• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 3

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

வீணை (veena) ஒரு நரம்பு இசைக் கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.

அத்தியாயம் 3

அடுத்த சதுரங்கக் காயை சாமர்த்தியமாக நகர்த்தினாள் நிர்மலா.

" உன்னோட நல்ல மனசு யாருக்குப்பா வரும்? தம்பி, தங்கைக்காக நீ தான் எல்லாத்தையும் தியாகம் செஞ்சுட்டு நிக்கறபோது அவங்களுக்கு எந்தக் குறையும் வாழ்க்கையில் நிச்சயமாக வராது. இருந்தாலும் இன்னொரு சின்னக் கவலை மனசுல புகுந்து பூச்சாண்டி காட்டுது. அதை நினைச்சாத் தான் பகீர்னு இருக்கு. "

" அது என்னம்மா? சீக்கிரம் சொல்லுங்க. தம்பி ஆஃபீஸில் இருந்து வர நேரமாச்சு. அவன் எதிரில இதையெல்லாம் பேசறது நல்லதில்லை. நீங்க சொன்னது சரிதான் " என்று ஈஸ்வரன் சொன்னதும், நிர்மலா தன்னுடைய அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்தாள்.

" அது வந்துப்பா, வீட்டுச் செலவுக்கு எத்தனை நாளைக்கு உன் கையையே எதிர்பாக்கமுடியும்? பெண்ணையும் கட்டிக் கொடுத்துருக்கற எடத்துல ஆடியென்ன, தீபாவளியென்ன? பொங்கல் என்னன்னு வருஷாவருஷம் எல்லாப் பண்டிகைக்கும் தவறாம சீர் வைக்கணும். பொன்னை வைக்க வேண்டிய எடத்துல பூவாவது வைக்கணும் இல்லையா? நாளைக்கே ஒனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னா, அட, இப்ப இல்லைன்னாலும் ஒரு நாளைக்கு ஆகாதா என்ன? நீயும் உன் குடும்பம், குழந்தைங்கன்னு பாக்க ஆரம்பிச்சுடுவ இல்லையா? உனக்கும் செலவெல்லாம் சமாளிக்கணுமே? எல்லாத்துக்கும் உன் கையை எதிர்பாத்துட்டு நின்னா, அதுவும் உன் பொண்டாட்டி கண் எதுத்தாப்பல , நல்லாவா இருக்கும் நீயே சொல்லு" என்று முடித்தாள் நிர்மலா. அவளுடைய அம்பு சரியாகக் குறி தவறாமல் அவனுடைய நெஞ்சில் தைத்தது.

அம்மாவின் வார்த்தைகள் அவன் மனதைக் கூர்மையாகத் தாக்கின. தன்னுடைய திருமணம், தன்னுடைய தம்பியின் சந்தோஷத்துக்குத் தடைக் கல்லாக இருக்கலாம் என்ற நினைப்பே அவனுக்கு அருவருப்பைத் தந்தது. தன்னை, சத்யனின் தகப்பன் ஸ்தானத்தில் வைத்துத் தான் இவ்வளவு நாட்கள் கடமையாற்றிக் கொண்டிருந்தவனுக்கு இந்த நினைப்பு மிகப்பெரிய குற்ற உணர்வை எழுப்பியது. அப்படிப்பட்ட திருமணம் தனக்குத் தேவையா என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

" அம்மா, இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. எனக்கு வயசாயிடுச்சு. இனிமேலும் எனக்குக் கல்யாணம் ஆகி நான் குடும்பம் நடத்துவேங்கற நம்பிக்கை எனக்கு இல்லை. என் வாழ்க்கை இப்படியே போகட்டும். உங்க மகனா, சத்யனுக்கும், அகிலாவுக்கும் அண்ணனா மீதி வாழ்நாளைக் கழிச்சுட்டுப் போறேன். எனக்குக் கல்யாணமே வேண்டாம். கவலையை விட்டுட்டுத் தம்பி சத்யன் கல்யாணத்துக்கான வேலைகளை ஆரம்பிங்க"

