• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்- 4

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
13
என்றென்றும் வேண்டும்-4

12 ஆசனங்களைத் தேர்ந்தெடுத்து, பதஞ்சலி முனிவர் வடிவமைத்துக் கொடுத்த அதி அற்புதமான பயிற்சி தான் சூரிய நமஸ்காரம்.

முதலில் நேராக நின்று கொண்டு கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்கே கரங்களைக் கூப்பிக் கொள்ளவும். இதுதான் நமஸ்கார முத்திரை. பிறகு அப்படியே பின்னோக்கி வளையவும். இது அஞ்சலி முத்திரை.

பின், முன்னோக்கி வளைந்து கீழ்நோக்கிக் குனிந்து முட்டியை மடக்காமல், இரண்டு கைகளாலும் இரண்டு பாதங்களையும் தொட வேண்டும். இது பாத ஹஸ்த ஆசனம்.

வலது காலை மட்டும் முன்புறமாக வைத்து, முன்னோக்கிப் பார்க்க வேண்டும். இது அஷ்வ சஞ்சலனம்.அடுத்து இரு கால்களையும் பின்னே நீட்டி, மலை போல ஆங்கில ‘வி’ எழுத்து வடிவில் நிற்க வேண்டும். இது மேரு ஆசனம்.

பின்னர், உடலின் அத்தனை அங்கங்களும் பூமியில் படுவது போலப் படுக்க வேண்டும். இதன் பெயர், அஷ்டாங்க பூமி ஸ்பரிசம். பிறகு, தலையை மட்டும் மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இது புஜங்க ஆசனம்.

இதற்கடுத்து, மேரு ஆசனம், அஷ்வ சஞ்சலனம், பாத ஹஸ்த ஆசனம் என்று பின்னோக்கி ஒவ்வொரு நிலையாகப் போய், இறுதியாக நமஸ்கார முத்திரை நிலையில் நின்று, கைகளைத் தொங்கப் போடவேண்டும்.

இது தான் சூரிய நமஸ்காரத்தின் முழுமையான ஒரு சுற்று.

பலன்கள்:

உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அனைத்து அவயங்களுக்கும் புத்துணர்வு கொடுக்கும். இதயம், கல்லீரல், குடல், வயிறு, மார்புப் பகுதி, தொடைப் பகுதி, கால்கள் பலப்படும். எடையைக் குறைக்க உதவும்.

மன அழுத்தம், மனச் சோர்வு மற்றும் படபடப்பு எல்லாம் மறைந்துவிடும். பெண்களின் மாதவிலக்குச் சுழற்சி சீராகும். முகத்தில் சுருக்கங்கள் மறைந்து, ஒரு பொலிவு உண்டாகும். மொத்தத்தில் உடலை ஆரோக்கியமாகவும் மனதை அமைதியாகவும் வைத்திருக்கும்


விஸ்வநாதனுக்கு காலையில் வழக்கம் போல ஐந்து மணிக்கு விழிப்பு வந்து விட்டது. கழுத்தில் வழக்கத்துக்கு மாறாய் எதோ அழுத்த மெல்ல அரைத் தூக்கத்தில் அதை தடவினான்.

காயத்ரி தன் இடக்கையால் அவன் கழுத்தை கட்டிக் கொண்டிருந்தாள். மெல்ல திரும்பி பார்த்தான். அவன் புறம் முகத்தை வைத்தபடி காயத்ரி கவிழ்ந்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்திலும் அவன் கழுத்தில் இருந்த பிடி இறுக்கமாக இருந்தது.

முதல் நாள் இரவு அவன் கேட்ட கேள்வியில் தன்னை குழப்பத்துடன் பார்த்தவளை எளிதாகவே விஸ்வநாதன் தன்வசப்படுத்திக் கொண்டான்.

தாம்பத்தியத்தின் ஒவ்வொரு படியிலும் அவள் தயங்கும் போதும் பயப்படும் போதும் அன்போடும் பொறுமையோடும் அரவணைத்தவனை தூக்கத்திலும் நம்பும் அளவுக்கு இருந்த மனையாளை காதலுடன் பார்த்தான்.

