• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்-3

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
13
என்றென்றும் வேண்டும்-3

பூமியில் பிறந்த அனைவருக்கும் தங்களுடைய பித்ருக்கள், அதாவது, முன்னோர்களை திருப்திபடுத்த வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு. அந்தக் கடமையின் பெயர்தான் பிரஜோத்பத்தி (மக்கட் பேறு).

அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது. படைக்கும் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவினுடைய அருளாசி அந்த நேரத்தில் தேவைப்படுகிறது
.

வம்சம் விருத்தி அடையும் போது தான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் மோட்ச கதிக்குச் செல்ல இயலும்.

இந்த உலகத்தையே இயக்குகின்ற அந்த சிவசக்தி ஐக்கியத்தினை ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற நேரம் தான் சாந்தி முகூர்த்தம் என்பது

சாந்தி முஹூர்த்தத்திற்கான நேரம் இரவு ஒன்பதரை என்பதால் வழக்கமாக எட்டு மணிக்கே தூங்கி விடும் அத்தையும் பத்மாவும் விழித்திருந்தனர்.

வெங்கடேசன் இரவு பலகாரம் சாப்பிட்டதும் படுக்க போய் விட்டார். அரவிந்தும் போய் தூங்கி விட காயத்ரி ஒரு அறையில் சாந்தி முஹூர்த்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

கண்ணை உறுத்தாத வெளிர் பச்சை மைசூர் சில்க் புடவை அதில் இருந்த அரக்கு பார்டரிலேயே ரவிக்கையும் இருக்க கழுத்தில் காலையில் விஸ்வநாதன் அணிவித்த தாலிச்சரடோடு ஒரு சின்ன நெக்லஸ் மட்டுமே.

கைகளில் இரண்டிரண்டு வளையல்கள். காதில் இருந்த மாட்டலைக் கூட கழற்றி இருந்தாள்.

ஜானகி மகளின் தலையை சீவிக் கொண்டிருந்தார்.

"அம்மா! இதெல்லாம் வேண்டாம் மா!" மீண்டும் ஆரம்பித்தாள் காயத்ரி.

ஏற்கனவே பிடிக்காத திருமணம். இதில் காலையில் இருந்து தன்னை முறைத்தபடி இருக்கும் கணவனின் அறைக்கு தனியாக போவதை நினைத்தாலே அவளுக்கு பயமாக இருந்தது

பல முறை பொறுமையாய் சொல்லியும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்த பெண்ணின் மேல் அதற்கு மேல் பொறுமை காட்ட முடியாமல் ஜானகி காயத்ரியின் தலையில் ஓங்கி நங்கென்று கொட்டினார்.

"திருப்பி திருப்பி அச்சானியமா (அபசகுனமாக) பேசிண்டே இருக்கே? அங்க போய் மாப்பிள்ளைட்ட எதாவது நொரநாட்டியம் பேசினே? உன்னை தொலைச்சுடுவேன்." என்றபடி அவள் கன்னத்தை குத்தினார்.

ஏற்கனவே அம்மா கொட்டியதால் உச்சி மண்டை சுரீரென்றிருக்க கன்னத்தை வேறு குத்தியதில் வெடுக்கென்று எழுந்தாள் காயத்ரி.

"நீ ஒண்ணும் பின்னி விட வேண்டாம் போ!" என்று விரிந்திருந்த கூந்தலுடன் வெளியே வந்தாள்.

வெளியே பத்மா ஏற்கனவே விஸ்வநாதனை வறுத்துக் கொண்டிருந்தார். காலையில் இருந்து மணமக்களை பார்த்துக் கொண்டிருந்தார் தானே அவர்.

"டேய் அம்பி! காயத்ரி குழந்தைடா. ஆளு வளந்திருக்காளே தவிர வெகுளி. நானும் பாத்துண்டே தான் இருந்தேன். நேத்திலேருந்து நீ குழந்தையை முறைச்சிண்டே இருக்கே.

உன் மொரட்டு தனத்தையெல்லாம் குழந்தைட்ட காட்டப் படாது (காட்டக் கூடாது) பாத்துக்கோ! அந்த பிராமணர் நம்மள நம்பி குழந்தையை நம்மாத்துக்கு அனுப்பிச்சிருக்கார். அவளை அனுசரிச்சு போ! அவளை கண் கலங்காம பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு. சொல்லிட்டேன்! "

பத்மா பேசப் பேச விஸ்வநாதன் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். அத்தையும் அங்கே தான் இருந்தார்.

'யாரு அவ குழந்தையா? அவ்வளவு திமிரா இருக்கா? நான் கேட்டேனா இன்ஜினியரிங் படிச்சவளை கல்யாணம் பண்ணி வெக்க சொல்லி? நீங்களா பண்ணி வெச்சிட்டு இப்ப சப்போர்ட்டும் அவளுக்கேவா?'

மனதில் தோன்றினாலும் அம்மாவை எதிர்த்து பேசவில்லை.

அப்போது தான் காயத்ரி தலை முடி விரிந்திருக்க அழுதபடி ஓடி வர இருவரும் பதறி விட்டனர். ஜானகி விதியை நொந்தபடி பதட்டமாக பின்னால் வந்தார்.

அத்தை வேகமாக முன்னால் போய் "என்னடா கோந்தே? (கொழந்தே) ஏன் அழறே?" என்று கேட்க காயத்ரி அவரைக் கட்டிக் கொண்டு ஒரே அழுகை.

பத்மாவும் பதறி அவள் அருகில் போய் நிற்க விச்சு இருந்த இடத்தை விட்டு நகராமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜானகி சங்கடமாய் அவனைப் பார்த்தார்.

"அத்தை! அம்மா என் தலையிலேயே கொட்டறா! கன்னத்துல குத்தறா! எனக்கு ரொம்ப வலிக்கிறது."

என்று சொல்லி கண்ணீர் விட பத்மா ஜானகியை முறைத்தார்.

"ஜானகி! குழந்தையை ஏன் அடிக்கிறே? நல்ல நாளும் அதுவுமா குழந்தையை அழ வெச்சிண்டு?"

மாமியார் அதட்டவும் காயத்ரியின் அழுகை இன்னும் அதிகமானது.

ஜானகியால் மெல்லவும் முடியவில்லை. முழுங்கவும் முடியவில்லை. விஸ்வநாதனும் அங்கேயே இருக்க அவர் காரணத்தை எப்படி சொல்வார்?

அதற்கு வேலை வைக்காமல் காயத்ரியே காரணத்தை சொல்லி விட்டாள்.

"ராஜாத்தி! அம்மா ஏன் உன்னை வெஸ்ஸா (திட்டினார்)? என்னடா கண்ணு நடந்தது?" என்று அத்தை கேட்கவும் காயத்ரி தன் எதிரிகளை மொத்தமாய் போட்டுக் கொடுக்க முடிவெடுத்தாள்.

ஏற்கனவே மாமியார் அம்மாவைத் திட்டியது தைரியம் தர அத்தையின் தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டு

"அது...அது..நான் சாந்தி முஹூர்த்தம் எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்...அதான் அம்மா அடிச்சா! எனக்கு பயமா இருக்கு அத்தை..."

என்று விஸ்வநாதனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு காயத்ரி சொல்ல விஸ்வநாதனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

கடைசியில் இது ஒரு டம்மி பீசா? அந்த விறைப்பும் முறைப்பும் சும்மா பந்தாவுக்கா?

விஸ்வநாதன் மட்டும் அல்ல பத்மாவுக்கும் அத்தைக்கும் கூட சிரிப்பு வந்தது. சிரித்தால் காயத்ரி வருந்துவாள் என அதை மறைத்துக் கொண்டனர்.

பத்மா 'பாத்தியா? நான் சொன்னது போல அவ குழந்தைடா!' என்று விஸ்வநாதனைப் பார்க்க அதற்கு மேல் விஸ்வநாதன் அங்கே நிற்கவில்லை. எதுவும் சொல்லாமல் தன்னுடைய அறைக்கு போய் விட்டான்.

"வா! நான் பின்னி விடறேன்!" என்று அத்தை கண்களை துடைத்து தலை சீவி பின்னி விட்டார். ஜானகி கையோடு கொண்டு வந்த ஜாதி மல்லிகையை நீட்ட அதையும் அவரே வைத்து விட்டார்.

பக்கத்தில் பத்மா அமர்ந்திருக்க ஜானகியும் அங்கே தான் இருந்தார். அவர் விளக்கம் கொடுக்க வந்ததை கண்களாலேயே தலையசைத்து மறுத்தவர்

"காயத்ரி! விச்சு உன்னோட ஆம்படையான். அவனைப் பாத்து நீ பயப்படலாமா? எதுவா இருந்தாலும் அவன் கிட்ட தைரியமா பேசு. அவன் எதானும் சொன்னான்னா என் கிட்ட சொல்லு. நான் தட்டிக் கேக்கறேன். என்ன? இனிமே அழப்படாது. "

என்று பொறுமையாய் சொல்ல விஸ்வநாதன் அங்கே இல்லாத தைரியத்தில் காயத்ரி அவனை கிட்டத்தட்ட வில்லன் போல சித்தரித்தாள்.

"அம்மா! அவர் என்னை முறைச்சிண்டே இருக்கார். எது சொன்னாலும் அதிகாரம் தான். எனக்கு அவரை பாத்தாலே பயமாவே இருக்கு. ஒரு வேளை அவரும் என்னை அடிப்பாரோ?"

பத்மா அதிர்ந்து ஜானகியை பார்க்க ஜானகிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவருக்கு காயத்ரியைப் பற்றி நன்றாகத் தெரியும். தனக்கு வேலையாக வேண்டுமானால் கூசாமல் பொய் சொல்வாள். தங்கமான மாப்பிள்ளையை அவள் குறை சொன்னதும் அவருக்கு பிடிக்கவில்லை.

எல்லா பெண்களுக்கும் அதுவும் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து செய்யும் திருமணத்தில் முதலிரவு எனும் போது கொஞ்சம் பதட்டம் இருக்கும் தான். பயம் கூட இருக்கும் தான்.

ஆனால் காயத்ரியின் பயம் ரொம்பவே அதிகப்படியாக இருக்க இருவருக்கும் நடுவில் என்ன நடந்ததோ என்று பத்மாவுக்கு கவலை வந்தது.

இருவரும் எப்படி சொன்னாலும் குற்றம் வந்து விடுமோ என மௌனமாய் இருக்க அத்தை தான் பொறுமையாய் காயத்ரியிடம் பேசி அவளை விச்சுவின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

காயத்ரி ஒருவாறு சமாதானமாகி 'அதுவும் விஸ்வநாதன் திட்டினாலோ அடித்தாலோ வெளியே வந்து விடுவேன்' என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு தான் போனாள்.

கையில் பாலிருந்த வெள்ளி சொம்புடன் விஸ்வநாதனின் அறைக்கு காயத்ரி போக வெளியே இருந்த மூன்று பெண்மணிகளுக்கும் தூக்கம் போனது.

"சித்தி! அவ சொல்றதை எல்லாம் நம்பாதீங்கோ. மாப்பிள்ளை தங்கமான மனுஷர். இது தான் ரெண்டும் கெட்டான். இப்படி உளறினா என்ன பண்றது? எப்படி குடித்தனம் பண்ணப் போறாளோ?"

என்று ஜானகி புலம்ப பத்மாவுக்கு என்னவோ அவர் பிள்ளை மேல் தான் சந்தேகமே.

காயத்ரி விஸ்வநாதனின் அறைக்குள் தயங்கித் தயங்கி காலடி எடுத்து வைக்க விஸ்வநாதன் கட்டிலில் அமர்ந்தபடி அவளையே பார்த்திருந்தான்.

முதலிரவு அலங்காரம் எதுவும் வேண்டாம் என்று அவன் சொல்லி விட்டதால் அறை சாதாரணமாக இருந்தது.

அவனருகே வந்ததும் பயமாய் இருந்தாலும் கண்களை மூடி துணிச்சலை வரவழைத்துக் கொண்டு தான் ஏற்கனவே முடிவு செய்திருந்ததை மடமடவென்று சொல்லி விட்டாள்.

"இதோ பாருங்கோ! எனக்கு இந்த பர்ஸ்ட் நைட் பிடிக்கலை. அதனால நீங்க என்னை தொடப்படாது."

அவள் சொல்லி முடித்தும் எந்த எதிரொலியும் இல்லாமல் போக அவன் கோபமாய் இருக்கிறானா என்று ஒரு கண்ணை லேசாய் திறந்து பார்த்தாள்.

விஸ்வநாதன் எந்த உணர்வுமில்லாமல் அவளை பார்க்க காயத்ரிக்கு பயத்தில் கை கால் வெடவெடத்தது.

"தீண்டாதே திருநீலகண்டமா?" என்று அமைதியான குரலில் கேட்க காயத்ரி ‘ஞே’ என்று விழித்தாள். அவளெங்கே திருநீலகண்டர் கதையெல்லாம் கேட்டிருக்கிறாள்?

அவளுக்கு தெரிந்தது பேட்டையும் பரட்டையும் தான்.

அவள் முகத்தில் பயம் குறைந்து ஆர்வம் தெரிந்தது. அப்படியெல்லாம் அடித்தோ திட்டியோ விட மாட்டான் என்று தோன்றியது. சாப்பிடும் போது கூட அவள் சொன்னதும் விட்டு விடவில்லையா?

"அப்படின்னா?" என்று புரியாமல் கேட்க விஸ்வநாதனின் முகத்தில் புன்னகை.

"ஏன் நின்னுண்டே இருக்கே? இப்படி உக்காந்துக்கோ!" என்று பக்கத்தில் கட்டிலில் கையைக் காட்ட அவளும் பாலை பக்கத்தில் இருந்த மேஜையில் வைத்து விட்டு அமர்ந்தாள். ஆனாலும் சற்று தள்ளித் தான்.

"நீ திருநீலகண்டர் சினிமா பாத்ததில்லையா?" என்று கேட்க அவள் படமெங்கே அந்தப் பெயரையே கேட்டதில்லையே.

அவள் "ம்ஹூம்.." என்று தலையாட்ட விஸ்வநாதனின் பார்வை ஆடிய ஜிமிக்கியில் பதிந்தது.

"சரி! சவாலே சமாளி பாத்திருக்கியா?"

அவன் கேட்கும் சினிமா எதையும் பார்த்ததில்லையே. அதில் அப்படி என்ன இருக்கு என்ற யோசனையில் உதட்டை கடிக்க அவன் பார்வை அவள் உதட்டில் படிந்தது.

"மேகம் கருத்திருச்சு படமாவது பாத்திருக்கியா? பிரபு படம்" என்று அடுத்து கேட்க காயத்ரி அதற்கும் உதட்டை பிதுக்கினாள்.

அவன் பார்வை மீண்டும் அழுத்தமாய் அவள் உதட்டில் படிய சற்றே அவள் பக்கம் நகர்ந்து உட்கார்ந்தான்.

காயத்ரியின் கவனம் முழுதும் அவன் கேட்ட சினிமாவில் இருக்க அவன் தன்னருகே நகர்ந்து வருவதை உணரவில்லை.

சவாலே சமாளி படத்துல ஜெயலலிதா இப்படி தான் சிவாஜியை "என்னை தொடக் கூடாது" ன்னு சொல்லிடுவா.

அப்போ சிவாஜி நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே..? அப்படின்னு பாட்டு பாடுவார். நானும் அது மாதிரி பாடணுமா?"

காயத்ரி இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கையை பிசைய விஸ்வநாதன் தன் இடது கையால் அவள் வலது கையைப் பிடித்தான்.

அவள் அவன் தொடுகையில் திடுக்கிட்டு அவனைப் பார்க்க அவன் எதுவுமே நடக்காதது போல

"மேகம் கருத்திருக்கு படத்துல கூட இப்படி தான். ஹீரோயின் பிரபுவை பிடிக்கலைனு சொன்னதும் அழகான புள்ளி மானே உனக்காக பிறந்தேனேன்னு தப்பை தட்டிண்டே பாட்டு பாடுவார். இப்ப நானும் அப்படி தான் பண்ணணுமோ?"

என்று தானே யோசிப்பது போல பேச காயத்ரிக்கு சங்கடமாக இருந்தது.

பாவமாய் அவனைப் பார்க்க விஸ்வநாதன் இன்னும் நெருங்கி அவள் பக்கத்தில் அமர்ந்தவன் அவள் கையை விட்டு விட்டு இடது கையால் அவள் தோளை அணைத்துக் கொண்டான்.

காயத்ரி கூச்சத்தில் நெளிய ஒன்றுமே நடக்காதது போல "பாரு காயத்ரி! உனக்கு சாந்தி முஹூர்த்தம்னா என்னனு தெரியுமா?" என்று கேட்க காயத்ரி தெரியும் என்று தலையசைத்தாள்.

"என்ன?"

"வந்து...பர்ஸ்ட் நைட் .." என்று காயத்ரி மெல்லிய குரலில் சொல்ல விஸ்வநாதன் மறுப்பாய் தலையசைத்தான்.

"அத ஏன் முஹூர்த்தம்னு சொல்றா தெரியுமா?" என்று கேட்க இப்போது கொஞ்சம் தைரியம் வந்து காயத்ரி திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.

நெருக்கத்தில் அவன் கூர்மையான கண்களும் லேசாய் குழி விழுந்த கன்னங்களும் சிவந்த உதடுகளும் அவளை என்னவோ செய்ய அவளுக்கு பேச்சே வரவில்லை.

மீண்டும் தலையை குனிந்து கொண்டு "இல்லை" என்பது போல தலையை மட்டும் அசைத்தாள்.

அவள் மட்டும் அப்போது நிமிர்ந்து பார்த்திருந்தால் விஸ்வநாதன் அவளைப் பார்த்து சிரிப்பது தெரிந்திருக்கும்.

விஸ்வநாதன் கையை தோளில் இருந்து எடுத்து மெல்ல அவள் இடையில் வைக்க காயத்ரிக்கு என்னவோ செய்தது.

லேசாய் நெளிய மெல்ல அவளைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான் விஸ்வநாதன்.

"என்ன நீ இப்படி காத்து போல இருக்கே? சரியா சாப்பிட மாட்டியா? இன்னிக்கி கூட நீ சரியாவே சாப்பிடல. நான் தான் பாத்துண்டே இருந்தேனே..?"

அவள் தலையில் இருந்த மல்லிகை அவனை மயக்க தன் மடியில் தலை குனிந்து அமர்ந்திருந்தவளின் தோளில் மூச்சுக் காற்று பட பேச காயத்ரிக்கு அவள் மறுப்பெல்லாம் மெல்ல மறந்து விடும் போல இருந்தது.

மெதுவாக நழுவி பக்கத்தில் அமர முயன்றவளை இடையில் கை வைத்து அழுத்தி "சாந்தி முஹூர்த்தம் பத்தி தெரிஞ்சிக்க வேண்டாமா?" என்று கேட்க காயத்ரிக்கு பதில் சொல்ல பேச்சே வரவில்லை. காற்று தான் வந்தது.

மெல்ல அவள் சேலையை விலக்கி அவள் வயிற்றில் கை வைத்தவன் "உனக்கு உன்னை மாதிரி அழகா சமத்தா குழந்தை பொறக்கணுமா? இல்ல என்னை மாதிரி அசிங்கமா ராட்சஸனா குழந்தை பொறக்கணுமா?" என்று கேள்வி கேட்டான்.

அவன் உதட்டில் நெளிந்த புன்னகை முன்னால் தலை குனிந்து இருந்தவளுக்கு தெரியவே இல்லை.

அவன் தன்னையே தாழ்த்திக் கொண்டதில் அவனைப் பார்த்து பாவமாகி விட "நீங்களும் நன்னா தான் இருக்கேள்." என்று பதில் சொல்ல அவன் சிரிப்பு விரிந்தது.

"இல்லையே! அப்படி தெரியலியே." என்றவன் அவளை மெல்லத் தன் பக்கம் திருப்பி "உனக்கு கண்ணு எவ்வளவு அழகா இருக்கு..?" என்றவன் அவள் கண்ணில் மெல்ல தன் உதடுகளைப் பதிக்க காயத்ரிக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

"உன் உதடு பாரு. அப்படியே ரோஸ் மாதிரி இருக்கு." என்றவன் லேசாய் அவள் உதடுகளை தன் உதடுகளால் தொட்டு விட்டு எடுக்க காயத்ரி மொத்தமாய் அவனில் விழுந்து விட்டாள்.

கைகளில் பொம்மை போலிருந்தவளை தூக்கி உட்கார வைக்கும் சாக்கில் விஸ்வநாதன் இறுக்கி அணைத்துக் கொள்ள காயத்ரிக்கு தான் சொன்ன கட்டளை போன இடம் தெரியவில்லை.

இன்னும் அவன் மடியிலேயே அமர்ந்திருந்தால் மொத்தமாக மயங்கி விடுவோமோ என்று மீண்டும் அவன் மடியில் இருந்து எழ முயற்சிக்க விஸ்வாவின் கைகள் அவளை விடுவதாய் இல்லை.

"இன்னும் நீ சாந்தி முஹூர்த்தம் பத்தி தெரிஞ்சிக்கவே இல்லையே? அந்த நல்ல நேரத்துல ரெண்டு பேரும் சேந்தா தான் நல்ல குழந்தைகள் பொறக்கும். இல்லைனா புத்தி மந்தமா கை கால் சரியில்லாம இல்லனா ராட்சஷனா தான் பொறக்கும்..."

என்று சற்று அதிகமாகவே அவளை பயமுறுத்த காயத்ரி திரும்பி 'நீங்க சொல்றது நிஜமா?' என்பது போல பார்க்க விஸ்வநாதன் 'ஆமாம்' என்பது போல கண்களை மூடித் திறந்தான்.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom