• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 4

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 4

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.


ஈஸ்வரன் நடப்பது எதையும் நம்பமுடியாமல் அந்தப் பெண்ணை வெறித்துப் பார்த்தார். அதற்குள் அந்தப் பெண் எழுந்து நின்று தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

" யாரும்மா நீ? என்னை எதுக்கு அப்பான்னு கூப்பிடறே? நான் கல்யாணமே செஞ்சுக்கலை. எனக்கு எப்படி குழந்தை இருக்க முடியும்? வேறு யாரோன்னு தப்பா நினைச்சு என்னிடம் நீ வந்திருக்கேம்மா. இதுல நிச்சயமாக ஏதோ மிஸ் அண்டர்ஸ்டான்டிங் நடந்திருக்கு " என்றார் உறுதியாக.

" ஆமாம், நானும் அதையே தான் சொல்லறேன். தப்பு நடந்ததால தான் நான் என்னோட அம்மா வயத்துல உருவானேன். அதுவும் நீங்க செஞ்ச தப்புனால" என்றாள் அந்தப் பெண் கடுமையாக.

" சிவ சிவா " என்று சொல்லிக் காதுகளைக் கைகளால் பொத்திக் கொண்டு அருகில் கிடந்த ஸோஃபாவில் பொத்தென்று அமர்ந்தார் ஈஸ்வரன்.

" ஏய் பெண்ணே! என்ன நினைச்சுட்டிருக்கே நீ? விட்டா என்னென்னவோ பேசிட்டே போறயே? அநியாயமா ஒரு நல்லவர் மேலே பழி போட்டால் நாக்கு அழுகிப் போயிடும் உனக்கு. யாரைப் பாத்து இந்த மாதிரி உளறிட்டு இருக்கேன்னு புரியுதா உனக்கு? " என்று பொங்கி எழுந்தான் சத்யமூர்த்தி.

அப்பழுக்கற்ற தூய வெள்ளைத் துணி போன்ற வாழ்க்கை வாழுகிற அண்ணனைப் பார்த்து அநியாயமாக ஒரு சிறு பெண் பழி போடுகிறாள் என்பதை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சாதாரணமாக அதிகம் வாய் திறந்து பேச மாட்டான். அதுவும் அண்ணன் எதிரில் வாயே திறக்காத சாந்தஸ்வரூபி அவன். அவனுக்கே இன்று பொறுமை போய்விட்டது.

" உங்க எல்லார் முன்னாலயும் நல்லவர் வேஷம் போட்டிருக்கலாம் இவர். ஆனால் என்னையும், எங்கம்மாவையும் பொருத்தவரையில் கெட்டவர் , ரொம்ப ரொம்பக் கெட்டவர்" என்று அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டினாள் அந்தப் பெண்.

அதற்குள் சுற்றிலும் கூடிவிட்ட அனைத்து உறவினர்களையும் ஒருமுறை பார்த்தான் சத்யமூர்த்தி. நமஸ்வி, மனஸ்வி இரண்டு பேரும் நிர்மலைத் தங்களோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். நிர்மலின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் நீர் வெளியே வரத் துடித்துக் கொண்டிருந்தது.

பல்லவியும், சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பல்லவி, இடிந்து போய் உட்கார்ந்திருந்த ஈஸ்வரனையும் பார்த்தாள். அவருடைய முகம் அவமானத்தால் சிவந்து போயிருந்தது. உணர்ச்சிகள் எல்லாம் சேர்ந்து எரிமலைக்குழம்பாய் அவர் மனதுக்குள் தகித்துக் கொண்டிருந்ததை அவளால் உணர முடிந்தது. உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. பேச வருவதை அவரால் பேச முடியவில்லை. உடல் முழுவதும் லேசான நடுக்கத்துடன் அதிர்ந்து கொண்டிருந்தது. சட்டென்று ஒரு முடிவெடுத்தாள். சுற்றியிருந்த அனைவரையும் ஒருமுறை பார்த்தாள்.

" மன்னு, நம்மு நீங்க ரெண்டு பேரும் நிர்மலைக் கூட்டிட்டு உங்க ரூமுக்குப் போங்க. பெரியவங்க பேசிட்டிருக்கும் போது இங்கே என்ன வேடிக்கை? " என்று அவர்கள் மூவரையும் முதலில் விரட்டினாள். பின்னர் மற்ற உறவினர்களைப் பார்த்தாள். அவர்களில் யாருமே அங்கிருந்து நகரத் தயாராக இல்லை. என்ன நடக்கப்போகிறது என்று ஆர்வத்துடன் ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மனிதனுக்கு எப்போதுமே மற்றவர்களின் எழுச்சியில் சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டாலும், அந்த சந்தோஷத்திற்குப் பின்னால் ஒரு பொறாமை ஒளிந்திருக்கும். அந்த எழுச்சிக்குப் பின்னால் அவன் எவ்வளவு உழைத்திருக்கிறான் என்று மறந்தே போவார்கள். அவனுக்குக் கிடைத்தது எனக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற எண்ணம் தான் முதலில் எழுகிறது. அதே போல, நேற்று வரை உயரத்தில் இருந்த ஒரு பெரிய மனிதர் திடீரென்று தடுமாறும் போது அவர் வீழ்வதைப் பார்க்கையில் மனதிற்குள் ஒரு குரூரமான திருப்தி பரவிவிடும். அதற்காகத் தான் அங்கிருந்த உறவினர், ஈஸ்வரன் வீழும் தருணத்திற்காக ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அழகான ஓவியத்தில் ஏற்படும் கறையை, பூதாகரமாக்கி ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பதற்காக வல்லூறுகளாய்க் காத்துக்
கொண்டிருந்தார்கள்.

" உனக்குத் தெரியுமா? அந்த ஈஸ்வரமூர்த்தி பெரிய இவன் மாதிரி இவ்வளவு நாளைக்கு முகமூடி போட்டுட்டுத் திரிஞ்சானே? அவனோட கடந்தகால வாழ்க்கையில் எவ்வளவு தப்பு செஞ்சிருக்கான் தெரியுமா? எல்லாத்தையும் மூடி மறைச்சு இத்தனை நாட்களா ஆஷாடபூதியா வேஷம் போட்டுருக்கான். என்னன்னு தெரிஞ்சதும் ஆடிப் போயிட்டேன் நான் " என்று ஆரம்பித்து மொபைல் மூலமாக, அதிவேகமாக இன்னும் சிறிது நேரத்தில் பரவ ஆரம்பித்து விடும்.

" அண்ணா, எதுவா இருந்தாலும் உங்க ரூமுக்குப் போய்ப் பேசலாம் வாங்க" என்று சொன்ன பல்லவி, அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஈஸ்வரனின் ரூமுக்குள் நுழைந்தாள். சத்யனும் , தனது அண்ணனை எழுப்பிக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார். சுற்றியிருந்த உறவினர்க்கு பயங்கர ஏமாற்றம் ஏற்பட்டது. எப்படியும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிந்துவிடும் என்ற ஆவலுடன் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அங்கேயே காத்துக் கொண்டிருக்க ஆரம்பித்தார்கள்.

" இதோ பாரும்மா. நான் இவரோட தம்பியின் மனைவி. கல்யாணம் ஆகி இந்த வீட்டில் காலடி வச்சதிலிருந்து இவரைப் பாத்துட்டு இருக்கேன். எங்களுக்கு எல்லாம் இவர் தெய்வம் மாதிரி. நீ திடீர்னு எங்கிருந்தோ வந்து இவர் மேல பழி போட்டேன்னா , நாங்க நம்பிருவோமா என்ன? ஏதோ காரணத்துனால கல்யாணமே வேண்டாம்னு வாழ்ந்திட்டிருக்காரு. அவரைப் பத்தி எங்களுக்கு நல்லாத் தெரியும். தனக்கு ஒரு மனைவியோ, இல்லை குழந்தையோ இருக்குன்னா எப்பவோ எங்க கிட்ட சொல்லிருப்பாரு. நாங்களும் சந்தோஷமா அவங்களைக் குடும்பத்துல சேத்துட்டுருப்போம். எதையும் எங்களிடம் அவர் மூடி மறைக்க அவசியமேயில்லை. நீ சொல்றதுக்கு எல்லாம் என்ன ஆதாரம்? "
என்று அழுத்தம் திருத்தமாக, கோர்ட்டில் ஒரு திறமையான வக்கீல் பேசுவது போலத் தன் வாதங்களை அந்தப் பெண்ணிடம் எடுத்து வைத்தாள்.

அவளோ கொஞ்சம் கூட அசரவில்லை. அலட்சியமாக பல்லவியைப் பார்த்தவள் ஒரு கேலிப் புன்னகையை முகத்தில் தவழவிட்டாள். அவளை அப்படியே நாலு அறை விடலாமென்று தான் பல்லவிக்குத் தோன்றியது.

அறையின் உள்ளே அவர்கள் நான்கு பேரும் நுழைந்ததுமே, பல்லவி கதவை மூடி விட்டாள். வெளியே இருந்து வம்பு கேட்கக் காத்திருந்த காதுகளில் படாரென்று கதவு மூடப்படும் சத்தம் தான் கேட்டது.

" இப்போ பேசலாம். நீ என்ன சொல்ல வரே? உங்கம்மா பேர் என்ன? இவர் தான் உன் அப்பான்னா இவ்வளவு நாட்களா என்ன பண்ணினே? தெளிவாச் சொல்லு எல்லாம் " என்று கேட்க, அவளும் தைரியமாக பல்லவியைப் பார்த்தாள்.

" சொல்லறேன், சொல்லறேன், எல்லாத்தையும் சொல்லறேன். அதுக்குப் தானே வந்திருக்கேன். எங்கம்மா பேரு வைஜயந்தி" என்று சொல்லி நிறுத்தி விட்டு, ஈஸ்வரனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள். அவருடைய முகம் உடனேயே பேயறைந்தது போல ஆனது. அவளை ஏறெடுத்துப் பார்த்தார்.

" நீ, நீ வைஜயந்தி பொண்ணா? உன் பேரு சைந்தவியா? " என்று ஈஸ்வரன் கேட்டபோது அவருடைய குரல் தழுதழுத்தது.
பல்லவிக்கும், சத்யனுக்கும் அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இந்தத் திருப்பத்தை அவர்கள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இந்தப் பெண் ஏதோ பணத்துக்காக அநியாயமாக ஈஸ்வரன் அண்ணா மீது பழி போடுகிறாள் என்று தான் மனதிற்குள் நம்பினார்கள். ஆனால் இப்போது ஈஸ்வரனே அவளுடைய பேரைச் சொன்னதில் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது அவர்களுக்கு. முதன்முறையாக மனதில் பயம் வந்தது. ஒருவேளை இந்தப் பெண் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற அச்சம்.

" ஆமாம், கரெக்டாச் சொல்லறீங்க? என் பேர் சைந்தவியே தான். நீங்க தான் அந்தப் பேரை ஸெலக்ட் பண்ணிருப்பீங்க இல்லையா? " என்றாள் வெற்றிப் பெருமிதத்துடன்.

ஈஸ்வரமூர்த்தி சடாரென்று தன் தம்பியைத் திரும்பிப் பார்த்தார். இப்போது அவர் முகத்தில் இருந்த குழப்பம் போய் ஒரு தெளிவு வந்திருந்தது. நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்ற துணிச்சல் தெரிந்தது பார்வையில். சட்டென்று மாறிய அந்தப் பார்வை, பல்லவிக்கும், சத்யனுக்கும் அதிர்ச்சி தந்தது.

" சத்யா, எனக்கு இந்தப் பெண்ணோட, ஸாரி ஸைந்தவியோடக் கொஞ்சம் தனிமையில் பேசணும். ஐ நீட் பிரைவசி. ப்ளீஸ், லீவ் அஸ் அலோன் " என்று ஈஸ்வரன் சொன்னார். அப்போது அவர் குரல் என்னவோ கட்டளை இடுவது போலத்தான் இருந்ததே ஒழிய, அவர்களை அவர் வேண்டிக் கொள்வது போல இல்லை.

திடுக்கிட்டுப் போன இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையாட்டியபடி வெளியே வந்தார்கள். ஈஸ்வரன் அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்து போலத்தான் தோன்றியது அவர்களுக்கு.

வெளிறிப்போன முகத்துடன் வெளியே வந்த இருவரையும் மற்றவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள்.

'எங்களை விட்டுட்டு உள்ளே போயி இரகசியமாப் பேசப் போனீங்களே? எங்க கதி தான் உங்களுக்கும் இப்போ! 'என்று கேலி செய்வது போலத் தான் இருந்தது அவர்களுடைய ஏளனப் பார்வை. கையாலாகாதவர்களாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எப்போது எரிமலை வெடிக்கப் போகிறதோ என்று எல்லோரும் காத்துக் கொண்டிருந்த தருணம் அது.

அறைக்குள் இருந்து அழுகைச் சத்தமும், கத்தல் சத்தமும் மெல்லியதாகக் கேட்டன. உரையாடல் எதுவும் தெளிவாக யார் காதிலும் விழவில்லை. கொஞ்ச நேரத்தில் கதவு படாரென்று திறக்க, சைந்தவி புயல் போல வெளியே வந்தாள். முகம் கோபத்தில் சிவந்து காணப்பட்டது. வந்த வேகத்தில் விருட்டென்று வீட்டை விட்டு வெளியே போய் விட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் ஈஸ்வரன் வெளியே வந்தார். வெளியே உட்கார்ந்திருந்த உறவினர்களைப் பார்த்துக் கைகூப்பினார்.

" எல்லாரும் என்னை மன்னிக்கணும். என் மனநிலை இப்போ சரியில்லை. அதுனால நாளை கழிச்சு நடக்க இருக்கும் ஃபங்ஷனை நான் கேன்ஸல் பண்ணறேன். வந்தவங்க எல்லாரும் மதிய சாப்பாடு சாப்பிட்டுட்டு ஊருக்குக் கிளம்பிக்கலாம். உங்களுக்கு என்னால ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்" என்றார்.

" ஈஸ்வரா, என்ன நடந்ததுன்னு விவரமாச் சொல்லறயா? வந்தது நிஜமாவே உன் பொண்ணு தானாப்பா? ஆமாம்னு மட்டும் சொல்லு. அந்தப் பொண்ணோட அம்மாவைத் தேடிக் கண்டுபிடிச்சு உன் கூட நாங்க சேத்து வைக்கிறோம். இப்பக் கூட நீ கல்யாணம் பண்ணிகிட்டு உன் குடும்பத்தோட கொஞ்ச நாட்களாவது சேந்து இருக்கலாம். தப்பே இல்லைப்பா. நாங்க எல்லோரும் உனக்கு உதவி பண்ணத் தயாரா இருக்கோம். தயங்காமல் உன் கருத்தைச் சொல்லுப்பா" என்று வயதான சித்தப்பா ஒருத்தர், ஈஸ்வரனிடம் ஆதரவாகப் பேசினார். நொந்து போன மனத்துக்கு இதமாகப் பேசத்தான் முயற்சி செய்தார் அவர்.

" சித்தப்பா, உங்களோட பிரியமான வார்த்தைகள் மனசுக்குத் தெம்பைத் தருது.
உங்க அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. ஆனால் , நான் இந்த விஷயத்தைப் பத்தி யார் கிட்டயும் பேச விரும்பலை. மன்னிக்கணும், நான் கொஞ்ச நேரம் தனிமையில் கழிக்க விரும்பறேன். சத்யா, டிராவல் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி ட்ரிப்பை கேன்ஸல் பண்ணிடு. திருக்கடையூருக்கும் ஃபோன் பண்ணி, அங்கே நமக்காக ஆர்கனைஸ் பண்ணறவங்க கிட்டப் பேசி எல்லாத்தையும் கேன்ஸல் பண்ணறதாச் சொல்லிடு. பணம் போனாப் போகுது.

அந்த வேனை வேணா, இவங்களையெல்லாம் பஸ் ஸ்டாண்ட், இரயில்வே ஸ்டேஷன் டிராப் செய்யறதுக்கு யூஸ் பண்ணிட்டுத் திருப்பி அனுப்பிடு. பணத்தை அப்புறமா நான் ஸெட்டில் பண்ணிக்கறேன். பல்லவி , எல்லோருக்கும் வயிறு நிறைய சாப்பாடு போட்டு அனுப்பும்மா. எல்லாரும் கெளம்பிப் போற வரைக்கும் நான் ரெஸ்ட் எடுத்துக்கப் போறேன். என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்" என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டார்.

புயலுக்குப் பின் பேரமைதி சூழ்ந்தது அந்த வீட்டில்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
என்ன வெடிகுண்டோ?

எனக்கு 2 எபியா நோட்டிபிகேஷனே வரல
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
என்ன வெடிகுண்டோ?

எனக்கு 2 எபியா நோட்டிபிகேஷனே வரல
இனிமேல் சரியா வந்துடும். நன்றி🙏💕
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ஓஹோ! பின்னணி கதையில் என்ன விவரங்கள் வரப்போகிறதோ!!!

இப்போவே திக்திக் பக்பக்
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஓஹோ! பின்னணி கதையில் என்ன விவரங்கள் வரப்போகிறதோ!!!

இப்போவே திக்திக் பக்பக்
நன்றி🙏💕
 

Mahalakshmi Babu

New member
Joined
Aug 13, 2024
Messages
14
ஈஸ்வரன் பற்றிய இந்த விஷயம் பொய்யாகத்தானிருக்கும்.
 
Top Bottom