• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 13

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 13

வீணை செய்வதற்கு முக்கியமாக பலாமரத்தையே உபயோகிக்கிறார்கள்.

மரத்தை பண்ருட்டியில் இருந்து வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஆறு வீணைகள் வரை செய்யலாம். சரஸ்வதி வீணை, ஏகாந்த வீணை என்ற இரண்டு வகையான வீணைகள் தஞ்சாவூரில் செய்யப்படுகின்றன. வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம். நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது குறையத்தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும்.

தஞ்சாவூர் நகரம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதியில், வீணை தயாரிக்கும் பணியில், 150 கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 2,000 வீணைகள் செய்யப்படுகின்றன.

நமஸ்வி, மனஸ்வியோ பார்கவி அலையஸ் சைந்தவியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

' பாவம் தான் இந்தப் பொண்ணு. இந்தச் சின்ன வயசுல இவ மனசுக்குள்ள தான் எவ்வளவு சோகம்? ஆனா அவளோட கதைக்கும் பெரியப்பாவுக்கும் என்ன சம்பந்தம்னு தான் புரியலை' என்று நினைத்த சகோதரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது, இருவர் மனங்களிலும் ஒரே சிந்தனை தான் ஓடுகிறதென்று புரிந்து கொண்டார்கள். பார்கவியின் வாயிலிருந்து பெரியப்பாவைப் பற்றிய தகவல் எப்போது வரப்போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரமும் நெருங்கிக் கொண்டே வந்தது.

" சைந்தவியோட உடைமைகளைத் தேடின சமயத்தில் அவளுக்குக் குழந்தையில் ஆதரவு தந்த அந்த அனாதை ஆச்ரமத்தின் அட்ரஸ் கிடைச்சது. அங்கே போய் விசாரிச்சேன். முதலில் குழந்தைகளைப் பத்தின தகவல்களைச் சொல்லமாட்டோம்னு சொன்னாங்க. அப்புறம் சைந்தவி இப்போ உயிரோடு இல்லைன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அந்த நிர்வாகிக்கு
என் மேல இரக்கம் வந்தது.

அவங்க தான் குழந்தையை ஆசிரமத்தில் கொண்டு வந்து சேர்த்தது ஈஸ்வரன்னு ஒருத்தர்னும் குழந்தையோட அம்மா பேர் வைஜயந்தின்னும் சொன்னாங்க. மூணு வயசில சைந்தவி ஆச்ரமத்துக்கு வந்ததாகச் சொன்னாங்க. அப்போ வைஜயந்தி இறந்து போயிட்டாங்களாம். ஆசிரமத்தில் சேத்ததுக்கப்புறமும் ஈஸ்வரன், சைந்தவியோட படிப்புச் செலவுக்காகத் தொடர்ந்து பணம் அனுப்பிருக்காரு. ஆனால் நேரில் வந்து பாத்ததில்லையாம்" என்று சொல்லி நிறுத்தினாள் பார்கவி.

" நீங்க சொல்லறதை வச்சு பெரியப்பா தான் அந்தக் குழந்தையோட அப்பான்னு எப்படி சொல்ல முடியும்? தனக்குத் தெரிஞ்சவங்க யாருக்கோ உதவி செய்திருக்கலாம் இல்லையா? " என்றாள் மனஸ்வி.

" நீ கேக்கறது நியாயமான கேள்வி தான். நான் ஈஸ்வரன் தான் சைந்தவியோட அப்பான்னு நினைக்கலை. ஆனால் அவருக்கு சைந்தவியோட அப்பா யாருன்னு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். அவர் பணம் அனுப்பின செக்கோட டீடெயில்ஸ் வச்சு அவரைப் பத்தி விசாரிச்சேன். அவர் பேங்கில் வேலை செய்யறதைப் பத்தித் தெரிஞ்சது. எல்லாரும் நல்லவிதமாத் தான் சொன்னாங்க அவரைப் பத்தி. நான் விசாரித்தபோது அவர் வேலையில் இருந்து ரிடயர் ஆயிருந்தார். அப்பத் தான் என் மனசில ஒரு ஐடியா வந்தது.

நேரடியா அவர் வீட்டுக்குப் போய் அவரையே கேக்கணும்னு நெனைச்சேன். ஏழைப் பொண்ணா வேஷம் போட்டுட்டு அவர் முன்னால நின்னேன். என்னோட தோற்றத்தைப் பார்த்து அவர் மனசில் இரக்கம் வரும்னு நெனைச்சேன். இந்த திடீர் அட்டாக்னால அவர் மனசுல ஒளிச்சு வச்சிருக்கிற உண்மைகளைக் கொட்டிடுவார்னு நினைச்சேன். ஒருவேளை அவரே சைந்தவியோட அப்பாவாக இருந்தாலும் அவரோட ரியாக்ஷனை வச்சு அதையும் கண்டுபிடிச்சுடலாம்னு நெனைச்சேன் " என்று சொல்லி முடித்தாள் பார்கவி.

" உண்மை தெரிஞ்சுதா? உங்க பிளான் எவ்வளவு தூரம் வொர்க் அவுட் ஆச்சு? " என்று கேட்டாள் நமஸ்வி.

" அவர் என்னைப் பார்த்து பயப்படலை. பதறவும் இல்லை. எல்லாரையும் வெளியே அனுப்பிட்டு என்னோட தனியாப் பேசினார்.
வைஜயந்தி தன்னோட பேங்கில் வேலை பாத்ததாகவும், சில வருடங்களுக்கு அப்புறம் டிரான்ஸ்ஃபார்ல போயிட்டதாகவும் சொன்னார். சைந்தவியோட படிப்புக்குத் தொடர்ந்து உதவி செய்ததைக் கூட அவர் பெருமையாச் சொல்லலை. யாரோ தத்து எடுத்துகிட்டதுக்கு அப்புறம் தான் பணம் அனுப்பறதை நிறுத்திருக்கார். அவளோட அப்பா பேரைச் சொல்ல மறுத்துட்டார். ஒரு குடும்பத்தோட நிம்மதியை அது கெடுத்துடும்னு சொன்னார். எவ்வளவோ கெஞ்சினேன். சண்டை போட்டேன். எதுக்குமே அவர் மசியலை. தோல்வியோட திரும்பினேன்" என்று தன் இயலாமையை வெளிப்படுத்தினாள் பார்கவி.

" எங்க பெரியப்பா, சைந்தவியோட அப்பா இல்லைன்னு உங்களுக்குப் புரிஞ்சுதா இல்லையா? " என்ற மனஸ்வியிடம்,

" புரிந்தது. அது மட்டும் உறுதியாகத் தெரிஞ்சது. ஆனாலும் அவர் உண்மையைச் சொல்லாமல் மறைக்கறாரேங்கற கோபத்தோட உங்க வீட்டு விட்டு வெளியே போனேன்" என்று முடித்தாள் பார்கவி.

" நீங்க யோசிக்காமல் செஞ்ச காரியத்துனால அவர் வீட்டை விட்டே போயிட்டார் பாத்தீங்களா? இப்போ உங்களுக்கு என்ன கெடைச்சது? " என்று குற்றம் சாட்டிய அந்தப் பெண்களுக்கு பார்கவியால் பதில் சொல்ல முடியவில்லை.

" நீ இந்த விஷயத்தில் இவ்வளவு தூரம் முயற்சி செஞ்சதை மட்டும் எங்க கிட்ட சொல்லிருந்தேன்னா, நாங்களே உனக்கு உதவி செஞ்சிருப்போம். நீ இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுருக்கத் தேவையே இருந்திருக்காது" என்று சொன்ன அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் பார்கவி.

" என்னம்மா சொல்லறீங்க? உங்களுக்கு என்ன தெரியும்? "

" ஹைதராபாத் வீட்டில் இருந்த சைந்தவி டிரஸ்களை எல்லாம் நம்ம வீட்டில் வேலை செஞ்சவங்களோட பொண்ணுக்காக நான் கொடுத்தேன். அந்த டிரஸ்களுக்கு நடுவில் ஒரு பழைய ஃபோட்டோ இருந்ததாச் சொல்லி என் கிட்ட அவங்க கொடுத்தாங்க. நீ அப்போ வெளிநாட்டில் இருந்தே. பழைய விஷயங்களைக் கிளறித் திரும்பவும் உன் மனசை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நெனைச்சு உன் கிட்ட அந்த விஷயத்தைச் சொல்லாம மறைச்சேன்"

" எங்கே இருக்கு அந்தப் படம்? சீக்கிரமா எனக்குக் காமிங்க" என்று பரபரப்புடன் எழுந்தாள் பார்கவி. பார்கவியின் அம்மா உள்ளே சென்று அந்தப் பழைய புகைப்படத்தைக் கொண்டு வந்து காண்பித்தாள். அதில் இரண்டு வயதுக் குழந்தையாக சைந்தவி, தன் பெற்றோருடன் நின்று கொண்டிருந்தாள்.

பார்கவி பார்த்துவிட்டு,

" நீங்களும் பாருங்க இந்தப் படத்தை" என்று நமஸ்வி, மனஸ்வியிடம் நீட்டினாள். படத்தைப் பார்த்து விட்டு, " இவரா? " என்று கத்தினார்கள் இரண்டு பேரும்.


சில நாட்கள் கழித்து ஒரு மாலை நேரம். வாரணாசியில் ஈஸ்வரன் கங்கைக் கரையில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்துலும் அவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு, அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

" அங்கிள், இன்னைக்கு உடம்பு எதுவும் சரியில்லையா உங்களுக்கு? ஒரு மாதிரி இருக்கீங்களா? டாக்டர் கிட்டப் போலாமா? "

" இல்லைப்பா வேணாம். ஏதோ மனசுக்குள்ள குழப்பமா இருக்கு. நான் விட்டுட்டு வந்த என் உறவுகளை ஒருதடவை பாக்கணும்னு மனசுல தோணுது."

" நாளைக்கு நீங்க எப்படியும் முக்தி பவன் ரூமைக் காலி பண்ணனும். பேசாமல் உங்க ஊருக்கே திரும்பிடுங்க. உங்களோட சொந்த பந்தங்களோட நிம்மதியா இருக்கலாம் இல்லையா? "

" இல்லை அப்துல். அது வேணாம். ஒரு தடவை வேண்டாம்னு உதறிப் போட்ட உறவுகளைத் திரும்ப எதுக்கு சேத்துக்கணும்? இப்படியே இங்கயே நிம்மதியா இருந்துட்டுப் போறேன். கடைசி வரைக்கும் இனிமேல் இதுதான் என்னோட இடம்" என்றார்.

" அங்கிள், போனவருஷம் இங்கே ஒரு விஷயம் நடந்தது. ஒரு வயதானவர், தன்னோட மகனோட இங்கே முக்திபவனில் வந்து தங்கியிருந்தார். எண்பத்தஞ்சு வயசு இருக்கும் அவருக்கு. பதினைந்து நாட்கள் தான் ரூம் தருவோம்னு அவர் கிட்டயும் சொல்லிருக்காங்க. அவரும், ' நான் பதினைந்து நாட்கள் தான் உயிரோட இருப்பேன். சரியாகப் பதினாறாவது நாள் என் உயிர் பிரிஞ்சுடும்'னு சொல்லிருக்கார்.

அவருக்குப் பெருசா உடம்புக்கு ஒண்ணும் இல்லை. வயசானதுல ஒரு பலவீனம். அவ்வளவு தான். பத்து நாட்கள் கழிச்சுத் தன் மகன் கிட்டே அழுது புலம்பிருக்கார். ' சின்ன வயசுல கோபத்துல என் தம்பி கிட்ட சண்டை போட்டு சொத்தைப் பிரிச்சேன். வீட்டுக்கு நடுவில கோடு போட்டேன். நான் செஞ்சது தப்புன்னு இப்போ தோணுது. எனக்கு என் தம்பியைப் பாத்து மன்னிப்பு கேக்கணும். இனிமேல் ரெண்டு குடும்பங்களும் ஒத்துமையா இருக்கணும் 'னு சொல்லிருக்காரு.

உடனே அவர் பையனும் சித்தப்பாவிடம் மொபைலில் பேசிட்டு, அப்பாவையும் பேச வச்சிருக்காரு. அவரோட தம்பி, அண்ணனிடம் பல வருஷங்களுக்கு அப்புறம் பேசினதும் உருகிப் போயிட்டாராம்.
உடனே அண்ணனைப் பாக்கக் கிளம்பி ஓடிவந்துட்டாரு. அவரைப் பாத்துப் பேசின சந்தோஷத்தில் சரியாகப் பதினாறாவது நாள் உயிரை விட்டுட்டாரு. இது உண்மையா நடந்தது. எல்லோரும் இதைப் பத்தி இங்கே அடிக்கடி பேசிக்குவாங்க" என்றான் அப்துல்.

" நீ சின்னவனா இருந்தாலும் மிகப் பெரிய தத்துவத்தை எனக்கு எடுத்து சொல்லிட்டே. பிறப்பும், இறப்பும் நம்ம கையில இல்லை. போகும்போது எதுக்கு நம்ம மனசில வேண்டாத அழுக்கை சேத்து வச்சுக்கணும். நான் என் தம்பியைக் கூப்பிட்டுப் பேசிடறேன். அப்புறம் என்னிடம் உதவி கேட்டு ஒரு பொண்ணு வந்தா. அவளுக்கும் நான் உண்மையை சொல்லிடப் போறேன் " என்று முடிவு செய்து விட்டு அங்கிருந்து எழுந்தார்.

அன்று பல நாட்களுக்கு அப்புறம் அவருக்கு பயங்கரமாகத் தலை வலிக்க ஆரம்பித்தது. தலையைப் பிடித்தபடி கீழே உட்கார்ந்தவருக்கு அடுத்து என்ன ஆகுமோ என்ற பயம் வந்தது. அதிக வலியால் வலிப்பு வந்து உடல் வெட்டி இழுக்க ஆரம்பித்தால் அவரால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்தவர், நடுங்கும் கரங்களால் மொபைலை எடுத்து சத்யனின் எண்ணை அழுத்தினார்.

" சத்யா, நான் இங்கே வாரணாசியில் இருக்கேன். உங்களை எல்லாம் கடைசியா ஒரு தடவை பாக்கணும்னு ஆசையா இருக்கு. குழந்தைகளைக் கூட்டிட்டு ஒரு தடவை வரயா ? " என்று சொல்லிக் கொண்டிருந்த போது வலி மிகவும் அதிகமாகித் துடிக்க ஆரம்பித்தார். உடனேயே கையும், காலும் கோணி இழுக்க ஆரம்பித்தது. அப்துல் உடனே மொபைலை வாங்கி, எதிர்ப்பக்கம் இருந்தவருக்குத் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தகவல் சொன்னான். அங்கேயிருந்த மக்களின் உதவியுடன் ஈஸ்வரனை அருகிலிருந்த மருத்துவமனயில் சேர்த்தான்.

தன்னுடைய கட்டுரைக்கான தகவல்களை சேகரிக்க வாரணாசிக்கு அன்று காலையில் தான் வந்திருந்தான் தர்ஷன். பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியின் கெஸ்ட் ஹவுஸில் மதிய உணவிற்குப் பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவனை, மீண்டும் மீண்டும் பிடுங்கி அழைத்தது மொபைல் .

" தர்ஷன், வாரணாசில தானே இருக்கே? " என்று படபடத்தது மனஸ்வியின் குரல்.

" ஆமாம், இன்னைக்குக் காலையில் தான் வந்தேன். என்னாச்சு? "

" பெரியப்பா அங்கே தான் இருக்காராம். அவரிடம் இருந்தே ஃபோன் கால் வந்தது. இப்போ உடம்பு சரியில்லைன்னு அங்கே ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிருக்காங்க. நான் உனக்கு டீடெயில்ஸ் எல்லாம் வாட்ஸப்பில் அனுப்பறேன். நீ கொஞ்சம் போய்ப் பார்த்து அவருக்குத் தேவையான ஹெல்ப் பண்ணறயா? நாங்க எல்லோரும் கிளம்பி வந்துட்டிருக்கோம். ஃப்ளைட் டிக்கெட் கிடைச்சதும் வந்துருவோம். ப்ளீஸ், நாங்க வர வரைக்கும் அவரை ஜாக்கிரதையாப் பாத்துக்கோயேன்" என்று கெஞ்சியது மனஸ்வியின் குரல்.

" இதோ நான் இப்பவே கிளம்பிப் போறேன். டோன்ட் வொர்ரி. சரியாயிடும் அவருக்கு. நான் போய்ப் பாத்துட்டு எப்படியிருக்கார்னு சொல்லறேன்" என்று உறுதியளித்து விட்டு செயலில் இறங்கினான்.




தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 
Last edited:

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சைந்தவி அப்பா 🤔🤔🤔🤔🤔ஈஸ்வரன் தம்பியா இருப்பாரோ
 
Top Bottom