• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 9

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 9


இசைக் கருவிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வீணை. இசைக் கருவிகள் எல்லாமே தனது இசையினால் எல்லோரையும் வசீகரித்தாலும், வீணையானது தனது தனித்துவமான அழகிய தோற்றத்தினாலும், அதில் செதுக்கி இருக்கும் அழகிய வேலைப்பாடுகளினாலும் அனைவரையும் மேலதிகமாக கவர்ந்திழுக்கக் கூடியது. கலைமகளின் கையில் இருப்பது இதன் பெருமையை நன்கு புலப்படுத்துகிறது. நரம்புக்கருவி என்று போற்றப்படும் வீணை பலா மரத்தினால் ஆக்கப்பட்டது. இதில் உலோகத்தினால் செய்யப்பட்ட கம்பிகளே பாவிக்கப்படுகிறது. நான்கு தந்திகள் வாசிப்பதற்கும், மூன்று தந்திகள் சுருதிக்காகவும், தாளத்திற்காகவும் அமைந்துள்ளன.



அகிலா உறுதியாகப் பேசிய விதம், அவளுக்கு வேறு ஏதோ விஷயங்கள் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தை அவர்கள் மனதில் கிளப்பியது.

" அண்ணா, அம்மா கிட்ட சத்தியம் செஞ்சபோது நான் இங்கே தான் இருந்தேன். எனக்கு மசக்கையா இருக்குன்னு பிறந்த வீட்டுக்கு வந்திருந்தேன். உள்ளே ரூமில படுத்துட்டிருந்தேன். தலைசுத்தல் அதிகமா இருந்துச்சுன்னு நினைக்கிறேன். அம்மாவும், அண்ணாவும் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் காதில விழுந்துச்சு" என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள்.

" இது ஒண்ணும் புது விஷயம் இல்லையே அகிலா? எங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சது தானே? அண்ணா கூடத் தன்னோட லெட்டர்ல எழுதி வச்சிருந்தாரே? "

"அண்ணா பெருந்தன்மையாக நிறைய விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால் அம்மா தான் அண்ணாவை அப்படியொரு கட்டாயத்துக்குள்ள தள்ளினாங்க. அவரை பிரெயின்வாஷ் பண்ணி வாக்குக் கொடுக்க வச்சாங்க" என்றாள் அகிலா.

" அப்படியா? " என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் சத்யா. மாமியாரைப் பற்றி எதுவும் கருத்து கூறாமல் மௌனமாக நின்றாள் பல்லவி.

" உன்னோட மனசுல அம்மாவைப் பத்தி இருக்கற பிம்பத்தை நான் மாத்தறேன்னு தப்பா நினைக்காதே சத்யா. எனக்கு அன்னைக்கு அம்மா மேல ரொம்பக் கோபம் வந்தது. இன் ஃபாக்ட் வெறுப்பு வந்தது. தன் வயித்துல பிறந்த குழந்தைகளுக்காக அக்காவோட மகனின் வாழ்க்கையைப் பாழாக்கிட்டாங்க நம்ம அம்மா " என்று சொல்லி விட்டு அன்று அம்மா, ஈஸ்வரனிடம் பேசிய உரையாடலை அப்படியே பகிர்ந்து கொண்டாள் அகிலா.

" பாவம் அண்ணா! உனக்காகக் கல்யாணமே வேண்டாம் என்று முடிவு செஞ்சுட்டார்" என்று அகிலா சொல்லிக் கொண்டிருந்த போது சத்யனின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

" அம்மா செஞ்ச பாவத்துனாலயோ என்னவோ என் வயத்துல இருந்த கருவே கலைஞ்சு போச்சு. அதுக்கப்புறமும் எனக்குக் குழந்தையே பொறக்கலை " என்று சொல்லி அழுதாள் அகிலா.

" நீயும், உன் குடும்பமும் நல்லா இருக்கணும்னா அவரோட கடைசிக் காலத்துலயாவது அவரை நாம நல்லா கவனிச்சுக்கணும். அப்போது தான் அம்மா சேத்து வச்சுருக்கற பாவச்சுமை கொஞ்சமாவது குறையும். உன் குழந்தைகளும் வாழ்க்கையில் நல்லா இருப்பாங்க. இதை உன்னிடம் எப்படியாவது சொல்லிடணும்னு தான் நான் மட்டும் தனியாக் கெளம்பி வந்தேன். என் வீட்டுக்காரர் எதிரில், நம்ம அம்மா செஞ்ச தப்பைப் பத்திப் பேசமுடியாதுன்னு நினைச்சேன்" என்றாள் அகிலா.

" என்ன செய்யறதுன்னே புரியலை அகிலா எனக்கு" என்றான் சத்யன். குற்ற உணர்ச்சி அவனுடைய குரலில் தெரிந்தது.

" அண்ணாவை எப்படியாவது தேடிக் கண்டுபிடி. நீயும் இப்போ ரிடயராயிட்டே இல்லையா? தில்லியில் போய்த் தேடு. தனியா வாழ வேண்டியவர் இல்லை அவர். வீட்டில் வச்சு பூஜை செய்ய வேண்டிய தெய்வம் சத்யா அவர்" என்று குரல் தழுதழுக்கக் கூறினாள் அகிலா. அடுத்த நாளே மும்பைக்குக் கிளம்பியும் போய்விட்டாள். அவளுடைய புகுந்த வீடு இருப்பது மும்பையில் தான். திருமணமான தினத்தில் இருந்து மும்பையில் தான் வசிக்கிறாள்.

இவர்கள் அனைவருடைய மனங்களையும் கலங்க வைத்துவிட்டு ஈஸ்வரன் எங்கே தான் போனார்? தன் தாயைத் தேடிப் போனார். அதாவது கங்கையைத் தேடி.

ஈஸ்வரன் கங்கைக் கரையில் நின்று கொண்டு புனித நதியான கங்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்து கிளம்பி வழியில் நிறைய இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு தில்லி வந்தடைந்தார். தனது கையில் இருந்த மொபைலை யமுனையில் வீசி எறிந்து விட்டு, அங்கிருந்து கிளம்பி டிரெயினில் வாரணாசி வந்து சேர்ந்தார்.

புதிய மொபைல் மிகவும் சாதாரணமானதாக வாங்கிக் கொண்டு, புதிய ஸிம் ஒன்றை வாங்கிப் போட்டுக் கொண்டார். வாரணாசியில் இருக்கும் முக்திபவன்களில் ஒன்றில் அறை எடுத்துக் கொண்டார்.

இந்துக்களின் புண்ணிய ஸ்தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் காசி அல்லது வாரணாசியில் வந்து உயிர் விடுவதால் முக்தி அதாவது மோட்சம் கிடைக்கும் என்று இந்துக்கள் நம்புகின்றனர். காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, சாம்பலை கங்கையின் புனித நீரில் கரைப்பதன் மூலமாகப் பாவங்கள் கரைந்துபோகும் என்றும் மிகவும் உயர்ந்த பதவியான மோட்சம் கிடைக்கும் என்றும் தீவிரமாக நம்பப்படுகிறது.

உயர்ந்த முக்தியை அடைவதற்காக புனித நகரமான காசியில் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாட்களைக் கழிக்க விரும்பும் முதியோர் அதாவது அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்குமிடமாக முக்தி பவன்கள் செயல்படுகின்றன. நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் உள்ளவர்களுக்கு இங்கு தங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அறைகளுக்காக மிகவும் குறைந்த வாடகை வசூலிக்கப்படுகிறது. அதுவும் மின்சாரக் கட்டணத்திற்காக மட்டுமே. சிறிய அறைகளாகத் தான் இருக்கும். அதிக நோய்வாய்ப்பட்டவரை கவனித்துக் கொள்ள உறவினர் ஒருவர் அல்லது சில இடங்களில் இருவர் அனுமதிக்கப் படுகின்றனர். சில முக்தி பவன்களில் சிறிய ஆலயம் இருக்கிறது. அங்கே பூசை செய்யும் பண்டிட்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்படிப்பட்ட ஒரு முக்தி பவனைத் தேடிக் கண்டுபிடித்து அதனுடைய அலுவலகத்தில் வந்து நின்றார் ஈஸ்வரன். இவ்வளவு நாட்களாக நல்ல வேளையாக உடல்நலம் ஒத்துழைத்தது. நடுவில் தலைவலி மட்டும் அதிகமாக இருந்தபோது மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். தலைவலி தவிர வேறு எந்த உடல் உபாதையும் அவருக்கு ஏற்படவில்லை.

இந்த முக்திபவன்களைப் பற்றி சென்னையில் இருக்கும் போது, பாங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் கேள்விப்பட்டிருக்கிறார். அவர்களுடைய கிளையின் வாடிக்கையாளரான ஒரு வட இந்தியர், ஈஸ்வரனிடம் நன்றாகப் பேசிப் பழகுவதால் முக்திபவன் பற்றித் தெரியவந்தது. ஈஸ்வரன் நன்றாக ஹிந்தி பேசுவார். அந்த வட இந்தியரும் பல வருடங்களாக சென்னையில் வசிப்பதால் தமிழ் நன்றாகப் பேசுவார்.

" பிதாஜியின் உடல்நலம் சரியாக இல்லை. அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று டாக்டர்களும் சொல்லி விட்டார்கள். எண்பத்து ஐந்து வயதாகிவிட்டது அவருக்கு. வாரணாசி போகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் " என்று சொன்னார்.

" எதுக்காக அங்கே போகணுமாம்? உங்க சொந்த ஊரா அது? சொந்த வீடு, உறவினர்கள் எல்லாம் இருக்காங்களா? அதுக்காகத் தான் அங்கே போக விரும்பறாரா? "

" இல்லை, இல்லை. எங்க சொந்த ஊர் உத்தரப்பிரதேசத்தில் லக்னோ பக்கத்துல இருக்கு. காசியில் போய் உயிரை விட்டா மோட்சம் கிடைக்கும்னு உறுதியா நம்பறார். அவரோட கடைசி ஆசையை நிறைவேத்தறதுக்காக வாரணாசிக்கு அவரைக் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன்" என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஈஸ்வரன்.

" அங்கே போய் எங்கே தங்குவீங்க? உதவிக்கு யாராவது இருக்காங்களா? மெடிக்கல் உதவி கூட சமயத்தில் வேண்டியிருக்குமே? எப்படி மேனேஜ் பண்ணுவீங்க? "

" அதுக்காகவே அங்கே முக்திபவன்களை நிறுவியிருக்காங்க . இறுதிக் காலத்தை காசியில் கழிக்க விரும்புபவர்களுக்காகவே அறைகளைக் கட்டிப்போட்டு மிகவும் குறைந்த வாடகைக்கு விடறாங்க. காசி விஸ்வநாதர் கோயில் பக்கத்திலேயே ஒண்ணு இருக்கு. அது மாதிரி நிறைய இருக்கு. முக்திபவனில் அது தான் சாக்குன்னு மாதக்கணக்கில் தங்க முடியாது. நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவங்களுக்கும், எங்கப்பா மாதிரி ரொம்ப வயசானவங்களுக்கும் அவங்க கூட உதவிக்காக ஒரே ஒரு ரிலேட்டிவைத் தங்க அனுமதி தருவாங்க. சில முக்திபவன்களில் கோயில், பண்டிட், மெடிக்கல் ஸப்போர்ட்டுக்காக டாக்டர், சின்ன கிளினிக் எல்லாம் இருக்கு.

மேக்ஸிமம் இரண்டு வாரங்கள் அல்லது பதினைந்து நாட்கள். அதுக்குள்ள உயிர் போகலைன்னா அங்கேயிருந்து அனுப்பிடுவாங்க. ஒருவேளை இறந்து போயிட்டாங்கன்னா, பக்கத்தில் இருக்கற மணிகர்ணிகா காட்டில் ( படித்துறையில்) , இல்லைன்னா கங்கைக் கரையில் இருக்கற வேற ஏதாவது ஒரு காட்டில் ( படித்துறையில்) இறுதிச் சடங்குகளை செய்து விட்டு சாம்பலை கங்கையில் கரைத்து விட்டு உறவினர் கிளம்பிவிடுவார். இது எங்க நார்த்தில ரொம்ப பாப்புலர். அதே மாதிரி வெஸ்ட் பெங்கால், ஒரிஸ்ஸாவில் இருந்து கூட நிறைய மனுஷங்க காசியில் உயிரை விடணுங்கற ஆசையோட வந்து முக்திபவன்களில் தங்கறாங்க" என்று சொன்னபோது கேட்டு வைத்துக் கொண்டார் ஈஸ்வரன். அப்படியே அந்த விஷயம் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அங்கேயே புதைந்து கிடந்தது.

அவருடைய உடலும், மனமும் சோர்ந்து போன நாளும் வந்து சேர்ந்தபோது இந்த விஷயம் நினைவுக்கு வந்தது. அடிமனதில் இருந்து மேலே கிளம்பி வந்தது.

' பிரெயின் டியூமர்னு தெரிஞ்சு போச்சு. நிறைய செலவு பண்ணி ஆபரேஷன் செஞ்சாலும் பிழைப்பது கஷ்டம் தான்னு டாக்டர், சத்யன் கிட்ட சொன்னது என் காதில் தற்செயலா விழுந்துடுச்சு. அம்மாவுக்கு செஞ்சு கொடுத்த வாக்கின் படியே சத்யனுடைய குடும்பத்தை, இத்தனை வருஷங்களாக நல்லாப் பாத்துக்கிட்டாச்சு. இனிமேல் அவங்களைப் பத்திக் கவலைப்பட வேண்டியதில்லை. என் இறுதி நாட்களை நானும் கங்கைக் கரையில் போய் நிம்மதியாக் கழிக்கலாமே? நதியா ஓடற கங்கையைப் பாத்தா, என்னைப் பெத்தெடுத்த அம்மாவான கங்காவைப் பாத்த திருப்தி கிடைக்குமோ? நான் சின்னக் குழந்தையில் மிஸ் பண்ணின அவங்க மடியில் இறுதி நாட்களைக் கழிக்கலாம். அதுதான் சரி' என்று யோசித்தவர் உடனே முடிவெடுத்து விட்டார். செயல்படுத்தியும் விட்டார்.

சென்னையில் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினவர் பேங்குக்குப் போய்த் தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டார். பயணத்துக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டார். மாலையில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் ஏறி விட்டார். ஆனால் நேரே தில்லி செல்லாமல் வழியில் இறங்கி வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர், மதுரா போன்ற இடங்களில் இறங்கி, அந்த இடங்களில் சில நாட்கள் சுற்றிவிட்டு ஒருவழியாக தில்லி போய்ச் சேர்ந்தார்.

தில்லியில் மொபைலை மாற்றிக் கொண்ட பின்னர் தான் வாரணாசியை அடைந்தார் ஈஸ்வரன். முதலில் மணிகர்ணிகா காட் அதாவது மணிகர்ணிகா என்ற பெயரில் அழைக்கப்படும் கங்கைக் கரையின் ஒரு படித்துறையின் அருகில் இருந்த முக்திபவனில் அறை எடுத்துக் கொண்டார்.

" அட்வான்ஸ் கொடுங்க" என்று கவுண்டரில் இருப்பவன் கேட்டபோது சில ஆயிரங்களை எடுத்து நீட்டினார்.

" இவ்வளவு பணமெல்லாம் எடுத்து நீட்டாதீங்க. இங்கே மாசக் கணக்கில் தங்க முடியாது. மேக்ஸிமம் பதினைந்து நாட்கள் தான் தங்க அனுமதிப்போம். உங்களைப் பாத்தா அதிக பிராப்ளம் இருக்கற மாதிரி தெரியலை. பதினைந்து நாட்கள் கழித்து நீங்க ரூமைக் காலி பண்ணிடனும்" என்று சொல்லி விட்டு, அதற்கான பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டான்.

" அப்புறம் இங்கேயே ரொம்ப ஸிம்பிளான உணவு கிடைக்கும். அது வேண்டாம்னா வெளியிலயும் போய் சாப்பிட்டுக்கலாம் நீங்க.கோயிலுக்கும், மத்த இடங்களுக்கும் போகணும்னா வெளியே ரிக்ஷா கிடைக்கும். வேற ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க" என்றான்.

" தேங்க் யூ" என்று சொல்லி விட்டுத் தன் அறையை நோக்கி நடந்தார் ஈஸ்வரன்.

" சாஹேப், ஒரு நிமிஷம். உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா யாருக்குத் தகவல் தெரிவிக்கணும், என்ன மாதிரி ஈமச்சடங்குகள் செய்யணுங்கற தகவல்களை ஒரு பேப்பரில் நீட்டா எழுதிக் கொடுத்துடுங்க. நாங்க எங்க ஃபைலில் வச்சுக்குவோம்" என்று சொன்னபோது, ஈஸ்வரன் தலையாட்டினான்.

' இந்த மாதிரி இடத்தில் வேலை பாக்கறதுனால இவன் நிறைய சாவுகளைக் கண்கூடாகப் பாத்துருப்பான். அதுனால தான் அதைப் பத்தி இயல்பா அவனால பேச முடியுது. தயக்கம் இல்லாமல் நேரடியாக இந்த மாதிரி பேசறது அவனுடைய டெய்லி ரொட்டீன் போல இருக்கு. இறப்பு பற்றி சாதாரணமாகப் பேசற அளவுக்கு அவனுடைய உணர்ச்சிகள் மழுங்கிப் போயிருக்கு. இங்கேயே கொஞ்ச நாட்கள் இருந்தால் நமக்கும் அப்படித் தான் ஆயிடும்' என்று நினைத்துப் பார்த்தபோது தன்னுடைய சிந்தனையின் ஓட்டத்தைக் கண்டு அவருக்கு சிரிப்பு தான் வந்தது.

' வீடு வரை உறவு, வீதி வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்று கவிஞர் பாடியிருக்கிறார். எனக்கு இதில் எதற்குமே கொடுப்பினை இல்லை என்பது தான் நிதர்சனம்' என்று எண்ணி வருந்தத் தான் முடிந்தது ஈஸ்வரனால்.

வறண்ட பாலைவனமாக மாறிப் போயிருந்த அவருடைய வாழ்க்கையிலும் தென்றலாக வீச ஒரு தேவதூதன் வந்து சேர்ந்தான்.
அர்ஜுனனுக்குத் தேரோட்டிய பார்தாதசாரதியைப் போலத் தன்னுடைய ரிக்ஷாவில் வந்து அடுத்த நாள் அவருக்கு தரிசனம் தந்தான் அவன்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் சூப்பர் அம்மா 🩵🩵🩵🩵🩵🩵முக்தி பவன் பற்றிய விளக்கம் அருமை அம்மா ❤️❤️❤️❤️❤️❤️
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சூப்பர்👌👌👌, முக்தி பவன் பற்றிய விளக்கம் அருமை 🙏🙏🙏🙏
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
(முக்தி) வரம் தரும் வாரணாசி பற்றி தெரிந்தது!
அடுத்து பார்த்தனுக்காக வந்த பார்த்தசாரதி பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
(முக்தி) வரம் தரும் வாரணாசி பற்றி தெரிந்தது!
அடுத்து பார்த்தனுக்காக வந்த பார்த்தசாரதி பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்
நன்றி
 
Top Bottom