" என்னப்பா இப்படி சொல்லறே? இன்னைக்கு உன் மனசு இந்த முடிவை எடுத்திருக்கு. ஆனா நாளைக்கே உன் மனசு மாறலாம் இல்லையா? மனம் ஒரு குரங்குன்னு தெரியாமலாப் பெரியவங்க சொல்லறாங்க? "

" இல்லைம்மா. கண்டிப்பா மாறாது. இறந்து போன எங்கம்மாவோட படத்துக்கு முன்னால நின்னு இன்னைக்கு உறுதியாச் சொல்லறேன். என் வாழ்க்கையில் கல்யாணம்னு எதுவும் நடக்கவே நடக்காது. இது சத்தியம் " என்று சத்தியம் செய்ததும் தான் நிர்மலாவின் மனம் குளிர்ந்தது.

" என்னப்பா, இப்படி பொசுக்குன்னு சத்தியம் பண்ணிட்டே! நீ கல்யாணமாகாமல் தனிமரமா நிக்கும் போது ஊரும் உலகமும் எங்களை இல்லப்பா ஏசும்? " என்று முதலைக் கண்ணீர் வடித்தாள் நிர்மலா.

" அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நான் கல்யாணம் செஞ்சுக்க லாயக்கானவன் இல்லைன்னு எல்லார் கிட்டயும் நானே சொல்லிக்கறேன்" என்று சொல்லி விட்டுச் சடாரென்று வெளியே போய்விட்டான் ஈஸ்வரன். நிர்மலா போட்டு வைத்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இனிமையாகப் பேசியபடி நெஞ்சில் கத்தியை இறக்கும் நிர்மலா போன்றவர்கள் உலகில் எளிதாக வெற்றிப் படிகளில் ஏறி விடுகிறார்கள். ஈஸ்வரன் போன்ற நல்லவர்கள், அன்புக்கு அடிமையாகித் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக் கொள்கிறார்கள். பாவம் ஈஸ்வரன், அன்றிலிருந்து தன்னுடைய உணர்ச்சிகளை மூட்டை கட்டிப் பரணில் ஏற்றிவிட்டு ஒரு துறவியைப் போலத் தான் அந்த வீட்டில் வாழ்ந்தான்.

ஈஸ்வரனைப் போன்ற அப்பாவிகள் தங்களைப் பெரும் தியாகிகளாக உருவகப்படுத்திக் கொண்டு மெழுகுவர்த்திகளாகக் கரைந்து தங்களை அழித்துக் கொள்ளுகிறார்கள். தங்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அநீதிக்கு எதிராக ஒரே ஒரு முறை குரல் எழுப்பினால் போதும், அத்தனை அநியாயங்களும் புறமுதுகு காட்டித் தோற்று ஓடிப்போகும் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் எதிரே நிற்பவர்களை எதிரிகளாக என்றுமே எண்ணுவதில்லை. அன்பு என்னும் கண்ணாடியை அணிந்துகொண்டு அதன் வழியாகவே எதிரில் நிற்போரைப் பார்க்கிறார்கள். அன்பைப் பார்வையில் வழிய விடுகிறார்கள். அன்பைத் தவிர, வேறு எந்தக் கெட்ட எண்ணமும் அவர்கள் மனதில் எழுவதில்லை.

எல்லாமே நிர்மலாவின் திட்டப்படியே வெற்றிகரமாக நிறைவேறின. பல்லவி, அந்த வீட்டு மருமகளாக நுழைந்து வீட்டில் விளக்கேற்றினாள். அவ்வளவு திறமையாகத் திட்டம் போட்ட நிர்மலா, எதையுமே அனுபவிக்க முடியாமல் விபத்தில் உயிரிழந்தாள். திருமணம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே, ரோடை கிராஸ் செய்யும்போது எதிர்பாராத வகையில் விபத்து நேர்ந்தது. கண்மூடித்தனமான வேகத்தில் வந்த லாரி ஒன்றில் மோதித் தூக்கியெறியப் பட்டாள்.

உடம்பெல்லாம் காயங்கள். எலும்புகள் அனைத்தும் நொறுங்கி எல்லையில்லா வேதனையை அனுபவித்து உயிரை விட்டாள். எதற்கு ஆசைப்பட்டாளோ, அதை உயிரோடு இருந்து பார்க்கக் கொடுப்பினை இல்லை அவளுக்கு. நிர்மலா இல்லையென்றாலும் ஈஸ்வரன் தான் கொடுத்த வாக்கை மீறவில்லை. ஆறுதலான விஷயம் என்னவென்றால், பல்லவி நல்ல பெண்ணாக இருந்தாள். ஈஸ்வரனை அந்த வீட்டின் தலைவராக மனதார ஏற்றுக் கொண்டு மதிப்பும், மரியாதையும் தந்தாள்.

அவருடைய நல்ல மனதையும், தம்பி குடும்பத்துக்காகத் தன்னைத் தானே அர்ப்பணித்து அவர் வாழ்வதையும் புரிந்து கொண்டாள். ஒரு மகளைப் போல அவர் மீது அன்பைச் சொரிந்தாள். குழந்தைகள் நமஸ்வி, மனஸ்வி, அவர்களைத் தொடர்ந்து ஆறு வருடங்கள் கழித்து நிர்மல் பிறந்து, பெரியப்பாவின் மடியில் தவழ்ந்தார்கள்.

பெரியப்பா செய்த தியாகங்கள் அவர்களுக்குப் புரிந்தோ, புரியாமலோ அவரை பீஷ்ம பிதாமகர் என்று செல்லப் பெயர் வைத்து அழைத்தது கூடப் பொருத்தமாகவே அமைந்து போனது. கங்காவின் வயிற்றில் பிறந்து அந்த வீட்டின் பீஷ்மராகிப் போனார் ஈஸ்வரன்.

நிகழ்காலத்துக்குள் நுழைவோம் இப்போது. தம்பியின் குடும்பத்தைத் தாங்கும் பெரிய தூணாக இன்று வரை ஈஸ்வர மூர்த்தி அவர்களுடன் அதே வீட்டில் தான் வசித்து வருகிறார். பெரியப்பா தான் குழந்தைகளைப் பொருத்தவரை நண்பர், ஆசிரியர், தெய்வம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நமஸ்வி, மனஸ்வி படித்து முடித்து இந்த வருடம் தான் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். நமஸ்வி எம். ஏ. பி. எட் படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியை. மனஸ்வி எஞ்சினியரிங்கில் எம். டெக். முடித்துவிட்டு இப்போது தனியார் கம்பெனி ஒன்றில் ஸாஃப்ட்வேர் எஞ்சினியர். நமஸ்வி, வேலை பார்த்துக் கொண்டே தன்னுடைய ஐ. ஏ. எஸ். கனவை நிறைவேற்றிக் கொள்ள கோச்சிங் கிளாஸுக்குப் போய்க் கொண்டிருக்கிறாள்.

நிர்மல் பள்ளி இறுதி வகுப்பு. கூடவே நீட் பரீக்ஷைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு டாக்டராகும் கனவு. குழந்தைகள் மூன்று பேரும் பெரியப்பாவின் செல்லங்கள்.

பெரியப்பாவின் எழுபதாவது வயது ஆரம்பிக்கும் இந்த வருடப் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்து விட்டார்கள்.

" எதுக்கு சத்யா இதெல்லாம்? வெட்டிச் செலவு இல்லையா? பல்லவி தான் புரிஞ்சுக்காமப் பேசறான்னா, நீயும் அவளுக்கு ஒத்தூதறயே? " என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தார் ஈஸ்வரன்.

" அது எப்படி அண்ணா? உங்க அறுபதாவது வயசு முடிஞ்ச போதும் என்னென்னவோ சாக்கு போக்கு சொல்லி எங்களைத் தடுத்து நிறுத்திட்டீங்க? அதுக்கேத்த மாதிரி இவருக்கும் உடம்பு சரியில்லாமப் போயி ஹாஸ்பிடலில் சேக்கறமாதிரி ஆயிடுச்சு. இந்த முறை அபசகுனமா எதுவும் சொல்லிடாதீங்கண்ணா. கண்டிப்பாப் பிரமாதமாக் கொண்டாடணும்" என்று சொல்லி அவருடைய வாயை அடைத்து விட்டாள் பல்லவி.

குழந்தைகளும் பெரியப்பாவைக் கொஞ்சிக் கெஞ்சி ஒத்துழைக்க வைத்து விட்டார்கள். இதோ இன்று மதியம் சென்னையில் இருந்து கிளம்பிப் போகிறார்கள். ஊரிலிருந்து சில நெருங்கிய உறவினர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள, இங்கே வந்து குழுமியிருந்தார்கள்.

வாசலில் மீண்டும் காலிங்பெல் சத்தம்.

" நிர்மல், போய் வாசக்கதவைத் திறந்து யாருன்னு பாரு. நம்ப ரிலேடிவ் யாராவது தான் இருக்கும் " என்று சமையலறையில் இருந்து பல்லவி குரல் கொடுக்க, நிர்மல் விரைந்து சென்று கதவைத் திறந்தான்.

வெளியே நின்றது ஓர் இளம் பெண். முகம் பளிச்சென்று இருந்தாலும் அவள் உடுத்தியிருந்த ஆடையில் அவளுடைய ஏழ்மை தெரிந்தது. சரியான அளவில் கூடத் தைக்கப்படாத சல்வார் கமீஸ். தொளதொளவென இருந்தது அவளுக்கு. பலமுறை தோய்க்கப்பட்டு நிறம் மாறிய ஆடை. தலை கலைந்திருந்தது. பரிதாபமாக இருந்தது அவளைப் பார்க்க. நெஞ்சோடு ஒரு சிறிய பயணப்பையை அணைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

" யாரு நீங்க? யாரைப் பாக்கணும்? "

" ஈஸ்வரமூர்த்தி வீடு தானே இது? "

" ஆமாம், வாங்க, அவர் உள்ளே ஹாலில் தான் இருக்கார்" என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றான் நிர்மல்.

" பெரியப்பா, உங்களைப் பாக்கத் தான் இந்த அக்கா வந்திருக்காங்க" என்று குரல் கொடுக்க, அவரும் ஆர்வத்துடன் தலையை நிமிர்ந்து பார்த்தார் அவளை. யாரென்று அவருக்குப் புரியவில்லை.

அவளோ ஈஸ்வரமூர்த்தியை நோக்கி வேகமாக அடிகளை வைத்து அவரெதிரே சென்று நின்றாள்.

" அப்பா" என்று கதறி அழுதுகொண்டே அவருடைய கால்களில் விழுந்தாள். அங்கே இருந்த அனைவரும் திடுக்கிட்டுப் போய்ப் பார்க்க, ஈஸ்வரனின் முகம் வெளிறிப் போனது. வாயடைத்துப் போய் நின்று கொண்டிருந்தார்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
சொந்த தமக்கையின் மகனையே மாற்றாந்தாய் போல நடத்தி தனிமரமாக்கி அதில் வெற்றியும் கண்ட நிர்மலா, தனது சாணக்கிய திட்டம் எதையும் அனுபவிக்காமல் துர்மரணம் சந்தித்தது நல்ல poetic justice!

ஆனாலும், "அப்பாவா ஆஆ ஆஆ ...."
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
சொந்த தமக்கையின் மகனையே மாற்றாந்தாய் போல நடத்தி தனிமரமாக்கி அதில் வெற்றியும் கண்ட நிர்மலா, தனது சாணக்கிய திட்டம் எதையும் அனுபவிக்காமல் துர்மரணம் சந்தித்தது நல்ல poetic justice!

ஆனாலும், "அப்பாவா ஆஆ ஆஆ ...."
நன்றி🙏💕
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
இந்த மாதிரி கல்மிஷ மனசு இருந்ததால் தான் எதையும் அனுபவிக்க முடியாமல் ஆக்சிடென்ட்ல போய் சேர்ந்தா.
அப்பாவா? 🤔🤔🤔🤔
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இந்த மாதிரி கல்மிஷ மனசு இருந்ததால் தான் எதையும் அனுபவிக்க முடியாமல் ஆக்சிடென்ட்ல போய் சேர்ந்தா.
அப்பாவா? 🤔🤔🤔🤔
நன்றி🙏💕
 
Top Bottom