• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 6

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 6

தஞ்சாவூரில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று, ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளியின் தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் 'ஏகாந்த
வீணை'யாகும். மற்றொன்று குடம், தண்டி, யாளியின் தலை ஆகியவற்றைத் தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் 'ஒட்டு
வீணை' ஆகும்.

முதலில் ஈஸ்வரன் தன்னுடைய அறையில் இல்லை என்பதை கவனித்தது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தான்.
வழக்கம் போலக் காலையில் அந்த அறையை சுத்தம் செய்யப்பட்ட போனவள், ஈஸ்வரன் அங்கே இல்லாததை கவனித்து ஆச்சர்யமடைந்தாள்.

" பரவாயில்லையே! பெரிய ஐயா முழுசா குணமாயிட்டாரு போல இருக்கே! இன்னைக்குச் சீக்கிரமே எழுந்து வாக்கிங் போயிட்டாரு போல இருக்கே? " என்று அந்தப் பெண் கேட்டபோது தான் பல்லவியின் மனதில் எச்சரிக்கை மணி கேட்டது.

" இருக்காதே? அப்படில்லாம் போயிருக்க மாட்டார். பாத்ரூம் போயிருப்பாரா இருக்கும் "

" இல்லைம்மா, பாத்ரூம் கதவு திறந்து இல்லே கிடக்கு? " என்று அவள் சொன்னதும் பபல்லவிக்கு பகீரென்றது. வீடு முழுவதும் தேடினாள். ஈஸ்வரன் கிடைக்கவில்லை.
' வெளியே போறதுன்னா அப்படி யார் கிட்டயும் சொல்லாமப் போகமாட்டாரே? கூட யாரையாவது துணைக்குக் கூப்பிட்டுகிட்டுத் தான் போனார். இல்லைன்னா அவர் போணும்னு சொன்னா நானே யாரையாவது கூட அனுப்புவேனே? எங்கே போயிருப்பார்? " என்று கவலையுடன் வாசலில் சென்று பார்த்தாள். அவருடைய செருப்புகளைக் காணவில்லை.

வீட்டுக்குள் வந்து அவர் அறைக்குள் சென்று மீண்டும் சோதனை செய்தாள். கட்டிலின் அடியில் இருந்த பயணப்பை அதாவது டிராவல்பேக் கண்ணில் படவில்லை. சந்தேகத்துடன் அலமாரியைத் திறந்து பார்த்தால் கொஞ்சம் துணிமணிகள் கூடக் குறைவது போலத் தெரிந்தது.

" எல்லாரும் சீக்கிரமா இங்கே வாங்க" என்று கத்தி அனைவரையும் அங்கே வர வைத்துவிட்டு விஷயத்தைச் சொல்ல, நிர்மல், " அம்மா, இங்கே பாருங்க. டைனிங் டேபிள் மேல ஏதோ பேப்பர் மடிச்சு வச்சிருக்கு. லெட்டர் மாதிரி இருக்கு" என்று சொன்ன நிர்மல், யுரேகாவெனக் கத்திய ஆர்க்கிமிடீஸாக அந்த நிமிடம் மாறியிருந்தான். நடுங்கும் கரங்களுடன் அதை வாங்கிய பல்லவி பிரித்துப் படித்தாள்.

" நான் என் விருப்பப்படி இந்த வீட்டை விட்டுப் போகிறேன். என்னிடம் மிஞ்சியிருக்கும் வாழ்நாட்களை நிம்மதியாகத் தனிமையில் கழிக்க விரும்புகிறேன். என்னைத் தேடிக்கொண்டு என் பின்னால் யாரும் வரவேண்டாம்.

இவ்வளவு நாட்கள் நிர்மலா அம்மாவுக்குக் கொடுத்த வாக்கின் படி சத்யனின் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டேன். இரண்டு குழந்தைகள் இப்போது வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இனிமேல் உங்களுக்கு எந்தப் பணக்கஷ்டமும் இருக்காது. என் பேங்க் அக்கவுண்டில் இருந்த பணத்தின் பெரும் பகுதியை சத்யனின் அக்கவுண்டுக்கு மாற்றி விட்டேன். என்னுடைய செலவுக்காகக் கொஞ்சம் மட்டும் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எல்லோருமே என்னிடம் பிரியத்துடன் நடந்து கொண்டீர்கள். அந்த சந்தோஷத்தை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு கிளம்புகிறேன். வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. உங்கள் அனைவருக்கும் எனது ஆசிகள்" என்று எழுதிக் கையெழுத்து போட்டிருந்தார் அவர்.

அந்த லெட்டரைக் கையில் வைத்துக் கொண்டு கீழே சரிந்து விழுவது போல உட்கார்ந்தாள் பல்லவி. குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

" தப்பு பண்ணிட்டோங்க நாம. பெரிய தப்பு பண்ணிட்டோம். பெரியவருக்கு ஆதரவா, அவருக்கு நம்பிக்கை தர மாதிரி நாம யாருமே நடந்துக்கலை. அவர் ஏதோ தப்பு தான் பண்ணிருக்காரு, நம்ம கிட்ட மறைக்கிறாருன்னு நினைச்சேன் நான். 'நிச்சயமா நீங்க தப்பு செஞ்சிருக்க மாட்டீங்கன்னு நாங்க உங்களை நம்பறோம்'னு ஒரு வார்த்தை அவர் கிட்ட ஆறுதலாப் பேசவேயில்லை. உடம்பும் சரியில்லை. இதோட தன்னந்தனியாக் கிளம்பி எங்கே போனாரோ? என்ன பண்ணுவாரோ? " என்று கதறிக் கதறி அழுதாள் பல்லவி.

" நாம ஒண்ணும் தப்பே பண்ணலைம்மா. அவர் நம்ம கிட்ட உண்மைகளை எல்லாம் ஓபனாச் சொல்லுவாருன்னு தானே வெயிட் பண்ணினோம்? அவரை ஏதாவது குத்தம் சொன்னோமா? இல்லையே? " என்றான் சத்யன் வருத்தத்துடன்.

" குத்தம் சொல்லலை. இருந்தாலும் என்ன நடந்தது, என்ன பிரச்சினைன்னு உரிமையோட கேட்டமா? அவர் கூட உறுதியா நின்னு ஸப்போர்ட் பண்ணினமா? எதுவும் செய்யலையே? ஓரமாக ஒதுங்கி நின்னு வேடிக்கை பாத்தோம். அவரை ஒதுக்கி வச்சோம். உள்ளே புகுந்து பிரச்சினையை எதிர்கொள்ளலையே? அவரு தன்னோட வாழ்க்கையைப் பெருசா நினைக்காமல் இவ்வளவு வருஷமா இந்தக் குடும்பத்தைத் தாங்கிருக்காரு. இந்தக் கடிதத்தில் அம்மாக்குக் கொடுத்த வாக்கு பத்தி எழுதி இருக்காரே? அப்படின்னா உங்க அம்மா தான் அவர் கல்யாணமே வேண்டாம்னு சொன்னதுக்குப் பின்னாடி இருக்காங்களா என்னவோ? யாருக்குத் தெரியும்?

அவர் மனசில எவ்வளவு வருத்தம் இருக்கோ தெரியலை பாவம். அதுனால தானே வீட்டை விட்டுக் கிளம்பிப் போயிருக்காரு. ஒரு சந்யாசி மாதிரி எல்லாத்தையும் துறந்துட்டு இல்லை கிளம்பிப் போயிருக்காரு. போறபோது தன்னிடம் இருக்கற பணத்தைக் கூட உங்க பேருக்கு மாத்திட்டுப் போயிருக்காரு. உடம்பு வேற சரியில்லை. எங்கே போயி எவ்வளவு கஷ்டப்படப் போறாரோ தெரியலையே? நினைச்சாலே உடம்பு பதறுது எனக்கு. இந்தப் பாவம் நம்மை சும்மா விடாதுங்க" என்று கதறியவளைப் பார்த்துக் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கத்தான் முடிந்தது
சத்யனால்.

வேறு என்ன செய்ய முடியும் அவரால்? தனது கையாலாகாத்தனத்தை எண்ணித் தன்னைத் தானே வெறுத்தார். அண்ணனைச் சார்ந்து அவருடைய நிழலிலேயே வாழ்வது அவருக்கு வசதியாகத் தானே இருந்தது இத்தனை நாட்களும்? ஓர் அட்டையைப் போல அண்ணனுடைய சம்பாத்தியம் முழுவதையும் அல்லவா உறிஞ்சியிருக்கிறது அவருடைய குடும்பம்? நினைக்க நினைக்க மனம் ஆறவேயில்லை அவருக்கு. அவரும் கீழே உட்கார்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தார்.

நமஸ்வியும், மனஸ்வியும் உதவிக்கு வந்தார்கள்.

" அம்மா, அப்பா ரெண்டு பேரும் அழறதை நிறுத்துங்கள். அவர் தன்னோட மொபைலையும் டெபிட் கார்டையும் எடுத்துட்டுப் போயிருக்காரு. மொபைலை வச்சு அவர் இருக்கற லொகேஷனை ஈஸியா டிரேஸ் பண்ணிடலாம். அதே மாதிரி டெபிட்கார்டை எங்கே யூஸ் பணாறாருன்னும் பேங்க் மூலமாகக் கண்டுபிடிச்சுடலாம். அது தெரிஞ்ச உடனே நாம போயி, அவர் காலில விழுந்து அவரைத் திரும்பக் கூட்டிட்டு வந்துரலாம். கவலையே படாதீங்க" என்று ஆறுதலாகப் பேசினார்கள்.

சொன்னது மட்டும் இல்லை. உடனடியாகப் பேசவேண்டியவர்களிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். ஒரு திறமையான பிரைவேட் டிடெக்டிவ் ஏஜன்சி நடத்துபவனைத் தன்னுடன் ஐ. ஏ. எஸ். கோச்சிங் கிளாஸில் வரும் சக மாணவன் மூலமாகத் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை நமஸ்வி செய்துவிட்டாள். அவனுடைய பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய பெரியப்பா, அவர்கள் நினைத்ததை விட ஒரு படி மேலே இருந்தார். மொபைல் லொகேஷன் வேறு வேறு மாநிலங்களின் பல்வேறு இடங்களைக் காட்டியது. இறுதியாக தில்லியைக் காட்டியது. அதன் பின்னர் வேறு எந்த இடத்திலும் ஆக்டிவ்வாக இல்லை.

" நிறைய இடங்களில் சுத்திட்டு இருக்கார் போல இருக்கு. இந்த இடங்கள் எல்லாமே தில்லிக்கு சென்னையில் இருந்து போற ரூட்ல தான் இருக்கு. ஆனால் சில இடங்களில் லேசான டீவியேஷன் இருக்கு. நேராகப் போகாமல் நடு நடுவில் எங்கேயாவது இறங்கித் தங்கிப் போயிருக்கலாம். தில்லி போய்ச் சேந்ததும் புது மொபைலும் , புது கனெக்ஷனும் வாங்கிட்டுப் பழசை டிஸ்போஸ் பண்ணிருப்பார்னு நினைக்கிறேன். பேங்கில் இருந்து எந்தத் தகவலும் வரலை. இதுவரைக்கும் டெபிட் கார்டை எங்கயும் யூஸ் பண்ணல போல இருக்கு" என்று அந்த டிடெக்டிவ் ஏஜன்சி நடத்துபவன் சொல்லி விட்டான்.

இவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருந்தது. ஈஸ்வரன், தன்னுடைய வங்கியைத் தவிர இன்னொரு வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அதில் தனது சேமிப்பின் ஒரு பங்கைப் போட்டு வைத்திருந்தார். அந்தப் பணத்தை அவ்வப்போது எடுத்து மனநிம்மதிக்காக சில தர்ம காரியங்களுக்கு நன்கொடையாகத் தருவார். அது யாருக்கும் தெரியாது. இவரும் யாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார். அந்த வங்கிக் கணக்கிலும் ஒரு டெபிட் கார்டு அவருக்கு இருந்தது. அதைத் தான் இப்போது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

" தில்லியில் போய்த் தேடிப் பார்க்கலாமா? " என்றாள் நமஸ்வி.

" தில்லியில் எங்கே போய்த் தேடுவோம்? தில்லி ரொம்பப் பெரிய ஊர். புதுதில்லி, பழைய தில்லி இரண்டும் இரண்டு தனித்தனி உலகங்கள். அதைத் தவிர தில்லியைச் சுத்தி இருக்கற குருகிராம், நொய்டா, ஃ பரிதாபாத், காசியாபாத் தவிர நிறையக் குட்டி குட்டி கிராமங்களில் வசிக்கும் மக்கள் தினமும் தில்லிக்குள் வந்துட்டுப் போறாங்க. அந்த ஊரில் போய் எங்கேன்னு தேடுவோம். சமுத்திரத்தில் எதையாவது தூக்கியெறிஞ்சுட்டுத் தேடிப் போற மாதிரி தான் இதுவும். நமக்கு அந்த ஊரும் புதுசு. ஹிந்தியும் தெரியாது. நமக்குத் தெரிஞ்சவங்க யாருமே இல்லை. உதவி செய்யற ஆட்கள் யாருமே இல்லாமல் எங்கே போய்த் தேடுவோம்? " என்று சத்யன் சொன்னதும் நியாயமாகத் தான் பட்டது மற்றவர்களுக்கு.

" ஏதாவது மிரகிள் நடந்து நமக்கு ஏதாவது க்ளூ கெடைச்சாத் தான் உண்டு. நம்மால வேற எதுவும் செய்ய முடியாது. ஆண்டவனை வேண்டிக்குவோம். அவனே ஏதாவது வழி விடுவான். இப்போதைக்கு நம்மால் செய்ய முடிஞ்சது அது தான். இல்லைன்னா அண்ணா தானாகவே மனசு மாறி நம்மை காண்டாக்ட் செஞ்சால் தான் உண்டு "
என்றாள் பல்லவி.

" இந்த மாதிரி நெனைச்சுகிட்டு கையைக் கட்டிட்டு சும்மா உக்காந்திருக்க முடியலையே? மனசில இருக்கற உறுத்தல் குறையவே இல்லையே? சும்மா இருந்தால் குற்ற உணர்ச்சி மனசுக்குள்ள குத்தாட்டம் போடுது. ஏதாவது செய்யணும். ஆனா என்ன செய்யணும்னு புரியலை. அண்ணாவைக் கேட்டுக் கேட்டு வேலை செஞ்சு பழகிட்டேன். சொன்னா அபத்தமா இருக்கும். ஆனால் சொல்லாம என்னால இருக்க முடியலை. இப்போது கூட அண்ணாவே வந்து எப்படி, எங்கே தேடணும்னு சொல்லிக் கொடுத்தால் நல்லா இருக்கும்னு தோணுது" என்றார் சத்யமூர்த்தி.

" எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம். ஒருவேளை அன்னிக்கு வந்தாளே ஒரு பொண்ணு, அவ பேரென்ன, அவ பேரு கூட சைந்தவின்னு சொன்னா இல்லையா? அவங்க அம்மா பேர் கூட வைஜயந்தின்னு சொன்னா. ஒருவேளை நிஜமாகவே அந்த சைந்தவி இவர் மகளா இருந்து, அவ வசிக்கும் இடத்துக்கு இவரும் போயிருப்பாரா? " என்று விபரீதமாகத் தோன்றியதை அப்படியே வெளியே சொல்லி விட்டாள் பல்லவி.

" இப்பத்தானே நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னால, அவரை நம்பாமல் தப்பு செஞ்சுட்டோமேன்னு புலம்பித் தள்ளினே ? இப்ப என்னடான்னா அந்தப் பொண்ணு சைந்தவி உண்மை தான் பேசினானங்கற மாதிரி யோசிக்கறயே? " என்று தன் மனதில் தோன்றியதை அப்படியே அவர்கள் முன்னிலையில் கொட்டினார் சத்யன்.

" இல்லைங்க. நான் அண்ணாவைத் தப்பா நினைக்கணுங்கறதுனால இந்த மாதிரி யோசிக்கலை. இதுக்கும் துளியளவு சான்ஸ் இருக்குன்னு யோசிச்சேன். இப்படிக் கூட நடந்திருக்கலாமோ? சின்ன வயசுல அண்ணா யாராவது ஒரு பொண்ணைக் காதலிச்சுக் கை விட்டிருக்கலாம். ஏதோ சந்தர்ப்பத்தில கல்யாணம் செஞ்சுக்கவே மாட்டேன்னு அம்மாவுக்கு வாக்குக் கொடுத்ததுனால காதலியைத் தனியாத் தவிக்க விட்டுட்டுப் பிரிஞ்சு வந்திருக்கலாம். இவர் பிரியும்போது அவள் கர்ப்பமா இருந்து அப்புறம் குழந்தை பிறந்திருக்கலாம். அவ கஷ்டப்பட்டுத் தனியாக் குழந்தையை வளத்து ஆளாக்கி இருக்கலாம்" என்று தீவிரமாக யோசித்து ஒரு சந்தேகத்திற்கு உயிர் கொடுத்தாள்.

" நீங்க ரொம்ப சினிமா, சீரியல் எல்லாம் பாத்து என்னல்லாமோ யோசிக்கறீங்கம்மா! அப்படி நடந்திருக்க முடியாது. குழந்தை உருவானது தெரிஞ்சவ எங்கேயாவது சும்மா வாயை மூடிக்கிட்டுப் போவாளா என்ன? தன் குழந்தைக்காகவே பெரியப்பா கூடப் போராடியிருப்பாங்களே அந்த வைஜயந்தி? ஒருவேளை பெரியப்பாவுக்கு உண்மை தெரிஞ்சிருந்தால், கண்டிப்பா அவளுக்கு வாழ்வு கொடுத்திருப்பார். ஒரு பெண்ணின் கண்ணீருக்கு முன்னால அம்மா கிட்ட கொடுத்த வாக்குறுதியெல்லாம் பிசுபிசுத்துப் போயிருக்கும் இல்லையா ? பெரியப்பா அவ்வளவு மோசமானவர் ஒண்ணும் இல்லை" என்று நமஸ்வி மீண்டும் விவாதிக்க, மனஸ்வியும், "ஆமாம், ஆமாம் "என்று ஒத்துப் பாடினாள்.

என்னென்னவோ பேசி விவாதித்தும் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் அவர்களுடைய உரையாடல் முடிந்தது.

ஆனால், அடுத்த நாளே ஒரு புதிய திருப்பம் அவர்கள் முன்னால் வந்து நின்று கொண்டு அவர்களைப் பார்த்து கேலிப் புன்னகையைத் தவழவிட்டது.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
மீண்டும் அந்த சைந்தவி வந்து ஏதாவது தகவல் சொன்னால் ஈஸ்வரன் போயிருக்கும் இடம் பற்றிய விவரம் தெரியவரலாம்.
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீண்டும் அந்த சைந்தவி வந்து ஏதாவது தகவல் சொன்னால் ஈஸ்வரன் போயிருக்கும் இடம் பற்றிய விவரம் தெரியவரலாம்.
நன்றி🙏💕
 

Mahalakshmi Babu

New member
Joined
Aug 13, 2024
Messages
14
அடுத்து என்ன திடுக்கிடும் தகவல்கள் வரப் போகிறதோ
 
Top Bottom