என்றென்றும் வேண்டும்-2
“மங்களமான இந்த கயிற்றை (சூத்திரத்தை) உன் கழுத்தில் கட்டுகிறேன்! இந்த மங்கள நாண் மங்கையாகிய உன்னை என் உயிருள்ளவரை காத்து நிற்க கடைமைப்பட்டவனாகிய மணாளனாகிய நான் ஜீவித்திருக்கிறேன் என்பதை உணர்த்தும். இதனால் பலவிதமான சுபங்களும் பெற்று சௌபாக்யவதியாக நீ நூறாண்டு காலம் வாழ வேண்டும்.”
(திருமணத்தில் திருமாங்கல்ய தாரணத்தின் போது ஓதப்படும்
“மாங்கல்யம் தந்து நா அநேந மம ஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி சுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்”
ஸ்லோகத்தின் பொருள்.)
நல்ல வரனாய் தம் மகளுக்கு கிடைக்க வேண்டுமே என்று மாப்பிள்ளை தேடி அதன் பிறகு கல்யாணத்தை நல்ல படியாக முடிக்க வேண்டுமே என்று அதிலே உழல்வது என்பது பெண்ணைப் பெற்ற எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கும்.
பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும் அந்த நொடியில் தான் இதுவரை தன் வீட்டில் பாசத்தைக் கொட்டி வளர்த்த பெண் இனி வேறு வீட்டுக்கு போய் விடுவாளே என்ற ஏக்கமும் அங்கே அவள் வாழ்க்கை நல்ல விதமாய் இருக்க வேண்டுமே என்ற கவலையும் அவர்களுக்கு தோன்றும்.
அது அவர்களை பலகீனப்படுத்த தங்களை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும்.
பாசத்தில் ஆண் என்ன பெண் என்ன? பெண்ணின் தந்தைக்கும் அது உணர்வு பூர்வமான தருணம் தான்.
வெங்கடேசனும் அதே போல அந்த நேரத்தில் கண் கலங்கி விட்டார்.
விஸ்வநாதன் தன் மகளின் கழுத்தில் மூன்று முடிச்சு போடுவதைப் பார்த்தவருக்கு அப்போது தான் தன் மகளின் விருப்பமின்மை கவலையைத் தந்தது,
இனி தான் அன்போடு வளர்த்த தன் ஒரே குழந்தை இன்னொரு வீட்டுக்கு போய் விடுவாளே என்ற பிரிவுத் துயரம் ஒரு புறம் வாட்ட எல்லாம் சரியாகி விடும் என்று இருந்த தைரியம் குறைய அவரையும் அறியாமல் கண்களில் கண்ணீர்.
எதிரே நின்றிருந்த தன் மருமகனை நோக்கி "மாப்ள! என் குழந்தைய உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். நீங்க தான் அவளை நன்னா பாத்துக்கணும்" என்று இறைஞ்சிய குரலில் பேசும் போதே அவருக்கு நா தழுதழுத்தது.
காயத்ரியின் கைகளை ஏந்தியிருந்த அவரின் கைகளை ஆறுதலாய் பிடித்து
"மாமா! நீங்க கவலைப் படாதீங்கோ! காயத்ரியை நாங்க நன்னா பாத்துப்போம்..!"
என்று சிரித்த முகத்துடன் விஸ்வநாதன் சொன்ன வார்த்தைகள் பெற்றவரின் நெஞ்சில் பாலை வார்த்தது.
'நான் அவ்வளவு தூரம் கெஞ்சி அழுதப்போ எல்லாம் காதுலயே வாங்காம இருந்துட்டு இப்ப என்ன அழ வேண்டியிருக்கு?'
என்று அப்பாவின் மேல் எரிச்சலோடு நிமிர்ந்தவளை விஸ்வநாதனின் பார்வை துளைத்தது.
அப்போது தான் தாலி கட்டி தன் மனைவியாய் கொண்டவளின் முகத்தில் எரிச்சலை பார்த்ததுமே விஸ்வநாதனின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைய அவனும் அவளை முறைத்தான்.
பக்கத்தில் மடிசார் புடவை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த ஜானகியை அத்தை அணைத்துக் கொள்ள
"அம்மாளு! என்ன இது? நல்ல நேரத்துல கண்ணை கசக்கிண்டு? மொதல்ல கண்ணைத் துடை. காயத்ரி இனிமே நம்மாத்து குழந்தை. நீ இனிமே அவளைப் பத்தி கவலைப் படவே வேண்டாம்.."
என்று விஸ்வநாதனின் அம்மா பத்மா ஆறுதல் சொன்னார்.
பத்மாவுக்கும் அத்தைக்கும் தங்கள் வீட்டு பிள்ளையின் கல்யாணத்தை அருகில் இருந்து பார்க்கும் ஆசை கொள்ளையாய் மனதில் இருந்தாலும் விஸ்வநாதன் வற்புறுத்தி கூப்பிட்டும் தங்கள் விதவைக் கோலத்தை எண்ணி மேடையில் ஒதுங்கி நின்றிருந்தார்கள்.
காயத்ரி தான் அவள் வரும் போது அவர்களை "வாங்கோ அம்மா! வாங்கோ அத்தை!" என்று அவர்களின் கைகளை பிடித்து அழைத்துக் கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டிருந்தாள்.
அப்பாவின் மடியில் அமரு முன் "நீங்க இங்க தான் இருக்கணும். எங்கயும் போப்படாது! (போகக் கூடாது)" என்றவளின் அன்புக் கட்டளைக்கு கட்டுப்பட்டு அங்கே சங்கடப்பட்டுக் கொண்டே நின்றிருந்தார்கள்.
அவர்கள் மூவரும் கொடுத்த தைரியம் காயத்ரியின் பெற்றோரின் மனதை நிறைக்க அதற்கு மேல் யோசிக்க நேரமில்லாமல் சொந்தங்களின் அன்பு விசாரணை..
"மன்னி! ஆத்துக்கு மாட்டுப் பொண் வந்தாளா?"
"அத்திம்பேர்! ஆத்துக்கு மாப்பிளை வந்தாரா?"
"அத்தங்கா! மாட்டுப்பொண் வந்தாளா?"
"மாமா! ஆத்துக்கு மாப்பிள்ளை வந்தேரா?"
"என்னடா விச்சு? ஆம்படையா வந்தாளா?"
"காங்கிராட்ஸ் காயத்ரி! கல்யாணம் ஆச்சா?"
என்று மாறி மாறி கை குலுக்க வர ஒரே பரபரப்பு.
வாத்தியார் உரத்த குரலில்
"யாரும் மாப்பிளை பொண்ணுக்கு கை குடுக்காதீங்கோ. பாணிக்ரகணம் முடிஞ்சு சப்தபதிக்கு அப்புறம் தான் அவாளுக்கு கல்யாணம் முடிஞ்சதா சாஸ்திரம் சொல்லறது. அதனால பந்துக்கள் எல்லாம் சித்த பொறுமையா இருங்கோ.."
என்று அறிவித்தார்.
"காயத்ரி! அந்த தாம்பூலத்தை இப்படி கொண்டா! உன் வலது கை விரலையெல்லாம் இப்படி குவிச்சு மொட்டாட்டமா வெச்சுக்கோ. விச்சு! நீ அவ கையைப் பிடிச்சு மணமேடைக்கு அழைச்சிண்டு வா."
என்று அடுத்த உத்தரவை மணமக்களுக்கு போட்டார்.
திருமாங்கல்ய தாரணத்திற்கு பிறகே பாணிக்ரஹணம் பண்ண வேண்டும். வேதம் சொல்லியபடி இந்த பாணி க்ரஹணத்திற்கு திருமாங்கல்ய தாரணத்தைக் காட்டிலும் முக்கியத்துவம் அளித்து இதனை முஹூர்த்த காலத்திற்குள் பண்ண வேண்டும்.
‘க்ருப்ணாமிதே…” என்ற பாணிக்ரஹண மந்திரத்தினால் வதுவின் கையைப் பற்றி
“பகன் அர்யமா ஸவிதா போன்ற தேவர்களால் என்னுடைய முதுமை வரையில் நான் க்ரஹஸ்தாஸ்ரம தர்மத்தை (இல்லற நெறி) கடைப்பிடித்து ஒழுகுவதற்காக எனக்களிக்கப்பட்ட கன்னிகையே!
இன்று இந்த சுபமான வேளையில் இத்தனை தேவர்கள் தேவதைகள் அக்னிதேவன் மற்றும் இந்த சபை நிறைந்த நம் நலனை மனதார விரும்பும் பெரியோர்கள் நல்லோர்கள் முன்னிலையில் உன் கையைப் பற்றுகிறேன்!
இக்கணம் முதல் நாம் இருவரும் நான் நீ எனும் வேற்றுமை மறந்து ‘நானென்றால் அது நீயும் நானும்; நீயென்றால் அது நானும நீயும்” என்ற தத்துவத்தில் வாழ்வோமென ப்ரதிக்ஞை செய்து கொள்வோம்” என்கிறான்.
காயத்ரி அப்பாவின் மடியில் இருந்து எழுந்திருக்க அவள் கையைப் பற்றிக் கொண்டான் விஸ்வநாதன்.
அவன் அங்கவஸ்திரத்தின் (மேல் துண்டு) முனையையும் காயத்ரியின் புடவைத் தலைப்பின் முனையையும் சேர்த்து வாத்தியார் முடிச்சிட்டார்.
இருவரும் மீண்டும் முஹூர்த்தப் பந்தலுக்கே வந்தனர். முஹூர்த்தம் நல்ல விதமாய் முடிந்ததை கொண்டாட சமையல்காரர் வந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பான சர்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
யார் தன்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து உடன் வருகிறார்களோ அவனை உற்ற நண்பனாக கருத வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதன்படி ‘ஸப்தபதி” எனும் ஏழு மந்திரங்களால் தன் புது உறவான மனைவியின் ஒவ்வொரு அiடியையும் தொடர்ந்து காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவை வந்து காக்கும்படி வேண்டிக் கொள்கிறான்.
“முதல் அடியில் உணவு குறைவின்றிக் கிடைக்கவும்
இரண்டாவது அடியில் நல்ல ஆரோக்யமான உடலும் உள்ளமும் அமையவும்
மூன்றாவது அடியில் நல்ல காரியங்களுக்காக வ்ரதங்களை மேற்கொள்ளவும்
நான்காவது அடியுடன் தேஹ சௌக்ய சுகங்களைத் தருவதற்காகவும்
ஐந்தாவது அடியுடன் ப்ராணிகளின் உதவி கிட்டவும்
ஆறாவது அடியுடன் வசந்த காலம் போன்ற ஆறு பருவ காலங்களுமே நன்மையை மட்டுமே செய்யத்தக்கதாயிருப்பதற்காகவும்
ஏழாவது அடியில் எதற்காக இந்த வாழ்க்கையை மேற்கொண்டோமோ அதன் பயனை குறைவின்றி அடையவும்
ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் எனைத் தொடரும் உன்னோடு வர வேண்டும்”
என ப்ரார்த்தித்துக் கொண்டு வதுவின் வலது பாதத்தை இடது கையினால் தாங்கி மிக மென்மையாக அவளை வழி நடத்தி அழைத்துச் செல்கிறான் வரன்.
இந்த மந்திரங்களின் பொருள் உணர்ந்த விஸ்வநாதனும் சரி, அதைப் பற்றி ஒன்றும் அறியாத காயத்ரியும் சரி ஒருவரை ஒருவர் எதிரியாக பார்த்தபடி தான் இந்த சடங்குகளை செய்தார்கள்.
அதன் பிறகு வாத்தியார் காயத்ரியை அம்மியின் மேல் நிற்க சொன்னார்.
(மணப்பெண் அம்மி மிதிக்கும் போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள்.)
தீவினைப் பயனால் தீய மதி பெற்ற மாந்தர் துன்புறுத்தி நல்லவர்களையும் பாபக்குழிக்கு இழுத்துச் செல்ல யத்தனிப்பர்.
அது போன்ற மனதையும் அறிவையும் மயக்கி தன் வழிக்கு இழுக்கும் சந்தர்ப்பங்களில் நீ இந்த பாறாங்கல்லைப் போல் உறுதியான மனத்துடன் அதை எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டும் என்று ‘ஆதிஷ்டேமம் …” என்ற வேத மந்திரம் சொல்கிறது.
“நான் ஸப்த ருஷிகளுக்குப்பின் எட்டாமவனாக இருக்கிறேன், நீயும் ஸப்த ருஷிகளின் மனைவிகளில் தன் பதிவ்ரதா தன்மையினால் முக்கிய ஸ்தானத்தை அடைந்த அருந்ததியைப்போல் நல்ல பத்தினித்தன்மையுடன் எனக்கு விளங்குவாயாக” என்று அடுத்து அருந்ததியை பார்க்கச் செய்கிறான்.
அதன் பிறகு காயத்ரியின் ஒன்று விட்ட தம்பி ஒருவன் பொரியிட (நெல் பொரி) தேவர்களுக்கு நன்றி சொல்லி யாகம் வளர்த்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என திருமண சடங்குகள் மளமளவென நடந்தேறியது.
விஸ்வநாதன் தன் வேலையில் கவனமாய் இருக்க எங்கேயோ பார்த்தபடி அவ்வப்போது வாத்தியார் சொன்னதை செய்து கொண்டு காயத்ரி இருக்க ஒருவாறாய் திருமணமும் முடிந்தது.
அதன் பிறகு பெரியவர்களின் ஆசியை மணமக்கள் பெற்றுக் கொள்ள வாத்தியார் அவர்கள் கொடுத்த தக்ஷிணையை (பணம்) பெற்றுக் கொண்டு கிளம்பினார்.
காலையில் இருந்து சாப்பிடாத களைப்பும் ஹோமப் புகையில் கண் எரிச்சலும் ஏற்கனவே பிடிக்காத திருமணத்தில் கோபத்தில் இருந்த காயத்ரியின் மனநிலையை இன்னும் மோசமாக்கியது.
இதற்கு மேல் யாராவது எதாவது சொன்னால் அவர்களை கடித்துக் குதறி விடும் வேகத்தில் இருந்தாள்.
அவன் மேல் துண்டில் அவள் புடவைத் தலைப்புடன் முடிச்சு போட்டிருந்ததால் இருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டியிருந்தது வேறு அவள் எரிச்சலை அதிகப்படுத்தியது.
அதுவும் விஸ்வநாதன் ஒவ்வொருவருக்காய் அபிவாதயே (அபிவாதனம் என்பது நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் வைதீக அறிமுகம் செய்து கொள்வது) சொல்லி காலில் விழ அவளையும் வேறு விழ வைத்திருந்தான்.
அதில் அவள் இடுப்பு வலியெடுக்க புடவை அவிழ்ந்து விடுமோ என்று பதற்றம் வேறு சேர்ந்து கொண்டது.
ஒரு வழியாக மாப்பிள்ளையும் பெண்ணும் சாப்பிடலாம் என சொல்ல எல்லாம் சேர்ந்து கடும் கோபத்துடன் தான் காயத்ரி பந்தியில் அமர்ந்திருந்தாள்.
சொந்தங்களில் அதுவும் கொஞ்சம் கூடுதல் வயதான சில பெரிசுகள் ஏற்கனவே பந்தியில் ரவுண்டு கட்டி விட்டு வாயில் வெத்திலை பாக்குடன் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள்.
அவர்கள் இலையில் எல்லாம் பரிமாறும் வரை காத்திருந்து விட்டு விஸ்வநாதன் பரிசேஷனம் (உணவை அளித்த இறைவனுக்கு அந்த உணவை படைத்து நன்றி சொல்லி விட்டு பிறகு சாப்பிடுவது) செய்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
பக்கத்தில் ஒருத்தி இருப்பதை அவன் கண்டு கொள்ளவேயில்லை.
இலையில் பல வகை இனிப்புகள் காய் கூட்டு வகைகள் பலகாரங்கள் பரிமாறியிருந்தும் பசி மிஞ்சி விட்டதால் ஏனோ தானோ என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் காயத்ரி.
சுற்றியிருந்தவர்கள் அவர்கள் கொஞ்சம் சாப்பிடும் வரை பொதுவாக அவர்களை கேலி செய்து சிரித்தபடி இருந்து விட்டு பிறகு அவர்கள் வந்த வேலையை ஆரம்பித்தனர்.
விஸ்வநாதன் தன் இலையில் இருந்த ஜாங்கிரியை பாதி பிய்த்து சாப்பிட "டேய் விச்சு! மீதி பாதியை உன் ஆம்படையாளுக்கு ஊட்டி விடுடா!" என்று ஒரு பெரிசு சத்தமாக சொல்ல அங்கே ஒரே சிரிப்பலை.
இவையெல்லாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத தம்பதியர் அடுத்தவருடன் இலகுவாய் உணர எல்லா திருமணங்களிலும் செய்வது தான்.
அவர்கள் சொன்னதும் விஸ்வநாதன் திரும்பி காயத்ரியை பார்த்தான்.
அவள் கண்கள் 'ஊட்டிடுவியா நீ?' என்பது போல முறைத்தது.
"டேய் விச்சு! என்னடா பாத்துண்டு இருக்கே?"
பெரிசு விடாமல் இம்சை செய்ய அவன் எதுவும் பேசாமல் அவள் இலையின் ஓரத்தில் ஜாங்கிரியை வைத்தான்.
"என்னடா விச்சு? ஆம்படையாளுக்கு பயந்துண்டு இருக்கே? அம்மா காயத்ரி! நீ குடும்மா அவனுக்கு..!"
என்று அடுத்து அவளை அவனுக்கு ஊட்டி விட சொன்னார்.
காயத்ரி "அதெல்லாம் எனக்கு பிடிக்காது மாமா!" என்று பட்டென்று முகத்துக்கு நேரே சொல்ல விஸ்வநாதன் திரும்பி அவளை எந்த உணர்வுமில்லாமல் பார்த்து விட்டு
"மாமா! அவளுக்கு கூச்சமா இருக்கு போல இருக்கு. நீங்க விட்ருங்கோ.."
என்று சமாதானமாகவே பதில் சொன்னான்.
அதற்கும் "டேய் விச்சு! இப்பவே ஆம்படையாளுக்கு கூஜா தூக்கி பழகின்னுட்டேடா!" என்று கிண்டலாய் பதில் வர மெலிதாய் சிரித்து விட்டு அவன் சாப்பாட்டை தொடர்ந்தான்.
அதற்கு மேல் அங்கே சுவாரசியம் இல்லை என்று கூட்டம் கலைந்து மற்ற சொந்தங்களிடம் போக இருவரும் மௌனமாக அவரவர் இலையைப் பார்த்தனர்.
அவன் சாப்பிட்டு முடித்து மீண்டும் பரிசேஷனம் முடித்த பிறகே அவளை திரும்பிப் பார்த்தான். அவன் வைத்த ஜாங்கிரி இலையில் அப்படியே இருந்தது.
அவள் அப்போதும் சாப்பாட்டை அளைந்தபடி இருக்க "போலாமா?" என்று கேட்டவன் அவள் பதிலுக்காக கூட காத்திருக்காமல் எழுந்து கை கழுவப் போனான்.
புடவை முடிச்சிட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் அவன் பின்னே சென்ற காயத்ரிக்கு இப்போது அவனிடம் கொஞ்சம் பயம் வந்திருந்தது.
தன் கையைக் கழுவிக் கொண்டவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் புடவையோடு போட்டிருந்த முடிச்சை அவிழ்த்து விட்டு அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல் விறுவிறுவென்று போய் விட்டான்.
ஒரு புறம் அவன் கோபமாய் போனது பயமாக இருந்தாலும் 'எதற்கு அவனைப் பார்த்து பயப்படணும்' என்ற கோபமும் தலை தூக்க மனதுக்குள் ‘சரி தான் போடா!' என்று சொல்லிக் கொண்டு கையை கழுவி விட்டு மணமகள் அறைக்கு போனாள். காயத்ரி.
விஸ்வநாதன் மணமகன் அறைக்குள் நுழைய அங்கே அவன் அம்மா எல்லா பொருட்களையும் ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தார்.
"அம்மா! நாம ஆத்துக்கு கிளம்பலாம் மா."
திடீரென வந்து விஸ்வநாதன் இப்படி பேசவும் பத்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
சாந்தி முஹூர்த்தம் இங்கே வேண்டாம் என்பது ஏற்கனவே முடிவு செய்தது தான்.
பெண் மாப்பிள்ளை இருவருக்குமே அதிகம் நெருங்கிய உறவினர்கள் இல்லை என்பதோடு பெரும்பாலும் எல்லோரும் உள்ளூர் என்பதால் நலங்குக்கு பிறகு மாலையோடு வீட்டுக்கு போவதாக தான் திட்டம்.
ப்ராமண குடும்பங்களில் திருமணம் இரண்டு நாட்கள் நடக்கும். திருமணத்துக்கு முதல் நாள் காலையே சத்திரத்துக்கு வந்தால் திருமணத்துக்கு மறுநாள் பாலிகை கரைப்பதுடன் தான் முடியும்.
விஸ்வநாதன் சாந்தி முஹூர்த்தம் சத்திரத்தில் வைக்கக் கூடாது என்று முன்னரே கண்டிப்பாக சொல்லியிருந்தான்.
அதனால் மாலை நலங்கு முடிந்து கிளம்பலாம் என்று இருந்தனர். ஒன்றிரண்டு வெளியூர் உறவினர்களையும் கூடவே வீட்டுக்கு கூட்டிப் போய் விடலாம் என்று யோசித்திருந்தனர்.
இப்போது திடீரென்று விசு வந்து திட்டத்தை மாற்ற அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
(நலங்கு என்பது புதிதாய் திருமணம் முடித்த கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பரிச்சயம் செய்து கொள்ள நடக்கும் ஒரு சடங்கு. சில இனங்களில் மோதிரத்தை குடத்தில் போட்டு எடுக்க சொல்வது போல இதிலும் சில விளையாட்டுக்கள் உண்டு.
கணவனும் மனைவியும் ஒருவரை அலங்கரித்தல் தேங்காய் உருட்டி விளையாடுதல் தலையை சுற்றி அப்பளம் உடைத்தல் என பல விளையாட்டுகள். )
"என்னடா விச்சு? திடுதிப்புன்னு (திடீர்னு) இப்படி வந்து சொல்றே? சாயந்தரம் நலங்கும் ஆனாவிட்டு (ஆனபிறகு) தானே நாம ஆத்துக்கு போறதா இருந்தோம்? இப்ப முன்னாடியே கிளம்பணும்னா கஷ்டமாச்சேடா? சாயந்திர காபி டிபன் எல்லாம் இருக்கு. நலங்கு வேற இருக்கு.
ஆத்துல ராத்திரிக்கு தான் சாப்பாடு சொல்லிருக்கு. காயத்ரி ஆத்துல வந்தவாளும் இப்பவே போன்னா என்ன பண்ணுவா?"
"அம்மா! எல்லாம் நான் பாத்துக்கறேன். இந்த நலங்கெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ போய் மாமாட்ட சொல்லி அவாளையும் கிளம்ப சொல்லு."
பத்மா எவ்வளவோ சொல்லியும் விஸ்வநாதன் கேட்கவில்லை. பிடிவாதம் பிடித்து வீட்டுக்கு கிளம்புவதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்ய ஆரம்பித்து விட்டான்.
பத்மா மணமகள் அறைக்கு வந்து வெங்கடேசனிடம் விஸ்வநாதனின் முடிவை சொல்லும் போது அங்கே தான் ஜானகியும் காயத்ரியும் இருந்தனர்.
வெங்கடேசன் அவன் திடீரென்று வீட்டுக்கு போக வேண்டும் என்று சொன்னதும் பயந்து போனார்.
பதறியபடி விஸ்வநாதனிடம் வந்து
"மாப்பிளை! எதாவது சௌகரிய குறைச்சலா? யாராவது எதாவது சொன்னாளா? இப்பவே ஆத்துக்கு போகலாம்னு சொன்னேளாமே? அப்படி எதாவது தப்பா நடந்திருந்தா தயவு பண்ணி மன்னிச்சிடுங்கோ. நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். என்ன வேணும்னு சொல்லுங்கோ? பண்றேன்."
என்று கெஞ்ச விஸ்வநாதனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. பக்கத்தில் அவன் மாமியாரும் கவலையுடன் நின்றிருந்தார்.
காயத்ரி மேலிருந்த கோபத்தை காட்டப் போய் அது இப்படி ஆகி விட்டதே?
பத்மாவுக்கு அவன் மேல் பயங்கர கோபம். அது என்ன அப்படி ஒரு பிடிவாதம்?
"டேய்! கேக்கறாரோனோ? பதில் சொல்லு. நினைச்சு நினைச்சு பேசிண்டு இருந்தா நாங்க என்ன பண்ண? என்னனு நினைக்க?"
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா! கல்யாணத்துக்கு வந்தவா முக்கா வாசி கிளம்பி போய்ட்டா. கொஞ்ச பேர் தானே? எதுக்கு அனாவசியமா சத்திரத்துல இருந்துண்டு?
ஆத்துக்கு போனா எல்லாரும் சித்த ரெஸ்ட் எடுக்கலாமே அப்படினு நினைச்சு தான் சொன்னேன்."
என்று அதையும் இதையும் சொல்லி சமாளித்தவன் அவரையும் கிளம்ப வைத்தான்.
உடனே சத்திரத்தை காலி பண்ண சொன்னான் என்று அம்மாவும் அப்பாவும் விஸ்வநாதனைப் பார்க்க பதறி அடித்து போன போது காயத்ரிக்கு உள்ளூர பயம் தான்.
அவள் தைரியமெல்லாம் வீட்டோடு சரி. என்னவோ சாப்பிடும் போது வெடுக்கென்று பேசி விட்டாளே தவிர அது அம்மா அப்பாவுக்கு தெரிந்தால் அவளை தொலைத்து விடுவார்கள்.
சின்னதாக எதிர்த்து பேசினாலே மண்டையில் கொட்டியோ கன்னத்தில் கிள்ளியோ அதட்டும் அம்மா கண்டிப்பாய் வளர்த்த அப்பா என்று சிறு வயதில் இருந்தே காயத்ரி பயந்த சுபாவம் தான்.
பெண் இனி பிரிந்து புகுந்த வீடு போகிறாளே என்று அம்மாவும் அப்பாவும் இப்போது தான் கொஞ்சம் அன்பாக பேசினார்கள். இப்போது விஸ்வநாதன் தன்னைப் பற்றி ஏதும் சொல்லி அவர்களிடம் அடி வாங்கி வைப்பானோ என்று பயம்.
இப்போது வந்தால் என்ன ஆகுமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.
ஒரு மணி நேரத்தில் சத்திரத்தில் காலி செய்து விஸ்வநாதனின் வீட்டுக்கு வந்தனர். இரு குடும்பம் தவிர ஏழெட்டு பேரே இருந்ததால் ஒரு வேனும் ஒரு காரும் போதுமாய் இருந்தது. விஸ்வநாதனே வெங்கடேசனை எதிர்பார்க்காமல் எல்லா ஏற்பாடும் செய்தான்.
விஸ்வநாதனின் வீடு மாம்பலத்தில் இரண்டு கிரௌண்ட் வீடு. நடுவில் முற்றம் வைத்து கூடம்.
கூடத்தின் நான்கு புறமும் அறைகள். வீடு பெரியது என்பதால் விச்சு-காயத்ரியின் நிச்சயம் கூட வீட்டிலேயே நடந்தது.
மணமக்களை ஆரத்தி எடுத்து ஜானகியும் இன்னொருவரும் வரவேற்க பத்மா காயத்ரியை சாமி விளக்கேற்ற சொன்னார்.
மணி அப்போதே நாலாகி இருந்தது. அதன் பிறகு அவர்கள் வீட்டுக்கு வந்ததை தெரிந்து கொண்டு கல்யாணம் விசாரிக்க வர வந்தவர்களுக்கு பலகாரம், காபி, தாம்பூலம் கொடுப்பது என நேரம் ஓடியது.
ஐந்தரை மணி வாக்கில் நலங்குக்கு வாங்கிய புடவையை கட்டிக்கொண்டு வரும்படி காயத்ரியிடம் சொன்னார் பத்மா.
மாமியார் பாசமாக இருப்பார் என்றாலும் தன் அப்பா அம்மா போலவே கண்டிப்பு என்பதால் காயத்ரிக்கு அவரிடமும் கொஞ்சம் பயம் தான். அதனால் அவர் சொன்னவுடன் முகம் கழுவி நலங்கு புடவையை கட்டிக்கொண்டு வந்தாள்.
விச்சு வீட்டுக்கு பெரியவன் என்ற முறையில் அவனே தான் வந்தவர்களிடம் பேச வேண்டியிருந்தது.
இரவு டிபனோடு இருந்த கொஞ்ச வெளியூர் சொந்தங்களும் ரயிலுக்கு கிளம்பி விட இரு குடும்பங்கள் மட்டுமே மிஞ்சியது.
Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்-2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.