மெல்ல அவள் கன்னத்தை வருடி "நிஜமாவே நீ குழந்தைடி பட்டூ!" என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

அவன் முத்தம் தூக்கத்துக்கு இடைஞ்சலாய் இருக்க இடது கையால் அவன் முகத்தை தள்ளி விட்டு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள் அவன் பட்டூ.

சிரித்தபடி எழுந்து வேட்டியை சரியாக கட்டிக் கொண்டு வெளியே வந்தவனை மூன்று பெண்மணிகளும் எதிர் கொண்டனர்.

அவன் அம்மா, அத்தை, மாமியார் மூவரும் அந்த அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு கூடத்தில் இவர்களை எதிர்பார்த்து கவலையுடன் காத்திருந்தனர்.

இரவு முழுதும் எப்போது காயத்ரி சண்டை போட்டு அழுது கொண்டு வெளியே வந்து விடுவாளோ என்று தூக்கம் வராமல் புரண்டபடி இருந்தவர்கள் காலையில் நான்கு மணிக்கே எழுந்து குளித்து விட்டார்கள்.

எப்போது கதவு திறக்கும் என்று அமர்ந்திருந்தவர்களை விஸ்வநாதன் எதிர்பார்க்காததால் அவனுக்கு அவர்களைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.

மேலே போட்டிருந்த அங்கவஸ்திரத்தை சரி செய்து கொண்டு "என்னமா! ஏன் இங்க உக்காந்துண்டு இருக்கேள்? "என்றபடி மெல்ல நடந்து அவர்கள் அருகே வர அங்கே எரிந்த ட்யூப் லைட் வெளிச்சத்தில் அவன் கன்னத்தில் காயத்ரி முதல் நாள் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு பளிச்சென்று தெரிந்தது.

அதை மூவரும் பார்த்து விட்டு கவனமாக அடுத்தவரை பார்ப்பதை தவிர்த்தனர். மனதுக்குள் மூவருக்கும் நிம்மதி பரவ ஜானகிக்கோ 'அப்பாடா' என்றிருந்தது.

"விச்சு! இன்னிக்கி காயத்ரி தான் வாசல் தெளிக்கணும் பா. அதுக்கு தான் காத்திண்டு இருக்கோம். நீ காயத்ரியை எழுப்பு"

என்று பத்மா சொல்ல

"சரிம்மா.." என்று விஸ்வநாதன் அவர்கள் அறைக்குள் மறுபடி போனான்.

காயத்ரி இன்னும் அதே போல கவிழ்ந்து படுத்து அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

விஸ்வநாதன் அவளருகே போய் கன்னத்தை மெல்ல தட்டி "பட்டூ! எழுந்துக்கோ..! விடிஞ்சிடுத்து பாரு..." என்று சொல்ல அவளிடம் அசைவே இல்லை.

மீண்டும் அழுத்தமாய் தட்டி அவளை உலுக்க தூக்கத்தை கெடுத்த கோபத்தில்

"போங்கோன்னா! ராத்திரியும் என்னை தூங்கவே விடல. இப்பவும் தூங்க விட மாட்டேங்கிறேள். எனக்கு தூக்கமா வருது..."

என்று கத்த விஸ்வநாதன் வேகமாய் அவள் வாயைப் பொத்தினான்.

வெளியே மூவரும் வந்த சிரிப்பை புடவை தலைப்பால் மறைத்துக் கொள்ள ஜானகிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

'இப்படி ஒரு அசடை பெத்தேனே!' என்று இருவரையும் சங்கடமாய் பார்த்தாள்.

"சித்தி! அவளை தூக்கத்துல எழுப்பினா இப்படி தான் கத்துவா.."

என்று சமாளிக்க பத்மா

"விடு அம்மாளு! சின்னஞ்சிறுசுக! அப்படி இப்படி தான் இருக்கும்..." என்று சமாதானம் செய்தார்.

விஸ்வநாதன் உள்ளே காயத்ரியை வலுக்கட்டாயமாய் எழுப்பி உட்கார வைத்தான்.

அப்போதும் கண்கள் மூடிக் கொள்ள உட்கார்ந்தபடியே தூங்கியவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும் வெளியே இருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

மெல்ல அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு "பட்டூ..! வெளில எல்லோரும் உனக்காக காத்துண்டு இருக்கா. முழிச்சிக்கோ..!"

என்று மறுபடி சொல்ல காயத்ரி மற்றதெல்லாம் விட்டு

"என்னான்னா சொன்னேள்? பட்டூ வா? என்னையா சொன்னேள்..?"

என்று கண்களை விரித்து கேட்க விஸ்வநாதன் தன்னையும் மீறி அந்த கண்களில் இதழ் பதித்தான்.

"ஆமாண்டி பட்டூ! நீ அவ்ளோ சாஃப்ட்டா இருக்கே"

என்றவன் அவளை அதற்கு மேல் பேச விடாமல் தூக்கி தரையில் நிற்க வைத்தான்.

அப்படியே வெளியே செல்ல காயத்ரி கதவை திறக்க விஸ்வநாதன் வேகமாய் போய் கையைப் பிடித்து நிறுத்தினான்.

"ட்ரெஸ்ஸை சரி பண்ணிண்டு போ!" என்ற பிறகு தான் குனிந்து பார்த்தாள். எப்போதும் நைட்டியில் தூங்குபவள் நேற்று புடவையோடு தூங்கியிருக்க அது அலங்கோலமாய் இருந்தது.

"இது ஒண்ணு..!"

என்று அலுத்துக் கொண்டவள் சுமாராக சரி செய்து அப்படியே வெளியே போக முயன்றாள். ஏற்கனவே வெளியே அவர்களின் பார்வையை எதிர் கொண்டு விட்டு வந்திருந்த விஸ்வநாதனுக்கு இவள் இப்படியே போனால் மானம் போகும் என்று "காயத்ரி!" என்று அழுத்தமாய் சொல்லி அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

பட்டூ என்று குழைந்தவன் காயத்ரி என்று அதிகாரமாய் அழைக்கவும் காயத்ரி திரும்பி அவனைப் பார்த்தாள். பார்வையில் இப்போது லேசாய் பயம் தெரிந்தது.

அவளை கூர்ந்து பார்த்தபடி "புடவையை ஒழுங்கா கட்டிண்டு அப்புறம் வெளில போ!" என்று விஸ்வநாதன் சொன்ன விதத்தில் அவள் மேலிருந்த மயக்கம் இப்போது துளியும் தெரியவில்லை.

ஒரு நொடி அவனை வெறித்தவள் புடவையை ஒழுங்காக கட்டிக் கொண்டு 'இப்போ திருப்தியா?' என்பது போல ஒரு பார்வை பார்த்து அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் கன்னத்தில் ஒட்டியிருந்த தன் பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிக் கொண்டு விருட்டென்று வெளியே போனாள்.

அவள் பொட்டை எடுத்ததும் 'இப்படியேவா போனோம்!' என்று விஸ்வநாதனுக்கு அவமானமாகி விட்டது.

மறுபடியும் அவர்களை பார்க்க கூச்சப்பட்டு படுக்கையை ஒழுங்கு செய்யும் சாக்கில் அறைக்குள்ளேயே இருந்தான்.

வெளியே போன காயத்ரியை மூன்று பெண்மணிகளும் ஆராய்ச்சி கண்ணோடு பார்க்க அவள் கண்ணுக்கு அத்தை தான் முதலில் தெரிந்தார்.

"எனக்கு ஒரே தூக்கமா வருது அத்தை! ராத்திரி பூரா தூங்கலை..!" என்று கண்ணை கசக்கினாள் காயத்ரி.

அவள் இப்படி பேசவும் ஜானகி "ஏழு கழுத வயசாச்சு! இன்னும் யார் கிட்ட எப்படி பேசறதுனு வெவஸ்தை இல்லை...' என்று மனதுக்குள் திட்டினாலும் 'அந்த வரைக்கும் மாப்பிளையோட ஒத்துப் போனாளே' என்று ஆறுதலும் அடைந்தார்.

மற்ற இரு பெண்மணிகளும் அவள் பேசியதை கேட்ட மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை.

"அம்மாடி! நான் சொல்றதெல்லாம் செஞ்சிடு. இப்ப காத்தால நல்ல நேரம் பாத்து பாலிகை தெளிக்க சுமங்கலிகளை வர சொல்லியாச்சு. அவா போனாவுட்டு சாப்புட்டு படுத்துக்கோ..என்ன?" என்று அத்தை சமாதானம் சொல்ல "ஸ்வீட் அத்தை!" என்று அவரை கட்டிக் கொள்ளப் போனாள் காயத்ரி.

முன்பு வீட்டில் இப்படி எப்போதாவது தூக்கத்தில் எழுந்திருந்தால் அம்மாவைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் அவர் தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்சுவாள்.

இப்போதும் அதே நினைவில் அம்மா மேலிருந்த கோபத்தால் அத்தையிடம் போய் அவரை கட்டிக் கொள்ளப் போக ஜானகி தான் சத்தம் போட்டார்.

"அடியே! அவா ஏற்கனவே குளிச்சிட்டா. நீ விழுப்போட மேல படாதே!" எனவும் காயத்ரி அம்மாவை முறைத்தாள்.

'மறுபடியும் திட்ட ஆரம்பிச்சிட்டியா?'

"காயத்ரி! இன்னிக்கி நீ தான் நம்மாத்து வாசல்ல ஜலம் தெளிச்சு கோலம் போடணும். அதுக்கு தான் உன்னை எழுப்ப சொல்லி விச்சு கிட்ட சொன்னேன்.

நீ போய் வாசல் தெளிச்சு கோலம் போட்டு சட்டுனு குளிச்சிட்டு வந்துரு. நான் உனக்கு தூக்கம் கலைய நன்னா ஸ்ட்ராங்கா ஒரு காஃபி போட்டு தரேன். அதை குடிச்சேன்னா தன்னால தூக்கம் போய்டும். போடிம்மா!" என்று பத்மா வாசல் பக்கம் அழைத்து சென்றார்.

மூவரும் கலைய அதற்காகவே காத்திருந்த விஸ்வநாதன் வேகமாக கொல்லைப்புறம் நோக்கிப் போனான்.

விஸ்வநாதன் எப்போதும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கொள்வான். எழுந்ததும் காலைக்கடனை முடித்து குளித்து விட்டு நெற்றியிலும் நெஞ்சிலும் கைகளிலும் விபூதியை தண்ணீரில் குழைத்து பட்டையாய் இட்டுக் கொண்டு கையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரோடு மொட்டை மாடிக்கு வந்து விடுவான்.

லேசான இளம் வெயிலில் ஆதித்திய ஹ்ருதயம் ஸ்லோகத்தை சொல்லியபடி நூற்றியெட்டு முறை சூரிய நமஸ்காரம் செய்வான்.

அதன் பிறகு வியர்வையில் நனைந்த உடலை அங்கேயே லேசாய் தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டு காலை சந்தியா வந்தனமும் (சந்தி என்றால் இரவும்- அதிகாலையும்., காலையும்-மதியமும்., மாலையும்-இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம்.அப்படிபட்ட சந்தியாகாலத்தில் சூரியனை பிரார்த்தித்து செய்யக்கூடிய வந்தனம் சந்தியாவந்தனம்) நூற்றியெட்டு முறை காயத்ரி மந்திரத்தையும் ஜபம் செய்த பிறகே கீழே வருவான்.

அதுவரை தண்ணீர் கூட குடிக்க மாட்டான்.

சிறு வயதில் அவன் அப்பா பழக்கப்படுத்தியதை ஒரு நாள் கூட விட்டதேயில்லை.

பல வருடங்களாய் சூரிய நமஸ்காரம் செய்ததில் ஜிம் போகாமலே அவன் வயிறு ஒட்டி உடல் இறுகியிருந்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ரத்தம் பாய்ந்ததில் நிறம் கூடிட அதோடு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாததால் முகம் ஜொலித்தது.

தினமும் செய்யும் பிராணாயாமத்தால் அவன் உடம்பு சரியில்லாமல் படுத்ததே இல்லை.

அன்றும் வழக்கம் போல தலைக்கு குளித்து குடுமியை உச்சியில் முடிச்சிட்டு பஞ்ச பாத்திரத்துடன் மாடியேறப் போனவனை பத்மா வழி மறித்தார்.

"விச்சு! இன்னிக்கு காத்தால பாலிகை கரைக்க சுமங்கலிகளை வரச் சொல்லிருக்கேன். நீ பாட்டுக்கு மாடியிலேயே நாழி ஆக்காம சுருக்க முடிச்சிண்டு வந்துடு. கல்யாணம் விஜாரிக்க இன்னிக்கும் நிறைய பேர் வருவா.

காயத்ரி ஸ்நானம் பண்ணினதும் பால் காச்சி சாமிக்கு வெளக்கேத்தற போது நீயும் இங்க இருக்கணும்."

என்று அன்றைய நிகழ்ச்சி நிரலை பட்டியலிட விஸ்வநாதன் தலையாட்டி விட்டு கிளம்பினான்.

அவன் எல்லாம் முடித்து கீழே வரும் போது காயத்ரிக்கு ராஜ உபச்சாரம் நடந்து கொண்டிருந்தது.

ஜானகி அவளுக்கு உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அத்தை அவள் தலையை துவட்டிக் கொண்டிருக்க பத்மா அவளுக்கு இதமான சூட்டில் காபியை ஆத்திக் கொண்டிருந்தார்.

"காயத்ரி சுருக்க இந்த காப்பிய குடிச்சிட்டு தலையை வாரி பூவை வெச்சுக்கோ! நேத்தி கல்யாணத்துக்கு வராதவா எல்லாரும் இன்னிக்கி கல்யாணம் விஜாரிக்க வருவா.

அவா வந்ததும் பாலிகை தெளிச்சாவுட்டு ஆத்து மனுஷியா நீ தான் அவாளுக்கெல்லாம் தாம்பூலம் பட்சணம் எல்லாம் தரணும்!"

என்று அடுத்து அவளுக்கும் நிகழ்ச்சி நிரல் சொன்னார்.

விஸ்வநாதன் அங்கே நிற்பதை பார்த்து

"நீ ஏண்டா விச்சு மசமசன்னு நிக்கறே? போய் ஒரு நல்ல மயில் கண் வேஷ்டியா கட்டிண்டு வா. உனக்கு ஒரு தரம் தனியா சொல்லணுமா?”

என்று பத்மா அவனையும் விரட்டினார்.

"அம்மா! எனக்கெல்லாம் காஃபி கிடையாதா?" என்று கேட்டபடி காயத்ரியை பார்க்க அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

காபி டம்ளரில் முகத்தை விட்டுக் கொண்டு குடித்துக் கொண்டிருந்தாள். அவன் மேல் கோபமாய் இருக்கிறாளாம்.

ஜானகி தான் அவன் வந்ததுமே பரபரப்பாக எழுந்து கொண்டு புடவைத் தலைப்பையும் மரியாதையாக தோளை சுற்றி போர்த்திக் கொண்டார்.

"ஏம்மா! நான் சின்ன வயசுல இப்படி எச்சை பண்ணி குடிச்சா என் தலையிலேயே கொட்டுவே. இப்ப இவளை கேக்க மாட்டியா?"

கேள்வியை அம்மாவிடம் கேட்டாலும் பார்வை கிண்டலாய் மனைவியிடம் தான் இருந்தது. காயத்ரி அது தனக்கில்லை என்பது போல அத்தையிடம் நெருங்கி உட்கார்ந்தாள்.

"டேய்! குழந்தையை சும்மா வம்பிழுக்காதே! வாசல்ல என்னமா கோலம் போட்டிருக்கா பாரு. நீ போய் சீக்கிரம் வேஷ்டி மாத்திண்டு வா. பாலை காச்சி சாமிக்கு நைவேத்தியம் பண்ணனும்.. காயத்ரி இப்ப ரெடியாயிடுவா." என்று விரட்டினார்.

"சித்தி! அவருக்கு காபி போடலியா?" ஜானகி தான் தயங்கி தயங்கி கேட்டார்.

"உன் மாப்பிள்ளைக்கு அடுப்புல கஞ்சி போட்டுண்டு இருக்கேன். அவன் காலம்பற காபி சாப்பிட மாட்டான். சும்மா வம்பிழுக்கறான்." என்று பத்மா பதில் சொன்னார்.

"அம்மா! அரவிந்த் எங்கே?" என்று விஸ்வநாதன் தம்பியை விசாரிக்க "அவனுக்கு இன்னும் பொழுது விடியலடா. பெரிய உள்ளுல (அறை) நன்னா இழுத்துப் போத்திண்டு தூங்கறான்." என்று பத்மா திட்ட தம்பிக்கு பரிந்து கொண்டு வந்தான் விஸ்வநாதன்.

"அம்மா! அங்கே தான் பாடசாலைல தூங்க விட மாட்டா. விடிகாலம்பறவே எழுப்பி விட்ருவா. இங்கேயானும் சித்த தூங்கட்டுமே .."

'ஓ! அவனும் நம்ம செட்டா?' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட காயத்ரிக்கு முதல் நாள் "மன்னி...! மன்னி..!" என்று அழைத்தபடி ஹோமப் புகைக்கு விசிறி விட்டு சாப்பிட லேட்டாகும் என்று அவ்வப்போது பாலும் ஜூசும் கொடுத்து என அரவிந்த் பார்த்து பார்த்து செய்தது நினைவு வந்தது.

'இந்தாத்துல எல்லாரும் நல்லவாளா இருக்கா! இவரைத் தவிர..' என்று ஓரக்கண்ணால் விஸ்வநாதனை பார்த்தாள்.

ஓரிரு முறை அவளை பார்த்தவன் அவள் முறுக்கிக் கொண்டதும் அதன் பிறகு அவள் பக்கம் கூட பார்க்கவில்லை.

'இன்னிக்கி ராத்திரி பட்டூ ..மொட்டூன்னுண்டு பக்கத்துல வரட்டும்..அப்புறம் வெச்சுக்கறேன்..'

அவள் முறுக்கிக் கொண்டதும் அவன் அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க அவனோ 'சரி தான் போடி' என்பது போல போய் விட்டான்.

உடை மாற்ற தன்னுடைய அறைக்கு போகும் வழியில் வாசலை எட்டிப் பார்க்க நிஜமாகவே காயத்ரி பெரிய கோலம் போட்டிருந்தாள். சுற்றிலும் செம்மண் இட்டு கல்யாண கோலமாகவே இருந்தது.

'பரவால்ல. டம்மி பீசுக்கும் கொஞ்சம் தெரியுது..' என்று நினைத்தபடி விஸ்வநாதன் தன் அறைக்குப் போனான்.

அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிப் பறந்தது.

காயத்ரி பால் காய்ச்சி சாமி விளக்கேற்றி பாலை நிவேதனம் செய்து எல்லோருக்கும் கொடுத்தாள். அத்தை பாடச் சொல்லவும் அவளுக்கு பிடித்த 'குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' பாடலை பாட அதன் இனிமையில் விஸ்வநாதனின் புருவம் உயர்ந்தது.

எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாய் அவன் நிற்க அவன் பக்கத்தில் நிற்பதையே கவனிக்காதது போல காயத்ரி நடந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் பத்மா அழைத்திருந்த சுமங்கலிகள் வந்து விட காயத்ரியே அவர்களை அன்பாக வரவேற்றாள்.

ஒரு பெரிய பாத்திரத்தில் நீரெடுத்து வந்து நடுவில் வைத்து பக்கத்தில் மூளை விட்டிருந்த நவதானியங்கள் நிறைந்த சிறு மண் வட்டில்களை ஒரு பெரிய பித்தளை தாம்பாளத்தில் வைத்திருந்தனர்.

கல்யாணத்துக்கு முதல் நாள் போட்டிருந்த பாலிகை (மூளை விட்ட நவதானியம்) யை முதலில் வீட்டுக்கு பெரிய சுமங்கலியாய் ஜானகி தண்ணீரில் கரைக்க அடுத்து பெண்ணும் மாப்பிள்ளையும் செய்தனர்.

அதன் பிறகு வந்திருந்த மற்ற சுமங்கலிப் பெண்கள் கரைக்க அவர்களுக்கு காயத்ரியே தாம்பூலம் கொடுத்தாள்.

நேரம் ஓடியதில் விஸ்வநாதனின் மேலிருந்த கோபம் கூட மறந்திருந்தாள்.

விஸ்வநாதன் அதன் பிறகு ஓரமாய் ஒதுங்கி மாமனாரோடு அமர்ந்து கொண்டான். வந்திருந்த அனைவரும் அந்த பாத்திரத்தை சுற்றி வந்து கும்மி கொட்டி பாடினர்.

வந்தவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்பிய பிறகே அரவிந்த் எழுந்து வந்தான்.

"ஏண்டா! எல்லாம் முடிஞ்சப்புறமா எழுந்து வரியா..?" என்று பத்மா அவனை அதட்ட அத்தை "குழந்தையை வெஸ்ஸாதே! கோந்தே! நீ போய் சட்டுனு குளிச்சிட்டு வா. சூடா எல்லாரோடையும் சாப்பிடலாம்." என்று அன்பாய் சொன்னார்.

அது தான் அத்தையின் இயல்பு. எல்லோரிடமும் அன்பு மட்டும் தான் காட்டத் தெரியும்.

அந்த அன்பு அம்மாவை முறைத்த அரவிந்தை "இதோ வந்துட்டேன் அத்தை.." என்று சொல்லி குளிக்க ஓட வைத்தது.

அந்த அன்பு தான் காயத்ரியை தானே விரும்பி கோலம் போட்டு பாட்டுப் பாடி வந்தவரை இன்முகமாய் உபசரிக்க வைத்தது.

சாப்பிட்ட பிறகு ஜானகியும் வெங்கடேசனும் கிளம்பினர்.

உள்ளுக்குள் அம்மாவும் அப்பாவும் தன்னை இங்கேயே விட்டு விட்டு போவதை நினைத்து அழுகையாய் இருந்தாலும் தன்னை வற்புறுத்தி இந்த திருமணத்தை நடத்தி வைத்த கோபம் இன்னும் காயத்ரிக்கு போகவில்லை.

அதனாலேயே இருவரிடமும் தேவைக்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் கிளம்புவதாக சொன்ன போது கூட சரியென்றதோடு சரி.

பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு அல்லவா?

வெங்கடேசனுக்கும் ஜானகிக்கும் தாங்கள் பொத்தி வளர்த்த ஒரே மகளை என்ன தான் உள்ளூரில் கொடுத்திருந்தாலும் பிரிய மனம் வரவில்லை.

ஜானகி மகளை கட்டிக் கொண்டு அழுதே விட வெங்கடேசனுக்குமே கூட லேசாக கண் கலங்கியது.

இருவரையும் விஸ்வநாதனும் பத்மாவும் அத்தையும் சமாதானம் செய்ய காயத்ரி பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் கோபத்திற்கான காரணம் விஸ்வநாதனுக்கு தெரியும் தானே? அதை நினைத்ததும் முகம் இறுக வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் மாமியார் மாமனாரை இன்முகமாகவே ஆறுதல் சொன்னான்.

அவர்கள் கிளம்பியதும் பத்மாவும் அத்தையும் கூடத்தில் ஒரு ஓரமாக படுத்துக் கொள்ள காயத்ரியும் அத்தை பக்கத்திலேயே படுத்து தூங்கி விட்டாள்.

அத்தையின் இடுப்பில் கை போட்டு அவர் தலைக்கு வைத்துக் கொள்ளும் ரெக்சின் தலையணையிலேயே ஒண்டிக் கொண்டு தூங்கியவளை பார்த்த விஸ்வநாதன் புன்னகைத்துக் கொண்டான்.

விஸ்வநாதனுக்கு பகலில் தூங்கிப் பழக்கம் இல்லையென்பதால் அங்கே கூடத்திலேயே அமர்ந்து அடுத்த வாரத்தில் தான் ப்ரோஹிதம் செய்யப் போக வேண்டிய இடங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

மாலையில் பத்மா விஸ்வநாதனை காயத்ரியோடு கோயிலுக்கு போய் வர சொன்னார்.

கல்யாணப் பெண்ணாக இன்னும் சில நாட்களுக்காவது எல்லா நகைகளும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று பத்மா ஏற்கனவே சொல்லியிருந்தார்.

அதனால் பச்சையில் மஞ்சள் கரை வைத்த பட்டுப் புடவையில் நிறைய நகைகளை அணிந்து கிளம்பியிருந்தாள் காயத்ரி.

மயில் கண் பட்டு வேஷ்டியும் வெள்ளை முழுக்கை சட்டையும் அணிந்து கம்பீரமாக கிளம்பி எதிரே நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் காயத்ரி.

கழுத்தில் தங்கச் சங்கிலியும் இடது கையில் வாட்சும் அணிந்து சிவந்த நிறத்தோடு நல்ல உயரத்தோடு ஆணழகனாய் நின்றவனை பார்த்து ரசித்தவளுக்கு அவன் குடுமியும் காதில் இருந்த வைரக் கடுக்கனும் கண்ணில் பட மெல்ல முகம் மாறியது.

'நீங்க இந்த குடுமி கடுக்கனை எடுத்துட்டு ஒரு ஜீன்ஸ் டீஷர்ட் போட்டுண்டு என்னோட வரப்படாதா?' என காயத்ரிக்கு சொல்ல வேண்டும் போலிருந்தது.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் அவள் முக மாற்றத்திற்கான காரணத்தை உடனே புரிந்து கொண்டான்.

ஆனாலும் பக்கத்தில் அம்மாவும் அத்தையும் நின்றிருந்ததால் எதுவும் சொல்லாமல் இருவரும் கிளம்பி வெளியே வர விஸ்வநாதன் பைக்கை எடுத்தான். காயத்ரி அவன் தோளைப் பிடித்து பின்னால் ஏறினாள்.

வண்டி கிளம்பிய பிறகும் அவள் தோளில் இருந்து கையை எடுக்காமலே இருக்க விஸ்வநாதன் பைக்கை ரோட்டோரமாக நிறுத்தினான்.

தோளில் இருந்த அவள் கையை எடுத்து விட்டவன் "பைக்ல சைடுல இருக்கிற கம்பியை பிடிச்சுக்கோ காயத்ரி..!" என்றான்.

அவன் சாதாரணமாக சொன்னாலும் காயத்ரிக்கு அது முகத்தில் அடி வாங்கியது போல இருந்தது. அவள் கம்பியை பிடித்த பிறகே விஸ்வநாதன் வண்டியை எடுத்தான்.

கோயிலிலும் அவள் பக்கத்தில் நிற்காமல் இரண்டடி முன்னால் இறுகிய முகத்தோடு நடந்தவனை நெருங்கவே காயத்ரிக்கு பயமாக இருந்தது.

'அவன் என்னை வெறுத்து விட்டானோ?' என்ற பயம் காயத்ரியின் மனதில் தோன்ற இருவரும் மௌனமாகவே வீட்டுக்குள் நுழைந்தனர்.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்- 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom