஆப்பில், “ஐ வில் வெயிட் ஃபார் யூ... (உனக்காகக் காத்திருக்கிறேன்)” எனக் குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தாள்.

முதலில் காக்க வைத்ததற்காக அவனை உதாசீனப்படுத்திவிட்டுச் சென்றவளுக்கு எப்படி இவனை இவ்வளவு பிடித்துப் போனது? அவளுக்குத் தன் மேல் அத்தனை காதலா? அதை அவனால் நம்பவே முடியவில்லை. நாளடைவில் அது காதல் அல்ல ஒருவித ஈர்ப்பு என்பதை அவளது பேச்சுகள் உணர்த்தின.

அது அவன் உருவத்தின் மேலும் அவன் பணியின் மேலும் உள்ள பிடித்தம், அல்லது மயக்கம் என்பதை உணர்ந்து கொண்டான். பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணங்களில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

ஆனால் ஸ்வப்னா பேசுகையில் அவனால் மனமொன்றி அவளிடம் பேச முடியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் எந்தப் பிடித்தமும் ஒரே புள்ளியில் இணையப் போவதில்லை என்பது உறுதி. அப்படி இருக்கையில் அவர்கள் ஒன்று சேர்ந்தால் வாழ்க்கை எவ்வாறு இனிக்கும், அல்ல, ரசிக்கும்?

சில மாதங்களுக்கு முன்னர் அவள் நிழற்படத்தில் இருந்த தோற்றத்தைப் பார்த்துத் தான் அவளைப் பிடித்திருப்பதாகச் சொன்னான். ஆனால் அவளுடன் பேசிப் பார்க்கையில் அல்லவா தோற்றத்துக்கும் குணத்துக்கும் சற்றும் சம்மந்தமில்லை என்று தெரிகிறது. அன்று உணவகத்தில் அவளைச் சந்தித்துப் பேசியிருந்தால் இதையே உணர்ந்திருப்பானோ என்னவோ.

யாரையும் உருவத்தை வைத்து, அல்லது, மற்றவர்கள் சொல்வதை மட்டும் வைத்து எடை போடுவது மிகவும் தவறு என்று புரிந்தது. இந்த எண்ணம் தோன்றிய அடுத்த நொடி அவனுக்கு வேறொருத்தியின் முகம் மனதில் வந்து போனது.

நேத்ராவை அப்படித் தானே பார்த்ததும் தவறாக எடை போட்டான்? அவளிடம் ஒரு முறையாவது மன்னிப்பை வேண்டிவிட வேண்டும் என்ற எண்ணம் பலப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. இந்த ஸ்வப்னாவை விட்டு எவ்வளவுக்கு எவ்வளவு விலகிப் போக நினைக்கிறானோ அதைப் போலெல்லாம் நேத்ராவிடம் ஒரு நாளும் உணர்ந்ததில்லை.

அவளைத் திட்டுவதற்கு மட்டுமே அதிகம் அவளை நெருங்கியிருக்கிறான். அப்படியிருந்தும் அவன் மனதுக்கு என்னவோ அந்நிகழ்வுகள் எல்லாம் நெருக்கமானதாகவே இருந்தன. இப்படித் தோன்றிய அடுத்தக் கணமே, ‘நீ என்ன சாடிஸ்டாடா ஆதி?’ என அவன் மனசாட்சியே அவனைக் கேலி செய்தது.

பின்னே அவளைத் திட்டுவதை மனம் விரும்பியிருக்கிறதே! ஆனால் அது திட்டுவதனால் அல்ல, திட்டுவதற்கு என்று அவள் அருகாமையில் இருந்ததால் வந்த இனிமையான உணர்வு என்று அவன் விரைவில் புரிந்து கொள்வான்.

இப்போதெல்லாம் எதைப் பற்றி யோசித்தாலும் அது போய் முடியும் இடம் நேத்ராவாகிப் போனது அவனுக்கு. அவளைத் தாண்டி அவன் எண்ணங்கள் வேறு எங்கும் போக விழையவில்லை. இன்று மட்டுமல்ல. ஆரம்பத்திலிருந்தே!

என்ன ஆரம்பத்தில் இருந்ததைப் போலெல்லாம் அவள் மேல் இப்போது எவ்வித கோபமும் வன்மமும் துளியும் இல்லை. தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் ஆதிநந்தன்.

அவளை எப்படியும் சந்தித்து மன்னிப்புக் கேட்டே தீருவேன் என அவளைப் பற்றிய தகவல்களைத் திரட்ட ஆரம்பித்திருந்தான். அது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லை. அவளின் தொழில் பெயரை வைத்து அவள் எண்ணைக் கண்டுபிடித்து விட்டான்.

அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்க்கலாமா என்று மிகவும் போராடி அன்று மாலையில் வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு அழைத்தும் விட்டான்.

“ஹலோ...” என்ற அவளது இனிமையான குரல் எதிர்முனையில் கேட்டதும் அவனுக்கு இங்கே நரம்புகள் அனைத்தும் இனிய இசையை மீட்டியதைப் போலிருந்தது. இந்த உணர்வு அவனுக்குப் புதிதாக இருந்தது. புதிரானதாகவும் இருந்தது!

காரணம் புரியாமலேயே இதயத்தை ஒரு நொடி நிறுத்திவிட்டாள் எனப் புரிந்தது. நிறுத்திய அந்த நொடியில் வாகாக ஏறி அமர்ந்தும் கொண்டாள். அவளிடம் மன்னிப்பை கேட்டுவிட வேண்டும். இல்லையென்றால் அவனால் மேற்கொண்டு இயங்க முடியாமல் போய்விடும்.

‘ஹலோ’ என்ற அவளது குரல் மீண்டுமொருமுறை அவன் செவிப்பறைகளைத் தட்ட, உறைந்திருந்த உணர்வுகளுக்கு விழிப்புத் தட்டின. “ஹா... நா.. நான் ஆதி பேசறேன்” என்று உரைத்தான்.

“ஆதி?!” எனப் பெண்ணவள் மறுமுனையில் யோசிப்பதைப் போல் இழுத்து நிறுத்த, இவனுக்குள் மொட்டுவிட்டிருந்த உணர்வுகளை யாரோ வெடிகுண்டு வைத்துத் தகர்த்ததைப் போலிருந்தது. ஏமாற்றத்தில் தோன்றிய துடிப்புகளைத் துண்டிக்க வழி அறியாமல் திகைத்து விழித்தான்.

மறுமுனை மௌனத்தில் கழிய, யாருமறியா நெஞ்சத்து நிழலில் பிராவகமெடுத்த மொத்த உணர்வுகளையும் அங்கேயே பதுக்கியவாறே, “நான் ஆதி, அ... அருணோட ஃப்ரெண்ட்” என நிறுத்தினான்.

அவளுக்கு ஞாபகம் வந்ததுக்கு அடையாளமாக, “சொல்லுங்க சார், எப்படி இருக்கீங்க?” எனச் சம்பிரதாயமாகப் பேச்சை நகர்த்தினாள்.

“ம்ம்... இருக்கேன்...” என்றவன், எப்படி ஆரம்பிப்பது எனத் தயங்கினான். அவளாக எதுவும் பேசவில்லை. ‘நீ தானே அழைத்தாய், நீயே பேசு’ எனப் பொறுமையாகக் காத்திருந்தாள்.

“வந்து... நா... நான் சாரி... உங்ககிட்டே மன்னிப்புக் கேட்கணும். நான் தேவையில்லாம உங்களை ரொம்பவும் ஹர்ட் பண்ணிட்டேன்” என்றான்.

“இட்ஸ் ஓகே சார். அருண் மேலே நீங்க வச்சிருந்த நட்பு அப்படிப்பட்டது. அதையெல்லாம் அப்போவே மறந்துட்டேன். அருணே இப்போ உயிரோட இல்லை. அதனால் அருண் சம்மந்தப்பட்ட கசப்பான சம்பவங்கள் எதுவும் நான் ஞாபகத்துல வச்சுக்கலை” எனத் தெளிவாக உரைத்தாள்.

கேட்டுக் கொண்டிருந்தவனுக்குத் தான் வரையறுக்க இயலாத அளவுக்கு உள்ளுக்குள் நொறுங்கிப் போனது. அப்படியென்றால் அவனை ஞாபகத்தில் அவள் வைத்துக் கொள்ளவில்லையா? அவனை ஒரு பொருட்டாகக் கருதவில்லையா?

அவன் உள்ளுக்குள் அவளை நினைத்து வெந்து கொண்டிருப்பதைப் போல் அவளுக்குள் எதுவும் நிகழவில்லையா? ‘நீ என்ன இனிமையான சூழ்நிலைகளையா அவளுக்கு வழங்கினாய் உன்னைக் கருத்தில் பதித்துக் கொள்ள?’ மனம் இடித்துரைத்தது.

“இதுக்காக நீங்க எதுவும் வருத்தப்படாதீங்க சார். அருண் பற்றிய நல்ல நினைவுகளை மட்டும் அசை போடுங்க. என்னை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திடுங்க” என இடைவெளிவிட்டு நிறுத்தினாள்.

‘இவளை மறப்பதா? அதுவும் கெட்ட கனவாக நினைத்து. இவளை வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியுமா என்ன?’ சட்டென்று மனதில் தோன்றியது. மனமெல்லாம் தேனாய்த் தித்தித்தது. அதே சமயத்தில் அவள் சொன்னதைக் கேட்டு வேம்பாய் கசக்கவும் செய்தது.

அவள் பேசியதற்கு எப்படிப் பதிலுரைப்பது என்று ஆதிநந்தனுக்குத் தெரியவில்லை. அவன் மௌனமாக இருக்கவும், “வேற ஒண்ணும் இல்லையே. வச்சிடட்டுமா சார்? வெளில வேலையா இருக்கேன்” என்ற நேத்ராவின் கேள்வியில், ‘என்னது அதற்குள்ளே வைக்க வேண்டுமா?’ எனத் திடுக்கிட்டான்.

‘இல்லை.. இல்லை.. என்னோடு பேசிக் கொண்டே இரு’ என அவளிடம் எந்த உரிமையில் சொல்வது. அவன் மீண்டும் அமைதியாக இருக்கவும், “பை” என அவளே அழைப்பை வைத்துவிட்டாள்.

அவனுக்கு இப்போது கோபம் ஊற்றெடுத்தது. அவன் தானே அவளை அழைத்தான். அவன் பேசி முடித்து வைக்கும் வரையில் காத்திருக்காமல் அவளாக ஏன் வைத்தாளாம்? அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை.

அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அது நிறைவேறினாலும் எதுவும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒருவித தவிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருவேளை அவளை நேரில் பார்த்துச் சொன்னால் மட்டுமே உள்ளுக்குள் தோன்றிய சலசலப்பு அடங்குமோ என்னவோ?

சில நாட்களாகவே இவையெல்லாம் விட்டுவிட்டுத் தூரமாகச் சென்று யாருமில்லா தனிமையில் சிறிது காலம் கழித்துவிட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அடிக்கடி ஆதிநந்தனின் மனதில் உதிக்க ஆரம்பித்தது.

அது போன்று சில காலம் தூரமாகச் செல்லும் வாய்ப்பும் அவனுக்குத் திடீரென்று எதிர்பாராத விதத்தில் கிட்டியது. அது அவன் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

தொடரும்...
 

Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom